Friday, July 29, 2016

23. திவ்யதேச தரிசன அனுபவம் - 3. திருவல்லிக்கேணி (94)

தரிசனம் செய்த நாள்: ஜூன்  2016
தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
21. திருவல்லிக்கேணி (94)

திரிந்துழலும் சிந்தைதனைச் செவ்வே நிறுத்திப்
புரிந்து பகனமின் புகன்றால்  மருந்தாம்
கருவல்லி கேணியா மாக்கத்துக்குக்  கண்ணன்
திருவல்லிகேணியான் சீர்  (94)
        - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி'  

சென்னையில் பல வருடங்கள் வசிப்பதால் திருவல்லிக்கேணி திருத்தலத்துக்குப் பல முறைகள் சென்று வந்திருந்தாலும், திவ்ய தேச தரிசனம் என்ற முயற்சியின் கீழ் இம்முறை சென்றதால் பல விஷயங்களை சற்று நுணுக்கமாகவே கவனிக்க முடிந்தது.

சென்னை மெரினா கடற்கரை அருகே அமைந்திருக்கும் இக்கோயில் பஸ் மற்றும் MRTS ரயில் (கடற்கரை-வேளச்சேரி மார்க்கம்) மூலம் எளிதில்  செல்லக்கூடிய இடம். பஸ்  நிறுத்தத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டரும், ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டரும் நடக்க வேண்டும். நடக்க இயலாதவர்கள் ஆட்டோவைப் பயன்படுத்தலாம். அல்லது கிளம்பும் இடத்திலிருந்தே டாக்சியைப் பயன்படுத்தலாம்.

குறுகிய சந்துகள் நிறைந்த திருவல்லிக்கேணியின் மையப்பகுதியில் பரந்த இடத்தில் கம்பீரமாக அமைந்திருக்கிறது கோவில். கோவிலைச் சுற்றி நாலு பக்கமும்  உள்ள தெருக்களும் விஸ்தாரமாகவே அமைந்திருக்கின்றன. கிழக்கு வாசல் அருகே பார்த்தசாரதி சந்நிதிக்கு நேர் எதிரே ஒரு த்விஜ ஸ்தம்பமும், மேற்கு வாசல் அருகே அழகியசிங்கர் சந்நிதிக்கு எதிரே மற்றொரு   த்விஜஸ்தம்பமும் அமைந்திருக்கின்றன. மேற்கு வாசலுக்கு வெளியே உள்ள தெரு துளசிங்கப் பெருமாள் கோயில் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

கோவில் மிகப் பெரியது இல்லை. ஆனால் விஸ்தாரமாகப் பல சந்நிதிகளைக்கொண்டும், சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட பல தூண்களைக் கொண்டும் அமைந்திருக்கிறது. கோவில் கோபுரம் ஆனந்த, பிரணவ, புஷ்பக, சேஷ மற்றும் தைவாகி என்ற ஐந்து நிலைகளைக் கொண்டது. அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட கோபுரத்தில் ஏழு கலசங்கள் உள்ளன.

கோயிலில் நுழைந்ததும் பிராகாரத்தில் நமக்கு இடப்பக்கமாகப் போய் முதலில் தாயார் சந்நிதிக்குச் சென்று வேதவல்லித்தாயாரை தரிசிக்க வேண்டும். தாயார் சந்நிதிக்குச்  சற்றே பின்புறமாக கஜேந்திர வரதர் சந்நிதி. நான் சென்ற தினம் (28/07/16) கோவில் சம்போக்ஷணத்துக்காகப் புணரைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் கஜேந்திர வரதர் மற்றும் யோக நரசிம்மர் (அழகிய சிங்கர்) சந்நிதிகள் மூடப்பட்டிருந்தன. உற்சவர்கள் மட்டும் வேறு இடங்களில் கண்ணாடி அறைகளில் சேவை சாதித்துக் கொண்டிருந்தார்கள்.

