Tuesday, May 15, 2018

63. திவ்யதேச தரிசன அனுபவம் - 42 திருவதரியாச்சிரமம் (101) - பத்ரிநாத்

தரிசனம் செய்த நாள்: 04.05.18 & 5.5.18 வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை   
 வடநாட்டுத் திருப்பதிகள் - 12  
6. திருவதரியாச்சிரமம் (101)   

6. திருவதரியாச்சிரமம்
தாட்கடிமை யென்று தமையுணாரார்க் கெட்டெழுத்தும்
கேட்கவெளி யிட்டருளுங் கேசவனை - வேட்கையொடு
போவதரி தானாலும் போய்த்தொழுவோ நெஞ்சமே!
மாவதரி யாச்சிரமத் து. (101)
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

இந்தியாவின் வட எல்லையில், இமயமலையின் உச்சியில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 10400 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது பத்ரிநாத் ஆலயம்.

ரிஷிகேஷிலிருந்து 295 கிலோமீட்டர் தூரத்திலும், ஹரித்வாரிலிருந்து 320 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது இந்த திவ்ய தேசம்.

பதரி என்றால் இலந்தை. இலந்தை மரத்தின் கீழ் அமர்ந்து மகாவிஷ்ணு தவம் செய்ததால் இந்த இடத்துக்கு பதரி அல்லது பத்ரி என்று பெயர் வந்தது.

உலகில் வாழும் உயிர்களின் நலனுக்காக பகவான்  இங்கே காலம் காலமாகத் தவம் செய்து கொண்டிருக்கிறார்  என்று பாகவத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பெருமாள் இங்கே நரன்-நாராயணன் என்ற இருவராக இருக்கிறார். நாராயணனாக குரு ஸ்தானத்தில் இருந்து நரன் என்ற சிஷ்யன் ஸ்தானத்தில் இருக்கும் தனக்கே உபதேசம் செய்கிறார் இவர்.

இங்கே அவர் உபதேசம் செய்தது எட்டெழுத்து மந்திரத்தை. (பகவத் கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனிடம், முன்பு ஒரு சமயம் நீயும் நானும் நர நாராயணனாக இருந்தோம் என்று கூறுகிறார்.)

எட்டு ஸ்வயம் வக்த (தானே உருவான) க்ஷேத்திரங்களில் பத்ரிநாத்தும் ஒன்று. (மற்றவை ஸ்ரீரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம், நைமிசாரண்யம், சாளக்கிராமம், புஷ்கரம், திருநீர்மலை).

மகாவிஷ்ணு வாமன அவதாரத்தின்போது, திரிவிக்கிரமனாய் விஸ்வரூபம்
எடுத்து, மண்ணுலகையும், விண்ணுலகையும்  தன்  திருவடிகளால் அளந்தார், அவரது திருவடி சத்யலோகத்தை எட்டியபோது, பிரம்மா அந்தத் திருவடியைத்  தன்  கமண்டலத்தில் இருந்த நீரினால் திருமஞ்சனம் செய்தார். பெருமாளின் திருவடியில் பட்ட நீர்தான் கங்கையாய்ப் பாய்ந்தது.

பகீரதனின் தவத்தின் காரணமாக கங்கை பூமிக்கு வந்தபோது அதை இங்கிருந்த நீலகண்ட மலை தடுத்தது. அப்போது இந்திரன் தன் யானையான ஐராவதத்தின் தந்தங்களால் இந்த மலையைப் பிளக்க, மலை நரன், நாராயணன் என்று இரண்டு மலைகளாகப் பிரிய, இந்த இரண்டு மலைகளுக்கிடையே கங்கை பாய்ந்து வந்தது.


கோயிலுக்கு முன்புறம் அலகனந்தா நதி ஓடுகிறது. பாலத்தைத் தாண்டியதும் கோவில். அலகனந்தா நதியின் கிழக்குப் புறம் நரன் மழையும், மேற்குப்புறம் நாராயணர் மலையும் இருக்கின்றன.

கோயிலுக்கு அருகே வெந்நீர் ஊற்று ஒன்று இருக்கிறது. தப்த குண்ட் என்று அழைக்கப்படும்  இந்த வெந்நீர் ஊற்றில் குளிக்க வசதியாகப் பல தொட்டிகள் கட்டப்பட்டு அவற்றின் ஊடே இந்த ஊற்று நீர் ஓட விடப்படுகிறது. அதனால் அதிகாலையில் விறைக்கும் குளிரிலும், பலரும் இங்கே குளித்து வீட்டுக் கோவிலுக்குச் செல்ல முடிகிறது. (இந்த வெந்நீர் ஊற்றும் கங்கை நீர்தான்.எனவே இதில் நீராடுவதும் புனிதமானதுதான்.)

கோவிலில், சந்நிதிக்குள் பத்ரிநாத் நான்கு கைகளுடன் பத்மாசனத்தில் அமர்ந்து யோக நிலையில் இருக்கிறார். இவர் அருகே கருடன், குபேரன், நாரதர், உத்தவர், நரன், நாராயணன் ஆகியோர் இருக்கின்றனர்.


சந்நிதிக்கு எதிரே கருடன் இருக்கிறார்.

பிரகாரத்தில் மகாலக்ஷ்மி (அரவிந்தவல்லி), ஆஞ்சநேயர், பத்ரிநாதஸ்வரூப மூர்த்தி, க்ஷேத்ரகண்டதேவதை, நர நாராயணர் ஆகியோர் சந்நிதிகள் இருக்கின்றன. பத்ரிநாதஸ்வரூப மூர்த்தி உள்ளே இருக்கும் பத்ரிநாதரின் வடிவத்தில் உத்சவமூர்த்தி போல் காட்சி அளிக்கிறார்.

கோவில் வருடத்தில் ஆறு மாதங்கள்தான் திறந்திருக்கும் (மே  முதல் அக்டோபர் வரை) நவம்பர் முதல் ஏப்ரல் வரை பனிமூட்டம் காரணமாகக் கோவில் மூடியிருக்கும். அப்போது பெருமாள் ஜோஷிமட் நரசிங்கர் ஆலயத்தில் எழுந்தருளி நமக்கு சேவை சாதிப்பார்.


பத்ரிநாத்தைச் சுற்றியுள்ள மலைகள் பற்றி மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்வர்க்க ஆரோகணி என்ற மலையில் ஏறிப் பாண்டவர்கள் சென்றபோது ஒவ்வொருவராக மாண்டு சொர்க்கத்துக்குப் போனதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பத்ரிநாத்தையும், அதற்கு அருகில் உள்ள மானா என்ற கிராமத்தையும் தாண்டித்தான் பாண்டவர்கள் சென்றார்கள். மானா கிராமத்தில் பீம் புள் (பீமன் குட்டை)  என்ற இடம் உள்ளது. பீமன் இதில் நீராடித் தன்  பாவங்களைப்  போக்கிக் கொண்டதாக நம்பிக்கை. வியாசர் குகை என்ற இடமும் மானா கிராமத்தில் உள்ளது.

பத்ரிநாத் பற்றி பத்மபுராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மூலவர் - பத்ரிநாராயணன் 
இருந்த திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.

தாயார் - அரவிந்தவல்லி நாச்சியார் 

தீர்த்தம் - தப்த குண்டம் 

விமானம் - தப்த காஞ்சன விமானம் 

விருக்ஷம் - பத்ரி (இலந்தை)

கோவிலுக்கு அருகில் அலகனந்தா நதிக்கரையில் முன்னோர்களுக்குப் பிண்டம் வைத்துத் திதி செய்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

4.5.18 மதியம் ஒருமுறை, மாலை ஒருமுறை, 5.5.18 விடிகாலை ஒருமுறை (விஸ்வரூப தரிசனம்) பத்ரிநாதரை தரிசனம் செய்யும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்தது.

5.5.18 அன்று காலை திதியும் செய்து பத்ரிநாத் யாத்திரையைப் பூர்த்தி செய்தேன்.


கோவிலின் அமைப்பையும், அலகனந்தா நதியையும் இந்த வீடியோவில் காணலாம்.

