Sunday, December 15, 2013

6. முதலாழ்வார்கள்


இந்தப் பதிவுக்கு 'வழி காட்டும் வைணவம்' என்று பெயர் வைத்ததற்குக் காரணம் வைணவம் ஒரு மதம் என்ற அடிப்படையில் இறைவனை அடைய வழி காட்டுகிறது என்பது மட்டும் அல்ல. வைணவத்தை போதித்த, பின்பற்றிய ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் போன்றோர் தங்கள் சிந்தனைகள், எழுத்துக்கள் மற்றும் செயல்கள் மூலம் நடைமுறை வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கக்கூடிய சில சிறப்பான வழிகளைக் காட்டியிருக்கிறார்கள் என்பதும்தான். இதற்கு ஒரு உதாரணம்தான் இப்போது நாம் பார்க்கப் போகும் ஒரு நிகழ்வு.

திருக்கோவலூர் என்று ஒரு தலம் விழுப்புரத்துக்கு அருகில் உள்ளது. இது நூற்றியெட்டு திருப்பதிகளில் ஒன்று. இவ்வூரில் நடந்த ஒரு சுவையான சம்பவம் இது.

மழை பெய்து கொண்டிருக்கிறது. மழையில் தெருவில் நடந்து வந்த ஒருவர் மழைக்கு ஒதுங்க இடம் தேடி ஒரு வீட்டின் ரேழியில் ஒதுங்குகிறார். (பழைய வீடுகளின் முகப்பில் திண்ணை என்ற மேடை இருக்கும். திண்ணைக்குப் பின்னே ரேழி என்று ஒரு இருட்டுப் பகுதி இருக்கும். ரேழியைத் தாண்டியபின் தான் வீட்டின் கூடம் வரும். இப்போதும் கிராமங்களில் இந்த அமைப்பு கொண்ட வீடுகள் நிறையவே இருக்கின்றன. பல வீடுகளில் வாயிற்கதவு திறந்தே இருக்கும். வீட்டின் புழங்கும் பகுதி கூடத்தில் இருந்துதான் துவங்குவதால் ரேழி வரை எவரும் வரலாம்.  வீட்டில் இருப்பவர்களின் அந்தரங்கம் (privacy) ரேழியைத் தாண்டித்தான் துவங்கும். எனவே மழை பெய்தால் தெருவில் நடப்பவர்கள் ஏதாவது ஒரு வீட்டின் ரேழியில் வந்து நின்று விட்டு மழை நின்றவுடன் வெளியேறும்  பழக்கம் உண்டு.)

ரேழியில் நுழைந்தவர் அங்கிருந்த குறுகிய திண்ணையில் படுத்துக் கொள்கிறார்.

சற்று நேரம் கழித்து மழைக்கு ஒதுங்க மற்றொருவர் அங்கே வருகிறார். ஏற்கெனவே ஒருவர் படுத்திருப்பதைப் பார்த்து, 'இடம் இருக்கிறதா?' என்று வினவுகிறார்.

படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு, 'ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம்' என்று சொல்லி, புதிதாக வந்தவருக்குத் தம் பக்கத்தில் உட்கார இடம் அளிக்கிறார். சற்று நேரத்தில் மூன்றாவதாக ஒருவர் மழைக்கு ஒதுங்க அங்கே வருகிறார். ஏற்கெனவே இருவர் நெருக்கமாக அமர்ந்திருப்பதைப் பார்த்துத் தமக்கு அங்கே இடம் இருக்குமா என்று தயங்கி நிற்கிறார். அப்போது உட்கார்ந்திருந்த இருவரும் எழுந்து நிற்கின்றனர். முதலில் வந்தவர், 'ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். மூவர் நிற்கலாம்' என்கிறார். மூவரும் நின்று கொள்கின்றனர்.

மூவருக்கும் நெருங்கி நிற்கத்தான் அங்கே இடம் இருக்கிறது. அப்போது திடீரென்று அந்த மூவருக்கும் தங்களை யாரோ நெருக்குவதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. நான்காவதாக ஒருவர் அங்கே வந்திருப்பதை மூவரும் உணர்கிறார்கள். ஆனால் அவர் உருவம் அவர்களுக்குப் புலப்படவில்லை. வானம் கருத்திருப்பதால் அந்த இடம் இருட்டாக இருக்கிறது.

அப்போது ஒரு மின்னல் வீசுகிறது. மின்னல் வீசிய அந்த ஒரு கணத்தில் நான்காவதாக வந்தவரின் முகத்தை மூவரும் பார்க்கிறார்கள். நான்காவதாக அங்கே வந்திருப்பவர் பகவான் விஷ்ணுதான்!

மீண்டும் பகவானின் திருமுகத்தைப் பார்க்க வேண்டுமே! ஆனால் மின்னல் அடித்தால்தான் பார்க்க முடியும். மின்னல் எப்போது அடிக்குமோ?

ஒரு விளக்கு இருந்தால் திருமாலின் முகத்தை மீண்டும் காணலாமே என்று நினைக்கிறார் முதலில் வந்தவர். விளக்கு ஏற்ற அகல், எண்ணெய், திரி, நெருப்பு  எல்லாம் வேண்டுமே! அவற்றுக்கு எங்கே போவது? எனவே தனது ஞானத்தால், தானே ஒரு விளக்கை உருவாக்குகிறார் அவர்.

அவர்தான் முதலாழ்வார்களில் முதல்வரான பொய்கை ஆழ்வார். திருமாலின் மீது ஒரு பாசுரம் பாடி ஞான விளக்கை ஏற்றுகிறார்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடராழி நீங்குகவே என்று.

