Tuesday, April 16, 2019

70. திவ்யதேச தரிசன அனுபவம் - 49. திருவயோத்தி (98)

தரிசனம் செய்த நாள்: 05.04.2019  வெள்ளிக்கிழமை.   
 வட நாட்டுத் திருப்பதிகள் - 12
4. திருஅயோத்தி 

அம்மாஜி மந்திர் 

3. திருவயோத்தி
ஆர்க்குமிது நன்றுதீ தானாலு நெஞ்சே!நீ
பார்க்கும் பலகலையும் பன்னாதே - சீர்க்கும்
திருவையோத் திப்பயலைச் சீரியமெய்ஞ் ஞானத்
துருவையோத் திற்பொருளை யோர். (98)
பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் 108திருப்பதி அந்தாதி .

ராமபிரான் அவதரித்த இடம் அயோத்தி.

பிரம்மா உலகைப் படைத்தபோது, விஷ்ணு வைகுண்டத்தில் ஒரு பகுதியை அவருக்குக்  கொடுத்தார். பிரம்மா அந்தப் பகுதியை உலகின் ஒரு பகுதியாக உருவாக்கித் தன் மகன் ஸ்வாயம்புவ மனுவுக்கு கொடுத்தார். அதுதான் அயோத்தி. ஸ்வாயம்புவ மனுவின் புதல்வர் இக்ஷ்வாகு. இவர் பெயரில் உருவான இக்ஷ்வாகு வம்சத்தில் தசரதரின் மகனாகப் பிறந்தவர் ராமர்.

பிரம்மா  விஷ்ணுவை நினைத்துத் தவம் செய்தார். அவருக்கு விஷ்ணு காட்சியளித்தார். பிரம்மாவின் பக்தியால் விஷ்ணு மனம் உருகிக்  கண்ணீர் மல்க நின்றார். அவர் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரை பிரம்மா ஒரு கமண்டலத்தில் ஏந்தி அதை பூமியில் விட்டார். அந்த இடம் மானசரஸ் என்ற ஏரியாகியது.

பிற்காலத்தில், இக்ஷ்வாகுவின் வேண்டுகோளை ஏற்று, வசிஷ்டர் மானசரஸ்  நீரை அயோத்தியில் சரயு என்ற நதியாக ஓடச் செய்தார்.

முக்தி அளிக்கும் ஏழு தலங்களான அயோத்தி, காசி, மதுரா, மாயா (ஹரித்வார்), துவாரகை, காஞ்சி, அவந்தி (உஜ்ஜைனி) இவற்றில் அயோத்தியே முதன்மையானது.

லக்னோவிலிருந்து 135 கிலோமீட்டரில், சரயு நதியின் தென்கரையில் அமைந்திருக்கும் அற்புததத் தலம் அயோத்தி. அயோத்தியில் பல ராமர் கோயில்கள் இருக்கின்றன. ஆயினும் ஆழ்வார்கள் பாடிய கோவில் இப்போது இல்லை என்றுதான் தோன்றுகிறது.

யோகி பார்த்தசாரதி யோகி சிங்காரம்மா தம்பதியால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அம்மாஜி மந்திர்  என்ற கோவில்தான் திவ்ய தேசக் கோவிலாகக் கருதப்படுகிறது. அம்மாஜி என்பது சிங்காரம்மாவைக் குறிப்பிடுகிறது. அம்மாஜி மந்திர் கட்டப்பட்டுள்ள இடத்தில்தான் ஆழ்வார்களால் பாடப்பட்ட ராமர் கோவில் அமைந்திருந்தது என்ற ஒரு கருத்து உண்டு. அதனாலேயே அம்மாஜி மந்திர் இப்போது திவ்ய தேசமாகக் கருதப்படலாம்.

அம்மாஜி  மந்திர் 
ராமஸ்வாமி கோவில் என்று அழைக்கப்படும் இந்தக் கோவிலில் லக்ஷ்மணர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோருடன் ராமர் எழுந்தருளி இருக்கிறார்.