கஜேந்திர வரதர் சந்நிதியைத்தாண்டி வந்தால் கிழக்கு நோக்கியபடி திருமழிசை ஆழ்வார் சந்நிதி. இந்தச் சந்நிதியும் கோவில் திருப்பணி வேலைகள் காரணமாக மூடப்பட்டிருந்தது. மேற்கு வாசலுக்கு நேரே அழகிய சிங்கர் சந்நிதி.  அதைத்தாண்டி வந்தால் வடக்குப் பிரகாரத்தில் ஆண்டாள் சந்நிதி. பிரகாரத்தின் மத்தியில் திறந்த வெளியில்  உயர்ந்த மேடையில் கிருஷ்ணரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டிருக்கிறது. பிரகாரத்தின் உட்சுவரை ஓட்டி ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல் பெருமாளின் பாதுகைகள் சேவை சாதிக்கின்றன. பிரகாரத்தின் இறுதியில் ஆளவந்தார் சந்நிதி.

பார்த்தசாரதிப்  பெருமாள் சந்நிதிக்குள் நுழைந்தால் முதலில் நமக்கு வலப்புறமாக திருக்கச்சி நம்பிகள், ராமானுஜர், வேதந்தாச்சார்யார் (வேதாந்த தேசிகர்), மணவாள மாமுனிகள் சந்நிதிகள். ஆச்சார்யர்கள் வாழ்ந்த கால வரிசையில் இந்தச் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று கருதுகிறேன்.

இன்னும் உள்ளே வந்தால் சக்கரவர்த்தித்த திருமகன் (ராமர்), லக்ஷ்மணர், பரதர், சத்தருனர், சீதாப்பிராட்டியுடன் காட்சி அளிக்கிறார். எதிரே ஆஞ்சநேயர் சந்நிதி. ஆஞ்சநேயர்  சந்நிதியிலும் திருப்பணிகள் நடைபெறுவதால், உற்சவர் மட்டும் வெளியே சேவை  சாதிக்கிறார். ராமர் சந்நிதியைத் தொடர்ந்து ரங்கநாதர் சந்நிதி. இரு தேவியர் அருகில் அமர்ந்திருக்க, நாபிக்கமலத்தில் பிரும்மாவுடன் சனித்திருக்கிறார் மன்னாதர் என்கிற ரங்கநாதர். ரங்கநாதரின் இருபுறமும் வராஹரும், யோக நரசிம்மரும் காட்சி தருகிறார்கள்.

கர்ப்பக்கிருகத்தில் பார்த்தசாரதிப்  பெருமாள் ஆஜானுபாகுவாக, கம்பீரமாக நரைத்த மீசையுடன் காட்சி தருகிறார். வைகுண்ட ஏகாதசிக்கு இரு தினங்கள் முன்பிலிருந்து இவர் மீசை இல்லாமல் காட்சி அளிப்பார் என்று அறிகிறேன். பெருமாளுக்கு வலப்புறம் ருக்மிணித் தாயார், இடப்புறம் அவரது இளைய சகோதரர் சாத்யகி. ருக்மிணிக்கு வலப்புரத்தில் வடக்கு நோக்கியபடி பலராமர்,  சாத்யகிக்கு இடப்புறத்தில் கிருஷ்ணரின் புதல்வரான ப்ரத்யும்னரும், பேரனான அநிருத்தரும் காட்சி தருகின்றனர். கிருஷ்ணர், பலராமர், சாத்யகி, ப்ரத்யும்னன், அநிருத்தன் ஆகிய ஐந்து வீரர்கள் சந்நிதியில் இருப்பதால், இந்தத் தலம் பஞ்சவீரஸ்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

மூலவரின் பெயர் வேங்கடகிருஷ்ணன். உற்சவரின் பெயர் பார்த்தசாரதி. மூலவர் வலது கையில் பாஞ்சஜன்யம் என்ற சங்குடனும், இடது கையில் ஞான முத்திரையுடனும் இருக்கிறார். அவரது பாதங்களைச்  சுட்டிக்காட்டும் ஞான முத்திரை 'மாம் ஏகம்  சரணம் வ்ரஜ (என்னைச் சரணைந்தால்  போதும். உன்னை நான் காப்பாற்றுவேன்)' என்ற  கீதையின் வரியை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

உற்சவர் முகத்தில் மஹாபாரதப் போரில் பீஷ்மரின் அம்புகள் ஏற்படுத்திய காயங்களின் வடுக்கள் இருக்கின்றன.

