தரிசனம் செய்த நாள்: 25.01.18 வியாழக்கிழமை
- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி
பம்பா நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம்
நகுலனால் புனர்நிர்மாணம் செய்யப்பட திவ்யதேசம் திருவண்வண்டூர். திருப்பாண்டவனூர் என்ற பெயர் காலப்போக்கில் திருவண்வண்டூர் என்று மாறியிருக்கலாம். திருவமுண்டூர் என்றும் இந்த ஊர் அழைக்கப்படுகிறது.
நாரதர் ஒருமுறை பிரம்மாவின் சாபத்துக்கு ஆளாகி இந்த ஊரில் வந்து தவம் செய்தார். அப்போது பெருமாள் அவருக்குக் காட்சி கொடுத்தார். நாரதீய புராணம் என்ற நூலை அவர் இங்கிருந்தபடிதான் எழுதினார் என்பது ஸ்தல புராணம்.
மார்க்கண்டேய மகரிஷிக்குப் பெருமாள் கமலவல்லித் தாயார் சமேதராக இங்கே காட்சி அளித்தார் என்பதும் இந்த திவ்யதேசத்தின் சிறப்பு.
பம்பா நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம்
மூலவர் - கமலநாதன், பாம்பணையப்பன் (பம்பா நதிக்கு அருகில் எழுந்தருளியிருப்பதால் இந்தப் பெயர்) வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார் - கமலவல்லி நாச்சியார் (தனிக்கோவில் சந்நிதி இல்லை)
விமானம் - வேதலய விமானம்
தீர்த்தம் - பாபநாச தீர்த்தம், பம்பா தீர்த்தம்
நாங்கள் சென்றபோது பெருமாள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அற்புதமாகக் காட்சி அளித்தார்.
நம்மாழ்வார்
திருவாய்மொழி
ஆறாம் பத்து
முதல் திருமொழி1. வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்
செய்கொள் செந்நெ லுயர்திருவண்வண் டூருறையும்,
கைகொள் சக்கரத் தென்கனி வாய்பெரு மானைக்கண்டு,
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே. (3451)
2. காதல் மென்பெடை யோடுடன் மேயும் கருநாராய்!
வேத வேள்வி யொலிமுழங்கும் தண் டிருவண்வண்டூர்,
நாதன் ஞாலமெல் லாமுண்ட நம்பெரு மானைக்கண்டு,
பாதம் கைதொழுது பணியீ ரடியேன் திறமே. (3452)
3. திறங்க ளாகியெங் கும்செய்களூடுழல் புள்ளினங்காள்,
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண் டூருறையும்,
கறங்கு சக்கரக் கைக்கனி வாய்ப்பெரு மானைக்கண்டு,
இறங்கி நீர்தொழுது பணியீரடியே னிடரே. (3453)
4. இடரில் போகம் மூழ்கி யிணைந்தாடும் மடவன்னங்காள்,
விடலில் வேத வொலிமுழங்கும்தண் திருவண்வண்டூர்,
கடலில் மேனிப் பிரான்கண் ணணைநெடு மாலைக்கண்டு,
உடலம் நைந்தொருத் தியுரு கும் என் றுணர்த்துமினே. (3454)
5. உணர்த்த லூட லுணர்ந்துடன் மேயும் மடவன்னங்காள்,
திணர்த்த வண்டல்கள் மேல்சங்கு சேரும் திருவண்வண்டூர்,
புணர்த்த பூந்தண் டுழாய்முடி நம்பெரு மானைக்கண்டு,
புணர்த்த கையினரா யடியேனுக்கும் போற்றுமினே. (3455)
6. போற்றியான் இரந் தேன்புன்னை மேலுறை பூங்குயில் காள்,
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண் டூருறையும்,
ஆற்ற லாழியங் கையம ரர்பெரு மானைக்கண்டு,
மாற்றங் கொண்டரு ளீர்மையல் தீர்வ தொருவண்ணமே. (3456)
7. ஒருவண்ணம்சென்று புக்கெனக்கு ஒன்றுரை யொண்கிளியே,
செருவொண் பூம்பொழில் சூழ்செக்கர் வேலை திருவண்வண்டூர்,
கருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்,
செருவொண் சக்கரம் சங்கடை யாளம் திருந்தக் கண்டே. (3457)
8. திருந்தக் கண்டெனக் கொன்றுரை யாயொண் சிறுபூவாய்
செருந்தி ஞாழல் மகிழ்புன்னை சூழ்தண் டிருவண்வண்டூர்,
பெருந்தண் தாமரைக் கண்பெரு நீண்முடி நாள்தடந்தோள்,
கருந்திண் மாமுகில் போல்திரு மேனி யடிகளையே. (3458)
9. அடிகள் கைதொழு தலர்மேல் அசையும் அன்னங்காள்,
விடிவை சங்கொலிக் கும்திரு வண்வண் டூருறையும்,
கடிய மாயன்தன் னைக்கண்ணனை நெடு மாலைக்கண்டு,
கொடிய வல்வினை யேன்திறம் கூறுமின் வேறுகொண்டே. (3459)
10. வேறு கொண்டும்மை யானிரந் தேன்வெறி வண்டினங்காள்,
தேறு நீர்ப்பம் பைவட பாலைத் திருவண்வண்டூர்,
மாறில் போரரக் கன்மதிள் நீறெழச் செற்றுகந்த,
ஏறுசேவக னார்க்கென்னை யுமுளள் என்மின்களே. (3460)
11. மின்கொள் சேர்புரி நூல்குற ளாயகல் ஞாலம்கொண்ட,
வன்கள் வனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொன்ன,
பண்கொள் ஆயிரத் துள்ளிவை பத்தும் திருவண்வண்டூர்க்கு,
இன்கொள் பாடல் வல்லார் மதனர்மின் னி டையவர்க்கே. (3461)
ஓம் நமோ நாராயணாய!
பாம்பணையப்பன் தரிசனம் கண்டேன்...
ReplyDeleteThanks Ms Anuradha
ReplyDelete