Sunday, October 20, 2013

2. திருமால் வழிபாடு

உலகில் பல மதங்கள் உண்டு. அவற்றை உருவாக்கியவர்களைப் பற்றிய வரலாறு உண்டு. 

எவராலும் படைக்கப்படாமல் இயல்பாகத் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் நிலவி வரும் மதம் இந்து மதம்,

இந்து மதம் ஒரு மதமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. ஒருவன் இந்துவாக "மாறுவதற்கு" எந்த விதச் சடங்குகளும் தேவையில்லை. மத மாற்றச் செயல்களில் ஈடுபாடும் குருமார்களும் இல்லை.

எவர் வேண்டுமானாலும் தன்னை இந்து என்று கருதிக் கொள்ளலாம். கோவிலுக்குப் போயோ, கீதை படித்தோ, பண்டிகைகளைக் கொண்டாடியோ தன்னை இந்து என்று நிரூபிக்க வேண்டியதில்லை.

இந்து மதத்தில் பல பிரிவுகள் உண்டு என்று சிலர் கூறுவார்கள். இவை பிரிவுகள்அல்ல, வழிபாட்டு முறைகள்.

இந்து மத வழிபாட்டு முறைகள்  ஆறு வகையானவை என்று வகுத்திருக்கிறார் ஆதிசங்கரர்.

1. சைவம் (சிவபெருமானை வழிபடுவது)
2, வைணவம் (திருமால் வழிபாடு)
3. சாக்தம் (சக்தி வழிபாடு)
4. காணபத்யம் (விநாயகரை வழிபடுவது)
5. கௌமாரம் (முருகனை  வழிபடுவது)
6. ஸௌர்யம் (சூரிய வழிபாடு)

ஆதிசங்கரர் பல தெய்வங்களைப் பற்றியும் சுலோகங்கள் எழுதியிருந்தாலும், தன மனதில் திருமாலுக்கு மிக உயர்வான இடம் கொடுத்திருந்தார் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

அவர் காசியில் இருந்தபோது தெருவில் நடந்து சென்ற சில பண்டிதர்கள் ஒரு கடினமான இலக்கண விதியைப் பற்றி  விவாதித்துக் கொண்டே சென்றனர். 

ஆதிசங்கரர் அவர்களை நிறுத்தி, 'கோவிந்தனைத் துதியுங்கள். உங்கள் இறுதிக் காலத்தில் இந்த இலக்கண அறிவு உங்களுக்குத் துணை நிற்காது' என்று கூறி 'பஜ கோவிந்தம்' என்று திருமாலின் மீது ஒரு அற்புதமா சோஸ்திரத்தை இயற்றினார்.

ஒருமுறை அவர் கூடு விட்டுக் கூடு பாய்ந்து இறந்து போன ஒரு அரசனின் உடலுக்குள் புகுந்திருந்தபோது அவரது மதக் கருத்துக்களை ஏற்காத காபாலிகர்கள் என்ற மதத் தீவிரவாதிகள் அவரது உடலைக் கொளுத்த முயன்றனர். 

அப்போது ஆதிசங்கரர் அடைக்கலம் தேடியது திருமாலின் அவதாரங்களில் ஒருவரான நரசிம்மரைத்தான். நரசிம்மரை  தியானித்து "லக்ஷ்மி நரஸிம்ஹ கராவலம்பம்'" என்ற ஸோஸ்திரத்தைப் பாடினார். நரசிம்மரின் அருளால் எரிந்து போன அவரது உடல் மீண்டும் முழுமை பெற்றது.

அவரது தாய் மரணப் படுக்கையில் இருந்தபோது  தன் அன்னை மோட்சம் அடைவதற்காகத்   திருமாலைக் குறித்து அவர் அருளிய துதி இது.

"வனமாலி கதி சார்ங்கி சங்கீ சக்ரீச நந்தகி
ஸ்ரீமான் நாராயணு விஷ்ணுர் வாசுதேவோ அபிரக்ஷது."

'வனமாலி என்ற மாலையை அணிந்து சங்கு, சக்கரம், சார்ங்கம் என்னும் வில் ஆகியவற்றுடன் விளங்கும் திருமால்  என்னைக் காக்க வேண்டும்' என்ற பொருள் கொண்ட இந்தத் துதியைக் கேட்டபடியே உயிர் துறந்தார் அவர் தாய்.

இந்தச் செய்யுள் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில், விஷ்ணுவின் ஆயிரத்தெட்டு நாமங்களும் முடியும் இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆதிசங்கரர் எழுதியுள்ள இன்னொரு ஸ்லோகம் இது.

"ஆகாஸாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம்
ஸர்வ தேவ நமஸ்காரஹ கேசவம் ப்ரதிகச்சதி."

'விண்ணிலிருந்து விழும் தண்ணீர் எல்லாம் கடலைத்தான் சென்றடையும். அதே போல நாம் எந்தக் கடவுளை வழிபட்டாலும், அது கேசவனைதான் (திருமாலைத்தான்) சென்றடையும்.' என்பது இதன் பொருள். கேசவன் என்பது திருமாலின் பன்னிரு திருநாமங்களில் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.

ராமானுஜரைப் போல் ஆதிசங்கரர் ஒரு வைணவ ஆச்சார்யராகக் கருதப்படாவிட்டாலும், அவர் திருமால் வழிபாட்டுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை மேற்கண்ட உதாரணங்களிலிருந்து அறியலாம்.

எந்த ஒரு செயலையும் துவங்குமுன் 'இந்தச் செயல் திருமாலின் விருப்பத்தினால், திருமாலுக்காகத் திருமாலாலேயே செய்யப்படுகிறது' என்று சொல்லித் துவங்குவது வைணவ மரபு.

அதுபோல,  இந்தப்  பதிவும் திருமாலின் விருப்பத்தினால், திருமாலுக்காகத் திருமாலாலேயே செய்யப்படுகிறது என்று கூறி இந்த வலைப் பதிவைத் தொடர்கிறேன்.

No comments:

Post a Comment