Monday, September 12, 2016

36. திவ்ய தேச தரிசன அனுபவம் 15 - திருக்கச்சி அத்திகிரி (74)

தரிசனம் செய்த நாள் - 02/09/2016 (வெள்ளிக்கிழமை)
 தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
1. திருக்கச்சி - அத்திகிரி(74)
பொருளாசை மண்ணாசை பூங்குழலார் போகத்
திருளாசை சிந்தித் திராரே - அருளாளன்
கச்சித்  திருப்பதியா மத்தியூர்க் கண்ணன்றாள்
உச்சித் திருப்பதியா யென்று. (74)
- பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி.'


(இந்தப் பதிவுக்கான தகவல்கள் பல வலைத்தளங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த வலைத்தளங்களை உருவாக்கியவர்களுக்கு என் நன்றி!)

'நகரேஷு காஞ்சி (நகரங்களில் சிறந்தது காஞ்சி)' என்பது மகாகவி காளிதாசனின் வாக்கு. காஞ்சிபுரம் என்றாலே வரதராஜப் பெருமாள்தான். ஆழ்வார்களின் பாடல்களில் 'கச்சி' என்ற பெயர் தனியே வந்தால், அது வரதராஜப் பெருமாள் கோயிலைக் குறிப்பதாகவே திவ்யப் பிரபந்தங்களுக்கு வியாக்கியானம் எழுதிய பெரியவாச்சான் பிள்ளை கருதியிருக்கிறார். பிரும்மாவின் யாகத்தின்போது ஹோமகுண்டத்திலிருந்து தோன்றியவர் வரதராஜப் பெருமாள். சம்ஸ்கிருதத்தில் 'க' என்றால்  பிரும்மா, 'அஞ்சி' என்றால் பூஜிக்கப்பட்டது. க + அஞ்சி - 'காஞ்சி.'

முக்தி தரும் ஏழு தலங்களில் காஞ்சியும் ஒன்று. இது விஷ்ணுவின் இடுப்புப் பகுதி என்று கருதப்படுகிறது. மற்ற ஆறு தலங்களும், அவை குறிக்கும் பகவானின் உடல் உறுப்புகளும் வருமாறு:
அவந்தி - பாதம்,
துவாரகை - தொப்புள்,
ஹரித்வார் - மார்பு,
மதுரா - கழுத்து,
காசி - மூக்கு,
அயோத்தி - தலை.

இந்த திவ்ய தேசத்துக்கு விஷ்ணு க்ஷேத்திரம், சத்யவ்ரத க்ஷேத்திரம், ஸ்ரீ சக்ர பீடம், விஷ்ணு சாலை, ஹரி க்ஷேத்திரம், புண்யகோடி க்ஷேத்திரம், வைகுண்ட க்ஷேத்திரம், ஹஸ்திஸைல க்ஷேத்திரம், திரிஸ்ரோத க்ஷேத்திரம், திருக்கச்சி, ஹஸ்திகிரி, அத்திகிரி என்ற பல பெயர்கள் உண்டு. தனக்குத் திருமஞ்சனக் கைங்கர்யம் செய்து வந்த ராமானுஜரை, ஆளவந்தாருக்குப்  பிறகு வைஷ்ணவ ஆச்சார்ய பீடத்துக்குத் தலைமை ஏற்க ஸ்ரீரங்கத்துக்கு வரதராஜப் பெருமாள் அனுப்பி வைத்ததால், இந்தக் கோயிலுக்குத் தியாக மண்டபம் என்ற பெயரும் உண்டு.

இந்தப் பெருமாளை கிருதயுகத்தில் பிரும்மாவும், த்ரேதா யுகத்தில் கஜேந்திரன் என்ற யானையும், துவாபர யுகத்தில் பிரஹஸ்பதியும், கலியுகத்தில் அனந்தனும் (ஆதிசேஷன்) வழிபட்டதாக ஐதீகம்.

ஒருமுறை பிரம்மாவிடம் கோபித்துக்கொண்டு, சரஸ்வதி அவருடைய சிருஷ்டி தண்டத்தைப் பறித்து விட்டார். அதனால் பிரம்மாவால் படைப்புத் தொழிலைச் செய்ய முடியவில்லை. அவர் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு அவரை 100 அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும் அல்லது காஞ்சிபுரத்தில் ஒரு அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும் (ஒன்றுக்கு நூறாகப் பலன் கொடுக்கும் இடம் காஞ்சி) என்று சொல்ல, பிரம்மாவும் அவ்வாறே காஞ்சியில் தவம் மேற்கொண்டார்.

