தரிசனம் செய்த நாள் 28 (வியாழன்), 29 (வெள்ளி), 30 (சனி)
மற்றும் 31 (ஞாயிறு), ஜூலை, 2022
வடநாட்டுத் திருப்பதிகள் - 10
10. திருத்துவாரகை
திறந்திறமாத் தாந்துய்க்குந் தீஞ்சுவையை நாடி
அறந்திறம்பிப் பாதகரோ ரைவா - நறுந்துளவ
மாதுவரை யோனே! மனந்துணையாக் கொண்டென்னைக்
காதுவரை யோ!மெய் கலந்து. (105)
-பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் நூற்றுட்டுத் திருப்பதி அந்தாதி
முக்தி தரும் 7 திருத்தலங்களான அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி, காஞ்சி, அவந்தி (உஜ்ஜைனி), துவாரகை இவற்றில் துவாரகை. 7-ஆவதாக உள்ளது.
துவாரம் என்றால் வாயில் அல்லது வழி. மோட்சம் அடைவதற்கான வழியை இந்தத் திருத்தலம் காட்டுவதால் இது துவாரகை என்று அழைக்கப்படுகிறது.
ஆதிசங்கரர் இந்தியாவின் நான்கு கோடிகளிலும் தன் மடங்களை நிறுவினார். வடக்கே பத்ரிநாத் அருகே ஜோதிஷ்மட், தெற்கே சிருங்கேரி, கிழக்கே பூரி, மேற்கே துவாரகை.
தல புராணம்:
கிருஷ்ணர் பிறந்தது மதுராவில், வளர்ந்தது அதற்கு அருகில் இருக்கும் கோகுலம் அல்லது ஆயர்ப்பாடியில். இந்த இரண்டு ஊர்களும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளன.
கிரூஷ்ணனின் தாய்மாமனான கம்சன் மதுராவை ஆண்டு வந்தான்.
தன் சகோதரி தேவகியின் வயிற்றில் பிறக்கப் போகும் எட்டாவது குழந்தை தன்னை அழித்து விடும் என்று அசரீரி மூலம் அறிந்து கொண்டதால் அவன் தேவகியையும், அவளுடைய கணவர் வசுதேவரையும் சிறையில் வைத்து அவர்களுக்குப் பிறந்த ஏழு குழந்தைகளையும் அவை பிறந்த உடனேயே அவற்றைச் சிறையின் சுவரில் அடித்துக் கொன்று விட்டான்.
எட்டாவது குழந்தையாக கிருஷ்ணன் பிறந்தார். கிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரம் என்பதால் அப்போது கம்சனின் அரண்மனையில் ஒரு மாயையை நிலவ வைத்து குழந்தை பிறந்தது யாருக்கும் தெரியமல் செய்தார்.
குழந்தை கிருஷ்ணர் சங்கு, சக்கரம், நான்கு கைகள் இவற்றுடன் விஷ்ணுவாக வசுதேவருக்குக் காட்சி அளித்தார்.
கிருஷ்ணரின் கட்டளைப்படி வசுதேவர் கிருஷ்ணரை எடுத்துக் கொண்டு யமுனை ஆற்றின் அக்கரையில் உள்ள கோகுலத்தில் இருந்த நந்தகோபன் வீட்டில் விட்டு விட்டு, அங்கே நந்தகோபன் மனைவி யசோதைக்குப் பிறந்திருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து சிறையிலிருந்த தன் மனைவி தேவகியின் அருகில் வைத்தார்.
அதுவரை எங்கும் நிலவிய மாயையால் நடந்தது எதுவும் தேவகி உட்பட யாருக்கும் தெரியவில்லை.
வசுதேவர் சிறையிலிருந்து வெளியே சென்றபோதும், திரும்பி வந்தபோதும் சிறைக்கதவுகள் தானே திறந்து மூடிக் கொண்டன.
மயக்கத்தில் இருந்த காவலர்களுக்கு எதுவும் தெரியவில்லை.
வசுதேவர் யமுனையைக் கடந்தபோது யமுனை ஆறு அவர் நடந்த இடத்தில் தண்ணிரை விலக்கிக் கொண்டு அவருக்கு வழி விட்டது.
தேவகியின் அருகில் பெண் குழந்தை வைக்கப்பட்டதும் குழந்தை அழுதது. அப்போதுதான் மாயை விலகியது. தேவகி கண் விழித்துக் குழந்தையைப் பார்த்தாள்.
காவலர்கள் மயக்கம் தெளிந்து கம்சனிடம் செய்தியைச் சொல்ல,
கம்சன் விரைந்து வந்து அந்தக் குழந்தையைக் கொல்ல முயன்றான்.
கம்சனின் கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அந்தக் குழந்தை அந்தரத்தில் எழும்பி, துர்க்காதேவியாகத் தோற்றம் அளித்து, கம்சனிடம், "உன்னைக் கொல்லப் போகிறவன் வேறு இடத்தில் வளர்கிறான்" என்று சொல்லி மறைந்தது.
