தரிசனம் செய்த நாள் - 21/12/2017 (வியாழக்கிழமை)
சீர்வந்த வுந்தித் திசைமுகனா லல்லாதென்சோர்வந்த சொல்லிற் சுருங்குமோ?-ஆர்வம்
ஒருவரங்கக் கோயி லுகந்தவரை யாள்வான்
திருவரங்கக் கோயிற் சிறப்பு. (1)
- பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி.'
இந்த முறை வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு வரும் பகல் பத்து நேரத்தில் கோயிலுக்குச் செல்லும் பாக்கியத்தை எனக்கு அருளினார் அரங்கன்.
திருமாலினால் பிரம்மாவுக்கு வழங்கப்பட்ட ரங்கநாதர் விக்கிரகம் பிரம்மாவினால் வழிபடப்பட்டு வந்தது. பிறகு அது அவர் பேரன் இக்ஷ்வாகுவால் அயோத்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு தசரதர், ராமர் ஆகியோரால் வழிபடப்பட்டு வந்தது.
ராமபிரானால் விபீஷணனுக்கு வழங்கப்பட்டு, விபீஷணன் அந்த விக்கிரகத்தை விமானத்துடன் இலங்கைக்கு எடுத்துச் செல்லும்போது பங்குனி மாதம் பிரம்மோத்சவம் செய்வதற்காக விக்கிரகத்தை விமானத்துடன் ஸ்ரீரங்கத்தில் இறக்கி வைத்தான் விபீஷணன்.
அப்போது விக்கிரகத்தைப் பார்த்த சோழ அரசன் தர்மவர்மன் அந்த விக்கிரகம் அந்த இடத்திலேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். பெருமாளும் இதை விரும்பி இங்கேயே நிலைகொண்டு விட்டார். விபீஷணனுக்கு அருள் புரியும் வகையில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார் பெருமாள்.
திருமாலின் திருவடியிலிருந்து தோன்றியதால் கங்கை சிறப்புப் பெற்றதுபோல் தானும் சிறப்புப் பெற வேண்டும் என்று விரும்பி காவிரி நதி தவம் செய்தது.
காவிரியின் விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் பெருமாள் இங்கே பள்ளி கொண்டிருக்கிறார்.
மேற்கிலிருந்து வரும் காவிரி, காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிந்த பின், இரண்டு நதிகளுக்கும் இடையே இந்தத் தலம் அமைந்திருப்பதால் பெருமாளுக்கு மாலை போல் அமைந்திருக்கிறது காவிரி. அரங்கனின் காலடியிலும் காவிரி அமைந்திருப்பதாகக் கொள்ளலாம். தெற்கே காவிரி, வடக்கே கொள்ளிடம், இடையில் தீவு போல் திருவரங்கம். காவிரியும் கொள்ளிடமும் அரங்கனைச் சுற்றிக்கொண்டு போய் பூம்புகாரில் கடலில் கலக்கும் முன் மீண்டும் இணைவதால் மாலை பூர்த்தியாகிறது!
கோவிலைச் சுற்றி ஏழு பிரகாரங்கள் உள்ளன. வெளி மதிற்சுவர் 3072 அடி நீளமும் 2521 அடி அகலமும் கொண்டது. 155 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் 21 கோபுரங்கள், நான்கு வாயில்கள் உள்ளன.
தெற்கு வாசல் கோபுரம் ராஜ கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. பாதி மட்டும் கட்டப்பட்ட நிலையில் மொட்டை கோபுரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த கோபுரத்தை உயர்த்திக் கட்டியவர் அஹோபில மடத்தின் 44ஆவது ஜீயர் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ வேதாந்த தேசிக யதீந்த்ர மகாதேசிகன் அவர்கள். ஏராளமான பொருட்செலவில் நடந்த இந்த கோபுரப்பணி 1987இல் நிறைவடைந்தது.
இந்த கோபுரத்தின் உயரம் 236 அடி. இதில் 13 நிலைகளும் 12 கலசங்களும் உள்ளன. இதைக் கட்டி முடிக்க 7 ஆண்டுகள் ஆயின.
விமானம் - பிரணவாக்ருதி விமானம்
பெருமாள் இங்கே தெற்கே பார்த்தபடி ஆதிசேஷன் மீது சயனித்திருக்கிறார். மிக நீளமான திருவுருவம். திருமுடி, திருமேனி, திருவடி என்ற மூன்றையும் மூன்று வாசல்கள் வழியே தனித் தனியே தரிசிக்க வேண்டும் என்று என் தாயார் கூறுவார்.
சிறு வயதில் நான் கூட அதுபோல் தரிசித்திருக்கலாம். இப்போது அந்த வாய்ப்பு இல்லை. ஒரு சில நொடிகளில் திருமுடி முதல் திருவடி வரை வேகமாக தரிசித்து விட்டு வெளியேற வேண்டும். ஆயினும் இந்தத் தடவை, சில வினாடிகளே கிடைத்த போதிலும், தரிசனம் திருப்தியாக அமைந்திருந்தது.
பெருமாளை தரிசித்து விட்டு வெளியே வந்ததும் பாதுகைகளை தரிசிக்கலாம். (இந்தக் கோயிலில் பிரகாரத்தில் இன்னும் இரண்டு இடங்களில் பாதுகைகள் உள்ளன.) அருகில் விஷ்வக்சேனர் சந்நிதி. சற்றுத் தள்ளி அன்னமூர்த்தி, கம்பத்தடி ஆஞ்சநேயர், பெரியவாச்சான் பிள்ளை ஆகியோர் சந்நிதிகள்.
மூலவர் ரங்கநாதன், பெரிய பெருமாள், அழகிய மணவாளர் என்று அழைக்கப்படுகிறார். கிடந்த திருக்கோலம். புஜங்க சயனம். உத்சவர் நம்பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.
பெருமாள் இருக்கும் இடம் காயத்ரி மண்டபம். பெருமாள் சன்னதிக்கு இடப்புறம் அமைந்துள்ள கிளிமண்டபத்தில் இருக்கும் அருச்சுன மண்டபத்தில் உத்சவர் பகல்பத்து உற்சவத்துக்காக எழுந்தருளியிருந்தார், நான் சென்றபோது அரையர் சேவை சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
கிளிமண்டபத்தில் நம்பெருமாள் (உற்சவர்) எழுந்தருளியிருந்த இடத்துக்கு அருகே சேரகுலவல்லி நாச்சியார், பீபி நாச்சியார் சந்நிதிகள். பெருமாளுக்கு முன்பு இருபுறமும் ஆழ்வார்கள், உடையவர் (ராமானுஜர்), கூரத்தாழ்வார், திருக்கச்சி நம்பிகள், பிள்ளை லோகாச்சாரியார் ஆகியோரும் எழுந்தருளப்பட்டிருந்தனர்.
தாயார் ரங்கநாயகி. ரங்க நாச்சியார், பெரிய பிராட்டி என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. தாயார் சந்நிதிக்கு எதிரே தாயாரின் கட்டளைப்படி வேதாந்த தேசிகர் சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது.
பிரும்மாண்டமான இந்தக் கோவிலில் உள்ள சந்நிதிகளையும், மண்டபங்களையும் பட்டியலிடுவது கடினம். இங்கே மொத்தம் 54 சந்நிதிகள் இருப்பதாக திரு வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் கூறியிருக்கிறார்.
நாம் கோவிலுக்கு வரும் நேரத்தில் எல்லா சந்நிதிகளும் திறந்திருப்பது மிக அரிது. சரியான நேரத்தில் வந்தால் கூட நாம் ஒவ்வொரூ சந்நிதியாக தரிசித்துக்கொண்டு வருவதற்குள் சில சந்நிதிகள் மூடப்பட்டு விடலாம்!
சாலையிலிருந்து கோவிலுக்குள் நுழைந்தவுடனேயே சுவற்றில் இடப்புறத்தில் சிறிய ஆஞ்சநேயர் சந்நிதியும் வலப்புறத்தில் ஸ்ரீனிவாசப்பெருமாள் மற்றும் முனீஸ்வரன் ஆகியோர் சந்நிதியையும் பார்க்க முடிகிறது.
முதல் அகண்ட பிரகாரத்தில் நமக்கு இடப்புறமாக சக்கரத்தாழ்வார் சந்நிதி பிரும்மாண்டமாகக் காட்சி அளிக்கிறது. இந்த சக்கரத்தாழ்வார் சந்நிதிக்குப் பல்வகை பரிகாரங்களுக்காக நிறைய பேர் வருவது உண்டு. எல்லா சக்கரத்தாழ்வார் சந்நிதிகளிழும் உள்ளது போல் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது சக்கரத்தாழ்வாருக்குப் பின்னே யோக நரசிம்மரை தரிசிக்கலாம். இராமானுச நூற்றந்தாதி எழுதிய திருவரங்கத்தமுதனார் சந்நிதியும் இங்கே இருக்கிறது.
சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு அருகே அமிர்த கலச கருடன் சந்நிதி இருக்கிறது.
அடுத்த பிரகாரத்துக்குள் வந்தால் இடது புறம் நம்மாழ்வார்,மதுரகவி ஆழ்வார் சந்நிதிகள். வலதுபுறம் வரதராஜர், லக்ஷ்மிநாராயணர், திருக்கச்சி நம்பிகள், வேணுகோபாலன் (கோயிலில் மூன்று அல்லது நான்கு வேணுகோபாலன் சந்நிதிகள் உள்ளன), தோன்றமல்லர் நாயுடு தம்பதி (இவர்கள் வைகுண்ட ஏகாதசி உற்சவத்துக்கு ஸ்ரீரங்கம் வந்தபோது உற்சவம் முடிந்து விட்டதால் இங்கேயே தங்கி அடுத்த ஆண்டு உற்சவத்தைப்பார்த்து விட்டுச் சென்றார்கள்)ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.
