Sunday, December 24, 2017

43. திவ்யதேச தரிசன அனுபவம்-22 - திருவெள்ளறை (6)

தரிசனம் செய்த நாள் - 21/12/2017 (வியாழக்கிழமை)
 சோழநாட்டுத் திருப்பதிகள் - 40
6. திருவெள்ளறை  (6)        
            
கல்லிருந்தான் றந்தை கலத்தோ னக்கமலத்
தில்லிருந்தான் றந்தையரங் கேசனென்றே - தொல்லைமறை
உள்ளறையா நின்றமையா லுள்ளமே! கள்ளமின்றி
வெள்ளறையான் றாளே விரும்பு. (6)
                    - பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி.'

திருச்சியிலிருந்து துறையூர் செல்லும்வழியில் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு அருகில் சென்றதுமே நம்மை வியக்க வைப்பது இதன் பிரம்மாண்டமான தோற்றம். ஒரு குன்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் மிகவும் விஸ்தாரமானது. அரசர்களின் கோட்டைகளில் உள்ளது போல் மிக உயரமான மதில் சுவர்கள்.


ராமபிரானின் மூதாதையரான சிபிச் சக்கரவர்த்தி வெள்ளை நிறத்தில் ஒரு பன்றியைத் துரத்திக்கொண்டு வந்தபோது இங்கே தவம் செய்து கொண்டிருந்த மார்க்கண்டேய  முனிவரைக் கண்டார். சிபிக்குப் பன்றி வடிவில் காட்சி தந்தது பெருமாளே என்று மார்க்கண்டேயர் சிபிக்கு உணர்த்தி அவரை இங்கே ஒரு கோவில் காட்டும்படி பணித்தார். அதன்படி இங்கே இந்தக் கோயிலை  சிபி கட்டினார் என்பது ஸ்தல புராணம்.

வெள்ளைப்பன்றியாக பகவான் காட்சி அளித்ததால் இந்தத் தலத்துக்கு ஸ்வேதபுரிக்ஷேத்ரம்  என்றும் பெயர் உண்டு. பெருமாளுக்கும் ஸ்வேதபுரிநாதன் என்ற பெயர் உண்டு. (வெள்ளறை என்பது கூட வெள்ளைப் பன்றியைக் குறிக்கும் ஒரு சொல்லிலிருந்து மருவி வந்திருக்கலாம்.)

 ராமரின் மூதாதையரான சிபிச் சக்கரவர்த்தியால் கட்டப்பட்டதால்,   ராமபிரான் காலத்தில் வாழ்ந்த விபீஷணனால் கட்டப்பட்ட திருவரங்கம் கோயிலை விட இந்தக் கோயில் பழமையானது என்று கருதப்படுகிறது.  அதனால் இந்தத் தலம் ஆதி வெள்ளறை என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் ஸ்ரீரங்கம் தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

வெள்ளறை என்றால் வெண்மை நிறம் கொண்ட பாறை. அப்படி ஒரு பாறையின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. மலைக்கோவிலுக்கே உண்டான அழகை இந்தக் கோயிலில் காணலாம்.

வேதாந்த தேசிகர் ஹம்ஸசந்தேஸம் (அன்னப்பறவையை தூது விடுதல்) என்று ஒரு நூல் இயற்றி இருக்கிறார். சீதை இலங்கையில் இருப்பதாக அனுமன் ராமபிரானிடம் வந்து சொன்னதும், ராமர் சீதையிடம் ஒரு அன்னப்பறவையை தூது விடுகிறார்.

இலங்கைக்குப் போகும் வழியில் உள்ள பல திருத்தலங்களை அன்னத்திடம் வர்ணிக்கிறார் ராமர். அப்போது திருவெள்ளறையைப் பற்றிக் குறிப்பிடும்போது, இது ஒரு சிறிய மலை என்பதை வெண்மையான கைலாச மலை குட்டையானது போலவும், பூமியைத் தாங்கி நிற்கு ஆதிசேஷன் தன தலையை சர்ரே பூமிக்கு மேல் உயர்த்தியது போலவும் திருவெள்ளறை காணப்படுகிறது என்று கூறுவதாக தேசிகர் எழுதியிருக்கிறார்.

