Tuesday, November 26, 2013

4. ஆழ்வார்கள்


வைணவத்தின் பெருமை பேசி, திருமாலின் பெருமை பாடிய முனிவர்கள்  வேத, உபநிஷத் காலத்திலிருந்தே உண்டு. வால்மீகி, பராசரர், வியாசர், சுகர் என்று பல முனிவர்கள் இதிகாசங்கள், புராணங்கள், காப்பியங்கள் மூலமாகத் திருமால் வழிபாட்டை வளர்த்திருக்கிறார்கள். ஆயினும், வைணவத்துக்குப் பெருமை சேர்த்ததில் ஆழ்வார்களின் பங்கு மிகச் சிறப்பானது.

திருமாலைப் போற்றி ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் திவ்யப் பிரபந்தம் என்று அழைக்கப் படுகின்றன. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரம் என்பதால் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்றும் இப்பாசுரங்கள் வழங்கப்படுகின்றன.

நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள் நான்கு வேதங்களின் சாரம் என்று ராமானுஜர் போன்ற ஆச்சாரியார்களால் ஆராய்ந்து சொல்லப்பட்டிருக்கிறது.

ஆழ்வார்கள் பன்னிருவர்.

 பெயர்
 வாழ்ந்த காலம்
 பாசுரங்கள்
 பொய்கையாழ்வார்
 கி.பி. 7ஆம் நூற்றாண்டு
 முதல் திருவந்தாதி (100 பாசுரங்கள்)
 பூதத்தாழ்வார்
  கி.பி. 7ஆம் நூற்றாண்டு
 இரண்டாம் திருவந்தாதி (100 பாசுரங்கள்)
 பேயாழ்வார்
  கி.பி. 7ஆம் நூற்றாண்டு
 மூன்றாம் திருவந்தாதி (100 பாசுரங்கள்)
 திருமழிசை ஆழ்வார்
  கி.பி. 7ஆம் நூற்றாண்டு
 நான்முகன் திருவந்தாதி (96 பாசுரங்கள்), திருச்சந்த விருத்தம்   (120 பாசுரங்கள்)
 திருமங்கை ஆழ்வார்
  கி.பி. 8ஆம் நூற்றாண்டு
 பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்), திருவெழுக்கூற்றிருக்கை (1 பாசுரம்), திருக்குறுந்தாண்டகம் (1084 பாசுரங்கள்), திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்)
சிறிய திருமடல்(40 பாசுரங்கள்), பெரிய திருமடல் (78 பாசுரங்கள்)
 தொண்டரடிப்பொடி ஆழ்வார்
  கி.பி. 8ஆம் நூற்றாண்டு
 திருமாலை (45 பாசுரங்கள்), திருப்பள்ளியெழுச்சி (10 பாசுரங்கள்)
திருப்பாண் ஆழ்வார்
  கி.பி. 8ஆம் நூற்றாண்டு
 அமலனாதி பிரான் (10 பாசுரங்கள்)
 குலசேகர ஆழ்வார்
  கி.பி. 8ஆம் நூற்றாண்டு
 பெருமாள் திருமொழி (105 பாசுரங்கள்)
  பெரியாழ்வார்
  கி.பி. 9ஆம் நூற்றாண்டு
பெரியாழ்வார் திருமொழி (473 பாசுரங்கள்)
 ஆண்டாள்
  கி.பி. 9ஆம் நூற்றாண்டு
 நாச்சியார் திருமொழி (143 பாசுரங்கள்), திருப்பாவை (30 பாசுரங்கள்)
 நம்மாழ்வார்
  கி.பி. 9ஆம் நூற்றாண்டு
 திருவாய் மொழி (1102 பாசுரங்கள்), திருவாசிரியம் (7 பாசுரங்கள்), திருவிருத்தம் (100 பாசுரங்கள்), 
பெரிய திருவந்தாதி (87 பாசுரங்கள்)
 மதுரகவி ஆழ்வார்
  கி.பி.9ஆம் நூற்றாண்டு
 கண்ணி நுண் சிறுத்தாம்பு (11 பாசுரங்கள்)


ஆழ்வார்களைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லலாம். சுருக்கமாகச் சில விவரங்களை மட்டும் இந்தப் பதிவில் குறிப்பிடுகிறேன்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரிசை ஆழ்வார்கள் வாழ்ந்த காலப்படியான வரிசை.  ஆழ்வார்களின் காலம் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் விளங்குகின்றன. குறிப்பாக நம்மாழ்வார் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது வைஷ்ணவ குரு பரம்பரை வரலாறு.