பிரம்மாவின் தவத்தைக் கலைக்க சரஸ்வதி அரக்கர்களை அனுப்பினார். அரக்கர்களை விஷ்ணு அழித்தார். (இந்த வரலாறு காஞ்சியில் உள்ள திருவெ ஃகா, அஷ்டபுயங்கம், திருத்தண்கா, திருப்பவளவண்ணம் ஆகிய திவ்ய தேசங்களுடனும் தொடர்புடையது.) பிறகு, வேகவதி என்ற நதியாகப் பெருக்கெடுத்து வந்து யாகத்தைத் தடுக்க முயன்றார் சரஸ்வதி. அப்போது விஷ்ணு வேகவதி நதியின் குறுக்கே அணைபோல் படுத்துக்கொண்டு நதியைத் தடுக்க, தோல்வியடைந்த சரஸ்வதி, பூமிக்குள்  மறைந்தார்.

பிரம்மா யாகத்தை நிறைவு  செய்ததும், யாகத்தீயிலிருந்து தீப்பிழம்பாக வெளிப்பட்ட விஷ்ணு, பிரம்மாவுக்கு சிருஷ்டி தண்டத்தை அளித்தார். பிரம்மாவின் வேண்டுகோளின்படி யாகத்தீயில் தோன்றிய உருவத்துடன் வரதராஜன் என்ற பெயரில் புண்யகோடி விமானத்தின் கீழே கோயில் கொண்டார்.

தேவர்களின் குருவான பிரஹஸ்பதி இந்திரன் சாபத்தினால் மனிதனாகப் பிறந்து பல துயரங்களுக்கு ஆளானார். பரத்வாஜ முனிவரின் அறிவுரைப்படி இங்கே வந்து வரதரை  வழிபாட்டு, சாபவிமோசனம் பெற்றார். அதனால் இந்தக் கோயிலில் வழிபட்டால் ஜாதகத்தினால் ஏற்படும் குரு தோஷங்கள் விலகும் என்று நம்பப்படுகிறது.

தீர்த்த யாத்திரையின்போது, அர்ஜுனன் காஞ்சிக்கு வந்து வரதராஜரையும், அஷ்டபுஜங்கரையும் வணங்கியதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாணக்கியர், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், ஹர்ஷ சக்ரவர்த்தியால் நிறுவப்பட்ட நாலந்தா  பல்கலைக்கழகத்தின் முதல் தலைவரான தர்மபாலர் ஆகிய அறிஞர்களும் இங்கு வந்து வழிபட்டு ஞானம் பெற்றிருக்கின்றனர்.

பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார், திருக்கச்சி நம்பிகள், ராமானுஜர், கூரத்தாழ்வார், சிவபக்தரான அப்பய்ய தீக்ஷிதர், நடாதூர் அம்மாள், புரந்தரதாசர் போன்ற பல ஆன்மிகப் பெரியோர்களும் வரதனின் அருளைப்  பெற்றுள்ளனர். குலோத்துங்க சோழனால் கண்கள் பறிக்கப்பட்ட கூரத்தாழ்வார் தன் பார்வையைத் திரும்பப் பெற்றது வரதராஜனின் அருளால்தான்.

'கஞ்சி வரதப்பா, எங்கே வரதப்பா?' என்று இந்தக் கோயிலைத் தேட
வேண்டியதில்லை. சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு, வாலாஜாபாத் வழியாக வந்தால், காஞ்சிபுரத்துக்குள் நுழைந்தவுடனேயே, நமது இடது புறத்தில், இந்தக் கோயிலின் நீளமான மதில்களைப் பார்க்கலாம். ஸ்ரீபெரும்புதூர் வழியாக வந்தால் நகரின் மறு கோடியில்(பெரிய காஞ்சிபுரம் அல்லது சிவகாஞ்சி) நுழைந்து, இந்தக் கோடிக்கு (சின்ன காஞ்சிபுரம் அல்லது விஷ்ணு காஞ்சி) வர வேண்டும். பஸ் ஸ்டாண்டில் இருந்து ஷேர் ஆட்டோக்கள் உள்ளன.