திருவதரிகாசிரமம் என்று அழைக்கப்படும் இந்த திவ்யதேசத்தைப் பெரியாழ்வார் ஒரு பாசுரத்திலும், திருமங்கை ஆழ்வார் 21 பாசுரங்களிலும்  மங்களாசாஸனம் செய்திருக்கிறார்கள். பாசுரங்கள் இதோ!

பெரியாழ்வார் திருமொழி
நான்காம் பத்து 
ஏழாம் திருமொழி  

வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை
தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே (399)

திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி \
முதல் பத்து 
மூன்றாம் திருமொழி
1. முற்றமூத்துக் கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து
இற்றகால்போல் தள்ளி மெள்ள இருந்தங்கிளையாமுன்,
பெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு உயிரை
வற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே. (968)

2. முதுகுபற்றிக்கைத்த லத்தால் முன்னொருகோலூன்றி,
விதிர்விதிர்த்துக்கண் சுழன்று மேற்கிளைகொண்டிருமி,
இதுவென்னப்பர் மூத்தவா றென்று இளையவரேசாமுன்,
மதுவுண்வண்டுபண்கள் பாடும் வதரிவணங்குதுமே. (969)

3. உறிகள்போல்மெய்ந்நரம் பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி,
நெறியைநோக்கிக்கண் சுழன்று நின்றுநடுங்காமுன்,
அறிதியாகில்நெஞ்சம் அன்பா யாயிரநாமஞ்சொல்லி,
வெறிகொள்வண்டு பண்கள் பாடும் வதரிவணங்குதுமே. (970)

4. பீளைசோரக்கண்ணி டுங்கிப் பித்தெழமூத்திருமி
தாள்கள் நோவத்தம்மில் முட்டித் தள்ளிநடவாமுன்,
காளையாகிக்கன்று மேய்த்துக் குன்றெடுத்தன்றுநின்றான்,
வாளைபாயும்தண்ட டஞ்சூழ் வதரிவணங்குதுமே. (971)

5. பண்டுகாமரான வாறும் பாவையர்வாயமுதம்
உண்டவாறும், வாழ்ந்த வாறும் ஒக்கவுரைத்திருமி,
தண்டுகாலாவூன்றி யூன்றித் தள்ளிநடவாமுன்,
வண்டுபாடும்தண்டு ழாயான் வதரிவணங்குதுமே. (972)

6. எய்த்த சொல்லோ டீளையேங்கி இருமி யிளைத்துடலம்
பித்தர்போலச் சித்தம்வேறாய்ப் பேசி யயராமுன்
அத்தனெந்தை யாதிமூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த
மைத்தசோதி யெம்பெருமான் வதரி வணங்குதுமே. (973)

7. பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பதுசீத்திரளை
யொப்ப ஐக்கள்போத வுந்த உன்தமர்க்காண்மினென்று,
செப்புநேர் மென்கொங்கை நல்லார் தாம்சிரியாதமுன்னம்,
வைப்பும் நங்கள்வாழ்வு மானான் வதரிவணங்குதுமே. (974)

8. ஈசிபோமினீங்கி ரேன்மின் இருமியிளைத்தீர் உள்ளம்
கூசியிட்டீரென்று பேசும் குவளையங்கண்ணியர்ப்பால்,
நாசமானபாசம் விட்டு நன்னெறிநோக்கலுறில்,
வாசம்மல்குதண்டு ழாயான் வதரிவணங்குதுமே. (975)

9. புலன்கள்நையமெய்யில் மூத்துப் போந்திருந்துள்ளமெள்கி,
கலங்கவைக்கள்போத வுந்திக் கண்டபிதற்றாமுன்,
அலங்கலாயதண்டு ழாய்கொண்டு ஆயிரநாமம்சொல்லி,
வலங்கொள்தொண்டர்ப்பாடி யாடும் வதரிவணங்குதுமே. (976)

10. வண்டுதண்டேனுண்டுவாழும் வதரிநெடுமாலை,
கண்டல்வேலிமங்கை வேந்தன் கலியனொலிமாலை,
கொண்டுதொண்டர்ப்பாடி யாடக் கூடிடில்நீள்விசும்பில்,
அண்டமல்லால்மற்ற வர்க்கு ஓராட்சியறியோமே. (977)

நான்காம் திருமொழி
1.ஏனமுனாகி யிருநிலமிடந்து அன்றிணையடி யிமையவர்வணங்க,
தானவனாகம் தரணியில்புரளத் தடஞ்சிலை குனித்தவெந்தலைவன்,
தேனமர் சோலைக் கற்பகம்பயந்த தெய்வநன்னறு மலர்க்கொணர்ந்து,
வானவர் வணங்கும்கங்கை யின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (978)

2. கானிடையுருவைச் சுடுசரம்துரந்து கண்டுமுங்கொடுந் தொழிலுரவோன்,
ஊனுடையகலத்தடு கணைகுளிப்ப உயிர்க்கவர்ந்துகந்தவெம்மொருவன்,
தேனுடைக்கமலத்தயனொடுதேவர் சென்றுசென்றிறைஞ்சிட  பெருகு
வானிடைமுதுநீர்க்கங்கையிங்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (979)

3. இலங்கையும் கடலுமடலருந்துப்பின் இருநிதிக்கிறைவனும், அரக்கர்
குலங்களும் கெடமுன் கொடுந் தொழில்புரிந்த கொற்றவன் கொழுஞ்சுடர்சுழன்ற,
விலங்கலிலுரிஞ் சிமேல்நின்றவிசும்பில் வெண்துகிற்கொடி யெனவிரிந்து,
வலந்தரு மணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (980)

4. துணிவினியுனக்குச் சொல்லுவன்மனமே. தொழுதெழுதொண்டர்கள்தமக்கு,
பிணியொழித்தமரர்ப்பெரு விசும்பருளும் பேரருளாளனெம்பெருமான்,
அணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும் ஆரமும்வாரிவந்து,
அணிநீர் மணிகொழித்திழிந்த கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (981)

5.பேயிடைக்கிருந்து வந்தமற்றவள்தன் பெருமுலைசுவைத்திட  பெற்ற
தாயிடைக் கிருத்தலஞ்சுவனென்று தளர்ந்திட வளர்ந்தவெந்தலைவன்,
சேய்முகட்டுச் சியண்டமுஞ்சுமந்த செம்பொன்செய் விலங்கலிலிலங்கு,
வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (982)

6. தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி திறத்து ஒருமறத்தொழில்புரிந்து,
பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த பனிமுகில்வண்ணனெம்பெருமான்,
காரணந்தன்னால்கடும்புனல்கயத்தகருவரைபிளவெழக்குத்தி,
வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (983)

7.வெந்திறல்களிறும் வேலைவாயமுதும் விண்ணொடு விண்ணவர்க்கரசும்,
இந்திரற்கருளி யெமக்குமீந்தருளும் எந்தையெம்மடிகளெம்பெருமான்,
அந்தரத்தமரரடி யிணைவணங்க ஆயிரமுகத்தினாலருளி,
மந்தரத்திழிந்த கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (984)

8. மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த மன்னவன்பொன்னிறத்துரவோன்,
ஊன்முனிந்த வனதுடலிருபிளவா உகிர்நுதிமடுத்து, அயனரனைத்
தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம் தவிர்த்தவன் தவம்புரிந்துயர்ந்த
மாமுனிகொணர்ந்த கங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (985)

9. கொண்டல்மா ருதங்கள்குலவரைதொகுநீர்க் குரைகடலுலகுடனனைத்தும்,
உண்டமா வயிற்றோனொண் சுடரேய்ந்த உம்பருமூழியுமானான்,
அண்டமூடறுத் தன்றந்தரத்திழிந்து அங்கவனியாளலமர, பெருகு
மண்டுமா மணி நீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. (986)

10. வருந்திரை மணிநீர்க்கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானை,
கருங்கடல் முந்நீர்வண்ணனையெண்ணிக் கலியன்வாயொலிசெய்தபனுவல்,
வரஞ்செய்த வைந்துமைந்தும்வல்லார்கள் வானவருலகுடன் மருவி,

இருங்கடலுலக மாண்டுவெண்குடைக்கீழ் இமையவராகுவர்தாமே. (987)


