Wednesday, April 17, 2019

71. திவ்யதேச தரிசன அனுபவம் - 50. திருச்சாளக்கிராமம் (முக்திநாத்) (100)

தரிசனம் செய்த நாள்: 08.04.2019  திங்கட்கிழமை.   
 வட நாட்டுத் திருப்பதிகள் - 12
4. திருச்சாளக்கிராமம் (5)


5. திருச்சாளக்கிராமம்
உண்டா முறைமை யுணர்ந்தடிமைப் *பேர்புண்டேன்
பண்டாங் குடிகுலத்தாற் பன்மதத்தால் - கொண்டாட்டால்
ஆளக் கிராமத்தா லல்லற்பேர் பூணாமல்
சாளக் கிராமத்தார் தாட்கு. (100)

பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் 108திருப்பதி அந்தாதி .

முக்திநாத் கோவில் என்று அழைக்கப்படும் சாளக்கிராமம் நேபாளத்தில் அன்னபூர்ணா தௌலகிரி மலைப்பகுதியில் தரைமட்டத்திலிருந்து 3710 மீட்டர் (12170 அடி) உயரத்தில் உள்ளது.

தானே உருவான 8 ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் (ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, நைமிசாரண்யம், தோத்தாத்ரி (வானமாமலை), புஷ்கர், பத்ரிநாத் இவை மற்ற 7 க்ஷேத்திரங்கள்)  சாளக்கிராமம் ஒன்று. 

இப்போது கோவில் இருக்கும் இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தாமோதர குண்ட் என்ற கண்டகி நதி துவங்கும் இடத்தில் இந்தக் கோவில் இருந்ததென்றும், அங்கு செல்வது மிகவும் கடினம் என்பதால், விக்கிரகம் இங்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  

கண்டகி நதிக்கரையில் உள்ள இந்த திவ்ய தேசம் சாளக்கிராமக் கற்களுக்குப் பெயர் பெற்றது. கண்டகி நதியில் உருவாகும் சாளக்கிராமக் கற்கள் பல்வேறு வடிவங்களில் உள்ளன. இவற்றின் தோற்றத்தைக் கொண்டு இவை நரசிம்மர், வராஹர், விஷ்ணு, ஹயக்ரீவர், சந்தான கோபாலன், மத்ஸயர், கூர்மர், சுதர்சனர்  போன்ற விஷ்ணுவின் பல்வேறு தோற்றங்களைக் குறிப்பவையாகக் கருதப்பட்டு பூஜையில் வைத்து அர்ச்சிக்கப்படுகின்றன.

முக்திநாத், காத்மாண்டு, போக்ரா, ஜோம்சோம் போன்ற ஊர்களை, இந்தியாவில் பல இடங்களிலும் கூட இந்த சாளக்கிராமங்கள் கிடைக்கின்றன. இவற்றின் விலை 20 ரூபாயிலிருந்து பல ஆயிரம் ரூபாய்கள் வரை இருக்கலாம். சாளக்கிராமங்கள் பற்றி நன்கு அறிந்தவர்களின் ஆலோசனைப்படி இவற்றை வாங்குவது உத்தமம்.

சில சாளக்கிராமங்களின் வடிவமைப்புகள் ஒரு கை தேர்ந்த சிற்பியாழ் அற்புதமாக உருவாக்கப்பட்டவை போல் பிரமிப்பூட்டும் விதத்தில் உள்ளன. இவற்றை இயற்கையின் அதிசயம் அல்லது தெய்வீகத்தின் வெளிப்பாடு என்றுதான் கொள்ள வேண்டும்.

கண்டகி நதி விஷ்ணுவிடம் அவர் தன் கர்ப்பத்தில் பிறக்க வேண்டும் என்று பிரார்த்தித்தது. அந்த விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் விஷ்ணு பூச்சியாக உருவெடுத்து கண்டகி நதியின் உள்ளே இருக்கும் கற்களைக் குடைந்து தன பல்வேறு தோற்றங்களை உருவாக்குகிறார். இவையே சாளக்கிராமக் கற்கள். 

முக்திநாத் கோவிலுக்குச் செல்வது சற்று சிரமமான செயல். இது பற்றி விரிவாக இன்னொரு கட்டுரையில் எழுதி இருக்கிறேன். 

