Monday, August 29, 2016

29. திவ்ய தேச தரிசன அனுபவம் 8 - நிலாத் திங்கள் துண்டம்(80)

      தரிசனம் செய்த நாள் - 27/08/2016 (சனிக்கிழமை)                              
                                        தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
                                             7. திருநிலாத்திங்கட்டுண்டம்
மீண்டுந் தெளியார்கண் மேதினியோர் நின்னடிப்பூப்
பாண்டரங்க மாடி படர்சடைமேல் - தீண்டிக்
கலாத்திங்கட் டுண்டத்தின் மீதிருப்பக் கண்டு
நிலாத்திங்கட் டுண்டத் தானே! (80)
   - பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி' 

இந்த திவ்ய தேசம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குள் அமைந்திருக்கிறது. ஏகாம்பரநாதர்  சந்நிதிக்கு முன் உள்ள உட்பிரகாரத்தில் வலது புறம் ஒரு தனிச் சந்நிதியாக அமைந்துள்ளது இந்த திவ்ய தேசம்.

பார்வதி சிவபெருமானின் கோபத்துக்கு ஆளாகி காஞ்சிக்கு வந்து தவம் செய்தார். அவரைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் பார்வதி தேவி தவம் செய்து கொண்டிருந்த இடத்திலிருந்த மரத்தைத் தீப்பிடித்து எரியச்  செய்தார்.

பார்வதி தனது சகோதரரான விஷ்ணுவை வாமன ரூபத்தில் தியானித்தார், (வாமனார்தானே விஸ்வரூபம் எடுக்கக் கூடியவர்?) அப்போது விஷ்ணு அங்கே தோன்றி நிலவின் கிரணங்களை நெருப்பின் மீது பாய்ச்சி அந்த இடத்தைக் குளிரச் செய்தார். அதனால் இவருக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்று பெயர். (நிலவின் கதிர்களைக்கொண்டு தீயைத் துண்டித்ததால் இந்தப் பெயர்.

அதற்குப் பிறகு சிவபெருமான் பார்வதியை மேலும் சோதனை செய்ய எண்ணி அங்கே கங்கையைப் பாயச் செய்தார். அப்போது பார்வதி சிவலிங்கத்தை அணைத்துக்கொள்ள, இருவரும் ஒன்றிணைந்தனர். சிவன் பார்வதி இருவருக்கும் அங்கே காட்சி அளித்தார் நிலாத்திங்கள் துண்டப் பெருமாள்.
இவருக்கு சந்திர சூடன் என்றும் பெயர் உண்டு.

இந்தச் சந்நிதி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் அமைந்திருப்பதால் இந்தப் பெருமாள் சிவாச்சாரியார்களாலேயே  பூஜை செய்யப்படுகிறார்.

27/08/16 மாலை நான் இந்த சந்நிதியில் தரிசனம் செய்தபோது அங்கிருந்த ஒரு வயதான சிவாச்சாரியார், '108 திருப்பதி பெருமாள்' என்று கூறியபடியே அனைவருக்கும் சடாரி வைத்து, துளஸிப் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார். தனிச் சந்நிதியில் சற்றே பெரிய உருவத்துடன் காட்சி அளிக்கிறார் பெருமாள்.

அதே சந்நிதியில் நிலாத் திங்கள் துண்டருக்கு அருகில் (வலது புறத்தில்) இன்னொரு விக்கிரகம் இருக்கிறது. 'அவர் யார்?' என்று கேட்டதற்கு 'ஆதி நாராயணன்' என்றார் சிவாச்சாரியார். ஆனால் இந்த விக்கிரகம் நிலாத்திங்கள் துண்டம் திவ்ய தேசத்தின் எந்தப் புகைப்படத்திலும் இடம் பெறவில்லை. இதைப்பற்றிய எந்தக் குறிப்பையும்  வலைத்தளங்களில் என்னால் காண முடியவில்லை.

நிலாத்திங்கள் துண்டப்  பெருமாள், தலைக்கு மேலே  ஆதிசேஷனுடன், மேற்கு நோக்கியபடி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். தாயாரின் பெயர் நிலாத்திங்கள் துண்டத் தாயார் மற்றும் நேர் ஒருவர் இல்லா வல்லி நாச்சியார். தயார் விக்கிரகம் சந்நிதியில் இல்லை. மற்ற திவ்ய தேசங்களுக்கு இருப்பதுபோல், இந்த திவ்ய தேசத்துக்கும் விமானம், தீர்த்தம் ஆகிய தனித்துவங்கள்  உள்ளன. விமானம் - புருஷ சுக்த விமானம். தீர்த்தம் - சந்திர தீர்த்தம்.

இந்த திவ்ய தேசம் பற்றித்  பற்றித் திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரம் பாடியிருக்கிறார். இந்த திவ்ய தேசம் ஏகாம்பரேஸ்வர் கோயிலுக்குள் இருப்பதாக அவர் எங்கும் குறிப்பிடவில்லை. வேறு எங்கோ இருந்த இந்தச் சந்நிதி எதோ ஒரு காரணத்தால் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் இடம் பெற்று விட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் இருப்பதால், பெருமாளின் உயர்ந்த நிலையை (பரத்துவத்தை) யாரும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்பதற்காகத்தானோ என்னவோ, பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் தன்னுடைய  '108 திருப்பதி அந்தாதி'யில் (இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் இடம் பெற்றுள்ள பாசுரத்தில்), அர்ஜுனன், தான் கிருஷ்ணனின் காலடியில் சமர்ப்பித்த பூக்கள் சிவபெருமானின் தலையில் இருப்பதைக் கண்ட மகாபாரதக் கதையை நினைவு படுத்தி இருக்கிறார்!

இந்த திவ்ய தேசம் பற்றிய விவரமான கட்டுரையை இங்கே படிக்கலாம்.

பெருமாளின் திருவுருவை இங்கே காணலாம்.

ஆழ்வார் பாசுரம் இதோ:
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திரு நெடுந்தாண்டகம்
2058 நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
      நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
      உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
      காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
      பெருமான் உன் திருவடியே பேணினேனே             (8)

ஓம் நமோ நாராயணாய!

No comments:

Post a Comment