ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்கள் திவ்ய ப்ரபந்தம் என்று அழைக்கப்படுகின்றன.
ஒரு கால கட்டத்தில் இந்தப் பாசுரங்கள் மறைந்து போய் விட்டன. இவற்றை நமக்கு மீட்டுக்கொடுத்தவர் நாதமுனிகள் என்னும் ஆச்சாரியார்
காட்டுமன்னார்கோவிலில் அவதரித்திருந்த நாதமுனிகள், தம் ஊரில் இருந்த வீரநாராயணப் பெருமாள் கோயிலில் பெருமாளை வணங்கிக் கொண்டிருந்தபோது, திருநாரயணபுரத்திலிருந்து அந்தக் கோவிலுக்கு வந்திருந்த சில பக்தர்கள் 'ஆராவமுதே அடியேன் உடலம்...' என்று துவங்கும் (நம்மாழ்வார் அருளிச் செய்த) திருவாய்மொழிப் பாசுரத்தைப் பாடினார்கள்.
பத்தாவது பாசுரத்தில் 'ஆயிரத்துள் இப்பத்தும்...' என்று வரும்.
நாதமுனிகள் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவர். வேதங்கள் உணர்த்திய பொருளை இந்தப் பத்துப் பாடல்கள் மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் உரைத்ததைக் கண்டு வியந்து, "ஆயிரத்தில் இப்பத்தும் என்று வருகிறதே? மீதமுள்ள பாடல்கள் உங்களுக்குத் தெரியுமா?" என்று பாடலைப் பாடியவர்களிடம் கேட்டார்.
அவர்கள் அந்தப் பத்துப் பாடல்கள்தான் தங்களுக்குத் தெரியும் என்றனர். அவர்களிடம் அந்தப் பத்துப் பாடல்களைக் கற்றுக்கொண்ட நாதமுனிகள், பாடலில் 'குருகூர் நம்பி' என்ற சொற்றொடர் வந்ததால், திருக்குருகூருக்கு (ஆழ்வார் திருநகரி) விரைந்தார்.
அங்கே நெடுங்காலம் யோக நிஷ்டையில் இருந்த பராங்குச தாசர் என்னும் மதுரகவி ஆழ்வாரின் சிடரை அணுகி ஆயிரம் பாடல்கள் பற்றிக் கேட்டார். அவரிடமும் அப்பாடல்கள் இல்லை. ஆனால் அவர் நம்மாழ்வார் மீது மதுரகவி ஆழ்வார் பாடிய கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற பதினோரு பாடல்களை நாதமுனிகளுக்கு உபதேசித்து, அவற்றை 12,000 முறை பாராயணம் செய்பவர்களுக்கு நம்மாழ்வாரின் தரிசனம் கிடைக்கும் என்று கூறினார்.
நாதமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பை 12,000 முறை பாராயணம் செய்தததும் அவர் முன்பு நம்மாழ்வார் தோன்றினார். நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களையும் தனக்கு வழங்குமாறு நாதமுனிகள் வேண்ட, நம்மாழ்வார் தான் பாடிய பாடல்களோடு மற்ற ஆழ்வார்கள் பாடிய பாடல்களையும் சேர்த்து நாலாயிரம் பாடல்களை நாதமுனிகளுக்கு வழங்கினார்.
நாதமுனிகள் பாசுரங்களை நான்கு ஆயிரங்களாகப் பிரித்தார். சங்கீதம் தெரிந்தவராதலால் பாசுரங்களைப் பொருத்தமான ராகங்களில் பாடும் முறையையும் வகுத்துக் கொடுத்தார். அவர் வகுத்த முறைதான் இன்று வரை பின்பற்றப்படுகிறது.
ஒவ்வோரு ஆயிரமும் அஷ்டாட்சர மந்திரத்தின் ஒவ்வொரு பகுதியாகக் கருதப் படுகிறது.
முதல் ஆயிரம் 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும்,
இரண்டாவது ஆயிரம், 'நமோ' என்ற சொல்லையும்,
மூன்றாவது ஆயிரம், 'நாராயண' என்ற திருநாமத்தையும்,
நான்காவது ஆயிரம் 'ஆய' என்ற விகுதியையும் குறிக்கிறது என்பது ஐதீகம்.
'ப்ரபந்த சாரம்' என்ற தம்முடைய நூலில் மற்றொரு வைணவ ஆச்சாயரிரான வேதாந்த தேசிகர் 4,000 பாசுரங்களின் விவரங்களைக் கொடுத்திருக்கிறார்.
