Thursday, June 9, 2016

18. வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை

வைஷ்ணவ ஆசார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது.

"லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாத யாமுனமத்யமாம்
 அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்."

'லக்ஷ்மிநாதரான மகாவிஷ்ணுவிடம் துவங்கி, நாதமுனிகள், யமுனாச்சார்யர் (ஆளவந்தார்) ,  வழியாக, அவரவர்களுடைய ஆச்சார்யர் வரை தொடரும் இந்த குரு பரம்பரையை வணங்குகிறேன்' என்பது இந்தச் செய்யுளின் பொருள்.

இது ராமனுஜரின் சீடரான கூரத்தாழ்வார் அருளிய செய்யுள். வைஷ்ணவ ஆசார்ய பரம்பரையை இது சுருக்கமாகக் குறிப்பிடுகிறது. லக்ஷ்மிநாதனான நாராயணனிடம் துவங்குகிறது இந்தப் பெருமை மிக்க பரம்பரை. நாராயணின் திருவடிகளை அடைவதே ஒரு வைஷ்ணவனின் நோக்கம். இந்த நோக்கத்தை அடைய அந்த வைஷ்ணவருக்கு வழி காட்டும் ஆச்சார்ய பரம்பரையின் முதல் இடத்திலும் நாராயணனே இருக்கிறார்!

வைணவத்தில் ஒரு கோட்பாடு உண்டு. ஒரு மனிதன் அடைய வேண்டிய இடமும் (உபேயம்) அடைய வேண்டிய வழியும் (உபாயம்) ஒன்றே! இறைவனை அடைவது நோக்கம் என்றால் அதற்கு வழி இறைவனை (ஆச்சார்யர்களின் வழிகாட்டலின்படி) வணங்குவதுதான் . எனவே தன்னை அடைய நினைப்பவர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கும் ஆச்சார்ய பரம்பரையின் முதல் ஆச்சார்யராக மகலக்ஷ்மியோடு இணைந்திருக்கும் மகாவிஷ்ணுவே விளங்குவது பொருத்தம்தானே!

மகாவிஷ்ணு எப்போதும் மகாலக்ஷ்மியோடு இணைந்தே இருப்பதாகக் கொள்வது வைணவத்தின் (ராமானுஜர் மரபில் தென் இந்தியாவில் பின்பற்றப்படும் வைணவம்) அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. . மகாவிஷ்ணுவின் மார்பில் மகாலக்ஷ்மி குடியிருக்கிறார் என்பதால் மகாவிஷ்ணு அல்லது நாராயணன் என்று சொன்னாலும் அது மகாலக்ஷ்மியோடு கூடியிருக்கும் பெருமாளைத்தான் குறிக்கும். 'லக்ஷ்மிநாத' என்று கூரத்தாழ்வார்  குறிப்பிட்டிருப்பதன் முக்கியத்துவமும் இதுதான்.

திருமகளுடன் கூடிய திருமாலில் தொடங்கி, நாதமுனிகள் ஊடாக நமது ஆச்சார்யர் வரை ஆச்சார்ய பரம்பரையில் உள்ள அனைவர்க்கும் நமது வணக்கத்தைத் தெரிவிக்கும் செய்யுள் இது.

ஸ்ரீமன் நாராயணனிடம் தொடங்கும் இந்த ஆச்சார்ய பரம்பரையில் இடம் பெற்றிருக்கும் மற்ற ஆச்சார்யர்கள் யார்? வரிசையாக எல்லாப் பெயர்களையும் பார்ப்போம்.

மகாலக்ஷ்மியுடன் இணைந்திருக்கும் மகா விஷ்ணு.
மகாலட்சுமி
விஷ்வக்சேனர்
நம்மாழ்வார்
நாதமுனிகள்
உய்யக்கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
பெரியநம்பி
ராமானுஜர்

இந்தப் பட்டியலில் ராமானுஜருக்குப் பிறகு யார்? இதற்கு இந்தப் பதிவின் இறுதியில் பதில் சொல்கிறேன்.

அதற்கு முன்பு இந்தப் பட்டியலைச் சற்று கூர்ந்து பார்க்கலாம்.

இந்தப் பட்டியலில் மகாலக்ஷ்மி இரண்டு முறை வருவதைப் பார்க்கலாம். முதலில் மகாவிஷ்ணுவுடன் இணைந்து, பிறகு தனியே! இது எப்படி என்றால்,எல்லா வைணவக்  கோவில்களிலும் கருவறையில் இருக்கும் மூலவரான பெருமாளின் மார்பில் மகாலட்சுமி இருப்பார். அது தவிர சில கோவில்களில் பக்கத்திலும் இருப்பார். தனிச் சன்னதியிலும் இருப்பார்.

மகாலக்ஷ்மியின் கருணைதான் நமக்குப் பெருமாளின் அருளைப் பெற உதவுகிறது.