அதற்குப் பிறகு கம்சன் தேவகியையும், வசுதேவரையும் விடுதலை செய்தான். சிறிது காலத்துக்குப் பிறகு வசுதேவர் தேவகியிடம் நடந்த உண்மைகளைக் கூறினார். தன் மகன் உயிரோடு இருப்பதை அறிந்து தேவகி ஆறுதல் அடைந்தார்.
தேவகிக்குப் பிறந்த குழந்தை கோகுலத்தில் உள்ள ஆயர்ப்பாடியில் வளர்வதை அறிந்த கம்சன், கிருஷ்ணரைக் கொல்ல பூதகி என்ற அரக்கி, கன்று வடிவில் ஒரு அரக்கன், வண்டிச் சக்கர வடிவில் ஒரு அரக்கன் என்று பலரையும் அனுப்பினான். அனைவரும் கிருஷ்ணரால் கொல்லப்பட்டனர்.
கிருஷ்ணர் பாலகனான பின் தன் மூத்த சகோதரர் பலராமனுடன் மதுராவுக்கு வந்து கம்சனுடன் போரிட்டு அவனைக் கொன்று மதுராவுக்கு அரசரானார். பலராமரும் கிருஷ்ணருக்குத் துணையாக மதுராவிலேயே இருந்தார்.
கம்சனின் கொடுங்கோல் ஆட்சியில் அல்லல் பட்டுக் கொண்டிருந்த மக்கள் கிருஷ்ணர் அரசரானதும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
கம்சனின் மாமனாரான ஜராசந்தன் கிருஷ்ணரைப் பழி வாங்க நினைத்து
மதுராவின் மீது படை எடுத்தான்.
17 முறை படையெடுத்துத் தோல்வி அடைந்து திரும்பினான்.
தன் உடம்பு பிளக்கப்பட்டால் அதை மீண்டும் ஒட்டி வைத்தால் அது உயிர் பெற்று விடும் என்று ஜராசந்தன் ஒரு வரம் பெற்றிருந்ததால் கிருஷ்ணர், பலராமர் இருவராலும் ஜராசந்தனைக் கொல்ல முடியவில்லை.
(பிற்காலத்தில் ஜராசந்தன் பீமனுடன் போரிட்டபோது, கிருஷ்ணரின் யோசனைப்படி, பீமன் ஜராசந்தன் உடலை இரண்டாகக் கிழித்து அதை மாற்றிப் போட்டு விட்டான். அதனால் ஜராசந்தன் உடல் மீண்டும் ஒட்ட முடியாமல் போய், அவன் உயிர் இழந்தான்.)
ஜராசந்தன் அடிக்கடி போர் தொடுப்பதால் மதுராவில் உள்ள மக்களுக்குத் தொல்லை ஏற்படும் என்பதால் மதுராவை விட்டு வேறு எங்காவது செல்ல கிருஷ்ணர் விரும்பினார். ஆனால் பலராமர் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் காலயவனன் என்ற அசரனைத் தனக்குத் துணையாகத் தேடிக் கொண்டான் ஜராசந்தன்.
காலயவனன் தன்னைப் போரில் யாரும் கொல்ல முடியாது என்று சிவபெருமானிடம் வரம் பெற்றவன். அவன் 3 கோடி யவனர்கள் கொண்ட சேனையுடன் மதுராவின் மீது படையெடுத்தான்.
காலயவனனைப் போரில் கொல்ல முடியாது என்பதால் கிருஷ்ணர் கழுத்தில் ஒரு தாமரை மலரை அணிந்தபடி போர்க்களத்திலிருந்து ஓடினார்.
காலயவனன் அவரைத் துரத்திக் கொண்டு வந்தான்.
டகோர் என்ற இடத்தில் இருந்த ஒரு குகைக்கு வந்து கிருஷணர் நின்றார். அவர் வந்து நின்ற இடம் டாகோர் துவாரகா. அங்கே உள்ள கோயிலில் கிருஷ்ணர் ரணசோட்ராய் (போரை விட்டு ஓடி வந்த அரசர்) என்று அழைக்கப்படுகிறார். (மூல் (மூல) துவாரகா கோயிலில் உள்ள மூர்த்தியும் இதே பெயரில்தான் அழைக்கப்படுகிறார்.)
டகோரில் இருந்த அந்த குகைக்குள் முசுகுண்ட் என்பவன் உறங்கிக் கொண்டிருந்தான். முசுகுண்ட் தேவ-அசுர யுத்தத்தில் தேவர்களுக்கு உதவியதால், அவன் உறக்கத்தை யாரும் கலைத்தால் அவர்கள் அவன் பார்வையிலேயே எரிந்து போவார்கள் என்ற வரத்தை அவன் இந்திரனிடமிருந்து பெற்றிருந்தான்.
கிருஷ்ணர் அந்த குகைக்குள் நுழைந்து மறைந்து நின்று கொண்டார்.
அரவம் கேட்டு முசுகுண்ட் உறக்கம் கலைந்து கண் விழித்தான்.
அப்போது கிருஷ்ணரைத் துரத்திக் கொண்டு வந்த காலயவனன் முசுகுண்ட்டின் கண்ணில் பட காலயவனன் எரிந்து போனான்.
கிருஷ்ணர் இமயமலைக்குச் சென்று தவம் செய்யும்படி முசுகுண்டுக்கு அறிவுரை கூற, அவனும் அவ்வாறே அங்கு சென்று தவம் செய்து மோட்சத்தை அடைந்தான்.
