Monday, October 22, 2018

67. திவ்யதேச தரிசன அனுபவம் - 46. திருவெள்ளியங்குடி (29)

தரிசனம் செய்த நாள்: 20.10.18 சனிக்கிழமை.   
 சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40
29. திருவெள்ளியங்குடி



29. திருவெள்ளியங்குடி
காலளவும் போதாக் கடன்ஞாலத் தோர்கற்ற‌
நூளலவே யன்றி நுவல்வாரார்? - கோலப்
பருவெள்ளி யங்குடியான் பாதகவூண் மாய்த்த‌
திருவெள்ளி யங்குடியான் சீர். (29)
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 


கும்பகோணத்திலிருந்து அணைக்கரை செல்லும் வழியில் உள்ள சேங்கானூரிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவெள்ளியங்குடி திவ்யதேசம் .

 கும்பகோணம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள  சோழபுரத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும்,    கும்பகோணம் - ஆடுதுறை பஸ் மார்க்கத்தில் உள்ள முட்டக்குடியிலிருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது இந்தக் கோவில்.


திருவெள்ளியங்குடி என்ற இந்த திவ்ய தேசம் நான்கு யுகங்களாக  இருந்து வருவதாக ஐதீகம்.

திரேதா யுகத்தில் பிரம்ம புத்திரம், கிருத யுகத்தில் பரசுராம், துவாபர யுகத்தில் இந்திர நகரம், தற்போதைய கலியுகத்தில் பார்க்கவபுரம் ஆகிய பெயர்களுடன் விளங்கி வந்திருக்கிறது இந்த திவ்ய தேசம். பார்க்கவர் என்பது சுக்கிரனின் (சுக்கிராச்சாரியார்) இன்னொரு பெயர்.

அசுரர்களின் குலகுரு சுக்கிராச்சாரியார்.
இவர்தான் நவக்கிரகங்களில் ஒருவரான  சுக்கிரன் (தமிழில் வெள்ளி.)  

வாமனருக்கு மூன்று அடி மண் கொடுக்க மகாபலி சக்கரவர்த்தி  ஒப்புக்கொண்டபோது வேண்டாம் என்று தடுத்தார் அவனுடைய குரு சுக்கிராச்சாரியார். ஆனால் மகாபலி அவர் பேச்சைக் கேட்கவில்லை.

கமண்டலத்திலிருந்து நீரைக் கையில் எடுத்து அவன் தாரை வார்க்க முற்படுகையில், சுக்கிராச்சாரியார் ஒரு சிறிய பூச்சியாக மாறி கமண்டலத்திலிருந்து நீர் வர முடியாமல் துவாரத்தை அடைத்துக் கொண்டார்.

உண்மையை அறிந்த வாமனர் ஒரு ஈர்க்குச்சியால் கமண்டலத்தின்  ஒட்டையில் குத்தினார். அப்போது சுக்கிராச்சாரியாரின் ஒரு கண்ணில் அந்தக் குச்சி குத்தி அந்தக் கண் குருடானது. இந்த திவ்யதேசத்திற்கு வந்து பெருமாளை வேண்டிய பிறகுதான் பார்வை இழந்த கண்ணுக்கு மீண்டும்  பார்வை கிடைத்தது. வெள்ளிக்கு (சுக்கிரனுக்கு) அருள் பாலித்ததால் இந்தத் தலம் திருவெள்ளியங்குடி என்று அழைக்கப்படுகிறது.

இது வைணவ சுக்கிர ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது

சுக்கிரனுக்குப் பார்வை கிடைத்த ஸ்தலம் என்பதால் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், கண் நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. சுக்கிரன் தொடர்புடைய திருத்தலம் என்பதால், பணப் பிரச்னைகள், வியாபாரப் பிரச்னைகள், திருமணத் தடை போன்ற பிரச்னைகள் நீங்கும் என்பதும் நம்பிக்கை.





