தரிசனம் செய்த நாள்: 30.08.18 வியாழக்கிழமை.
4. திருவன்பில்
போற்றிசெய வோர்குடைக்கீழ்ப் பொன்னாடு மிந்நாடு
நாற்றிசையு மாண்டாலு நன்கில்லை - தோற்றமிலா
எந்தையன்பி லாதி யிணைத்தா மாரையடிக்கே
சிந்தையன்பி லாதார் சிலர். (4)
- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி
திருச்சியிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலும், லால்குடியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருஅன்பில் திவ்யதேசம்.
திருச்சியிலிருந்து பஸ் மூலம் வரலாம். கும்பகோணத்திலிருந்து கல்லணை செல்லும் பஸ்களும் அன்பில் வழியே செல்லும்.
கொள்ளிடத்தின் வடக்குக் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் சோழ மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, பின்பு வந்த சோழ மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆகியோரால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
திருச்சியிலிருந்து பஸ் மூலம் வரலாம். கும்பகோணத்திலிருந்து கல்லணை செல்லும் பஸ்களும் அன்பில் வழியே செல்லும்.
கொள்ளிடத்தின் வடக்குக் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் சோழ மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, பின்பு வந்த சோழ மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆகியோரால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
ராஜ ராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழர் இந்தப் பெருமாளிடம் அதிக ஈடுபாடு கொண்டவர். போருக்குப் போகும் முன் இந்தப் பெருமாள் சந்நிதியில் தன் வாளை வைத்து ஆசி பெறுவது அவர் வழக்கம் என்று கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்கியின் அமர காவியமான பொன்னியின் செல்வனைப் படித்தவர்களுக்கு சுந்தர சோழரை நினைவிருக்கும். அவருடைய அமைச்சரான அநிருத்த பிரம்மராயர் இந்த ஊரைச் சேர்ந்தவர். அவரும் பொன்னியின் செல்வனில் ஒரு முக்கிய பாத்திரமாக வருகிறார். கல்கி இவரை ஒரு வைணவர் என்றே சித்தரித்திருக்கிறார்.
ஒருமுறை பிரம்மா தான்தான் மிகவும் அழகானவர் என்று கர்வப்பட்டபோது மகாவிஷ்ணு பேரழகு படைத்த ஒரு வாலிபனாக அவர் முன் தோன்றினார். பிரம்மா தன் தவறை உணர்ந்தார். அழகு முக்கியமல்ல, அன்பு நிறைந்த உள்ளம்தான் முக்கியம் என்று பிரம்மாவுக்கு மகாவிஷ்ணு உணர்த்தினார். அதனால் இந்தத் திருத்தலம் அன்பில் என்று பெயர் பெற்றது.
அழகான தோற்றத்துடன் பிரம்மாவுக்குக் காட்சி அளித்ததால் இங்கே எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கு சுந்தரராஜன் என்று பெயர். தமிழில் வடிவழகிய நம்பி என்று அழைக்கப்படுகிறார்.
தாயார் சுந்தரவல்லி என்று அழைக்கப்படுகிறார். (என் பாட்டியின் - அம்மாவின் அம்மாவின் சொந்த ஊர் இது. அவருடைய பெயர் சுந்தரவல்லி. இந்த ஊரில் பல பெண்களுக்கு சுந்தரவல்லி என்று பெயர் வைக்கும் வழக்கம் இருந்ததாக அர்ச்சகர் குறிப்பிட்டார்.)
சுதபா என்ற முனிவர் இங்கு தண்ணீருக்குள் அமிழ்ந்த நிலையில் தவம் செய்து கொண்டிருந்ததால் இங்கே வந்த துர்வாசரை கவனிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசர் 'தண்ணீருக்குள் இருந்து கொண்டு என்னை கவனிக்கத் தவறியதால், நீ தண்ணீருக்குள் வாழும் தவளையாகப் போ' என்று சபித்தார். தவளையாக மாறிய பிறகும் இங்கு அவர் தொடர்ந்து தவம் செய்து வந்தார். பெருமாள் இவருக்குக் காட்சி அளித்து சாபத்திலிருந்து விடுவித்தார். தவளையாக இருந்ததால் இவருக்கு மண்டூக ரிஷி என்ற பெயர் ஏற்பட்டது. (சம்ஸ்கிருதத்தில் மண்டூகம் என்றால் தவளை.) .
ஸ்தல புராணங்களின் அடிப்படையில் இந்த ஊருக்கு பிரம்மபுரி, மண்டூகபுரி, திருமாலயன்துறை ஆகிய பெயர்களும் வழங்கப்படுகின்றன.
