Monday, September 30, 2019

73. திவ்யதேச தரிசன அனுபவம் - 52. திருவண்புருடோத்தமம் (34)

தரிசனம் செய்த நாள்: 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை.   
 சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40
 34. திருவண்புருடோத்தமம்

சாய்ந்த திருவரங்கந் தண்வேங் கடங்குடந்தை
ஏய்ந்த திருமா லிருஞ்சோலை - பூந்துவரை
வண்புருடோத் தமமாம் வானவர்க்கும் வானவனாம்
ஒண்புருடோத் தமன்ற னூர் (34)

     - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

சீர்காழிக்குத் தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார்  12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் என்னும் ஊரைச் சுற்றிலும், அதிக பட்சம் 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.

சில கோவில்கள் சில சமயம்  பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.

அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில்  எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

திரு எஸ். சுரேஷ் 9994621065  9750728645.

இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.

சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார் .

திருவண்புருடோத்தமம், திருத்தெற்றியம்பலம், அரிமேய விண்ணகரம், வைகுண்ட விண்ணகரம், திருமணிமாடக் கோவில், செம்பொன்செய் கோவில் ஆகிய ஆறு திவ்யதேசங்களும் அருகருகே அமைந்துள்ளன.

வியாக்ரபாத முனிவர் எனப்படும் புலிக்கால் முனிவர் என்பவர் பெருமாளுக்கு பூமாலை சூட்டும் பணியைச் செய்து வந்தார். ஒரு நாள் தன் குழந்தை உபுமன்யுவை உட்காரவைத்துவிட்டு பூப்பறிக்கச் சென்றார்.

குழந்தை பசியால் அழுதது. புருடோத்தம நாயகி கேட்டுக்கொண்டபடி, வண் புருஷோத்தமர் திருப்பாற்கடலை வரவழைத்துக் குழந்தைக்குப் பால் புகட்டினார். பின் அங்கு வந்த வியாக்ரபாத முனிவருக்குக் காட்சி தந்தார் என்பது இத்தலத்தின் பெருமை.

குழந்தைக்கு ஏற்படும் துன்பத்தைப் பெற்றோர் களைவது போல், பிரம்மா முதலிய தேவாதி தேவர்களுக்கும் ஏற்படும் துன்பத்தைப் போக்கி, அவர்களுக்குத் தீங்கு செய்பபவர்களை அழித்து உலகத்தைக் காக்கும் "புருடோத்தமன்" இவரே. இவரது வள்ளல் தன்மையைக்  காட்டும் விதத்தில்  "வண்" என்ற சொல் சேர்த்து இவரது திருநாமம் "வண்புருடோத்தமன்" என்று வழங்குகிறது.

மூலவர்: வண் புருடோத்தமன், பட்டாபிராமன்

உற்சவர்: புருஷோத்தமன்

தாயார்:  புருஷோத்தம நாயகி

தீர்த்தம்: திருப்பாற்கடல் தீர்த்தம்

விமானம்: சஞ்சீவி விக்ரஹ விமானம்

ஸ்தல விருட்சம்: பலா, வாழை

பெருமாள் சந்நிதிக்கு வெளியே பார்த்தசாரதி, சுலோசனா, சண்டன், பிரசண்டன் விக்கிரகங்கள் உள்ளன,

பிரகாரத்தில் தாயார் சந்நிதி உள்ளது.

முன்புறம், சந்நிதிக்கு வலப்புறம் சக்கரவர்த்தித்த திருமகன் சந்நிதி உள்ளது. சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சநேயருடன் ராமர் காட்சி அளிக்கிறார்.
அருகில் ராமானுஜர் சந்நிதியும் உள்ளது.

சக்கரவர்த்தித் திருமகன் சந்நிதிக்கு எதிரே ராமரை நோக்கியபடி சிறிய திருவடி சந்நிதி உள்ளது . இது தவிர, அருகில் ஹனுமான் சந்நிதியும் உள்ளது. சக்கரவர்த்தித் திருமகன் சந்நிதியில் உள்ள ஆஞ்சநேயரையும் சேர்த்தால் இந்தக் கோவிலில் மூன்று ஆஞ்சநேயர் சந்நிதிகள் உள்ளன.

இந்த திவ்யதேசம் பற்றி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்க உரையைக் கீழே உள்ள வீடியோவில் கேளுங்கள்.



திருமங்கை ஆழ்வார் இந்த திவ்யதேசப் பெருமால் குறித்து 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.

பாசுரங்கள் இதோ.
நாலாயிர திவ்யப்பிரபந்தம் 
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
நான்காம் பத்து 
இரண்டாம் திருமொழி
 திருநாங்கூர் வண்புருடோத்தமம்
1. கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன் கதிர்முடி யவைபத்தும்
அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு அளித்தவ னுறைகோயில்
செம்ப லாநிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள்சூழ்
வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1258)

2. பல்ல வந்திகழ் பூங்கடம் பேறியக் காளியன் பணவரங்கில்,
ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த உம்பர்க்கோ னுறைகோயில்,
நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை வேள்வியோ டாறங்கம்,
வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1259)

3. அண்ட ரானவர் வானவர் கோனுக்கென் றமைத்தசோ றதுவெல்லாம்
உண்டு கோநிரை மேய்த்தவை காத்தவன் உகந்தினி துறைகோயில்,
கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில் குலமயில் நடமாட,
வண்டு தானிசை பாடிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1260)

4. பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன் பாகனைச் சாடிப்புக்கு,
ஒறுங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை உதைத்தவ னுறைகோயில்,
கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு கழனியில் மலிவாவி
மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1261)

5. சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன் படையொடுங் கிளையோடும்
ஓட வாணனை யாயிரந் தோள்களும் துணித்தவ னுறைகோயில்,
ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப் பகலவ னொளிமறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1262)

6. அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன் அலர்கொடு தொழுதேத்த,
கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய கண்ணன்வந் துறைகோயில்,
கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள் காட்டமா பதுமங்கள்,
மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1263)

7. உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன துரம்பிளந் துதிரத்தை
அளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய அப்பன்வந் துறைகோயில்,
இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினோ டெழில்கொள்பந் தடிப்போர்கை
வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1264)

8. வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன் சாபமற் றதுநீங்க
மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம் முகில்வண்ண னுறைகோயில்
பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன் பழம்விழ வெருவிப்போய்
வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1265)

9. இந்து வார்சடை யீசனைப் பயந்தநான் முகனைத்தன் னெழிலாரும்
உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன் உகந்தினி துறைகோயில்,
குந்தி வாழையின் கொழுங்கனி கர்ந்துதன் குருளையைத் தழுவிப்போய்,
மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர் வண்புரு டோத்தமமே. (1266)

10. மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர் வண்புரு டோத்தமத்துள்,
அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன் ஆலிமன் அருள்மாரி,
பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப் பத்தும்வல் லார்,உலகில்
எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ ரோடும் கூடுவரே. (1267)

| ஓம் நமோ நாராயணாய |









No comments:

Post a Comment