Monday, October 14, 2013

1. வைணவம் - இத்தொடர் பற்றி ஓர் அறிமுகம்

தமிழில் திருமால் என்று அழைக்கப்படும் மஹாவிஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கருதி வழிபடும் நெறிமுறை  வைணவம்.

வைணவத்தைப் பின்பற்றும் ஒரு குடும்பத்தில் பிறந்ததால் நான் ஒரு வைணவன். 

மற்றபடி  என் மதம், என் இனம், என் மொழி, என் தேசம் ஆகியவைதான் உலகத்தில் உயர்ந்தவை  என்று கருதுவது சரியல்ல என்பது என் பணிவான கருத்து.

ஆயினும், நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த இடம் மிக உயர்ந்தது என்று கருதுவது மனித இயல்பு. 'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்று பாடினார் பாரதியார். 'தேசங்களில் சிறந்தது இங்கிலாந்து' என்று ஷேக்ஸ்பியர் கருதியிருக்கக் கூடும்!

நாம் பிறந்த நாடு, நம் மொழி, நம் மதம், நம் இனம் போன்றவற்றைப் பற்றிப் பெருமை கொள்வதில் தவறில்லை. 

இந்தப் பெருமைகளை நாம் கூறிக் கொள்ளும்போது மற்றவர்களின் இனம், மதம், மொழி, நாடு போன்றவை நம்முடையவற்றை விட சற்றே குறைந்தவை என்ற கருத்து வெளிவராமல் பார்த்துக் கொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். 

எனவே இங்கே இடம் பெறும் கட்டுரைகள் திருமால் பெருமையைப் பேசும்போது, அது மற்ற தெய்வங்களைக் குறைத்துப் பேசுவதாக ஆகாது.

நான் ஒரு அலுவலகத்தில் பணி செய்துகொண்டிருந்தபோது அங்கே என் இருக்கைக்கு அருகே ஒரு முதியவர் பணி புரிந்து வந்தார். 

ஒருமுறை, ஒரு சக ஊழியர், அந்த முதியவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பணி புரிந்து வந்த ஒருவரைக் குறிப்பிட்டு "அவர் நிறைய விஷயம் தெரிந்தவர்" என்றார். உடனே முதியவர், "அப்படியானால் நான் விஷயம் தெரியாதவனா?" என்று சண்டைக்கு வந்து விட்டார்.

'திருமால் பெருமைக்கு நிகரில்லை' என்று சொன்னால் இது மற்ற தெய்வங்களின் பெருமையைக் குறைத்து மதிப்பிடுவதாக ஆகாது. 

இந்தக் கட்டுரைகளில் வைணவத்தைப் பற்றி மட்டுமே எழுதப் போகிறேன். இதை மற்ற தெய்வங்களை வணங்குபவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

விஜயதசமி தினமான இன்று வைணவத்தின் பெருமைகளைப் பேசும் இந்த வலைப் பதிவை துவங்குகிறேன். 

இந்தத் தொடர் சீராகவும், சிறப்பாகவும் வெளி வர, நான் வணங்கும் திருமாலின் அருளும், திருமால்  பெருமையைப் பாடிய ஆழ்வார்களின் அருளும், திருமால் பெருமையைப் பறை சாற்றிய ராமானுஜரின் கருணையும், அவரைத் தொடர்ந்து வந்த ஆசாரியர்களின் ஆசியும், அமரர்களாகி விட்ட என் தாய் தந்தையரின் ஆசியும், எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தத் தொடரைப் படிக்கப் போகும் வலை வாசகர்களின் ஆதரவும், ஊக்கமும் துணை நிற்கும் என்று நம்புகிறேன்.

இந்தத் தொகுப்பில் நான் எழுத எண்ணியிருக்கும் விஷயங்கள் வைணவத்தைப் பற்றிய ஒரு அறிமுகமாகவும் ஆரம்பப் பாடமுமாகவுமே இருக்கும். 

வைணவ மதத் தத்துவங்களை விளக்கும் ஆழமான கட்டுரைகளை நான் எழுதப் போவதில்லை. அதற்கான புலமையோ ஆராய்ச்சி அறிவோ என்னிடம் இல்லை. 

வைணவம் பற்றி ஆழ்ந்த ஞானம் பெற்றுள்ள அறிஞர்கள் யாராவது இந்த வலைப் பதிவைப் படிக்க நேர்ந்தால் இது ஒரு எளியவனால் வைணவம் பற்றி அறிய விரும்பும் எளிய மனிதர்களுக்காக எழுதப் பட்டது என்பதை மனதில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் பதிவின் காணொளி வடிவம் இதோ:


ஓம் நமோ நாராயணாய!

No comments:

Post a Comment