பெருமாள் சந்நிதி சுமார் 50 அடி உயரத்தில் அமைந்துள்ளது. முதல் வாசலில் 18 படிகளும், இரண்டாவது வாசலில் நான்கு படிகளும், மூன்றாவது வாசலில் 5 படிகளும், நான்காவது வாசலில் 8 படிகளும் உள்ளன.

இவை முறையே பகவத் கீதையின் 18 அத்தியாயங்களையும், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், ஒம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தின் எழுத்துக்களின் எண்ணிக்கையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது. (பகவத் கீதை ராம அவதாரத்துக்குப் பின் வந்த கிருஷ்ண அவதாரத்தின் போது வழங்கப்பட்டதால், இந்தப் படிகள் பிற்காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம், அல்லது இந்தத் தொடர்பு பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கொள்ளலாம்)

காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களைக் குறிக்கும் வகையில் 24 தூண்கள் கொண்ட காயத்ரி மண்டபத்தில் பெருமாள் சந்நிதி உள்ளது. (திருவரங்கத்தில் பெருமாள் சந்நிதி இருக்கும் இடமம் காயத்ரி மண்டபம் என்று பெயர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.)

பல கோவில்களில் மூலவரை  வெளியிலிருந்தே தரிசிக்க முடியும். திருவரங்கத்திலும், திருவெள்ளறையிலும் (வேறு சில கோவில்களிலும் கூட) பெருமாள் சந்நிதிக்கு நேரே சுவர் அமைக்கப்  பட்டிருப்பதால் பக்க வாசல் வழியே  சந்நிதிக்குள் நுழைந்த பிறகுதான் பெருமாளின் தோற்றம் நம் கண்ணுக்குத் தெரியும்..

பெருமாள் சந்நிதிக்குப்  பின்னே பக்கவாட்டில் இருபுறமும் உத்தராயனம், தட்சிணாயனம் என்று இரண்டு வாசல்கள் உள்ளன. ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயனத்தில் தட்சிணாயன வாசலும், தை முதல் ஆனி வரையிலான உத்தராயன காலத்தில் உத்தராயன வாசல் வழியேயும் சந்நிதிக்குச் செல்ல வேண்டும். (கும்பகோணம் சாரங்கபாணி கோயிலிலும் இது போல் இரண்டு வாசல்கள் உண்டு. வேறு சில கோவில்களிலும் இருக்கலாம்)

இந்த வாசல்களுக்கு 21 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த இரு வாசல்களுக்கு இடையே சுவற்றில் கங்காதரன், பிரம்மா,  விஷ்ணு சிவன், கோவர்த்தனகிரி ஆகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சந்நிதிக்கு அருகில் சென்றவுடனேயே  பெருமாளின் பிரும்மாண்டமான தோற்றம் நம்மை பிரமிக்க வைக்கிறது. சந்நிதி வாசலில் நாழிகேட்டான் வாசல் என்ற பெயர் காணப்படுகிறது. துவாரபாலகர்களாக பத்ரன், சுபத்ரன் நிற்கின்றனர்.

மூலவரின் திருநாமம் புண்டரீகாக்ஷன் மற்றும் செந்தாமரைக் கண்ணன். பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டும் உயர்ந்த, கம்பீரமான, நின்ற திருக்கோலம்.

பெருமாலின் தலைக்கருகே இரு புறமும் சூரிய சந்திரர்கள் சாமரம் வீசிக்கொண்டிருக்க, கீழே ஒரு புறம்  கருடனும் மறுபுறம் மனித உருவம் கொண்ட ஆதிசேஷனும் பெருமாளை வணங்கியபடி நின்கின்றனர்.  அவர்களுக்கு முன்புரமாக ஒரு புறம் மார்க்கண்டேய முனிவரும் மறுபுறம் பூமிப்பிராட்டியும் மண்டியிட்டு அமர்ந்திருக்கின்றனர் (ஒப்பிலியப்பன் கோயிலில் உள்ளது போல்). உற்சவ மூர்த்திக்கு அருகே பங்கஜவல்லித் தாயாரும் நிற்கிறார்.

