Sunday, May 10, 2020

86. பன்னிரு ஆழ்வார்கள் - 1. பெரியாழ்வார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த முகுந்த பட்டர் பத்மவல்லி தம்பதிக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர் பெரியாழ்வார்.

இவர் பிறந்தது ஆணி மாதம் சுவாதி நட்சத்திரத்தில். இவர் கருடனின் அம்சம் என்று கருதப்படுகிறார்.

இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் விஷ்ணுசித்தர். விஷ்ணுவையே  நினைத்துக் கொண்டிருப்பவர் என்பது இதன் பொருள்.

விஷ்ணுசித்தரின் குடும்பம் வேதங்கள், உபநிஷத்துக்கள், புராணங்களில் தேர்ச்சி பெற்றிருந்த குடும்பம். ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலில் தலைமை அர்ச்சகர் செல்வநம்பி போன்ற வேறு பல அறிஞர்களின் தொடர்பும் அவருக்கு இருந்தது.

ஆயினும் விஷ்ணுசித்தர் வேதங்கள் போன்றவற்றைக் கற்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இறைவனுக்கு கைங்கர்யம் (சேவை) செய்வதில்தான் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது.

தன வீட்டின் அருகிலேயே ஒரு மலர்த் தோட்டம் அமைத்து அதில் பல்வேறு மலர்ச்செடிகளைப் பயிரிட்டார் அவர்.

தினமும் காலையில் துளசி, மல்லிகை, சாமந்தி முதலிய பல மலர்களைப் பறித்து அவற்றை அழகிய மாலையாகத் தொடுத்து அவற்றை வடபத்ரசாயி கோவிலுக்கு எடுத்துச் செல்வார்.

தான் கட்டிய மாலைகளை அர்ச்சகரிடம் கொடுத்து அவர் அவற்றைப் பெருமாளுக்கு அணிவித்ததும் மாலைகள் அணிந்து காட்சியளிக்கும் பெருமாளைப் பார்த்து மகிழ்வார் விஷ்ணுசித்தர்.

ப்போது வல்லபதேவராயர் என்ற பாண்டிய மன்னர் மதுரையை ஆண்டு வந்தார்.

அவர் அவ்வப்போது மாறுவேடத்தில் நகர்வலம் போவார். அவ்வாறு சென்றபோது வடநாட்டுக்கு தீர்த்த யாத்திரை சென்று வந்த ஒரு வைணவ அறிஞரைச் சந்தித்தார்.

ஒரு நல்ல அறிவுரை சொல்லும்படி அவரிடம் மன்னர் கேட்டபோது அவர் சொன்னார்:

"மழைக்காலத்துக்கு சேமிக்க, எட்டு மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
இரவில் நிம்மதியாகத் தூங்கப் பகலில் கடினமாக உழைக்க வேண்டும்.
முதுமையில் மகிழ்ச்சியாக வாழ, இளமையில் கடுமையாக உழைக்க வேண்டும்.
மரணத்துக்குப் பின் நல்ல வாழ்க்கையைப் பெற, இவ்வுலகில் வாழும்போதே அதைச் சம்பாதிக்க வேண்டும்."

இது பற்றிச் சிந்தித்த மன்னர் மனதில் மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை, ஆத்மா, பரமாத்மா ஆகியவை பற்றிப் பல சந்தேகங்கள் எழுந்தன.

தன் குருவான ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோவில் தலைமை அர்ச்சகர் செல்வநம்பியிடம் இது பற்றி அவர் கேட்டார்.

இந்தக் கேள்விகள் பற்றிப் பல்வேறு தத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த அறிஞர்களை அழைத்து ஒருவிவாதம் நடத்தலாம் என்று செல்வநம்பி யோசனை கூற, மன்னர் அதை எற்றார்.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட மன்னர் விவாதத்தில் வெற்றி பெறுபவருக்கு ஒரு பொற்கிழி பரிசாக அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மன்னரின் கேள்விக்கான இறுதி விடையை விஷ்ணுசித்தரால் அளிக்க முடியும் என்று செல்வநம்பிக்குத் தோன்றியது.

ன்று இரவு விஷ்ணுசித்தரின் கனவில் வடபத்ரசாயி வந்து மன்னர் அறிவித்திருக்கும் விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு கூறினார்.

மாலை கட்டுவதை மட்டுமே அறிந்த தன்னால் எப்படி இப்படி ஒரு விவாதத்தில் கலந்து கொள்ள முடியும் என்று விஷ்ணுசித்தர் குழம்பினார்.

விஷ்ணுசித்தர் காலையில் கண் விழித்தபோது, தன்னைப் பார்க்க செல்வநம்பி வந்திருப்பதைக் கண்டு வியந்தார்.

மன்னர் அழைத்திருக்கும் விவாதத்தில் கலந்து கொள்ளும்படி விஷ்ணுசித்தரை அறிவுறுத்திய செல்வநம்பி, அவரை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல பல்லக்கு காத்திருப்பதாகவும் கூறினார்.