20 ஏக்கர் பரப்பளவில், பல பிரகாரங்களைக் கொண்ட, விஸ்தாரமான கோயில் இது. மேற்கு கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் இடதுபுறம் நூறு கால் மண்டபம். நான்
சென்றபோது மண்டபம் பூட்டப்பட்டிருந்தது. இதற்குள் பல அற்புதமான சிற்பங்கள் இருக்கின்றன. கண்ணாடியில் முகம் பார்க்கும் பெண், யாகம் செய்யும் விசுவாமித்திரர், சீதா கல்யாணம், வாலி வதம், அனுமான் சீதையிடம் கணையாழி கொடுத்தல், தசாவதாரக் காட்சிகள், அனுமான் சஞ்சீவி மலையைத் தூக்கி வருவது போன்ற சிற்பங்கள். மண்டபத்தின் நான்கு மூலைகளிலும் கருங்கல் சங்கிலிகள் தொங்குகின்றன. மண்டபத்துக்கு நடுவே உள்ள மேடையில் விசேஷ நாட்களில் உற்சவர் எழுந்தருள்வார்.

மண்டபத்துக்கு அருகே கோயில் திருக்குளம். இதன் பெயர் அனந்த சரஸ்.
ஆதிசேஷன் இதில் நீராடியதால் இதற்கு சேஷ தீர்த்தம் என்றும் பெயர். இந்தக் குளத்தின் நடுவில் உள்ள நீராழி மண்டபத்தின் அடியில் நீருக்குள் வெள்ளிப் பேழையில் அத்தி வரதரின் (அத்தி மரத்தாலான) விக்கிரகம் உள்ளது.

பிரும்மாவின் யாகத்தீயில் தோன்றியதால் அத்திவரதரின்  உடல் வெப்பத்தால் தகித்தது. தன்னைத் திருக்குளத்துக்குள் எழுந்தருளச் செய்யச் சொல்லி அர்ச்சகரின் கனவில் வந்து பெருமாள் சொன்னதால், அவ்வாறே அவர் எழுந்தருளப்பட்டார். பெருமாளின் ஆணைப்படி, பழைய சீவரம் என்ற ஊரில் (காஞ்சியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊர்) இதே போன்ற தோற்றம் உள்ள விக்கிரகம் எடுத்து வரப்பட்டு மூலவராக ஸ்தாபிக்கப்பட்டது.


மேலும், 40 வருடங்களுக்கு ஒருமுறை தன்னை வெளியே எடுத்து ஒரு மண்டலம் (45 நாட்கள்) பூஜிக்க வேண்டும் என்றும் பெருமாள் கூறியதாகவும் ஐதீகம். 1979ஆம் ஆண்டு அத்தி வரதர் வெளியே எடுக்கப்பட்டார். அப்போது அவரை தரிசிக்கும் பேறு  எனக்குக்  கிடைத்தது. மீண்டும் ஜூலை 2019இல், அத்திவரதர்  வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்.

தீயிலிருந்து வந்த பெருமாள் என்பதால் அவரைக் குளிர்விக்க வேண்டும் என்பதற்காக, அவருக்கு ஆலவட்ட கைங்கரியம் (விசிறி வீசுதல்) செய்து வந்தார் திருக்கச்சி நம்பிகள். இவர்  பூவிருந்தவல்லியில் (பூந்தமல்லி) நந்தவனம் அமைத்து, அங்கிருந்து பூக்களைப்  பறித்து மாலைகள் தொடுத்து தினமும் அங்கிருந்து காஞ்சிக்கு நடந்தே வந்து பெருமாளுக்கு மாலைகள் சாத்தி, ஆலவட்டக் கைங்கரியம் செய்து மகிழ்ந்தவர். வரதராஜப்   பெருமாளுடன் உரையாடும் பேறு பெற்றவர் இவர்.

ராமானுஜர் 6 கேள்விகளைத் திருக்கச்சி நம்பி மூலம் பெருமாளிடம் கேட்க, அவற்றுக்குப் பெருமாள் அளித்த பதில்கள்தான் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத் தத்துவத்துக்கு அடிப்படையாக அமைந்தன. 'ராமானுஜ தரிசனம்' என்று அழைக்கப்படும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் உருவானதில் வரதரின் பங்களிப்பும் உண்டு!