தேவர்குலச் சிற்பியான விஸ்வகர்மாவுக்கு இணையாகத் தானும் விளங்க வேண்டும் என்று அசுரகுலச் சிற்பி மயன் இந்தப் பெருமாளிடம் வேண்டித் தவம் செய்தான். விஷ்ணு அவனுக்கு சங்கு சக்கரம் ஏந்தியபடி நான்கு கரங்களுடன் காட்சி அளித்தார்.

ஆனால் தனக்கு ராமபிரானாகக் காட்சி அளிக்க வேண்டும் என்று மயன் வேண்டிக் கொள்ள , சங்கு சக்கரங்களை கருடனிடம் கொடுத்து விட்டு இரு கரங்களுடன் வில் ஏந்தியபடி ராமனாக மயனுக்குக் காட்சி அளித்தார் பெருமாள். அதனால் இங்கு எழுந்தருளி இருக்கும் பெருமாளுக்கு கோல வில்லி ராமர் என்ற பெயர் வழங்கப்படுகிறது.

ஆயினும் மூலவர் கிடந்த கோலத்தில் க்ஷீராப்தி நாதர் என்ற பெயரிலும், உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி மரகததவல்லித் தாயாரோடு சிருங்கார சுந்தரர் என்ற பெயரிலும் விஷ்ணுவாகவே எழுந்தருளி இருக்கின்றனர்.

சப்தராமஸ்தலம் என்று கூறப்படும் ஏழு ராமர் கோவில்களில் இதுவும் ஒன்று. மற்றவை அயோத்தி, திருப்புல்லாணி, திருப்புட்குழி, புள்ளபூதங்குடி, திருவள்ளூர், சீர்காழி. இவற்றுள், திருவெள்ளியங்குடியில் உள்ளது போலவே திருப்புட்குழி, திருவள்ளூர் திவ்ய தேசங்களில் பெருமாள் முறையே விஜயராகவன், வீரராகவன் என்று ராமர் பெயரைத் தாக்கியிருந்தாலும் ராமர் உருவில் எழுந்தருளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலவர்: க்ஷீராப்தி நாதர். கிடந்த திருக்கோலம். புஜங்க சயனம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். நாபிக்கமலத்தில் பிரும்மா. இங்கே மூலவர் நீலவண்ணத்தில் இருக்கிறார். திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவெள்ளியங்குடி ஆகிய திவ்யதேசங்களில் மட்டும்தான் மூலவர் நீலவண்ணத்தில் இருப்பதாக அர்ச்சகர் கூறினார். .

உற்சவர்: சிருங்கார சுந்தரர். ஸ்ரீதேவி பூதேவி மரகதவல்லித் தாயாருடன் காட்சி  அளிக்கிறார்.

தாயார்: மரகத வல்லி. தனிக்கோவில் நாச்சியார்

விமானம்:  புஷ்கலாவர்த்தக விமானம்

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், சுக்கிர தீர்த்தம், இந்திர தீர்த்தம், பராசர தீர்த்தம்

பிராத்தியட்சம்: சுக்கிரன், பிரம்மா, இந்திரன், மார்க்கண்டேயர், மாயன், பராசரர், பூமிதேவி (இவர்களுக்கு இங்கே பெருமாள் காட்சி கொடுத்திருக்கிறார்.)

ஒப்பிலியிப்பன் கோவிலில் உள்ளது போல் சந்நிதியில் ஒருபுறம் (திருமுடிக்கருகே) மார்க்கண்டேயரும், மறுபுறம் (திருவடியருகே) பூமாதேவியும் இருக்கிறார்கள்.

சுக்கிராச்சாரியாருக்குப் பார்வை கொடுத்ததன் நினைவாக சந்நிதியில் ஒரு அணையாத தீபம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. இதை எப்போதும் ஒளிவிடச் செய்ய நல்லெண்ணெய்க்காக கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளைத் தந்து உதவலாம்.

சந்நிதிக்கு வெளியே இடப்புறச் சுவற்றில் சற்று உயரமான நிலையில் கிருஷ்ணன் விக்கிரகம் உள்ளது.

