Thursday, February 1, 2018

49. திவ்யதேச தரிசன அனுபவம் - 28 திருவித்துவக்கோடு (69)

தரிசனம் செய்த நாள்: 22.01.18  திங்கட்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
11. திருவித்துவக்கோடு (69)
பாரதப்புழாவிலிருந்து கோவிலின் தோற்றம் 


வாய்த்த கருமமினி மற்றில்லை நெஞ்சமே!
தோய்த்த தயிர்வெண்ணெய் தொட்டுண்ட - கூத்தன்
திருவிற் றுவக்கோடு சேர்ந்தாற் பிற‌விக்
கருவிற் றுவக்கோடுங் காண். (69) .
- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி' 

கேரளாவில் திருமித்தக்கோடு என்று அறியப்படும் இத்திருத்தலம்  கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் உள்ள பட்டம்பி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பாரதப்புழா நதியை ஒட்டி அதன் வடகரையில் சுற்றிலும் மரங்கள் அடர்ந்த  ரம்மியமான  சூழலில் அமைந்துள்ள இந்தக் கோயில் பற்றி இந்தக் காணொளி சுருக்கமாக விளக்குகிறது,
 கோயிலின் முன்புறம் சிவபெருமான் சந்நிதி உள்ளது. இந்த ஊரிலிருந்து  ஒரு நம்பூதிரி காசிக்குச் சென்று திரும்பும்போது அவருடன் காசி விஸ்வநாதரும் வந்து விட்டதாகவும், நம்பூதிரி குடையை இங்கே வைத்து விட்டு அருகிலிருந்த பாரதப்புழாவில் குளிக்கச் சென்றபோது அவருடைய குடைக்குள் இருந்த சிவபெருமான் சுயம்புவாக இங்கேயே நிலைகொண்டு விட்டதாகவும் ஒரு வரலாறு உள்ளது.
சிறிதளவே நீர் உள்ள பாரதப்புழா 

சிவபெருமான் சந்நிதிக்குப் பின்புறம் வித்துவக்கோட்டு அம்மான் என்று குலசேகர ஆழ்வாரால் அழைக்கப்பட்ட உய்யவந்த பெருமாளின் சந்நிதி உள்ளது.

அம்பரீஷன் என்ற மன்னன் இங்கு தவம் செய்தபோது பெருமாள் இந்திரன் தோற்றத்தில் ஐராவதத்தில் வந்து அவனுக்கு வமளிக்க முன்வந்தார். இந்திரனிடம் தான் பெற விரும்புவது எதுவும் இல்லை, பெருமாளின் திருவடிகளை அடைவதே தனது நோக்கம் என்று அம்பரீஷன் கூறியதும் பெருமாள் அவனுக்குக் காட்சி அளித்து அவனுக்கு மோட்சம் அளித்தார்.

வியூகம் என்ற நிலையில் விஷ்ணு வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் என்ற நான்கு  தோற்றங்களில் பகவான் விளங்குகிறார். அந்த நான்கு தோற்றங்களையும் அவர் அம்பரீஷனுக்குக் காட்டி அருளினார். அதனால் இங்கு விஷ்ணுவுக்கு நான்கு தனிக்கோயில்கள் உள்ளன.

இந்த நான்கு கோயில்களும் பாண்டவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை. மத்தியில் உள்ள உய்யவந்த பெருமாள் சந்நிதி அர்ஜுனனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவருக்கு வலப்புறம் இருக்கும் இரண்டு சந்நிதிகளில் ஒன்று யுதிஷ்டிரனாலும், இன்னொன்று நகுல சகாதேவர்களாலும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இடப்புறம் சற்றுப் பின்னே இருக்கும் சந்நிதி பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. (கேரளா திவ்ய தேசங்களில் மிகப் பெரும்பாலானவை பாண்டவர்களால் நிர்மாணிக்கப்பட்ட மூர்த்திகளைக் கொண்டு விளங்குகின்றன.)

நான்கு பெருமாள் சந்நிதிகளும், ஒரு சிவன் சந்நிதியும் இருப்பதால் இந்தக் கோவில் "அஞ்சுமூர்த்திக் கோவில்" என்று பெயர் பெற்றிருக்கிறது.

இந்த சந்நிதிகள் தவிர கணபதி, தக்ஷிணாமூர்த்தி ஆகிய இருவருக்கும் ஒரு சந்நிதியும், சாஸ்தாவுக்கு ஒரு சந்நிதியும் உள்ளன.