திருக்குளத்தின் மேற்கே வேணுகோபாலன், பூவராகன் சந்நிதிகள் உள்ளன. குளத்தின் வடக்குக் கரையில் ரங்கநாதர் சந்நிதி. கிழக்குக்  கரையில் சக்கரத்தாழ்வார் சந்நிதி. பொதுவாக எல்லா சக்கரத்தாழ்வார் சந்நிதிகளிலும்  இருப்பது போல ஒரு புறம் சக்கரத்தாழ்வார், மறுபுறம் நரசிம்மர் என்று இரண்டு மூர்த்திகள்.

திருக்குளத்தை தாண்டிப்போனால், வெளிப்பிரகாரம். இதன் பெயர் நம்மாழ்வார் வீதி. இந்தப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நம்மாழ்வார் சந்நிதி இருக்கிறது. இங்கே நம்மாழ்வாருடன், மதுரகவி ஆழ்வாரும், நாதமுனிகளும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

இதே பிரகாரத்தின் கிழக்குப் பகுதியில் ராமானுஜர், மணவாள  மாமுனிகள், திருக்கச்சி நம்பிகள் ஆகியோரின் சந்நிதிகள் இருக்கின்றன. ராமானுஜர் சந்நிதியில், முதலாழ்வார்கள் மூவர், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய ஆழ்வார்களும், ஆளவந்தார், கூரத்தாழ்வார் ஆகிய ஆச்சார்யர்களும் சேவை சாதிக்கின்றனர்.

இந்தப்பிரகாரத்தின் முடிவில் கொடிமரத்துக்கு முன்பு  வேதாந்த தேசிகர் சந்நிதி இருக்கிறது.

கொடிமரத்தைக் கடந்து உள்ளே நுழைந்தால், இடதுபுறம் பெரிய மண்டபம். கோயில் முழுவதுமே பல மண்டபங்களும், சிற்பத்தூண்களும் இருப்பது சிறப்பு. இந்தப் பிரகாரத்தின் வடக்குப்புறத்தில் ராமர், அனந்தாழ்வார், கருமாணிக்கவரதர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.  மேற்குப்பகுதியில் ஒரு பெரிய மண்டபம். அமைதியான இந்த மண்டபத்தில் அமர்ந்து இரண்டு மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தனர்!

மேற்குப்பக்கத்தில் மடைப்பள்ளி மட்டுமே. சந்நிதிகள் இல்லை. பிரகாரத்தின் முடிவில் கிழக்கு நோக்கியபடி பெருந்தேவித்தாயார் சந்நிதி. இந்தச் சந்நிதியின் விமானம் கல்யாணகோடி  விமானம் என்று அழைக்கப்படுகிறது. இரு கைகளில் தாமரை மலர்களை ஏந்தியபடி, அபய, வரத ஹஸ்தங்களுடன் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் அமர்ந்திருக்கிறார் தாயார்.

பிருகு முனிவர் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தின் பலனாக அவருக்கு மகளாக அவதரித்தார் மகாலக்ஷ்மி. பெருந்தேவி என்ற பெயர் கொண்ட அவர் பொற்றாமரை மலர்களால் வரதராஜரைப் பூஜித்து வந்தார். சிவபெருமான், பிரும்மா, மற்ற தேவர்கள், முனிவர்கள் முன்னிலையில், வரதராஜர் பெருந்தேவியை மணந்து கொண்டார் என்பது தல புராணம்.

பெருந்தேவித் தாயரைச் சேவித்து விட்டு, உள்ளே வந்தால், அடுத்த பிரகாரத்தில் நமக்கு நேரே (மேற்கே பார்த்தபடி) அழகியசிங்கர் சந்நிதி. அவரைச் சேவித்து விட்டுப் பிரகாரத்தில் வலம் வந்தால், சேனைமுதன்மையார் (விஷ்வக்சேனர்), ஆண்டாள், மலையாள நாச்சியார், தன்வந்திரி ஆகியோர்  சந்நிதிகள் , இந்தப் பிரகாரத்துக்கு சேனையர்கோன் திருமுற்றம் என்று பெயர். கிழக்குப் பிரகாரத்தின் இறுதியில் உள்ள மேடையின் மீது வலம்புரி விநாயகர் சந்நிதியும் உள்ளது. பிரகாரத்தின் கிழக்குப்புறம் பெருமாள் சந்நிதிக்கான நுழைவாயில்.

