Saturday, August 6, 2016

25. திவ்யதேச தரிசன அனுபவம் 5. திருநீர்மலை (91)

தரிசனம் செய்த நாள்: 06.08 2016
தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
18. திருநீர்மலை (91)

இரங்கு முயிரனைத்து  மின்னருளாற் காப்பான்
அரங்கனொருவனுமே யாதல் - கரங்களால்
போர்மலைவான் வந்த புகழவாணன் காட்டினான் 
நீர்மலைவா ழெந்தையெதிர் நின்று (91)
    -  பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி.'

திருநீர்மலை திருத்தலத்தின்மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. காரணம் தெரியாது. சிறு வயதில் ஓரிரு முறை இக்கோவிலுக்குச் சென்று வந்ததாக ஒரு நினைவு. மலைக்கோவில் என்பதால் அப்போதே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம். சில பழைய தமிழ் சினிமாக்களில் ரகசியத் திருமணங்கள் இந்தக் கோவிலில்தான் நடப்பதாகக் காட்டுவார்கள்!

சுமார் பதினைந்து அல்லது இருபது  வருடம் முன்பு என் தாயாருடன், ஒருமுறை இக்கோவிலுக்குப் போயிருக்கிறேன். அதற்குப் பிறகு இப்போதுதான் (6/8/2016) போகிறேன்.

திருநீர்மலை சென்னை பல்லவரத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோயில் வாசல் வரை பஸ் செல்கிறது. தாம்பரம், பல்லாவரம், விமான நிலையம் போன்ற இடங்களிலிருந்து டாக்சியில் வரலாம்.

சாலையின் ஒரு பக்கம் கோயில், எதிர்ப்பக்கம் திருக்குளம்.

மலை அடிவாரத்தில் ஒன்றும், மேலே ஒன்றுமாக இரண்டு  கோயில்கள். அடிவாரத்தில் இருப்பவர் நீர்வண்ணப் பெருமாள். இவர்தான் ஸ்தலாதிபதி. ஆயினும் மேலே இருக்கும் ரங்கநாதர் பெயராலேயே (ரங்கநாதபி பெருமாள் கோயில்) இக்கோயில் குறிப்பிடப்படுகிறது.

மலை மீதுள்ள ரங்கநாதர் சந்நிதிதான் மிகப் புராதனமானது. பிருகு, மார்க்கண்டேயர் ஆகிய இரு முனிவர்களும் ஸ்ரீரங்கத்தில்  ரங்கநாதரைச் சேவித்து விட்டு வரும்போது அவரைப் பற்றிய நினைவிலேயே வந்தனர். இந்த ஊருக்கு வந்தபோது ரங்கநாதரை மீண்டும் தரிசிக்க வேண்டும் என்று அவர்கள் வேண்ட அவர்களுக்காக ரங்கநாதர் இங்கே எழுந்தருளினார்.

மலை மீது உள்ள கோயிலில் ரங்கநாதர், சாந்த நரசிம்மர், திரிவிக்கிரமர் ஆகிய மூன்று மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.

ராமாயணம் எழுதிய வால்மீகி இந்தக் கோயிலுக்கு வந்து மலை மீது இருக்கும் ரங்கநாதர், நரசிம்மர், திரிவிக்கிரமர் ஆகியோரைத் தரிசித்த்து வீட்டுக் கீழே வந்தார். அப்போது அவருக்கு ராமபிரானைக்  கல்யாணக் கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் வந்தது. அவர் ஆவலைப் பூர்த்தி செய்யும் விதத்தில் ரங்கநாதர் ராமராகவும், ரங்கநாயகித்தாயார் சீதையாகவும், பாம்பணையாக இருந்த ஆதிசேஷன் லக்ஷ்மணனாகவும், சங்கும் சக்கரமும் பரத சத்ருக்னர்களாகவும், கருடன் ஆஞ்சநேயராகவும் தோற்றம் எடுத்து வால்மீகிக்குக் காட்சி அளித்தனர். அதன்பிறகு நீர்வண்ணப் பெருமாளாகவும் அவருக்கு பகவான் காட்சி கொடுத்தார். வால்மீகியின் வேண்டுகோளை ஏற்று ராமபிரான் இங்கே கல்யாணராமனாகக் கோயில் கொண்டார்.  வால்மீகிக்குப்  பெருமாள் நீர்வண்ணனாகவும்  காட்சியளித்ததால் நீர்வண்ணப்பெருமாளாகவும் இங்கே எழுந்தருளியிருக்கிறார்.