திருமங்கை ஆழ்வார் 
சிறிய திருமடல் 
2673. கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்    (1)
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று    (2)
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்    (3)
வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை    (4)
வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே    (5)
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து    (6)
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித்    (7)
தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும்    (8)
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு    (9)
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்   (10)
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்   (11)
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்   (12)
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த   (13)
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு   (14)
ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்   (15)
நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு (16)
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் (17)
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து (18)
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை (19)
சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் (20)
பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் (21)
தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு (22)
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23)
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக் (24)
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் (25)
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் (26)
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன் (27)
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் (28)
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு (29)
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் (30)
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் (31)
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் (32)
பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு (33)
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை (34)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் (35)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர் (36)
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (37)
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல் (38)

ஓம் நமோ நாராயணாய !
Sunday, May 13, 2018

62. திவ்யதேச தரிசன அனுபவம் - 41 திருப்பிருதி (103) (ஜோஷிமட் - நந்தப்பிரயாகை)

தரிசனம் செய்த நாள்: 04.05.18  வெள்ளிக்கிழமை  
 வடநாட்டுத் திருப்பதிகள் - 12  
7. திருப்பிருதி (103)  

8. திருப்பிருதி
வழங்கு முயிரனைத்தும் வாரிவாய்ப் பெய்து
விழுங்குங் கவந்தன் விறற்றோட் - கிழங்கைப்
பொருப்பிருதிக் குங்கிடந்தாற் போற்றுணிந்து வீழ்த்தான்
திருப்பிருதிக் கென்னெஞ்சே! செல். (103)
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

ரிஷிகேஷிலிருந்து 254 கிலோமீட்டர் தொலைவில், கடல்மட்டத்திலிருந்து 6150 அடி உயரத்தில் அமைந்துள்ளது திருப்பிரிதி அல்லது திருப்பிருதி திவ்யதேசம். பெருமாளின் மீது பக்தர்களுக்கும், பக்தர்கள் மீது பெருமாளுக்கும் இருக்கும் அன்பைக் குறிக்கும் பிரீதி என்ற சொல்லிலிருந்து இந்தத் திருத்தலம் திருப்பிரீதி என்று பெயர் பெற்று,  பிறகு இந்தப் பெயர் திருப்பிருதி என்று  மருவியிருக்கலாம்.


இங்கிருந்து பத்ரிநாத் 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தக் கோவில் குறிப்பிட்ட சில நேரங்களில்தான் திறந்திருக்கும் என்பதால், பத்ரிநாத் செல்லும் யாத்திரிகர்கள் இந்த நேரத்தை அனுசரித்து இங்கு இறங்கி இந்தக் கோவிலில் தரிசனம் செய்து கொள்ள வேண்டும்.

திருமங்கை ஆழ்வாரின் பாசுரப்படி இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் கிடந்த திருக்கோலத்தில் இருக்கிறார். கோவிலுக்கு வெளியில் உள்ள தகவல் பலகையிலும் பெருமாளின் பெயர் பரமபுருஷன் என்றும், அவர் புஜங்க சயனைக்  கோலத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் தற்போது இந்தக் கோவிலில் எழுந்தருளியிருப்பவர் இருந்த கோலத்தில் சேவை சாதிக்கும் நரசிம்மர். இந்தக் கோவில் நரசிங் மந்திர் என்றே அழைக்கப்படுகிறது.
எனவே ஆழ்வாரால் பாடப்பட்ட திருப்பிருதி திவ்யதேசம் இது இல்லையென்றும், அது
திபெத்தில் மானசரோவர் ஏரிக்குப் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும், தற்போது அந்த திவ்யதேசம் இல்லை என்றும் ஒரு கருத்து உண்டு.

இந்தக் கோவிலில் உள்ள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த பிறகுதான் ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் எழுதினர் என்றும், இங்கே ஒரு பீடத்தை நிறுவினார் என்றும் ஐதீகம். (ஆதிசங்கரர்  இந்தியாவின் நான்கு திசைகளிலும் நிறுவிய நான்கு பீடங்கள்: வடக்கே ஜோதிமதம்,கிழக்கே பூரி, தெற்கே சிருங்கேரி, மேற்கே துவாரகை)

நந்தன் என்ற அரசன் இந்தத் தலத்தில் தவம் செய்ததால் இந்த ஊருக்கு நந்தப்பிரயாகை என்றும் பெயர் உண்டு.

இங்குள்ள நரசிம்மர் விக்கிரகம் சாளக்கிராமங்களினால் உருவாக்கப்பட்டது. நாங்கள் சென்ற சமயத்தில் நரசிம்மர் வண்ண ஒளிவிளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, ஒலிபெருக்கியில் பஜனைப் பாடல்கள் ஒலிக்க, அர்ச்சகரும், பக்தர்களும் உற்சாகத்துடன்  ஆடியபடி பெருமாளை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.


குளிர்காலத்தில் பத்ரிநாத் ஆலயம் ஆறு மாதங்கள் (நவம்பர் முதல் ஏப்ரல்
வரை) மூடப்பட்டிருக்கும்போது, பத்ரிநாத் பெருமாள் இந்தக் கோவிலில்தான் எழுந்தருளியிருப்பார்.

மூலவர் - பரமபுருஷன்

புஜங்க சயனம் . கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்,

தாயார் - பரிமளவல்லி நாச்சியார்

விமானம் - கோவர்த்தன விமானம்

தீர்த்தம் - மாநஸரஸ் புஷ்காரனி, கோவர்த்தன தீர்த்தம், இந்திரா தீர்த்தம்

இந்தக் கோவிலுக்கு அருகில் வாசுதேவப் பெருமாள் கோவில் இருக்கிறது. ஆஞ்சநேயர் கோவிலும் இருக்கிறது.

திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழியின் முதல் பத்தின் இரண்டாம்
திருமொழியில், 10 பாடல்களில் திருப்பிருதி திவதேசப் பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்கிறார். பாசுரங்கள் இதோ.
நாலாயிர திவ்யப் பிரபந்தம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
முதற்பத்து 
இரண்டாம்  திருமொழி

1. வாலிமாவலத் தொருவனதுடல்கெட வரிசிலை வளைவித்து அன்று
ஏலநாறுதண்  தடம்பொழி லிடம்பெற இருந்தநலிமய்யத்துள்,
ஆலிமாமுகி லதிர்தர அருவரை அகடுறமுகடேறி,
பீலிமாமயில் நடஞ்செயும்தடஞ் சுனைப் பிரிதிசென்றடைநெஞ்சே. (958)

2. கலங்கமாக் கடலரிகுலம் பணிசெய்ய அருவரையணைகட்டி,
இலங்கைமா நகர்ப்பொடிசெய்த வடிகள்தாம் இருந்தநல்லிமயத்து,
விலங்கல்போல் வனவிற லிருஞ்சினத்தன வேழங்கள்துயர்க்கூர,
பிலங்கொள் வாளெயிற்றரிய வைதிரிதரு பிரிதிசென்றடைநெஞ்சே. (959)

3. துடிகொள்  நுண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற் றிளங்கொடிதிறத்து ஆயர்
இடிகொள்  வெங்குரலின விடையடர்த்தவன் இருந்தநல்லிமயத்து,
கடிகொள் வேங்கையின்நறு மலரமளியின்மணியறை மிசைவேழம்,
பிடியினோடு வண்டிசைசொலத்துயில் கொளும் பிரிதிசென்றடைநெஞ்சே. (960)

4. மறங்கொளாளரி யுருவெனவெருவர ஒருவனதகல்மார்வம்
திறந்து வானவர்மணி முடிபணிதர இருந்தநல்லிமயத்துள்,
இறங்கியேனங்கள் வளைமருப்பிடந்திட க்கிடந்தரு கெரிவீசும்,
பிறங்குமாமணி யருவியொடிழிதரு பிரிதிசென்றடைனெஞ்சே.(961)

5. கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல் அமரர்கள்தொழுதேத்த,
அரைசெய் மேகலையலர் மகளவளொடும் அமர்ந்தநல்லிமயத்து,
வரைசெய் மாக்களிறீள வெதிர்வளர்முளை அளைமிகுதேன்தோய்த்து,
பிரசவாரி தன்னிளம்பிடிக் கருள்செயும் பிரிதிசென்றடைநெஞ்சே. (962)