பெருமாளை சேவித்து விட்டு வெளியே வரும்போது ஆச்சார்யர்கள்   சந்நிதிக்கு  எதிர்ப்புறத்தில் ஆழ்வார்கள் சந்நிதி. ஆழ்வார்களுடன் மாதவன், கோவிந்தன், அனந்தன் (ஆதிசேஷன்), விஷ்வக்சேனர், கருடன் ஆகியோரும் சேவை சாதிக்கின்றனர். எம்பார் (ராமானுஜரின் தம்பியும் சீடருமான கோவிந்தன்) விக்கிரகமும் இருக்கிறது.

1851ஆம் ஆண்டு புகைப்படம் 
இந்தக் கோவிலில் வேங்கடகிருஷ்ணன் என்கிற பார்த்தசாரதி, கஜேந்திர வரதர், அழகிய சிங்கர் என்கிற யோக நரசிம்மர், மன்னாதன்  என்கிற ரங்கநாதர், ராமர் ஆகிய ஐந்து பிரதான சந்நிதிகள் இருப்பது குறிப்பிதத்தக்கது. தனி சந்நிதியில் சேவை சாதிக்கும் வேதவல்லித்தாயார்  ரங்கநாதரின் பிராட்டியார். இவர் இங்கிருந்த குளத்தில் பூத்த அல்லி மலரில் பிறந்ததால், இந்தத் தலம் திருவல்லிக்கேணி என்று பெயர் பெற்றது. இந்த இடம் முழுவதும் துளசிவனமாக இருந்ததாகவும், அல்லிக்குளம் இந்தத் துளசிக் காட்டின் மத்தியில் இருந்ததாகவும் ஸ்தல புராணம் கூறுகிறது. சென்னையின் மிகப் பழைய கோவில் இதுவே என்பது இக்கோவிலின் இன்னொரு சிறப்பு.

இந்தத் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஐந்து தெய்வ வடிவங்களையும் பிருகு, அத்ரி, மரீசி, மார்க்கண்டேயர், சுமதி, சப்தரோமர், ஜாபாலி என்கிற சப்தரிஷிகள் வழிபட்டதாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. "பிருந்தாரண்யம்" என்பது இத்தலத்தின் புராணப் பெயர்.

சுமதி என்ற அரசன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசிக்கும் பார்த்தசாரதியாகத் தனக்கு காட்சி கொடுக்க வேண்டும் என்று திருவேங்கடமுடையானை வேண்ட, அவர் சுமதியை பிருந்தாரண்யத்துக்குச் சென்று தவம் செய்யும்படி பணித்தார். இதே சமயத்தில் அத்ரி மகரிஷி தான் தவம் செய்ய ஏற்ற இடம் எது என்று வியாசரைக் கேட்க, வியாசர் அவரை பிருந்தாரண்யத்துக்குச் சென்று தவம் செய்யும்படி கூறினார். ஒரு கையில் சங்கை ஏந்தியும்   மறு கையில் தன்   திருவடியைக்  காட்டியபடியும் காட்சியளிக்கும் கிருஷ்ண பரமாத்மாவின் திவ்ய மங்கள விக்கிரஹத்தையும் அளித்து அதை அங்கே தவம் செய்து கொண்டிருக்கும் சுமதியிடம் கொடுக்கும்படி கூறினார்.