இந்தக்கோயில் தானாகத் தோன்றிய எட்டு கோயில்களில் (ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம்) ஒன்று. (மற்றவை ஸ்ரீரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம், நைமிசாரண்யம், சாளக்கிராமம், புஷ்கரம், பத்ரிகாஸ்ரமம்).

கீழ்க் கோவிலுக்குப் பக்கத்தில் ஆண்டவன் ஆசிரமத்தால் நிறுவப்பட்ட வேதாந்த தேசிகர் (நிகமாந்த மகாதேசிகன்) சந்நிதி இருக்கிறது.

கீழ்க்கோவிலில் ராமர், நீர்வண்ணப்பெருமாள்  ஆகிய இரண்டு பிரதான சந்நிதிகள் இருப்பதால், ராஜகோபுரம் ராமர் சந்நிதிக்கு எதிரேயும், கொடிமரமும் (த்விஜஸ்தம்பம்) பலிபீடமும் நீர்வண்ணப்பெருமாள் சந்நிதிக்கு எதிரேயும் இருக்கின்றன.

நீர்வண்ணப்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் காட்சி தருகிறார். பெருமாளுக்கும் தாயாருக்கும் வலப்புறமாகத் தெற்கு நோக்கியபடி வால்மீகி நிற்கிறார். இது சுயம்பு (தானே உருவான) விக்கிரகம் என்று கூறப்படுகிறது.

சந்நிதியிலிருந்து வெளியே வந்தால் ஒரு கண்ணாடி அறையில்,  மேலே எழுந்தருளியிருக்கும் ரங்கநாதரின் உற்சவ மூர்த்தியான அழகிய மணவாளர் காட்சி தருகிறார். கண்ணாடி அறையைத் தாண்டி வந்தால் ஆழ்வார்களின் சந்நிதி (பெருமாள் சந்நிதிக்கு எதிர்ப்புறத்தில்.)

பிரகாரத்தில் முதலில் தாயார் சந்நிதி. தாயாருக்கு அணிமாமலர் மங்கை என்று அழகான தமிழ்ப் பெயர். பிறகு பரமபதவாசல். அதை அடுத்து ஆண்டாள் சந்நிதி. ஆண்டாள் சந்நிதிக்குப் பக்கத்தில் ஒரு துளசி மாடம் இருக்கிறது.

நீர்வண்ணப் பெருமாள் சந்நிதிக்கு அருகே செங்குத்தான திசையில் கல்யாண ராமர் சந்நிதி. ராமர் சந்நிதியும், ஆண்டாள் சந்நிதியும் பூட்டப்பட்டிருந்ததால் கம்பிகள் மூலம்தான் தரிசனம் செய்ய முடிந்தது. ராமர் சந்நிதிக்கு எதிரே தனி மண்டபத்தில் உயரமான ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

கீழே தரிசனம் முடித்துக்கொண்டு படிக்கட்டுகலில் ஏறி மேலே செல்ல வேண்டும். சுமார் 300 படிகள் இருக்கலாம். 10, 15 படிகள் ஏறியதும் உட்கார்ந்து இளைப்பாறி விட்டுப் போக வசதியாத திண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

20, 30 படிகள் தாண்டியதும், வலப்புறத்தில் சற்று உள்ளே தள்ளி பக்த ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது.

மேலே உள்ள கோவிலின் முகப்பில் கல்கி மண்டபம். முதலில் ரங்கநாதர் சந்நிதி. தெற்கு நோக்கிய புஜங்க சயனம். நாபிக் கமலத்தில் பிரும்மாவும், காலடியில் உபய நாச்சியார்களும் உள்ளனர். உற்சவ மூர்த்திக்குப் பக்கத்தில் தனியாக ஒரு தயார் இருக்கிறார். ரங்கநாதர் சந்நிதியில் மார்க்கண்டேயரும், பிருகு முனிவரும் இருப்பதாக ஒரு வலைத்தளத்தில் படித்தேன். கோயிலிலிருந்து திரும்பியபிறகுதான் இதைப்  படித்தேன். கோயிலில் இந்த முனிவர்களை தரிசிக்கவில்லை. அர்ச்சகர்களும் இவர்கள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