6. பணங்களாயிர முடையநல்ல வரவணைப் பள்ளிகொள் பரமாவென்று,
இணங்கிவான வர்மணிமுடி பணிதர இருந்தநல்லிமயத்து,
மணங்கொள் மாதவிநெடுங் கொடிவிசும்புற நிமிர்ந்தவைமுகில்பற்றி,
பிணங்குபூம் பொழில்நுழைந்து வண்டிசை சொலும் பிரிதிசென்றடைநெஞ்சே! (963)

7. கார்கொள் வேங்கைகள் கனவரைதழுவிய கறிவளர்க்கொடிதுன்னி,
போர்கொள் வேங்கைகள்புன வரைதழுவிய பூம்பொழிலிமயத்துள்,
ஏர்கொள் பூஞ்சுனைத் தடம்படிந் தினமலர் எட்டுமிட்டிமையோர்கள்,
பேர்களாயிரம் பரவிநின்றடி தொழும் பிரிதிசென்றடைநெஞ்சே. (964)

8. இரவுகூர்ந் திருள்பெரு கியவரைமுழை இரும்பசியதுகூர,
அரவமா விக்குமகன் பொழில்தழுவிய அருவரையிமயத்து,
பரமனாதி யெம்பனிமுகில் வண்ணனென்று எண்ணிநின்றிமையோர்கள்,
பிரமனோடு சென்றடிதொழும் பெருந்தகைப் பிரிதிசென்றடைநெஞ்சே.(965)

9. ஓதியாயிர நாமங்களு ணர்ந்தவர்க்கு உறுதுயரடையாமல்,
ஏதமின்றி நின்றருளும்நம் பெருந்தகை இருந்தநல்லிமயத்து,
தாதுமல் கியபிண்டி விண்டலர்கின்ற தழல்புரையெழில்நோக்கி,
பேதைவண்டு களெரியென வெருவரு பிரிதிசென்றடைநெஞ்சே. (966)

10. கரியமாமுகிற் படலங்கள்கிடந்து அவைமுழங்கிட,களிறென்று
பெரியமாசுணம் வரையெனப் பெயர்தரு பிரிதியெம்பெருமானை,
வரிகொள் வண்டறை பைம்பொழில் மங்கையர் கலியனதொலிமாலை,
அரியவின் னிசைபாடு நல்லடியவர்க்கு அருவினையடயாவே. (967)

ஓம் நமோ நாராயணாய!

Saturday, May 12, 2018

61. திவ்யதேச தரிசன அனுபவம் - 40 கண்டம் என்னும் கடிநகர் (தேவப்பிரயாகை) - 102

தரிசனம் செய்த நாள்: 03.05.18  வியாழக்கிழமை 
வடநாட்டுத் திருப்பதிகள் - 12
7. திருக்கங்கைக்கரைக்கண்டம்(102)


7. திருக்கங்கைக்கரைக்கண்டம்
மத்தாற் கடல்கடைந்து வானோர்க் கமுதளித்த
அத்தா! எனக்குன் னடிப்போதில் - புத்தமுதைக்
கங்கைக் கரைசேருங் கண்டத்தாய்! புண்டரிக
மங்கைக் கரைசே! வழங்கு. (102))
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

ரிஷிகேஷிலிருந்து பத்ரிநாத்  செல்லும் வழியில் வரும் முதல் திவ்யதேசம் இது. ரிஷிகேஷிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  இந்த ஊர் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

கங்கோத்ரியிலிருந்து கிளம்பி வரும் பாகீரதி நதியும் பத்ரிநாத்தில் பிறந்து வரும் அலகானந்தா நதியும் இணைந்து கங்கை என்ற நதியாக உருவெடுக்கும் அற்புதமான இடம் இது. பாகீரதியின் பச்சை நிறத் தண்ணீரும் அலகானந்தாவின் சாம்பல் நிறத் தண்ணீரும் ஒன்று கலப்பது கண்கொள்ளாக் காட்சி.

இந்த சங்கமத்தில் நீராடி விட்டு பல படிகள் ஏறிக் குன்றின் மீது அமைந்திருக்கும்  'வண்  புருஷோத்தமன்' என்னும் நீலமேகப் பெருமாளின் திவ்யதேசத் திருக்கோவிலை அடைய வேண்டும்..

பிரயாகை என்றால் இரு நதிகள் இணையும் இடம் என்று ஒரு பொருள் உண்டு. இரண்டு தேவ நதிகள் இங்கு இணைவதால், இத்தலம் தேவப்பிரயாகை என்று அழைக்கப்படுகிறது.

பிரயாகை என்றால் தவம் செய்யச் சிறந்த இடம் என்றும் பொருள். பிரம்மா, தசரதர், ராமர், பரத்வாஜர் ஆகியோர் இங்கே தவம் செய்திருக்கின்றனர். பரத்வாஜர் இங்கே தவம் செய்த பிறகுதான் சப்தரிஷிகளில் ஒருவராக ஆனார்.

ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்ள ராமர் இங்கே தவம் செய்தார். அதனால் இந்தக் கோவில் ரகுநாத்ஜி மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது. ராமர் அமர்ந்து தவம் செய்த இடத்தில் ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

மூலவர் - நீலமேகப் பெருமாள், புருஷோத்தமன்
நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்
தாயார் - புண்டரீகவல்லி (தாயார் சந்நிதி தனியே இல்லை. பெருமாளின் திருமார்பில் இருக்கும் தாயாரின் பெயர் இது என்றுதான் கொள்ள வேண்டும்.)
தீர்த்தம் - மங்கள தீர்த்தம், கங்கா நதி
விமானம் -  மங்கள விமானம்

கோவிலில் நரசிம்மர், ஆஞ்சநேயர், அன்னபூரணி, வாமனர், சிவன், ஆதிசங்கரர், ராமானுஜர் ஆகியோருக்கு சந்நிதிகள் இருக்கின்றன. முன்பே குறிப்பிட்டது போல் ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட மேடையும் இருக்கிறது.

கோவிலுக்குச் செல்லும் வழியை இந்த வீடியோ படம் பிடித்துக் காட்டுகிறது.


இந்த திவ்ய தேசம் பற்றி  வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்க உரையை இந்த வீடியோவில் கேட்கலாம்இந்த திவ்ய தேசம் பற்றி, பெரியாழ்வார் தமது 'பெரியாழ்வார் திருமொழியில் பதினோரு பாசுரங்கள் பாடியுள்ளார். இந்த திவ்ய தேசத்துக்குச் செல்ல முடியாதவர்கள் இந்தப் பாசுரங்களப் படித்தாலே இந்த திவ்யதேசத்தில் கங்கையில் நீராடிய அனுபவம் கிடைக்கும் என்கிறார் அவர்.

பாசுரங்கள் இதோ.

நாலாயிர திவ்யப் பிரபந்தம்
பெரியாழ்வார் திருமொழி 
நான்காம் பத்து 
ஏழாம்  திருமொழி
1. தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்தஎம் தாச ரதிபோய்
எங்கும் தன்புக ழாவிருந்து அரசாண்ட எம்புரு டோத்தம னிருக்கை
கங்கை கங்கையென்ற வாசகத் தாலே கடுவினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற கண்டமென் னும்கடி நகரே. (391)

2. சலம்பொதி யுடம்பின் தழலுமிழ் பேழ்வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்தெழுந் தணவி மணிவண்ண வுருவின் மால்புரு டோத்தமன் வாழ்வு
நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் நாரணன் பாதத்து ழாயும்
கலந்திழி புனலால் புகர்படு கங்கைக் கண்டமென் னும்கடி நகரே. (392)

3. அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்தி அழலுமிழ் ஆழிகொண் டெறிந்துஅங்கு
எதிர்முக வசுரர் தலைகளை யிடறும் எம்புரு டோத்தம னிருக்கை
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர்முக மணிகொண் டிழிபுனல் கங்கைக் கண்டமென் னும்கடி நகரே. (393)