பிறகு கிருஷ்ணரும் பலராமரும் துவாரகைக்கு வந்தனர். முதலில் மூல் துவாரகா (மூல துவாரகை) என்ற இடத்துக்கு வந்து தங்கி இருந்தனர். பிறகு அங்கிருந்து துவரகைக்கு வந்தனர்.
துவாரகை கோமதி ந்திக்கரையில் அமைந்துள்ளது.
கோமதி நதி ஐந்து மைல் தூரமே ஓடிக் கடலில் கலக்கும் நதி.
வசிஷ்டரின் புதல்வியான கோமதிக்கு மாப்பிள்ளை பார்க்க வசிஷ்டர் பயணம் மேற்கொண்டார். தன் மகள் கோமதியுத் தன்னுடன் வர வேண்டும் என்று அவர் விரும்பினார்.
தான் வசிஷ்டருக்குப் பின்னாலேயே வருவதாகவும், தன் சலங்கை ஒலியைக் கேட்டுத் தான் பின்னால் வருவதை வசிஷ்டர் அறிந்து கொள்ளலாம் என்றும் கோமதி கூறினாள்.
ஆனால் ஒருபோதும் தன்னைத் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று அவள் நிபந்தனை விதித்தாள்.
துவாரகைக்கு வந்ததும் கண்ணினிடம் மனம் லயித்து அங்கேயே இருந்து விட விரும்பினாள் கோமதி
மணற்பாங்கான அந்தப் பகுதியில் கோமதி மெதுவாக நடந்து வந்தாதால் சலங்கை ஒசை வசிஷ்டருக்குக் கேட்கவில்லை. வசிஷ்டர் திரும்பிப் பார்த்தார்.
தந்தை தன் நிபந்தனையை மீறி விட்டதாகச் சொல்லி கோமதி அங்கேயே தங்கி விட்டாள். ஒரு நதியாக மாறி அருகிலிருந்த கடலில் கலந்து விட்டாள்.
கிருஷ்ணரும் பலராமரும் துவாகையில் இருந்து அந்தப் பகுதியை ஆண்டனர்.
கிருஷ்ணர் கடல் அரசனிடம் இடம் வாங்கிப் பெற்று கடலுக்குள் ஒரு தீவில் ஒரு நகரத்தை உருவாக்கினார்.
இதுதான் பேட் துவாரகை என்று அழைக்கப்படுகிறது. பேட் என்றால் குஜராத்தி மொழியில் தீவு என்று பொருள்.
பேட் என்ற சொல்லுக்கு பரிசு அல்லது வெகுமதி (gift) என்றும் பொருள் உண்டு.
கிருஷ்ணருடன் குருகுலத்தில் படித்த சுதாமா (குசேலர்) மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தார். தன் மனைவியின் யோசனைப்படி அவர் கிருஷ்ணரைப் பார்த்து உதவி கேட்க துவாரகைக்கு வந்தார்.
கிருஷ்ணருக்குக் கொடுக்க தன் மனைவி ஒரு துணியில் முடிந்து கொடுத்த ஒரு பிடி அவலை எடுத்துக் கொண்டு வந்தார் சுதாமா.
கிருஷ்ணரைச் சந்தித்ததும் அவரிடம் உதவி கேட்க சுதாமாவுக்கு மனமில்லை. தான் கொண்டு வந்த அவலை கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டு வந்து விட்டார். கிருஷ்ணர் சுதாமா கொடுத்த அவலை மிகவும் விரும்பி உண்டார்.
சுதாமா தன் ஊருக்குத் திரும்பியதும் தன் வீடு மாளிகையாக மாறி இருப்பதையும் வீட்டில் தானியங்களும் பொற்காசுகளும் நிரம்பி இருப்பதையும் கண்டு கண்ணனின் அருளை உணர்ந்து மனம் நெகிழ்ந்தார்.
சுதாமா கிருஷ்ணரைச் சந்தித்து அவருக்குத் தான் கொண்டு வந்த பரிசான அவலை வழங்கியதால் இது பேட் துவாரகா என்று அழைக்கப்படுகிறது.
கோமதி துவாரகா கிருஷ்ணரின் தலைநகரமாகவும், பேட் துவாரகா அவர் வசித்த இடமாகவும் இருக்கும் என்று ஒரு கருத்து இருக்கிறது.
ஜராசந்தன் மீண்டும் படையெடுத்து வரக் கூடும் என்பதால் அதிகப் பாதுகாப்பான இடமாக பேட் துவாரகா என்ற தீவை கிருஷ்ணர் உருவாக்கி இருக்கலாம்.
பஞ்ச துவாரகா (ஐந்து துவாரகைகள்):
1. கோமதி துவாரகா - கோமதி ந்திக்கரையில் உள்ள இந்தக் கோவிலில் உள்ள விக்கிரகம் கிருஷ்ணரின் தேவி ருக்மிணியால் பூஜிக்கப்பட்டது என்றும், இது கிருஷ்ணரின் புதல்வர் பிரத்யும்னனின் புதல்வர் அநிருத்தனின் புதல்வர் வஜ்ரநாபனால் (கிருஷ்ணரின் கொள்ளுப் பேரன்!) பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
2. டாகோர் (Dakor) துவாரகா- கோமதி துவாரகாவில் இருந்த விக்கிரகத்தை போடாணா என்பவர் எடுத்துச் சென்று டாகோர் துவாரகாவில் பிரதிஷ்டை செய்து விட்டார். இது அகமதாபாதிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனந்த் அருகே உள்ளது.