விக்கிரஹத்துடன் திருவல்லிகேணி வந்த அத்ரி, சுமதியைச் சந்தித்து அவரிடம் விக்கிரகத்தை அளித்தார். திருவேங்கடமுடையான் தன்  விருப்பத்தை நிறைவேற்றி விட்டதில் மகிழ்ச்சி அடைந்த சுமதி, அந்த விக்கிரகத்தை அங்கே பிரதிஷ்டை செய்தார். பின்னால் இங்கே பல்லவர்களால் கோவில் கட்டப்பட்டு அதற்குப் பின்பு சோழர்களால் விரிவுபடுத்தப்பட்டது. திருவேங்கடமுடையானின் அருளால் கிடைத்த விக்கிரகம் என்பதால் இந்த மூலவருக்கு வேங்கட கிருஷ்ணன் என்று பெயர். அர்ஜுனனுக்கு கீதையை உபயோகித்த கோலத்தில் இருப்பதால் இவர் பார்த்தசாரதி என்றும் பெயர் பெற்றார்.

இந்தக் கோவிலில் உள்ள மிகப் பழமையான சந்நிதி ரங்கநாதருடையது. இவர் மன்னாதர் என்று அழைக்கப்படுகிறார். மகாவிஷ்ணுவிடம் ஊடல் கொண்டு மஹாலக்ஷ்மி இந்தத் தலத்தில் இருந்த அல்லிக்குளத்தில் அல்லி மலரில் குழந்தையாகப் பிறந்தார். இவரை பிருகு மகரிஷி எடுத்து வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்தார். பங்குனி மாதம் சுக்ல மகா துவாதசி தினத்தன்று உத்திர நட்சத்திரத்தில்  மன்னாதர் என்ற பெயரில் ஒரு இளவரசராக வந்த ரங்கநாதருக்கு வேதவல்லியை மணம் முடித்தார் பிருகு.  பங்குனி உத்திரத்தன்று தன்னைச் சேவிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் எல்லா நலன்களையும் அளித்து, அவர்களுக்கு மோட்சமும் அளிக்க வேண்டும் என்று வேதவல்லித் தாயார் ரங்கநாதரிடம் கேட்டுக் கொண்டார்.

அத்ரி மஹரிஷியின் வேண்டுகோளை ஏற்று நரசிம்மர் இங்கே கோயில் கொண்டுள்ளார். மூலவர் யோக நரசிம்மர் என்றும், உற்சவர் தெள்ளிய சிங்கர் மற்றும் அழகிய சிங்கர் என்றும் அழைக்கப்படுகிறார். அழகிய முகம் கொண்ட உற்சவர் ஒரு கையில் பக்தர்களை வா என்று அழைக்கும் முத்திரையும் (ஆஹ்வான ஹஸ்தம்), மறு  கையில் பக்தர்களைக் காக்கும் முத்திரையும் (அபய ஹஸ்தம்) கொண்டு விளங்குகிறார்.

இங்கு தவம் செய்த மகரிஷி மதுமானருக்கு சக்கரவர்த்தித்த திருமகனான ராமர் தனது முயன்று தம்பிகளுடனும், சீதாப்பிராட்டியுடனும் காட்சி கொடுத்திருக்கிறார்.

கஜேந்திர வரதர் சப்தரோம மகரிஷியால் வழிபடப்பட்டவர். மூலவர் கருட வாகனத்தில் காட்சி அளிப்பது சிறப்பு.

கோயிலின் முன் புறம் கைரவினி தீர்த்தம் என்ற பெரிய திருக்குளம் உள்ளது. இதன் வடக்குக் கரையில் படிக்கட்டுகளுக்கிடையே ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த புஷ்கரணிக்குள் அக்னி தீர்த்தம், சோம தீர்த்தம், மீன தீர்த்தம், இந்திர தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் (கிணறுகள்)  இருப்பதாக ஐதீகம்.

நீண்ட காலம் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்த ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த கேசவ சோமயாஜியும் அவர் மனைவி காந்திமதியும் திருவல்லிக்கேணிக்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்ட பிறகுதான் அவர்களுக்கு ராமானுஜர் பிறந்தார்.

திருமழிசை ஆழ்வார் முதலாழ்வார்களை சந்தித்தது இத்திருத்தலத்தில்தான்.