கோவிலுக்குச்  சென்றதும் பாப் குண்ட்  (பாவக் குளம்), புண்ய குண்ட் (புண்ய
வலது - பாப் குண்ட், இடது - புண்ய குண்ட்  
குளம்) என்ற இரண்டு குளங்களில் முறையே நீராட வேண்டும். இவை சிமென்ட்௩ தொட்டிகள்தான். இவற்றில் நீர் தொடர்ந்து நிரப்பப்படுகிறது. இந்த நீர் எங்கிருந்து வருகிறதென்று தெரியவில்லை. 












இந்த இரண்டு குளங்களில் நீராடியபின், சுவற்றில் உள்ள 108 துவாரங்கள் வழியே காளை மாட்டின் தலை வடிவில் உள்ள குழாய்கள் மூலம் வரும் நீரை ஒவ்வொரு தலை அடியிலும் நின்று வரிசையாக த் தலையில் ஏந்தி  நீராடலை நிறைவு செய்த பின் வேறு உடை உடுத்திக்கொண்டு பெருமாளை தரிசிக்கலாம்.

உடை மாற்றிக்கொள்ள இடங்கள் உள்ளன.   

முக்திநாத் சந்நிதி சிறியதாக ஒரு மாடம் போல் உள்ளது. பெருமாளை மிக அருகில் (சுமார் 3 அடி தூரத்திலிருந்து சேவிக்கும் பேறு) இங்கு கிடைப்பது ஒரு அற்புத அனுபவம்.

சில கோவில்களுக்குப் பெண்கள் வரவே கூடாது என்று சிலர் வாதிட்டு வரும் நிலையில், இங்கு ஒரு பெண்மணியே அர்ச்சகராக இருப்பது ஒரு மன நிறைவான ஆச்சரியம்.

சன்னதியின் வாயிலில் அமர்ந்தபடி  முக்திநாத், லட்சுமி, சரஸ்வதி, கருடன், யமுனாச்சாரியா என்று சந்நிதியில் இருப்பவர்கள் பெயர்களை ஒவ்வொருவரிடமும் பொறுமையாகச் சொல்லி, நாம் கேட்டால் மீண்டும் ஒரு முறை சொல்லி, சடாரி வைத்து  ஒரு சில நேபாளி நாணயங்களையும் கொடுக்கிறார். (இது புத்தர்களுக்கும் புனிதமான இடம். இந்தக் கோவில் புத்தர்களால் நிர்வகிக்கப்பட்டு புத்த முறையில் பூஜை செய்யப்படுகிறது. அர்ச்சகப் பெண்மணி புத்த மதத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும்.)

இந்தக் கோவிலில் நீர், நிலம், நெருப்பு, வெளி, வாயு  என்ற பஞ்சபூதங்களும் இருப்பதாகக் கருதப்படுகிறது. சந்நிதிக்கு எதிரே ஒரு ஹோம குண்டத்தில் ஹோமத்தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. இது நெருப்பு. மற்ற நான்கு பூதங்கள் இயற்கையாகவே இங்கு இருக்கின்றன.

மூலவர் - முக்திநாத், ஸ்ரீமூர்த்தி. சாளக்கிராம விக்கிரகம். வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

பிரத்யட்சம் - பிரம்மா, ருத்ரன்,  கண்டகி 

தாயார் - ஸ்ரீதேவி நாச்சியார் 

விமானம் - கனக விமானம் 

புஷ்கரணி - கண்டகி நதி, சக்ர தீர்த்தம் 

பெருமாள் சந்நிதிக்கு எதிரே உள்ள ஹோமகுண்டத்துக்கு அருகில் ராமானுஜர், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், மணவாள மாமுனிகள் ஆகியோர் விக்கிரகங்கள் உள்ளன. 


கோவிலிருந்து கீழே இறங்கி வரும்போது, வலப்புறமாக சற்றுத் தள்ளி ஒரு நரசிம்மர் சந்நிதி உள்ளது. இங்கு பல சாளக்கிராமங்கள் உள்ளன. 























முக்திநாத் கோவில் பற்றிய இந்த வீடியோக்களை பாருங்கள் 




இந்தக் கோவில் திருமங்கை ஆழ்வார் (10 பாசுரங்கள்) மற்றும் பெரியாழ்வார் (2 பாசுரங்கள்) ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டிருக்கிறது. திருமங்கை ஆழ்வார், ராமானுஜர் ஆகியோர் இங்கே வந்திருக்கிறார்கள்.