சந்நிதியை விட்டு வெளியே வர மனமில்லை. அவ்வளவு அற்புதமாகக் காட்சியளிக்கிறார் புண்டரீகாட்சர். சந்நிதிக்கு வெளியே ராமர், கிருஷ்ணர், அன்னமூர்த்தி, நாதமுனிகள், உய்யக்கொண்டார், எம்பெருமானார் (ராமானுஜர்), கூரத்தாழ்வார், எங்களாழ்வான், மணவாள மாமுனிகள் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் வரிசையாக உள்ளன.

வெளியில் சங்கநிதி, பத்மநிதி, கிருஷ்ணன் சந்நிதி, சேனை முதலியார் சந்நிதிகள் உள்ளன.

உட்பிரகாரத்தில் தனிக்கோவில் தாயார், சக்கரத்தாழ்வார், கண் திறந்த ஆஞ்சநேயர் ஆகியோருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன. தனிக்கோவில் தாயாரின் பெயர் செங்கமலவல்லி.

இவை தவிர பிரகாரத்தில் குலசேகர ஆழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், எங்கள் ஆழ்வான்,  தொண்டரடிப்பொடி ஆழ்வார், கூரத்தாழ்வார், தசாவதார மூர்த்திகள், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய சந்நிதிகள்  உள்ளன.

விமானம் - விமலாக்ருதி விமானம்.

கோயிலுக்குள்  பத்ம, வராஹ, மணிகர்ணிகா, குஜஹஸ்தி, கந்தக்ஷீர என்ற  ஐந்து புஷ்கரணிகள் (நீர் நிலைகள்) உள்ளன.

ஸ்தல விருட்சம் - வில்வம்

வெளிப்பிரகாரம் மிகப்பெரியது. இதில் தெற்குப் பிரகாரத்தில் இரண்டு குகைகள் உள்ளன. இவற்றில் மகாலட்சுமியும், மார்க்கண்டேய முனிவரும் தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த குகைகளைத் தாண்டியதும் பெரிய நந்தவனம் உள்ளது,

கோயிலுக்குப் பின்புறம் ஸ்வஸ்திகா வடிவத்தில் ஒரு கிணறு உள்ளது. இதற்கு 4 நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 51 படிகள் உள்ளன

இந்தக்கோயிலில் பெருமாளை விடத்  தாயாருக்கே ஏற்றம். புறப்பாடுகளின் போது தாயாரே முன்பு செல்வார்.

நாதமுனிகளின் சீடரான, உய்யக்கொண்டார், ராமானுஜரின் சீடர்களில் ஒருவரான எங்களாழ்வான் ஆகியோர் அவதரித்தது  இந்தத்   திருத்தலத்தில்தான்.

இவ்வளவு சிறப்புகள் நிறைந்த,  பிரம்மாண்டமும் அழகும் மிகுந்த  இத்திருத்தலத்துக்கு பக்தர்கள் அதிகம் வருவதில்லை என்பது ஒரு குறையே. ஆயினும்  இதனால் நாம் சந்நிதியில் நீண்ட நேரம் நின்று பெருமாளை தரிசிக்க முடிகிறது!

இந்த திவ்ய தேசம் பற்றிப் பெரியாழ்வார்  11 பாடல்களும், திருமங்கை ஆழ்வார் 13 பாடல்களும் பாடியுள்ளனர். பாசுரங்கள் இதோ:

நாலாயிர திவ்ய பிரபந்தம் 
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி 
முதற்பத்து 
ஆறாம் திருமொழி . 
8. உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி உன்னொடு தங்கள்கருத்தாயின செய்துவரும்
கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக் கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறை யாய் மதிள்சூழ் சோலை மலைக்கரசே கண்ண புரத்தமுதே
என்னவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழுலகும் முடையாய் ஆடுக ஆடுகவே.  (71)