திருமஞ்சனதுக்கான விக்கிரகங்கள் சந்நிதிக்கு வெளியே வலப்புறச் சுவற்றில் சற்று மேலே உள்ள பிறையில் உள்ளன. இந்த விக்கிரகங்களுக்கு திருமஞ்சன பேரர் என்று பெயர் குறிக்கப்பட்டிருக்கிறது.

வெளியே உள்ள மண்டபத்தில் வலது புறம் வரதன், யோக நரசிம்மர் விக்கிரகங்கள் உள்ளன. இடது புறமாக நம்மாழ்வார், பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகரர், ராமானுஜர், தேசிகர்  விக்கிரகங்கள் உள்ளன.

துவஜஸ்தம்பம் அருகே பெருமாளை நோக்கியபடி எல்லாக் கோவில்களிலும் இருப்பது போல் கருடர் சந்நிதி. ஆனால் இவர் சதுர்புஜ கருடராக நான்கு கரங்களுடன் இருக்கிறார். பெருமாள் கொடுத்த சங்கு சக்கரத்தை இரு கரங்களில் ஏந்தி இருக்கிறார். ஒரு காலை மண்டியிட்டு எழுந்து நிற்கத் தயாரான நிலையில் இருக்கிறார்,  பெருமாள் கேட்கும்பொது  சங்கு சக்கரத்தைத் திருப்பிக் கொடுக்கத் தயாரான நிலையில்! வாகன விபத்துகளைத் தடுக்க உதவுபவர் இந்த கருடன் என்று அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரகாரத்தில் பெருமாள் சந்நிதிக்கு வலப்புறமாக மரகதவல்லித் தாயாருக்கு தனிச்சந்நிதி உள்ளது. பிரகாரத்தின் மறுபுறத்தில் ஆண்டாள் சந்நிதி உள்ளது.

பிரகாரத்தில் சந்நிதிக்கு வலப்புறமாக இந்த திவ்யதேசத்தின் ஸ்தல விருட்சமான செவ்வாழை மரம் உள்ளது. இது காலம் காலமாக வாழையடி வாழையாக வளர்ந்து வருகிறது. இப்போதும் வருடத்துக்கு ஒருமுறை குலை போட்டு மீண்டும் தானே வளர்கிறது.

இந்த ஊருக்கு அருகில் உள்ள சேங்கனூர் வைணவ ஆச்சார்யர்களில் ஒருவரான பெரியவாச்சான் பிள்ளையின் அவதார ஸ்தலம்

கோவிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் 
கோவிலுக்கு எதிரே சற்றுத்  தொலைவில்
ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோவில்
உள்ளது. கோலவில்லி ராமரை நோக்கி வணங்கியபடி நிற்கிறார் ஆஞ்சநேயர் .


கோவில் வாசலில் அடியேன், மனைவியுடன் 

இந்தக்கோவில் பற்றிய நான்கு வீடியோக்கள் youtubeஇல் கிடைத்தன. அவற்றைக் கீழே கொடுத்திருக்கிறேன்.





முதல் வீடியோவில் கோவிலின் பல பகுதிகளும் காட்டப்படுகின்றன, பின்னணியில் இளையராஜா பாடும் பக்திப்பாடலுடன்.



இரண்டாவது வீடியோவில் கோவில் பற்றிய விவரங்கள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்லன.



மூன்றாவது வீடியோவில் திருமஞ்சனம் காட்டப்படுகிறது.



நான்காவது வீடியோவில் கோவிலில் பல இடங்கள் காட்டப்படுவதுடன், அர்ச்சகர் அளிக்கும் சில விஷயங்களும் இடம் பெற்றுள்ளன..

இந்த திவ்யதேசம் திருமங்கை ஆழ்வாரால் பத்து பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. பாசுரங்கள் இதோ.