4. இமையவர் இறுமாந் திருந்தர சாள ஏற்றுவந் தெதிர்பொரு சேனை
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம்புரு டோத்தமன் நகர்தான்
இமவந்தம் தொடங்கி இருங்கடலளவும் இருகரை உலகிரைத் தாட
கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே. (394)

5, உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுட ராழியும் சங்கும்
மழுவொடு வாளும் படைக்கல முடைய மால்புரு டோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழு தளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே. (395)

6. தலைப்பெய்து குமுறிச் சலம்பொதி மேகம் சலசல பொழிந்திடக் கண்டு
மலைப்பெருங் குடையால் மறைத்தவன் மதுரை மால்புரு டோத்தமன் வாழ்வு
அலைப்புடைத் திரைவாய் அருந்தவ முனிவர் அவபிர தம்குடைந் தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே. (396)

7. விற்பிடித் திறுத்து வேழத்தை முருக்கி மேலிருந் தவன்தலை சாடி
மற்பொரு தெழப்பாய்ந்து அரையன யுதைத்த மால்புரு டோத்தமன் வாழ்வு
அற்புத முடையஅயி ராவத மதமும் அவரிளம் படியரொண் சாந்தும்
கற்பக மலரும் கலந்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே. (397)

8. திரைபொரு கடல்சூழ் திண்மதிள் துவரை வேந்துதன் மைத்துனன் மார்க்காய்
அரசினை யவிய அரசினை யருளும் அரிபுரு டோத்தம னமர்வு
நிரைநிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரைபுரை வேள்விப் புகைகமழ் கங்கை கண்டமென் னும்கடி நகரே. (398)

9. வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை
தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே. (399)

10. மூன்றெழுத் ததனை மூன்றெழுத் ததனால் மூன்றெழுத் தாக்கிமூன் றெழுத்தை
ஏன்றுகொண் டிருப்பார்க்கு இரக்கம்நன் குடைய எம்புரு டோத்தம னிருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு வானான்
கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே. (400)

11. பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து உறைபுரு டோத்தம னடிமேல்
வெங்கலி நலியா வில்லிபுத் தூர்க்கோன் விட்டுசித் தன்விருப் புற்று
தங்கிய அன்பால் செய்தமிழ் மாலை தங்கிய நாவுடை யார்க்கு
கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந் தகணக் காமே. (401)

ஓம் நமோ நாராயணாய !


Monday, February 12, 2018

60. திவ்யதேச தரிசன அனுபவம் - 39 திருவட்டாறு (68)

தரிசனம் செய்த நாள்: 26.01.18  வெள்ளிக்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
10. திருவாட்டாறு (68)


மாலைமுடி நீத்து மலர்ப்பொன் னடிநோவப்
பாலைவன நீபுகுந்தாய் பண்டென்று - சாலவநான்
கேட்டாற் றுயிலேன்காண் கேசவனே! பாம்பணைமேல்
வாட்டாற்றுக் கண்டுயில்கொள் வாய். (68)
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

மலைநாட்டு திவ்யதேசம் என்றாலும், திருவட்டாறு இருப்பது தமிழ்நாட்டில் (திருவண்பரிசாரம் என்ற மலைநாட்டு திவ்யதேசமும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.) ஆயினும் இது மற்ற கேரளா திவ்யதேசங்களைப் போலவே பூஜை முறைகள் கொண்டது.

பிரும்மாவின் தவத்தைக் கலைக்க, அவருடன் ஊடல் கொண்ட சரஸ்வதி தேவி கேசன், கேசி என்ற இரு அரக்கர்களை அனுப்பினார். பிரும்மா பெருமாளிடம் பிரார்த்திக்க, பெருமாள் கேசனை பூமிக்கு அடியே அழுத்தி அந்த இடத்திலேயே பள்ளி கொண்டு விட்டார். தன் சகோதரன் கேசனை விடுவிக்க, கேசி என்ற அரக்கி பரணி, கோதா என்ற இரு ஆறுகளாகப் பெருக்கெடுத்து வந்தாள். அப்போது பூமாதேவி பெருமாள் படுத்திருந்த இடத்தை மேடாக இருக்கும்படி உயர்த்தி விட்டார்.

கேசி பெருமாளிடம் சரணடைய, பெருமாள் அவளை மன்னித்து, தன்  கோவிலைச் சுற்றி இரு நதிகளும் மாலைபோல் ஓட வகை செய்தார். கோவிலைச் சுற்றி வட்டம் போல் இரு நதிகள் ஓடுவதால் இந்த இடம் திருவட்டாறு என்று பெயர் பெற்றது. காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு நதிகளுக்கிடையே ஸ்ரீரங்கம் அமைந்திருப்பதை போல் இந்தத் தலமும்  அமைந்துள்ளது.

ஹாதலேகர் என்ற முனிவருக்குப் பெருமாள் அஷ்டாட்சர மந்திரத்தை அருளிய பெருமையும் இந்தத் தலத்துக்கு உண்டு.

 திருவனந்தபுரம் கோவிலைப் போல் இந்தக் கோவிலும் மார்த்தாண்டவர்மனால் திருப்பணி செய்யப்பட்டது.

அனந்தபத்மநாபர் போலவே தோற்றம் கொண்ட ஆதிகேசவப் பெருமாள்  சில விஷயங்களில் மாறுபடுகிறார். 

இவர் 22 அடி நீளம் கொண்டவர். மேற்கு நோக்கி சயனித்திருப்பதால் திருமுடி நமக்கு வலப்பக்கமாக இருக்கிறது. அதாவது அனந்தபத்மநாபர் விக்கிரகத்தின் கண்ணாடி பிம்பம் போல் திருமுடியும், திருவடியும் மாறி இருக்கின்றன. (காஞ்சிபுரத்தில் உள்ள திருவெஃகா, திருவட்டாறு ஆகிய இரு தலங்களில்தான் பெருமாள் நமக்கு வலப்புறமாகத் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார்.) மேலும் நாபிக்கமலத்தில் பிரும்மா இல்லை. இவர் ஆதிகேசவப் பெருமாள் என்பதால் பிரும்மா தோன்றுவதற்கு முன் இருந்த தோற்றத்துடன் இங்கே காட்சி அ ளிக்கிறார்.

இவர் 16008 சாளக்கிராமங்களால் உருவாக்கப்பட்டவர்..

மூலவர் - ஆதிகேசவப் பெருமாள். புஜங்க சயனம். மேற்கு நோக்கிய திருமுக மண்டலம்.

தாயார் - மரகதசவல்லித் தாயார். தனிக்கோவில் சந்நிதி இல்லை.

விமானம் - அஷ்டாங்க விமானம்

தீர்த்தம் -  கடல்வாய்த் தீர்த்தம், வாட்டாறு ராம தீர்த்தம் 

பரசுராமருக்கும், சந்திரனுக்கும் காட்சி கொடுத்த பெருமாள் இவர்.

மூலவர் சந்நிதிக்கு முன் ஒற்றைப்பாறை என்ற ஒரு பெரிய மேடை போன்ற கல் இருக்கிறது. அதன்மீது ஏறி நின்று பார்த்தால்தான் பெருமாளை நன்கு தரிசிக்க முடியும். சில சமயங்களில்தான் இதை அனுமதிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. நாங்கள் தரிசனம் செய்தபோது கோவில் சம்ப்ரோக்ஷணத்துக்கான பணிகள் நடந்து கொண்டிருந்தன. அதனால் இப்போது உத்சவர் சேவை மட்டும்தான். ஆயினும்,  மூலவரை இந்தப் பாறைக்குப் பின் கீழே நின்று தரிசிக்க முடிந்தது.

திருவனந்தபுரம் போல் இங்கும் மூன்று வாயில்கள் மூலம் பெருமாளை தரிசிக்க வேண்டும்.

திருவனந்தபுரம் போல் இங்கும் ஒரு கிருஷ்ணர் சந்நிதி உள்ளது. அதேபோல் தூண்கள் நிறைந்த அகலமான பிரகாரம்.

