Saturday, August 6, 2016

25. திவ்யதேச தரிசன அனுபவம் 5. திருநீர்மலை (91)

தரிசனம் செய்த நாள்: 06.08 2016
தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
18. திருநீர்மலை (91)

இரங்கு முயிரனைத்து  மின்னருளாற் காப்பான்
அரங்கனொருவனுமே யாதல் - கரங்களால்
போர்மலைவான் வந்த புகழவாணன் காட்டினான் 
நீர்மலைவா ழெந்தையெதிர் நின்று (91)
    -  பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி.'

திருநீர்மலை திருத்தலத்தின்மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. காரணம் தெரியாது. சிறு வயதில் ஓரிரு முறை இக்கோவிலுக்குச் சென்று வந்ததாக ஒரு நினைவு. மலைக்கோவில் என்பதால் அப்போதே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம். சில பழைய தமிழ் சினிமாக்களில் ரகசியத் திருமணங்கள் இந்தக் கோவிலில்தான் நடப்பதாகக் காட்டுவார்கள்!

சுமார் பதினைந்து அல்லது இருபது  வருடம் முன்பு என் தாயாருடன், ஒருமுறை இக்கோவிலுக்குப் போயிருக்கிறேன். அதற்குப் பிறகு இப்போதுதான் (6/8/2016) போகிறேன்.

திருநீர்மலை சென்னை பல்லவரத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோயில் வாசல் வரை பஸ் செல்கிறது. தாம்பரம், பல்லாவரம், விமான நிலையம் போன்ற இடங்களிலிருந்து டாக்சியில் வரலாம்.

சாலையின் ஒரு பக்கம் கோயில், எதிர்ப்பக்கம் திருக்குளம்.

மலை அடிவாரத்தில் ஒன்றும், மேலே ஒன்றுமாக இரண்டு  கோயில்கள். அடிவாரத்தில் இருப்பவர் நீர்வண்ணப் பெருமாள். இவர்தான் ஸ்தலாதிபதி. ஆயினும் மேலே இருக்கும் ரங்கநாதர் பெயராலேயே (ரங்கநாதபி பெருமாள் கோயில்) இக்கோயில் குறிப்பிடப்படுகிறது.

மலை மீதுள்ள ரங்கநாதர் சந்நிதிதான் மிகப் புராதனமானது. பிருகு, மார்க்கண்டேயர் ஆகிய இரு முனிவர்களும் ஸ்ரீரங்கத்தில்  ரங்கநாதரைச் சேவித்து விட்டு வரும்போது அவரைப் பற்றிய நினைவிலேயே வந்தனர். இந்த ஊருக்கு வந்தபோது ரங்கநாதரை மீண்டும் தரிசிக்க வேண்டும் என்று அவர்கள் வேண்ட அவர்களுக்காக ரங்கநாதர் இங்கே எழுந்தருளினார்.

மலை மீது உள்ள கோயிலில் ரங்கநாதர், சாந்த நரசிம்மர், திரிவிக்கிரமர் ஆகிய மூன்று மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.

ராமாயணம் எழுதிய வால்மீகி இந்தக் கோயிலுக்கு வந்து மலை மீது இருக்கும் ரங்கநாதர், நரசிம்மர், திரிவிக்கிரமர் ஆகியோரைத் தரிசித்த்து வீட்டுக் கீழே வந்தார். அப்போது அவருக்கு ராமபிரானைக்  கல்யாணக் கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் வந்தது. அவர் ஆவலைப் பூர்த்தி செய்யும் விதத்தில் ரங்கநாதர் ராமராகவும், ரங்கநாயகித்தாயார் சீதையாகவும், பாம்பணையாக இருந்த ஆதிசேஷன் லக்ஷ்மணனாகவும், சங்கும் சக்கரமும் பரத சத்ருக்னர்களாகவும், கருடன் ஆஞ்சநேயராகவும் தோற்றம் எடுத்து வால்மீகிக்குக் காட்சி அளித்தனர். அதன்பிறகு நீர்வண்ணப் பெருமாளாகவும் அவருக்கு பகவான் காட்சி கொடுத்தார். வால்மீகியின் வேண்டுகோளை ஏற்று ராமபிரான் இங்கே கல்யாணராமனாகக் கோயில் கொண்டார்.  வால்மீகிக்குப்  பெருமாள் நீர்வண்ணனாகவும்  காட்சியளித்ததால் நீர்வண்ணப்பெருமாளாகவும் இங்கே எழுந்தருளியிருக்கிறார்.

இந்தக்கோயில் தானாகத் தோன்றிய எட்டு கோயில்களில் (ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம்) ஒன்று. (மற்றவை ஸ்ரீரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம், நைமிசாரண்யம், சாளக்கிராமம், புஷ்கரம், பத்ரிகாஸ்ரமம்).

கீழ்க் கோவிலுக்குப் பக்கத்தில் ஆண்டவன் ஆசிரமத்தால் நிறுவப்பட்ட வேதாந்த தேசிகர் (நிகமாந்த மகாதேசிகன்) சந்நிதி இருக்கிறது.

கீழ்க்கோவிலில் ராமர், நீர்வண்ணப்பெருமாள்  ஆகிய இரண்டு பிரதான சந்நிதிகள் இருப்பதால், ராஜகோபுரம் ராமர் சந்நிதிக்கு எதிரேயும், கொடிமரமும் (த்விஜஸ்தம்பம்) பலிபீடமும் நீர்வண்ணப்பெருமாள் சந்நிதிக்கு எதிரேயும் இருக்கின்றன.

நீர்வண்ணப்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் காட்சி தருகிறார். பெருமாளுக்கும் தாயாருக்கும் வலப்புறமாகத் தெற்கு நோக்கியபடி வால்மீகி நிற்கிறார். இது சுயம்பு (தானே உருவான) விக்கிரகம் என்று கூறப்படுகிறது.

சந்நிதியிலிருந்து வெளியே வந்தால் ஒரு கண்ணாடி அறையில்,  மேலே எழுந்தருளியிருக்கும் ரங்கநாதரின் உற்சவ மூர்த்தியான அழகிய மணவாளர் காட்சி தருகிறார். கண்ணாடி அறையைத் தாண்டி வந்தால் ஆழ்வார்களின் சந்நிதி (பெருமாள் சந்நிதிக்கு எதிர்ப்புறத்தில்.)

பிரகாரத்தில் முதலில் தாயார் சந்நிதி. தாயாருக்கு அணிமாமலர் மங்கை என்று அழகான தமிழ்ப் பெயர். பிறகு பரமபதவாசல். அதை அடுத்து ஆண்டாள் சந்நிதி. ஆண்டாள் சந்நிதிக்குப் பக்கத்தில் ஒரு துளசி மாடம் இருக்கிறது.

நீர்வண்ணப் பெருமாள் சந்நிதிக்கு அருகே செங்குத்தான திசையில் கல்யாண ராமர் சந்நிதி. ராமர் சந்நிதியும், ஆண்டாள் சந்நிதியும் பூட்டப்பட்டிருந்ததால் கம்பிகள் மூலம்தான் தரிசனம் செய்ய முடிந்தது. ராமர் சந்நிதிக்கு எதிரே தனி மண்டபத்தில் உயரமான ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

கீழே தரிசனம் முடித்துக்கொண்டு படிக்கட்டுகலில் ஏறி மேலே செல்ல வேண்டும். சுமார் 300 படிகள் இருக்கலாம். 10, 15 படிகள் ஏறியதும் உட்கார்ந்து இளைப்பாறி விட்டுப் போக வசதியாத திண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

20, 30 படிகள் தாண்டியதும், வலப்புறத்தில் சற்று உள்ளே தள்ளி பக்த ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது.

