Monday, June 20, 2016

21. திவ்ய தேச தரிசன அனுபவம் - 1. திருநின்றவூர் (89)

தரிசனம் செய்த நாள்: மே 2016
தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
16. திருநின்றவூர் (89)
(தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல்)
சீரறிந்து தோழிமீர்: சென்று கொணர்ந்தெனக்குப் 
போர முலைமுகட்டிற் பூட்டுமினோ !- நேரவுணர்
பொன்றவூர் புட்கழுத்திற் பொன்னைமா ணிக்கத்தை 
நின்றவூர் நித்திலத்தை நீர் (89)
  - பிள்ளைப் பெருமாள்  ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி'


சிறு வயது முதலே சில திவ்ய தேசங்களை தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து வந்திருக்கிறது. ஆயினும் நீண்ட காலம் அவை திவ்ய தேசங்கள் என்பதே எனக்குத் தெரியாது! பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.

திவ்ய தேசங்கள் என்று தெரிந்த பிறகும் சில கோயில்களுக்குப் போயிருக்கிறேன். ஆயினும் ஒவ்வொரு திவ்ய தேசத்தைப்பற்றியும்  ஓரளவுக்காவது அறிந்து கொண்ட பின் அவற்றை  தரிசித்து என் அனுபவத்தின் பின்னணியில் ஒவ்வொரு கோவில் பற்றிய விவரங்களையும், சிறப்புகளையும், அந்தக் கோவில் பற்றி ஆழ்வார்கள் பாடிய பாடல்களோடு எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா. எனக்குத் தெரிந்த அளவுக்கு ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும் வழித்தடங்கள், பேருந்து, ரயில் மற்ற வாகன வசதிகள் பற்றியும் என் அனுபவத்தின் அடிப்படையில் குறிப்பிட முயல்கிறேன்.

இந்த வகையில் நான் முதலில் சென்றது திருநின்றவூருக்கும், திருவள்ளூருக்கும். சென்னையில் வசிப்பதால் சென்னைக்கு அருகில் உள்ள திருப்பதிகளை முதலில் தரிசிக்க எண்ணி இந்த இரண்டு ஊர்களும் ஒரே வழித்தடத்தில் இருப்பதால் 19.06.2016 அன்று இந்த இரண்டு  கோவில்களுக்கும் சென்று என் திவ்ய தேச தரிசன முயற்சியைத் துவக்கினேன். பூவுலகில் உள்ள  மற்ற  104 திவ்ய தேசங்களையும் விரைவில் தரிசிக்கும் வாய்ப்பை  நான் வணங்கும் லக்ஷ்மி  நரசிம்மர் அருள்வார் என்று நம்புகிறேன். அதற்குப் பிறகு உரிய நேரத்தில் 107, 108 ஆவது திவ்ய தேசங்களுக்கு என்னை அழைத்துக் கொள்வார் என்றும் நம்புகிறேன்!

பொதுவாக  சென்னை பஸ்கள் மீது எனக்கு அதிக நம்பிக்கை உண்டு. ஆனால் பெரும்பாலான சமயங்களில் அவை என் நம்பிக்கையை எள்ளி நகையாடி இருக்கின்றன. ஆயினும், என்னுடைய தனிப்பட்ட பயணங்களுக்குப்   பெரும்பாலும் puplic transportஐயே பயன்படுத்துவது என்ற பழக்கத்தைக் கடைப்படித்து வரும் எனக்கு இந்த நம்பிக்கையைக் கை விடுவது சுலபமாக இல்லையே!

வேளச்சேரி பேருந்து நிலையத்தில் கோயம்பேடு செல்லும் பஸ்ஸில் ஏறி எந்த வழித்தடத்திலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்ய (travel as you like) உரிமை அளிக்கும் ஐம்பது ரூபாய் டிக்கட்டை வாங்கிக்கொண்டேன்.

கோயம்பேட்டிலிருந்து  திருநின்றவூருக்கு நிறைய  பஸ்கள் இருக்கும் என்று நம்பிப் போனவனுக்கு ஏமாற்றம். பதினைந்து நிமிடம் காத்திருந்த பிறகு ஆவடி பஸ்ஸில் ஏறினேன்  அந்த பஸ்  கண்டக்டரிடம் திருநின்றவூர் பஸ் பற்றிக் கேட்டபோது, 'இங்கிருந்து நேரடி பஸ்கள்  குறைவு. ஆவடியிலிருந்து நிறைய பஸ்கள் உண்டு' என்றார்.