ஒரு படித்த இளைஞன்  வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போகிறான். அவனுக்குப்  பல நிலைகளில் வெவ்வேறு உயர் அதிகாரிகளிடம் இண்டர்வியூ இருக்கும். இறுதியாகப் பொது மேலாளர் அவனை இண்டர்வியூ செய்கிறார். அவர் தேர்வு செய்து விட்டாலே அவனுக்கு வேலை நிச்சயம். ஆனால் அவன் தலைமை அதிகாரியையும் சந்திக்க வேண்டி இருக்கும். அப்போது தலைமை அதிகாரியுடன் பொது மேலாளரும் இருப்பார். தலைமை அதிகாரிக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கூடப் பொது மேலாளர் அவனுக்குப் பரிந்து பேசுவார். ("இல்லை சார், ப்ளஸ் டூவில் மார்க் குறைவாக இருந்தாலும் கல்லூரியில் நல்ல மார்க் வாங்கி இருக்கிறார்") கருணைக் கடலான மகாலக்ஷ்மித் தாயாரும் இது போல் பெருமாளிடம் 'இவருக்கு அருள் புரிய வேண்டும்' என்று பரிந்துரைப்பார்.

விஷ்வக்சேனர் என்பவர் சேனைநாதர். அதாவது படைகளுக்குத் தலைவர். இவர் யானை முகம் கொண்டவர். ஆனால் இவர் விநாயகர் அல்ல. இவரது மனைவியின் பெயர் ஸுத்ரவதி.

நம்மாழ்வார் விஷ்வக்சேனரின் அவதாரமாகக் கருதப்படுகிறார். தாமிரபரணிக் கருத்தியில் திருநகரி என்ற ஊரில் காரியார்-உடைய நம்பி தம்பதிக்குப் பிறந்தவர். (இவர் பிறந்ததால் அந்த ஊருக்கு ஆழ்வார் திருநகரி என்ற பெயர் வந்தது.) பிறவியிலே ஞானியான இவர் மதுரகவி ஆழ்வாரால் இனம் கண்டு கொள்ளப்பட்டவர்.

நம்மாழ்வார் சைவ வேளாளர் குலத்தில் தோன்றியவர். இவரை விட வயதில் மூத்தவரான, அந்தண குலத்தில் பிறந்த மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் பெருமையை உணர்ந்து அவர் காலில் வீழ்ந்து வணங்கியதுடன் நம்மாழ்வாரின் இறுதிக்காலம் வரை அவருக்குத் தொண்டு செய்து வந்ததார்.

நம்மாழ்வார் மீது இவர் இயற்றிய கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற பதிகம் (பத்துப்  பாடல்கள்) நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ளது. திருமாலைப் பற்றிப் பாடாவிட்டாலும் திருமாலின் பெருமையை உலகுக்கு உணர்த்த வந்த நம்மாழ்வாரின் பெருமையைப் பாடியதால் மதுரகவியும் ஆழ்வார் என்று அங்கீகரிக்கப்பட்டவர்.

ஒரு காலக்  கட்டத்தில் வழக்கில் இல்லாமல் மறைந்து விட்ட நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை நம்மாழ்வாரை தியானித்துப் பெற்று  இவ்வுலகுக்கு வழங்க நாதமுனிகளுக்கு உதவியாக இருந்தது மதுரகவி ஆழ்வாரின் கன்னி நுண் சிறுத்தாம்புதான். இது பற்றி விவரமாக அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நம்மாழ்வாருக்குப் பிறகு நாதமுனிகள், அவருடைய சீடர் உய்யக்கொண்டார், அவரது சீடர் மணக்கால் நம்பி, அவரது சீடர் ஆளவந்தார், ஆளவந்தாரின் சீடர் பெரிய நம்பி, பெரிய நம்பியின் சீடர் ராமானுஜர்.

இராமானுஜருக்குப் பின் அவரது பல சீடர்கள் வழியே இந்த ஆச்சார்ய பரம்பரை கிளை விட்டுப் படர்ந்திருக்கிறது.

இந்தப் பதிவின் துவக்கத்தில் நாம் பார்த்த கூரத்தாழ்வாரின் 'லக்ஷ்மிநாத' என்ற செய்யுள் வைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரையை மேலிருந்து துவங்கி சுருக்கமாகக் குறிப்பிடுகிறது.

முன்பு ஒரு பதிவில் நாம் பார்த்த வேதாந்த தேசிகரின் பாசுரம், இதே ஆச்சார்ய பரம்பரையை கீழே (நம்மிடம்) தொடங்கி மேல் வரிசையில் விவரிக்கிறது. இதோ அந்தப் பாசுரம்.

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கி
யான் அடைவேன் அவர் குருக்கள் நிறை வணங்கி
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுகத் திருமகள் என்று இவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.

இந்தப் பாசுரத்தில் நம்மிடமிருந்து தொடங்கி, நமக்கு மேலே நமது பெற்றோர், அவர்களுக்கு மேல் அவர்களின் ஆச்சார்யர் (நம் ஆச்சார்யரும் அவரே), அவருக்கு மேலே அவரது ஆச்சார்யர் என்று பட்டியலிட்டுக்கொண்டே போனால் ராமனுஜரில் வந்து நிற்போம். இப்போது மேலிருந்து துவங்கிக் கீழே வந்தாலும், ராமனுஜருக்குக் கீழே யார் என்ற வரிசை நமக்குக் கிடைத்திருக்கும்.

இந்த ஆச்சார்ய பரம்பரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாதமுனிகள் முதலிய ஆச்சார்யர்களின் வரலாறை அடுத்த அதிர்வில் பார்ப்போம்.

No comments:

Post a Comment