(கீழே நீர்வண்ணப்பெருமாள் சந்நிதியில் வால்மீகி இருப்பது கூட எனக்கு முதலில் தெரியாது. அணிமாமலர்மங்கைத் தாயார் சந்நிதி அர்ச்சகரிடம் வால்மீகியின் சந்நிதி எங்கே இருக்கிறது என்று கேட்டபோது நீர் வண்ணப்பெருமாள் கோயில் சந்நிதியில்தான் இருக்கிறது என்று அவர் சொன்னதும்தான் மீண்டும் ஒருமுறை நீர்வண்ணப்பெருமாள் சந்நிதிக்குச் சென்று வால்மீகியைத் தரிசித்தேன். ஒப்பிலியப்பன் கோயில், திருச்சேறை ஆகிய திவ்யதேசங்களில் அர்ச்சகர்கள் பொறுமையாக விவரம் சொல்கிறார்கள். சென்னைக்கோவில்களில் இது போன்று செய்வதில்லை. இது சென்னை நகரின் 'பண்பாட்டுத் தாக்கத்தின்' காரணமாகக்கூட இருக்கலாம்!)

பெருமாள் சந்நிதிக்கு வெளியில் பக்கத்திலேயே கிழக்கு நோக்கிய முகத்துடன் ரங்கநாயகித் தாயார் சேவை சாதிக்கிறார்.

ரங்கநாதர் சந்நிதியை  ஒட்டியபடியே உள்ள பிரகாரத்தில் சென்றால் திரிவிக்கிரமர், சாந்த நரசிம்ம மூர்த்தி ஆகிய இருவரையும் தரிசிக்கலாம். இந்தச் சந்நிதிகளும் பூட்டப்பட்டுத்தான் இருந்தன. கம்பி வழி தரிசனம்தான். அர்ச்சகர் தட்டுப்பாடா அல்லது இந்தச் சந்நிதிகள் குறிப்பிட்ட நேரங்களில்தான் திறக்கப்படுமா என்பது தெரியவில்லை.

சாந்த நரசிம்ம மூர்த்தி பிரஹ்லாதனுக்காகத் தன்  உக்ரத்தை விட்டு விட்டு சாந்தமாகக் காட்சி அளிக்கிறார். இவரை பாலநரசிம்மர் என்றும் அழைக்கிறார்கள். இருக்குப் பின்னே உக்ர நரசிம்மர் உருவம் இருப்பதாகவும், அவரையும் தரிசிக்கலாம் என்றும் மற்றோரு வலைத்தளத்தில் படித்தேன். இந்தத் தகவலும் நான் கோயிலுக்குச் சென்று திரும்பிய பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது.

தரிசனம் முடித்து விட்டுக் கோயிலிலிருந்து சில படிகள் இறங்கினால் ஒரு வெளிப்பிரகாரம். அங்கே சிறியதாக ஆதிசேஷன் சந்நிதி இருக்கிறது. பிரதட்சிணம் செய்து கொண்டே மலையைச் சுற்றியுள்ள   காட்சிகளை ரசிக்கலாம். இன்னும் நிறைய பச்சை மரங்களும், புல்வெளிகளும், காலி மனைகளும் இருப்பது சற்று ஆறுதலாக இருந்தது.


தானே தோன்றிய தலம் என்பதைத் தவிர இந்தக் கோயிலுக்கு இன்னும் பல   சிறப்புகள் உண்டு. கீழே நீர்வண்ணப்பெருமாள் நின்ற திருக்கோலத்திலும் , மேலே நரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்திலும், ரங்கநாதர் கிடந்த திருக்கோலத்திலும், திரிவிக்கிரமர் நடந்த திருக்கோலத்திலும் காட்சி தருகிறார்கள். 'நின்றான், இருந்தான்,கிடந்தான், திரிந்தான்' என்று வர்ணிக்கிறார் திருமங்கை ஆழ்வார்.

இந்தக் கோயிலைத் தரிசித்தால், அது நாச்சியார் கோயில் (ஸ்ரீனிவாசன் - நின்ற திருக்கோலம்), திருவாலி (நரசிம்மர் - இருந்த திருக்கோலம்), திருக்குடந்தை (சார்ங்கபாணி - கிடந்த திருக்கோலம்), திருக்கோவலூர் (திரிவிக்கிரமன் - நடந்த திருக்கோலம்) ஆகிய நான்கு திருத்தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும் என்று திருமங்கை ஆழ்வாரும், திருப்பதி, ஸ்ரீரங்கம் ஆகிய தலங்களைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்று பூதத்தாழ்வாரும் கூறுகின்றனர்.