கர்ப்பகிருஹத்துக்கு இடப்புறமாக இன்னொரு சந்நிதியில் ரங்கநாதர், ஆழ்வார்கள் இருக்கிறார்கள்.

மூலவர்: ஸ்ரீ ராமர், சக்ரவர்த்தித்த திருமகன் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார்: சீதாப் பிராட்டி

விமானம்: புஷ்பகலா விமானம்

புஷ்கரணி: பரமபத புஷ்கரணி, சரயு, நாகேஸ்வர தீர்த்தம், வைதேஹ்ய தீர்த்தம், சூரிய தீர்த்தம், ரத தீர்த்தம்

பிரத்யக்ஷம் (காட்சி பெற்றவர்கள்): பரதன், தேவர்கள், முனிவர்கள்

அயோத்தியில் உள்ள இன்னும் பல முக்கியமான கோவில்களையும் இடங்களையும் பற்றி வேறொரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

அயோத்தி ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
பெரியாழ்வார் - 6 பாசுரங்கள்
குலசேகராழ்வார் - 4 பாசுரங்கள்
தொண்டரடிப் பொடியாழ்வார் - 1 பாசுரம்
திருமங்கை ஆழ்வார் - 1 பாசுரம்
நம்மாழ்வார் - 1 பாசுரம்
மொத்தம் 13 பாசுரங்கள்

பாசுரங்கள் இதோ:
முதல் ஆயிரம் 
பெரியாழ்வார் 
பெரியாழ்வார் திருமொழி 
உந்தி பறத்தல்
6. முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற (311)
 
7. காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்
நீள்முடி ஐந்திலும் நின்று நடம்செய்து
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்
தோள்-வலி வீரமே பாடிப் பற
 தூ மணிவண்ணனைப் பாடிப் பற (312)
 
8. தார்க்கு இளந்தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம்
நூற்றவள் சொற்கொண்டு போகி நுடங்கு- இடைச்
சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற (313)
 
10.  காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன்தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
 அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற (315)

முதல் ஆயிரம் 
பெரியாழ்வார் 
பெரியாழ்வார் திருமொழி 
அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம் 
4. வார் அணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேர் அணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய்
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கைதன்னிற்
சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் (320) 

8. மைத் தகு மா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக்கோன் உடன் இருந்து நினைத் தேட
அத்தகு சீர் அயோத்தியர்கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கைம் மோதிரமே (324)

முதல் ஆயிரம் 
பெரியாழ்வார் 
பெரியாழ்வார் திருமொழி 
கண்டம் என்னும் திருப்பதி
9. வட திசை மதுரை சாளக்கிராமம்
      வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய
      எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
      தலைப்பற்றிக் கரை மரம் சாடிக்
கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே (398)

முதல் ஆயிரம் 
குலசேகராழ்வார் 
பெருமாள் திருமொழி
தாலாட்டு
6. சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே
அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே
கற்றவர்கள்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே
சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா தாலேலோ (723)
 
7. ஆலின் இலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கருமணியே
ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்திமனே தாலேலோ (724)

 முதல் ஆயிரம் 
குலசேகராழ்வார் 
பெருமாள் திருமொழி
தில்லைச் சித்திரகூடம் இராம சரிதம்
1.740 அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
      அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி
      விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்
செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை
      என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (740)

8. அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
      அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி
      உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
      தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்
      பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே (747)

முதல் ஆயிரம் 
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் 
திருப்பள்ளி எழுச்சி
4. மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
      வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
      இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே
      மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே. (919)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
குழமணிதூரம்
8. கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன்-தன் தமர் கொல்லாமே
தவள மாடம் நீடு அயோத்தி காவலன்-தன் சிறுவன்
குவளை வண்ணன் காண ஆடீர்-குழமணிதூரமே (1874)

நான்காம் ஆயிரம் 
நம்மாழ்வார் 
திருவாய் மொழி 
ஏழாம் பத்து 
எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்

1. கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ
புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நல் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே? (3488)

ஓம் நமோ நாராயணாய 








No comments:

Post a Comment