நாலாயிர திவ்ய பிரபந்தம்
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருவெள்ளியங்குடி
1. ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் 
      ஆல் இலை வளர்ந்த எம் பெருமான் 
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து 
      பெரு நிலம் அளந்தவன் கோயில்- 
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் 
      எங்கும் ஆம் பொழில்களின் நடுவே 
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (1337)
 
2. ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு 
      அரக்கர்-தம் சிரங்களை உருட்டி 
கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவக் 
      கண்ணனார் கருதிய கோயில்- 
பூ நிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி 
      பொதும்பிடை வரி வண்டு மிண்டி 
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (1338)
 
3. கடு விடம் உடைய காளியன் தடத்தைக் 
      கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன் 
படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப் 
      பல் நடம் பயின்றவன் கோயில்- 
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் 
      பயிற்றிய நாடகத்து ஒலி போய் 
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (1339)
 
4. கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த 
      காளமேகத் திரு உருவன் 
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற 
      பரமனார் பள்ளிகொள் கோயில்- 
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும் 
      தொகு திரை மண்ணியின் தென்பால் 
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (1340)
 
5. பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து 
      பாரதம் கையெறிந்து ஒருகால் 
தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த 
      செங் கண் மால் சென்று உறை கோயில்- 
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி 
      எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி 
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (1341)
 
6. காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை 
      உற கடல் அரக்கர்-தம் சேனை 
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த 
      கோல வில் இராமன்-தன் கோயில்- 
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் 
      ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி 
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (1342)
 
7. ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த 
      மாவலி வேள்வியில் புக்கு 
தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு 
      திக்கு உற வளர்ந்தவன் கோயில்- 
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் 
      அரி அரி என்று அவை அழைப்ப 
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான்-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (1343)
 
8. முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-
      தம் பெருமானை அன்று அரி ஆய் 
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட 
      மாயனார் மன்னிய கோயில்- 
படியிடை மாடத்து அடியிடைத் தூணில் 
      பதித்த பல் மணிகளின் ஒளியால் 
விடி பகல் இரவு என்று அறிவு-அரிது ஆய-
      திருவெள்ளியங்குடி-அதுவே             (1344)
 
9. குடி குடி ஆகக் கூடி நின்று அமரர் 
      குணங்களே பிதற்றி நின்று ஏத்த 
அடியவர்க்கு அருளி அரவு-அணைத் துயின்ற 
      ஆழியான் அமர்ந்து உறை கோயில்- 
கடி உடைக் கமலம் அடியிடை மலர 
      கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய 
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும் 
      வயல்-வெள்ளியங்குடி-அதுவே             (1345)
 
10' பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால் 
      பார் இடந்து எயிற்றினில் கொண்டு 
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற 
      திருவெள்ளியங்குடியானை 
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன் 
      மான வேல் கலியன் வாய் ஒலிகள் 
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் 
      ஆள்வர்-இக் குரை கடல் உலகே             (1346)


ஓம் நமோ நாராயணாய 

Sunday, October 21, 2018

66. திவ்யதேச தரிசன அனுபவம் - 45. 21.திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்)

தரிசனம் செய்த நாள்: 20.10.18 சனிக்கிழமை  
சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40  
21.திருநந்திபுரவிண்ணகரம்
  

21.திருநந்திபுரவிண்ணகரம்
செயற்கரிய செய்வோமைச் செய்யாம னெஞ்சே!
மயக்குவா ரைவர் வலியால் - நயக்கலவி
சிந்திபுர விண்ணகர மென்பர்திருச் செங்கண்மால்
நந்திபுர விண்ணகர நாடு. (21)
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 


கும்பகோணத்திலிருந்து சுமார்  16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாதன் கோவில் என்று அழைக்கப்படும்  நந்திபுர விண்ணகரம் என்னும் இந்த திவ்யதேசம். ஒப்பிலியப்பன் கோவிலுக்கு மேற்கேயும், மன்னார்குடிக்கு வடக்கேயும் அமைந்துள்ளது.  திப்பிராஜபுரம், பட்டீஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு அருகே அமைந்துள்ளது  நாதன் கோவில்.

