Saturday, September 28, 2019

72. திவ்யதேச தரிசன அனுபவம் - 51. திருவெள்ளக்குளம் (39)

தரிசனம் செய்த நாள்: 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை.   
 சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40
39. திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில்)


நானடிமை செய்யவிடாய் நானானே னெம்பெருமான்
தானடிமை கொள்ளவிடாய் தானானான்--ஆனதற்பின்
வெள்ளக் குளத்தே விடாயிரு வருந்தணிந்தோம்
உள்ளக் குளத்தேனை யொத்து. (39)

     - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

சீர்காழிக்குத் தென் கிழக்கே சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில், நாகப்பட்டினம் செல்லும் வழியில்  அமைந்துள்ள திவ்யதேசம் இது. திருமங்கையாழ்வார் அண்ணா என்று அழைத்தது திருப்பதி பெருமாளையும், அண்ணன் கோவில் பெருமாளையும் மட்டும்தான். திருமங்கையாழ்வார் முதலில் பாடியது இவரைத்தான் என்பதால் இந்தக் கோவில் பெருமாள் அண்ணன் பெருமாள் என்று சிறப்பாகக் குறிப்பிடப் படுகிறார்.

இது தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. திருப்பதிக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு வந்து நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற முறை உள்ளது.

இந்தக் கோவிலிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசம் என்று பொதுவாகக் குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.

சில கோவில்கள் சில சமயம்  பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.

அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில்  எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

திரு எஸ். சுரேஷ் 9994621065  9750728645.

இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.

சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார் .

சூரிய வம்சத்தைச் சேர்ந்த மன்னன் துந்துமாறனின் (இவர் ராமருக்கெல்லாம் முந்தியவர்) மகனான ஸ்வேதனுக்கு 9 வயதில் மரணம் என்ற  சாபம் இருந்தது. வசிஷ்டரின் அறிவுரைப்படி ஸ்வேதன் இந்தக் கோவிலுக்கு வந்து ஐப்பசி மாத சுக்ல தசமி முதல் கார்த்திகை மாத சுக்ல ஏகாதசி வரை இந்தக் கோவில் திருக்குளத்தில் நீராடிப் பெருமாளை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். (நரசிம்ம மிருத்யுஞ்ச மந்திரத்தை அந்த மன்னன் ஜபித்ததாகவும்  கூறப்படுகிறது)

ஸ்வேதம் என்றால் வெள்ளை. ஸ்வேதன் நீராடிய குளம் என்பதால் திருவெள்ளக்குளம் என்ற பெயர் இந்தத் திருத்தலத்துக்கு வந்தது. 

மூலவர்: அண்ணன் பெருமாள், கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலம்
உற்சவர்: ஸ்ரீனிவாசன் 
கண்ணன், நாராயணன் என்ற பெயர்களும் பெருமாளுக்கு உண்டு.
பிரத்யட்சம்: ஏகாதச ருத்ரர், ஸ்வேத ராஜன்

தாயார்:  அலர் மேல் மங்கை நாச்சியார் 
உற்சவர் தாயாரின் திருநாமம் பத்மாவதித் தாயார், பூவார் திருமகள்

புஷ்கரணி: ஸ்வேத புஷ்கரணி , வெள்ளக்குளம்

விமானம்: தத்வ யோதாக விமானம்

ஸ்தல விருட்சம்: வில்வம், பரசு 

பெருமாள் சன்னிதிக்கு வெளியே மண்டபத்தில் ஒருபுறம் வினாயகர் மறுபுறம் சேனை முதலியார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன.

அலர் மேல் மங்கைத் தாயார் சன்னிதி பிரகாரத்தில் தனி மண்டபத்தில் உள்ளது. தாயார் சன்னிதிக்கு அருகே திருமங்கை  ஆழ்வாரின் துணைவியார் குமுதவல்லி நாச்சியாருக்கு சந்நிதி அமைந்திருப்பது ஒரு ஆச்சரியம். குமுதவல்லி நாச்சியாரின் அவதாரத் தலம் இது. இவர் பூமிக்கு வந்த ஒரு தேவலோக மங்கை என்று ஐதீகம் உண்டு.

கோவிலுக்கு முன் புறத்தில் நீராழி மண்டபத்துடன் கூடிய திருக்குளம் உள்ளது. இதுதான் ஸ்வேதா புஷ்கரணி  அல்லது திருவெள்ளக்குளம்.

இந்தக் கோவிலில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடத்தப்படுகின்றன. 

இந்த திவ்யதேசம் பற்றி ஆன்மிகச் சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்கவுரையை இந்த வீடியோவில் கேட்கலாம்.



இந்த் திருத்தலம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்டுள்ளது (10 பாசுரங்கள்) 

பாசுரங்கள் இதோ:

நாலாயிர திவ்யப் பிரபந்தம் 
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
நான்காம் பத்து
ஏழாம் திருமொழி   
திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்
1. கண் ஆர் கடல்போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்
திண் ஆர் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா அடியேன் இடரைக் களையாயே  (1307)
 
2. கொந்து ஆர் துளவ மலர் கொண்டு அணிவானே
நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச்
செந்தாமரை நீர்த் திருவெள்ளக்குளத்துள்
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே   1308)
 
3. குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
நன்று ஆய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச்
சென்றார் வணங்கும் திருவெள்ளக்குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே  (1309)
 
4. கான் ஆர் கரிக் கொம்பு-அது ஒசித்த களிறே
நானாவகை நல்லவர் மன்னிய நாங்கூர்த்
தேன் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள்
ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே  (1310)
 
5. வேடு ஆர் திருவேங்கடம் மேய விளக்கே
நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
சேடு ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய்
பாடாவருவேன் வினை ஆயின பாற்றே   (1311)
 
6. கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய்
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வா திருவெள்ளக்குளத்து உறைவானே
எல்லா இடரும் கெடுமாறு அருளாயே   (1312)
 
7. கோலால் நிரை மேய்த்த எம் கோவலர்-கோவே
நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர்ச்   
சேல் ஆர் வயல் சூழ் திருவெள்ளக்குளத்துள்
மாலே என வல் வினை தீர்த்தருளாயே   (1313)
 
8. வாராகம்-அது ஆகி இம் மண்ணை இடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீர் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள்
ஆராஅமுதே அடியேற்கு அருளாயே   (1314)
 
9. பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா
நா ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த்
தேவா திருவெள்ளக்குளத்து உறைவானே
ஆ ஆ அடியான் இவன் என்று அருளாயே   (1315)
 
10. நல் அன்பு உடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திருவெள்ளக்குளத்து உறைவானை
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் என வல்லவர் வானவர்-தாமே             (1316)

|ஓம் நமோ நாராயணாய |








No comments:

Post a Comment