இன்னும் கொஞ்சம் முன்னே வந்தால் மிக உயரமான கருடன் சந்நிதி. இதை விடப் பெரிய கருடன் விக்கிரகத்தை வேறெங்கும் பார்க்க முடியாது என்று நினைக்கிறேன்.)
அடுத்த பிரகாரத்தில் பிரதட்சிணமாகப் போனால் நாம் பார்க்கக்கூடிய சந்நிதிகள்/மண்டபங்கள் இவை
துலாபாரம்
திருக்கொட்டா ரம்
செங்கமலவல்லி நாச்சியார்
மேலப்பட்டாபிராமர்
முதலாழ்வார்கள்
தீர்த்தக்கரை வாசுதேவர்
தன்வந்திரி
பிறகு ரங்கநாயகித் தாயார் சந்நிதி. அதற்கு அருகில் மேட்டு அழகிய சிங்கர் சந்நிதி. இங்குதான் கம்பர் தனது ராமாயணத்தை அரங்கேற்றினார். அதில் வரும் நரசிம்ம அவதாரம் பற்றிய செய்யுட்களை அவர் படித்தபோது அழகியசிங்கர் 'சிரக்கம்பம், கரக்கம்பம்' செய்து (தலையை ஆட்டி, கைகளைக் கொட்டி) அவற்றை அங்கீகரித்தாராம். இந்தச் செய்தி எழுதப்பட்ட தகவல் பலகை முன்பு இங்கே வைக்கப்பட்டிருக்கும். இப்போது அது இல்லை. மீண்டும் வைத்தால் நல்லது.
அருகே பரமபத வாசல், அதற்கு அருகே
வாசுதேவர்
லக்ஷ்மிநாராயணர்
உள் தேசிகர் (ரங்கநாயகித் தாயாரின் விருப்பப்படி நிறுவப்பட்ட வேதாந்த தேசிகர் சந்நிதி)
கிருஷ்ணர்
கருத்துரை மண்டபம்
சந்திர புஷ்கரணி (திருக்குளம்)
கோதண்டராமர்
பரமபத நாதர்
ஆண்டாள் கண்ணாடி அறை
பிறகு மணல்வெளிப் பிரகாரத்தில்
கீழப்பட்டாபிராமர்
மணல்வெளி ஸ்ரீனிவாசப் பெருநாள்
பாதுகை (எதிர்ப்புறச்ச சுவரை ஒட்டி)
வேணுகோபாலன்
ஆகிய சந்நிதிகள்.
இடதுபுறமாகச் சென்றால் ஆயிரம்கால் மண்டபம், சேஷராயர் மண்டபம் ஆகியவை.
சேஷராயர் மண்டபம் அருகே ஒரு தனிக்கோவிலில் ராமானுஜர் சந்நிதி. ராமானுஜரின் பூதவுடல்தான் இங்கு விக்கிரகம்மாக இருப்பதாக ஒரு தவறான கருத்து பலரிடையே நிலவுவதைக் கேட்டிருக்கிறேன்.
சந்நிதிக்கு வெளியே இருக்கும் தகவல் பலகையில் குறிப்பிட்டுள்ளபடி, ராமானுஜரின் உடல் அரங்கனுக்கு அருகே இருக்க வேண்டும் என்ற அவர் விருப்பத்துக்கு ஏற்ப இங்கே புதைக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு புதிய உடல் தோன்றியது. அதுதான் இங்கே புதைக்கப்பட்டுள்ளது. 'ராமானுஜரின் உடலைப் பள்ளிப்படுத்திய பிறகு தோன்றிய புதிய உடல்' என்று தகவல் பலகையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தான் 'தானான திருமேனி' என்று குறிப்பிடுகின்றனர்.
ராமானுஜர் விக்கிரகத்துக்கு திருமஞ்சனம் (நீராட்டல்) கிடையாது. சித்திரையிலும், வைகாசியிழும் குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சாற்றும் வழக்கம் மட்டுமே உண்டு.
11 ஆழ்வார்களாலும் பாடப்பட்ட பெருமை கொண்டது ஸ்ரீரங்கம். (இன்னொரு ஆழ்வாரான மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரைப் பற்றி மட்டுமே பாடினார்.)
ஒவ்வொரு ஆழ்வாரும் பாடிய பாடல்களின் எண்ணிக்கையும், அவற்றுக்கு கீழே, பாடல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
பொய்கையாழ்வார் - 1
பூதத்தாழ்வார் - 4
பேயாழ்வார் - 1
திருமழிசை ஆழ்வார் - 14
நம்மாழ்வார் - 12
குலசேகராழ்வார் - 31
பெரியாழ்வார் -35
ஆண்டாள் - 10
தொண்டரடிப்பொடியாழ்வார் - 55
திருப்பாணாழ்வார் - 10
திருமங்கையாழ்வார் - 73
மொத்தம் - 246
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
1. பொய்கையாழ்வார்
முதல் திருவந்தாதி
முதல் திருமொழி6. ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை. (2087)
2. பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
மூன்றாம் திருமொழி28 .மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன். (2209)
ஐந்தாம் திருமொழி
46. பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், - பயின்ற
தணிதிகழும் சோலை யணிநீர் மலையே
மணிதிகழும் வண்தடக்கை மால். (2227)
ஏழாம் திருமொழி
70. தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,
ஏவல்ல எந்தைக் கிடம். (2251)
ஒன்பதாம் திருமொழி
88. திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை,
திறம்பா வருசென்றார்க் கல்லால், - திறம்பாச்
செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்
கடிநகர வாசற் கதவு. (2269)
3. பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
ஏழாம் திருமொழி62. விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,
மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. (2343)
4. திருமழிசையாழ்வார்
நான்முகன் திருவந்தாதி
முதல் திருமொழி 3. பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும்,
ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், - ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்
அருபொருளை யானறிந்த வாறு? (2384)
மூன்றாம் திருமொழி
30. அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில்
அவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன
துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே,
வெள்ளத் தரவணையின் மேல். (2411)
நான்காம் திருமொழி
36. நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத் தனா வான் (2417)
ஆறாம் திருமொழி
60. ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று,நின்
தாட்பார்த் துழிதருவேன் தன்மைய - கேட்பார்க்
கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம். (2441)
திருச்சந்த விருத்தம்
மூன்றாம் திருமொழி 21. அரங்கனே! தரங்கநீர்க லங்கவன்று குன்றுசூழ்
மரங்கடேய மாநிலம்கு லுங்கமாசு ணம்சுலாய்
நெருங்கநீ கடைந்தபோது நின்றசூர ரெஞ்செய்தார்
குரங்கையா ளுகந்தவெந்தை கூறுதேற வேறிதே. (772)
49. கொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு வுனி வுன்
உண்டை கொண்டு அர“க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர்,
நண்டை உண்டு நாரை யோ, வாளை பாய, நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயுமு அந்தண் நீர்அரங்கமே (800)
50. வெண்திரைக் கருங்கடல் சிவந்துவேவ, முன் ஒர் நாள்
திண்திறற் சிலைக்கைவாளி விட்டவீரர் சேரும் ஊர்,
எண திசைக் கணங்களும் இறைஞ்சிஆடு தீர்த்த நீர்,
வண்டுஇரைத்த சோலை வேலி, மன்னுசீர் அரங்கமே (801)
ஆறாம் திருமொழி
51. சரங்களைத் துரந்து வில் வளைத்து, இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்-இடம்,
பரந்துபொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத்து அயன்பணிந்த கோயிலே. (802)
52. பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்த்தைப்
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர்,
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர்,
அற்ற பற்றர், சுற்றி வாழும் அந்தண் நிர் அரங்கமே. (803)
53. மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே. (804)
54. இலைத்தலைச்ச ரந்துரந்தி லங்கைகட்ட ழித்தவன்
மலைத்தலைப்பி றந்திழிந்து வந்துநுந்து சந்தனம்
குலைத்தலைத்தி றுத்தெறிந்த குங்குமக்கு ழம்பினோடு
அலைத்தொழுகு காவிரிய ரங்கமேய வண்ணலே. (805)
55. மன்னுமாம லர்க்கிழத்தி வையமங்கை மைந்தனாய்
பின்னுமாயர் பின்னைதோள்ம ணம்புணர்ந்த தன்றியும்
உன்னபாத மென்னசிந்தை மன்னவைத்து நல்கினாய்
பொன்னிசூ ழரங்கமேய புண்டரீக னல்லையே. (806)
பத்தாம் திருமொழி
93. சுரும்பரங்கு தண்டுழாய்து தைந்தலர்ந்த பாதமே
விரும்பிநின்றி றைஞ்சுவேற்கி ரங்கரங்க வாணனே
கரும்பிருந்த கட்டியேக டல்கிடந்த கண்ணனே(870)
பொன்னிசூழ ரங்கமேய பூவைவண்ணமாயகேள் (844)
பன்னிரண்டாம் திருமொழி
119. என்னதாவி யென்னும் வல்வினையினுள்கொ ழுந்தெழுந்து
உன்னபாத மென்னநின்ற வொண்சுடர்க்கொ ழுமலர்
மன்னவந்து பூண்டுவாட்ட மின்றுயெங்கும் நின்றதே
இரும்பரங்க வெஞ்சரம்து ரந்தவில்லி ராமனே.(870)
5. நம்மாழ்வார்
திருவிருத்தம்
மூன்றாம் திருமொழி28. தண்ணந் துழாய்வளை கொள்வது யாமிழப் போம்- நடுவே
வண்ணம் துழாவியோர் வாடை யுலாவும்- வள்வாயலகால்
புள்நந் துழாமே பொருநீர்த் திருவரங் கா! அருளாய்
எண்ணந் துழாவு மிடத்துஉள வோபண்டும் இன்னன்னவே? (2505)
திருவாய்மொழி
இரண்டாம் திருமொழி7-2-1. கங்குலும் பகலும் கண் துயி லறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்,
சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும் தாமரைக் கண் என்று தளரும்,
எங்ஙனே தரிக்கே னுன்னைவிட்டு என்னும் இருநிலம் கைதுழா விருக்கும்,
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய். இவள்திறத் தெஞ்செய்கின் றாயே? (3572)
(3573)
2. எஞ்செய்கின் றாயென் தாமரைக் கண்ணா என்னும்கண் ணீர்மல்க இருக்கும்,
எஞ்செய்கே னெறிநீர்த் திருவரங் கத்தாய்? என்னும்வெவ் வுயிர்த்துயிர்த் துருகும்
முன்செய்த வினையே. முகப்படாய் என்னும் முகில்வண்ணா. தகுவதோ? என்னும்,
முஞ்செய்திவ் வுலகம் உண்டுமிழந் தளந்தாய் எங்கொலோ முடிகின்ற திவட்கே? (3573)
3. வட்கிலள் இறையும் மணிவண்ணா! என்னும் வானமே நோக்கும்மை யாக்கும்,
உட்குடை யசுரர் உயிரெல்லா முண்ட ஒருவனே என்னுமுள் ளுருகும்,
கட்கிலீ உன்னைக் காணுமா றருளாய் காகுத்தா! கண்ணனே! என்னும்,
திட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்! இவள்திறத் தென்செய்திட் டாயே? (3574)
4. இட்டகால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்துலாய் மயங்கும்கை கூப்பும்,
கட்டமே காதல் என்றுமூர்ச் சிக்கும் கடல்வண்ணா. கடியைகாண் என்னும்,
வட்டவாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்றென்றே மயங்கும்,
சிட்டனே செழுநீர்த் திருவரங் கத்தாய் இவள்திறத் தெஞ்சிந்தித் தாயே (3575)
5. சிந்திக்கும் திசைக்கும் தேறும்கை கூப்பும் திருவரங் கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும், ஆங்கே மழைக்கண்ணீர் மல்க வந்திடாய் என்றென்றே மயங்கும்,
அந்திப்போ தவுணன் உடலிடந் தானே அலைகடல் கடைந்தவா ரமுதே,
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல்செய் தானே. (3576)
6. மையல்செய் தென்னை மனம்கவர்ந்தானே என்னும் மா மாயனே! என்னும்,
செய்யவாய் மணியே என்னும் தண் புனல்சூழ் திருவரங் கத்துள்ளாய்! என்னும்,
வெய்யவாள் தண்டு சங்குசக் கரம்வில் ஏந்தும்விண் ணோர்முதல் என்னும்,
பைகொள்பாம் பணையாய்! இவள்திறத் தருளாய் பாவியேன் செய்யற்பா லதுவே. (3577)
7. பாலதுன் பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்றநின் றானே,
காலசக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா கண்ணணே! என்னும்,
சேல்கொள்தண் புனல்சூழ் திருவரங் கத்தாய். என்னும் என் தீர்த்தனே! என்னும்,