திருப்பணிகள் முடிந்து ஸம்ப்ரோக்ஷணம் ஆனபிறகு மீண்டும் பெருமாளைத் தரிசிக்கப் பெருமாள் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

இந்த யாத்திரையில் திருவண்பரிசாரம் என்ற மலைநாட்டு திவ்யதேசம் இடம் பெறவில்லை. இதுவும் தமிழ்நாட்டில்தான் உள்ளது - திருவட்டாறிலிருந்து சிறிது தூரம்தான். இந்த திவ்யதேசத்தை தரிசிக்கவும் இன்னொரு முறை வர வேண்டும்.அப்போதுதான் கேரளா திவ்யதேசங்கள் 13ம் பூர்த்தியாகும்.

இந்த திவ்ய தேசம் பற்றிய தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் விளக்கத்தை வீடியோக்களில் கேட்டு  மகிழுங்கள்.
இந்த திவ்யதேசம் பற்றி நம்மாழ்வார் பாடியுள்ள 11 பாசுரங்கள் இதோ.
நம்மாழ்வார் 
திருவாய்மொழி 
ஆறாம்  திருமொழி
1.அடியார்தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அதுநமது விதிவகையே
இருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன்
மருளொழிநீ மடநெஞ்சே! வாட்டாற்றான் அடிவணங்கே. (3946)

2. வாட்டாற்றா னடிவணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான்
கேட்டாயே மடநெஞ்சே! கேசவனெம் பெருமானை
பாட்டாய பலபாடிப் பழவினைகள் பற்றறுத்து
நாட்டாரோ டியல்வொழிந்து நாரணனை நண்ணினமே. (3947)

3. நண்ணினம் நாரணனை நாமங்கள் பலசொல்லி
மண்ணுலகில் வளம்மிக் க வாட்டாற்றான் வந்தின்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவா றாகாவிக் கருமங்க ளென்னெஞ்சே (3948)

4. என்னெஞ்சத் துள்ளிருந்திங் கிருந்தமிழ்நூலிவைமொழிந்து
வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான்
மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்
நன்னெஞ்சே! நம்பெருமான் நமக்கருள்தான் செய்வானே. (3949)

5. வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே
நானேறப் பெறு கின்றென் நரகத்தை நகுநெஞ்சே
தேனேறு மலர்த்துளவம் திகழ்பாதன் செழும்பறவை
தானேறித் திரிவான தாளிணையென் தலைமேலே. (3950)

6. தலைமேல தாளிணைகள் தாமரைக்கண் என்னம்மான்
நிலைபேரான் என்நெஞ்சத் தெப்பொழுதும் எம்பெருமான்
மலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான் மதமிக்க
கொலையானை மருப்பொசித் தான் குரைகழல்தள் குறுகினமே. (3951)

7. குரைகழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான்
திரைகுழுவு கடல்புடைசூழ் தென்னாட்டுத் திலதமன்ன
வரைகுழுவும் மணிமாட வாட்டாற்றான் மலரடிமேல்
விரைகுழுவும் நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே. (3952)

8. மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருதுபுனல்
மைந்நின்ற வரைபோலும் திருவுருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழவதுவே? (3953)

9. திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூ ர்தி போரரக்கர் குலம்கெடுத்தான்
இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே. (3954)

10. பிரியாதாட் செய்யென்று பிறப்பறுத்தாள் அறக்கொண்டான்
அரியாகி இரணியனை ஆகங்கீண் டானன்று
பெரியார்க்காட் பட்டக்கால் பெறாதபயன் பெறுமாறு
வரிவாள்வாய் அரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே. (3955)

11. காட்டித்தன் கனைகழல்கள் கடுநரகம் புகலொழித்த
வாட்டாற்றெம் பெருமானை வளங்குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ்மாலை யாயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே. (3956)

59. திவ்யதேச தரிசன அனுபவம் - 38 திருவனந்தபுரம் (59)

தரிசனம் செய்த நாள்: 25.01.18  வியாழக்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
1. திருவனந்தபுரம் (59) 


கோளார் பொறியைந்துங் குன்றியுட லம்பழுத்து 
மாளாமு னெஞ்சே! வணங்குதியால் - கேளார்
சினந்தபுரஞ் சுட்டான் றிசைமுகத்தான் போற்றும்
அனந்தபுரஞ் சேர்ந்தா னடி. (59)
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

கேரளாவில் உள்ள திவ்யதேசங்களிலேயே தமிழ்நாட்டுக் கோவில்கள் போல் கோபுரம் அமைந்த கோவில் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபர் கோவில்தான். அகலமாக, மேலே ஒரு படகு போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது. 


திவாகர  முனிவர் என்பவர் அனந்தன்காடு என்ற இடத்தில்   ஒரு இலுப்பை மர வடிவில் இந்தப் பெருமாளைக் கண்டார்.  திருவல்லாறு தொடங்கி, திருவனந்தபுரம் ஈடாக திருப்பாப்பூர் வரை சுமார் ஐந்து மைல்  நீளத்தில்   இலுப்பைமர வடிவில் இருந்த பெருமாள். முனிவரின் வேண்டுகோளின்படி தன் உருவத்தைப் பதினெட்டு அடிகளாகச் சுருக்கிக் கொண்டார். 

திவாகர முனிவருக்கு நிகழ்ந்தது போல் வில்வமங்கள நம்பூதிரி என்பவருக்கும் நிகழ்ந்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. திவாகர முனிவர், வில்வமங்கள நம்பூதிரி இருவருமே பெருமாளுக்கருகே கர்ப்பக்கிரகத்த்தில்  உள்ளனர். இவர்களைத்தவிர கௌண்டின்யர் என்ற முனிவரும் சந்நிதியில்  இருக்கிறார்.

பிற்காலத்தில், இந்தக் கோவிலில் ஒரு தீ விபத்து ஏற்பட்டதால்,, மார்த்தாண்ட வர்மன் என்ற மன்னன்  பெருமாள் இட்ட கட்டளைப்படி நேபாளத்திலிருந்து 2400 சாலிக்கிராமங்களை  யானை மீது எற்றிக்  கொண்டு வரச்செய்தான்.  அவற்றில் 1200 சாளக்கிராமங்களைக் கொண்டு இப்போது உள்ள 18 அடி நீள விக்கிரகம் உருவாக்கப்பட்டது. மீதமுள்ள 1200 சாளக்கிராமங்கள், பிற்காலத்தில்  தேவைப்பட்டால் பயன்படுத்தப்படுவதற்காகக் கீழே புதைத்து வைக்கப்பட்டுள்ளன.


1686இல் தொடங்கி  40 வருடங்கள்  கோவில்  நிர்மாணப்  பணிகள் நடந்து,  1726ஆம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது. 1750ஆம் ஆண்டு, மார்த்தாண்டவர்மன் தன்னை பத்மநாபதாசன் என்று அறிவித்துக் கொண்டான்.அவனது வம்சத்தினரும் அவ்வாறே அழைக்கப்படுகின்றனர். 

மூலவர் - அனந்த பத்மநாபன். ஆதிசேஷன் மீது சயனித்த திருக்கோலம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். நாபிக்கமலத்தில் பிரும்மா. பெருமாளின் திருமுடி, உடல், திருவடி ஆகியவற்றைத் தனித்தனியே தரிசிக்கும் வகையில் மூன்று வாசல்கள் உள்ளன,

தாயார் - ஸ்ரீஹரி லட்சுமி. தனிக்கோவில் இல்லை. உத்சவராகப் பெருமாளுடன்  இணைந்து கர்ப்பக்கிரகத்தில் இருக்கிறார். 

விமானம் - ஹேமகூட விமானம் 

தீர்த்தம் - மத்ஸ்ய தீர்த்தம், வராக தீர்த்தம் 

நரசிம்மர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், கணபதி  சந்நிதிகள் இருக்கின்றன. 

பெருமாளைத் தரிசிக்க மேடைக்கு ஐந்தாறு படிகள் ஏறிச் செல்ல வேண்டும். கைப்பிடி இல்லாததாலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒழுங்கு முறை சரியாகக் கடைப்பிடிக்கப்படாததாலும் , படிகளில் அனைவரும் கூட்டமாக ஏற, ஓரத்தில் ஏறுபவர்கள் நெருக்கத்தால் கீழே விழாமல் இருக்க, மிக கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. அத்துடன், சிலர் படிகளில்  ஏறாமல், பக்கவாட்டில் போய் மேடையில் தாவி ஏறுகிறார்கள். கோவில் நிர்வாகம் இவற்றை கவனித்து,  தரிசனம் செய்ப்பவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினால் சிறப்பாக இருக்கும்.