பாசுரங்கள் இதோ:
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருச்சாளக்கிராமம்
1. கலையும் கரியும் பரிமாவும் 
      திரியும் கானம் கடந்துபோய் 
சிலையும் கணையும் துணையாகச் 
      சென்றான் வென்றிச் செருக்களத்து 
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி 
      மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் 
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (987)
 
2. கடம் சூழ் கரியும் பரிமாவும் 
      ஒலி மாத் தேரும் காலாளும் 
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை 
      பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்- 
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் 
      இமையோர் வணங்க மணம் கமழும் 
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (988)
 
3. உலவு திரையும் குல வரையும் 
      ஊழி முதலா எண் திக்கும் 
நிலவும் சுடரும் இருளும் ஆய் 
      நின்றான் வென்றி விறல் ஆழி 
வலவன் வானோர்-தம் பெருமான் 
      மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் 
சலவன்-சலம் சூழ்ந்து அழகு ஆய 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (989)
 
4. ஊரான் குடந்தை உத்தமன் 
      ஒரு கால் இரு கால் சிலை வளையத் 
தேரா அரக்கர் தேர்-வெள்ளம் 
      செற்றான் வற்றா வரு புனல் சூழ் 
பேரான் பேர் ஆயிரம் உடையான் 
      பிறங்கு சிறை வண்டு அறைகின்ற 
தாரான்-தாரா வயல் சூழ்ந்த 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (990)
 
5. அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு 
      அலற அவள் மூக்கு அயில் வாளால் 
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி 
      விண்ணோர் பெருமான் நண்ணார்முன் 
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக் 
      கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத் 
தடுத்தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (991)
 
6.  தாய் ஆய் வந்த பேய் உயிரும் 
      தயிரும் விழுதும் உடன் உண்ட 
வாயான் தூய வரி உருவின் 
      குறளாய்ச் சென்று மாவலியை 
ஏயான் இரப்ப மூவடி மண் 
      இன்றே தா என்று உலகு ஏழும் 
தாயான் காயா மலர் வண்ணன்-
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (992)
 
7.  ஏனோர் அஞ்ச வெம் சமத்துள் 
      அரி ஆய் பரிய இரணியனை 
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த 
      ஒருவன் தானே இரு சுடர் ஆய் 
வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய் 
      மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும் 
தான் ஆய் தானும் ஆனான்-தன் 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (993)
 
8.  வெந்தார் என்பும் சுடு நீறும் 
      மெய்யில் பூசி கையகத்து ஓர் 
சந்து ஆர் தலைகொண்டு உலகு ஏழும் 
      திரியும் பெரியோன்-தான் சென்று என் 
எந்தாய் சாபம் தீர் என்ன 
      இலங்கு அமுது நீர் திருமார்வில் 
தந்தான்-சந்து ஆர் பொழில் சூழ்ந்த 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (994)
 
9.  தொண்டு ஆம் இனமும் இமையோரும் 
      துணை நூல் மார்வின் அந்தணரும் 
அண்டா எமக்கே அருளாய் என்று 
      அணையும் கோயில் அருகு எல்லாம் 
வண்டு ஆர் பொழிலின் பழனத்து 
      வயலின் அயலே கயல் பாயத் 
தண் தாமரைகள் முகம் அலர்த்தும் 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே (995)
 
10. தாரா ஆரும் வயல் சூழ்ந்த 
      சாளக்கிராமத்து அடிகளை 
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் 
      கலியன் ஒலிசெய் தமிழ்மாலை 
ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார் 
      அமரர் நல் நாட்டு அரசு ஆளப் 
பேர் ஆயிரமும் ஓதுமின்கள் 
      அன்றி இவையே பிதற்றுமினே (996)

முதலாயிரம் 
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து
ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி
5. பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப் 
பல்வளையாள்என்மகளிருப்ப 
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று 
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன் 
சாளக்கிராமமுடையநம்பி 
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான் 
ஆலைக்கரும்பின்மொழியனைய 
அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். (206) 

நான்காம் பத்து 
ஏழாம் திருமொழி - தங்கையை மூக்கும்
9. வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரைஅயோத்தி 
இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோ த்தமனிருக்கை 
தடவரையதிரத்தரணிவிண்டிடியத் தலைப்பற்றிக்கரைமரம்சாடி 
கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. (399)

ஓம்  நமோ நாராயணாய 







No comments:

Post a Comment