தரிசனம் செய்த நாள் - 27/08/2016 (சனிக்கிழமை)
தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 226. திருநீரகம் (79)
காலத்தி லெல்வகைநீ காட்டினாய்? - ஞாலத்துள்
நீரகத்தாய்! நின்னடியே னெஞ்சகத்தாய்! நீண்மறையின்
வேரகத்தாய்! வேதியர்க்கு மீண்டு (79)
- பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி'
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலுக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்தக் கோயிலுக்குள் நான்கு திவ்ய தேசங்கள் இருக்கின்றன! திருஊரகம், திருநீரகம், திருக்காரகம், திருக்கார்வானம் ஆகிய நான்கு.
"நீரின்றி அமையாது உலகு" என்பது வள்ளுவர் வாக்கு. நீரின் பெருமையை எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்துள்ளது இந்த திவ்ய தேசம் என்று கொள்ளலாம்.
திருநீரகம் உலகளந்த பெருமாள் கோயிலின் பிரகாரத்தில் உள்ள ஒரு சந்நிதி. 16 கால் மண்டபத்துக்கு அருகே உள்ள இந்தச் சந்நிதியில் நீரகத்துப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இவர் நீரகத்தான், ஜெகதீஸ்வரர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். உற்சவர் இல்லை. (பல வலைப்பதிவுகளில் மூலவர் விக்கிரகம் இல்லை, உற்சவர் மூலவராகக் காட்சி அளிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பார்ப்பதற்கு, இந்த விக்கிரகம் மூலவர் விக்கிரகமாகவே தோற்றமளிக்கிறது!) தாயாரின் பெயர் நிலமங்கைவல்லி நாச்சியார். தாயார் விக்கிரகம் தனியே இல்லை. பெருமாளின் திருமார்பில் எப்போதும் இடம் பெற்றிருக்கும் தாயாரைத்தான் இந்தப் பெயர் குறிக்கிறது என்று நினைக்கிறேன்.
பிரளய காலத்தில் கண்ணன் ஆலிலையில் மிதந்து வரும் காட்சியைக் காண விரும்பி, மார்க்கண்டேய மகரிஷி , பத்ரா நதிக்கரையில் தவம் செய்தார். பகவான் மாயையினால் பிரளயக் காட்சியை உருவாக்கி ஆலிலைக் கண்ணனாக மார்க்கண்டேயருக்குக் காட்சி கொடுத்தார்.
ஒரு சிறிய ஓட்டை இருந்தாலும் நீர் அதில் புகுந்து விடும். அது போல் நம் மனதில் சிறிதளவு பக்தி இருந்தாலும், பகவான் நமது மனதில் வந்து குடி புகுந்து விடுவார். பகவானின் நீர்மை குணத்தைக் காட்டும் திருக்கோலம்தான் திருநீரகம் என்றும் கொள்ளலாம்.
விமானம் - ஜெகதீஸ்வர விமானம்
தீர்த்தம் - அக்ரூர தீர்த்தம்
திருநீரகம் பற்றித் திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரம் பாடியிருக்கிறார். அந்தப் பாசுரம் இதோ:
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திரு நெடுந்தாண்டகம்
2058 நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே (8)
இந்த திவ்ய தேசத்தின் புகைப்படங்களை இங்கே காணலாம்.
இந்த திவ்ய தேசத்தை நான் தரிசித்த நாள்: 27/08/2016.
ஓம் நமோ நாராயணாய!
No comments:
Post a Comment