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே! (3578)
8. கொழுந்துவா னவர்கட்கு என்னும் குன்றேந்திக் கோநிரை காத்தவன்! என்னும்,
அழுந்தொழும் ஆவி அனலவெவ் வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே! என்னும்,
எழுந்துமேல் நோக்கி யிமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன்? என்னும்,
செழுந்தடம் புனல்சூழ் திருவரங் கத்தாய். என்செய்கேன் என்திரு மகட்கே? (3579)
9. என்திரு மகள்சேர் மார்வனே! என்னும் என்னுடை யாவியே. என்னும்,
நின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட நிலமகள் கேள்வ னே! என்னும்,
அன்றுரு வேழும் தழுவிநீ கொண்ட ஆய்மகள் அன்ப னே! என்னும்,
தென்திரு வரங்கம் கோயில்கொண் டானே! தெளிகிலேன் முடிவிவள் தனக்கே! (3580)
10. முடிவிவள் தனக்கொன் றறிகிலேன் என்னும் மூவுல காளியே. என்னும்,
கடிகமழ் கொன்றைச் சடையனே. என்னும் நான்முகக் கடவுளே! என்னும்,
வடிவுடை வானோர் தலைவ னே!என்னும் வண்திரு வரங்கனே! என்னும்,
அடியடை யாதாள் போலிவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே! (3581)
11.முகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்,
துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண்பொழில்சூழ் வண்குரு கூர்ச்சட கோபன்,
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொன்மாலை ஆயிரத் திப்பத்தும் வல்லார்,
முகில்வண்ண வானத் திமையவர் சூழ இருப்பர்பே ரின்பவெள் ளத்தே. (3582)
6. குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி
முதல் திருமொழி1. இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே (647)
2.வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்
காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே! (648)
3. எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும் எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு
எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும் தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங் கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே (649)
4. மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி
ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்
பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே (650)
5. இணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்பத் தும்புருவும் நாரதனு மிறைஞ்சி யேத்த
துணியில்லாத் தொன்மறைநூல் தோத்தி ரத்தால் தொன்மலர்க்க ணயன்வணங்கி யோவா தேத்த
மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ மதிளரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
மணிவண்ண னம்மானைக் கண்டு கொண்டென் மலர்சென்னி யென்றுகொலோ வணங்கும் நாளே (651)
6. அளிமலர்மே லயனரனிந் திரனோடு ஏனை அமரர்கள்தம் குழுவுமரம் பையரும் மற்றும்
தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவு முந்தித் திசைதிசையில் மலர்தூவிச் சென்று சேரும்
களிமலர்சேர் பொழிலரங்கத் துரக மேறிக் கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்
ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டென் உள்ளமிக என்றுகொலோ வுருகும் நாளே (652)
7. மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்
துறந்துஇருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்ட ரான
அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே (653)
8. கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்
காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக் கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப
சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே (654)
9. தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர் மழைசோர நினைந்துருகி யேத்தி நாளும்
சீரார்ந்த முழவோசை பரவை காட்டும் திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி யம்மானைக் கண்டு துள்ளிப் பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே (655)
10. வன்பெருவா னகமுய்ய அமர ருய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய
துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச் சுகம்வளர அகமகிழுந் தொண்டர் வாழ
அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும் அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும் இசைந்துடனே யென்றுகொலோ விருக்கு நாளே (656)
11. திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டுத் திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல்விளங்கு கருமேனி யம்மான் றன்னைக் கண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால்
குடைவிளங்கு விறல்தானைக் கொற்ற வொள்வாள் கூடலர்கோன் கொடைகுலசே கரன்சொற்செய்த
நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே (657)
இரண்டாம் திருமொழி
1. தேட்டரும்திறல் தேனினைத்தென் னரங்கனைத்திரு மாதுவாழ்
வாட்டமில்வன மாலைமார்வனை வாழ்த்திமால்கொள்சிந் தையராய்
ஆட்டமேவி யலந்தழைத்தயர் வெய்தும்மெய்யடி யார்கள்தம்
ஈட்டம்கண்டிடக் கூடுமேலது காணும்கண்பய னாவதே (658)
2. தோடுலாமலர் மங்கைதோளிணை தோய்ந்ததும்சுடர் வாளியால்
நீடுமாமரம் செற்றதும்நிரை மேய்த்துமிவை யேநினைந்து
ஆடிப்பாடி அரங்கவோஎன்ற ழைக்கும்தொண்ட ரடிப்பொடி
ஆடனாம்பெறில் கங்கைநீர்குடைந் தாடும்வேட்கையென் னாவதே (659)
3. ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன்னி ராமனாய்
மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட ரங்கன்கோயில் திருமுற்றம்
சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே (660)
4. தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன் உண்டலும்உடன்
றாய்ச்சிகண்டு ஆர்த்ததோளுடை யெம்பிரானென்ன ரங்கனுக்கடி
யார்களாய் நாத்தழும்பெழ நாரணாவென்ற ழைத்துமெய்தழும் பத்தொழு
தேத்திஇன்புறும் தொண்டர்சேவடி ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே (661)
5. பொய்சிலைக்குர லேற்றெருத்தமி றுத்துபோரர வீர்த்தகோன்
செய்சிலைச்சுடர் சூழொளித்திண்ண மாமதிள்தென்ன ரங்கனாம்
மெய்சிலைக்கரு மேகமொன்றுதம் நெஞ்சில்நின்று திகழப்போய்
மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந் தென்மனம்மெய்சி லிர்க்குமே (662)
6. ஆதியந்தம னந்தமற்புதம் ஆனவானவர் தம்பிரான்
பாதமாமலர் சூடும்பத்தியி லாதபாவிக ளுய்ந்திட
தீதில்நன்னெரி காட்டியெங்கும் திரிந்தரங்கனெம் மானுக்கே
காதல்செய்தொண்டர்க் கெப்பிறப்பிலும் காதல்செய்யுமென் னெஞ்சமே (663)
7. காரினம்புரை மேனிநல்கதிர் முத்தவெண்ணகைச் செய்யவாய்
ஆரமார்வ னரங்கனென்னும் அரும்பெருஞ்சுட ரொன்றினை
சேரும்நெஞ்சின ராகிச்சேர்ந்துக சிந்திழிந்தகண் ணீர்களால்
வாரநிற்பவர் தாளிணைக்கொரு வாரமாகுமென் னெஞ்சமே (664)
8. மாலையுற்றக டல்கிடந்தவன் வண்டுகிண்டுந றுந்துழாய்
மாலையுற்றவ ரைப்பெருந்திரு மார்வனைமலர்க் கண்ணனை
மாலையுற்றெழுந் தடிப்பாடித்தி ரிந்தரங்கனெம் மானுக்கே
மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு மாலையுற்றதென் நெஞ்சமே (665)
9. மொய்த்துக்கண்பனி சோரமெய்கள்சி லிர்ப்பஏங்கி யிளைத்துநின்று
எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந் தாடிப்பாடியி றைஞ்சிஎன்
அத்தனச்ச னரங்கனுக்கடி யார்களாகி அவனுக்கே
பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார்முற்றும் பித்தரே (666)
10. அல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன்மெய்யடி யார்கள்தம்
எல்லையிலடி மைத்திறத்தினில் என்றுமேவு மனத்தனாம்
கொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன்குல சேகரன்
சொல்லினின்தமிழ் மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்க ளாவரே. (667)
மூன்றாம் திருமொழி
1. மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்
இவ் வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
மையல் கொண்டொழிந் தேனென்றன் மாலுக்கே (668)
2. நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்
ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஆலியா அழையா அரங்கா வென்று
மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே (669)
3. மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும்
பாரி னாரொடும் கூடுவ தில்லையான்
ஆர மார்வ னரங்க னனந்தன்நல்
நார ணன்நர காந்தகன் பித்தனே (670)
4. உண்டி யேயுடை யேயுகந் தோடும்இம்
மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான்
அண்ட வாண னரங்கன்வன் பேய்முலை
உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே (671)
5. தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்
நீதி யாரொடும் கூடுவ தில்லையான்
ஆதி ஆய னரங்கன்அந் தாமரைப்
பேதை மாமண வாளன்றன் பித்தனே (672)
6. எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன்
உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன்
தம்பி ரானம ரர்க்குஅரங் கநகர்
எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே (673)
7. எத்தி றத்திலும் யாரொடும் கூடும்அச்
சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்
அத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பித்த னாயொழிந் தேனெம்பி ரானுக்கே (674)
8. பேய ரேயெனக் கியாவரும் யானுமோர்
பேய னேயெவர்க் கும்இது பேசியென்
ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே (675)
9.அங்கை யாழி யரங்க னடியிணை தங்கு
சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்
கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்
இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே (676)
எட்டாம் திருமொழி
தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே
ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோபெரியாழ்வார் (728)
7. பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி
ஏழாம் திருமொழி
2. கருவுடை மேகங்கள் கண்டால்உன்னைக் கண்டாலொக்கும் கண்கள்
உருவுடை யாய்உல கேழும் உண்டாக வந்து பிறந்தாய்
திருவுடையாள் மணவாளா திருவரங் கத்தே கிடந்தாய்
மருவி மணம்கமழ் கின்ற மல்லிகைப் பூச்சூட்ட வாராய் (183)