நான் ஆவடி சென்றடைந்ததும், அவர் சொன்னபடியே ஆவடியிலிருந்து திருவள்ளூர் செல்லும் ஓரிரு பஸ்கள் புறப்படத் தயாராக நின்றன. அவற்றில் ஒன்றில் ஏறித் திருநின்றவூர் வந்து சேர்ந்தேன். நான் அமர்ந்திருந்த சீட்டுக்குப்  பக்கத்தில் நின்றவர் நான் எங்கே போக வேண்டும் என்று கேட்டறிந்த பின், கோவிலுக்குப் போவதானால் பஸ் ஸ்டாண்டுக்கு அடுத்த நிறுத்தமான ரயில் நிலைய நிறுத்தத்தில் இறங்கும்படி சொன்னார். 'இறங்கி மினி பஸ்ஸில் போய் விடுங்கள்' என்றார். நான் உட்கர்ந்திருந்த இருக்கை அவருக்குக் கிடைத்தது எனக்கு உதவியதற்காக நான் செய்யாமலே அவருக்குக் கிடைத்த பிரதி பலன்!

திருநின்றவூரில் இறங்கிக் கோவிலுக்கு வழி கேட்டபோது, ரயில் நிலையத்துக்கு மறுபுறம் போய் அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் செல்லும்படி கூறினார்கள். பஸ் நிறுத்தத்தை ஒட்டியே ரயில் நிலையம் இருந்தது. மற்ற பாதசாரிகளைப் பின்பற்றி, மாடிப்படியைப் பயன்படுத்தாமல் ரயில் தடங்களைக் கடந்து மறுபுறம் போனேன். ஒரு தடத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு வண்டியின் அடியே புகுந்து  செல்ல வேண்டி இருந்தது (இந்த அறுபத்தைந்தாவது வயதில்!). குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்ததற்கான தண்டனை அல்லது விலை!

ரயில் நிலையத்துக்கு மறுபுறம் ஷேர் ஆட்டோக்கள்  இருந்தன. ஆனால் எவையும் உடனே கிளம்பும் நிலையில் இல்லை. ஆட்கள் ஏறி ஆட்டோ  நிரம்பி வழிந்த பிறகுதான் கிளம்புவார்கள் என்று தோன்றியது. அருகில் இருந்த ஒருவரை 'கோவில் எவ்வளவு தூரம்? ' என்று கேட்டேன். 'ஒரு கிலோ மீட்டர்தான். நடந்தே போய் விடலாம்!" என்றார் என் மன ஓட்டத்தை அறிந்தவராக.

அவ்வளவுதானே என்று நடக்கத் தொடங்கினேன். சாலை போய்க்கொண்டே இருந்தது. கோவிலுக்கு வந்து சேர்ந்தபோது ஒன்றரை கிலோ மீட்டராவது நடந்திருப்பேன் என்று தோன்றியது. அதனால் என்ன? நமக்கு தரிசனம் கொடுப்பதற்காகக் காலம் காலமாக நின்று சேவை சாதித்துக் கொண்டிருக்கும் பக்தவத்ஸலப் பெருமாளை தரிசிக்க சற்று துரம் நடந்தால் என்ன? நடப்பதற்கு உடலில் தென்பைக் கொடுத்திருப்பது அவருடைய கருணைதானே!

நடந்து சென்றபோது ஒரு ஷேர் ஆட்டோ என்னைத் தாண்டிப் போயிற்று. அதில் மூட்டைகள் போல் அடைபட்டிருந்தவர்களைப் பார்த்தபோது ஷேர் ஆட்டோவைத் தவிர்த்தது சரியான முடிவு என்று தோன்றியது.

பூந்தமல்லியிலிருந்து திருநின்றவூருக்கு வரும் 54ஏ  பஸ்கள் இரண்டு முன்று எதிர்ப்பட்டன. கோவில் பூந்தமல்லி-திருநின்றவூர் சாலையில் அமைந்திருப்பதையும், பூந்தமல்லியிலிருந்து வந்தால் கோவிலுக்கு அருகிலேயே இறங்கிக் கொள்ளலாம் என்றும் புரிந்து கொண்டேன்.