துவாபர யுகத்தில் இவ்வுலகில் அஹோபிலம், திருநீர்மலை ஆகிய இரண்டு மலைகள் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரளயத்தின் முடிவில் அர்ஜுனனுக்கு நரசிம்மர் இங்கே ராஜசூய யாகம் மூலம் காட்சியளித்தார்.

இந்த விவரங்கள் கோயிலில் உள்ள ஒரு பலகையில் எழுதப்பட்டுள்ளன.

ஒரு காலத்தில் இந்த மலை நீர் சூழ்ந்து காணப்பட்டதால் இந்த இடம் 'திருநீர்மலை' என்று அழைக்கப்பட்டதாம். பிரம்மாண்ட புராணத்தில்  இந்தத் தலம் தோயாத்ரி  என்று  குறிப்பிடப்பட்டிருக்கிறது. சம்ஸ்கிருதத்தில் தோயம் என்றால் 'நீர்,' 'அத்ரி' என்றால் மலை. இது மருவி தோத்தாத்ரி என்று ஆகியது.

புஷ்கரணியின் பெயர்  மணிகர்ணிகா. இந்த புஷ்கரணிக்குள், நான்கு தீர்த்தங்கள் இருப்பதாக ஐதீகம். க்ஷீர புஷ்கரணி (ரங்கநாதர்), காருண்ய புஷ்கரணி (நீர்வண்ணர், ராமர்), சித்த புஷ்கரணி (திரிவிக்கிரமர்), ஸ்வர்ண புஷ்கரணி  (சாந்த நரசிம்மர்).

இந்தக் கோயிலின் பல அருமையான புகைப்படங்களைகே காண கீழே கிளிக் செய்யவும்.
புகைப்படங்கள், விவரங்கள்

திருமங்கை ஆழ்வார் இந்தக் கோயிலைத் தரிசிக்க வந்தபோது இந்த மலையை நீர் சூழ்ந்திருந்ததால் ஆறு மாதம் இங்கே தங்கி, நீர் வடிந்ததும் தரிசனம் செய்தார். இதை உறுதிப்படுத்துவது போல், இவ்வூருக்கு அருகே திருமங்கையாழ்வார்புரம் என்ற பகுதி உள்ளது.


திருமங்கையாழ்வார் இந்த திவ்ய தேசம் பற்ற 19 பாடல்களும், பூதத்தாழ்வார் 1 பாடலும் பாடியிருக்கின்றனர். அவர்கள் பாடிய பாசுரங்களைக் கீழே காணலாம்.

                                                    
நாலாயிர திவ்ய பிரபந்தம்
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருநீர்மலை
1077 அன்று ஆயர் குலக் கொடியோடு அணி மா
      மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு
      உறையும் இடம் ஆவது-இரும் பொழில் சூழ்
நன்று ஆய புனல் நறையூர் திருவாலி
      குடந்தை தடம் திகழ் கோவல்நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (1)
 
1078 காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு
      அரையன்னது கண்டு அவன் நிற்க முனே
மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும்
      அது அன்றியும் முன் உலகம் பொறை தீர்த்து
ஆண்டான் அவுணன்-அவன் மார்வு-அகலம்
      உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய்
நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (2)
 
1079 அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து
      அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள்
      பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்
பல மன்னர் பட சுடர் ஆழியினைப்
      பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர்
நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (3)
 
1080 தாங்காதது ஓர் ஆள் அரி ஆய் அவுணன்-
      தனை வீட முனிந்து அவனால் அமரும்
பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து
      அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில்
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி
      பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (4)
 
1081 மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு
      அணை கட்டி வரம்பு உருவ மதி சேர்
கோல மதிள் ஆய இலங்கை கெட
      படை தொட்டு ஒருகால் அமரில் அதிர
காலம் இது என்று அயன் வாளியினால்
      கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்
நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (5)
 