விண்ணகரம் என்ற பெயர் வைகுண்டத்தைக் குறிக்கும். விண்ணகரம் என்று பெயர் கொண்ட மற்ற திவ்யதேசங்கள் திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில்), பரமேஸ்வர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம்), அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்), காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி) ஆகியவை.

கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் சென்று திப்பிராஜபுரம் அருகில் மேற்கே செல்லும் சாலையில் சென்று கோவிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து   இன்னொரு வழியும் இருக்கிறது.

இந்தக் கோவில் அமைந்துள்ள இடத்துக்கு அருகே பழையாறை என்ற ஊர்
அமைந்துள்ளது. இது சோழர்களின் தலைநகராக வழங்கிய ஊராக இருக்கலாம். ஆனால் இப்போது ஒரு குக்கிராமமாகத்தான் காட்சி தருகிறது 

சிவபெருமானின் வாகனமான நந்தி ஒருமுறை விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றபோது, அங்கே துவாரபாலகர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், துவாரபாலகர்களின் சாபத்துக்கு ஆளானார். அதனால் நந்திக்கு உடல் முழுவதும் வெப்பம் ஏற்பட்டது. தன்  சாபத்தைப் போக்கிக்கொள்ள அவர் சிவபெருமானின் யோசனைப்படி செண்பகவனம் என்ற இடத்தில் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்தார். விஷ்ணு அவருக்குக் காட்சியளித்து அவரது சாபத்தைப் போக்கினார். அதனால் இந்த திவ்யதேசம் நந்திபுர விண்ணகரம் என்று பெயர் பெற்றது. இந்த ஊர் நந்திபுரம் என்று பெயர் பெற்றது.

நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனால் இந்தக் கோவில் கட்டப்பட்டதால் இதற்கு நந்திபுர விண்ணகரம் என்று பெயர் வந்ததாகவும் ஒரு வரலாறு உண்டு.

மகாலக்ஷ்மி விஷ்ணுவின் மார்பில் தான் இடம் பெற வேண்டும் என்று  வேண்டி செண்பக வானம் என்ற இந்த இடத்தில் தவம் செய்தார். மகாவிஷ்ணு அவர் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகாலக்ஷ்மியைத் தன் மார்பில் ஏற்றுக்கொண்டார். 

திருமகளின் நாதனாகப் பெருமாள்  இந்தக் கோவிலில் எழுந்தருளியிருக்கிறார் என்பதையும்  நாதன் கோவில்  என்ற பெயர் குறிப்பதாகக் கொள்ளலாம்.

மூலவர்: ஸ்ரீனிவாசன். ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் 

உற்சவர்: ஜகந்நாதன். 

தாயார்: செண்பகவல்லி. பிரகாரத்தின் இறுதியில் பெருமாளை  நோக்கியபடி கிழக்கு நோக்கி  தனிக்கோவில் நாச்சியாராக  அமர்ந்திருக்கிறார்.

விமானம்: மந்தார விமானம் 

புஷ்கரணி: நந்தி புஷ்கரணி.

கர்ப்பக்கிருகத்தில் பிரம்மாவும், நந்தியும்.  பெருமாளை வணங்கியபடி  இருக்கிறார்கள் . 
மூலவர் ஸ்ரீனிவாசன் என்ற பெயர் பெற்றிருந்தாலும், உற்சவர் பெயரிலேயே இந்தக் கோவில் ஜகந்நாதர் கோவில் என்றும், நாதன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

கர்ப்பக்கிருகத்துக்கு வெளியே, சந்நிதிக்கு வலது புறத்தில் ஆழ்வார்கள் விக்கிரகங்கள் உள்ளன. ஆழ்வார்களுக்கு அடுத்தபடி ராமானுஜர் இரு புறமும் இரு சீடர்களுடன் சேவை சாதிக்கிறார்.