3. பேட் துவாரகா - இது கோமதி துவாரகாவிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஓக்கா என்ற துறைமுகத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு (இப்போது இந்தப் பகுதி ஒரு உப்பங்கழியாகத்தான் இருக்கிறது) நடுவே உள்ள 13 கிலோமீட்டர் நீளமும் 4 கிலோமீட்டர் அகலமும் உள்ள தீவு.
4. மூல் (மூல) துவாரகா - இது சோம்நாத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையில் அமைந்துள்ள விசாவாடா என்ற ஒரு சிறிய ஊர். கிருஷ்ணரும், பலராமரும் முதலில் இந்த ஊருக்கு வந்துதான் இருந்தார்கள். அதனால் இது மூல துவாரகா என்று அழைக்கப்படுகிறது.
5. நாத துவாரகா - ராஜஸ்தானிலுள்ள உதய்ப்பூரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஶ்ரீநாத் கோவில் நாத துவாரகா என்று அழைக்கப்படுகிறது. இது மீரா வழிபட்ட தலம்.
(காங்க்ரோலி துவாரகா என்று ஆறாவது துவாரகா ஒன்றும் இருப்பதாகக் கூப்படுகிறது.)
இந்த ஐந்து துவாரகைகளில் இந்தப் பயணத்தின்போது நாங்கள் சென்றது கோமதி துவாரகா, பேட் துவாரகா, மூல துவாரகா ஆகிய மூன்று துவாரகைகளுக்குத்தான்.
துவாரகா ரயில் நிலையம் ராஜ்கோட்-ஓக்கா ரயில் தடத்தில் இருக்கிறது. சென்னையிலிருந்து மும்பை, அகமதாபாத் வழியே ஓக்கா செல்லும் சில ரயில்கள் இருக்கின்றன. இவற்றின் மூலம் துவாரகைக்கு வரலாம்.
நாங்கள் சென்றது விமானத்தில், மும்பை வழியே ராஜ்கோட் வரை விமானத்தில் சென்று ராஜ்கோட்டிலிருந்து 225 மைல் காரில் சென்று துவாரகையை அடைந்தோம். பல இடங்களுக்கும் செல்ல ஒப்பந்த முறையில் ஒரு காரை ஏற்பாடு செய்தோம்.
தனியாக, அல்லது சிறு குழுக்களாகச் செல்பவர்கள் ஒரு நல்ல டூரிஸ்ட் சர்வீஸ் மூலம் செல்வது சரியான முறையாக இருக்கும்.
கோமதி துவாரகை அல்லது கோமுகி துவாரகை - துவாரகாதீஷ் கோவில்:
வெளியிலிருந்து பார்க்கும்போதே கம்பீரமான தோற்றமுடைய கோவில். கோவிலுக்குள் செல்ஃபோன்கள் ஸ்மார்ட் வாட்ச்சுகள் போன்ற மின்னணு சாதனங்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. வெளியில் உள்ள கவுண்ட்டரில் அவற்றை ஒப்படைத்து ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
கோவிலில் பல சந்நிதிகள் உள்ளன. கோவிலைச் சுற்றிக் காட்டும் வழிகாட்டிகள் பலர்
இருக்கின்றனர். இவர்கள் அநேகமாக இந்தி மட்டுமே அறிந்தவர்கள்.
இருக்கின்றனர். இவர்கள் அநேகமாக இந்தி மட்டுமே அறிந்தவர்கள்.
28.7.22 அன்று மாலை நாங்கள் தரிசனத்துக்குச் சென்றபோது ஆங்கிலம் தெரிந்த வழிகாட்டிகள் யாரும் கிடைக்கவில்லை.
அன்று ஆடி அமாவாசை (இந்தப் பகுதி மக்களுக்கும் ஆஷாட அமாவாசை சிறப்பான நாள்தான்), அன்று கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.
31.7.22 அன்று காலை நாங்கள் மீண்டும் சென்றபோது, ஆங்கிலம் தெரிந்த ஒரு வழிகாட்டி கிடைத்தார். அவர் தல புராணத்தை விளக்கி, எல்லா சந்நிதிகளையும் காட்டினார்.
கோவில் கோபுரத்தில் உள்ள நான்கு நிலைகள் வடக்கே பத்ரிகாசிரமம், கிழக்கே பூரி, மேற்கே துவாரகா, தெற்கே ராமேஸ்வரம், அல்லது ஶ்ரீரங்கம் ஆகிய நான்கு தலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
இந்த நான்கு நிலைகளுக்கு மேல் உள்ள ஏழு நிலைகள் முக்தி தரும் ஏழு தலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
கோபுரத்தின் உச்சியில் 52 அங்குல அகலக் கொடி பறக்கிறது. 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள், 4 திசைகளின் கூட்டுத்தொகை இந்த 52 என்கிறார் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள்.