8. சீமா லிகனவ னோடு தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனைநீ யெண்ணிச் சக்கரத் தால்தலை கொண்டாய்
ஆமா றறியும் பிரானே அணியரங் கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச்சூட்ட வாராய். (189)
இரண்டாம் பத்து
ஒன்பதாம் திருமொழி
11. வண்டுகளித் திரைக்கும் பொழில்சூழ் வருபுனல் காவிரித் தென்ன ரங்கன்
பண்டவன் செய்த கிரீடை யெல்லாம் பட்டர் பிரான்விட்டு சித்தன் பாடல்
கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன்அடி யார்க ளாகி
எண்திசைக் கும்விளக் காகி நிற்பார் இணையடி என்தலை மேல னவே. (212)
மூன்றாம் பத்து
மூன்றாம் திருமொழி
கன்னிநன் மாமதிள் சூழ்தரு பூம்பொழில் காவிரித் தென்ன ரங்கம்
மன்னிய சீர்மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வு கந்து
உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே யூட்டி ஒருப்ப டுத்தேன்
என்னின் மனம்வலி யாள்ஒரு பெண்இல்லை என்குட்ட னேமுத் தம்தா. (245)
நான்காம் பத்து
எட்டாம் திருமொழி
1. மாதவத்தோன் புத்திரன்போய் மறிகடல்வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர்
தோதவத்தித் தூய்மறையோர் துறைபடியத் துளும்பிஎங்கும்
போதில்வைத்த தேன்சொரியும் புனலரங்க மென்பதுவே.( 402)
2. பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப்பொழுதில் கொணர்ந்துகொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர்
மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை யளித்திருப்பார்
சிறப்புடைய மறையவர்வாழ் திருவரங்க மென்பதுவே. (403)
3. மருமகன்தன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர்
திருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க் கருங்குவளை
பொருமுகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே. (404)
4. கூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள்வாய்க் கடியசொல்கேட்டு
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிய
கான்தொடுத்த நெறிபோகிக் கண்டகரைக் களைந்தானூர்
தேந்தொடுத்த மலர்ச்சோலைத் திருவரங்க மென்பதுவே. (405)
5.பெருவரங்க ளவைபற்றிப் பிழகுடைய இராவணனை
உருவரங்கப் பொருதழித்துஇவ் வுலகினைக்கண்
பெறுத்தானூர் குருவரும்பக் கோங்கலரக் குயில்கூவும் குளிர்பொழில்சூழ்
திருவரங்க மென்பதுவே என்திருமால் சேர்விடமே. (406)
6.கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே
ஆழிவிடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர்
தாழைமட லூடுரிஞ்சித் தவளவண்ணப் பொடியணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம்வைக்கும் அரங்கமே. (407)
7. கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய
பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர்
தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்புடைய காவிரிவந்து அடிதொழும் சீரரங்கமே. (408)
8. வல்லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய்
எல்லையில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான் குணம்பாடி
மல்லிகைவெண் சங்கூதும் மதிளரங்க மென்பதுவே. (409)
9.குன்றாடு கொழுமுகில்போல் குவளைகள்போல்
குரைகடல்போல் நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமாலூர்
குன்றாடு பொழில்நுழைந்து கொடியிடையார் முலையணவி
மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே. (410)
10. பருவரங்க ளவைபற்றிப் படையாலித் தெழுந்தானை
செருவரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதிமேல்
திருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தனகொண்டு
இருவரங்க மெரித்தானை ஏத்தவல்லா ரடியோமே. (411)
நான்காம் பத்து
ஒன்பதாம் திருமொழி
1. மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்
வானோர் வாழச்
செரு உடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட
திருமால் கோயில்
திருவடிதன் திருஉருவும் திருமங்கை மலர்க்கண்ணும்
காட்டி நின்று
உரு உடைய மலர்நீலம் காற்று ஆட்ட ஒலிசலிக்கும்
ஒளி அரங்கமே (412)
2. தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும்
சிதகு உரைக்குமேல்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்
என்பர் போலும்
மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கைத் திசைநோக்கி
மலர்க்கண் வைத்த
என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு
ஆள் ஆவரே? (413)
3. கருள் உடைய பொழில் மருதும் கதக் களிறும் பிலம்பனையும்
கடிய மாவும்
உருள் உடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டு
ஓசை கேட்டான்
இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து
ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர்
அணி அரங்கமே (414)
4. பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணிசெய்யத்
துவரை என்னும்
மதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்
மன்னு கோயில்
புது நாள்மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றிற்
பூவே போல்வான்
பொது-நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும்
புனல் அரங்கமே (415)
5. ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய்
அரு வரைகளாய்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த்
தானும் ஆனான்
சேமம் உடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக்
கிடந்தான் கோயில்
பூ மருவிப் புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும்
புனல் அரங்கமே (416)
6. மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே
மன்னர் ஆக்கி
உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட உயிராளன்
உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய் முனிவர்களும்
பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சத் திசை-விளக்காய் நிற்கின்ற
திருவரங்கமே (417)
7. குறள் பிரமசாரியாய் மாவலியைக் குறும்பு அதக்கி
அரசுவாங்கி
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த
எம்மான் கோயில்
எறிப்பு உடைய மணிவரைமேல் இளஞாயிறு எழுந்தாற்போல்
அரவு-அணையின்
சிறப்பு உடைய பணங்கள்மிசைச் செழுமணிகள் விட்டு
எறிக்கும் திருவரங்கமே (418)
8. உரம் பற்றி இரணியனை உகிர்-நுதியால் ஒள்ளிய மார்வு
உறைக்க ஊன்றிச்
சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க வாய் அலறத்
தெழித்தான் கோயில்
உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல்
உயர்ந்து காட்ட
வரம்பு உற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத் தலைவணக்கும்
தண் அரங்கமே (419)
9. தேவு உடைய மீனமாய் ஆமையாய் ஏனமரி
குறளும் ஆகி
மூ-உருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய்
முடிப்பான் கோயில்
சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி
ஊசல் ஆடிப்
பூ-அணைமேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும்
புனல் அரங்கமே (420)
10 செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் செருச்செயும்
நாந்தம் என்னும்
ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன்
விழுக்கை யாளன்
இரவு ஆளன் பகலாளன் எனையாளன் ஏழு உலகப்
பெரும் பேராளன்
திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற
திருவரங்கமே (421)
11. கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழிப் படை உடையான்
கருதும் கோயில்
தென்நாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கத்
திருப்பதியின் மேல்
மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ்
உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ் இணை பிரியாது
இருப்பர் தாமே (422)
நான்காம் பத்து
பத்தாம் திருமொழி
1. துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவ ரென்றே
ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே. (423)
2. சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கர மேந்தி னானே
நாமடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன்த மர்கள்
போமிடத்து உன்திறத்து எத்த னையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆமிடத் தேஉன்னைச் சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே. (424)
3. எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன்தமர் பற்றும் போது
நில்லுமி னென்னும் உபாய மில்லை நேமியும் சங்கமும் ஏந்தி னானே
சொல்லலாம் போதேஉன் நாம மெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
அல்லல் படாவண்ணம் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே. (425)
4. ஒற்றை விடைய னும்நான் முகனும் உன்னை யறியாப் பெருமை யோனே
முற்ற உலகெல்லாம் நீயே யாகி மூன்றெழுத் தாய முதல்வ னேயா
அற்றது வாணாள் இவற்கென் றெண்ணி அஞ்ச நமன்தமர் பற்ற லுற்ற
அற்றைக்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே. (426)
5. பையர வினணைப் பாற்க டலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றி னாய்நான் முகனை
வைய மனிசரைப் பொய்யென் றெண்ணிக் கால னையும் உடனே படைத்தாய்
ஐய இனிஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே. (427)
6. தண்ணென வில்லை நமன்த மர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும்ஆ காசமு மாகி நின்றாய்
எண்ணலாம் போதேஉன் நாம மெல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு
என்றும் அண்ணலே நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே. (428)
7. செஞ்சொல் மறைப்பொரு ளாகி நின்ற தேவர்கள் நாயக னேஎம் மானே
எஞ்ச லிலென்னு டையின் னமுதே ஏழுல குமுடை யாய்என் னப்பா
வஞ்ச வுருவின் நமன்த மர்கள் வலிந்து நலிந்துஎன்னைப் பற்றும் போது
அஞ்சலை மென்றுஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே. (429)
8. நான்ஏதும் உன்மாய மொன்ற றியேன் நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புகேயென்று மோதும் போதுஅங் கேதும்நான் உன்னை நினைக்க மாட்டேன்
வானேய் வானவர் தங்க ளீசா மதுரைப் பிறந்த மாமாய னேஎன்
ஆனாய்நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே. (430)
9. குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவ னேஎம் மானே
அன்று முதல்இன் றறுதி யாக ஆதியஞ் சோதி மறந்த றியேன்
நன்றும் கொடிய நமன்த மர்கள் நலிந்து வலிந்துஎன்னைப் பற்றும் போது10.