மிகப்பெரிய கோயில். பிரகாரம் முழுவதும் தூண்கள் என்று கோவிலின் அமைப்பு அற்புதமாக இருக்கிறது.

இந்த திவ்யதேசம் பற்றி எங்கள் யாத்திரை வழிகாட்டி தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் வீடியோவும், வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் வீடியோவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 
இந்த திவ்யதேசம் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியிருக்கிறார்.
நம்மாழ்வார் 
திருவாய்மொழி 
பத்தாம் பத்து
இரண்டாம்  திருமொழி
1. கெடுமிட ராயவெல்லாம் கேசவா வெள்ள நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்தபுரநகரிப் புகுதுமின்றே. (3902)

2. இன்றுபோய்ப் புகுதிராகி லெழு மையும் ஏதம்சார
குன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை
மன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம்
ஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே. (3903)

3. ஊரும்புட் கொடியுமஃதே யுலகொல்லாமுண்டுமிழ்ந்தான்
சேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச்சொன்னோம்
பேரும் ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே.(3904)

4. பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து
வாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம்
நேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே. (3905)

5. புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி
எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால்
திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில்
அனந்தபுரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார். (3906)

6. அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து
அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர்
நமர்களோ! சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும்
குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே. (3907)

7. துடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும்
படைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான்
மடைத்தலை வாளைபாயும் வயல ணியனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே. (3908)

8. கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை
இடவகை கொண்டதென்பர் எழிலணி யனந்தபுரம்
படமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண
நடமினோ நமர்களுள்ளீர்! நாமுமக் கறியச்சொன்னோம். (3909)

9. நாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான
சேமம் நங்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம்
தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு
வாமனன் அடிக்கென்றெத்த மாய்ந்தறும் வினைகள்தாமே. (3910)

10. மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும்
ஏய்ந்தபொன் மதிளனந்தபுர நகரெந்தைக்கென்று
சாந்தொடு விளக்கம்தூபம் தாமரை மலர்கள்நல்ல
ஆய்ந்துகொண் டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே. (3911)

11. அந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை
கொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில்
பைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே. (3912)
ஓம் நமோ நாராயணாய!

Sunday, February 11, 2018

58. திவ்யதேச தரிசன அனுபவம் - 37 திருவண்வண்டூர் (67)

தரிசனம் செய்த நாள்: 25.01.18  வியாழக்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
9. திருவண்வண்டூர் (67)தேவி முலகு முயிருந் திரிந்துநிற்கும்
யாவும் படைத்த விறைகண்டீர் - பூவில்
திருவண்வண் டூருறையுந் தேவாதி தேவன்
மருவண்வண் டூர்துளவ மால். (67)
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 


நகுலனால் புனர்நிர்மாணம் செய்யப்பட திவ்யதேசம் திருவண்வண்டூர். திருப்பாண்டவனூர் என்ற பெயர் காலப்போக்கில் திருவண்வண்டூர் என்று மாறியிருக்கலாம். திருவமுண்டூர் என்றும் இந்த ஊர் அழைக்கப்படுகிறது. 

நாரதர் ஒருமுறை பிரம்மாவின் சாபத்துக்கு ஆளாகி இந்த ஊரில்  வந்து தவம் செய்தார். அப்போது பெருமாள் அவருக்குக் காட்சி கொடுத்தார். நாரதீய புராணம் என்ற நூலை அவர் இங்கிருந்தபடிதான் எழுதினார் என்பது ஸ்தல புராணம்.மார்க்கண்டேய மகரிஷிக்குப் பெருமாள் கமலவல்லித் தாயார்  சமேதராக இங்கே காட்சி அளித்தார் என்பதும் இந்த திவ்யதேசத்தின் சிறப்பு.

பம்பா நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம்

மூலவர் - கமலநாதன், பாம்பணையப்பன் (பம்பா நதிக்கு அருகில் எழுந்தருளியிருப்பதால் இந்தப் பெயர்) வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம் 

தாயார் - கமலவல்லி நாச்சியார் (தனிக்கோவில் சந்நிதி இல்லை)

விமானம் - வேதலய  விமானம் 

தீர்த்தம் - பாபநாச தீர்த்தம், பம்பா தீர்த்தம் 

நாங்கள் சென்றபோது பெருமாள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அற்புதமாகக் காட்சி அளித்தார். 

இந்த திவ்யதேசத்தின் பெருமையை தஞ்சாவூர் ரமேஷ் அவர்கள் விளக்கும் வீடியோ கீழே.இந்த திவ்யதேசத்தை நம்மாழ்வார் 11 பாசுரங்களில் மங்களாசாஸனம் செய்திருக்கிறார்.
நம்மாழ்வார்
திருவாய்மொழி 
ஆறாம் பத்து
முதல் திருமொழி
1. வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்
செய்கொள் செந்நெ லுயர்திருவண்வண் டூருறையும்,
கைகொள் சக்கரத் தென்கனி வாய்பெரு மானைக்கண்டு,
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே. (3451)

2. காதல் மென்பெடை யோடுடன் மேயும் கருநாராய்!
வேத வேள்வி யொலிமுழங்கும் தண் டிருவண்வண்டூர்,
நாதன் ஞாலமெல் லாமுண்ட நம்பெரு மானைக்கண்டு,
பாதம் கைதொழுது பணியீ ரடியேன் திறமே. (3452)

3. திறங்க ளாகியெங் கும்செய்களூடுழல் புள்ளினங்காள்,
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண் டூருறையும்,
கறங்கு சக்கரக் கைக்கனி வாய்ப்பெரு மானைக்கண்டு,
இறங்கி நீர்தொழுது பணியீரடியே னிடரே. (3453)

4. இடரில் போகம் மூழ்கி யிணைந்தாடும் மடவன்னங்காள்,
விடலில் வேத வொலிமுழங்கும்தண் திருவண்வண்டூர்,
கடலில் மேனிப் பிரான்கண் ணணைநெடு மாலைக்கண்டு,
உடலம் நைந்தொருத் தியுரு கும் என் றுணர்த்துமினே. (3454)

5. உணர்த்த லூட லுணர்ந்துடன் மேயும் மடவன்னங்காள்,
திணர்த்த வண்டல்கள் மேல்சங்கு சேரும் திருவண்வண்டூர்,
புணர்த்த பூந்தண் டுழாய்முடி நம்பெரு மானைக்கண்டு,
புணர்த்த கையினரா யடியேனுக்கும் போற்றுமினே. (3455)

6. போற்றியான் இரந் தேன்புன்னை மேலுறை பூங்குயில் காள்,
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண் டூருறையும்,
ஆற்ற லாழியங் கையம ரர்பெரு மானைக்கண்டு,
மாற்றங் கொண்டரு ளீர்மையல் தீர்வ தொருவண்ணமே. (3456)

7. ஒருவண்ணம்சென்று புக்கெனக்கு ஒன்றுரை யொண்கிளியே,
செருவொண் பூம்பொழில் சூழ்செக்கர் வேலை திருவண்வண்டூர்,
கருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்,
செருவொண் சக்கரம் சங்கடை யாளம் திருந்தக் கண்டே. (3457)

8. திருந்தக் கண்டெனக் கொன்றுரை யாயொண் சிறுபூவாய்
செருந்தி ஞாழல் மகிழ்புன்னை சூழ்தண் டிருவண்வண்டூர்,
பெருந்தண் தாமரைக் கண்பெரு நீண்முடி நாள்தடந்தோள்,
கருந்திண் மாமுகில் போல்திரு மேனி யடிகளையே. (3458)

9. அடிகள் கைதொழு தலர்மேல் அசையும் அன்னங்காள்,
விடிவை சங்கொலிக் கும்திரு வண்வண் டூருறையும்,
கடிய மாயன்தன் னைக்கண்ணனை நெடு மாலைக்கண்டு,
கொடிய வல்வினை யேன்திறம் கூறுமின் வேறுகொண்டே. (3459)

10. வேறு கொண்டும்மை யானிரந் தேன்வெறி வண்டினங்காள்,
தேறு நீர்ப்பம் பைவட பாலைத் திருவண்வண்டூர்,
மாறில் போரரக் கன்மதிள் நீறெழச் செற்றுகந்த,
ஏறுசேவக னார்க்கென்னை யுமுளள் என்மின்களே. (3460)

11. மின்கொள் சேர்புரி நூல்குற ளாயகல் ஞாலம்கொண்ட,
வன்கள் வனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொன்ன,
பண்கொள் ஆயிரத் துள்ளிவை பத்தும் திருவண்வண்டூர்க்கு,
இன்கொள் பாடல் வல்லார் மதனர்மின் னி டையவர்க்கே. (3461)
ஓம் நமோ நாராயணாய!