1 | பொய்கையாழ்வார் | முதல் திருவந்தாதி | 100 | |||||
2 | பேயாழ்வார் | இரண்டாம் திருவந்தாதி | 100 | |||||
3 | பூதத்தாழ்வார் | மூன்றாம் திருவந்தாதி | 100 | |||||
4 | திருமழிசையாழ்வார் | திருச்சந்த விருத்தம் | 120 | |||||
நான்முகன் திருவந்தாதி | 96 | 216 | ||||||
5 | நம்மாழ்வார் | திருவிருத்தம் | 100 | |||||
திருவாசிரியம் | 7 | |||||||
பெரிய திருவந்தாதி | 87 | |||||||
திருவாய்மொழி | 1102 | 1296 | ||||||
6 | மதுரகவி ஆழ்வார் | கண்ணி நுண் சிறுத்தாம்பு | 11 | |||||
7 | குலசேகராழ்வார் | பெருமாள் திருமொழி | 105 | |||||
8 | பெரியாழ்வார் | பெரியாழ்வார் திருமொழி | 473 | |||||
9 | ஆண்டாள் | திருப்பாவை | 30 | |||||
நாச்சியார் திருமொழி | 143 | 173 | ||||||
10 | தொண்டரடிப்பொடி ஆழ்வார் | திருமாலை | 45 | |||||
திருப்பள்ளி எழுச்சி | 10 | 55 | ||||||
11 | திருப்பாணாழ்வார் | அமலனாதிபிரான் | 10 | |||||
12 | திருமங்கை ஆழ்வார் | திருமொழி | 1084 | |||||
திருக்குறுந்தாண்டகம் | 20 | |||||||
திருநெடுந்தாண்டகம் | 30 | |||||||
திருவெழுக்கூற்றிருக்கை | 1 | |||||||
சிறிய திருமடல் | 40 | |||||||
பெரிய திருமடல் | 78 | 1253 | ||||||
13 | திருவரங்கத்தமுதனார் | ராமானுச நூற்றந்தாதி | 108 | |||||
மொத்தம் | 4000 |
ஆழ்வார்களின் பாசுரங்களுடன் திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த ராமானுச நூற்றந்தாதியையும் சேர்த்துத்தான் எண்ணிக்கை 4,000 வருகிறது.
மேலும், மதுரகவி ஆழ்வாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பின் 11 பாடல்களும் நம்மாழ்வாரைப்பற்றித்தான். இதில் ஒரு பாடல் கூட பெருமாளைப் பற்றியது இல்லை.
இந்த இரண்டு விஷயங்களையும் இணைத்துப் பார்க்கும்போது, வைணவ சம்பிராயதத்தில் நம்மாழ்வாருக்கும் ராமானுஜருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பான இடத்தை உணரலாம்.
நான்கு பகுதிகளிலும் அமைந்திருக்கும் பாசுரங்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் ஆயிரம் தவிர மற்ற ஆயிரங்கள் இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆயிரம் என்றெல்லாம் அழைக்கப்படுவதில்லை. இரண்டாவது பகுதி பெரிய திருமொழி என்றும், மூன்றாவது பகுதி திருவாய்மொழி என்றும், நான்காவது பகுதி இயற்பா என்றும் அழைக்கப்படுகின்றன. எனவே 'இரண்டாம் ஆயிரம்' போன்ற பெயர்கள் அடைப்புக்குறிகளுக்குள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
முதல் ஆயிரம் | பெரியாழ்வர் திருமொழி | 473 | |||||
திருப்பாவை | 30 | ||||||
நாச்சியார் திருமொழி | 143 | ||||||
பெருமாள் திருமொழி | 105 | ||||||
திருச்சந்த விருத்தம் | 120 | ||||||
திருமாலை | 45 | ||||||
திருப்பள்ளி எழுச்சி | 10 | ||||||
அமலனாதிபிரான் | 10 | ||||||
கண்ணி நுண் சிறுத்தாம்பு | 11 | 947 | |||||
பெரிய திருமொழி | பெரிய திருமொழி | 1084 | |||||
(இரண்டாம் ஆயிரம்) | திருக்குறுந்தாண்டகம் | 20 | |||||
திருநெடுந்தாண்டகம் | 30 | 1134 | |||||
திருவாய்மொழி | திருவாய்மொழி | 1102 | |||||
(மூன்றாம் ஆயிரம்) | |||||||
இயற்பா | முதல் திருவந்தாதி | 100 | |||||
(நான்காம் ஆயிரம்) | இரண்டாம் திருவந்தாதி | 100 | |||||
மூன்றாம் திருவந்தாதி | 100 | ||||||
நான்முகன் திருவந்தாதி | 96 | ||||||
திருவிருத்தம் | 100 | ||||||
திருவாசிரியம் | 7 | ||||||
பெரிய திருவந்தாதி | 87 | ||||||
திருவெழுக்கூற்றிருக்கை | 1 | ||||||
சிறிய திருமடல் | 40 | ||||||
பெரிய திருமடல் | 78 | ||||||
ராமானுச நூற்றந்தாதி | 108 | 817 | |||||
மொத்தம் | 4000 |
No comments:
Post a Comment