மேலே உள்ள கோவிலின் முகப்பில் கல்கி மண்டபம். முதலில் ரங்கநாதர் சந்நிதி. தெற்கு நோக்கிய புஜங்க சயனம். நாபிக் கமலத்தில் பிரும்மாவும், காலடியில் உபய நாச்சியார்களும் உள்ளனர். உற்சவ மூர்த்திக்குப் பக்கத்தில் தனியாக ஒரு தயார் இருக்கிறார். ரங்கநாதர் சந்நிதியில் மார்க்கண்டேயரும், பிருகு முனிவரும் இருப்பதாக ஒரு வலைத்தளத்தில் படித்தேன். கோயிலிலிருந்து திரும்பியபிறகுதான் இதைப்  படித்தேன். கோயிலில் இந்த முனிவர்களை தரிசிக்கவில்லை. அர்ச்சகர்களும் இவர்கள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

(கீழே நீர்வண்ணப்பெருமாள் சந்நிதியில் வால்மீகி இருப்பது கூட எனக்கு முதலில் தெரியாது. அணிமாமலர்மங்கைத் தாயார் சந்நிதி அர்ச்சகரிடம் வால்மீகியின் சந்நிதி எங்கே இருக்கிறது என்று கேட்டபோது நீர் வண்ணப்பெருமாள் கோயில் சந்நிதியில்தான் இருக்கிறது என்று அவர் சொன்னதும்தான் மீண்டும் ஒருமுறை நீர்வண்ணப்பெருமாள் சந்நிதிக்குச் சென்று வால்மீகியைத் தரிசித்தேன். ஒப்பிலியப்பன் கோயில், திருச்சேறை ஆகிய திவ்யதேசங்களில் அர்ச்சகர்கள் பொறுமையாக விவரம் சொல்கிறார்கள். சென்னைக்கோவில்களில் இது போன்று செய்வதில்லை. இது சென்னை நகரின் 'பண்பாட்டுத் தாக்கத்தின்' காரணமாகக்கூட இருக்கலாம்!)

பெருமாள் சந்நிதிக்கு வெளியில் பக்கத்திலேயே கிழக்கு நோக்கிய முகத்துடன் ரங்கநாயகித் தாயார் சேவை சாதிக்கிறார்.

ரங்கநாதர் சந்நிதியை  ஒட்டியபடியே உள்ள பிரகாரத்தில் சென்றால் திரிவிக்கிரமர், சாந்த நரசிம்ம மூர்த்தி ஆகிய இருவரையும் தரிசிக்கலாம். இந்தச் சந்நிதிகளும் பூட்டப்பட்டுத்தான் இருந்தன. கம்பி வழி தரிசனம்தான். அர்ச்சகர் தட்டுப்பாடா அல்லது இந்தச் சந்நிதிகள் குறிப்பிட்ட நேரங்களில்தான் திறக்கப்படுமா என்பது தெரியவில்லை.

சாந்த நரசிம்ம மூர்த்தி பிரஹ்லாதனுக்காகத் தன்  உக்ரத்தை விட்டு விட்டு சாந்தமாகக் காட்சி அளிக்கிறார். இவரை பாலநரசிம்மர் என்றும் அழைக்கிறார்கள். இருக்குப் பின்னே உக்ர நரசிம்மர் உருவம் இருப்பதாகவும், அவரையும் தரிசிக்கலாம் என்றும் மற்றோரு வலைத்தளத்தில் படித்தேன். இந்தத் தகவலும் நான் கோயிலுக்குச் சென்று திரும்பிய பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது.

தரிசனம் முடித்து விட்டுக் கோயிலிலிருந்து சில படிகள் இறங்கினால் ஒரு வெளிப்பிரகாரம். அங்கே சிறியதாக ஆதிசேஷன் சந்நிதி இருக்கிறது. பிரதட்சிணம் செய்து கொண்டே மலையைச் சுற்றியுள்ள   காட்சிகளை ரசிக்கலாம். இன்னும் நிறைய பச்சை மரங்களும், புல்வெளிகளும், காலி மனைகளும் இருப்பது சற்று ஆறுதலாக இருந்தது.


தானே தோன்றிய தலம் என்பதைத் தவிர இந்தக் கோயிலுக்கு இன்னும் பல   சிறப்புகள் உண்டு. கீழே நீர்வண்ணப்பெருமாள் நின்ற திருக்கோலத்திலும் , மேலே நரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்திலும், ரங்கநாதர் கிடந்த திருக்கோலத்திலும், திரிவிக்கிரமர் நடந்த திருக்கோலத்திலும் காட்சி தருகிறார்கள். 'நின்றான், இருந்தான்,கிடந்தான், திரிந்தான்' என்று வர்ணிக்கிறார் திருமங்கை ஆழ்வார்.

இந்தக் கோயிலைத் தரிசித்தால், அது நாச்சியார் கோயில் (ஸ்ரீனிவாசன் - நின்ற திருக்கோலம்), திருவாலி (நரசிம்மர் - இருந்த திருக்கோலம்), திருக்குடந்தை (சார்ங்கபாணி - கிடந்த திருக்கோலம்), திருக்கோவலூர் (திரிவிக்கிரமன் - நடந்த திருக்கோலம்) ஆகிய நான்கு திருத்தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும் என்று திருமங்கை ஆழ்வாரும், திருப்பதி, ஸ்ரீரங்கம் ஆகிய தலங்களைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்று பூதத்தாழ்வாரும் கூறுகின்றனர்.

துவாபர யுகத்தில் இவ்வுலகில் அஹோபிலம், திருநீர்மலை ஆகிய இரண்டு மலைகள் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரளயத்தின் முடிவில் அர்ஜுனனுக்கு நரசிம்மர் இங்கே ராஜசூய யாகம் மூலம் காட்சியளித்தார்.

இந்த விவரங்கள் கோயிலில் உள்ள ஒரு பலகையில் எழுதப்பட்டுள்ளன.

ஒரு காலத்தில் இந்த மலை நீர் சூழ்ந்து காணப்பட்டதால் இந்த இடம் 'திருநீர்மலை' என்று அழைக்கப்பட்டதாம். பிரம்மாண்ட புராணத்தில்  இந்தத் தலம் தோயாத்ரி  என்று  குறிப்பிடப்பட்டிருக்கிறது. சம்ஸ்கிருதத்தில் தோயம் என்றால் 'நீர்,' 'அத்ரி' என்றால் மலை. இது மருவி தோத்தாத்ரி என்று ஆகியது.

புஷ்கரணியின் பெயர்  மணிகர்ணிகா. இந்த புஷ்கரணிக்குள், நான்கு தீர்த்தங்கள் இருப்பதாக ஐதீகம். க்ஷீர புஷ்கரணி (ரங்கநாதர்), காருண்ய புஷ்கரணி (நீர்வண்ணர், ராமர்), சித்த புஷ்கரணி (திரிவிக்கிரமர்), ஸ்வர்ண புஷ்கரணி  (சாந்த நரசிம்மர்).

இந்தக் கோயிலின் பல அருமையான புகைப்படங்களைகே காண கீழே கிளிக் செய்யவும்.
புகைப்படங்கள், விவரங்கள்

திருமங்கை ஆழ்வார் இந்தக் கோயிலைத் தரிசிக்க வந்தபோது இந்த மலையை நீர் சூழ்ந்திருந்ததால் ஆறு மாதம் இங்கே தங்கி, நீர் வடிந்ததும் தரிசனம் செய்தார். இதை உறுதிப்படுத்துவது போல், இவ்வூருக்கு அருகே திருமங்கையாழ்வார்புரம் என்ற பகுதி உள்ளது.


திருமங்கையாழ்வார் இந்த திவ்ய தேசம் பற்ற 19 பாடல்களும், பூதத்தாழ்வார் 1 பாடலும் பாடியிருக்கின்றனர். அவர்கள் பாடிய பாசுரங்களைக் கீழே காணலாம்.