சந்நிதிக்கு நேரே மண்டபத்தின் வாயிலுக்கு அருகில் சிறிய ஆஞ்சநேயர் விக்கிரகம்
சற்று உயரத்தில் அமைந்துள்ளது. 

ஆஞ்சநேயர் விக்கிரகத்துக்குக் கீழே ஒரு மன்னர் தன்  இரண்டு ராணிகளுடன்  நிற்கும் தோற்றம். இது  கோவிலைக் கட்டிய அல்லது கோவிலுக்குத் திருப்பணி செய்த  சொக்கப்ப நாயக்கர் என்ற மன்னரின் உருவச்சிலை  என்று அர்ச்சகர் கூறினார். இவருக்கு அருகில் குந்தவையின் உ ருவச்சிலையும் உள்ளது.

கோவிலின் முன் அடியேனும், என் மனைவியும் 



















இந்தக் கோவில் திருமங்கை ஆழ்வாரால் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. முதல் ஐந்து பாடல்களில் பெருமாளை கிருஷ்ணனாகவும், அடுத்த ஐந்து பாடல்களில் ராமனாகவும் நினைத்துப் பாடியிருக்கிறார் ஆழ்வார்.









பாசுரங்கள்  இதோ:

நாலாயிர திவ்ய பிரபந்தம்
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருநந்திபுரவிண்ணகரம்
1. தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு 
      விசும்பும் அவை ஆய் 
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை 
      ஆய பெருமான் 
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு தட 
      மார்வர் தகைசேர் 
நாதன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே             (1437)
 
2. உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழி
      யாமை முன நாள் 
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன்-அவன் 
      மேவும் நகர்-தான்- 
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர் 
      கிண்டி அதன்மேல் 
நைவளம் நவிற்று பொழில் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே             (1438)
 
3. உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும் ஒழி
      யாமை முன நாள் 
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட 
      மார்வர் தகை சேர் 
வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி 
      கங்குல் வயல் சூழ் 
நம்பன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே             (1439)
 
4. பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என 
      வந்த அசுரர் 
இறைகள்-அவை-நெறு-நெறு என வெறிய-அவர் வயிறு அழல 
      நின்ற பெருமான்
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல 
      அடிகொள் நெடு மா 
நறைசெய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (1440)
 
5. மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என 
      வந்த அசுரர் 
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி 
      ஆம் அளவு எய்தான் 
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை 
      அம்கை உடையான் 
நாளும் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (1441)
 
6. தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை 
      ஆக முன நாள் 
வெம்பி எரி கானகம் உலாவும் அவர்-தாம் இனிது 
      மேவும் நகர்-தான்- 
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில் 
      ஆர் புறவு சேர் 
நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (1442)
 
7. தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல் 
      நந்தன் மதலை 
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ 
      நின்ற நகர்-தான்- 
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார் மயில்கள் 
      ஆடு பொழில் சூழ் 
நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (1443)
 
8. எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனி
      யாளர் திரு ஆர் 
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு 
      கூட எழில் ஆர் 
மண்ணில் இதுபோல நகர் இல்லை என வானவர்கள் 
      தாம் மலர்கள் தூய் 
நண்ணி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
      -நண்ணு மனமே             (1444)
 
9. வங்கம் மலி பௌவம்-அது மா முகடின் உச்சி புக 
      மிக்க பெருநீர் 
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் 
      அறிதியேல் 
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி 
      எங்கும் உளதால் 
நங்கள் பெருமான் உறையும் நந்திபுரவிண்ணகரம்-
      நண்ணு மனமே             (1445)
 
10. நறை செய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம் 
      நண்ணி உறையும் 
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்-அவை அம் கை உடை
      யானை ஒளி சேர் 
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை-இவை 
      ஐந்தும் ஐந்தும் 
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள் 
      முழுது அகலுமே             (1446)


ஓம் நமோ நாராயணாய