Saturday, February 10, 2018

56.திவ்யதேச தரிசன அனுபவம் - 35 திருச்செங்குன்றூர்

தரிசனம் செய்த நாள்: 25.01.18  வியாழக்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
6. திருச்செங்குன்றூர் (64)


வரவேண்டுங் கண்டாய் மதிகலங்கி விக்குள்ற் 
பொரவே யுயிர்மாயும் போழ்து - பரமேட்டி!
செங்குன்றூர் மாலே! சிறைப்பறவை மேற்கனகப்
பைங்குன் றூர் கார்போற் பறந்து. (64)
- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

திருச்செங்குன்றூர் (திருச்செங்கண்ணூர்), திருவாறன்விளை, திருவல்லவாழ், திருப்புலியூர், திருவண்வண்டூர் ஆகிய ஐந்து திவ்யதேசங்களும் சற்று அருகருகிலேயே அமைந்துள்ளன. திருச்செங்குன்றூர் திவ்யதேசம் திருச்சிற்றாறு  என்றும் அழைக்கப்படுகிறது. பம்பா நதியின் கிளையான திருச்சிற்றாறின் கரையில் அமைந்திருப்பதால் இந்தப் பெயர்.
மகாபாரதப் போரின்போது துரோணரின் மகன் அஸ்வத்தாமா கொல்லப்பட்டதாக அவரை நம்ப வைத்து அதன் மூலம் அவரை பலவீனப்படுத்தி வீழ்த்தியதில் யுதிஷ்டிரனுக்கும் பங்கு உண்டு. இந்தப் பாவத்தைப் போக்கிக்கொள்ள யுதிஷ்டிரன் இந்தக்  கோவிலைப் புனர் நிர்மாணம் செய்தான்.

சிவபெருமானிடம் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி பஸ்மாசுரன் என்ற அரக்கன் அவரையே அழிக்க முன்றபோது மோகினியாக வந்து நடனமாடி அரக்கனை அழித்த வரலாறும் இந்த திவ்யதேசத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.  
மூலவர் - இமையவரப்பன். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். வழக்கத்துக்கு மாறாக, இங்கே சங்கு வலக்கையிலும், சக்கரம் இடக்கையிலும் இருக்கிறது.
தாயார் - செங்கமலவல்லி நாச்சியார் (தனிக்கோவில் நாச்சியார் இல்லை)
விமானம் - ஜகஜ்ஜோதி விமானம் 
தீர்த்தம் - சங்க
தீர்த்தம்
இந்த திவ்யதேசம் பற்றித் தஞ்சை ரமேஷ் அவர்களின் விளக்கவுரையை இந்தக் காணொளியில் கேட்டு மகிழலாம். 
நம்மாழ்வார் 
திருவாய்மொழி
எட்டாம் பத்து
நான்காம்  திருமொழி
1. வார்கடா அருவி யானைமா மலையின் மருப்பி ணைக் குவடிறுத் துருட்டி,
ஊர்கொள்திண் பாகன் உயிர்செகுத் தரங்கின் மல்லரைக் கொன்றுசூழ் பரண்மேல்,
போர்கடா வரசர் புறக்கிட மாட மீமசைக் கஞ்சனைத் தகர்த்த,
சீர்கொள்சிற் றாயன் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெங்கள்செல் சார்வே.(3704)

2. எங்கள்செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பனென் அப்பன்,
பொங்குமூ வுலகும் படைத்தளித் தழிக்கும் பொருந்துமூ வுருவனெம் அருவன்,
செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு
அங்கமர் கின்ற, ஆதியான் அல்லால் யாவர்மற் றெனமர் துணையே? (3705)

3. என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்தவெம் பெருமான்,
முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள என்னையாள் கின்றேம் பெருமான்,
தென்திசைக் கணிகொள் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை மீபால்
நின்றவெம் பெருமான், அடியல்லால் சரணம் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே.(3706)

4. பிறிதில்லை யெனக்குப் பெரியமூ வுலகும் நிறையப்பே ருருவமாய் நிமிர்ந்த,
குறிய மாண் எம்மான் குரைகடல் கடைந்த கோலமா ணிக்கமென் எம்மான்,
செறிகுலை வாழை கமுகுதெங் கணிசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு
அறிய,மெய்ம் மையே நின்றவெம் பெருமான் அடியிணை யல்லதோர் அரணே. (3707)

5. அல்லதோர் அரணும் அவனில்வே றில்லை அதுபொரு ளாகிலும், அவனை
அல்லதென் ஆவி அமர்ந்தணை கில்லா தாதலால் அவனு றை கின்ற,
நல்லநான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும்புகை விசும்பொளி மறைக்கும்,
நல்லநீள் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெனக்குநல் லரணே. (3708)

6. எனக்குநல் லரணை எனதா ருயிரை இமையவர் தந்தைதாய் தன்னை,
தனக்குன்தன் தன்மை அறிவரி யானைத் தடங்கடல் பள்ளியம் மானை,
மனக்கொள்சீர் மூவா யிரவர்வண் சிவனும் அயனும் தானுமொப் பார்வாழ்,
கனக்கொள்திண் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்கண் டேனே. (3709)

7. திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள் கண்டவத் திருவடி யென்றும்,
திருச்செய்ய கமலக் கண்ணூம்செவ் வாயும் செவ்வடி யும்செய்ய கையும்,
திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய கமலமார் பும்செய்ய வுடையும்,
திருச்செய்ய முடியும் ஆரமும் படையும் திகழவென் சிந்தையு ளானே. (3710)

8. திகழவென் சிந்தை யுள்ளிருந் தானைச் செழுநிலத் தேவர்நான் மறையோர்,
திசைகைகூப்பி யேத்தும் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை யானை,
புகர்கொள்வா னவர்கள் புகலிடந் தன்னை அசுரர்வன் கையர்வெங் கூற்றை,
புகழுமா றறியேன் பொருந்துமூ வுலகும் படைப்பொடு கெடுப்புக்காப் பவனே.(3711)

9. படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவபெருமான் அவனே,
இடைப்புக்கோ ருருவும் ஒழிவில்லை யவனே புகழ்வில்லை யாவையும் தானே,
கொடைப்பெரும் புகழார் இனையர்தன் னானார் கூறிய விச்சையோ டொழுக்கம்,
நடைப்பலி யியற்கைத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றமர்ந்த நாதனே. (3712)

10. அமர்ந்த நாதனை யவரவ ராகி அவர்க்கருள் அருளுமம் மானை
அமர்ந்ததண் பழனத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றாற் றங்கரை யானை,
அமர்ந்தசீர் மூவா யிரவர்வே தியர்கள் தம்பதி யவனிதே வர்வாழ்வு,
அமர்ந்தமா யோனை முக்கணம் மானை நான்முக னையமர்ந் தேனே. (3713)

11. தேனைநன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்டவம் மானை,
வானநான் முகனை மலர்ந்தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்தமா யோனை,
கோனைவண் குருகூர்ச் வண்சட கோபன் சொன்னவா யிரத்துளிப் பத்தும்,
வானின்மீ தேற்றி யருள்செய்து முடிக்கும் பிறவிமா மாயக்கூத் தினையே (3714)
ஓம் நமோ நாராயணாய!