Monday, April 15, 2019

69. திவ்யதேச தரிசன அனுபவம் - 48. நைமிசாரண்யம் (99)

தரிசனம் செய்த நாள்: 04.04.2019 வியாழக்கிழமை.   
 வட நாட்டுத் திருப்பதிகள் - 12
4. திருநைமிசாரணியம்
தேவராஜப்  பெருமாள் கோவில் 

4. திருநைமிசாரணியம்
ஓரறிவு மில்லாத வென்போல்வார்க் குய்யலாம்
பேரறிவுண் டேனும் பிறர்க்கரிது - பாரறிய
நைம்மிசா ரண்ணியத்து நாதரடி யாரோடும்
இம்மிசார் வுண்டாயி னால். (99)
பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் 108திருப்பதி அந்தாதி 

நைமிசாரண்யம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்னோவிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவிலும், சீதாபூரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தத் திருத்தலம் விஷ்ணுவின் 8 ஸ்வயம்வக்ஷ (தானே அமைந்த) க்ஷேத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. (ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், சாளக்கிராமம் (முக்திநாத்), தோத்தாத்ரி (வானமாமலை), திருப்பதி, புஷ்கர், பத்ரி இவை மற்றவை)

9 தபோவனங்களில் (தவம் செய்ய ஏற்ற இடங்கள்) ஒன்றாகவும் இந்தத் தலம் கருதப்படுகிறது. (தண்டகாரண்யம், சைந்தவாரண்யம், ஜம்புகாரண்யம், புஷ்கரராண்யம், உத்பலாரண்யம், பத்ரிகாரண்யம், குருஜங்களாரண்யம், அற்புதாரண்யம் ஆகியவை  மற்றவை.)

நைமிசாரண்யம் என்ற பெயரை நைமிச ஆரண்யம் என்று பிரிக்கலாம். நேமி என்றால் சக்கரம், ஆரண்யம் என்றால் காடு. இந்த இடம்  ஒரு காடாக இருந்தது. இங்கு திருமால் காடு வடிவமாகவே இருப்பதாக ஐதீகம், இப்போது இது மரங்கள் கூட அதிகம் இல்லாமல் ஒரு நவீன நகரமாகக் காட்சி அளிக்கிறது. இந்த ஊர் நிம்சார் அல்லது நிம்கார் என்றும் அழைக்கப்படுகிறது.

நைமிசம் என்பது ஒருவகைப் புல். நைமிசம் என்ற புள் அடர்ந்த காட்டு என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

ஒரு முறை சௌனகர் முதலான முனிவர்கள் பிரம்மாவிடம் சென்று பூவுலகில் தவம் செய்ய மிகவும் சிறந்த இடம் எது என்று கேட்க, பிரம்மா ஒரு தர்ப்பையை எடுத்து அதைச் சக்கரம் போல் சுருட்டி உருள விட்டார். அந்தச் சக்கரம் உருண்டு வந்து இந்தக் காட்டில் நின்றதால், இது நைமிசாரண்யம் என்று அழைக்கப்படுகிறது.

சக்கரம் வந்து நின்ற இடத்தில் வட்டமாக ஒரு சிறு குளம் இருக்கிறது. இது சக்ர தீர்த்தம் என்று பெயர் பெற்றது.

இந்தத் தலத்தில் ஒரு நிமிடம் தவம் செய்தாலும் முக்தி அடையலாம் என்பதைக் குறிக்கும் விதமாகவும் நைமிசாரண்யம் (நிமிஷம் + ஆரண்யம்) என்ற பெயர் அமைந்துள்ளது.

இங்கு தானவர்கள் என்ற அரக்கர்கள் பகவானால் ஒரு நிமிஷத்தில் அழிக்கப்பட்டதாக வராஹ புராணம் கூறுகிறது.

நைமிசாரண்யம் புராணங்களில் போற்றப்பட்டிருக்கும் ஒரு தலம்.
பல முனிவர்கள் தவம் செய்த புண்ய பூமி இது.

ராமாயணம், மகாபாரதம், பாகவதம் ஆகியவற்றில் நைமிசாரண்யம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராமபிரான் அஸ்வமேத யாகம் செய்ய வந்தபோது, லவ குசர்கள் தங்கள் தந்தை ராமரைச் சந்தித்தது இங்குதான்.

அர்ஜுனனின்  மகன் அபிமன்யுவின் வாரிசாக, உத்தரையின் வயிற்றில் உதித்த பரீக்ஷித் மன்னன் ஒரு முனிவரின் சாபம் காரணமாக தக்ஷகன் என்ற பாம்பால் கடித்துக் கொல்லப்பட்டான். அப்போது சிறுவனாக இருந்த பரீக்ஷித்தின் மகன் ஜனமேஜயன் வளர்ந்து அரசனான பின் தன் தந்தைக்கு நேர்ந்த கொடுமைக்குப் பழி தீர்க்கும் விதத்தில், பாம்புகளை மொத்தமாக அழிக்க எண்ணி சர்ப்ப யாகம் என்ற யாகம் செய்தான். அந்த யாகத்துக்கு வந்திருந்த வியாசர், தன் சீடர் வைசம்பாயனரிடம் சொல்லி,  அங்கிருந்த முனிவர்களுக்கு மகாபாரதக் கதையைச் சொல்ல வைத்தார்.