                                                    
நாலாயிர திவ்ய பிரபந்தம்
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருநீர்மலை
1077 அன்று ஆயர் குலக் கொடியோடு அணி மா
      மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு
      உறையும் இடம் ஆவது-இரும் பொழில் சூழ்
நன்று ஆய புனல் நறையூர் திருவாலி
      குடந்தை தடம் திகழ் கோவல்நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (1)
 
1078 காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு
      அரையன்னது கண்டு அவன் நிற்க முனே
மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும்
      அது அன்றியும் முன் உலகம் பொறை தீர்த்து
ஆண்டான் அவுணன்-அவன் மார்வு-அகலம்
      உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய்
நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (2)
 
1079 அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து
      அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள்
      பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்
பல மன்னர் பட சுடர் ஆழியினைப்
      பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர்
நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (3)
 
1080 தாங்காதது ஓர் ஆள் அரி ஆய் அவுணன்-
      தனை வீட முனிந்து அவனால் அமரும்
பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து
      அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில்
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி
      பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (4)
 
1081 மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு
      அணை கட்டி வரம்பு உருவ மதி சேர்
கோல மதிள் ஆய இலங்கை கெட
      படை தொட்டு ஒருகால் அமரில் அதிர
காலம் இது என்று அயன் வாளியினால்
      கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்
நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (5)
 
1082 பார் ஆர் உலகும் பனி மால் வரையும்
      கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு
ஆராது என நின்றவன் எம் பெருமான்
      அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அப்
பேரானை முனிந்த முனிக்கு அரையன்
      பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்
நீர் ஆர் பெயரான் நெடுமால்-அவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (6)
 
1083 புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்
      புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன்
நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து
      அது அன்றியும் வென்றி கொள் வாள் அவுணன்
பகராதவன் ஆயிரம் நாமம் அடிப்
      பணியாதவனை பணியால் அமரில்
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான்-அவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (7)
 
1084 பிச்சச் சிறு பீலி பிடித்து உலகில்
      பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால்
      அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய்
நச்சி நமனார் அடையாமை நமக்கு
      அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும்- அவற்கு
      இடம் மா மலை ஆவது- நீர்மலையே             (8)
 
1085 பேசும் அளவு அன்று இது வம்மின் நமர்
      பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசம் அது செய்திடும் ஆதன்மையால்
      அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல்
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்-
      மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதிஇல்
நீசர்-அவர் சென்று அடையாதவனுக்கு
      இடம் மா மலை ஆவது-நீர்மலையே             (9)
 
1086 நெடுமால்-அவன் மேவிய நீர்மலைமேல்
      நிலவும் புகழ் மங்கையர்-கோன் அமரில்
கட மா களி யானை வல்லான் கலியன்
      ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு உடனே
விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும்
      எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்
      குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே             (10)

 இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருவிடவெந்தை தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் இரங்கல்
1114 அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு
      அழியுமால் என் உள்ளம் என்னும்
புலம் கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்
      போதுமோ நீர்மலைக்கு என்னும்
குலம் கெழு கொல்லிக் கோமள வல்லி
      கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய்?
      -இடவெந்தை எந்தை பிரானே             (8)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருநறையூர்:5
1520 ஓடா அரி ஆய் இரணியனை ஊன் இடந்த
சேடு ஆர் பொழில் சூழ் திருநீர்மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாள்தோறும் நாடி நறையூரில் கண்டேனே             (4)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருநறையூர்:8
1553 கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திருநீர்மலை நித்திலத் தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர்-தமக்குக்
கதியே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே             (7)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருக்கண்ணபுரம்: 2
1660 அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்-
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்
உருகினாள் உள்மெலிந்தாள் இது என்கொலோ? (3)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருநாகை: அச்சோப்பதிகம்
1764 மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட
      மாலிருஞ்சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்
      நீர்மலையார்கொல் ? நினைக்கமாட்டேன்
மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த
      மா முகில் போன்று உளர் வந்து காணீர்
அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்-
      அச்சோ ஒருவர் அழகியவா             (8)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
பதினெண் திருப்பதிகள்
1847 ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரும் நல் தொல் கதி ஆகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர்மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே            (1)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திரு நெடுந்தாண்டகம்
2068 கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
      கைத்தலமும் அடி-இணையும் கமல வண்ணம்
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்
      பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்
  எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்
      இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே             (18)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
சிறிய திருமடல்
2672 கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்    (1)
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று    (2)
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்    (3)
வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை    (4)
வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே    (5)
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து    (6)
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித்    (7)
தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும்    (8)
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு    (9)
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்   (10)
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்   (11)
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்   (12)
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த   (13)
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு   (14)
ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்   (15)
நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு (16)
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் (17)
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து (18)
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை (19)
சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் (20)
பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் (21)
தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு (22)
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23)
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக் (24)
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் (25)
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் (26)
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன் (27)
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் (28)
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு (29)
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் (30)
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் (31)
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் (32)
பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு (33)
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை (34)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் (35)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர் (36)
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (37)
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல் (38)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய மடல்
2673 மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை      (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை      (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்      (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத்      (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான்      (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்      (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்      (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்      (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள்
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்      (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க   (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்     (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்     (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த     (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்     (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில்     (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்     (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம்     (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்     (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு     (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே     (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்     (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம்             (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வெள்ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80)
மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
பூதத்தாழ்வார் 
இரண்டாம் திருவந்தாதி
2226 பயின்றது அரங்கம் திருக்கோட்டி பல் நாள்
பயின்றதுவும் வேங்கடமே பல்நாள் பயின்றது
அணி திகழும் சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால்             (46)

ஓம் நமோ நாராயணாய!

   

Thursday, August 4, 2016

24. திவ்ய தேச தரிசன அனுபவம் 4. திருவிண்ணகர் - ஒப்பிலியப்பன் கோயில் (16)

தரிசனம் செய்த நாள்: 21.06 2016
சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40
16. திருவிண்ணகர் (16)

கையு முரையுங் கருத்துமுனக் கேயடிமை
செய்யும் படிநீ திருத்தினாய் - ஐயா!
திருவிண்ணகராளா! சிந்தையிலு மெண்ணேன்
பெரு விண்ணகராளும் பேறு (16)
  - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி.'

ஒப்பிலி அப்பன் கோயில் எங்கள் குல தெய்வம். அதனால் இந்தக் கோயில் மீது எனக்குச் சற்று அதிகமான பற்று உண்டு.

இந்த முறை நான் இந்தத் தலத்துக்குச் சென்றது உறவினர் ஒருவரின் குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவுக்காக (ஆயுஷ் ஹோமம்). அன்று (21/06/16) ஸ்ரவணம் (திருவோணம்) என்பதால் இந்தக் கோவிலுக்கு ஒரு விஷேஷ தினம். ஸ்ரவண தீபம் (விளக்குகள் ஏற்றி வைத்தல்), அவ்வாறு தொடர்ந்து ஸ்ரவண தீபம் ஏற்றி வரும் ஒரு பெரியவர் அருள் வாக்குச் சொல்லுதல் ஆகிய  நிகழ்ச்சிகள் நடக்கும் நாள்.

கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திலும், நாச்சியார் கோயிலிலிருந்து (திருநறையூர்) சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலும், திருநாகேஸ்வரத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது இத்தலம். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ்ஸில் வந்தால் கோயில் வாசலில் இறங்கிக்  கொள்ளலாம். டாக்சி, ஆட்டோக்களும் நிறைய உள்ளன. கட்டணமும் நிறைய வசூலிப்பார்கள்!

தாங்கும் வசதி, உணவு வசதி ஓரளவுக்கு இருக்கிறது. விசேஷ நாட்களில் அறைகள் கிடப்பது கடினமாக இருக்கலாம். கோவில் தெற்குப் பிரகாரத்தில் தேவஸ்தானத்தின் தங்கும் விடுதி இருக்கிறது.

கோயில் முன் விமானத்தைப் பார்த்தால் சிறிய கோயில் என்று தோன்றும். ஆனால் உள்ளே சந்நிதியில் ஒப்பிலியப்பன் ஓங்கி உயர்ந்து பிரும்மாண்டமாகக் காட்சி அளிக்கிறார்.

இந்தக் கோயில் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இந்தக் கோவில் தொடர்பாக மூன்று வரலாறுகள் சொல்லப்படுகின்றன. துளசி தான் பெருமாளுக்கு அருகில் இருக்க வேண்டும் என்று தவம் செய்ததால் இந்தத் திருத்தலத்தில் பெருமாள் எப்போதும் துளசி மாலை அணிந்து இருக்கிறார். பெருமாளின் திருமார்பில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மி, துளசியின் விருப்பப்படி, துளசியின் மடியில் உட்கார்ந்திருக்கிறார்!இந்த இடமே துளசிவனமாக இருந்ததுதான்.

