தரிசனம் செய்த நாள்: 21.12.2017
சோழநாட்டுத் திருப்பதிகள் - 40
5. திருக்கரம்பனூர் (5)
சிலமா தவஞ்செய்துந் தீவேள்வி வேட்டும்
பலமா நதியிற் படிந்தும் - உலகில்
பரம்பநூல் கற்றும் பயனில்லை நெஞ்சே!
கரம்பனூ ருத்தமன்பேர் கல். (5)
- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி
திருச்சியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் சேலம் செல்லும் சாலையில் மேம்பாலத்துக்குக் கீழே அமைந்துள்ளது உத்தமர் கோவில். டோல் கேட் அருகில் உள்ளது.
திருமால் கதம்ப முனிவருக்குக் காட்சியளித்ததாலும், கதம்ப மரமாக நின்று பிரம்மாவால் பூஜிக்கப்பட்டதாலும் இந்தத் திருத்தலம் கதம்பனூர் என்று அழைக்கப்பட்டுப் பிறகு பெயர் மருவி திருக்கரம்பனூர் என்று ஆகியது.
சிவபெருமான, பிரம்மா இருவருக்கும் ஐந்து தலைகள் இருந்ததால் ஒருமுறை பார்வதி தேவி பிரம்மாவை சிவபெருமான் என்று நினைத்து வணங்க பிரம்மாவும் அந்த வணக்கத்தை ஏற்றுக்கொண்டார். இதனால் கோபமடைந்த சிவபெருமான் பிரம்மாவின் ஐந்துதலைகளில் ஒன்றைக் கிள்ளி எறிய, பிரம்மா நான்முகன் ஆனார். பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்திதோஷம் ஏற்பட்டு, கிள்ளிய தலையின் மண்டை ஓடு அவர் கையிலேயே ஒட்டிக்கொண்டது.
மண்டை ஓட்டில் பிட்சை எடுத்து அது நிரம்பினால்தான் அது கையை விட்டு நீங்கும் என்ற நிலையில் சிவபெருமான் பிச்சை எடுத்ததால் அவர் பிட்சாண்டார் (பிட்சாடனர்) என்று பெயர் பெற்றார்.
இந்தக் கோயிலில் உள்ள பூர்ணவல்லித் தாயார் அன்னமிட்ட பிறகுதான் மண்டை ஓடு நிறைந்து சிவபெருமான் கையை விட்டு நீங்கியது. அதனால் இந்தக் கோவிலுக்குப் பிட்சாண்டார் கோவில் என்ற பெயரும் உண்டு.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் தங்கள் தேவிமார்களோடு எழுந்தருளியிருப்பது இந்தத் திருத்தலத்தின் சிறப்பு.
பெருமாளின் பெயர் புருஷோத்தமன். ஆதிசேஷன் மீது சயனித்தபடி கிழக்கு நோக்கிய முகமண்டலத்துடன் கிடந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். மூலவர். அவர் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மா உதித்து மேலே நிற்கிறார்.
பெருமாள் சந்நிதிக்கு வலப்புறமாக, பிரகாரத்தின் துவக்கத்தில் இரண்டு தாயார் சந்நிதிகள் உள்ளன. நின்ற திருக்கோலத்தில் மகாலக்ஷ்மித்தாயார். இவருக்கு உத்சவர் இல்லை. இன்னொரு சந்நிதியில் அமர்ந்த திருக்கோலத்தில் பூர்ணவல்லித் தாயார். இவருக்கு உத்சவர் உண்டு.
பெருமாள் சந்நிதிக்கு முன்புறமாக இடது புறத்தில் பிரகாரத்தின் முடிவில் பிரம்மாவுக்கும், ஞானசரஸ்வதிக்கும் சந்நிதிகள் உள்ளன. சரஸ்வதி கையில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடிகளுடன் காட்சி அளிக்கிறார். அருகில் ஜெய ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது.
பெருமாள் சந்நிதிக்குப்பின்புறம் பிட்சாடனர் சந்நிதி. லிங்க ரூபத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கிறார். அருகில் சௌந்தர்ய பார்வதி, தக்ஷிணாமூர்த்தி, விநாயகர்,முருகன், துர்க்கை, நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. தசரத லிங்கம்,நடராஜர், சண்டீஸ்வரர் ஆகிய சந்நிதிகளும் உள்ளன.
பிரகாரத்தில் லக்ஷ்மணர், சீதை ஹநுமானுடன் கூடிய ராமர், பாமா ருக்மிணி சமேத வேணுகோபாலன் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.
பிரகாரத்தின் வடக்குப் புறம் விஷ்ணுகுரு வரதராஜர், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார்,குலசேகர ஆழ்வார், சேனை முதலியார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.
கார்த்திகை மாதத்தில் பெருமாளும், சிவனும் சேர்ந்து புறப்பாடு செல்வது இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு.
பிரம்ம குரு, விஷ்ணு குரு (வரதராஜர்), சிவ குரு (தக்ஷிணாமூர்த்தி), சக்தி குரு (பார்வதி) சுப்பிரமணிய குரு, தேவ குரு (பிரஹஸ்பதி), அசுரகுரு (சுக்ராச்சாரியார்) ஆகிய 7 குருக்கள் சப்தகுருக்களாக இங்கே எழுந்தருளி இருக்கிறார்கள். பிரம்மா இங்கே குரு பகவானாக இருப்பதாகக் கருதப்படுகிறார்.
விமானம் - உத்யோக விமானம்
தீர்த்தம் - கதம்ப தீர்த்தம்
தீர்த்தம் - கதம்ப தீர்த்தம்
தல விருட்சம் - வாழை மரம்
இந்த திவ்ய தேசம் பற்றி திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரம் இயற்றி இருக்கிறார். (இந்தத் தலத்துக்கு அருகில் உள்ள ஆழ்வார் பட்டவர்த்தி என்ற ஊரில் தங்கியிருந்துதான் திருமங்கை ஆழ்வார் ஸ்ரீரங்கம் கோயில் மதில் சுவர்களைக் கட்டும் பணியை மேற்கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது.)
திருமங்கையாழ்வார்
பெரிய திருமொழி
ஐந்தாம் பத்து ஆறாம் திருமொழி
2. பேரானைக் குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை, முத்திலங்கு
காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும்,
அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே, (1399)
ஓம் நமோ நாராயணாய
No comments:
Post a Comment