மொத்தமுள்ள நாலாயிரம் பாசுரங்களில் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய இருவர் மட்டுமே இரண்டாயிரம் பாசுரங்களுக்கு மேலாக எழுதியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கலாம்.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் முதலாழ்வார்கள் என்று அழைக்கபடுகின்றனர். இவர்கள் மூவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் சந்தித்தது பற்றிய ஒரு சுவாரசியமான கதையை இன்னொரு பதிவில் கூற விழைகிறேன்.

இந்த மூவரைத் தவிர, சம காலத்தில் வாழ்ந்த ஆழ்வார்கள்:
 பெரியாழ்வார்-ஆண்டாள்
 நம்மாழ்வார்- மதுரகவி ஆழ்வார். 

பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் ஆண்டாள். ஆண்டாள் திருமாலையே விரும்பி மணமுடித்த பெருமை பெற்றவர்.

பெரியாழ்வாரின் இயற்பெயர் விஷ்ணு சித்தர். இவர் பாண்டியன் அவையில் திருமாலே முழுமுதற் கடவுள் என்று வாதம் செய்து நிலை நாட்டி, பாண்டிய அரசனால் பொற்கிழி வழங்கப்பெற்று, யானை மீது ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது திருமால் கருடன் மீது வந்து பெரியாழ்வாருக்குக் காட்சி அளித்தார். பகவானின் அழகிய திருவுருவை அனைவரும் தரிசனம் செய்ததால் பகவானுக்குக் கண் திருஷ்டி ஏற்பட்டு விடப்போகிறதே என்று கவலைப்பட்டு பல்லாண்டு, பல்லாண்டு என்று பெருமாளையே வாழ்த்திப் பாடினார். (பொதுவாக நம்மை விடப் பெரியவர்கள்தான் நம்மை வாழ்த்த வேண்டும் என்பது மரபு.) பெருமாளையே வாழ்த்திப் பாடும் பேறு பெற்றதால் இவர் பெரியாழ்வர் என்று பெயர் பெற்றார்.

நம்மாழ்வார் காலத்தில் வாழ்ந்தவர் மதுரகவி ஆழ்வார். நம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர். இவர் வடநாட்டில் யாத்திரை செய்து கொண்டிருதபோது, தெற்குத் திசையில் ஒரு ஒளி தோன்றியதைக் கண்டு அந்த ஒளியின் திசையில் பயணித்து வந்து பாண்டிய நாட்டை அடைந்தார். அங்கே திருக்குருகூரில் (ஆழ்வார் திருநகரி) ஒரு புளிய மரத்தின் அடியில் யோகத்தில் அமர்ந்திருந்த 16 வயதுச் சிறுவனின் தலைக்குப் பின்புறம் அந்த ஒளி துவங்கியதைக் கண்டார். அந்தச் சிறுவன் தான் ஆழ்வார்களில் முதன்மையானவராகப் போற்றி வணங்கப்படும் நம்மாழ்வார்.

நம்மாழ்வாரின் பெருமையை உணர்ந்த மதுரகவி ஆழ்வார் அவருடைய சீடராக அவருடனேயே வாழ்ந்தார். இவர் எழுதிய கண்ணி நுண் சிறுத் தாம்பு என்ற பதினோரு பாடல்களும் நம்மாழ்வாரைப் பற்றித்தான்! திருமால் மீது பாசுரம் எழுதாத ஒரே ஆழ்வார் இவர்தான்!

நம்மாழ்வார்தான் தனக்குக் கடவுள் என்பதை, 'தேவு மற்றறியேன் குருகூர் நம்பி' என்ற இவரது வரிகள் விளக்குகின்றன.

ஆச்சாரியாரை (குரு) முன்னிட்டே ஆண்டவனை அணுக முடியும் என்ற வைணவக் கோட்பாட்டுக்கு ஒரு சிறப்பான உதாரணமாக விளங்கியவர் மதுரகவி ஆழ்வார்.

ஆழ்வார்களைப் பற்றி மேலும் பல சுவையான, பயனுள்ள விஷயங்களை பின்னால் வரும் பதிவுகளில் கூற விழைகிறேன்.