மார்க்கண்டேய மகரிஷி செய்த தவத்தால் பூமாதேவி அவருக்கு மகளாகப் பிறந்தார். பெருமாள் வயோதிகராக வந்து அவளை மனம் செய்து கொள்ள விரும்ப, மார்க்கண்டேயர் தயங்கினர். "அவளுக்குச் சரியாக உப்புப் போடக்கூடத் தெரியாதே' என்று மார்க்கண்டேயர் சொல்ல, "நான் உப்பில்லாமலேயே சாப்பிடுகிறேன்" என்று பெருமாள் சொன்னார். அதனால் இந்தக் கோவில் பிரசாதங்கள் உப்பு இல்லாமலே சமைக்கப்படுகின்றன, உப்பில்லாத புளியோதரை, தேன்குழல், வடை ஆகியவற்றின் சுவை தனிதான்.

பங்குனி மாதம் சரவண (திருவோணம்) நட்சத்திரத்தில், மார்க்கண்டேயர், பெருமாளுக்கு பூமாதேவியை மனம் செய்து வைத்தார். பிறகு பெருமாள் மார்க்கண்டேயருக்குக் காட்சி கொடுத்தார். மார்க்கண்டேயர், பெருமாள் இங்கேயே தங்க வேண்டும் என்றும், தன் மகளை விட்டு ஒரு கணமும் நீங்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

 பெருமாள் இங்கேயே தங்கியதால் இந்த இடம் விண்ணகரம் என்று பெயர் பெற்றது. விண்ணகரம் என்பதற்கு விண்ணுலகத்து நகரம் என்றும், விஷ்ணு வசிக்கும் நகரம் என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டுமே வைகுண்டத்தைத்தான் குறிக்கின்றன. அதனால் இந்தத் திருத்தலம் 'பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படுகிறது. மார்க்கண்டேயருக்குக் கொடுத்த வாக்குக்கு இணங்க, வீதி உலா வரும்போதும் பெருமாள் தாயாருடனேயே வருவார்.

மூன்றாவது வரலாறு இந்தக் கோயிலின் திருக்குளம் பற்றியது.
கோயிலுக்குள் நுழைந்ததும் வலது புறம் அழகாகத் தோற்றமளிக்கும்  திருக்குளம். 'பகல்இராப் பொய்கை' என்று குளத்தின் சுவற்றில் பெரிதாக எழுதி வைத்திருப்பதைப்  பார்த்ததும் கொஞ்சம் வியப்பு ஏற்படும். அதென்ன பகல் இராப் பொய்கை (சம்ஸ்கிருதத்தில் அஹோராத்ர புஷ்கரணி)?

ஒரு முனிவரின் சாபம் பெற்ற ஒரு அரசன்  பறவையாக மாறி இந்தக்குளத்துக்கு அருகிலிருந்த ஒரு மரத்தில் இருந்து வந்தான். ஒருமுறை புயல்காற்றில் பறவை உட்கார்ந்திருந்த மரக்கிளை முறிந்து குளத்துக்குள் விழ, தண்ணீரில் மூழ்கி எழுந்த பறவை சாபம் நீங்கி அரசனாக மாறியது. அதனால் இந்தக் குளத்தில் இரவு பகல் எப்போது வேண்டுமானாலும் நீராடலாம் என்ற நியதி ஏற்பட்டது. (பொதுவாகக் கோயில் குளங்களில் பகலில் மட்டும்தான் நீராடலாம்,) அதுதான் பகல்இராப் பொய்கை.

குளத்திலிருந்து வீசும் குளிர்ந்த காற்றை அனுபவித்தபடி நிற்கும் கோயில் யானை. இடது புறத்தில் திருமணம், ஆயுஷ் ஹோமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வசதியாகப் பெரிய மண்டபம். இந்த மண்டபத்தில் அடிக்கடி உற்சவ மூர்த்தி எழுந்தருளிக் காட்சி அளிப்பது உண்டு.

பிறகு கருடர் சந்நிதி, வெளிப் பிரகாரம், உள் பிரகாரம். இவற்றைத்தாண்டி கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்தால் நமக்கு வலதுபுறமாக அழகான வேதாந்த தேசிகர் சந்நிதி. பெருமாளை சேவிக்கு முன் ஆச்சார்ய புருஷரின் ஆசியைப்  பெறுவது சிறப்பு அல்லவா?.

மூலவர் ஒப்பிலியப்பன், விண்ணகரப்பன், வெங்கடாசலபதி என்ற பெயர்களில் அழைக்கப் படுகிறார். இவர் திருப்பதிப்  பெருமாளுக்கு அண்ணன் என்றும் திருப்பதியில் நிறைவேற்ற வேண்டிய பிரார்த்தனைகளை இங்கே நிறைவேற்றலாம் என்பதும் ஐதீகம்.

தனக்கு ஒப்பு யாரும் இல்லை என்று காட்டுவது போல் கிழக்கு நோக்கி பிரும்மாண்டமாக சேவை சாதிக்கிறார் பெருமாள். அருள் பொங்கும் முகம்.  கீழ் நோக்கி வரத ஹஸ்த முத்திரை (வழங்கும் நிலை)யில் இருக்கும் வலது கரத்தில் 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' (என்னைச் சரணடைந்தால் போதும், உன்னை நான் பார்த்துக் கொள்வேன்) என்ற கீதை வாக்கியம் பொறிக்கப்பட்ட கவசம்.

ஒப்பிலியப்பனின் வலப்புறம் பூமாதேவியும் இடப்புறம் மார்க்கண்டேய முனிவரும், முறையே வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும்  மண்டி போட்ட நிலையில் அமர்ந்திருக்கிறார்கள்.

மார்க்கண்டேயர் என்றும் பதினாறு வயது உள்ளவராக வாழும் சிரஞ்சீவி. இவர் கர்ப்பக்கிரகத்தில் இருப்பதால், இந்தத் தலத்தில் ஆயுஷ் ஹோமம், (முதல் வயது நிறைவு விழா) மற்றும் சஷ்டியப்த பூர்த்தி (60ஆம் ஆண்டு விழா) ஆகியவற்றை நடத்துவது  சிறப்பு.

உற்சவருக்குப் பெயர் பொன்னப்பன். தினசரி நீராட்டல் போன்றவை செய்யப்படும் சிறிய உற்சவ மூர்த்தி முத்தப்பன் என்று அழைக்கப் படுகிறார்.

அர்ச்சகர்கள் ஒவ்வொருமுறை கற்பூர ஆரத்தி காட்டும்போதும் இந்த திவ்ய தேசத்தின் ஸ்தல புராணத்தையும், சிறப்புகளையும் சலிக்காமல் சொல்வதைப் பாராட்ட வேண்டும். பெருமாளுக்கு துளசி மாலைகள் சாத்துவது இங்கே சிறப்பு. பெருமாளுக்கு அருகில் இருக்க வேண்டும் என்ற துளசியின் வேண்டுகோளை ஏற்று இத்தலத்தில் எப்போதும் துளசி மாலைகளை அணிந்து காட்சி தருகிறார் பெருமாள்.

