Friday, February 15, 2019

68. திவ்யதேச தரிசன அனுபவம் - 47. திருவண்பரிசாரம் (60)

தரிசனம் செய்த நாள்: 02.02.2019 சனிக்கிழமை.   
 மலை நாட்டுத் திருப்பதிகள் - 13
2. திருவண்பரிசாரம் 

2. திருவண்பரிசாரம்
[ பிரிவாற்றாது வருந்துந் தலைவியின் நிலை கண்ட செவிலி இரங்கல்]
அடியுங் குளிர்ந்தா ளறிவுங் குலைந்தாள்
முடிகின்றாண் மூச்சடங்கு முன்னே - கடிதோடிப்
பெண்பரிசா ரங்குப் பிறப்பித்து மீளுவார்
வண்பரிசா ரங்கிடந்த மாற்கு. (60)
- பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் 108திருப்பதி அந்தாதி 

நாகர்கோவிலில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த திவ்யதேசம். நம்மாழ்வாரின் தாயார் உடைய நங்கை பிறந்த ஊர் என்ற பெருமையையும் பெற்ற தலம் இது.இந்த ஊர் திருப்பதிசாரம் என்று அழைக்கப்படுகிறது.

அத்ரி முதலான சப்தரிஷிகள் (7 முனிவர்கள்)  இந்த ஊருக்கு அருகில் உள்ள சுசீந்திரத்தில் பகவானைக் காண வேண்டித் தவம் இருந்தனர். அப்போது அவர்களுக்கு சிவபெருமான் தாணுமாலயனாகக் காட்சி அளித்தார். முனிவர்கள் விஷ்ணுவைக் காண வேண்டும் என்று வேண்டினர். சிவபெருமான் அவர்களை சுசீந்திரத்திலிருந்து வடமேற்கே உள்ள இந்தத் தலத்துக்குச் சென்று தவம் செய்யம்படி கூறினார். அவ்வாறே முனிவர்கள் இங்கு வந்து தவம் செய்தனர். முனிவர்களுக்கு விஷ்ணு திருமார்பில் லட்சுமி தேவியுடன் திருவாழ்மார்பனாகக் காட்சி அளித்தார்.

நரசிம்ம அவதாரத்தின்போது நரசிம்மரின் உக்ர ரூபத்தைக் கண்டு அஞ்சிய மகாலக்ஷ்மி இங்கு வந்து தவம் செய்தார். அவதாரம் முடிந்து பெருமாள் இங்கு வந்ததும், மகாலக்ஷ்மி பெருமாளின் மார்பின் குடியேறினார். அதனால் திருவாழ்மார்பன் என்ற திருப்பெயர் பெருமாளுக்கு ஏற்பட்டது என்ற வரலாறும் உண்டு. தன கணவனுடன் மீண்டும் சேர்ந்த இடம் என்ற பொருளில் இந்த ஊர் திருப்பதிசாரம் என்று வழங்கப்படுகிறது. பொதுவாக, திருமாலின் வலது மார்பில் இருக்கும் மகாலக்ஷ்மி இங்கு இடது மார்பில் இருக்கிறார். கமலாவல்லித் தாயார் என்ற திருநாமத்துடன் தாயார் விளங்குகிறார்.

சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கோவிலின் மூலவர் விக்கிரகம் 7 அடி உயரம் உள்ளது. கடுசர்க்கரைக் (கடுகு, வெல்லம்) கலவையால் செய்யப்பட இந்த விக்கிரகத்துக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுவதில்லை.

மூலவர் - திருவாழ்மார்பன், திருக்குறளப்பன். இருந்த திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.

தாயார் - கமலவல்லித் தாயார்  (பெரும்பாலான மலைநாட்டு திவ்யதேசங்களில் இருப்பது போல், தாயாருக்குத் தனியே சந்நிதியில்லை.. . பெருமாளின் திருமார்பில் இருக்கும் தாயாருக்குத்தான் இந்தப் பெயர்.) 

விமானம் - இந்திர கல்யாண விமானம் 

தீர்த்தம் - சோம தீர்த்தம், லக்ஷ்மி தீர்த்தம் 

ஸ்தலவிருட்சம் - ஆலமரம் 

சந்நிதிக்குள் மூலவரைச் சுற்றி சப்தரிஷிகள் உள்ளனர்.

பெருமாள் சந்நிதிக்கு வெளியே பெருமாளுக்கு வலப்புறமாக ராமர், லக்ஷ்மணர், சீதை, ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. இங்கே விபீஷணர், அகஸ்தியர், குலசேகர ஆழ்வார் ஆகியோரும் உள்ளனர்.

இலங்கைக்குத் திரும்பும் வழியில் விபீஷணன் இங்கு வந்து வழிபட்டான். அப்போது தனக்கு ராமபிரான் காட்சி தர வேண்டுமென்று அவன் பிரார்த்திக்க, அவனுக்கு ராமர் லக்ஷ்மணர் சீதையுடன் காட்சி அளித்தார். 

ஆஞ்சநேயரின் விருப்பத்துக்கேற்ப அகஸ்தியர் இங்கு ராமாயணத்தை உபதேசித்தார். 

பெருமாள் சந்நிதிக்கு இடப்புறத்தில் விஷ்வக்சேனர், நடராஜர், நம்மாழ்வார் சந்நிதிகள் உள்ளன. கருடன், விநாயகர் சந்நிதிகளும் உள்ளன.
கோவிலுக்குப் பின்புறத்தில் திருக்குளத்துக்கு அருகே நம்மாழ்வாருக்கும், அவரது தாயார் உடைய மங்கைக்கும் சந்நிதியுள்ளது.
கி.பி. 6ஆம் நூற்றாண்டில் குலசேகர ஆழ்வார் இந்தக் கோவிலுக்குத் திருப்பணிகள் செய்து, மதில் சுவர் அமைத்து, 40 அடி உயரமுள்ள  த்விஜஸ்தம்பத்தையும்  (கொடிக்கம்பம்) நிறுவினார். .

இந்த திவ்யதேசம் பற்றி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்க உரையைக் கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.



இந்த திவ்யதேசம் நம்மாழ்வாரால் ஒரு பாசுரத்தில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. பாசுரம் இதோ.

திருவாய்மொழி
எட்டாம் பத்து 
 3.7 வருவார் செல்வார் வண்பரி சாரத் திருந்த என் 
திருவாழ் மார்வற் கென்திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மோடு
ஒருபா டுழல்வா னோரடி யானு முளனென்றே. (3591)

(இந்த திவ்யதேச தரிசனத்துடன் அடியேனுடைய மலைநாட்டு திவ்ய தேச தரிசனம் நிறைவு பெற்றது.)

ஓம் நமோ நாராயணாய