இந்தக் கொடி ஒரு நாளைக்கு ஐந்து முறை மாற்றப்படுகிறது. ஒவ்வொரு கொடி மாற்றலுக்கான காணிகை பக்தர்களால் வழங்கப்படுகிறது. கொடி மாற்றும்போது, அதற்கான காணிக்கையை வழங்கிய பக்தர்கள் மற்றும் மேலே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். நாங்கள் சென்றபோது, இந்தக் காணிக்கை 2025-ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
கோவிலின் மையப்பகுதியில் கிருஷ்ணர் சந்நிதி உள்ளது. இங்கே அருள் பாலிக்கும் கிருஷ்ணர் துவாரகாதீஷ் என்று அழைக்கப்படுகிறார்.
திவ்யதேச மரபுப்படி இந்தப் பெருமாளின் பெயர் கல்யாண நாராயணர்.
மூலவர்: துவாரகாதீசன், கல்யாண நாராயணன்
தாயார்: லக்ஷ்மி, ருக்மிணி
விமானம்: ஹேமகூட விமானம்
தீர்த்தம்: கோமதி ந்தி, சமுத்திரம்
கிருஷ்ணரின் புதல்வர் பிரத்யும்ன்ன், அவரது பேரன் அநிருத்தன் ஆகியோருக்கான சந்நிதி ஒரு தனி மண்டபத்தில் இருக்கிறது.
ஒரு உயர்ந்த மண்டபத்தில் கிருஷ்ணரின் தேவிகளான ஜாம்பவதி, சத்யபாமா ஆகியோரின் சந்நிதி இருக்கிறது. இதே மண்டபத்தில் ராதா, லக்ஷ்மிநாராயண்ன், கோபாலகிருஷ்ணன், லக்ஷ்மி, சரஸ்வதி, ஹனுமான், கருடன் துர்வாசமுனி ஆகியோருக்கும் சந்நிதிகள் இருக்கின்றன.
இன்னொரு மண்டபத்தில் ஆதிசங்கரர், சாரதா, கிருஷ்ணர், சந்திரமோலீஸ்வரர், ஸ்படிகலிங்கம் ஆகிய சந்நிதிகள் உள்ளன.
இவை தவிர நுழைவிலிருந்து துவங்கி பிரகாரம் முழுவதும் மாதவ், பலராம், கருடன், குரு தததாத்தரேயர், புருஷோத்தம ராய், அம்பிகா, காயத்ரி மாதா, காசி விஸ்வநாதர் என்று பல சந்நிதிகள்.
கிருஷ்ணர் ருக்மிணியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு, ஒருமுறை துர்வாசமுனியை சற்றுத் தொலைவிலிருந்த ஒரு ஊரிலிருந்து துவாரகைக்கு கிருஷ்ணர் ருக்மிணி இருவரும் தேரில் அமர வைத்து இழுத்து வந்ததாகவும், அப்போது ருக்மணி களைத்து விட்டதால், கிருஷ்ணர் தரையிலிருந்து கங்கையை வரவழைத்து ருக்மிணிக்குத் தண்ணீரை அளித்ததாகவும், தன் அனுமதி பெறாமல் ருக்மிணி தண்ணீரைப் பருகியதால் கோபம் கொண்ட துர்வாசர், கிருஷ்ணரும், ருக்மிணியும் பிரிந்து வாழ வேண்டும் என்றும், துவாரகையைச் சுற்றி 15 மைல் சுற்றளவில் தண்ணீர் உப்பாக இருக்கும் என்றும் இரண்டு சாபங்களை அளித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
அதனால் ருக்மிணிக்கு இந்தக் கோவிலில் சந்நிதி இல்லை. இங்கிருந்து 3 மைல் தொலைவில் ருக்மிணி தேவி கோவில் என்று தனியாக ஒரு கோவில் இருக்கிறது.
துவாரகையைச் சுற்றி சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பாகவே இருக்கிறது. மக்களுக்கு போர்பந்தரிலிருந்து நர்மதா நதித் தண்ணீர் கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறது.
கோவிலின் இன்னொரு நுழைவாயில் அருகே திரிவிக்கிரமச் சந்நிதி இருக்கிறது. இங்கே பக்தர்கள் திரிவிக்கிரமரின் காலைத் தொட்டு வணங்கலாம். இதற்கு அருகில் துலாபாரம் இருக்கிறது.
இந்த திவ்ய தேசத்தைப் பெரியாழ்வார் (5 பாசுரங்கள்), ஆண்டாள் (4 பாசுரங்கள்), திருமங்கை ஆழ்வார் (2 பாசுரங்கள்), திருமழிசை ஆழ்வார் (1 பாசுரம்), நம்மாழ்வார் (1 பாசுரம்) ஆகியோர் மங்களாசாஸனம் செய்திருக்கிறார்கள். மொத்தம் 13 பாசுரங்கள்
பாசுரங்கள் இந்தப் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.
30.07.22 காலை கிளம்பி பேட் துவாரகைக்குச் சென்றோம். துவாரகையிலிருந்து ஓக்காவுக்கு சுமார் 35 கிலோமீட்டர் சாலைப்பயணம்.