இதன் பொருள்:
இவ்வுலகத்தையே அகலாக்கி, அலை வீசும் கடலையே நெய்யாக்கி, சூரியனையே திரிச் சுடராக்கி, கையில் சுடர் விடும்  சக்கரத்தை ஏந்தியிருக்கும் (அந்தச் சுடரின் முன் சூரிய ஒளி எம்மாத்திரம்!)  உனது திருவடியில் என் பாசுரத்தை சொல்மாலையாகச் சூடுகிறேன். துன்பக்கடலான இவ்வுலகிலிருந்து நான் மீள வேண்டும் (உன் திருவடி சேர வேண்டும்) என்று வேண்டி

விளக்கு தொடர்ந்து ஒளிவிட்டுக் கொண்டிருந்தால்தானே திருமாலின் தரிசனம் தொடர்ந்து கிடைக்கும்? எனவே முதல் பாடலைத் தொடர்ந்து அவர் மேலும் 99 பாசுரங்கள் பாடுகிறார். இவர் பாடிய நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி என்ற தொகுப்பாக அழைக்கப் படுகின்றன.

இவரைத் தொடர்ந்து இரண்டாவதாக வந்தவர்,

அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
இன்பு உருகு சிந்தை இடு திரியா - நன்பு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.

என்று தொடங்குகிறார். 

இதன் பொருள்:
அன்பையே அகலாக்கி, ஆர்வத்தையே நெய்யாக்கி, உன்னை நினைத்து இன்புற்று உருகும் என் மனத்தையே திரியாக்கி, ஞானச் சுடர் விளக்கு ஏற்றுகிறேன். என்னுடைய தமிழ் அறிவால் நாராயணனின் புகழ் பாடுகிறேன்.

இவரும் நூறு பாசுரங்கள் பாடுகிறார். இவர்தான் முதலாழ்வார்களில் இரண்டாமவரான பூதத்தழ்வார். இவர் பாடிய பாடல்கள் இரண்டாம் திருவந்தாதி என்ற பெயரில் வழங்கப்படுகின்றன.

மூன்றாவதாக வந்தவர் முதலாழ்வார்களில் மூன்றாமவரான பேயாழ்வார். இவர் பாடிய நூறு பாடல்கள் மூன்றாம் திருவந்தாதி என்று வழங்கப்படுகின்றன. இவர் பாடிய முதல் பாசுரம்.

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று

இதன் பொருளை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். பெருமாளின் திருக்கோலத்தை வர்ணித்துப் பாடப்பட்ட பாடல் இது.  முதலில் ஆழ்வாரின் கண்ணுக்குத் தெரிவது திருமாலின் திருமார்பில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மி. (திருமகளை முன்னிட்டே திருமாலை அணுக வேண்டும் என்று முன்பு நாம் பார்த்த வைணவக் கோட்பாட்டின் வெளிப்பாடுதான் இது.) திருமகளின் மேனி பொன் போன்று விளங்குகிறது. பிறகு திருமாலின் பொலிவுக்கு அழகு சேர்க்கும் அவரது கரிய நிறத்தைக் காண்கிறார். அதற்குப்பின் பெருமாளின் தோள்களை தரிசிக்கிறார். அங்கே அவர் பார்த்தது சங்கும் சக்கரமும். 'என் ஆழி வண்ணன்' என்று கடல் நிறம் கொண்டவர் எம்பெருமான் என்று சொல்லி முடிக்கிறார்.

முதல் ஆழ்வார்களைப் பற்றி விரிவாக பின்னொரு பகுதியில் எழுத எண்ணியுள்ளேன்.

இப்போது இந்தச் சம்பவத்தைச் சற்று நெருக்கமான கோணத்தில் பார்ப்போம். முதலாழ்வார் தனது வசதியைக் குறைத்துக்கொண்டு, படுத்துக்கொள்ள முடியாவிட்டால் என்ன, அதுதான் உட்கார இடம் இருக்கிறதே என்று எண்னி இரண்டாவதாக வந்தவருக்கு இடமளித்ததைப் பார்த்தோம். அதற்கும் மேலாக மூன்றாவதாக ஒருவர் வந்தபோது உட்கார்ந்திருந்த இருவரும் தங்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, இன்னொருவருக்கு இடமளிக்க வேண்டும் என்று எண்ணி எழுந்து நின்ற பரந்த மனப்பான்மையை என்னென்று சொல்வது!

இப்படிப்பட்ட உயர்ந்த எண்ணம் கொண்டவர்களிடையே இருக்க விரும்பி பகவானே நேரில் வந்து அவர்களது இட நெருக்கடியைத் தானும் பகிர்ந்து கொண்டதை பார்க்கும்போது, விட்டுக்கொடுத்தல், பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றின் தேவையையும், உயர்வையும், இன்றியமையாமையையும் நாம் உணர்ந்து கொள்ளலாம். நம்மிடம் இருப்பது எவ்வளவு குறைவாக இருந்தாலும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. மூன்று பேர்தான் நிற்க முடியும் என்று கருதப்பட்ட இடத்தில் நான்கு பேர் நின்றார்களே எப்படி? தேவை ஏற்பட்டால் எதுவும் சாத்தியம்!

'மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்'
என்ற கண்ணதாசனின் வரிகள் கூட இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

நம்மிடம் உள்ள எதையும், அது எவ்வளவு குறைவாக இருந்தாலும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அப்படிப் பகிர்ந்து கொள்பவர்களைத் தேடி இறைவன் வருவான். இந்தக் கருத்தை இந்தச் சம்பவத்தின் உட்பொருளாக எடுத்துக்கொண்டு, இதை வைணவத்தின் கோட்பாடுகளில் ஒன்று என்று கொள்ளலாமே!

No comments:

Post a Comment