அத்திகிரி என்ற குன்றின் மீது அமைந்திருக்கிறது பெருமாள் சந்நிதி. 24 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். 24 படிகள் காயத்ரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகின்றன. புண்யகோடி விமானத்தின் கீழே அமைந்துள்ள கருவறையில் சேவை சாதிக்கிறார் வரதர். கிழக்கே நோக்கி நின்ற திருக்கோலம். அருகில் சென்று, பெருமாளின் திருமுகத்தைப் பார்க்கும்போது அந்த முகத்தில் பொங்கி வழியும் அருளை உணர முடிகிறது. இந்த அருளே இந்தப் பெருமாளுக்கு ஒரு தனி அழகைக் கொடுக்கிறது என்று சொல்லலாம். பார்த்துக்கொண்டு அங்கேயே நின்று விடலாம் என்று தோன்றியது. அர்ச்சகர் விரட்டியும் போக மனம் வரவில்லை. இவரைப் 'பேரருளாளன்' என்று சொல்வது மிகப் பொருத்தமானதுதான்.

மூலவருக்குப் பெயர் தேவராஜன். தேவப்பெருமாள், அத்தியூரான், அத்தியூர் வரதன், தேவாதிராஜன், பேரருளாளன், கஜேந்திர வரதன், மாணிக்க வரதன், பிரணாதார்த்திஹரன் என்ற பெயர்களும் உண்டு.

வரதராஜன் என்ற பெயர் உற்சவரைத்தான் குறிக்கும்.

வேதாந்த தேசிகர் எழுதிய 'அடைக்கலப்பத்து' என்ற நூலின் பாசுரங்களை வெள்ளித்தகடுகளில் பதித்து வரதராஜருக்கு மாலையாக அணிவித்துள்ளனர்.
வேங்கட கவி என்று  அழைக்கப்படும் வெங்கடாத்ரி என்ற பக்தர் பெருமாளுக்கும் உபய நாச்சியார்களுக்கும் மரகதக் கற்கள் பதித்த  தங்கக்  கொண்டையை அளித்து மகிழ்ந்திருக்கிறார்.

ஆற்காடு யுத்தத்தின் பொது நோய்வாய்ப்பட்டிருந்த ராபர்ட் கிளைவ் வரதராஜரின் துளஸித் தீர்த்தம் அருந்தியபின் நோயிலிருந்து குணமடைந்தார். போர் முடிந்ததும், இந்தக் கோயிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டு விட்டு அவருக்கு  'மகர கண்டி' என்ற கழுத்தில் அணியும் ஒரு விலையுயர்ந்த ஆபரணத்தைக் காணிக்கையாக்கினார்.

இன்னொரு முறை, ஒரு பிரும்மோத்சவத்தின்போது, பெருமாளை தரிசித்த கிளைவ், பெருமாளின் தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்து தன் மனைவியின் சங்கிலியைப் பெருமாளுக்கு அளித்தார். கருடசேவையின்போது இந்தச் சங்கிலி பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

பிளேஸ் துரை  என்ற ஆங்கில அதிகாரி, தலையில் அணியும் தங்க ஆபரணத்தை வரதருக்குக் காணிக்கையாக்கி இருக்கிறார்.

இப்படித் தன்  அழகிய தோற்றத்தாலும், அருளாலும் பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்தவர் வரதர்,

தீயிலிருந்து தோன்றியவர் என்பதால் பெருமாளின் முகத்தில் வடுக்கள் ஏற்பட்டன. இந்த வடுக்களை உற்சவர் முகத்தில் காண முடியும் என்று சொல்கிறார்கள்.

ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும் பிரம்மா இக்கோயிலுக்கு வந்து வரதராஜரை வழிபாட்டு விட்டுச் செல்வதாக நம்பப்படுகிறது. சித்ரா பௌர்ணமியை அடுத்த 14 நாட்களில், மாலைச் சூரியனின் கதிர்கள் பெருமாளின் காலடியில் விழுமாறு கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது.