ஓக்காவிலிருந்து உப்பங்கழி என்று தமிழில் அழைக்கப்படும் கடல் நீர் உள்வாங்கிய நீர்ப்பரப்பில் (backwaters) சுமார் 3 கிலோமீட்டர் படகில் பயணம் செய்து பேட் துவாரகையை அடைந்தோம்.
படகுப் பயணம் சுமார் 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. சுமர் 100 பேர் ஏறிச் செல்லக் கூடிய படகுகள் அடிக்கடி இருபுறத்திலிருந்தும் சென்று வருகின்றன.
துவாரகாதீஷ் சந்நிதியைச் சுற்றிலும் கணேஷ், புருஷோத்தம ராய், தேவகிமாதா, மாதவ் ராய், திரிவிக்கிரமன், கருடன், அம்பாஜி (அம்பாள்), கல்யாண் ராய், லக்ஷ்மி, சுதாமா, ஹனுமான், பலராமர், ஜாம்பவந்தி,
சத்யபாமா ,சத்யநாராயணர், சாக்ஷி
கோபால் ஆகியோருக்கான சந்நிதிகள் உள்ளன.
பேட் துவாரகா சங்கோதர் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சங்குகள் அதிகம் இருப்பதால் இந்தப் பெயர்.மகாபாரதத்தில் இது அந்தர்த்வீப் (பாதாளத்தீவு) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதைத் தவிர இந்தப் பதிவில் முன்பே குறிப்பிட்டுள்ளபடி, சுதாமா (குசேலர்) கிருஷ்ணரைச் சந்தித்து அவருக்கு அவல் அளித்ததால், பரிசு என்ற பொருள் கொண்ட பேட் என்ற பெயரும் இந்த ஊருக்குப் பொருந்தும்.
இந்தக் கோவிலுக்குப் பக்கத்தில் துவாரகாதீஷ் Gold Palace (தங்க மாளிகை) என்ற காட்சியகம் உள்ளது. இதில் கிருஷ்ணரின் வரலாறு, மற்றும் பல புராணக் காட்சிகள் கொண்ட படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இரண்டு தளங்களில் ஒவ்வொன்றிலும் இரண்டு பிரகாரங்களாக பல அருமையான காட்சிகள் படங்களாக வரையப்பட்டுள்ளன.
முழுவதையும் பார்த்து ரசிக்க சில மணி நேரங்கள் தேவை.
இது துவாரகாவிலிருந்து பேட் துவாரகா செல்லும் வழியில் சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இங்கே உள்ள லிங்கம் உலகிலுள்ள பன்னிரண்டு சுயம்பு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று என்று கருதப்படுகிறது. இந்த இடம் பண்டைய காலத்தில் தாருகாவனம் என்று அழைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. தாருகாவனம் என்பது உத்தரகாண்டில் உள்ளது என்ற கருத்தும் உண்டு.
கோவிலுக்கு வெளியே 25 மீட்டர் உயரமுள்ள சிவபெருமானின் சிலை அமர்ந்த திருக்கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நாகேஸ்வர் அருகை கோபி தலாப் என்ற இடம் உள்ளது.
கிருஷ்ணரைக் காண கோகுலத்திலிருந்து இங்கு வந்த கோபியர் கிரூஷ்ணன் மறைந்து விடப் போவதை அறிந்து இந்தக் குளத்தில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், கோபி சந்தனம் என்று அழைக்கப்படும் சந்தனம் இந்தக் குளத்திலிருந்துதான் எடுக்கப்பட்டது என்றும் கார் ஓட்டுனர் கூறினார்.
30.07.22 அன்று துவாரகையிலிருந்து 237 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோம்நாத் சென்றோம். பன்னிரண்டு சுயம்பு ஜோதிர் லிங்கங்களில் சோம்நாத்தில் உள்ள லிங்கமும் ஒன்று.
சுமார் 2000 ஆண்டு பழமையான இந்தக் கோவில் முகம்மது கஜினியால் 1026-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இது மீண்டும் புதிதாகக் கட்டப்பட்டு 1951-ஆம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சந்நிதியில் ஜோதிர்லிங்கமாக சிவபெருமானும் அவருக்குப் பின்னே பார்வதியும் காட்சி அளிக்கிறார்கள். அருகில் பிரம்மா இருக்கிறார். சந்நிதி இருக்கும் மண்டபத்தில் முன்புறத்தில் ஹனுமான், கணபதி விக்கிரகங்கள் இருக்கின்றன.
பிரகாரம் முழுவதும் சிவபெருமான் பற்றிய புராணக் காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்படுள்ளன,
புதுப் பொலிவுடனும் அமைந்துள்ள
இந்தக் கோவிலில்
மணிகள், தாளங்கள் முழங்க நடக்கும் ஆரத்தி பிரசித்தி பெற்றது. நாங்கள் சென்றபோது மதியம் 12 மணிக்கு நடந்த ஆரத்தியை தரிசிக்கும் பேறு கிட்டியது.
மணிகள், தாளங்கள் முழங்க நடக்கும் ஆரத்தி பிரசித்தி பெற்றது. நாங்கள் சென்றபோது மதியம் 12 மணிக்கு நடந்த ஆரத்தியை தரிசிக்கும் பேறு கிட்டியது.
கோவிலை ஒட்டியுள்ள கடலை கோவிலுக்குள்ளிருந்து பார்க்கலாம், கடற்கரையில் இறங்கிச் செல்ல முடியாது.
கடற்கரையில் உள்ள விளக்குகள் அமைந்த பாதையில் Lightway till Indian Ocean என்ற பெயர்ப்பலகை காணப்பட்டது. கடற்கரை ஓரமாக கன்யாகுமரி வரை இந்த விளக்குகள் அமைந்த பாதை செல்கிறது என்ற விவரம் வியப்பாக இருந்தது.
ராமானுஜ கூடம் (Ramanuja Kota) என்ற பெயரும் காணப்பட்டது. இத்துடன் இணைந்து அருகில் யாத்தரீகர்களுக்கான தங்கும் விடுதியும் இருக்கிறது.
நாங்கள் சென்ற சமயம் இந்தக் கோவில் பூட்டப்பட்டிருந்தது. பிற்பகல் 3.30 மணிக்குத்தான் திறக்கப்படும் என்று விடுதி நிர்வாகி கூறினார்.
சோம்நாத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேராவல் என்ற இடத்தில் பால் கா தீர்த் (அம்பு பாய்ந்த புனிதத்தலம்) என்ற இடம் உள்ளது.
கிருஷ்ணர் தன் அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டத்துக்குத் திரும்ப முடிவு செய்து இந்த இடத்தில் ஒரு மரக்கிளையில் அமர்ந்திருந்தார். அப்போது ஜரா என்ற வேடன் அவரது பாதத்தை ஒரு மானின் முகம் என்று நினைத்து அம்பு விட்டான்.
கிரூஷ்ணர் அவனுக்கு அருளி, இவ்வுலகை விட்டு நீங்கி வைகுண்டம் ஏகினார். இது பாகவதத்திலும் கூறப்பட்டிருக்கிறது.
இங்கே உள்ள கோவிலில் வேடன் கிருஷ்ணர் மீது அம்பு விடும் காட்சி
சித்தரிக்கப்பட்டு இது ஒரு கோவிலாகக் கருதப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
சித்தரிக்கப்பட்டு இது ஒரு கோவிலாகக் கருதப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
இங்கே ராம லக்ஷ்மண சீதை, சரஸ்வதி, சிவன், ஶ்ரீவாகேஸ்வரி, நாராயண், லக்ஷ்மி, காயத்ரி ஆகியோருக்கான சந்நிதிகள் உள்ளன.
பிறகு போர்பந்தர் சென்று அங்கிருந்த சுதாமாபுரி என்ற சுதாமாவின்
இல்லத்துக்குச் சென்றோம்.
இல்லத்துக்குச் சென்றோம்.
இங்கே சுதாமா, அவர் மனைவி ஆகியோரின் திருவுருவப் படங்களும், ராதாகிருஷ்ணர் சந்நிதியும் உள்ளன.
போர்பந்தரில் காந்தியின் நினைவில்லமாக மாற்றப்பட்டிருக்கும் காந்தி பிறந்து வளர்ந்த இல்லத்துக்கும் சென்று தேசப்பிதாவுக்கு அஞ்சலி செலுத்தினோம்.
முன்பே குறிப்பிட்டபடிபடி, இதுதான் கிருஷ்ணரும் பலராமரும் முதலில் வந்து தங்கிய இடம். இங்கு சிறிது காலம் இருந்து விட்டுப் பிறகுதான் அவர்கள் துவாரகைக்குச் சென்றனர்.
கிருஷ்ணர் போர்க்களத்தை விட்டு வந்து இங்கே இருந்ததால் இங்குள்ள மூர்த்தியும் ரண்சோட்ராய் (போர்க்களத்தை விட்டு நீங்கிய மன்னர்) என்று அழைக்கப்படுகிறார்.
(மதுராவிலிருந்து அவர் முதலில் டாகோர் துவாரகா என்ற இடத்துக்குச் சென்றதையும், அங்கே காலவயனன் முசுகுண்டால் கொல்லப்பட்ட தையும் அங்கே உள்ள கோவிலில் அவர் ரண்சோட்ராய் என்று அழைக்கப்படுவதையும் இந்தப் பதிவில் முன்பே விவரித்திருக்கிறேன். டாகோர் துவாரகாவிலிருந்து கிருஷ்ணர் முதலில் மூல் துவாரகாவுக்கு வந்து, பிறகு இங்கிருந்து கோமதி துவாரகாவுக்குச் சென்று, அங்கிருந்தபடி பேட் துவாரகாவை அமைத்தார் என்பது முழு வரலாற்றின் சுருக்கம்.)
இங்கே உள்ள கோவிலில் ரண்சோட்ராய் சந்நிதியைத் தவிர, பஞ்சாயுதன், பரசுராமர், நீலகண்டர், பிரம்மா, சூரிய நாராயணன், கணபதி ஆகியோருக்கான சந்நிதிகள் உள்ளன.
விஜாந்த பகத் என்ற துறவிக்கான சந்நிதியும் உள்ளது.