இரண்டாம் பத்து 
எட்டாம் திருமொழி 
1. இந்திர னோடு பிரமன் ஈசன் இமையவ ரெல்லாம்
மந்திர மாமலர் கொண்டு மறைந்துஉவ ராய்வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போதுஇது வாகும் அழகனே காப்பிட வாராய். (192)

2. கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின் றபசு வெல்லாம்
நின்றொழிந் தேன்உன்னைக் கூவி நேசமே லொன்று மிலாதாய்
மன்றில்நல் லேல்அந்திப் போது மதிள்திரு வெள்ளறை நின்றாய்
நின்றுகண் டாய்என்தன் சொல்லு நான்உன்னைக் காப்பிட வாராய். (193)

3. செப்போது மென்முலை யார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நானுரப் பப்போய் அடிசிலு முண்டிலை ஆள்வாய்
முப்போதும் வானவ ரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான்ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய். (194)

4. கண்ணில் மணல்கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை யென்றென்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படு கின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோ டேதீமை செய்வாய்
வண்ணமே வேலைய தொப்பாய் வள்ளலே காப்பிட வாராய். (195)

5. பல்லா யிரவர்இவ் வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம்உன் மேலன்றிப் போகாது எம்பிரான் நீஇங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன்மேனி
சொல்லார வாழ்த்தி நின்றேத்திச் சொப்படக் காப்பிட வாராய். (196)

6. கஞ்சங் கறுக்கொண்டு நின்மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை
வஞ்சிப் பதற்கு விடுத்தா னென்பதுஓர் வார்த்தையும்
உண்டு மஞ்சு தவழ்மணி மாட மதிள்திரு வெள்ளறை நின்றாய்
அஞ்சுவன் நீஅங்குநிற்க அழகனே காப்பிட வாராய். (197)

7. கள்ளச் சகடும் மருதும் கலக்கழி யஉதை செய்த
பிள்ளை யரசேநீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய்
பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய். (198)

8. இன்ப மதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்பக் களிறட்ட கோவே கொடுங்கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே
செம்பொன்மதிள்வெள் ளறையாய் செல்வத்தி னால்வளர் பிள்ளாய்
கம்பக் கபாலிகாண் அங்குக் கடிதோடிக் காப்பிட வாராய். (199)

9. இருக்கொடு நீர்சங்கில் கொண்டிட்டு எழில்மறை யோர்வந்து நின்றார்
தருக்கேல்நம்பி சந்தி நின்று தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்
திருக்காப்பு நான்உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக்காட்டும் அந்தி விளக்குஇன் றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய். (200)

10. போதமர் செல்வக் கொழுந்து புணர்திரு வெள்ளறை யானை
மாதர்க் குயர்ந்த அசோதை மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன்கொள்ள வல்ல விட்டுசித் தன்சொன்ன மாலை
பாதப் பயன்கொள்ள வல்ல பத்தருள் ளார்வினை போமே. (201)

திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
ஐந்தாம் பத்து 
மூன்றாம் திருமொழி
1. வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை மன்னரை மூவெழுகால்
கொன்ற தேவ,நின் குரைகழல் தொழுவதோர் வகையெனக் கருள்புரியே,
மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போதலர்த்தி,
தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு வெள்ளறை நின்றானே!  (1368)

2. வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற் கருளி,முன் பரிமுகமாய்,
இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ னே எனக் கருள்புரியே,
உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய மாருதம் வீதியின்வாய்,
திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு வெள்ளறை நின்றானே! (1369)

3. வெய்ய னாயுல கேழுடன் நலிந்தவன் உடலக மிருபிளவா,
கையில் நீளுகிர்ப் படையது வாய்த்தவ னே எனக் கருள்புரியே,
மையி னார்தரு வராலினம் பாயவண் தடத்திடைக் கமலங்கள்,
தெய்வ நாறுமொண் பொய்கைகள் சூழ்திரு வெள்ளறை நின்றானே!  (1370)

4. வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக ஐவர்க்கட் கரசளித்த,
காம்பி னார்த்திரு வேங்கடப் பொருப்ப.நின் காதலை யருளெனக்கு,
மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பெய்த,
தீம்ப லங்கனித் தேனது நுகர்திரு வெள்ளறை நின்றானே!   (1371)

5. மான வேலொண்கண் மடவரல் மண்மகள் அழுங்கமுந் நீர்ப்பரப்பில்,
ஏன மாகியன் றிருநில மிடந்தவ னேஎனக் கருள்புரியே,
கான மாமுல்லை கழைக்கரும் பேறிவெண் முறுவல்செய் தலர்கின்ற,
தேனின் வாய்மலர் முருகுகுக் கும்திரு வெள்ளறை நின்றானே.  (1372)

6. பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுதெழ அமுதினைக் கொடுத்தளிப்பான்,
அங்கொ ராமைய தாகிய வாதிநின் அடிமை யையரு ளெனக்கு,
தங்கு பேடையொ டூடிய மதுகரம் தையலார் குழல ணைவான்,
திங்கள் தோய்சென்னி மாடம்சென்றணை திருவெள்ளறை நின்றானே! (1373)

7. ஆறி னோடொரு நான்குடை நெடுமுடி அரக்கன்றன் சிரமெல்லாம்,
வேறு வேறுக வில்லது வளைத்தவ னேஎனக் கருள்புரியே,
மாறில் சோதிய மரதகப் பாசடைத் தாமரை மலர்வார்ந்த,
தேறல் மாந்திவண் டின்னிசை முரல திருவெள்ளறை நின்றானே!  (1374)

8. முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக உம்பர்கள் தொழுதேத்த,
அன்ன மாகியன் றருமறை பயந்தவ னேஎனக் கருள்புரியே,
மன்னு கேதகை சூதக மென்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள்,
தென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு வெள்ளறை நின்றானே! (1375)

9. ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட முழுதினையும்,
பாங்கி னாற்கொண்ட பரமநிற் பணிந்தெழு வேனெனக் கருள்புரியே,
ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண் டுழிதர, மாவேறித்
தீங்கு யில்மிழற் றும்படப் பைத்திரு வெள்ளறை நின்றானே.  (1376)

10. மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு வெள்ளறை யதன்மேய,
அஞ்ச னம்புரை யும்திரு வுருவனை ஆதியை யமுதத்தை,
நஞ்சு லாவிய வேல்வல வன்கலி கன்றிசொல் ஐயிரண்டும்,
எஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை யோர்க்ர சாவார்க்களே.  (1377)

பத்தாம் பத்து 
முதல் திருமொழி
4. துளக்க மில்சுட ரை,அவு ணனுடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய்
அளப்பி லாரமு தையம ரர்க்கருள்
விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே.

சிறிய திருமடல் 
2673. கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்    (1)
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று    (2)
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்    (3)
வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை    (4)
வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே    (5)
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து    (6)
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித்    (7)
தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும்    (8)
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு    (9)
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்   (10)
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்   (11)
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்   (12)
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த   (13)
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு   (14)
ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்   (15)
நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு (16)
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் (17)
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து (18)
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை (19)
சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் (20)
பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் (21)
தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு (22)
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23)
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக் (24)
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் (25)
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் (26)
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன் (27)
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் (28)
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு (29)
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் (30)
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் (31)
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் (32)
பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு (33)
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை (34)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் (35)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர் (36)
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (37)
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல் (38)  (2672)

பெரிய மடல் 
மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை      (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை      (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்      (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத்      (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான்      (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்      (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்      (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்      (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள்
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்      (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க   (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்     (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்     (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த     (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்     (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில்     (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்     (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம்     (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்     (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு     (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே     (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்     (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம்             (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை  வெள்ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80)  (2673)

ஓம் நமோ நாராயணாய !



































































































No comments:

Post a Comment