பெருமாளின் கட்டளை இது என்பதை உணர்ந்து விஷ்ணுசித்தர் பல்லக்கில் ஏறி அரண்மனைக்குச் சென்றார்.

ன்னரின் அவையில் பொற்கிழி ஒரு கம்பத்தின் மீது கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது.

அறிஞர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் கருத்துக்களைக் கூறினர். ஆனால் அரசருக்குத் திருப்தி ஏற்படவில்லை.

அப்போது விஷ்ணுசித்தர் அரசவைக்கு வந்து சேர்ந்தார். அவர் அரசருக்கு வணக்கம் செலுத்தினார்.

சில அறிஞர்கள் விஷ்ணுசித்தரை எள்ளி நகையாடினர். மாலை கட்டுபவருக்கு பரதத்துவம் பற்றி என்ன தெரியும் என்றனர். ஒரு அவையின் முன் பேசிய அனுபவம் இல்லாத ஒருவரால் அரசவையில் அறிஞர்கள்  முன் என்ன பேச முடியும் என்றனர் சிலர்.

ஆனால் இந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் மன்னர் விஷ்ணுசித்தரைப் பேசச் சொன்னார்.

விஷ்ணுசித்தர் பேசத் தொடங்கியதும் அவர் உடலிலிருந்து ஒரு ஒளி வெளிப்பட்டது. வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டி அவர் பேசத் தொடங்கினார்.

பர தத்துவம் அதாவது எல்லாவற்றுக்கும் மேலான, இறுதியான உண்மை என்ன என்பதை விளக்கிக் கூறிய விஷ்ணுசித்தர், ஸ்ரீமன் நாராயணனே பரதத்துவம் என்பதை அறுதியிட்டுக் கூறினார்.

இந்த அண்டம் முழுவதும் நாராயணனிடம் தோன்றி, அவரால் காக்கப்பட்டு அவரிடமே ஐக்கியமாகி விடுகிறது என்பதை அவர் விளக்கினார்.

நாராயணனிடம் பக்தி செலுத்துவதே பிறப்பு, இறப்பு என்ற இந்த முடிவற்ற சுழற்சியிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கும் என்று வாதிட்டார் அவர்.

விஷ்ணுசித்தர் பேசி முடித்ததும் மன்னர் பிரமித்து நின்றார். அவை முழுவதும் அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு மூச்சற்று நின்றது.

கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருந்த பொற்கிழி, தானே அறுந்து கீழே விழுந்தது.

அவையிலிருந்த அறிஞர்கள் அனைவரும் விஷ்ணுசித்தரைப் பார்த்துக் கை கூப்பி வணங்கித் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டனர்.

விவாதத்தில் விஷ்ணுசித்தரே வென்றதாக அறிவித்த அரசர் அவருக்குப் பொற்கிழியை வழங்கி அவருக்கு 'பட்டர் பிரான் (கடவுளைப்  பூசிக்கும் அறிஞர்களில் உயர்ந்தவர்)' என்ற பட்டத்தை வழங்கினார்.

விஷ்ணுசித்தர் ஒரு யானையின் மீது அமரச் செய்யப்பட்டுப் பல தெருக்களிலும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். 'பட்டர் பிரான் வாழ்க' என்ற மக்களின் வாழ்த்தொலி எங்கும் ஒலித்தது.

யானை மீது அமர்ந்திருந்த விஷ்ணுசித்தருக்கு வானத்தில் தொலைவில் ஏதோ ஒரு காட்சி தென்பட்டது. அந்தக் காட்சி அருகில் வந்ததும் விஷ்ணுசித்தரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

விஷ்ணுசித்தர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவதைப் பார்க்க, ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீதேவி, பூதேவியுடன் கருடன் மீது அமர்ந்து வானில் பறந்து வந்து கொண்டிருந்தார்!

விஷ்ணுசித்தருக்குக் கண்களில் கண்ணீர் பெருகியது. ஒருபுறம் நாராயணனின் கருணையை எண்ணி என்றால் மறுபுறம் அவர் மீது எல்லோர் கண்ணும் பட்டு விடுமே என்ற அச்சத்தால்!

பகவான் மீது கண்ணேறு பட்டு விடக் கூடாதே என்ற ஆதங்கத்தால் விஷ்ணுசித்தர் பகவானை வாழ்த்திப் பாட ஆரம்பித்தார்.

'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு'

என்று தொடங்கி அவர் பாடிய 12 பாசுரங்கள் 'திருப்பல்லாண்டு' என்று பெயர் பெற்றன.  நமோ நாராயணாவென்று சொல்லி நாம் பெருமாளை வணங்க வேண்டும் என்று சொல்லி முடிக்கிறார் இவர்.

கூடியிருந்த மக்கள் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, பெருமாளும், இரு தேவியரும் விஷ்ணுசித்தரை வாழ்த்தி விட்டு மறைந்து விட்டனர்.

பொதுவாக ஒருவரை அவரைவிடப் பெரியவர்கள்தான் வாழ்த்துவார்கள். விஷ்ணுசித்தர் பெருமாளையே வாழ்த்திப் பாடியதால் அவர் பெரியாழ்வார் என்று பெயர் பெற்றார்.