இப்படிப் பல சிறப்புகள் நிறைந்த இந்த திவ்ய தேசத்தை பேயாழ்வார் (ஒரு பாசுரம்), திருமழிசை  ஆழ்வார் (ஒரு பாசுரம்), திருமங்கை ஆழ்வார் (10 பாசுரங்கள்) ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர். அந்தப் பாசுரங்கள் கீழேயே கொடுக்கப்பட்டிருக்கின்றன. ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோரும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். தியாகய்யர், முத்துசாமி தீக்ஷிதர் ஆகியோரும் இந்தக் கோவில் பற்றிக் கீர்த்தனைகள்  இயற்றியிருக்கிறார்கள். பாரதியாரின் கண்ணன் பாட்டுக்கள் வேங்கடகிருஷ்ணனை  மனதில் கொண்டு பாடப்பட்டவைதான்  என்று கொள்ளலாம்.

இந்த திவ்ய தேசம் பற்றிய ஆழ்வார்களின் பாடல்களைப் பகிர்ந்து கொண்டு இந்த திவ்ய தேச தரிசன அனுபவத்தை நிறைவு செய்கிறேன்.

திவ்ய பிரபந்தம் 
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருவல்லிக்கேணி
1067 வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
      வேழமும் பாகனும் வீழச்
செற்றவன்-தன்னை புரம் எரி செய்த
      சிவன் உறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
      பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானை
      -திருவல்லிக்கேணிக் கண்டேனே             (1)
 
1068 வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
      விழுமிய முனிவரர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை
      குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆள் உடை
      அப்பனை-ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத்
      திருவல்லிக்கேணிக் கண்டேனே             (2)
 
1069 வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி
      வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட
      நாதனை தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்
      வியந்துதி செய்ய பெண் உரு ஆகி
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே            (3)
 
1070 இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
      எழில் விழவில் பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது
      மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எந்தம்மோடு இன ஆ-நிரை தளராமல்
      எம் பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே (4)
 
1071 இன் துணைப் பதுமத்து அலர்மகள்-தனக்கும்
      இன்பன் நல் புவி-தனக்கு இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை
      -தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி
      வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே             (5)
 
1072 அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு
      இளையவன் அணி இழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய் என தரியாது
      எம் பெருமான் அருள் என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்-தம்
      பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே             (6)
 
1073 பரதனும் தம்பி சத்துருக்கனனும்
      இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற
      இராவணாந்தகனை எம்மானை-
குரவமே கமழும் குளிர் பொழிலூடு
      குயிலொடு மயில்கள் நின்று ஆல
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்
      திருவல்லிக்கேணிக் கண்டேனே (7)
 
1074 பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
      வாயில் ஓர் ஆயிரம் நாமம்
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு
      ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
      பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை
      -திருவல்லிக்கேணிக் கண்டேனே             (8)
 
1075 மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
      வேட்கையினோடு சென்று இழிந்த
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற
      கரா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து
      சென்று நின்று ஆழிதொட்டானை-
தேன் அமர் சோலை மாட மா மயிலைத்
      திருவல்லிக்கேணிக் கண்டேனே             (9)
 
1076 மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்
      மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர்-கோன் செய்த நல் மயிலைத்
      திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்
      காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல்-மாலை பத்து உடன் வல்லார்
      சுகம் இனிது ஆள்வர் வான்-உலகே             (10)
 

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
பேயாழ்வார் 
மூன்றாம் திருவந்தாதி
2296 வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம்
அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை
ஒரு அல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக்கேணியான் சென்று             (16)


மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமழிசை ஆழ்வார் 
நான்முகன் திருவந்தாதி
2415 தாளால் உலகம் அளந்த அசைவேகொல்?
வாளா கிடந்தருளும் வாய்திறவான் நீள் ஓதம்
வந்து அலைக்கும் மா மயிலை மா அல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்து அணை               (35)

1 comment: