Saturday, May 12, 2018

61. திவ்யதேச தரிசன அனுபவம் - 40 கண்டம் என்னும் கடிநகர் (தேவப்பிரயாகை) - 102

தரிசனம் செய்த நாள்: 03.05.18  வியாழக்கிழமை 
வடநாட்டுத் திருப்பதிகள் - 12
7. திருக்கங்கைக்கரைக்கண்டம்(102)


7. திருக்கங்கைக்கரைக்கண்டம்
மத்தாற் கடல்கடைந்து வானோர்க் கமுதளித்த
அத்தா! எனக்குன் னடிப்போதில் - புத்தமுதைக்
கங்கைக் கரைசேருங் கண்டத்தாய்! புண்டரிக
மங்கைக் கரைசே! வழங்கு. (102))
- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

ரிஷிகேஷிலிருந்து பத்ரிநாத்  செல்லும் வழியில் வரும் முதல் திவ்யதேசம் இது. ரிஷிகேஷிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  இந்த ஊர் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

கங்கோத்ரியிலிருந்து கிளம்பி வரும் பாகீரதி நதியும் பத்ரிநாத்தில் பிறந்து வரும் அலகானந்தா நதியும் இணைந்து கங்கை என்ற நதியாக உருவெடுக்கும் அற்புதமான இடம் இது. பாகீரதியின் பச்சை நிறத் தண்ணீரும் அலகானந்தாவின் சாம்பல் நிறத் தண்ணீரும் ஒன்று கலப்பது கண்கொள்ளாக் காட்சி.

இந்த சங்கமத்தில் நீராடி விட்டு பல படிகள் ஏறிக் குன்றின் மீது அமைந்திருக்கும்  'வண்  புருஷோத்தமன்' என்னும் நீலமேகப் பெருமாளின் திவ்யதேசத் திருக்கோவிலை அடைய வேண்டும்..





பிரயாகை என்றால் இரு நதிகள் இணையும் இடம் என்று ஒரு பொருள் உண்டு. இரண்டு தேவ நதிகள் இங்கு இணைவதால், இத்தலம் தேவப்பிரயாகை என்று அழைக்கப்படுகிறது.

பிரயாகை என்றால் தவம் செய்யச் சிறந்த இடம் என்றும் பொருள். பிரம்மா, தசரதர், ராமர், பரத்வாஜர் ஆகியோர் இங்கே தவம் செய்திருக்கின்றனர். பரத்வாஜர் இங்கே தவம் செய்த பிறகுதான் சப்தரிஷிகளில் ஒருவராக ஆனார்.

ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்ள ராமர் இங்கே தவம் செய்தார். அதனால் இந்தக் கோவில் ரகுநாத்ஜி மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது. ராமர் அமர்ந்து தவம் செய்த இடத்தில் ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

மூலவர் - நீலமேகப் பெருமாள், புருஷோத்தமன்
நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்
தாயார் - புண்டரீகவல்லி (தாயார் சந்நிதி தனியே இல்லை. பெருமாளின் திருமார்பில் இருக்கும் தாயாரின் பெயர் இது என்றுதான் கொள்ள வேண்டும்.)
தீர்த்தம் - மங்கள தீர்த்தம், கங்கா நதி
விமானம் -  மங்கள விமானம்

கோவிலில் நரசிம்மர், ஆஞ்சநேயர், அன்னபூரணி, வாமனர், சிவன், ஆதிசங்கரர், ராமானுஜர் ஆகியோருக்கு சந்நிதிகள் இருக்கின்றன. முன்பே குறிப்பிட்டது போல் ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட மேடையும் இருக்கிறது.

கோவிலுக்குச் செல்லும் வழியை இந்த வீடியோ படம் பிடித்துக் காட்டுகிறது.


இந்த திவ்ய தேசம் பற்றி  வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்க உரையை இந்த வீடியோவில் கேட்கலாம்



இந்த திவ்ய தேசம் பற்றி, பெரியாழ்வார் தமது 'பெரியாழ்வார் திருமொழியில் பதினோரு பாசுரங்கள் பாடியுள்ளார். இந்த திவ்ய தேசத்துக்குச் செல்ல முடியாதவர்கள் இந்தப் பாசுரங்களப் படித்தாலே இந்த திவ்யதேசத்தில் கங்கையில் நீராடிய அனுபவம் கிடைக்கும் என்கிறார் அவர்.

பாசுரங்கள் இதோ.

நாலாயிர திவ்யப் பிரபந்தம்
பெரியாழ்வார் திருமொழி 
நான்காம் பத்து 
ஏழாம்  திருமொழி
1. தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்தஎம் தாச ரதிபோய்
எங்கும் தன்புக ழாவிருந்து அரசாண்ட எம்புரு டோத்தம னிருக்கை
கங்கை கங்கையென்ற வாசகத் தாலே கடுவினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற கண்டமென் னும்கடி நகரே. (391)

2. சலம்பொதி யுடம்பின் தழலுமிழ் பேழ்வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்தெழுந் தணவி மணிவண்ண வுருவின் மால்புரு டோத்தமன் வாழ்வு
நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் நாரணன் பாதத்து ழாயும்
கலந்திழி புனலால் புகர்படு கங்கைக் கண்டமென் னும்கடி நகரே. (392)

3. அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்தி அழலுமிழ் ஆழிகொண் டெறிந்துஅங்கு
எதிர்முக வசுரர் தலைகளை யிடறும் எம்புரு டோத்தம னிருக்கை
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர்முக மணிகொண் டிழிபுனல் கங்கைக் கண்டமென் னும்கடி நகரே. (393)

4. இமையவர் இறுமாந் திருந்தர சாள ஏற்றுவந் தெதிர்பொரு சேனை
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம்புரு டோத்தமன் நகர்தான்
இமவந்தம் தொடங்கி இருங்கடலளவும் இருகரை உலகிரைத் தாட
கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே. (394)

5, உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுட ராழியும் சங்கும்
மழுவொடு வாளும் படைக்கல முடைய மால்புரு டோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழு தளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே. (395)

6. தலைப்பெய்து குமுறிச் சலம்பொதி மேகம் சலசல பொழிந்திடக் கண்டு
மலைப்பெருங் குடையால் மறைத்தவன் மதுரை மால்புரு டோத்தமன் வாழ்வு
அலைப்புடைத் திரைவாய் அருந்தவ முனிவர் அவபிர தம்குடைந் தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே. (396)

7. விற்பிடித் திறுத்து வேழத்தை முருக்கி மேலிருந் தவன்தலை சாடி
மற்பொரு தெழப்பாய்ந்து அரையன யுதைத்த மால்புரு டோத்தமன் வாழ்வு
அற்புத முடையஅயி ராவத மதமும் அவரிளம் படியரொண் சாந்தும்
கற்பக மலரும் கலந்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே. (397)

8. திரைபொரு கடல்சூழ் திண்மதிள் துவரை வேந்துதன் மைத்துனன் மார்க்காய்
அரசினை யவிய அரசினை யருளும் அரிபுரு டோத்தம னமர்வு
நிரைநிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரைபுரை வேள்விப் புகைகமழ் கங்கை கண்டமென் னும்கடி நகரே. (398)

9. வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை
தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே. (399)

10. மூன்றெழுத் ததனை மூன்றெழுத் ததனால் மூன்றெழுத் தாக்கிமூன் றெழுத்தை
ஏன்றுகொண் டிருப்பார்க்கு இரக்கம்நன் குடைய எம்புரு டோத்தம னிருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு வானான்
கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே. (400)

11. பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து உறைபுரு டோத்தம னடிமேல்
வெங்கலி நலியா வில்லிபுத் தூர்க்கோன் விட்டுசித் தன்விருப் புற்று
தங்கிய அன்பால் செய்தமிழ் மாலை தங்கிய நாவுடை யார்க்கு
கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந் தகணக் காமே. (401)

ஓம் நமோ நாராயணாய !


Monday, February 12, 2018

60. திவ்யதேச தரிசன அனுபவம் - 39 திருவட்டாறு (68)

தரிசனம் செய்த நாள்: 26.01.18  வெள்ளிக்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
10. திருவாட்டாறு (68)


மாலைமுடி நீத்து மலர்ப்பொன் னடிநோவப்
பாலைவன நீபுகுந்தாய் பண்டென்று - சாலவநான்
கேட்டாற் றுயிலேன்காண் கேசவனே! பாம்பணைமேல்
வாட்டாற்றுக் கண்டுயில்கொள் வாய். (68)
- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

மலைநாட்டு திவ்யதேசம் என்றாலும், திருவட்டாறு இருப்பது தமிழ்நாட்டில் (திருவண்பரிசாரம் என்ற மலைநாட்டு திவ்யதேசமும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.) ஆயினும் இது மற்ற கேரளா திவ்யதேசங்களைப் போலவே பூஜை முறைகள் கொண்டது.

பிரும்மாவின் தவத்தைக் கலைக்க, அவருடன் ஊடல் கொண்ட சரஸ்வதி தேவி கேசன், கேசி என்ற இரு அரக்கர்களை அனுப்பினார். பிரும்மா பெருமாளிடம் பிரார்த்திக்க, பெருமாள் கேசனை பூமிக்கு அடியே அழுத்தி அந்த இடத்திலேயே பள்ளி கொண்டு விட்டார். தன் சகோதரன் கேசனை விடுவிக்க, கேசி என்ற அரக்கி பரணி, கோதா என்ற இரு ஆறுகளாகப் பெருக்கெடுத்து வந்தாள். அப்போது பூமாதேவி பெருமாள் படுத்திருந்த இடத்தை மேடாக இருக்கும்படி உயர்த்தி விட்டார்.

கேசி பெருமாளிடம் சரணடைய, பெருமாள் அவளை மன்னித்து, தன்  கோவிலைச் சுற்றி இரு நதிகளும் மாலைபோல் ஓட வகை செய்தார். கோவிலைச் சுற்றி வட்டம் போல் இரு நதிகள் ஓடுவதால் இந்த இடம் திருவட்டாறு என்று பெயர் பெற்றது. காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு நதிகளுக்கிடையே ஸ்ரீரங்கம் அமைந்திருப்பதை போல் இந்தத் தலமும்  அமைந்துள்ளது.

ஹாதலேகர் என்ற முனிவருக்குப் பெருமாள் அஷ்டாட்சர மந்திரத்தை அருளிய பெருமையும் இந்தத் தலத்துக்கு உண்டு.

 திருவனந்தபுரம் கோவிலைப் போல் இந்தக் கோவிலும் மார்த்தாண்டவர்மனால் திருப்பணி செய்யப்பட்டது.

அனந்தபத்மநாபர் போலவே தோற்றம் கொண்ட ஆதிகேசவப் பெருமாள்  சில விஷயங்களில் மாறுபடுகிறார். 

இவர் 22 அடி நீளம் கொண்டவர். மேற்கு நோக்கி சயனித்திருப்பதால் திருமுடி நமக்கு வலப்பக்கமாக இருக்கிறது. அதாவது அனந்தபத்மநாபர் விக்கிரகத்தின் கண்ணாடி பிம்பம் போல் திருமுடியும், திருவடியும் மாறி இருக்கின்றன. (காஞ்சிபுரத்தில் உள்ள திருவெஃகா, திருவட்டாறு ஆகிய இரு தலங்களில்தான் பெருமாள் நமக்கு வலப்புறமாகத் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார்.) மேலும் நாபிக்கமலத்தில் பிரும்மா இல்லை. இவர் ஆதிகேசவப் பெருமாள் என்பதால் பிரும்மா தோன்றுவதற்கு முன் இருந்த தோற்றத்துடன் இங்கே காட்சி அ ளிக்கிறார்.

இவர் 16008 சாளக்கிராமங்களால் உருவாக்கப்பட்டவர்..

மூலவர் - ஆதிகேசவப் பெருமாள். புஜங்க சயனம். மேற்கு நோக்கிய திருமுக மண்டலம்.

தாயார் - மரகதசவல்லித் தாயார். தனிக்கோவில் சந்நிதி இல்லை.

விமானம் - அஷ்டாங்க விமானம்

தீர்த்தம் -  கடல்வாய்த் தீர்த்தம், வாட்டாறு ராம தீர்த்தம் 

பரசுராமருக்கும், சந்திரனுக்கும் காட்சி கொடுத்த பெருமாள் இவர்.

மூலவர் சந்நிதிக்கு முன் ஒற்றைப்பாறை என்ற ஒரு பெரிய மேடை போன்ற கல் இருக்கிறது. அதன்மீது ஏறி நின்று பார்த்தால்தான் பெருமாளை நன்கு தரிசிக்க முடியும். சில சமயங்களில்தான் இதை அனுமதிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. நாங்கள் தரிசனம் செய்தபோது கோவில் சம்ப்ரோக்ஷணத்துக்கான பணிகள் நடந்து கொண்டிருந்தன. அதனால் இப்போது உத்சவர் சேவை மட்டும்தான். ஆயினும்,  மூலவரை இந்தப் பாறைக்குப் பின் கீழே நின்று தரிசிக்க முடிந்தது.

திருவனந்தபுரம் போல் இங்கும் மூன்று வாயில்கள் மூலம் பெருமாளை தரிசிக்க வேண்டும்.

திருவனந்தபுரம் போல் இங்கும் ஒரு கிருஷ்ணர் சந்நிதி உள்ளது. அதேபோல் தூண்கள் நிறைந்த அகலமான பிரகாரம்.

திருப்பணிகள் முடிந்து ஸம்ப்ரோக்ஷணம் ஆனபிறகு மீண்டும் பெருமாளைத் தரிசிக்கப் பெருமாள் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

இந்த யாத்திரையில் திருவண்பரிசாரம் என்ற மலைநாட்டு திவ்யதேசம் இடம் பெறவில்லை. இதுவும் தமிழ்நாட்டில்தான் உள்ளது - திருவட்டாறிலிருந்து சிறிது தூரம்தான். இந்த திவ்யதேசத்தை தரிசிக்கவும் இன்னொரு முறை வர வேண்டும்.அப்போதுதான் கேரளா திவ்யதேசங்கள் 13ம் பூர்த்தியாகும்.

இந்த திவ்ய தேசம் பற்றிய தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் விளக்கத்தை வீடியோக்களில் கேட்டு  மகிழுங்கள்.








இந்த திவ்யதேசம் பற்றி நம்மாழ்வார் பாடியுள்ள 11 பாசுரங்கள் இதோ.
நம்மாழ்வார் 
திருவாய்மொழி 
ஆறாம்  திருமொழி
1.அடியார்தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அதுநமது விதிவகையே
இருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன்
மருளொழிநீ மடநெஞ்சே! வாட்டாற்றான் அடிவணங்கே. (3946)

2. வாட்டாற்றா னடிவணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான்
கேட்டாயே மடநெஞ்சே! கேசவனெம் பெருமானை
பாட்டாய பலபாடிப் பழவினைகள் பற்றறுத்து
நாட்டாரோ டியல்வொழிந்து நாரணனை நண்ணினமே. (3947)

3. நண்ணினம் நாரணனை நாமங்கள் பலசொல்லி
மண்ணுலகில் வளம்மிக் க வாட்டாற்றான் வந்தின்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவா றாகாவிக் கருமங்க ளென்னெஞ்சே (3948)

4. என்னெஞ்சத் துள்ளிருந்திங் கிருந்தமிழ்நூலிவைமொழிந்து
வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான்
மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்
நன்னெஞ்சே! நம்பெருமான் நமக்கருள்தான் செய்வானே. (3949)

5. வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே
நானேறப் பெறு கின்றென் நரகத்தை நகுநெஞ்சே
தேனேறு மலர்த்துளவம் திகழ்பாதன் செழும்பறவை
தானேறித் திரிவான தாளிணையென் தலைமேலே. (3950)

6. தலைமேல தாளிணைகள் தாமரைக்கண் என்னம்மான்
நிலைபேரான் என்நெஞ்சத் தெப்பொழுதும் எம்பெருமான்
மலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான் மதமிக்க
கொலையானை மருப்பொசித் தான் குரைகழல்தள் குறுகினமே. (3951)

7. குரைகழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான்
திரைகுழுவு கடல்புடைசூழ் தென்னாட்டுத் திலதமன்ன
வரைகுழுவும் மணிமாட வாட்டாற்றான் மலரடிமேல்
விரைகுழுவும் நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே. (3952)

8. மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருதுபுனல்
மைந்நின்ற வரைபோலும் திருவுருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழவதுவே? (3953)

9. திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூ ர்தி போரரக்கர் குலம்கெடுத்தான்
இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே. (3954)

10. பிரியாதாட் செய்யென்று பிறப்பறுத்தாள் அறக்கொண்டான்
அரியாகி இரணியனை ஆகங்கீண் டானன்று
பெரியார்க்காட் பட்டக்கால் பெறாதபயன் பெறுமாறு
வரிவாள்வாய் அரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே. (3955)

11. காட்டித்தன் கனைகழல்கள் கடுநரகம் புகலொழித்த
வாட்டாற்றெம் பெருமானை வளங்குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ்மாலை யாயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே. (3956)

59. திவ்யதேச தரிசன அனுபவம் - 38 திருவனந்தபுரம் (59)

தரிசனம் செய்த நாள்: 25.01.18  வியாழக்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
1. திருவனந்தபுரம் (59) 


கோளார் பொறியைந்துங் குன்றியுட லம்பழுத்து 
மாளாமு னெஞ்சே! வணங்குதியால் - கேளார்
சினந்தபுரஞ் சுட்டான் றிசைமுகத்தான் போற்றும்
அனந்தபுரஞ் சேர்ந்தா னடி. (59)
- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

கேரளாவில் உள்ள திவ்யதேசங்களிலேயே தமிழ்நாட்டுக் கோவில்கள் போல் கோபுரம் அமைந்த கோவில் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபர் கோவில்தான். அகலமாக, மேலே ஒரு படகு போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது. 


திவாகர  முனிவர் என்பவர் அனந்தன்காடு என்ற இடத்தில்   ஒரு இலுப்பை மர வடிவில் இந்தப் பெருமாளைக் கண்டார்.  திருவல்லாறு தொடங்கி, திருவனந்தபுரம் ஈடாக திருப்பாப்பூர் வரை சுமார் ஐந்து மைல்  நீளத்தில்   இலுப்பைமர வடிவில் இருந்த பெருமாள். முனிவரின் வேண்டுகோளின்படி தன் உருவத்தைப் பதினெட்டு அடிகளாகச் சுருக்கிக் கொண்டார். 

திவாகர முனிவருக்கு நிகழ்ந்தது போல் வில்வமங்கள நம்பூதிரி என்பவருக்கும் நிகழ்ந்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. திவாகர முனிவர், வில்வமங்கள நம்பூதிரி இருவருமே பெருமாளுக்கருகே கர்ப்பக்கிரகத்த்தில்  உள்ளனர். இவர்களைத்தவிர கௌண்டின்யர் என்ற முனிவரும் சந்நிதியில்  இருக்கிறார்.

பிற்காலத்தில், இந்தக் கோவிலில் ஒரு தீ விபத்து ஏற்பட்டதால்,, மார்த்தாண்ட வர்மன் என்ற மன்னன்  பெருமாள் இட்ட கட்டளைப்படி நேபாளத்திலிருந்து 2400 சாலிக்கிராமங்களை  யானை மீது எற்றிக்  கொண்டு வரச்செய்தான்.  அவற்றில் 1200 சாளக்கிராமங்களைக் கொண்டு இப்போது உள்ள 18 அடி நீள விக்கிரகம் உருவாக்கப்பட்டது. மீதமுள்ள 1200 சாளக்கிராமங்கள், பிற்காலத்தில்  தேவைப்பட்டால் பயன்படுத்தப்படுவதற்காகக் கீழே புதைத்து வைக்கப்பட்டுள்ளன.


1686இல் தொடங்கி  40 வருடங்கள்  கோவில்  நிர்மாணப்  பணிகள் நடந்து,  1726ஆம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது. 1750ஆம் ஆண்டு, மார்த்தாண்டவர்மன் தன்னை பத்மநாபதாசன் என்று அறிவித்துக் கொண்டான்.அவனது வம்சத்தினரும் அவ்வாறே அழைக்கப்படுகின்றனர். 

மூலவர் - அனந்த பத்மநாபன். ஆதிசேஷன் மீது சயனித்த திருக்கோலம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். நாபிக்கமலத்தில் பிரும்மா. பெருமாளின் திருமுடி, உடல், திருவடி ஆகியவற்றைத் தனித்தனியே தரிசிக்கும் வகையில் மூன்று வாசல்கள் உள்ளன,

தாயார் - ஸ்ரீஹரி லட்சுமி. தனிக்கோவில் இல்லை. உத்சவராகப் பெருமாளுடன்  இணைந்து கர்ப்பக்கிரகத்தில் இருக்கிறார். 

விமானம் - ஹேமகூட விமானம் 

தீர்த்தம் - மத்ஸ்ய தீர்த்தம், வராக தீர்த்தம் 

நரசிம்மர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், கணபதி  சந்நிதிகள் இருக்கின்றன. 

பெருமாளைத் தரிசிக்க மேடைக்கு ஐந்தாறு படிகள் ஏறிச் செல்ல வேண்டும். கைப்பிடி இல்லாததாலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒழுங்கு முறை சரியாகக் கடைப்பிடிக்கப்படாததாலும் , படிகளில் அனைவரும் கூட்டமாக ஏற, ஓரத்தில் ஏறுபவர்கள் நெருக்கத்தால் கீழே விழாமல் இருக்க, மிக கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. அத்துடன், சிலர் படிகளில்  ஏறாமல், பக்கவாட்டில் போய் மேடையில் தாவி ஏறுகிறார்கள். கோவில் நிர்வாகம் இவற்றை கவனித்து,  தரிசனம் செய்ப்பவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினால் சிறப்பாக இருக்கும்.

மிகப்பெரிய கோயில். பிரகாரம் முழுவதும் தூண்கள் என்று கோவிலின் அமைப்பு அற்புதமாக இருக்கிறது.

இந்த திவ்யதேசம் பற்றி எங்கள் யாத்திரை வழிகாட்டி தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் வீடியோவும், வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் வீடியோவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 




இந்த திவ்யதேசம் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியிருக்கிறார்.
நம்மாழ்வார் 
திருவாய்மொழி 
பத்தாம் பத்து
இரண்டாம்  திருமொழி
1. கெடுமிட ராயவெல்லாம் கேசவா வெள்ள நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்தபுரநகரிப் புகுதுமின்றே. (3902)

2. இன்றுபோய்ப் புகுதிராகி லெழு மையும் ஏதம்சார
குன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை
மன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம்
ஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே. (3903)

3. ஊரும்புட் கொடியுமஃதே யுலகொல்லாமுண்டுமிழ்ந்தான்
சேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச்சொன்னோம்
பேரும் ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே.(3904)

4. பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து
வாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம்
நேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே. (3905)

5. புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி
எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால்
திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில்
அனந்தபுரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார். (3906)

6. அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து
அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர்
நமர்களோ! சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும்
குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே. (3907)

7. துடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும்
படைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான்
மடைத்தலை வாளைபாயும் வயல ணியனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே. (3908)

8. கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை
இடவகை கொண்டதென்பர் எழிலணி யனந்தபுரம்
படமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண
நடமினோ நமர்களுள்ளீர்! நாமுமக் கறியச்சொன்னோம். (3909)

9. நாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான
சேமம் நங்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம்
தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு
வாமனன் அடிக்கென்றெத்த மாய்ந்தறும் வினைகள்தாமே. (3910)

10. மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும்
ஏய்ந்தபொன் மதிளனந்தபுர நகரெந்தைக்கென்று
சாந்தொடு விளக்கம்தூபம் தாமரை மலர்கள்நல்ல
ஆய்ந்துகொண் டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே. (3911)

11. அந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை
கொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில்
பைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே. (3912)
ஓம் நமோ நாராயணாய!

Sunday, February 11, 2018

58. திவ்யதேச தரிசன அனுபவம் - 37 திருவண்வண்டூர் (67)

தரிசனம் செய்த நாள்: 25.01.18  வியாழக்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
9. திருவண்வண்டூர் (67)



தேவி முலகு முயிருந் திரிந்துநிற்கும்
யாவும் படைத்த விறைகண்டீர் - பூவில்
திருவண்வண் டூருறையுந் தேவாதி தேவன்
மருவண்வண் டூர்துளவ மால். (67)
- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 


நகுலனால் புனர்நிர்மாணம் செய்யப்பட திவ்யதேசம் திருவண்வண்டூர். திருப்பாண்டவனூர் என்ற பெயர் காலப்போக்கில் திருவண்வண்டூர் என்று மாறியிருக்கலாம். திருவமுண்டூர் என்றும் இந்த ஊர் அழைக்கப்படுகிறது. 

நாரதர் ஒருமுறை பிரம்மாவின் சாபத்துக்கு ஆளாகி இந்த ஊரில்  வந்து தவம் செய்தார். அப்போது பெருமாள் அவருக்குக் காட்சி கொடுத்தார். நாரதீய புராணம் என்ற நூலை அவர் இங்கிருந்தபடிதான் எழுதினார் என்பது ஸ்தல புராணம்.



மார்க்கண்டேய மகரிஷிக்குப் பெருமாள் கமலவல்லித் தாயார்  சமேதராக இங்கே காட்சி அளித்தார் என்பதும் இந்த திவ்யதேசத்தின் சிறப்பு.

பம்பா நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம்

மூலவர் - கமலநாதன், பாம்பணையப்பன் (பம்பா நதிக்கு அருகில் எழுந்தருளியிருப்பதால் இந்தப் பெயர்) வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம் 

தாயார் - கமலவல்லி நாச்சியார் (தனிக்கோவில் சந்நிதி இல்லை)

விமானம் - வேதலய  விமானம் 

தீர்த்தம் - பாபநாச தீர்த்தம், பம்பா தீர்த்தம் 

நாங்கள் சென்றபோது பெருமாள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அற்புதமாகக் காட்சி அளித்தார். 

இந்த திவ்யதேசத்தின் பெருமையை தஞ்சாவூர் ரமேஷ் அவர்கள் விளக்கும் வீடியோ கீழே.



இந்த திவ்யதேசத்தை நம்மாழ்வார் 11 பாசுரங்களில் மங்களாசாஸனம் செய்திருக்கிறார்.
நம்மாழ்வார்
திருவாய்மொழி 
ஆறாம் பத்து
முதல் திருமொழி
1. வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்
செய்கொள் செந்நெ லுயர்திருவண்வண் டூருறையும்,
கைகொள் சக்கரத் தென்கனி வாய்பெரு மானைக்கண்டு,
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே. (3451)

2. காதல் மென்பெடை யோடுடன் மேயும் கருநாராய்!
வேத வேள்வி யொலிமுழங்கும் தண் டிருவண்வண்டூர்,
நாதன் ஞாலமெல் லாமுண்ட நம்பெரு மானைக்கண்டு,
பாதம் கைதொழுது பணியீ ரடியேன் திறமே. (3452)

3. திறங்க ளாகியெங் கும்செய்களூடுழல் புள்ளினங்காள்,
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண் டூருறையும்,
கறங்கு சக்கரக் கைக்கனி வாய்ப்பெரு மானைக்கண்டு,
இறங்கி நீர்தொழுது பணியீரடியே னிடரே. (3453)

4. இடரில் போகம் மூழ்கி யிணைந்தாடும் மடவன்னங்காள்,
விடலில் வேத வொலிமுழங்கும்தண் திருவண்வண்டூர்,
கடலில் மேனிப் பிரான்கண் ணணைநெடு மாலைக்கண்டு,
உடலம் நைந்தொருத் தியுரு கும் என் றுணர்த்துமினே. (3454)

5. உணர்த்த லூட லுணர்ந்துடன் மேயும் மடவன்னங்காள்,
திணர்த்த வண்டல்கள் மேல்சங்கு சேரும் திருவண்வண்டூர்,
புணர்த்த பூந்தண் டுழாய்முடி நம்பெரு மானைக்கண்டு,
புணர்த்த கையினரா யடியேனுக்கும் போற்றுமினே. (3455)

6. போற்றியான் இரந் தேன்புன்னை மேலுறை பூங்குயில் காள்,
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண் டூருறையும்,
ஆற்ற லாழியங் கையம ரர்பெரு மானைக்கண்டு,
மாற்றங் கொண்டரு ளீர்மையல் தீர்வ தொருவண்ணமே. (3456)

7. ஒருவண்ணம்சென்று புக்கெனக்கு ஒன்றுரை யொண்கிளியே,
செருவொண் பூம்பொழில் சூழ்செக்கர் வேலை திருவண்வண்டூர்,
கருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்,
செருவொண் சக்கரம் சங்கடை யாளம் திருந்தக் கண்டே. (3457)

8. திருந்தக் கண்டெனக் கொன்றுரை யாயொண் சிறுபூவாய்
செருந்தி ஞாழல் மகிழ்புன்னை சூழ்தண் டிருவண்வண்டூர்,
பெருந்தண் தாமரைக் கண்பெரு நீண்முடி நாள்தடந்தோள்,
கருந்திண் மாமுகில் போல்திரு மேனி யடிகளையே. (3458)

9. அடிகள் கைதொழு தலர்மேல் அசையும் அன்னங்காள்,
விடிவை சங்கொலிக் கும்திரு வண்வண் டூருறையும்,
கடிய மாயன்தன் னைக்கண்ணனை நெடு மாலைக்கண்டு,
கொடிய வல்வினை யேன்திறம் கூறுமின் வேறுகொண்டே. (3459)

10. வேறு கொண்டும்மை யானிரந் தேன்வெறி வண்டினங்காள்,
தேறு நீர்ப்பம் பைவட பாலைத் திருவண்வண்டூர்,
மாறில் போரரக் கன்மதிள் நீறெழச் செற்றுகந்த,
ஏறுசேவக னார்க்கென்னை யுமுளள் என்மின்களே. (3460)

11. மின்கொள் சேர்புரி நூல்குற ளாயகல் ஞாலம்கொண்ட,
வன்கள் வனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொன்ன,
பண்கொள் ஆயிரத் துள்ளிவை பத்தும் திருவண்வண்டூர்க்கு,
இன்கொள் பாடல் வல்லார் மதனர்மின் னி டையவர்க்கே. (3461)
ஓம் நமோ நாராயணாய!

Saturday, February 10, 2018

56.திவ்யதேச தரிசன அனுபவம் - 35 திருச்செங்குன்றூர் (64)

தரிசனம் செய்த நாள்: 25.01.18  வியாழக்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
6. திருச்செங்குன்றூர் (64)


வரவேண்டுங் கண்டாய் மதிகலங்கி விக்குள்ற் 
பொரவே யுயிர்மாயும் போழ்து - பரமேட்டி!
செங்குன்றூர் மாலே! சிறைப்பறவை மேற்கனகப்
பைங்குன் றூர் கார்போற் பறந்து. (64)
- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

திருச்செங்குன்றூர் (திருச்செங்கண்ணூர்), திருவாறன்விளை, திருவல்லவாழ், திருப்புலியூர், திருவண்வண்டூர் ஆகிய ஐந்து திவ்யதேசங்களும் சற்று அருகருகிலேயே அமைந்துள்ளன. திருச்செங்குன்றூர் திவ்யதேசம் திருச்சிற்றாறு  என்றும் அழைக்கப்படுகிறது. பம்பா நதியின் கிளையான திருச்சிற்றாறின் கரையில் அமைந்திருப்பதால் இந்தப் பெயர்.
மகாபாரதப் போரின்போது துரோணரின் மகன் அஸ்வத்தாமா கொல்லப்பட்டதாக அவரை நம்ப வைத்து அதன் மூலம் அவரை பலவீனப்படுத்தி வீழ்த்தியதில் யுதிஷ்டிரனுக்கும் பங்கு உண்டு. இந்தப் பாவத்தைப் போக்கிக்கொள்ள யுதிஷ்டிரன் இந்தக்  கோவிலைப் புனர் நிர்மாணம் செய்தான்.

சிவபெருமானிடம் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி பஸ்மாசுரன் என்ற அரக்கன் அவரையே அழிக்க முன்றபோது மோகினியாக வந்து நடனமாடி அரக்கனை அழித்த வரலாறும் இந்த திவ்யதேசத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.  
மூலவர் - இமையவரப்பன். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். வழக்கத்துக்கு மாறாக, இங்கே சங்கு வலக்கையிலும், சக்கரம் இடக்கையிலும் இருக்கிறது.
தாயார் - செங்கமலவல்லி நாச்சியார் (தனிக்கோவில் நாச்சியார் இல்லை)
விமானம் - ஜகஜ்ஜோதி விமானம் 
தீர்த்தம் - சங்க
தீர்த்தம்
இந்த திவ்யதேசம் பற்றித் தஞ்சை ரமேஷ் அவர்களின் விளக்கவுரையை இந்தக் காணொளியில் கேட்டு மகிழலாம். 




நம்மாழ்வார் 
திருவாய்மொழி
எட்டாம் பத்து
நான்காம்  திருமொழி
1. வார்கடா அருவி யானைமா மலையின் மருப்பி ணைக் குவடிறுத் துருட்டி,
ஊர்கொள்திண் பாகன் உயிர்செகுத் தரங்கின் மல்லரைக் கொன்றுசூழ் பரண்மேல்,
போர்கடா வரசர் புறக்கிட மாட மீமசைக் கஞ்சனைத் தகர்த்த,
சீர்கொள்சிற் றாயன் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெங்கள்செல் சார்வே.(3704)

2. எங்கள்செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பனென் அப்பன்,
பொங்குமூ வுலகும் படைத்தளித் தழிக்கும் பொருந்துமூ வுருவனெம் அருவன்,
செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு
அங்கமர் கின்ற, ஆதியான் அல்லால் யாவர்மற் றெனமர் துணையே? (3705)

3. என்னமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்தவெம் பெருமான்,
முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள என்னையாள் கின்றேம் பெருமான்,
தென்திசைக் கணிகொள் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை மீபால்
நின்றவெம் பெருமான், அடியல்லால் சரணம் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே.(3706)

4. பிறிதில்லை யெனக்குப் பெரியமூ வுலகும் நிறையப்பே ருருவமாய் நிமிர்ந்த,
குறிய மாண் எம்மான் குரைகடல் கடைந்த கோலமா ணிக்கமென் எம்மான்,
செறிகுலை வாழை கமுகுதெங் கணிசூழ் திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு
அறிய,மெய்ம் மையே நின்றவெம் பெருமான் அடியிணை யல்லதோர் அரணே. (3707)

5. அல்லதோர் அரணும் அவனில்வே றில்லை அதுபொரு ளாகிலும், அவனை
அல்லதென் ஆவி அமர்ந்தணை கில்லா தாதலால் அவனு றை கின்ற,
நல்லநான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும்புகை விசும்பொளி மறைக்கும்,
நல்லநீள் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றெனக்குநல் லரணே. (3708)

6. எனக்குநல் லரணை எனதா ருயிரை இமையவர் தந்தைதாய் தன்னை,
தனக்குன்தன் தன்மை அறிவரி யானைத் தடங்கடல் பள்ளியம் மானை,
மனக்கொள்சீர் மூவா யிரவர்வண் சிவனும் அயனும் தானுமொப் பார்வாழ்,
கனக்கொள்திண் மாடத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்கண் டேனே. (3709)

7. திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள் கண்டவத் திருவடி யென்றும்,
திருச்செய்ய கமலக் கண்ணூம்செவ் வாயும் செவ்வடி யும்செய்ய கையும்,
திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய கமலமார் பும்செய்ய வுடையும்,
திருச்செய்ய முடியும் ஆரமும் படையும் திகழவென் சிந்தையு ளானே. (3710)

8. திகழவென் சிந்தை யுள்ளிருந் தானைச் செழுநிலத் தேவர்நான் மறையோர்,
திசைகைகூப்பி யேத்தும் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றங்கரை யானை,
புகர்கொள்வா னவர்கள் புகலிடந் தன்னை அசுரர்வன் கையர்வெங் கூற்றை,
புகழுமா றறியேன் பொருந்துமூ வுலகும் படைப்பொடு கெடுப்புக்காப் பவனே.(3711)

9. படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவபெருமான் அவனே,
இடைப்புக்கோ ருருவும் ஒழிவில்லை யவனே புகழ்வில்லை யாவையும் தானே,
கொடைப்பெரும் புகழார் இனையர்தன் னானார் கூறிய விச்சையோ டொழுக்கம்,
நடைப்பலி யியற்கைத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றமர்ந்த நாதனே. (3712)

10. அமர்ந்த நாதனை யவரவ ராகி அவர்க்கருள் அருளுமம் மானை
அமர்ந்ததண் பழனத் திருச்செங்குன் றூரில் திருச்சிற்றாற் றங்கரை யானை,
அமர்ந்தசீர் மூவா யிரவர்வே தியர்கள் தம்பதி யவனிதே வர்வாழ்வு,
அமர்ந்தமா யோனை முக்கணம் மானை நான்முக னையமர்ந் தேனே. (3713)

11. தேனைநன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்டவம் மானை,
வானநான் முகனை மலர்ந்தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்தமா யோனை,
கோனைவண் குருகூர்ச் வண்சட கோபன் சொன்னவா யிரத்துளிப் பத்தும்,
வானின்மீ தேற்றி யருள்செய்து முடிக்கும் பிறவிமா மாயக்கூத் தினையே (3714)
ஓம் நமோ நாராயணாய!



Friday, February 9, 2018

52. திவ்யதேச தரிசன அனுபவம் - 34 திருவாறன்விளை (71)

தரிசனம் செய்த நாள்: 24.01.18/25.01.18  புதன்கிழமை/ வியாழக்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
13. திருவாறன்விளை (71)
சென்று புனன்மூழ்கிச் செய்தவங்கள் செய்தாலும்
வென்றுபுல னைந்தடக்கி விட்டாலும் - இன்றமிழால்
மாறன் விளைத்த மறையோதார்க் கில்லையே
ஆறன் விளைத்திருமா லன்பு. (71)
  - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் 108 திருப்பதி அந்தாதி 

ஆறன்முளா என்று அழைக்கப்படும் திருவாறன்விளை செங்கண்ணூருக்கு அருகில் பம்பா நதியை ஒட்டி உள்ளது. ஆறன்முளா என்ற சொல் ஆறு கொம்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட படகைக் குறிக்கிறது. 

மாங்காட்டு நம்பூதிரி என்பவர் இல்லத்தில் ஒவ்வொரு திருவோணத்தன்றும் அதிதியாக வந்து ஒரு பிரம்மச்சாரி உணவு அருந்தி விட்டு வந்தார். 
ஒருமுறை இந்த திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாள், நம்பூதிரியின் கனவில் வந்து, பிரம்மச்சாரியாக வந்து உணவருந்தி விட்டுப் போவது  தான்தான் என்று கூற, பெருமாளைக் காண நம்பூதிரி தன்  ஊரிலிருந்து ஆறு கொம்புகளால் செய்யப்பட்ட ஒரு படகில் வந்தார். அதனால் இந்த ஊருக்கு ஆறன்முளா என்ற பெயர் ஏற்பட்டது.

இந்தக் கோவிலில் இருக்கும் பெருமாள் முதலில் நிலக்கண் என்ற ஊரில் உள்ள கோவிலில் இருந்ததாகவும் நிலக்கண் நாராயணன் என்று பெயர் பெற்ற அந்தப் பெருமாள் இந்த ஊறில் எழுந்தருள விரும்பி, ஒரு பக்தரின் கனவில் வந்து தன்னை இங்கே பிரதிஷ்டை செய்யும்படி கூறியதாகவும், அதன்படி நிலக்கண் நாராயணர் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் ஒரு ஐதீகம் உண்டு.

வியாசரும், பிரம்மாவும் மது, கைடபர்கள் என்ற அரக்கர்களை அழிக்கக் கோரி விஷ்ணுவைக் குறித்து இங்கே தவம் செய்தனர். அப்போது பெருமாள் பிரம்மா, வியாசர் இருவருக்கும் காட்சி கொடுத்தார்.

இந்தக் கோவில் அர்ஜுனனால் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மகாபாரதப் போரில் கர்ணனை யுத்த தர்மத்துக்கு விரோதமாக அவன் ஆயுதம் ஏந்தாதபோது கொன்றதற்குப் பிராயச்சித்தமாக, அர்ஜுனன்  இந்தக் கோவிலைப்  புனர்நிர்மாணம் செய்தான்.  

(இதுபோல் யுதிஷ்டிரன் திருச்செங்கண்ணூரிலும், பீமன் திருப்புலியூரிலும், நகுலன் திருவண்வண்டூரிலும், சகதேவன் திருக்கடித்தானத்திலும் கோவிலைப் புனர்நிர்மாணம் செய்திருக்கிறார்கள். இது தவிர, இவர்கள் ஐவரும் திருவித்துவக்கோட்டில் நான்கு சந்நிதிகளை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.)

அர்ஜுனனால் நிறுவப்பட்டதால் இந்தப் பெருமாளுக்கு பார்த்தசாரதி என்று பெயர். வாமன மூர்த்தியைக் குறிக்கும் திருக்குறளப்பன் என்ற பெயரும் உண்டு. (நம்மாழ்வாரின் தாயாரின் ஊரான திருவண்பரிசாரத்திலும் பெருமாளின் பெயர் திருக்குறளப்பன் என்பதுதான்)

இங்கே ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் படகுப்போட்டி பிரசித்தி பெற்றது.

24.01.18 இரவு சுமார் 8 மணிக்கு நடை சாத்தும் முன்பு கோவிலுக்குப் போனேன். அப்போது ஸ்ரீவேலி முடிந்ததும் சந்நிதியைத் திறந்தபோது பார்த்தசாரதிப் பெருமாள் சந்தனக்காப்பில் மிக அழகாகத் தோற்றமளித்தார். மறுநாள் அதிகாலை நாலரை மணிக்கு கோவிலுக்குச் சென்றபோது விஸ்வரூப தரிசனமும் கிடைத்தது. பிறகு மீண்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்தார்கள்.

மூலவர் - பார்த்தாதிசாரதி, திருக்குறளப்பன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார் - பத்மாஸனித் தாயார் (தனிக் கோவில் சந்நிதி இல்லை)

விமானம் - வாமன விமானம் 

தீர்த்தம் - பம்பா  தீர்த்தம், வேதவியாஸ சரஸ் 

பிரகாரத்தில், கீழ்த்தளத்தில் பலராமர் சந்நிதி அமைந்திருக்கிறது.படிகளில்   றங்கி கீழே செல்ல வேண்டும். பிரகாரத்தை ஒட்டியே பம்பா நதிப்  படிக்கட்டும் இருக்கிறது.

கோவிலின் சிறப்பை விளக்கும் வீடியோக்கள் கீழே.



இந்த திவ்யதேசம் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். நம்மாழ்வாரின் பாசுரங்களை இந்த திவ்யதேசத்துப் பெருமாளே கேட்டு ரசித்ததாகச் சொல்லப்படுவது உண்டு.
நம்மாழ்வார் 
திருவாய்மொழி 
ஏழாம்  பத்து 
பத்தாம் திருமொழி 
1. இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானுமிவ் வேழுலகை,
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான்,
அன்புற் றமர்ந்துறை கின்றா ணிபொழில் சூழ்திரு வாறன்விளை,
அன்புற் றமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ. (3660)

2. ஆகுங்கொல் ஐயமொன் றின்றி அகலிடம் முற்றவும், ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும்,
மாகம் திகழ்கொடி மாடங்கள் நீடும் மதிள்திரு வாறன்விளை,
மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழுங் கூடுங்கொலோ. (3661)

3. கூடுங்கொல் வைகலும் கோவிந்த னைமது சூதனைக் கோளரியை,
ஆடும் பறவை மிசைக்கண்டு கைதொழு தன்றி யவனுறையும்,
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வியைந் தாறங்கம் பன்னினர்வாழ்,
நீடு பொழில்திரு வாறன் விளைதொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே. (3662)

4. வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழு தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற
வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந் நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை,
வாய்க்கும் பெரும்புகழ் மூவுல கீசன் வடமது ரைப்பிறந்த,
வாய்க்கும் மணிநிறக் கண்ணபி ரான்றன் மலரடிப் போதுகளே. (3663)

5. மலரடிப் போதுகள் என்னெஞ்சத் தெப்ப்பொழு துமிருத் திவணங்க,
பலரடி யார்முன் பருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்,
மலரில் மணிநெடு மாடங்கள் நீடு மதில்திரு வாறன்விளை,
உலகம் மலிபுகழ் பாடநம் மேல்வினை ஒன்றும்நில் லாகெடுமே. (3664)

6. ஒன்றும்நில் லாகெடும் முற்றவும் தீவினை யுள்ளித் தொழுமிந்தொண்டீர்,
அன்றங் கமர்வென் றுருப்பி ணிநங்கை யணிநெடுந் தோள்புணர்ந்தான்,
என்றுமெப் போதுமென் னெஞ்சம் துதிப்ப வுள்ளேயிருக் கின்றபிரான்,
நின்ற அணிதிரு வாறன் விளை யென்னும் நீணக ரமதுவே. (3665)

7. நீணக ரமது வேமலர்ச் சோலைகள் சூழ்திரு வாறன்விளை,
நீணக ரத்துறை கின்றபி ரான்நெடு மால்கண்ணன் விண்ணவர்கோன்
வாண புரம்புக்கு முக் கட்பி ரானைத் தொலையவெம் போர்கள்செய்து,
வாணனை யாயிரந் தோள்துணித் தாஞ்சரண் அன்றிமற் றொன்றிலமே. (3666)

8.அன்றிமற்  றொன்றிலம் நின்சர ணே!என் றகலிரும் பொய்கை யின்வாய்,
நின்றுதன் நீள்கழ லேத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்,
சென்றங் கினிதுறை கின்ற செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை,
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே. (3667)

9. தீவினை யுள்ளத்தின் சார்வல்ல வாகித் தெளிவிசும் பேறலுற்றால்,
நாவினுள் ளுமுள்ளத் துள்ளும் அமைந்த தொழிலினுள் ளும்நவின்று,
யாவரும் வந்து வணங்கும் பொழில்திரு வாறன் விளையதனை,
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல் என்னுமென் சிந்தனையே. (3668)

10. சிந்தைமற் றொன்றின் திறத்ததல் லாத்தன்மை தேவபி ரானறியும்,
சிந்தையி னால்செய்வ தானறி யாதன மாயங்கள் ஒன்றுமில்லை,
சிந்தையி னால்சொல்லி னால்செய்கை யால்நிலத் தேவர் குழுவணங்கும்,
சிந்தை மகிழ்திரு வாறன் விளையுறை தீர்த்தனுக் கற்றபின்னே.(3669)

11. தீர்த்தனுக் கற்றபின் மற்றோர் சரணில்லை யென்றெண்ணி,
தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தன னாகிச் செழுங்குரு கூர்ச்சட கோபன்சொன்ன,
தீர்த்தங்க ளாயிரத் துள்ளிவை பத்தும்வல் லார்களை, தேவர்வைகல்
தீர்த்தங்க ளேயென்று பூசித்து நல்கி யுரைப்பார்தம் தேவியர்க்கே. (3670)

ஓம் நமோ நாராயணாய!

55. திவ்யதேச தரிசன அனுபவம் - 33 திருவல்லவாழ் (66)

தரிசனம் செய்த நாள்: 24.01.18  புதன்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
8. திருவல்லவாழ் (66)

உகந்தார்க்கெஞ் ஞான்று முளனா யுகவா
திகந்தார்ககெஞ் ஞான்று மிலனாய்த் - திகழ்ந்திட்
டருவல்ல வாழுருவ மல்லவென நின்றான்
திருவல்ல வாழுறையுந் தே. (66)) 
  - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் 108 திருப்பதி அந்தாதி 

இந்தக் கோவிலின் அமைப்பை இந்த வீடியோவில் கண்டு மகிழலாம்


கொல்லம்-எர்ணாகுளம் (திருவனந்தபுரம்-சென்னை) ரயில் மார்க்கத்தில் உள்ள திருவல்லா என்ற ஊர்தான் திருவல்லவாழ் எனும் இந்த திவ்யதேசம். இது ஸ்ரீவல்லப க்ஷேத்ரம் என்றும் அறியப்பட்டிருக்கிறது.

இந்தத் திருப்பதியில் உள்ள ஸ்ரீவல்லபரின் விக்கிரகம் தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டது. துவாபர யுகத்தில் கிருஷ்ண பரமாத்மாவால் கருடனுக்கு அளிக்கப்பட்ட இந்த விக்கிரகத்தை கலியுகத்தில் பிரதிஷ்டை செய்யலாம் என்று தீர்மானித்த கருடன், விக்கிரகத்தை  அருகில் உள்ள நேத்ரவதி என்னும் நதியில் மறைத்து வைத்து விட்டார்.

கலியுகத்தில் சேரமான் பெருமாள் என்ற அரசனின் மனைவியின் கனவில் நேத்ரவதி நதியில் இந்த விக்கிரகம் இருக்கும் காட்சி தோன்ற, அந்த அரசி விக்கிரகத்தை எடுத்துக் பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு. கி.மு.59-இல் நிகழ்ந்தது இது.இதனால் இந்தக் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்தது.

கோவிலுக்குள் நுழைந்ததுமே ஐம்பது அடி உயர துவஜஸ்தம்பத்தின் உச்சியில் கருடன் வீற்றிருப்பதைக்காணலாம். இந்த கருடனை வணங்கி விட்டுக் கோவிலுக்குள் செல்வது மரபு. இந்த துவஜஸ்தம்பம் பூமிக்கு அடியிலும் ஐம்பது அடி புதைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

துர்வாசர் இந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. துர்வாசர் பெருமாளுக்கு 12,000 வாழைப்பழங்களை நிவேதனம் செய்தாராம். அதனால் ஆண்டுக்கு ஒருமுறை பன்னீராயிரம் திருவிழா என்ற உற்சவத்தில், பெருமாளுக்கு 12,000 வாழைப்பழங்கள் சமர்ப்பிக்கப்படும் வழக்கம் உள்ளது.

மங்களத்தம்மா என்ற மூதாட்டி ஏகாதசி விரதம் இருப்பதற்குத்த தோலாசுரன் என்ற அசுரன் இடையூறு செய்து வந்தான். ஒரு பிரம்மச்சாரியாக வந்த பெருமாள் தன் சுதர்சன சக்கரத்தால் தோலாசுரனை வாதம் செய்தார்.

பிறகு மூதாட்டியின் வீட்டுக்குச் சென்ற அவர், தோலாசுரன் தானே இறந்து விட்டதாக மூதாட்டியிடம் கூறினார். பிரம்மச்சாரி தன் மீது போர்த்தியிருந்த மான்தோல் சற்று விலகியபோது அவரது திருமார்பில் மகாலக்ஷ்மி இருந்ததைப் பார்த்து விட்ட மூதாட்டி பிரும்மச்சாரியாக வந்திருப்பவர்  மகாவிஷ்ணுதான் என்று புரிந்து கொண்டார். பெருமாள் அந்த மூதாட்டிக்குத் தன்  சுய உருவத்தைக் காட்டி அருளினார்.

மார்பில் திரு வாழ்வதை மூதாட்டிக்குக்  காட்டிய ஊர் என்பதால்  திருவல்லவாழ் என்ற பெயர் பெற்ற இந்த ஊர் திருவல்லா என்று இப்போது அழைக்கப்படுகிறது.

மூதாட்டி பிரம்மச்சாரிக்குத் தயிர்சாதமும் உப்புமாங்காயும் கொடுத்து உபசரித்ததால் இங்கே பெருமாளுக்குத் தயிர்சாதமும், உப்புமாங்காயும் அமுதாகப் படைக்கப்படுகிறது. அத்துடன் பெருமாளுக்கு நிவேதனம் செய்யுமுன் ஒரு அதிதிக்கு உணவு படைக்கும் வழக்கமும் இந்தக் கோவிலில் உள்ளது.

கண்டகர்ணன் என்ற பக்தனுக்குப்  பெருமாள் மோட்சம் அளித்த தலம் இது.

மூலவர் - ஸ்ரீவல்லபன், திருவாழ்மார்பன், கோலப்பிரான். கிழக்கு
 நோக்கிய திருமுக மண்டலத்துடன் நின்ற திருக்கோலம்.

தாயார் - செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் (பெருமாளின் திருமார்பில் உறையும் தாயாரின் பெயர் இது. தாயாருக்குத் தனிச் சந்நிதி இல்லை.)

விமானம் - சதுரங்க கோல விமானம்

தீர்த்தம் - கண்டகர்ண தீர்த்தம்


பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார், விஷ்வக்சேனர் சந்நிதிகள் இருக்கின்றன

 எங்கள் யாத்திரையில் வழிகாட்டியாக வந்த தஞ்சாவூர் ரமேஷ் அவர்கல் இந்தக் கோவிலின் சிறப்புகள் குறித்து விளக்கும் காணொளிகளைக் கீழே காணலாம்.


.



















இந்த திவ்யதேசத்தை திருமங்கை ஆழ்வார் 11  பாசுரங்களாலும் , நம்மாழ்வார் 11 பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். நம்மாழ்வார் சரணாகதி செய்து கொண்ட ஐந்து திவ்ய க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
ஒன்பதாம் பத்து 

ஏழாந் திருமொழி
1. தந்தைதாய் மக்களே சுற்றமென் றுற்றுவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ பழியெனக் கருதி னாயேல்
அந்தமா யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆய னாய
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே! (1808)

2. மின்னுமா வல்லியும் வஞ்சியும் வென்றநுண் ணிடைநுடங்கும்,
அன்னமென் னடையினார் கலவியை அருவருத் தஞ்சி னாயேல்,
துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க் காகிமுன் தூது சென்ற
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.(1809)

3. பூணுலா மென்முலைப் பாவைமார் பொய்யினை மெய்யி தென்று,
பேணுவார் பேசுமப் பேச்சைநீ பிழையெனக் கருதி னாயேல்
நீணிலா வெண்குடை வாணனார் வேள்வியில் மண்ணி ரந்த
மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே. (1810)

4. பண்ணுலாம் மென்மொழிப் பாவைமார் பணைமுலை அணைதும் நாம் என்று,
எண்ணுவார் எண்ணம தொழித்துநீ பிழைத்துய்யக் கருதி னாயேல்,
விண்ணுளார் விண்ணின்மீ தியன்ற வேங்கடத்துளார் வளங்கொள்
முந்நீர் வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.(1811)

5. மஞ்சுதோய் வெண்குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினா ரென்பதோர் சொல்லைநீ துயரெனக் கருதி னாயேல்
நஞ்சுதோய் கொங்கைமேல் அங்கைவாய் வைத்தவள் நாளை யுண்ட
மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே. (1812)

6. உருவினார் பிறவிசேர் ஊன்பொதி நரம்புதோல் குரம்பை யுள்புக்கு
அருவிநோய் செய்துநின் றைவர்தாம் வாழ்வதற் கஞ்சி னாயேல்
திருவினார் வேதநான் கைந்துதீ வேள்வியோ டங்க மாறும்
மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.(1813)

7. நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா
பேயர்தாம் பேசுமப் பேச்சைநீ பிழையெனக் கருதி னாயேல்,
தீயலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல்வா னாகி நின்ற
மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே. (1814)

8. மஞ்சுசேர் வானெரி நீர்நிலம் காலிவை மயங்கி நின்ற
அஞ்சு சேராக் கையை அரணமன் றென்றுய்யக் கருதி னாயேல்,
சந்துசேர் மென்முலைப் பொன்மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்துசேர் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.(1815)

9. வெள்ளியார் பிண்டியார் போதியார் என்றிவர் ஓது கின்ற
கள்ளநூல் தன்னையும் கருமமன் றென்றுய்யக் கருதி னாயேல்,
தெள்ளியார் கைதொழும் தேவனார் மாமுநீர் அமுது தந்த,
வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.(1816)

10. மறைவலார் குறைவிலார் உறையுமூர் வல்லவாழடிகள் தம்மை,
சிறைகுலா வண்டறை சோலைசூழ் கோலநீள் ஆலி நாடன்
கறையுலா வேல்வல்ல கலியன்வாய் ஒலியிவை கற்று வல்லார்
இறைவராய் இருநிலம் காவல்பூண் டின்பநன் கெய்து வாரே. (1817)


மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய மடல்
2673 மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை      (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை      (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்      (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத்      (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான்      (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்      (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்      (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்      (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள்
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்      (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க   (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்     (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்     (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த     (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்     (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில்     (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்     (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம்     (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்     (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு     (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே     (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்     (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம்             (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வெள்ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80)


நம்மாழ்வார் 
திருவாய்மொழி 
ஐந்தாம் பத்து
ஒன்பதாம் திருமொழி
1. மானேய் நோக்குநல்லீர்! வைகலும்வினை யேன்மெலிய,
வானார் வண்கமுகும் மதுமல்லிகை யுங்கமழும்,
தேனார் சோலைகள்சூழ் திருவல்ல வாழுறையும்ரை,
கோனாரை அடியேண் அடிகூடுவ தென்றுகொலோ? (3429)

2. என்றுகொல் தோழிமீர்காளெம்மைநீர்நலிந் தென்செய்தீரோ?
பொன்திகழ் புன்னைமகிழ் புதுமாதவி மீதணவி,
தென்றல் மணங்கமழும் திருவல்ல வாழ்நகருள்
நின்றபி ரான்,அடிநீ றடியோங்கொண்டு சூடுவதே? (3430)

3. சூடும் மலர்க்குழலீர்! துயராட்டியே னைமெலிய,
பாடுநல் வேதவொலி பரவைத்திரை போல்முழங்க,
மாடுயர்ந் தோமப்புகை கமழும்தண் திருவல்லவாழ்
நீடுறை கின்றபிரான் கழல்கண்டுங்கொல் நிச்சலுமே? (3431)

4. நிச்சலும் தோழிமீர்காள்! எம்மைநீர்நலிந் தென்செய்தீரோ?
பச்சிலை நீள்கமுகும் பலவும்தெங்கும் வாழைகளும்,
மச்சணி மாடங்கள்மீ தணவும்தண் திருவல்லவாழ்
நச்சர வினணைமேல் நம்பிரானது நன்னலமே. (3432)

5. நன்னலத் தோழிமீர்காள். நல்லவந்தணர் வேள்விப்புகை,
மைந்நலங் கொண்டுயர்விண் மறைக்கும்தண் திருவல்லவாழ்,
கன்னலங் கட்டிதன்னைக் கனியையின் னமுதந்தன்னை,
என்னலங் கொள்சுடரை என்றுகொல்கண்கள் காண்பதுவே? (3433)

6. காண்பதெஞ் ஞான்றுகொலொ வினையேன்கனி வாய்மடவீர்,
பாண்குரல் வண்டினோடு பசுந்தென்றலு மாகியெங்கும்,
சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்,
மாண்குறள் கோலப்பிரான் மலர்த்தாமரைப் பாதங்களே? (3434)

7. பாதங்கள் மேலணிபூத் தொழக்கூடுங்கொல் பாவைநல்லீர்,
ஓதநெ டுந்தடத்துள் உயர்தாமரை செங்கழுநீர்,
மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்,
நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான்தன்னை நாடோறுமே? (3435)

8. நாள்தோறும் வீடின்றியே தொழக்கூடுங்கொல் நன்னுதலீர்,
ஆடுறு தீங்கரும்பும் விளைசெந்நெலு மாகியெங்கும்,
மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ்தண் திருவல்லவாழ்,
நீடுறை கின்றபிரான் நிலந்தாவிய நீள்கழலே? (3436)

9. கழல்வளை பூரிப்பயாம் கண்டுகைதொழக் கூடுங்கொலோ,
குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி,
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்,
சுழலின் மலிசக்கரப் பெருமானது ¦ தால்லருளே? (3437)

10. தொல்லருள் நல்வினையால் சொல்லக்கூடுங்கொல் தோழிமீர்காள்,
தொல்லருள் மண்ணும்விண்ணும் தொழநின்ற திருநகரம்,
நல்லரு ளாயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்,
நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே? (3438)

11. நாமங்க ளாயிர முடையநம்பெரு மானடிமேல்,
சேமங்கொள் தென்குருகூர்ச்சடகோபன் தெரிந்துரைத்த,
நாமங்க ளாயிரத்துள் இவைபத்தும் திருவல்லவாழ்,
சேமங்கொள் தென்னகர்மேல் செப்புவார்சிறந் தார்பிறந்தே. (3439)

ஓம் நமோ நாராயணாய!