பெருமாள் மீது அவருக்கு இருந்த அளவு கடந்த அன்பினால்தான் பெருமாளுக்கு கண்ணேறு பட்டு விடுமோ என்று பதைபதைத்து அவர் பெருமாளை வாழ்த்திப் பாடினார்.

இவர் பெருமாளை வாழ்த்திப் பாடிய 'திருப்பல்லாண்டு' வைணவக்
கோவில்களில் தினமும் பாடப் படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் திரும்பிய பெரியாழ்வார் வடபத்ரசாயிக் கோவிலுக்குச் சென்று பெருமாளை வணங்கினார். தனக்குப் பரிசாகக் கிடைத்த பொற்கிழியை அவர் கோவிலுக்கே காணிக்கையாகக் கொடுத்து விட்டார்.

பெரியாழ்வார் தொடர்ந்து பெருமாள் மீது பாசுரங்கள் எழுதி வந்தார். அவர் எழுதிய 461 பாசுரங்களின் தொகுப்பு 'பெரியாழ்வார் திருமொழி' என்று அழைக்கப்படுகிறது

இந்தப் பாசுரங்கள் பெரும்பாலும் கண்ணனைப் பற்றியதாகவே உள்ளன. பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்துக்கொண்டு கண்ணனின் அவதாரத்தை விவரிக்கிறார்.

கண்ணனின் குழந்தைப் பருவத்தை பிறப்பு, தொட்டிலிடல், காது குத்தல், தவழ்தல், கை கொட்டுதல், குளிப்பாட்டுதல், குழந்தையாக கண்ணன் செய்த விஷமங்கள், சாகசங்கள்  என்று பல நிலைகளிலும் வர்ணிக்கிறார் பெரியாழ்வார்.

பெரியாழ்வார் திருமொழி ராமபிரானைப் பற்றியும் பேசுகிறது. ஹனுமான் சீதையை முதலில் சந்திக்கும்போது, தன்னை ராமர்தான் அனுப்பினார் என்று ஹனுமான் சீதைக்கு உணர்த்தும் உரையாடலையும் இந்தப் பாசுரங்கள் விவரிக்கின்றன.

ராமர், கிருஷ்ணர் இருவரையும் போற்றிப் பாடும் கை கொட்டல் நடனமும் பெரியாழ்வார் திருமொழியில் அடங்கியுள்ளது.

பெரிய திருமொழியில் பல திவ்யதேசங்கள் பற்றிப் பெரியாழ்வார் பாடியிருக்கிறார். இவர் பாடிய திவ்யதேசங்களின் பெயரும், ஒவ்வொன்றைப் பற்றியும் பாடிய பாடல்களின் எண்ணிக்கையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திருவரங்கம் - 35
திருவெள்ளறை - 11
திருப்பேர் நகர் - 2
திருக்குடந்தை - 3
திருக்கண்ணபுரம் -  1
திருக்குறுங்குடி - 1
திருவில்லிபுத்தூர் - 1
திருமாலிருஞ்சோலை - 34
திருக்கோட்டியூர் - 22
திருப்பதி - 7
திரு அயோத்தி - 6
திருசாலிக்கிராமம் - 2
திருவதரி - 1
திருக்கண்டம் - 11
திருவடமதுரை - 16
திருவாய்ப்பாடி - 10
திருதுவாரகை - 5
திருப்பாற்கடல் - 5
திருப்பரமபதம் - 4

பெரியாழ்வார் விராஜை என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

தங்கள் வீட்டுத் தோட்டத்தில் துளசிச் செடிக்கு அருகில் கண்டெடுத்த பெண்  குழந்தையை இந்த தம்பதி தங்கள் பெண்ணாக ஏற்று, கோதை என்று பெயரிட்டு வளர்த்தனர்.

கோதை பெருமாள் மீது காதல் கொண்டு, பெருமாள் பற்றி திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்று பெயர் பெற்ற பாசுரங்களைப் பாடி, ஆண்டாள் என்று பெயர் பெற்றார்.

பெருமாளின் கட்டளைப்படி கோதையை ரங்கநாதருக்கு மணமுடிக்க அவரைத் திருவரங்கத்துக்கு அழைத்துச் சென்றார் பெரியாழ்வார்.

ஆண்டாள் அரங்கநாதர் சந்நிதிக்கு ஓடிச் சென்று அரங்கனுடன் இரண்டறக் கலந்து விட்டார்.

பெரியாழ்வார் தன் இறுதி நாட்களைத் திருமாலிருஞ்சோலையில் கழித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள்-ரங்கமன்னார் கோவிலில் பெருமாளுக்கு அருகில் கருடாழ்வாராக நின்று பக்தர்களால் வணங்கப்படுகிறார் பெரியாழ்வார்.

உண்மையான பக்தி என்பது சுயநலமற்று, பரமாத்மாவின் மீது அன்பு செலுத்துவது என்பதை உலகுக்கு உணர்த்தியவர் பெரியாழ்வார்.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம். 










No comments:

Post a Comment