Tuesday, December 3, 2013

5. ஆச்சாரியர்கள்


வைணவத்தில் ஆச்சாரியருக்குச் சிறப்பான இடம் உண்டு. ஆச்சாரியர் (ஆசான் அல்லது குரு) மூலமே ஆண்டவனை அடைய முடியும் என்பது வைணவக் கோட்பாடு. முதலில் ஆச்சாரியர் அப்புறம்தான் ஆண்டவன் என்று கூடச் சொல்லலாம்.

ஆச்சாரியரின் மகத்துவத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியவர் மதுரகவி ஆழ்வார். இதைப் பற்றி முந்தைய பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன். நம்மாழ்வாரை ஆச்சாரியராக ஏற்றுக் கொண்டவர் இவர். இவர் பாடிய கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற பதினோரு பாசுரங்களும் நம்மாழ்வாரைப் போற்றித்தான்.

இந்தப் பதிகத்தில் (பத்துப் பாடல்கள் கொண்ட தொகுப்பு பதிகம் என்று வழங்கப் படுகிறது) வரும் ஒரு பாசுரம் இது.

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்குஆள்
புக்ககாதல் அடிமைப் பயனன்றே.

இதன் பொருள்:

அறிஞர்களால் மற்றுமே உணரக் கூடிய வேதங்களை, அவற்றின் பொருள் அனைவருக்கும் விளங்கும்படி தமிழில் பாசுரங்களாகப் பாடி, என் மனதில் பதிய வைத்த சடகோபனுக்கு (நம்மாழ்வாருக்கு)ப் பணி செய்வதே என் வாழ்க்கைப் பயன்.

ஆழ்வார்களின் பாசுரங்களுக்குச் சிறப்பான உட்பொருள் உண்டு. 'பிறவிப் பயன்' என்று சொல்லாமல் 'அடிமைப் பயன்' என்று ஏன் சொல்கிறார்? விசிஷ்டாத்வைதத் தத்துவத்தின்படி பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவு எஜமானருக்கும் வேலைக்காரருக்கும் உள்ள உறவு. ஜீவாத்மா பரமாத்மாவுக்கு உரியது. பரமாத்மாவுக்குத் தொண்டு செய்வதே ஜீவாத்மாவின் கடமை. அதனால் அடிமைப் பயன் என்று குறிப்பிடுகிறார் ஆழ்வார். (இது எனது கருத்து. வேதங்களிலும் சாஸ்திரங்களிலும், ஆழ்வார்களின் பாசுரங்களிலும் தேர்ந்த ஞானம் பெற்ற அறிஞர்கள் இதற்கு வேறு சிறப்பான பொருளைக் கூறக்கூடும்.)

ஆச்சாரியர் என்பவர் யார்? வைணவர்கள் அனைவருக்கும் ஆச்சாரியர் விசிஷ்டாத்வைதத் தத்துவைத்தைப் போதித்த ராமானுஜர். அவருடைய ஆச்சாரியர்கள், அவருக்குப் பின் அவர் வழியில் செயல் பட்ட/பட்டு வரும் ஆச்சாரியர்கள் என்று வைணவ ஆச்சாரிய பரம்பரை, நிறுவனங்களின் நிர்வாக அமைப்பைப்போல் பல படிகள் கொண்ட அமைப்பு (hierarchy).

வைணவ ஆச்சாரிய பரம்பரையை விவரிக்கும் ஒரு பாசுரம் இது.

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கி
யான் அடைவேன் அவர் குருக்கள் நிறை வணங்கி
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுகத் திருமகள் என்று இவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.

முதலில் நமக்கு உயிர்கொடுத்த பெற்றோரைச் சரணடைய வேண்டும்
பிறகு நமது பெற்றோர்களின் ஆச்சாரியர்களை (குருக்களை) நம் குருவாக ஏற்று வணங்க வேண்டும். பிறகு இறைவனின் அருளால் நமக்குக் கிடைத்த ராமானுஜரையும், அவருடைய குருக்களான் பெரிய நம்பி, மணக்கால் நம்பி, உய்யக்கொண்டார், ஆளவந்தார் (நாதமுனி) ஆகியோரையும் வணங்க வேண்டும். பிறகு சடகோபன் என்கிற நம்மாழ்வார், சேனைநாதனான விஷ்வக்சேனர், எல்லா நலங்களையும்  அமுதமாக வழங்கும் திருமகள் இவர்களை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகளை வணங்க வேண்டும்.

இந்த ஆச்சாரியர்களின் பட்டியலில் இரண்டு முக்கியமான பெயர்கள் விட்டுப் போயிருப்பதை சிலர் கவனித்திருக்கக்கூடும். வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோரின் பெயர்கள் இதில் இல்லை. காரணம். இந்தப் பாசுரத்தை எழுதியவர் வேதாந்த தேசிகர்! மணவாள மாமுனிகள் இவருக்குப் பின்னால் தோன்றியவர்.



No comments:

Post a Comment