துளஸிப் பிரசாதம் பெற்றுக்கொண்டு சந்நிதிக்கு வெளியே வந்ததும், உட்பிரகாரத்தில் பிரதட்சிணமாகத் திரும்பினால் முதலில் 'மண்ணுடையார்' சந்நிதி. இவர் இந்தக் கோயிலைக் கட்ட நிலம் வழங்கியவர் என்று ஒரு அர்ச்சகர் சொன்னார். இவரைத் தாண்டியதும் வடக்கு நோக்கியபடி ஆஞ்சநேயர் சந்நிதி, எதிர்ப் பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கும் ராமர் சந்நிதியை நோக்கியபடி. ஆஞ்சநேயர் சந்நிதியைப் பிரதட்சணம் செய்து வந்தால் கோடி தீபம் ஏற்றும் இடம். பக்தர்கள் இங்கே விளக்குகளை ஏற்றி வைத்துப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

அதையும் தாண்டி வந்தால் அகலமான பிரகாரம். கிராமத்து வீடுகளில் திறந்தவெளி முற்றமும், மேலே கூறையால் மூடப்பட்ட தாழ்வாரமும் இருப்பது போல், பிரகாரம் இரண்டு பகுதியாக இருக்கிறது. பிரகாரத்தின்  சுவரில் முப்பது திருப்பாவைகளும் எழுதப்பட்டு அவற்றுக்கு விளக்கப்படங்களும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. தெற்குப் பிரகாரச் சுவரில் 12 ஆழ்வார்களின் ஓவியங்கள். ஒவ்வொரு ஆழ்வார் திருவுருவுக்கும் கீழே அவர் எழுதிய ஒரு பாசுரம் எழுத்தில் வடிக்கப்பட்டுள்ளது.

தெற்குப் பிரகாரத்தின் முடிவில் லக்ஷ்மணர், சீதையுடனான ராமர் சந்நிதி. அதற்குப் பக்கத்தில் (மேற்கு நோக்கி) கண்ணாடி அறை. (இதற்கு எதிர்ப்புறமாக, தெற்குப் பிரகாரத்தின் துவக்கத்தில் மற்றோரு கண்ணாடி அறை)  ஏறாமற் சந்நிதியை அடுத்துப் பிரகாரத்தின் மேற்குப் புறத்தில் யாகசாலை, ராமானுஜர் சந்நிதி என்று உட்பிரகாரம் முடிகிறது.

வெளிப்பிரகாரம் மிகப் பரந்தது. உட்சுவரை ஒட்டிய பகுதியில் 108 திருப்பதிகளின் பெயர்களும், படங்களும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. வடக்குப் பிரகாரத்தின் முடிவில் யானைக் கொட்டாரம். அதற்குப் பக்கத்தில் மணியப்பன் சந்நிதி..

வெளிப்பிரகாரத்தின் மேற்குப்பகுதியில் (கோயிலின் பின்புறம்)
கோசாலையில் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. வடக்குப் பகுதியில் நந்தவனம். சற்று உள்ளே தள்ளினாற்போல் என்னப்பன் சந்நிதி. அவசரமாக வந்து விட்டுப் போகிறவர்கள், டூரிஸ்ட் பஸ்களில் வருபவர்கள் ஆகியோர் வெளிப்பிரகாரத்தைப் பார்க்காமலே போய் விடக்கூடிய வாய்ப்பு உள்ளது.

வெளிப்பிரகாரத்தில் உள்ள மணியப்பன், என்னப்பன் ஆகியோரையும் நம்மாழ்வார் பாடியிருக்கிறார். எனவே இந்த சந்நிதிகளையும் சேவிப்பது அவசியம். டூரிஸ்ட் பஸ்களில் வருபவர்கள் சற்று நேரம் கேட்டு இந்த இரண்டு சந்நிதிகளையும் சேவித்து விட்டுப் போகலாம்.

வெளிப்பிரகாரத்தைச்  சுற்றிவிட்டு வந்தால் பகல்இராப்  பொய்கையின் கரைக்கு வரலாம். இந்தக் குளக்கரையில் இருக்கும் துளசி மட த்தை வணங்கி விட்டு வலம் வருதலை முடித்துக்கொள்ளலாம்.

சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் நாயக்க மன்னர்களாலும் போற்றிப் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.இன்று தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த திவ்ய தேசம்பே யாழ்வார் (2 பாசுரங்கள்),  நம்மாழ்வார் (11 பாசுரங்கள்) மற்றும் திருமங்கை ஆழ்வார் (34) பாசுரங்கள்) ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.  பாசுரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
பேயாழ்வார் 
மூன்றாம் திருவந்தாதி--
2341 பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகை
இளங் குமரன் தன் விண்ணகர் 61
 
2342 விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு 62
   
நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)
3356 நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமும் ஆய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமும் ஆய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே             (1)
   
3357 கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமும் ஆய்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலும் ஆய்
கண்டுகோடற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் ஊர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே             (2)
   
3358 நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமும் ஆய்
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே            (3)
   
3359 புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்
எண்ணம் ஆய் மறப்பு ஆய் உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
கண்ணன் இன் அருளே கண்டுகொள்மின்கள் கைதவமே?             (4)
   
3360 கைதவம் செம்மை கருமை வெளுமையும் ஆய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையும் ஆய்
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெரும் தேவு உடை மூவுலகே             (5)
   
3361 மூவுலகங்களும் ஆய் அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய்
பூவில் வாழ் மகள் ஆய் தவ்வை ஆய் புகழ் ஆய் பழி ஆய்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே             (6)
   
3362 பரம் சுடர் உடம்பு ஆய் அழுக்குப் பதித்த உடம்பு ஆய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே            (7)
   
3363 வன் சரண் சுரர்க்கு ஆய் அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்
தன் சரண் நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே            (8)
   
3364 என் அப்பன் எனக்கு ஆய் இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்
மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே             (9)
   
3365 நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையும் ஆய்
சுழல்வன நிற்பன மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்மின்களே            (10)
   
3366 காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாள் இணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே             (11)

    இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவிண்ணகர்:1
1447 வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு
பண்டை நம் வினை கெட என்று அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு
அண்டமொடு அகல்-இடம் அளந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (1)
 
1448 அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள்
கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே
விண்ணவர் அமுது உண அமுதில் வரும்
பெண் அமுது உண்ட எம் பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (2)
 
1449 குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட
தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு
அழல் நிற அம்பு-அதுஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (3)
 
1450 நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்
உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால்
கலை தரு குழவியின் உருவினை ஆய்
அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (4)
 
1451 பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்
சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு
ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (5)
 
1452 கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்
ஏர் கெழும் உலகமும் ஆகி முத
லார்களும் அறிவு-அரும் நிலையினை ஆய்
சீர் கெழு நான்மறை ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (6)
 
1453 உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்
இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்
இருக்கினில் இன் இசை ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (7)
 
1454 காதல் செய்து இளையவர் கலவி தரும்
வேதனை வினை அது வெருவுதல் ஆம்
ஆதலின் உனது அடி அணுகுவன் நான்
போது அலர் நெடுமுடிப் புண்ணியனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (8)
 
1455 சாதலும் பிறத்தலும் என்று இவற்றைக்
காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறை ஆகி உம்பர்
ஆதல் செய் மூவுரு ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (9)
 
1456 பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
காமரு சீர்க் கலிகன்றி சொன்ன
பா மரு தமிழ்-இவை பாட வல்லார்
வாமனன் அடி-இணை மருவுவரே             (10)
 
1457 பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன்கள் கடன் ஆயின வாயில் ஒட்டி
அறுத்தேன் ஆர்வச் செற்றம் அவை-தம்மை மனத்து அகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே             (1)
 
1458 மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி இல் மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பைக் குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா
சிறந்தேன் நின் அடிக்கே-திருவிண்ணகர் மேயவனே             (2
 
1459 மான் ஏய் நோக்கியர்-தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊன் ஏய் ஆக்கை-தன்னை உதவாமை உணர்ந்து உணர்ந்து-
வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே!-நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே             (3)
 
1460 பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவாது
அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து
செறிந்தேன் நின் அடிக்கே-திருவிண்ணகர் மேயவனே             (4)
 
1461 பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனைவாழ்க்கை-தன்னை
வேண்டேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே             (5)
 
1462 கல்லா ஐம்புலன்கள்-அவை கண்டவாறு செய்யகில்லேன்
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல் அடர்த்த
மல்லா மல்லல் அம் சீர் மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே             (6)
 
1463 வேறா யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய்
ஆறா வெம் நரகத்து அடியேனை இடக் கருதி
கூற ஐவர் வந்து குமைக்கக் குடிவிட்டவரைத்
தேறாது உன் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே             (7)
 