மூலவர் உய்யவந்த பெருமாள் என்றும் சம்ஸ்கிருதத்தில் அபயப்பிரதான்  என்றும் அழைக்கப்படுகிறார். நின்ற கோலத்தில் தெற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார்.
பாரதப்புழா 

அம்பரீஷன் இங்கு முக்தி அடைந்ததால், வைகுண்டப்பதவிக்கு வித்தாக அமைந்த இந்தத் தலம் வித்துவக்கோடு என்று பெயர் பெற்றது.

தாயார் - வித்துவக்கோட்டுவல்லித்  தாயார், பத்மபாணி நாச்சியார்  என்று அழைக்கப்படுகிறார். தாயாருக்குத் தனிக்கோவிலோ விக்கிரகமோ இல்லை. பெருமாளின் திருமார்பில் இடம் பெற்றிருக்கும் தாயாரே இந்தப் பெயர்களால் குறிப்பிடப்படுகிறார்.

விமானம் - தத்வகாஞ்சன விமானம்

தீர்த்தம் - சக்கர தீர்த்தம். கோயிலை ஒட்டி ஓடும் பாரதப்புழாவே இந்தக் கோயிலின் தீர்த்தம்.

நான் கோவிலுக்குச் சென்ற நேரம் காலை சுமார் 6 மணி. பொழுது புலர்ந்து கொண்டிருந்த அந்த இனிய வேளையில், மரங்கள் சூழ நதிக்கரையில் அமைந்திருந்த இந்தக் கோவில் தரிசனம் ஒரு பரவச உணர்வை  ஏற்படுத்தியது.

இந்த திவ்யதேசத்தின் சிறப்புகளை எங்கள் வழிகாட்டி தஞ்சை திரூ ரமேஷ் அவர்கள் அருமையாக எடுத்துரைப்பதைக் கீழே உள்ள காணொளியில் கேட்கலாம். நான் எடுத்த இந்தக் காணொளியைப் பயன்படுத்திக் கொள்ள எனக்கு அனுமதி அளித்த ரமேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. (ஒலியின் அளவு சற்றுக் குறைவாக இருப்பதால் ஹெட்ஃபோன்/இயர்ஃபோன் மூலம் கேட்பது சிறப்பாக இருக்கும்.)
இந்தக் கோவில் பற்றிக் குலசேகராழ்வார் 10 பாடல்கள் பாடியுள்ளார். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 
நாலாயிர திவ்யப் பிரபந்தம் 
முதலாயிரம் 
குலசேகராழ்வார்   
பெருமாள் திருமொழி 
 ஐந்தாந் திருமொழி
1. தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே (688)

2. கண்டாரி கழ்வனவே காதலன்றான் செய்திடினும்
கொண்டானை யல்லால றியாக்கு லமகள்போல்
விண்டோய்ம திள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மாநீ
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே (689)

3. மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மாஎன்
பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோல்நோக்கி வாழும்கு டிபோன்றி ருந்தேனே (690)

4. வாளால றுத்துச்சு டினும்ம ருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளாவு னதருளே பார்ப்பன டியேனே (691)

5. வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட் டம்மானே
எங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால்
எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே (692)

6. செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால்
வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஉன்
அந்தமில்சீர்க் கல்லா லகங்குழைய மாட்டேனே (693)

7. எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்
மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட்
டம்மாஎன் சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே (694)

8. தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மாஉன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே (695)

9. நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே
நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே  (696)

10. விற்றுவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும்
மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த
கொற்றவேல் தானைக் குலசே கரஞ்சொன்ன
நற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணார் நரகமே (697)


ஓம்  நமோ நாராயணாய!

3 comments:

  1. மிக அருமை ஐயா...

    இன்றே தங்கள் தளம் கண்டேன்....

    விரிவான தல புராணத்தோடு...பாசுர சேவையும் மிக நன்று...

    தொடர்கிறேன்...


    அன்புடன்
    அனுபிரேம்..

    https://anu-rainydrop.blogspot.in/

    ReplyDelete
  2. மிகவும் எளிதாகவும் சிறந்ததாகவும்உள்ளது.
    பாசுரங்களின அர்த்தங்களை விவரமாக எடுத்து உரைத்து இருந்தால்”it would have been like icing on the cake”
    நன்றி
    அரங்கநாதன்

    ReplyDelete