அன்றங்கு நீஎன்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே. (431)
101. மாய வனைமது சூதனன் தன்னை மாதவ னைமறை யோர்க ளேத்தும்
ஆயர்க ளேற்றினை அச்சுதனன் தன்னை அரங்கத் தரவணைப் பள்ளி யானை
வேயர் புகழ் வில்லிபுத் தூர்மன் விட்டுசித் தன்சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தன ராகி வல்லார் தூமணி வண்ணனுக் காளர் தாமே. (432)
8. ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
பதினோராம் திருமொழி1. தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே (607)
2. எழிலுடைய வம்மனைமீர் என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே (608)
3. பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்
செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே (609)
4. மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற
பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்
இச்சை யுடையரே லித்தெருவே போதாரே (610)
5. பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே (611)
6. கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர்
செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே (612)
7. உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்
திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே (613)
8. பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்குபண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே (614)
9. கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே (615)
10. செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த
மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே (616)
9. தொண்டரடிப்பொடி ஆழ்வார்
திருமாலை
1. காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்துநாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வநின் நாமம்கற்ற
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே. (872)
2. பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே. (873)
3. வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே. (874)
4. மொய்த்தவல் வினையுள் நின்று மூன்றெழுத் துடைய பேரால்
கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை யடிய ரானார்க் கிரங்கும்நம் மரங்க னாய
பித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே. (875)
5. பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும்போதும் உடலுக்கே கரைந்து நைந்து
தண்டுழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடியாடி
தொண்டுபூண் டமுத முண்ணாத் தொழும்பர்சோ றுகக்குமாறே. (876)
6. மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே. (877)
7. புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம்
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம்
தலையறுப் புண்டும் சாவேன் சத்தியங் காண்மின் ஐயா
சிலையினா லிலங்கை செற்ற தேவனே தேவனாவான். (878)
8. வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்சாக் கியர்கள் நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே. (879)
9. மற்றுமோர் தெய்வ முண்டே மதியிலா மானி டங்காள்
உற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென் றுணர மாட்டீர்
அற்றமே லொன்ற றீயீர் அவனல்லால் தெய்வ மில்லை
கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமி னீரே. (880)
10. நாட்டினான் தெய்வ மெங்கும் நல்லதோ ரருள்தன் னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பி மீர்காள். கெருடவா கனனும் நிற்க
சேட்டைதன் மடிய கத்துச் செல்வம்பார்த் திருக்கின் றீரே. (881)
11. ஒருவில்லா லோங்கு முந்நீர் அனைத்துல கங்க ளுய்ய
செருவிலே யரக்கர் கோனைச் செற்றநம் சேவ கனார்
மருவிய பெரிய கோயில் மதிள்திரு வரங்க மென்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக் கின்றீரே (882)
12.நமனும்முற் கலனும் பேச நரகில்நின் றார்கள் கேட்க
நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி
அவனதூ ரரங்க மென்னாது அயர்த்துவீழ்ந் தளிய மாந்தர்
கவலையுள் படுகின் றாரென் றதனுக்கே கவல்கின் றேனே. (883)
13. எறியுநீர் வெறிகொள் வேலை மாநிலத் துயிர்க ளெல்லாம்
வெறிகொள்பூந் துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த
அறிவிலா மனித ரெல்லாம் அரங்கமென் றழைப்ப ராகில்
பொறியில்வாழ் நரக மெல்லாம் புல்லெழுந் தொழியு மன்றே. (884)
14. வண்டின முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல்மீ தணவும் சோலை குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோ னமரும் சோலை அணிதிரு வரங்க மென்னா
மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை விலக்கிநாய்க் கிடுமி னீரே. (885)
15. மெய்யர்க்கே மெய்ய னாகும் விதியிலா வென்னைப் போல
பொய்யர்க்கே பொய்ய னாகும் புட்கொடி யுடைய கோமான்
உய்யப்போ முணர்வி னார்கட் கொருவனென் றுணர்ந்த பின்னை
ஐயப்பா டறுத்துத் தோன்றும் அழகனூ ரரங்க மன்றே. (886)
16. சூதனாய்க் கள்வ னாகித் தூர்த்தரோ டிசைந்த காலம்
மாதரார் கயற்க ணென்னும் வலையுள்பட் டழுந்து வேனை
போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்துதன்பால்
ஆதரம் பெருகவைத்த அழகனூ ரரங்க மன்றே. (887)
17. விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே. (888)
18. இனிதிரைத் திவலை மோத எறியும்தண் பரவை மீதே
தனிகிடந் தரசு செய்யும் தாமரைக் கண்ண னெம்மான்
கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணணைக் கண்ட கண்கள்
பனியரும் புதிரு மாலோ எஞ்செய்கேன் பாவி யேனே. (889)
19. குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே. (890)
20. பாயுநீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க் ககல லாமே. (891)
21. பணிவினால் மனம தொன்றிப் பவளவா யரங்க னார்க்கு
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லைநெஞ் சேநீ சொல்லாய்
அணியனார் செம்பொ னாய அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்க லாமே (892)
22. பேசிற்றே பேச லல்லால் பெருமையொன் றுணர லாகாது
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன்
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால்
பேசத்தா னாவ துண்டோ பேதைநெஞ் சேநீ சொல்லாய் (893)
23. கங்கயிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்
எங்கள்மா லிறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே. (894)
24. வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள்
கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டு
உள்ளமே வலியைப் போலும் ஒருவனென் றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே. (895)
25.குளித்துமூன் றனலை யோம்பும் குறிகொளந் தணமை தன்னை
ஒளித்திட்டே னென்க ணில்லை நின்கணும் பத்த னல்லேன்
களிப்பதென் கொண்டு நம்பீ கடல்வண்ணா. கதறு கின்றேன்
அளித்தெனக் கருள்செய் கண்டாய் அரங்கமா நகரு ளானே. (896)
26. போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்ச மன்பு கலந்திலே னதுதன் னாலே
ஏதிலே னரங்கர்க்கு எல்லே எஞ்செய்வான் தோன்றி னேனே. (897)
27. குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி
தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன்
மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே னயர்க்கின் றேனே. (898)
28. உம்பரா லறிய லாகா ஒளியுளார் ஆனைக் காகி
செம்புலா லுண்டு வாழும் முதலைமேல் சீறி வந்தார்
நம்பர மாய துண்டே நாய்களோம் சிறுமை யோரா
எம்பிராற் காட்செய் யாதே எஞ்செய்வான் தோன்றி னேனே. (899)
29. ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே. (900)
30. மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோ ரிஞ்சொ லில்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே. (901)
31. தவத்துளார் தம்மி லல்லேன் தனம்படத் தாரி லல்லேன்
உவர்த்தநீர் போல வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்
துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே (902)
32. ஆர்த்துவண் டலம்பும் சோலை அணிதிரு வரங்கந் தன்னுள்
கார்த்திர ளனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும்
மார்க்கமொன் றறிய மாட்டா மனிசரில் துரிச னாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்க னேனே (903)
33. மெய்யெலாம் போக விட்டு விரிகுழ லாரில் பட்டு
பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்க னேஉன் அருளென்னு மாசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்ய னேனே
34. உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவா னுணர்வொன் றில்லா
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன்
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று
வெள்கிப்போ யென்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே. (905)
35. தாவியன் றுலக மெல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய்
சேவியே னுன்னை யல்லால்சிக் கெனச் செங்கண் மாலே
ஆவியே.அமுதே என்றன் ஆருயி ரனைய எந்தாய்
பாவியே னுன்னை யல்லால் பாவியேன் பாவி யேனே. (906)
36. மழைக்கன்று வரைமு னேந்தும் மைந்தனே மதுர வாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு
உழைக்கின்றேற் கென்னை நோக்கா தொழிவதேஉன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்கமா நகரு ளானே. (907)
37. தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கங் கத்துள் ளோங்கும்
ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயு மாவார்
எளியதோ ரருளு மன்றே எந்திறத் தெம்பி ரானார்
அளியன்நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே. (908)
38. மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிகவு ணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புல னகத்த டக்கி
காம்பறத் தலைசி ரைத்துன் கடைத்தலை யிருந்துவாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே. (909)
39. அடிமையில் குடிமை யில்லாஅயல்சதுப் பேதி மாரில்
குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய்கழற் கன்பு செய்யும்
அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகரு ளானே. (910)
40. திருமறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்த ராகில் மாநிலத் துயிர்க ளெல்லாம்
வெருவரக் கொன்று சுட்டிட் டீட்டிய வினைய ரேலும்
அருவினைப் பயன துய்யார் அரங்கமா நகரு ளானே. (911)
41. வானுளா ரறிய லாகா வானவா என்ப ராகில்
தேனுலாந் துளப மாலைச் சென்னியாய் என்ப ராகில்
ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றே. (912)
42. பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள்