அத்திகிரி வரதரின் திருவுருவம் 

பெருமாளை தரிசித்த பிறகு, பிரகாரத்தில் உள்ள தங்கப்பல்லியை தரிசிக்கும் வழக்கம் உள்ளது. முனி குமாரர்கள் இருவர் முனிவரின் சாபத்தினால் பல்லிகளாகி இந்தத் தலத்துக்கு வந்து தவம் செய்து சாபவிமோசனம் பெற்றதாக ஒரு வரலாறு உண்டு. அவர்களின் நினைவாக இந்திரன் தங்கத்தால் ஆன பல்லி  ஒன்றையும், வெள்ளியால் ஆன பல்லி  ஒன்றையும் இங்கே ஸ்தாபித்தான். ஆயினும் இப்போது தங்கப்பல்லி மட்டும்தான் உள்ளது. இதைத் தொட்டு வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. நம் தலைக்கு மேலே, உயரத்தில்  நிறுவப்பட்டுள்ள சுமார் 3 அடி நீளம் உள்ள தங்கப்பல்லியை, படிகளில் ஏறிக் கையால் அதன் உடல் முழுவதும் தொட்டு வணங்கும் பழக்கம் உள்ளது. 

இந்த திவ்ய தேசத்தை திருமங்கை ஆழ்வார் (4 பாசுரங்கள்), பூதத்தாழ்வார் (2 பாசுரங்கள்), பேயாழ்வார் (1 பாசுரம்) ஆகியோர் போற்றிப் பாடியிருக்கிறார்கள். (மொத்தம் 7 பாசுரங்கள்.)

வரதராஜர் மீது, திருக்கச்சி நம்பிகள் 'தேவராஜ அஷ்டகம்' என்ற ஸ்தோத்திரத்தையும், கூரத்தாழ்வார் 'வரதராஜஸ்தவம்' என்ற ஸ்தோத்திரத்தையும், வேதாந்த தேசிகர்  'வரதராஜ பஞ்சஸத்,' 'அர்த்த பஞ்சகம்,' 'மெய்விரத மான்மியம்,' 'திருச்சின்ன மாலை' ஆகிய ஸ்தோத்திரங்களையும், மணவாள  மாமுனிகள் 'தேவராஜ மங்களம்' என்ற ஸ்தோத்திரத்தையும் இயற்றியி ருக்கிறார்கள்.

தியாகைய்யரும், முத்துசாமி தீக்ஷிதரும் இந்தப் பெருமாள் மீது கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார்கள். 

ஆழ்வார் பாசுரங்கள் இதோ.

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருநறையூர்:7
1540 கல் ஆர் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சி பாடகத்துள் 
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கைக்கோன் 
வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு 
நல்லானுடைய நாமம் சொல்லில்-நமோ நாராயணமே             (4)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருக்குறுந் தாண்டகம்
2049 பிண்டி ஆர் மண்டை ஏந்தி 
      பிறர் மனை திரிதந்து உண்ணும் 
முண்டியான் சாபம் தீர்த்த 
      ஒருவன் ஊர் உலகம் ஏத்தும் 
கண்டியூர் அரங்கம் மெய்யம் 
      கச்சி பேர் மல்லை என்று 
மண்டினார் உய்யல் அல்லால் 
      மற்றையார்க்கு உய்யல் ஆமே?            (19)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திரு நெடுந்தாண்டகம்
2059 வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் 
      மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய் 
கொங்குத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன் 
      குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான் 
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் 
      பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா 
எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி 
      ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே             (9)

2065 கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய 
      களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும் 
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி 
      அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் 
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி 
      தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு 
மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே 
      மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே             (15)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
பூதத்தாழ்வார் 
இரண்டாம் திருவந்தாதி
2275 என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை
வல் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தியூரான்             (95)
 
2276 அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின்மேல் துயில்வான் முத்தீ
மறை ஆவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்
இறை ஆவான் எங்கள் பிரான்             (96)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
பேயாழ்வார் 
மூன்றாம் திருவந்தாதி
2306 சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும் 
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும் 
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப்பாடியுமே 
தாம் கடவார் தண் துழாயார்             (26)

ஓம் நமோ நாராயணாய!
   

