Thursday, September 1, 2016

32. திவ்யதேச தரிசன அனுபவம் - 11. திருக்கார்வானம் (84)

தரிசனம் செய்த  நாள்: 27/08/2016 (சனிக்கிழமை)
                                            தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
11. திருக்கார்வானம் (84)

தாலேலோ வென்றாய்ச்சி தாலாட்டித் தன்முலைப்பா
லாலேயெவ் வாறுபசி யாற்றினள்?முன் - மாலே!பூங்
கார்வானத் துள்ளாய்! கடலோடும் வெற்போடும்
பார்வான முண்டாய்!நீ பண்டு (84)
        - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி'  

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் உள்ள மற்றொரு சந்நிதி திருக்கார்வானம். கார் வானம் என்றால் மேகம் சூழ்ந்த வானம் என்று பொருள் படும். இந்த திவ்ய தேசப்பெருமாளின் பெயர் கள்வர். மேகம் சூழ்ந்த ஆகாயம் என்பது வானுலகைக் குறிக்கும் என்றால், வானுலகில் இருந்து கொண்டு மாயம் செய்பவன் என்ற பொருளில் இவர் 'கள்வன்' என்று அழைக்கப்படுகிறார் என்று கொள்ளலாம்.

இந்தக் கோயிலில் உள்ள மற்ற திவ்ய தேசப்  பெருமாள்களை 'ஊரகத்தாய்,' 'நீரகத்தாய்,' 'காரகத்தாய்' என்று திவ்ய தேசத்தின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுப் பாடியிருக்கும் திருமங்கை ஆழ்வார், இந்த திவ்யதேசத்துப் பெருமாளை பற்றிப் பாடும்போது 'கார்வானத்தில் உள்ளாய் கள்வா' என்று பெருமாளின் பெயரையும் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.

திருக்கள்வனூர் என்ற திவ்ய தேசம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் உள்ளது. அந்தப் பெருமாளின் பெயர் ஆதிவராஹப் பெருமாள். ஆயினும் இரண்டு திவ்யதேசங்களுக்கும் 'கள்வன்' என்ற பெயரோடு தொடர்பு இருப்பதால்,  தான் எந்தப் பெருமாளைப்  பற்றிப் பாடியிருக்கிறோம் என்பது பற்றிப் பிற்காலத்தில் ஏதும் குழப்பம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே திவ்ய தேசத்தின் பெயர், பெருமாளின் பெயர் ஆகிய இரண்டையும் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

உலகளந்த கோயில் பெருமாள் கோயிலின் முன்புறத்தில் பிரகாரத்தின் இறுதியில் திருநீரகத்துக்கு எதிர்ப்புறமாக, நாம் கோயிலில் நுழைந்ததுமே நமக்கு வலப்புறமாக அமைந்துள்ளது இந்தச் சந்நிதி. கார்வானப் பெருமாள் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் இரு தாயார்களுடன் சேவை சாதிக்கிறார்.

பெருமாளின் திருவுருவை இங்கே காணலாம்..

மூலவரின் பெயர் - கார்வானப் பெருமாள், கள்வர் பெருமாள்

தாயார் - கமலவல்லி நாச்சியார்

விமானம் - புஷ்கல விமானம்

தீர்த்தம் - கௌரி தீர்த்தம்.

பார்வதி தேவிக்குக் காட்சி கொடுத்திருக்கிறார்.

இந்த திவ்ய தேசம் பற்றியும் வேறு விவரங்கள் இல்லை.

திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல் இதோ:

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திரு நெடுந்தாண்டகம்
2058 நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
      நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
      உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
      காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
      பெருமான் உன் திருவடியே பேணினேனே             (8)

ஓம் நமோ நாராயணாய!




No comments:

Post a Comment