இழிகுலத் தவர்க ளேலும் எம்மடி யார்க ளாகில்
தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்றுநின் னோடு மொக்க
வழிபட வருளி னாய்போன்ம் மதிள்திரு வரங்கத் தானே. (913)
43. அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும்
நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில்ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே. (914)
44. பெண்ணுலாம் சடையி னானும் பிரமனு முன்னைக் காண்பான்
எண்ணிலா வூழி யூழி தவஞ்செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறாஉன்னை யென்னோ களைகணாக் கருது மாறே. (915)
45. வளவெழும் தவள மாட மதுரைமா நகரந் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை
துவளத்தொண் டாய தொல்சீர்த் தொண்டர டிப்பொ டிசொல்
இளையபுன் கவிதை யேலும் எம்பிறார் கினிய வாறே. (916)
திருப்பள்ளி எழுச்சி
1. கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்கனவிரு ளகன்றது காலையம்பொழுதாய்
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே. (917)
2. கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்
கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ
எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்
ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி
விழுங்கிய முதலையின் பிலம்புரைபேழ்வாய்
வெள்ளெயி றுறவதன் விடத்தனுக்
கனுங்கி அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தரு ளாயே. (918)
3. சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ
பாயிறு ளகன்றது பைம்பொழில் கமுகின்
மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ
அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே. (919)
4. மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள்
வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும்
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்
இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவ ரேறே
மாமுனி வேள்வியைக் காத்துஅவ பிரதம்
ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே
அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே. (920)
5. புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசை கனைகட லரவம்
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தன ராதலி லம்மா
இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
எம்பெரு மான் பள்ளி யெழுந்தரு ளாயே. (921)
6. இரவியர் மணிநெடுந் தேரொடு மிவரோ
இறையவர் பதினொரு விடையரு மிவரோ
மருவிய மயிலின னறுமுக னிவனோ
மருதரும் வசுக்களும் வந்துவந் தீண்டி
புரவியோ டாடலும் பாடலும் தேரும்
குமரதண் டம்புகுந் தீண்டிய வெள்ளம்
அருவரை யனையநின் கோயில்முன் னிவரோ
அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே. (922)
7. அந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ
அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ
இந்திர னானையும் தானும்வந் திவனோ
எம்பெரு மானுன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே. (923)
8. வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா
எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு
ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ
தோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி
அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய்
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே. (924)
9. ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே
யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம்
மாதவர் வானவர் சாரண ரியக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே. (925)
10. கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித்
துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடி யென்னும்
அடியனை அளியனென் றருளியுன் னடியார்க்
காட்படுத் தாய்பள்ளி எழுந்தரு ளாயே (926)
11. திருப்பாணாழ்வார்
அமலனாதி பிரான்
1. அமல னாதிபிரா னடியார்க் கென்னை யாட்படுத்தவிமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத் தம்மான்திருக்
கமலபாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே. (927)
2. உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை
கவர்ந்த வெங்கணைக்காகுத்தன் கடியார்பொழில் அரங்கத்தம்மான்அரைச்
சிவந்த ஆடையின் மேல்சென்ற தாமென் சிந்தனையே. (928)
3. மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்
அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் அயனைப் படைத்த தோரெழில்
உந்தி மேலதன் றோஅடி யேனுள்ளத் தின்னுயிரே. (929)
4. சதுரமா மதிள்சூழ் ழிலங்கைக் கிறைவன் தலைபத்து
உதிர வோட்டிஓர் வெங்கணை யுய்த்தவ னோத வண்ணன்
மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத் தம்மான் திருவயிற்
றுதரபந் தனமென் னுள்ளத்துள்நின் றுலாகின்றதே (930)
5. பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன்கொ லறியே னரங்கத் தம்மான்திரு
வார மார்பதன் றோஅடி யேனை யாட்கோண்டதே. (931)
6. துண்ட வெண்பிறை யான்துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில்சூ ழரங்கநகர் மேயவப்பன்
அண்ட ரண்டபகி ரண்டத்தொரு மாநிலம் எழுமால்வரை முற்றும்
உண்ட கண்டங்கண் டீரடி யேனை யுய்யக்கொண்டதே! (932)
7. கையினார் சுரிசங்கன லாழியர் நீள்வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடியெம்
ஐயனார் அணியரங்கனா ரரவின ணைமிசை
மேயமாயனார் செய்யவா யையோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே. (933)
8. பரிய னாகி வந்த அவுண னுடல்கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிபிரா னரங்கத் தமலன் முகத்து
கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டவப்
பெரிய வாய கண்க ளென்னைப் பேதைமை செய்தனவே. (934)
9. ஆலமாமரத்தி னிலைமே லொருபாலகனாய்
ஞாலமேழு முண்டா னரங்கத் தரவி னணையான்
கோலமாமணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்
நீலமேனி யையோ நிறை கொண்டதென் நெஞ்சினையே. (935)
10. கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே. (936)
10. திருமங்கையாழ்வார்
பெரிய திருமொழி
முதல் பத்து
எட்டாம் திருமொழி
2. பல்லியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை,
பிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுமிடம்,
வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி, நாடொறும்
தெள்ளியார்வணங்கும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே (1019)
மூன்றாம் பத்து
ஏழாம் திருமொழி
6. எந்துணை யென்றெடுத்தேற் கிறையேனு மிரங்கிற்றிலள்,தன்துணை யாயவென்றன் தனிமைக்கு மிரங்கிற்றிலள்,
வன்துணை வானவர்க்காய் வரஞ்செற்றரங் கத்துறையும்,
இந்துணை வன்னொடும்போ யெழிலாலி புகுவர்க்கொலோ. (1213)
நான்காம் பத்து
நான்காம் திருமொழி1. உந்தி மேல்நான் முகனைப் படைத்தான் உல குண்டவன்
எந்தை பெம்மான், இமையோர்கள் தாதைக்கிட மென்பரால்,
சந்தி னோடு மணியும் கொழிக்கும்புனல் காவிரி,
அந்தி போலும் நிறத்தார் வயல்சூழ்தென் னரங்கமே! (1378)
2. வையமுண் டாலிலை மேவு மாயன்மணி நீண்முடி,
பைகொள் நாகத் தணையான் பயிலுமிட மென்பரால்,
தையல் நல்லார் குழல்மா லையும்மற்றவர் தடமுலை,
செய்ய சாந்தும் கலந்திழி புனல்சூழ்தென் னரங்கமே! (1379)
3. பண்டிவ் வைய மளப்பான் சென்றுமாவலி கையில்நீர்
கொண்ட ஆழித் தடக்கைக் குறளனிட மென்பரால்,
வண்டு பாடும் மதுவார் புனல்வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே. (1380)
4. விளைத்த வெம்போர் விறல்வா ளரக்கன்நகர் பாழ்பட,
வளைத்த வல்வில் தடக்கை யவனுக்கிட மென்பரால்,
துளைக்கை யானை மருப்பு மகிலும்கொணர்ந் துந்தி,முன்
திளைக்கும் செல்வப் புனல்கா விரிசூழ்தென் னரங்கமே, (1381)
5. வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான்புக,
அம்பு தன்னால் முனிந்த அழகனிட மென்பரால்,
உம்பர் கோனு முலகேழும் வந்தீண்டி வணங்கும்,நல்
செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே. (1382)
6. கலையு டுத்த அகலல்குல் வன்பேய்மகள் தாயென,
முலைகொ டுத்தா ளுயிருண் டவன்வாழுமிட மென்பரால்,
குலையெ டுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி, முன்
அலையெ டுக்கும் புனற்கா விரிசூழ்தென் னரங்கமே (1383)
7. கஞ்சன் நெஞ்சும் கடுமல் லரும்சகடமுங்காலினால்,
துஞ்ச வென்ற சுடராழி யான்வாழுமிட மென்பரால்,
மஞ்சு சேர்மா ளிகைநீ டகில்புகையும், மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்தென் னரங்கமே, (1384)
8. ஏன மீனா மையோடு அரியும்சிறு குறளுமாய்,
தானு மாயத் தரணித் தலைவனிட மென்பரால்,
வானும் மண்ணும் நிறையப் புகுந்தீண்டி வணங்கும்,நல்
தேனும் பாலும் கலந்தன் னவர்சேர்த்தென் னரங்கமே, (1385)
9. சேய னென்றும் மிகப்பெரியன் நுண்ணேர்மையி னாய, இம்
மாயையை ஆரு மறியா வகையானிட மென்பரால்,
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார்ப்புனற் காவிரி,
ஆய பொன்மா மதிள்சூழ்ந் தழகார்தென் னரங்கமே, (1386)
10. அல்லி மாத ரமரும் திருமார்வ னரங்கத்தை,
கல்லின் மன்னு மதிள்மங் கையர்கோன்கலி கன்றிசொல்,
நல்லிசை மாலைகள் நாலி ரண்டுமிரண் டுமுடன்,
வல்லவர் தாமுல காண்டு பின்வானுல காள்வரே. (1387)
ஐந்தாம் திருமொழி
1. வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே எங்கின் றாளால்,
மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண் துயில்மறந்தாள், வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர்த முயிராளன் ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட
திருவாளன் என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே. (1388)
2. கலையாளா வகலல்குல் கனவளையும் கையாளா என்செய் கேன்நான்,
விலையாளா வடியேனை வேண்டுதியோ வேண்டாயோ? என்னும், மெய்ய
மலையாளன் வானவர்த்தம் தலையாளன் மராமரமே ழெய்த வென்றிச்
சிலையாளன், என் மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே . (1389)
3. மானாய மென்னோக்கி வாநெடுங் கண்ணீர்மல்கும் வளையும் சோரும்,
தேனாய நறுந்துழா யலங்கலின் திறம்பேசி யுறங்காள் காண்மின்,
கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய்பருக நந்தன் பெற்ற
ஆனாயன், என் மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே. (1390)
4. தாய்வாயில் சொற்கேளாள் தன்னாயத் தோடணையாள் தடமென் கொங்கை
யே,ஆரச் சாந்தணியாள், எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்,
பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட பெருவயிற்றன் பேசில் நங்காய்,
மாமாய னென்மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கி லேனே. (1391)
5. பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண் மையெழுதாள் பூவை பேணாள்,
ஏணறியா ளெத்தனையும் எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும்,
நாண்மலராள் நாயகனாய் நாமறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி,
ஆண்மகனா யென்மகளைச் செய்தனகள் அம்மனைமீரறிகி லேனே. (1392)
6. தாதாடு வனமாலை தாரானோ வென்றென்றே தளர்ந்தாள் காண்மின்,
யாதானு மொன்றுரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும், பூமேல்
மாதாளன் குடமாடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன், என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சொல்லுகேனே. (1393)
7. வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே றாயினவா றெண்ணாள்,எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாள்இப் பெண்பெற்றே னென்செய் கேன்நான்,
தாராளன் தண்குடந்தை நகராளன் ஐவர்க்கா யமரி லுய்த்த தேராளன்,
என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் செப்பு கேனே. (1394)
8. உறவாது மிலளென்றென் றொழியாது பலரேசும் அலரா யிற்றால்,
மறவாதே யெப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின் றளால்,
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன், என்மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே. (1395)
9. பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்,
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்றென்றே வளையும் சோரும்,
சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு தைத்திரியன் சாம வேதி,
அந்தோ வந் தென்மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே, (1396)
10. சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத் தம்மானைச் சிந்தை செய்த,
நீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத் தாய்மொழிந்த வதனை, நேரார்
காலவேல் பரகாலன் கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார்,
மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராய்ப் பொன்னுலகில் வாழ்வர் தாமே. (1397)
ஆறாம் திருமொழி
1. கைம்மான மழகளிற்றைக் கடல்கிடந்த கருமணியை,
மைம்மான மரகதத்தை மறையுரைத்த திருமாலை,
எம்மானை எனக்கென்று மினியானைப் பனிகாத்த
வம்மானை, யான்கண்ட தணிநீர்த் தென் னரங்கத்தே, (1398)
2. பேரானைக் குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை, முத்திலங்கு
காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும்,
அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே, (1399)
3. ஏனாகி யுலகிடந்தன் றிருநிலனும் பெருவிசும்பும்,
தானாய பெருமானைத் தன்னடியார் மனத்தென்றும்
தேனாகி யமுதாகித் திகழ்ந்தானை, மகிழ்ந்தொருகால்
ஆனாயன் ஆனானைக் கண்டதுதென் னரங்கத்தே, (1400)
4. வளர்ந்தவனைத் தடங்கடலுள் வலியுருவில் திரிசகடம்,
தளர்ந்துதிர வுதைத்தவனைத் தரியாதன் றிரணியனைப்
பிளந்தவனை, பெருநிலமீ ரடிநீட்டிப் பண்டொருநாள்
அளந்தவனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே, (1401)
5. நீரழலாய் நெடுநிலனாய் நின்றானை, அன்றரக்கன்
ஊரழலா லுண்டானைக் கண்டார்பின் காணாமே,
பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப் பின்மறையோர் மந்திரத்தின்,
ஆரழலா லுண்டானைக் கண்டதுதென் னரங்கத்தே, (1402)
6. தஞ்சினத்தைத் தவிர்த்தடைந்தார் தவநெறியை, தரியாது
கஞ்சனைக்கொன் றன்றுலக முண்டுமிழ்ந்த கற்பகத்தை,
வெஞ்சினத்த கொடுந்தொழிலோன் விசையுருவை யசைவித்த,
அஞ்சிறைப்புட் பாகனையான் கண்டதுதென் னரங்கத்தே, (1403)
7. சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை, பிரியாது
வந்தெனது மனத்திருந்த வடமலையை, வரிவண்டார்
கொந்தணைந்த பொழில்கோவ லுலகளப்பா னடிநிமிர்த்த
அந்தணனை, யான்கண்ட தணிநீர்த்தென் னரங்கத்தே, (1404)
8. துவரித்த வுடையார்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும்,
அவர்கட்கங் கருளில்லா அருளானை, தன்னடைந்த
எமர்கட்கு மடியேற்கு மெம்மாற்கு மெம்மனைக்கும்,
அமரர்க்கும் பிரானாரைக் கண்டதுதென் னரங்கத்தே. (1405)
9. பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து,
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை,
மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரதகத்தின்,
அவ்வண்ண வண்ணனையான் கண்டதுதென் னரங்கத்தே. (1406)
10. ஆமருவி நிரைமேய்த்த அணியரங்கத் தம்மானை,
காமருசீர்க் கலிகன்றி யொலிசெய்த மலிபுகழ்சேர்
நாமருவு தமிழ்மாலை நாலிரண்டோ டிரண்டினையும்,
நாமருவி வல்லார்மேல் சாராதீ வினைதாமே. (1407)
ஏழாம் திருமொழி
1. பண்டைநால் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்,
பிண்டமாய் விரித்த பிறங்கொளி யனலும் பெருகிய புனலொடு நிலனும்,
கொண்டல்மா ருதமும் குரைகட லேழும் ஏழுமா மலைகளும் விசும்பும்,
அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே. (1408)
2. இந்திரன் பிரம னீசனென் றிவர்கள் எண்ணில்பல் குணங்களே யியற்ற,
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றிநின் றகலாப்
பந்தமும்,பந்த மறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல்லுயிர்க் கெல்லாம்,
அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே. (1409)
3. மன்னுமா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவ ருலகும்,
துன்னுமா யிருளாய்த் துலங்கொளி சுருங்கித் தொல்லைநான் மறைகளும் மறைய,
பின்னும்வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள் நிறங்கெட, ஒருநாள்
அன்னமாய் அன்றங் கருமறை பயந்தான் அரங்கமா நகரமர்ந் தானே, (1410)
4. மாயிருங் குன்ற மொன்றுமத் தாக மாசுண மதனொடும் அளவி,
பாயிரும் பௌவம் பகடுவிண் டலறப் படுதிரை விசும்பிடைப் படர,
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப,
ஆயிரந் தோளா லலைகடல் கடைந்தான் அரங்கமா நகரமர்ந் தானே, (1411)
5. எங்ஙனே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்குபூ ணகலம்,
பொங்குவெங் குருதி பொன்மலை பிளந்து பொழிதரு மருவியொத் திழிய,
வெங்கண்வா ளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல் விண்ணுறக் கனல்விழித் தெழுந்தது,
அங்ஙனே யொக்க அரியுரு வானான் அரங்கமா நகரமர்ந் தானே, (1412)
6. ஆயிரம் குன்றம் சென்றுதொக் கனைய அடல்புரை யெழில்திகழ் திரடோள்,
ஆயிரந் துணிய அடல்மழுப் பற்றி மற்றவன் அகல்விசும் பணைய,
ஆயிரம் பெயரா லமர்சென் றிறைஞ்ச அறிதுயி லலைகடல் நடுவே,
ஆயிரம் சுடர்வா யரவணைத் துயின்றான் அரங்கமா நகரமர்ந் தானே. (1413)
7. சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையிற் கடுவிசை யரக்கன்,
எரிவிழித் திலங்கு மணிமுடி பொடிசெய் திலங்கைபாழ் படுப்பதற் கெண்ணி,
வரிசிலை வளைய அடிசரம் துரந்து மறிகடல் நெறிபட, மலையால்
அரிகுலம் பணிகொண் டலைகட லடைத்தான் அரங்கமா நகரமர்ந் தானே.(1414)
8. ஊழியாய் ஓமத் துச்சியாய் ஒருகால் உடையதே ரொருவனாய் உலகில்
சூழிமால் யானைத் துயர்கெடுத் திலங்கை மலங்கவன் றடுசரந் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக் கருளிப் பகலவ னொளிகெட, பகலே
ஆழியா லன்றங் காழியை மறைத்தான் அரங்கமா நகரமர்ந் தானே. (1415)
9. பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால் பெருநிலம் விழுங்கியதுமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணிமுடி வானவர் தமக்குச்
சேயனாய், அடியேற் கணியனாய் வந்தென் சிந்தையுள் வெந்துய ரறுக்கும்,
ஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான் அரங்கமா நகரமர்ந் தானே. (1416)
10. பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்து பொருதிரை மாநதி புடைசூழ்ந்து,
அன்னமா டுலவும் அலைபுனல் சூழ்ந்த அரங்கமா நகரமர்ந் தானை
மன்னுமா மாட மங்கையர் தலைவன் மானவேற் கலியன்வா யொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்றறுப் பாரே. (1417)
எட்டாம் திருமொழி
1. ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து
மாழை மான்மட நோக்கியுன் தோழி, உம்பி யெம்பி யென் றொழிந்திலை, உகந்து
தோழ னீயெனக் கிங்கொழி என்ற சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட,
ஆழி வண்ணநின் னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே. (1418)
2. வாத மாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதியென் றொழிந்திலை, உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச் செய்த தகவினுக் கில்லைகைம் மாறென்று
கோதில் வாய்மையி னாயொடு முடனே உண்பன் நான் என்ற ஓண்பொருள் எனக்கும்
ஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே. (1419)
3. கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்,
முடியும் வண்ணமோர் முழுவலி முதலை பற்ற மற்றது நின்சரண் நினைப்ப
கொடிய வாய்விலங் கின்னுயிர்மலங்கக் கொண்டசீற்றமொன் றுண்டுள தறிந்து,உன்
அடிய னேனும்வந் தடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே, (1420)
4. நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் வெருவி வந்துநின் சரணெனச் சரணா
நெஞ்சிற் கொண்டுநின் னஞ்சிறைப் பறவைக் கடைக்க லம்கொடுத் தருள்செய்த தறிந்து
வெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர் கொடிய செய்வன வுளஅதற் கடியேன்
அஞ்சி வந்துநின் னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே, (1421)
5. மாக மாநிலம் முழுவதும்வந் திரைஞ்சும் மலர டிகண்ட மாமறை யாளன்,
தோகை மாமயி லன்னவ ரின்பம் துற்றி லாமை யிலத்தவிங் கொழிந்து
போகம் நீயெய்திப் பின்னும்நம் மிடைக்கே போது வாய், என்ற பொன்னருள், எனக்கும்
ஆக வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே, (1422)
6. மன்னு நான்மறை மாமுனி பெற்ற மைந்த னைமதி யாதவெங் கூற்றந்
தன்னை யஞ்சிநின் சரணெனச் சரணாய்த் தகவில் காலனை யுகமுனிந் தொழியா
பின்னை யென்றும்நின் திருவடி பிரியா வண்ண மெண்ணிய பேரருள், எனக்கும்
அன்ன தாகுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே, (1423)
7. ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன்தந்த அந்தண னொருவன்,
காத லென்மகன் புகலிடங் காணேன், கண்டு நீதரு வாயெனக் கென்று,
கோதில் வாய்மையி னானுனை வேண்டிய குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்,
ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே. (1424)
8. வேத வாய்மொழி யந்தண னொருவன் எந்தை நின்சர ணென்னுடை மனைவி,
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வங்கொண் டொளிக்கும், என்றழைப்ப
ஏத லார்முன்னே யின்னரு ளவர்க்குச் செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய்,
ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே, (1425)
9. துளங்கு நீண்முடி அரசர்தங் குரிசில் தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்கு
உளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங் கோடு நாழிகை யேழுட னிருப்ப,
வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச் செய்த வாறடி யேனறிந்து, உலகம்
அளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே. (1426)
10. மாடமாளிகை சூழ்திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்,
ஆடல் மாவல் வன்கலி கன்றி அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானை,
நீடு தொல்புக ழாழிவல் லானை எந்தை யைநெடு மாலைநி னைந்த,
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம்நில் லாவே. (1427)
ஆறாம் பத்து
ஆறாம் திருமொழி .
9. தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல் தனியாளன் முனியாள ரேத்தநின்ற
பேராளன் ஆயிரம்பே ருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்,
பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற படைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
ஏழாம் பத்து
மூன்றாம் திருமொழி
4. உரங்க ளாலியன் றமன்னர் மாளப் பார தத்தொரு தேரைவர்க் காய்ச்சென்று,
இரங்கி யூர்ந்தவர்க் கின்னருள் செய்யும் எம்பி ரானைவம் பார்புனல் காவிரி,
அரங்க மாளியென் னாளிவிண் ணாளி ஆழி சூழிலங் கைமலங் கச்சென்று,
சரங்க ளாண்டதண் டாமரைக் கண்ணனுக் கன்றி யென்மனம் தாழ்ந்துநில் லாதே! (1571)
எட்டாம் பத்து
இரண்டாம் திருமொழி
7. தரங்கநீர் பேசினும் தண்மதி காயினும்,
இரங்குமோ எத்தனை நாளிருந் தெள்கினாள்
துரங்கம்வாய் கீண்டுகந் தானது தொன்மை ஊர்
அரங்கமே என்ப திவள்தனக் காசையே. (1664)
ஒன்பதாம் பத்து
ஒன்பதாம் திருமொழி
2. புனைவளர் பூம்பொழி லார் பொன்னி சூழரங் கநகருள்
முனைவனை, மூவுல கும்படைத் த முதல் மூர்த்திதன்னை,
சினைவளர் பூம்பொழில் சூழ் திரு மாலிருஞ் சோலைநின்றான்
கனைகழல் காணுங்கொ லோகயல் கண்ணியெம் காரிகையே. (1829)
பதினொன்றாம் பத்து
மூன்றாம் திருமொழி
7. கண்ணன் மனத்துள்ளே நிற்கவும், கைவளைகள்
என்னோ கழன்ற? இவையென்ன மாயங்கள்?
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க, அவன்மேய,
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே.(1978)
பன்னிரண்டாம் பத்து
எட்டாம் திருமொழி
8. அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா,
துணியேன் இனிநின் அருளல்ல தெனக்கு,
மணியே மணிமா ணிக்கமே மதுசூதா,
பணியா யெனக்குய் யும்வகை, பரஞ்சோதி. (2029)
திருக்குறுந்தாண்டகம்
முதல் திருமொழி 7. இம்மையை மறுமை தன்னை எமக்குவீ டாகி நின்ற,
மெய்ம்மையை விரிந் த சோலை வியந்திரு வரங்கம் மேய,
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமை யானை,
தன்மையை நினைவா ரென்றன் தலைமிசை மன்னு வாரே. (2038)
இரண்டாம் திருமொழி
2. ஆவியயை யரங்க மாலை அழுக்குரம் பெச்சில் வாயால்,
தூய்மையில் தொண்ட னேன்நான் சொல்லினேன் தொல்லை நாமம்,
பாவியேன் பிழத்த வாறென் றஞ்சினேற் கஞ்ச லென்று
காவிபோல் வண்ணர் வந்தென் கண்ணுளே தோன்றினாரே. (2043)
3. இரும்பனன் றுண்ட நீரும் போதரும் கொள்க, என்றன்
அரும்பி ணி பாவ மெல்லாம் அகன்றன என்னை விட்டு,
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட,
கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே. (2044)
9. பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும்,
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர், உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று
மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே? (2050)
திருநெடுந்தாண்டகம்
இரண்டாம் திருமொழி
1. பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள் பனிநெடுங்கண் ணீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்
மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல் மடமானை இதுசெய்தார் தம்மை, மெய்யே
கட்டுவிச்சி சொல், என்னச் சொன்னாள் நங்காய் கடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே? (2062)
2. நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும் நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள்,
நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ என்னும் வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும்,
அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,
எஞ்சிற கின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன் இருநிலத்து ஓர்பழிபடைத் தேன்ஏ பாவமே. (2063)
4. முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற,
அளப்பரிய ஆரமு தை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை,
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே. (2065)
8. கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம்,
பார்வண்ண மடமங்கை பித்தர் பித்தர் பனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன்,
ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்,
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே? (2069)
9. முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,
பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி,
பொற்றாம ரைக்கயம்நீ ராடப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே. (2070)
மூன்றாம் திருமொழி
2. நைவளமொன் றாராயா நம்மை நோக்கா நாணினார் போலிறையே நயங்கள் பின்னும்,
செய்வளவி லென்மனமும் கண்ணு மோடி எம்பெருமான் திருவடிக்கீழ் அணைய, இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும்,
எவ்வளவுண் டெம்பெருமான் கோயில்? என்றேற்கு இதுவன்றோ எழிலாலி? என்றார் தாமே. (2073)
2074)
3. உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென் ஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே,
தெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்திச் சேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்னக்
கள்ளூரும் பைந்துழாய் மாலை யானைக் கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது,
புள்ளூரும் கள்வாநீ போகேல், என்பன் என்றாலு மிதுநமக்கோர் புலவி தானே? (2074)
4. இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம் இலங்கொலிநீர் பெரும்பெளவம் மண்டி யுண்ட,
பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம் பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி உலகுண்ட பெருவாய ரிங்கே வந்து,என்
பொருகயல்கண் ணீரரும்பப் புலவி தந்து புனலரங்க மூரென்று போயி நாரே. (2075)
5. மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்,
தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு,
பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே புனலரங்க மூரென்று போயி னாரே. (2076)
சிறிய திருமடல்
2673. கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கைசீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும் (1)
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று (2)
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும் (3)
வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை (4)
வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே (5)
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து (6)
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித் (7)
தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும் (8)
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு (9)
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும் (10)
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத் (11)
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர் (12)
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த (13)
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு (14)
ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும் (15)
நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு (16)
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் (17)
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து (18)
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை (19)
சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் (20)
பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் (21)
தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு (22)
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23)
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக் (24)
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் (25)
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் (26)
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன் (27)
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் (28)
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு (29)
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் (30)
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் (31)
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் (32)
பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு (33)
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை (34)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் (35)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர் (36)
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (37)
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல் (38) (2672)
பெரிய மடல்
2674 மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல் (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத் (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான் (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும் (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன் (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள்
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும் (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர் (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண் (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண் (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார் (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம் (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர் (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின் (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வெள்ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80)
ஓம் நமோ நாராயணாய
No comments:
Post a Comment