1464 தீ வாய் வல் வினையார் உடன் நின்று சிறந்தவர்போல்
மேவா வெம் நரகத்து இட உற்று விரைந்து வந்தார்
மூவா வானவர்-தம் முதல்வா மதி கோள் விடுத்த
தேவா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே             (8)
 
1465 போது ஆர் தாமரையாள் புலவி குல வானவர்-தம்
கோதா கோது இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர்போல் என் மனத்து இருந்த
வேதா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே             (9)
 
1466 தேன் ஆர் பூம் புறவில் திருவிண்ணகர் மேயவனை
வான் ஆரும் மதிள் சூழ் வயல் மங்கையர்-கோன் மருவார்
ஊன் ஆர் வேல் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார்
கோன் ஆய் வானவர்-தம் கொடி மா நகர் கூடுவரே             (10)
 1467 துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின் உருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யான் உலகில்
பிறப்பேன் ஆக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆதன்மையால்-திருவிண்ணகரானே             (1)
 
1468 துறந்தேன் ஆர்வச் செற்றச் சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே
அறம்-தான் ஆய்த் திரிவாய் உன்னை என் மனத்து அகத்தே
திறம்பாமல் கொண்டேன்-திருவிண்ணகரானே             (2)
 
1469 மான் ஏய் நோக்கு நல்லார் மதிபோல் முகத்து உலவும்
ஊன் ஏய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்-
கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திருவிண்ணகரானே             (3)
 
1470 சாந்து ஏந்து மென் முலையார் தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே உன்னை எய்தி என் தீவினைகள்
தீர்ந்தேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகரானே             (4)
 
1471 மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை-எம் பெருமான்
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனைச்
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே             (5)
 
1472 மை ஒண் கருங் கடலும் நிலனும் மணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவை ஆய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்று ஓர்
தெய்வம் பிறிது அறியேன்-திருவிண்ணகரானே             (6)
 
1473 வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கும்
ஆறே நீ பணியாது அடை நின் திருமனத்து
கூறேன் நெஞ்சு-தன்னால் குணம் கொண்டு மற்று ஓர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால்-திருவிண்ணகரானே             (7)
 
1474 முளிந்தீந்த வெம் கடத்து மூரிப் பெருங் களிற்றால்
விளிந்தீந்த மா மரம்போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்து ஓர்ந்த சிந்தை நின்பால் அடியேற்கு வான்-உலகம்
தெளிந்தே என்று எய்துவது? திருவிண்ணகரானே             (8)
 
1475 சொல்லாய் திரு மார்வா உனக்கு ஆகித் தொண்டு பட்ட
நல்லேனை வினைகள் நலியாமை நம்பு-நம்பீ
மல்லா குடம் ஆடீ மதுசூதனே உலகில்
செல்லா நல் இசையாய் திருவிண்ணகரானே             (9)
 
1476 தார் ஆர் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
சீர் ஆர் நெடு மறுகின் திருவிண்ணகரானைக்
கார் ஆர் புயல் தடக் கைக் கலியன் ஒலி மாலை
ஆர் ஆர் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே             (10)

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
பதினென் திருப்பதிகள்
 
1854 பத்தர் ஆவியை பால் மதியை அணித்
தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர்க் காண்டுமே            (8)

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திரு நெடுந்தாண்டகம்

2079 அன்று ஆயர் குலமகளுக்கு அரையன்-தன்னை
      அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான்-தன்னை
குன்றாத வலி அரக்கர் கோனை மாள
      கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து
வென்றானை குன்று எடுத்த தோளினானை
      விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை தண் குடந்தைக் கிடந்த மாலை
      நெடியானை-அடி நாயேன் நினைந்திட்டேனே             (29)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
சிறிய திருமடல்
2672 கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்    (1)
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று    (2)
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்    (3)
வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை    (4)
வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே    (5)
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து    (6)
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித்    (7)
தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும்    (8)
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு    (9)
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்   (10)
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்   (11)
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்   (12)
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த   (13)
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு   (14)
ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்   (15)
நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு (16)
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் (17)
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து (18)
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை (19)
சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் (20)
பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் (21)
தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு (22)
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23)
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக் (24)
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் (25)
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் (26)
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன் (27)
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் (28)
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு (29)
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் (30)
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் (31)
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் (32)
பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு (33)
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை (34)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் (35)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர் (36)
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (37)
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல் (38)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய மடல்
2673 மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை      (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை      (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்      (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத்      (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான்      (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்      (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்      (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்      (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள்
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்      (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க   (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்     (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்     (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த     (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்     (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில்     (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்     (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம்     (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்     (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு     (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே     (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்     (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம்             (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வௌ¢ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வௌ¢ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80)
ஓம் நமோ நாராயணாய! 
 








Friday, July 29, 2016

23. திவ்யதேச தரிசன அனுபவம் - 3. திருவல்லிக்கேணி (94)

தரிசனம் செய்த நாள்: ஜூன்  2016
தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
21. திருவல்லிக்கேணி (94)

திரிந்துழலும் சிந்தைதனைச் செவ்வே நிறுத்திப்
புரிந்து பகனமின் புகன்றால்  மருந்தாம்
கருவல்லி கேணியா மாக்கத்துக்குக்  கண்ணன்
திருவல்லிகேணியான் சீர்  (94)
        - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி'  

சென்னையில் பல வருடங்கள் வசிப்பதால் திருவல்லிக்கேணி திருத்தலத்துக்குப் பல முறைகள் சென்று வந்திருந்தாலும், திவ்ய தேச தரிசனம் என்ற முயற்சியின் கீழ் இம்முறை சென்றதால் பல விஷயங்களை சற்று நுணுக்கமாகவே கவனிக்க முடிந்தது.

சென்னை மெரினா கடற்கரை அருகே அமைந்திருக்கும் இக்கோயில் பஸ் மற்றும் MRTS ரயில் (கடற்கரை-வேளச்சேரி மார்க்கம்) மூலம் எளிதில்  செல்லக்கூடிய இடம். பஸ்  நிறுத்தத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டரும், ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டரும் நடக்க வேண்டும். நடக்க இயலாதவர்கள் ஆட்டோவைப் பயன்படுத்தலாம். அல்லது கிளம்பும் இடத்திலிருந்தே டாக்சியைப் பயன்படுத்தலாம்.

குறுகிய சந்துகள் நிறைந்த திருவல்லிக்கேணியின் மையப்பகுதியில் பரந்த இடத்தில் கம்பீரமாக அமைந்திருக்கிறது கோவில். கோவிலைச் சுற்றி நாலு பக்கமும்  உள்ள தெருக்களும் விஸ்தாரமாகவே அமைந்திருக்கின்றன. 

கிழக்கு வாசல் அருகே பார்த்தசாரதி சந்நிதிக்கு நேர் எதிரே ஒரு த்விஜ ஸ்தம்பமும், மேற்கு வாசல் அருகே அழகியசிங்கர் சந்நிதிக்கு எதிரே மற்றொரு   த்விஜஸ்தம்பமும் அமைந்திருக்கின்றன. 

மேற்கு வாசலுக்கு வெளியே உள்ள தெரு துளசிங்கப் பெருமாள் கோயில் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

கோவில் மிகப் பெரியது இல்லை. ஆனால் விஸ்தாரமாகப் பல சந்நிதிகளைக்கொண்டும், சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட பல தூண்களைக் கொண்டும் அமைந்திருக்கிறது. கோவில் கோபுரம் ஆனந்த, பிரணவ, புஷ்பக, சேஷ மற்றும் தைவாகி என்ற ஐந்து நிலைகளைக் கொண்டது. அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட கோபுரத்தில் ஏழு கலசங்கள் உள்ளன.

கோயிலில் நுழைந்ததும் பிராகாரத்தில் நமக்கு இடப்பக்கமாகப் போய் முதலில் தாயார் சந்நிதிக்குச் சென்று வேதவல்லித்தாயாரை தரிசிக்க வேண்டும். தாயார் சந்நிதிக்குச்  சற்றே பின்புறமாக கஜேந்திர வரதர் சந்நிதி. நான் சென்ற தினம் (28/07/16) கோவில் சம்போக்ஷணத்துக்காகப் புணரைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் கஜேந்திர வரதர் மற்றும் யோக நரசிம்மர் (அழகிய சிங்கர்) சந்நிதிகள் மூடப்பட்டிருந்தன. உற்சவர்கள் மட்டும் வேறு இடங்களில் கண்ணாடி அறைகளில் சேவை சாதித்துக் கொண்டிருந்தார்கள்.