அங்கு அதைக் கேட்ட உக்ரஸ்ரவஸ் என்ற முனிவர் நைமிசாரண்யத்தில் தவம் செய்து வந்த சௌனகர் முதலான முனிவர்களுக்கு மகாபாரதக் கதையைச் சொன்னார்.

ஒருமுறை பலராமர் சூத பௌராணிகரைப் பார்க்க வந்தபோது, அவர் தன்னை கவனிக்கவில்லை என்று கோபமடைந்து பலராமர் அவரை அடித்து விட்டார். இந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்ள பலராமர் பல க்ஷேத்திரங்களுக்கும் சென்றார். ஆனால் நைமிசாரண்யத்தில்தான் அவர் பாவம் நீங்கியது. அவர் இங்கே முனிவர்களுக்குத் தொந்தரவு கொடுத்து வந்த வில்வலன் என்ற ஒரு அரக்கனைக் கொன்றதால் முனிவர்கள் மகிழ்ந்தனர்.

கயாசுரன் என்ற ஒரு அசுரன் தவம் செய்தான். அவன் தவத்துக்குப் பலனாக விஷ்ணு அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளிக்க முன் வந்தார். ஆனால் கயாசுரன் தான் விஷ்ணுவை விட பலம் வாய்ந்தவன் என்று கூறியதால் விஷ்ணு அவன் மீது சக்கரத்தை விட்டார், கயாசுரன் உடல் மூன்று பகுதிகளாகப் பிளந்து மூன்று இடங்களில் விழுந்தது.

தலைப் பகுதி விழுந்த இடம் சிரோ கயா - பத்ரி
நடுப்பகுதி விழுந்த இடம் நாபி கயா - நைமிசாரண்யம்
கீழ்ப்பகுதி விழுந்த இடம் சரண கயா - கயை.

இந்த மூன்று இடங்களும் பித்ருக்களுக்குக் கடன்கள் செய்த ஏற்ற இடம் என்று கருதப்படுகின்றன.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த நைமிசாரண்யத்தில் பல கோவில்கள் மற்றும் வேறு பல புனிதமான இடங்கள் உள்ளன.

இங்குள்ள தேவராஜப் பெருமாள் கோவில் 99ஆவது திவ்யதேசம். வடநாட்டு எட்டு திவ்யதேசங்களில் நான்காவது. இந்தப் பெருமாள் நைமிஷ நாத பகவான் என்றும் அழைக்கப்படுகிறார்.

மூலவர் - தேவராஜன், ஸ்ரீஹரி. நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கித் திருமுகமண்டலம்
தாயார் - ஸ்ரீஹரி லட்சுமி, புண்டரீகவல்லி
விமானம் - ஸ்ரீஹரி விமானம்
புஷ்கரணி  - சக்ர தீர்த்தம், கோமதி நதி, நேமிதீர்த்தம், திவ்ய விஸ்ராந்த தீர்த்தம்
ஸ்தல விருக்ஷம் - தபோவனம்
பிரத்யட்சம் (பெருமாள் காட்சி கொடுத்தது): இந்திரன், சுதாமா, தீவரிஷிகள், சூத பௌராணிகர், வியாசர்.


இந்த திவ்ய தேசத்தைத்  திருமங்கை ஆழ்வார் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
நைமிசாரணியம்
997 வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்
      மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை எனக் கருதி
      பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி
      இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (1)
 
998 சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்-
      திறத்தனாய் அறத்தையே மறந்து
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி
      போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை ஆயனே மாயா
      வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (2)
 
999 சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து
      சுரி குழல் மடந்தையர்திறத்துக்
காதலே மிகுத்து கண்டவா திரிந்த
      தொண்டனேன் நமன்-தமர் செய்யும்
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் வேலை
      வெண் திரை அலமரக் கடைந்த
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (3)
 
1000 வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து
      பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன்-தமர் பற்றி
      எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையை பாவீ
      தழுவு என மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (4)
 
1001 இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று
      இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ
      நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை
கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்
      படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (5)
 
1002 கொடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து
      திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்
      உணர்விலேன் ஆதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன்
      பரமனே பாற்கடல் கிடந்தாய்
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்
      -நைமிசாரணியத்துள் எந்தாய்             (6)
 
1003 நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்
      நீதி அல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே
      துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா
      வானவா தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (7)
 
1004 ஏவினார் கலியார் நலிக என்று என்மேல்-
      எங்ஙனே வாழும் ஆறு?-ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்
      குறுங்குடி நெடுங் கடல் வண்ணா
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன்
      பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்
      -நைமிசாரணியத்துள் எந்தாய்             (8)
 
1005 ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி
      உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்-
தான் உடைக் குரம்பை பிரியும்போது உன்-தன்
      சரணமே சரணம் என்று இருந்தேன்
தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே
      திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்
நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்-
      நைமிசாரணியத்துள் எந்தாய்             (9)
 
1006 ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி
      எழுமினோ தொழுதும் என்று இமையோர்-
நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து
      எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்
      மாலை-தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்
      உம்பரும் ஆகுவர் தாமே             (10)

ஓம் நமோ நாராயணாய 


No comments:

Post a Comment