3 comments:

 1. அடியேன் காஞ்சியில் பிறந்து பேரருளாளனின் திருவடிகளில் வளர்ந்தவன் ஆகையால், இத்தலத்தை பற்றி அதிகம் வெளியில் தெரியாத விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

  1. புராணங்களில் இத்தலம் ஸத்யவ்ருத ஷேத்திரம் என்றே அறியப்படுகிறது. இங்கு செய்யும் பாவ புண்ணியங்களுக்கு 100 மடங்கு பலன் என்பதாலேயே அப்பெயர்.

  2. காஞ்சி மாநகர் சோழ பல்லவ ஆட்சி காலத்தில், நான்கு நகரங்களாக பிரிக்கப்பட்டிருந்தது: புத்த காஞ்சி, ஜைன காஞ்சி , சிவ காஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி. காஞ்சிபுரத்தின் மையமான தேரடி வீதிக்கு தெற்கே விஷ்ணு காஞ்சியும், வடக்கே சிவ காஞ்சியும் அமைந்துள்ளன.

  3. ப்ரம்மா யாகம் செய்தது, கோவிலுக்குள் நுழைந்தவுடன் இடப்பக்கம் இருக்கும் திருகுளத்து கரை மண்டபத்தில். சரஸ்வதி நதியின் சீற்றத்தை ஆதிசேஷன் ஆயிரம் தலை கொண்டு தடுத்ததால், அனந்த சரஸ் என்று பெயர்கொண்டது அந்த குளம்.

  4. யாகத்தின் இறுதியில், யாக குண்டத்தில் தோன்றியவர் தான் தேவாதிராஜன் என்று இன்றும் வணங்கப்படும் உற்சவர். நெருப்பினால் உண்டான வடுக்களை இன்றும் ஸ்வாமியின் திருமுகம் தெளிவாக காணலாம்.

  5. மற்ற எந்த திவ்ய தேசங்களிலும் இல்லாத மகிமையாய், இங்கு இவர் ராஜாதி ராஜனாக ஆட்சி செய்கிறார். தேசத்தை ஆளும் மன்னருக்குண்டான அனைத்து சடங்குகளும் இவருக்கு உண்டு. பெருமாள் என்பதை விட ராஜன் என்றே அதிகம் கொண்டாடப்படுகிறார். பெருந்தேவி தாயார் பட்டமகிஷி.

  6. பெருமாள் மீது பெரும்பக்தி கொண்ட கஜேந்திரன் என்ற யானையை, முதலையின் வாயிலிருந்து மீட்டு மோட்ஷம் கொடுத்த உண்மை சம்பவம் நடந்தது இத்தலத்தில் தான். 'கஜேந்திர மோட்ஷம்' காஞ்சி சாசனம்.

  7. 'ப்ரம்மா' ஒவ்வொரு வருடமும் வந்து பூஜிக்கும் பத்து நாட்களும் 'ப்ரம்ம உட்சவமாக கொண்டாடப்படுவது தொடங்கியது இங்கே தான். 10 நாட்களுக்கான பூஜை முறைகள் ப்ரம்மா வகுத்த விதி. இதை பின்பற்றியே அனைத்து வைணவ கோவில்களிலும் இந்த உட்சவம் நடக்கிறது.

  8. கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளும் விசேஷமும் முதல் முதலில் தொடங்கியது இங்கே தான். காஞ்சி கருட சேவை என்பது உலகப்பிரசித்தம் .

  9. ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் அருகில் இருப்பது போலவே, வேதாந்த தேசிகர் அவதரித்த 'தூப்புல்' என்ற தலமும் மிக அருகிலேயே உள்ளது.

  10. 108 திவ்யா தேசங்களில் ஒன்றான பரமபதத்தை சேவிக்க முடியாது, ஏனெனில் அது பூலோகத்தில் இல்லை. ஆகவே வருடத்திற்கு ஒருமுறை, தேவாதிராஜன் பரமபத நாதனாக சேவை சாதிக்கிறான், ப்ரம்ம உட்சவத்தின் பொது சேஷ வாகனத்தில்.

  பத்தி முதலாமவற்றுள் பதி எனக்கு கூடாமல்
  எத்திசையும் உழன்று ஓடி இளைத்து விழும் காகம் போல்
  முத்தி தரும் நகரெழில் முக்கியமாம் கச்சி தன்னில்
  அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே...!

  ReplyDelete