கஜேந்திர வரதர் சந்நிதியைத்தாண்டி வந்தால் கிழக்கு நோக்கியபடி திருமழிசை ஆழ்வார் சந்நிதி. இந்தச் சந்நிதியும் கோவில் திருப்பணி வேலைகள் காரணமாக மூடப்பட்டிருந்தது. மேற்கு வாசலுக்கு நேரே அழகிய சிங்கர் சந்நிதி.  அதைத்தாண்டி வந்தால் வடக்குப் பிரகாரத்தில் ஆண்டாள் சந்நிதி. பிரகாரத்தின் மத்தியில் திறந்த வெளியில்  உயர்ந்த மேடையில் கிருஷ்ணரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

பிரகாரத்தின் உட்சுவரை ஓட்டி ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல் பெருமாளின் பாதுகைகள் சேவை சாதிக்கின்றன. பிரகாரத்தின் இறுதியில் ஆளவந்தார் சந்நிதி.

பார்த்தசாரதிப்  பெருமாள் சந்நிதிக்குள் நுழைந்தால் முதலில் நமக்கு வலப்புறமாக திருக்கச்சி நம்பிகள், ராமானுஜர், வேதந்தாச்சார்யார் (வேதாந்த தேசிகர்), மணவாள மாமுனிகள் சந்நிதிகள். ஆச்சார்யர்கள் வாழ்ந்த கால வரிசையில் இந்தச் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று கருதுகிறேன்.

இன்னும் உள்ளே வந்தால், சக்கரவர்த்தித்த திருமகன் (ராமர்), லக்ஷ்மணர், பரதர், சத்தருனர், சீதாப்பிராட்டியுடன் காட்சி அளிக்கிறார். எதிரே ஆஞ்சநேயர் சந்நிதி. ஆஞ்சநேயர்  சந்நிதியிலும் திருப்பணிகள் நடைபெறுவதால், உற்சவர் மட்டும் வெளியே சேவை  சாதிக்கிறார். 

ராமர் சந்நிதியைத் தொடர்ந்து ரங்கநாதர் சந்நிதி. இரு தேவியர் அருகில் அமர்ந்திருக்க, நாபிக்கமலத்தில் பிரும்மாவுடன் சனித்திருக்கிறார் மன்னாதர் என்கிற ரங்கநாதர். ரங்கநாதரின் இருபுறமும் வராஹரும், யோக நரசிம்மரும் காட்சி தருகிறார்கள்.

கர்ப்பக்கிருகத்தில் பார்த்தசாரதிப்  பெருமாள் ஆஜானுபாகுவாக, கம்பீரமாக நரைத்த மீசையுடன் காட்சி தருகிறார். வைகுண்ட ஏகாதசிக்கு இரு தினங்கள் முன்பிலிருந்து இவர் மீசை இல்லாமல் காட்சி அளிப்பார் என்று அறிகிறேன். 

பெருமாளுக்கு வலப்புறம் ருக்மிணித் தாயார், இடப்புறம் அவரது இளைய சகோதரர் சாத்யகி. 

ருக்மிணிக்கு வலப்புரத்தில் வடக்கு நோக்கியபடி பலராமர்,  சாத்யகிக்கு இடப்புறத்தில் கிருஷ்ணரின் புதல்வரான ப்ரத்யும்னரும், பேரனான அநிருத்தரும் காட்சி தருகின்றனர். 

கிருஷ்ணர், பலராமர், சாத்யகி, ப்ரத்யும்னன், அநிருத்தன் ஆகிய ஐந்து வீரர்கள் சந்நிதியில் இருப்பதால், இந்தத் தலம் பஞ்சவீரஸ்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

மூலவரின் பெயர் வேங்கடகிருஷ்ணன். உற்சவரின் பெயர் பார்த்தசாரதி. மூலவர் வலது கையில் பாஞ்சஜன்யம் என்ற சங்குடனும், இடது கையில் ஞான முத்திரையுடனும் இருக்கிறார். அவரது பாதங்களைச்  சுட்டிக்காட்டும் ஞான முத்திரை 'மாம் ஏகம்  சரணம் வ்ரஜ (என்னைச் சரணைந்தால்  போதும். உன்னை நான் காப்பாற்றுவேன்)' என்ற  கீதையின் வரியை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

உற்சவர் முகத்தில் மஹாபாரதப் போரில் பீஷ்மரின் அம்புகள் ஏற்படுத்திய காயங்களின் வடுக்கள் இருக்கின்றன.

பெருமாளை சேவித்து விட்டு வெளியே வரும்போது ஆச்சார்யர்கள்   சந்நிதிக்கு  எதிர்ப்புறத்தில் ஆழ்வார்கள் சந்நிதி. ஆழ்வார்களுடன் மாதவன், கோவிந்தன், அனந்தன் (ஆதிசேஷன்), விஷ்வக்சேனர், கருடன் ஆகியோரும் சேவை சாதிக்கின்றனர். எம்பார் (ராமானுஜரின் தம்பியும் சீடருமான கோவிந்தன்) விக்கிரகமும் இருக்கிறது.

1851ஆம் ஆண்டு புகைப்படம் 

இந்தக் கோவிலில் வேங்கடகிருஷ்ணன் என்கிற பார்த்தசாரதி, கஜேந்திர வரதர், அழகிய சிங்கர் என்கிற யோக நரசிம்மர், மன்னாதன்  என்கிற ரங்கநாதர், ராமர் ஆகிய ஐந்து பிரதான சந்நிதிகள் இருப்பது குறிப்பிதத்தக்கது. 

தனி சந்நிதியில் சேவை சாதிக்கும் வேதவல்லித்தாயார்  ரங்கநாதரின் பிராட்டியார். இவர் இங்கிருந்த குளத்தில் பூத்த அல்லி மலரில் பிறந்ததால், இந்தத் தலம் திருவல்லிக்கேணி என்று பெயர் பெற்றது. இந்த இடம் முழுவதும் துளசிவனமாக இருந்ததாகவும், அல்லிக்குளம் இந்தத் துளசிக் காட்டின் மத்தியில் இருந்ததாகவும் ஸ்தல புராணம் கூறுகிறது. 

சென்னையின் மிகப் பழைய கோவில் இதுவே என்பது இக்கோவிலின் இன்னொரு சிறப்பு.

இந்தத் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஐந்து தெய்வ வடிவங்களையும் பிருகு, அத்ரி, மரீசி, மார்க்கண்டேயர், சுமதி, சப்தரோமர், ஜாபாலி என்கிற சப்தரிஷிகள் வழிபட்டதாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. 

"பிருந்தாரண்யம்" என்பது இத்தலத்தின் புராணப் பெயர்.

சுமதி என்ற அரசன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசிக்கும் பார்த்தசாரதியாகத் தனக்கு காட்சி கொடுக்க வேண்டும் என்று திருவேங்கடமுடையானை வேண்ட, அவர் சுமதியை பிருந்தாரண்யத்துக்குச் சென்று தவம் செய்யும்படி பணித்தார். 

இதே சமயத்தில் அத்ரி மகரிஷி தான் தவம் செய்ய ஏற்ற இடம் எது என்று வியாசரைக் கேட்க, வியாசர் அவரை பிருந்தாரண்யத்துக்குச் சென்று தவம் செய்யும்படி கூறினார். ஒரு கையில் சங்கை ஏந்தியும்   மறு கையில் தன்   திருவடியைக்  காட்டியபடியும் காட்சியளிக்கும் கிருஷ்ண பரமாத்மாவின் திவ்ய மங்கள விக்கிரஹத்தையும் அளித்து அதை அங்கே தவம் செய்து கொண்டிருக்கும் சுமதியிடம் கொடுக்கும்படி கூறினார்.

