Sunday, September 4, 2016

34. திவ்ய தேச தரிசன அனுபவம் 13. திருப்பவளவண்ணம் (86)

தரிசனம் செய்த நாள் - 27/08/2016 (சனிக்கிழமை)
 தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
13. திருப்பவளவண்ணம் (86)

கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால்
உண்டறிந்து மோந்தறிந்து முய்யேனே - பண்டைத்
தவளவண்ணா! கார்வண்ணா! காமவண்ணா! கச்சிப்
பவளவண்ணா! நின்பொற் பதம். (86)
 - பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி.'

பச்சை விண்ணப் பெருமாள் கோயில், பவளப்பெருமாள் கோயில் ஆகிய இரண்டும் அருகருகே, சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் நேர் எதிரே அமைந்துள்ளன. ஒரு கோயிலிலிருந்து நேரே பார்த்தால் இன்னொரு கோயில் தெரியும். இவற்றில் பவள வண்ணப் பெருமாள் கோயில் மட்டும்தான் திருமங்கை ஆழ்வாரால் பாடப்பட்டு திவ்ய தேசமாக விளங்குகிறது.  ஆயினும் இரண்டு கோயில்களையும் சேவிப்பதுதான் முறையாகக் கருதப்படுகிறது.

நான் முதலில் சென்றது பச்சை வண்ணரின் கோயிலுக்குத்தான். உலகளந்த பெருமாள் கோயிலிலிருந்து போகும்போது இந்தக் கோயில்தான் முதலில் வருகிறது. இது மிகவும் சிறிய கோயில். ஆனால் நேர்த்தியாக அழகாக இருக்கிறது. நான் கோயிலுக்கு அருகில் சென்றபோது உற்சவர் புறப்பட்டு கோயிலுக்கு வெளியே வந்து விட்டார். உற்சவரைச்  சேவிக்க வேண்டுமென்று வேகமாக நடந்தும் முடியவில்லை. வேகமாக நடந்து உற்சவரைத் தாண்டிப்போய் அவரைச் சேவிக்க முயலும்போது அவர் என்னைத் தாண்டிப் போய் விடுவார். இரண்டு மூன்று முறை முயன்று விட்டுக் கோயிலுக்குத் திரும்பி விட்டேன். உற்சவர் முகத்தைச் சரியாகப் பார்க்க்க முடியவில்லையே என்று ஒரு குறை இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பவள வண்ணர்  கோயிலில் அவர் எனக்கு நிறைவான தரிசனத்தைக் கொடுக்கப் போகிறார் என்பது எனக்கு அப்போது தெரியாது.

பச்சை வண்ணரின் மேனி மரகதப்  பச்சை நிறம் கொண்டது என்பதால் இந்தப் பெயர். அமர்ந்த திருக்கோலம்.  தாயாரின் பெயர் மரகதவல்லி.

முகப்பிலேயே ஆஞ்சநேயர் சந்நிதியும், பிரகாரத்தில் ஆண்டாள் சந்நிதியும் உள்ளன.

பச்சை வண்ணரைச் சேவித்து விட்டுப் பவள வண்ணர் கோயிலுக்குச் சென்றேன். இது பச்சை வண்ணர் கோயிலை விடச் சற்றே  பெரியது.

கோயிலின் முன்புறத்தில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் ஆண்டாள். ராமர், அனந்தாழ்வார் சந்நிதிகள் உள்ளன. பெருமாள் சந்நிதிக்கு வெளியே ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் சந்நிதிகள் உள்ளன.

பவளவண்ணர் ஆதிசேஷன் மீது அமர்ந்து இருந்த திருக்கோலத்தில் பரமபதநாதனாக சேவை சாதிக்கிறார்.

பிரும்மாவின் யாகத்தைத் தடுக்க சரஸ்வதி அசுரர்களை அனுப்பியபோது, அந்த அசுரர்களுடன் போரிட்டு மகாவிஷ்ணு அவர்களை அழித்தார். போரிட்டபோது அவர் உடலில் அசுரர்களின் ரத்தம் சிந்தியதால் அவர் மேனி பவள நிறமாகத்  தோன்றியது. அந்தக் கோலத்திலேயே இங்கே காட்சி அளிக்கிறார்.

தாயாரின் பெயர் பவளவல்லி. அவருக்கு பிரகாரத்தில் தனி சந்நிதி உள்ளது.

பெருமாளுக்கு பிரவாளவண்ணன் என்றும் பெயர் உண்டு. தாயாரின் பெயர் பவளவல்லி மற்றும் பிரவாளவல்லி.

தீர்த்தம் - சக்ர தீர்த்தம்

விமானம் - பவள விமானம்

பிருகு மகரிஷி இந்தப் பெருமாளை வழிபட்டார் என்றும் ஒரு வரலாறு உண்டு. பெருமாள் சந்நிதியில் பிருகு மஹரிஷியின் விக்கிரகம் இருக்கிறது.

பவள வண்ணர் பிருகு மகரிஷி, அஸ்வினி தேவதைகள், பார்வதி ஆகியோருக்குகே காட்சி கொடுத்திருக்கிறார்.

பவள வ ண்ணப் பெருமாள் கோயிலுக்கு நான் வந்தபோது, உற்சவர் புறப்பாட்டுக்குத் தயாராக இருந்தார். பச்சை வண்ணரின் உற்சவர் இந்தக் கோயில் வாசலில் வந்து இறங்கினார். பவள வண்ணரின் உற்சவரும் வெளியே எழுந்தருளி, பச்சை வண்ணருக்கு அருகிலேயே நிலைகொண்டார். அன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இரண்டு உற்சவர்கள் முன்னிலையிலும், உறியடி உற்சவம் நடைபெறத்  தயாராக இருந்தது.

இரண்டு உற்சவர்களையும் ஒருங்கே வழிபட்டு விட்டு அடுத்த கோயிலுக்குக்  கிளம்பினேன்.


இந்த திவ்ய தேசம் பற்றித் திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல் இதோ.   
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திரு நெடுந்தாண்டகம்
2059 வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
      மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய்
கொங்குத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன்
      குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
      பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா
எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி
      ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே             (9)

ஓம் நாராயணாய!



No comments:

Post a Comment