கோவிலுக்குள்  புகுமுன், சென்னையிலிருந்து இந்தத் தலத்துக்கு வர விரும்பும் பக்தர்களுக்கு ஒரு வார்த்தை. வசதி படைத்தவர்கள் காரில் வருவது சுலபம். சென்னையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர்தான் திருநின்றவூர்.

மற்றவர்கள் ரயிலில் அல்லது பஸ்ஸில் வரலாம். பஸ்ஸில் வருவதானால் பூந்தமல்லிக்கோ ஆவடிக்கோ வந்து அங்கிருந்து வருவது சுலபமாக இருக்கும். கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் அதிகம் இல்லை. ஐம்பது ரூபாய் டிக்கட் சென்னை நகர பஸ்களில் திருவள்ளூர் வரையில் செல்லும் என்பதால் இரண்டு மூன்று பஸ்கள் மாறி வருவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. திருநின்றவூர் வந்த பிறகு ஷேர் ஆட்டோவோ, தனி ஆட்டோவோ வைத்துக்கொண்டு கோவிலுக்கு வரலாம். மினி பஸ்ஸு க்காகக் காத்திருப்பதென்றால்  பெருமாளுக்குத் துணையாக நீங்களும் நின்று கொண்டே இருக்கலாம்!

இனி கோவிலுக்குள் நுழையலாம். வெளியிலிருந்து பார்க்கும்போதே முகப்பு கோபுரம் எளிமையாக ஆனால் கம்பிரமாகக் காட்சி அளிக்கிறது. (மேலே புகைப்படத்தைக் காணவும்.)

உள்ளே நுழைந்ததும் நுழைவாயிலுக்குப் பக்கத்தில் வலது புறமாக ஒரு சிறிய நரசிம்மர் சந்நிதி.  என்னைப் பொருத்தவரை எந்த இடத்திலுமே நரசிம்மரைப் பார்த்தால் தைரியமும், நம்பிக்கையும் வரும் - ஒரு குழந்தை தன் அப்பாவைப் பார்க்கும்போது அதற்கு ஏற்படும் உணர்வு போல.

பெருமாள் சந்நிதியின் முன்பு வரிசையில் நின்று சில நிமிடங்கள் கழித்து தரிசனம் கிடைத்தது. '108 திருப்பதிகளில் இது 58ஆவது' என்றார் அர்ச்சகர். ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய மூலவரும், உற்சவரும். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். அபய ஹஸ்தம். (நம்மை வாழ்த்துவது போல்  செங்குத்தாக விரிந்திருக்கும் திருக்கரம்). 'பயம் வேண்டாம். உன்னைக் காப்பாற்ற நான் இருக்கிறேன்' என்ற செய்தியைச் சொல்வது அபய ஹஸ்தம்.

விரிந்த கரத்தில் அணிவிக்கப்பட்டிருந்த கவசத்தில் 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்ற கீதை வாக்கியம் பொறிக்கப்பட்டிருந்தது. 'என்னைச் சரணடைந்தால் போதும். பிறகு நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம்' என்ற சரணாகதி தத்துவத்தைக் குறிக்கும் வாசகம். ஒப்பிலி அப்பன் கோவிலிலும், திருநின்றவூரிலும் மட்டுமே இந்த வாசகம் பொறிக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன்.

மூலவர் பக்தவத்சலப் பெருமாள். உத்சஸவருக்குப் பெயர் பத்தராவிப் பெருமாள். ஒருமுறை பெருமாளிடம் கோபித்துக்கொண்டு இங்கே வந்து தங்கி விட்டார் மகாலக்ஷ்மி. மகாலக்ஷ்மியின் தந்தை சமுத்திரராஜன் நேரில் வந்து அழைத்தும் மகாலக்ஷ்மி இந்த ஊரை விட்டு வர மறுத்து விட்டார். பிறகு சமுத்திரராஜன் மகாவிஷ்ணுவை வேண்ட, அவர் இந்த ஊருக்கு வந்து மகலக்ஷ்மியைச் சமாதானப் படுத்தியதுடன் இங்கேயே தங்கி விட்டார்.