கிழக்கு நோக்கிய மூன்று அடுக்கு ராஜகோபுரத்துடனும், வலுவான மதிள் சுவர்களுடனும் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது வடிவழகிய நம்பி ஆலயம்.
மூலவர் - சுந்தரராஜப் பெருமாள். கிடந்த திருக்கோலம். புஜங்க சயனம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். நாபிக் கமலத்தில் பிரும்மா.
உற்சவர்- வடிவழகியநம்பி
தாயார் - சுந்தரவல்லி, அழகிய வல்லி நாச்சியார். பிரகாரத்தில் பெருமாள் சந்நிதிக்கு வலப்புறத்தில் தாயார் சந்நிதி உள்ளது.
விமானம் - தாரக விமானம்.
புஷ்கரணி-- கொள்ளிடம், மண்டூக புஷ்கராணி. (மண்டூக புஷ்கரணி கோவிலுக்கு சற்றுத் தொலைவில் அமைந்துள்ளதாக அர்ச்சகர் தெரிவித்தார்.)
பெருமாள் சந்நிதிக்கு வெளியே, மண்டபத்தில் சுவற்றை ஒட்டி யோக நரசிம்மர், லட்சுமி நாராயணன், வேணுகோபாலன், ஆஞ்சநேயர் விக்கிரகங்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள், ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் விக்கிரகங்களும் உள்ளன.
மண்டபத்தில் நுழைந்ததும் நமக்கு வலப்புறம் (பெருமாள் சந்நிதிக்கு இடப்புறம்) ஆண்டாள் சந்நிதி உள்ளது.
பிரகாரத்தின் இறுதியில், கோவில் வாயிலுக்கு அருகே, நமக்கு வலப்புறமாக விஷ்வக்சேனர் சந்நிதி உள்ளது.
திருமால் பாம்பணை மேல் பள்ளி கொண்டிருக்கும் ஏழு தலங்களில் அன்பிலும் ஒன்று என்று திருமழிசை ஆழ்வார், நான்முகன் திருவந்தாதியில் குறிப்பிடுகிறார்.
மற்றவை திருவரங்கம், திருக்குடந்தை (சாரங்கபாணிப் பெருமாள் கோவில்), திருப்பேர் நகர் (கோவிலடி), திருவெஃகா (யதோத்காரிப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம்), திரு எவ்வுள் (திருவள்ளூர்), திருப்பாற்கடல்.
அன்பின் பெருமையைக் கூறும் இந்தத் தலத்துக்குப் பொருந்தும் விதத்தில், இந்தக் கோவில் அர்ச்சகர் மிகவும் அன்புடனும், ஆர்வத்துடனும் கோவில் பற்றிய விவரங்களைக் கூறினார்.
அன்பினால் ஒரு அற்புதமான செயலையும் செய்தார். நான் திருச்சியிலிருந்து பஸ் மூலம் அன்பிலுக்கு வந்திருந்தேன். நான் வந்திருந்த சமயம் ஒரு தம்பதி திருச்சியிலிருந்து காரில் வந்திருந்தனர்.
நான் கிளம்பும்போது அர்ச்சகர் அவர்களிடம், ':நீங்கள் இவரை உங்கள் காரிலேயே திருச்சிக்கு அழைத்துப் போகலாமே" என்று கேட்டுக் கொள்ள, அவர்களும் உடனே, மனமுவந்து அதை ஏற்றனர். நான் பஸ்ஸில் போவதாகக் கூறியும், அவர்கள் வற்புறுத்தி என்னை அவர்கள் காரில் அழைத்துச் சென்றனர்.
அர்ச்சகரும், அந்த தம்பதியும் என் மீது அன்பைக் காட்டி என்னை நெகிழ வைத்தது விட்டனர்.
கோவிலின் அமைப்பையும், மேலும் பல விவரங்களையும் இந்த வீடியோவில் கண்டு மகிழலாம்.
இந்த திவ்ய தேசம் திருமழிசை ஆழ்வாரால் ஒரு பாசுரத்தில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
நாலாயிர திவ்ய பிரபந்தம்
மூன்றாம் ஆயிரம்
இயற்பா
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
36. நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள்
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தன் ஆவான் (2416)
ஓம் நமோ நாராயணாய !
வடிவழகிய நம்பி ...ஆஹா அருமையான தகவல்களுடன் சிறப்பான தரிசனம்.
ReplyDeleteThank you.
Delete