விக்கிரஹத்துடன் திருவல்லிகேணி வந்த அத்ரி, சுமதியைச் சந்தித்து அவரிடம் விக்கிரகத்தை அளித்தார். திருவேங்கடமுடையான் தன்  விருப்பத்தை நிறைவேற்றி விட்டதில் மகிழ்ச்சி அடைந்த சுமதி, அந்த விக்கிரகத்தை அங்கே பிரதிஷ்டை செய்தார். 

பின்னால் இங்கே பல்லவர்களால் கோவில் கட்டப்பட்டு, அதற்குப் பின்பு சோழர்களால் விரிவுபடுத்தப்பட்டது. 

திருவேங்கடமுடையானின் அருளால் கிடைத்த விக்கிரகம் என்பதால் இந்த மூலவருக்கு வேங்கட கிருஷ்ணன் என்று பெயர். அர்ஜுனனுக்கு கீதையை உபயோகித்த கோலத்தில் இருப்பதால், இவர் பார்த்தசாரதி என்றும் பெயர் பெற்றார்.

இந்தக் கோவிலில் உள்ள மிகப் பழமையான சந்நிதி ரங்கநாதருடையது. இவர் மன்னாதர் என்று அழைக்கப்படுகிறார். 

மகாவிஷ்ணுவிடம் ஊடல் கொண்டு, மஹாலக்ஷ்மி இந்தத் தலத்தில் இருந்த அல்லிக்குளத்தில், அல்லி மலரில் குழந்தையாகப் பிறந்தார். இவரை பிருகு மகரிஷி எடுத்து, வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்தார். 

பங்குனி மாதம் சுக்ல மகா துவாதசி தினத்தன்று உத்திர நட்சத்திரத்தில்,  மன்னாதர் என்ற பெயரில் ஒரு இளவரசராக வந்த ரங்கநாதருக்கு வேதவல்லியை மணம் முடித்தார் பிருகு. 

பங்குனி உத்திரத்தன்று தன்னைச் சேவிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் எல்லா நலன்களையும் அளித்து, அவர்களுக்கு மோட்சமும் அளிக்க வேண்டும் என்று வேதவல்லித் தாயார் ரங்கநாதரிடம் கேட்டுக் கொண்டார்.

அத்ரி மஹரிஷியின் வேண்டுகோளை ஏற்று, நரசிம்மர் இங்கே கோயில் கொண்டுள்ளார். மூலவர் யோக நரசிம்மர் என்றும், உற்சவர் தெள்ளிய சிங்கர் மற்றும் அழகிய சிங்கர் என்றும் அழைக்கப்படுகிறார். 

அழகிய முகம் கொண்ட உற்சவர் ஒரு கையில் பக்தர்களை வா என்று அழைக்கும் முத்திரையும் (ஆஹ்வான ஹஸ்தம்), மறு  கையில் பக்தர்களைக் காக்கும் முத்திரையும் (அபய ஹஸ்தம்) கொண்டு விளங்குகிறார்.

இங்கு தவம் செய்த மகரிஷி மதுமானருக்கு சக்கரவர்த்தித்த திருமகனான ராமர் தனது மூன்று தம்பிகளுடனும், சீதாப்பிராட்டியுடனும் காட்சி கொடுத்திருக்கிறார்.

கஜேந்திர வரதர் சப்தரோம மகரிஷியால் வழிபடப்பட்டவர். மூலவர் கருட வாகனத்தில் காட்சி அளிப்பது சிறப்பு.

கோயிலின் முன்புற,ம் கைரவினி தீர்த்தம் என்ற பெரிய திருக்குளம் உள்ளது. 

இதன் வடக்குக் கரையில் படிக்கட்டுகளுக்கிடையே ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. 

இந்த புஷ்கரணிக்குள் அக்னி தீர்த்தம், சோம தீர்த்தம், மீன தீர்த்தம், இந்திர தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் (கிணறுகள்)  இருப்பதாக ஐதீகம்.

நீண்ட காலம் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்த ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த கேசவ சோமயாஜியும், அவர் மனைவி காந்திமதியும் திருவல்லிக்கேணிக்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்ட பிறகுதான் அவர்களுக்கு ராமானுஜர் பிறந்தார்.

திருமழிசை ஆழ்வார் முதலாழ்வார்களை சந்தித்தது இத்திருத்தலத்தில்தான்.

இப்படிப் பல சிறப்புகள் நிறைந்த இந்த திவ்ய தேசத்தை பேயாழ்வார் (ஒரு பாசுரம்), திருமழிசை  ஆழ்வார் (ஒரு பாசுரம்), திருமங்கை ஆழ்வார் (10 பாசுரங்கள்) ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர். அந்தப் பாசுரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோரும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். 

தியாகய்யர், முத்துசாமி தீக்ஷிதர் ஆகியோரும் இந்தக் கோவில் பற்றிக் கீர்த்தனைகள்  இயற்றியிருக்கிறார்கள். 

பாரதியாரின் கண்ணன் பாட்டுக்கள் வேங்கடகிருஷ்ணனை  மனதில் கொண்டு பாடப்பட்டவைதான்  என்று கொள்ளலாம்.


இந்த திவ்ய தேசம் பற்றிய ஆழ்வார்களின் பாடல்களைப் பகிர்ந்து கொண்டு, இந்த திவ்ய தேச தரிசன அனுபவத்தை நிறைவு செய்கிறேன்.

திவ்ய பிரபந்தம் 
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருவல்லிக்கேணி

1067 வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
      வேழமும் பாகனும் வீழச்
செற்றவன்-தன்னை புரம் எரி செய்த
      சிவன் உறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
      பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானை
      -திருவல்லிக்கேணிக் கண்டேனே             (1)
 
1068 வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
      விழுமிய முனிவரர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை
      குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆள் உடை
      அப்பனை-ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத்
      திருவல்லிக்கேணிக் கண்டேனே             (2)
 
1069 வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி
      வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட
      நாதனை தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்
      வியந்துதி செய்ய பெண் உரு ஆகி
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே            (3)
 
1070 இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
      எழில் விழவில் பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது
      மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எந்தம்மோடு இன ஆ-நிரை தளராமல்
      எம் பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே (4)
 
1071 இன் துணைப் பதுமத்து அலர்மகள்-தனக்கும்
      இன்பன் நல் புவி-தனக்கு இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை
      -தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி
      வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே             (5)
 
1072 அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு
      இளையவன் அணி இழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய் என தரியாது
      எம் பெருமான் அருள் என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்-தம்
      பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே             (6)
 
1073 பரதனும் தம்பி சத்துருக்கனனும்
      இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற
      இராவணாந்தகனை எம்மானை-
குரவமே கமழும் குளிர் பொழிலூடு
      குயிலொடு மயில்கள் நின்று ஆல
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்
      திருவல்லிக்கேணிக் கண்டேனே (7)
 
1074 பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
      வாயில் ஓர் ஆயிரம் நாமம்
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு
      ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
      பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை
      -திருவல்லிக்கேணிக் கண்டேனே             (8)
 
1075 மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
      வேட்கையினோடு சென்று இழிந்த
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற
      கரா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து
      சென்று நின்று ஆழிதொட்டானை-
தேன் அமர் சோலை மாட மா மயிலைத்
      திருவல்லிக்கேணிக் கண்டேனே             (9)
 
1076 மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்
      மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர்-கோன் செய்த நல் மயிலைத்
      திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்
      காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல்-மாலை பத்து உடன் வல்லார்
      சுகம் இனிது ஆள்வர் வான்-உலகே             (10)
 

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
பேயாழ்வார் 
மூன்றாம் திருவந்தாதி

2296 வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம்
அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை
ஒரு அல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக்கேணியான் சென்று             (16)


மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமழிசை ஆழ்வார் 
நான்முகன் திருவந்தாதி

2415 தாளால் உலகம் அளந்த அசைவேகொல்?
வாளா கிடந்தருளும் வாய்திறவான் நீள் ஓதம்
வந்து அலைக்கும் மா மயிலை மா அல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்து அணை               (35)

ஓம் நமோ நாராயணாய!