பல படிகள் கொண்ட step well பண்டைய காலத்துக் கிணறு ஒன்றும் இங்கே உள்ளது.
எங்கள் பயணத்தின் இறுதி நாளான 31.07.2022 அன்று காலை மீண்டும் துவாரகாதீஷ் ஆலயத்துக்குச் சென்று அங்கிருந்த ஆங்கிலம் தெரிந்த ஒரு வழிகாட்டியின் உதவியுடன் கோவிலில் மீண்டும் தரிசனம் செய்து விட்டு, கோவிலுக்கு அருகிலுள்ள சுதாமா சேது (சுதாமா பாலம்) என்ற இடத்துக்குச் சென்றோம்.
இது கோமதி ஆற்றின் குறுக்கே 2005-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு தொங்கு பாலம்.
இது பெரும்பாலும் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் நோக்கம் கொண்டது.
பாலத்துக்கு அருகே படகு சவாரி, ஒட்டக சவாரி ஆகியவைகளும் உள்ளன.
லக்ஷ்மி நாராயணர் சந்நிதி,
வாயில் அருகே ஒரு சிறு பிறையில் ஶ்ரீராம் சீலா என்ற ஒரு படம் வைக்கப்பட்டிருக்கிறது,
ஹனுமான் ஒரு பாறையில் ஶ்ரீராம் என்று எழுதி ராம நாமத்தின் மகிமையால் அந்தக் கல் கடலில் மிதக்கும் காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
தேர்த்தா பத்தர் என்று ஹிந்தியிலெ எழுதப்பட்டிருந்தவாசகத்துக்கு மிதக்கும் கல் என்று ஹிந்தி தெரிந்த ஒருவர் எனக்கு விளக்கம் அளித்தார்.
5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ருக்மிணி தேவி கோவிலுக்குச் சென்றோம்.
பிறகு அங்கிருந்து காயத்ரி மாதா ஆலயத்துக்குச் சென்றோம்.
தொடுவானத்தில் மேகங்கள் இருந்ததால் சூரியன் கடலில் மறைவது வரை எங்களால் பார்க்க முடியவில்லை. தொடுவானத்துக்குச் சற்று மேலேயே சூரியன் மேகத்துக்குள் மறைந்து விட்டது.
கிருஷ்ணரின் அருளால் எங்கள் துவாரகைப் பயணம் இனிதே நிறைவடைந்தது.
இந்தத் திருத்தலம் பற்றி வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன் அவர்களின் காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையோர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணனே - திருவாய்மொழி (நம்மாழ்வார்)
திருத்துவாரகை திவ்ய தேச மங்களாசாஸனப் பாசுரங்கள்:
முதலாயிரம்
பெரியாழ்வார்
பெரிய திருமொழி
332 பொல்லா வடிவு உடைப் பேய்ச்சி துஞ்சப் புணர்முலை வாய்மடுக்க
வல்லானை மா மணிவண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெருந் தேவிமாரொடு பௌவம் எறி துவரை
எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர்
397 திரை பொரு கடல் சூழ் திண்மதிற் துவரை
வேந்து தன் மைத்துனன்மார்க்காய்
அரசினை அவிய அரசினை அருளும்
அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம்
நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கைக்
கண்டம் என்னும் கடிநகரே
398 வட திசை மதுரை சாளக்கிராமம்
வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய
எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
தலைப்பற்றிக் கரை மரம் சாடிக்
கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக்
கண்டம் என்னும் கடிநகரே
414 பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணிசெய்யத்
துவரை என்னும்
மதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்
மன்னு கோயில்
புது நாள்மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றிற்
பூவே போல்வான்
பொது-நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும்
புனல் அரங்கமே
471 தட வரைவாய் மிளிர்ந்து மின்னும்
தவள நெடுங்கொடி போல்
சுடர்- ஒளியாய் நெஞ்சின் உள்ளே
தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும்
மதிற் துவராபதியும்
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால்
இடவகை கொண்டனையே
முதலாயிரம்
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
506 சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே
540 ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே
593 காலை எழுந்திருந்து
கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி
மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ?
சோலைமலைப் பெருமான்
துவாராபதி எம்பெருமான்
ஆலின் இலைப் பெருமான்
அவன் வார்த்தை உரைக்கின்றதே
624 கூட்டில் இருந்து கிளி எப்போதும்
கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டக் கொடாது செறுப்பனாகில்
உலகு-அளந்தான் என்று உயரக் கூவு1ம்
நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள்
நன்மை இழந்து தலையிடாதே
சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்.
திருமங்கை ஆழ்வார்
இரண்டாம் ஆயிரம்
பெரிய திருமொழி
திருநரையூர் - 3
1503 முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி
முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே
இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்
இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய
வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
பெரிய திருமொழி
திருநரையூர் - 3
1523 கட்டு ஏறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை
மட்டு ஏறு கற்பகத்தை மாதர்க்கு ஆய் வண் துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே
மூன்றாம் ஆயிரம்
இயற்பா
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
2451 சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல்
நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி
3251 அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே
ஒம் நமோநாராயணாய
No comments:
Post a Comment