1082 பார் ஆர் உலகும் பனி மால் வரையும்
      கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு
ஆராது என நின்றவன் எம் பெருமான்
      அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அப்
பேரானை முனிந்த முனிக்கு அரையன்
      பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்
நீர் ஆர் பெயரான் நெடுமால்-அவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (6)
 
1083 புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்
      புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன்
நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து
      அது அன்றியும் வென்றி கொள் வாள் அவுணன்
பகராதவன் ஆயிரம் நாமம் அடிப்
      பணியாதவனை பணியால் அமரில்
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான்-அவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (7)
 
1084 பிச்சச் சிறு பீலி பிடித்து உலகில்
      பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால்
      அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய்
நச்சி நமனார் அடையாமை நமக்கு
      அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும்- அவற்கு
      இடம் மா மலை ஆவது- நீர்மலையே             (8)
 
1085 பேசும் அளவு அன்று இது வம்மின் நமர்
      பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசம் அது செய்திடும் ஆதன்மையால்
      அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல்
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்-
      மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதிஇல்
நீசர்-அவர் சென்று அடையாதவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (9)
 
1086 நெடுமால்-அவன் மேவிய நீர்மலைமேல்
      நிலவும் புகழ் மங்கையர்-கோன் அமரில்
கட மா களி யானை வல்லான் கலியன்
      ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு உடனே
விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும்
      எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்
      குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே             (10)

 இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் இரங்கல்
1114 அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு
      அழியுமால் என் உள்ளம் என்னும்
புலம் கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்
      போதுமோ நீர்மலைக்கு என்னும்
குலம் கெழு கொல்லிக் கோமள வல்லி
      கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய்?
      -இடவெந்தை எந்தை பிரானே             (8)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருநறையூர்:5
1520 ஓடா அரி ஆய் இரணியனை ஊன் இடந்த
சேடு ஆர் பொழில் சூழ் திருநீர்மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாள்தோறும் நாடி நறையூரில் கண்டேனே             (4)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருநறையூர்:8
1553 கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திருநீர்மலை நித்திலத் தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர்-தமக்குக்
கதியே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே             (7)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருக்கண்ணபுரம்: 2
1660 அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்-
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்
உருகினாள் உள்மெலிந்தாள் இது என்கொலோ? (3)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருநாகை: அச்சோப்பதிகம்
1764 மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட
      மாலிருஞ்சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்
      நீர்மலையார்கொல் ? நினைக்கமாட்டேன்
மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த
      மா முகில் போன்று உளர் வந்து காணீர்
அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்-
      அச்சோ ஒருவர் அழகியவா             (8)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
பதினெண் திருப்பதிகள்
1847 ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரும் நல் தொல் கதி ஆகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர்மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே            (1)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திரு நெடுந்தாண்டகம்
2068 கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
      கைத்தலமும் அடி-இணையும் கமல வண்ணம்
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்
      பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்
  எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்
      இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே             (18)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
சிறிய திருமடல்
2672 கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்    (1)
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று    (2)
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்    (3)
வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை    (4)
வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே    (5)
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து    (6)
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித்    (7)
தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும்    (8)
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு    (9)
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்   (10)
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்   (11)
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்   (12)
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த   (13)
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு   (14)
ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்   (15)
நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு (16)
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் (17)
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து (18)
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை (19)
சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் (20)
பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் (21)
தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு (22)
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23)
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக் (24)
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் (25)
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் (26)
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன் (27)
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் (28)
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு (29)
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் (30)
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் (31)
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் (32)
பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு (33)
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை (34)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் (35)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர் (36)
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (37)
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல் (38)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய மடல்
2673 மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை      (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை      (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்      (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத்      (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான்      (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்      (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்      (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்      (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள்
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்      (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க   (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்     (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்     (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த     (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்     (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில்     (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்     (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம்     (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்     (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு     (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே     (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்     (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம்             (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வெள்ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80)
மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
பூதத்தாழ்வார் 
இரண்டாம் திருவந்தாதி
2226 பயின்றது அரங்கம் திருக்கோட்டி பல் நாள்
பயின்றதுவும் வேங்கடமே பல்நாள் பயின்றது
அணி திகழும் சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால்             (46)

ஓம் நமோ நாராயணாய!

   

No comments:

Post a Comment