மகாலட்சுமி வந்து தங்கியதால் இந்த ஊர்  திரு நின்ற ஊர்  என்று பெயர் பெற்றது. திருமகள் வாசம் செய்யும் ஊர் என்ற பொருளில் ஸ்ரீநிவாச  (ஸ்ரீ- திருமகள் நிவாச-வசிக்கும்) க்ஷேத்ரம் என்றும் இந்தத திருத்தலம் வழங்கப்படுகிறது.

மகாவிஷ்ணு இங்கு வந்து தங்கியதையும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதையும் கூடத் திருநின்றவூர் என்ற பெயர் குறிக்கும். சமுத்திரராஜனுக்கு அருள் பாலித்ததால் பெருமாள் பக்தவத்ஸலர் (அடியார்களிடம் அன்பு காட்டுபவர்) என்று பெயர் பெற்றார். தர்மத்வஜன் என்ற மன்னன், புரந்தரன் என்ற பக்தன் ஆகியோரும் இந்த க்ஷேத்திரத்தில் பெருமாளை சேவித்துத் தங்கள் பாவங்களிலிருந்து விடுபட்டார்கள் என்றும் வரலாறு உண்டு.

மூலவர் சந்நிதிக்கு வெளியே  மூலவருக்கு இடப்புறமாக யோக நரசிம்மர் தரிசனம் தருகிறார்.

பிரகாரத்தில் தாயார் சந்நிதி. சந்நிதி வாசலில் 'என்னைப் பெற்ற தாயார்' என்ற பெயரைப் படித்ததும் பரவசம் ஏற்பட்டது. எனக்கு எப்போதும் அருள் பாலித்து வரும் வைகுந்தவாசியான என் தாயாரே இங்கே கோயில் கொண்டிருப்பதாக நினைத்து மகிழ்ந்தேன்.

சமுத்திரராஜன் இங்கே வந்து மகாலக்ஷ்மியைக் கோபம் தணிந்து திரும்ப வருமாறு அழைத்தபோது, "நீ என் மகள் அல்ல. என்னைப் பெற்ற தாய்" என்றாராம். அதனால் தாயாருக்கு இந்தப் பெயர் வந்தது. சமஸ்கிருதத்தில் 'மத்ஸவித்ரீநாயிகா' என்று அழைக்கப்படுகிறார். தெலுங்கில் 'நன்ன கன்ன தல்லி' என்று இந்தப் பெயர் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தாயாருக்கு சுதாவல்லி என்ற பெயரும் உண்டு.

பிரகாரம் முழுவதும் 108 திருப்பதிகளின் படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. பிரகாரத்தில் ஐந்து தலைகளுடன் கூடிய ஆதிசேஷன், சக்கரத்தாழ்வார், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி (ஆண்டாள்), சேனைநாதன் (விஷ்வக்சேனர்) ஆகியோருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன.

இவை தவிர ஆண்டாள் தவிர்த்த மற்ற 11 ஆழ்வார்களுக்கும், ராமானுஜருக்குமாக ஒரு சந்நிதி இருக்கிறது. மணவாள மாமுனிகளுக்கும் ஒரு சந்நிதி இருக்கிறது. மணவாள மாமுனிகளுக்கு இடப்புறம் கூரத்தாழ்வாரும், வலது புறம் திருக்கச்சி நம்பியும் இருக்கிறார்கள். திருக்கச்சி நம்பிக்கு வலப்புறமாக ஒரு விக்கிரகம் இருக்கிறது. அது யாருடைய விக்கிரகம் என்று அர்ச்சகர் ஒருவரிடம் கேட்டதற்கு, அந்த விக்கிரகத்தின் பெயர் குறிப்பிடப்படாததால் அது யாருடைய விக்கிரகம் என்று தெரியவில்லை என்றார். அவருக்கு மட்டும்தான் தெரியவில்லையா அல்லது வேறு யாருக்குமே தெரியாதா என்பது எனக்குத் தெரியவில்லை.

முகப்பில் உள்ள கருடன் சந்நிதிக்கு மேல் மகாவிஷ்ணுவின் கிடந்த திருக்கோலச் சிற்பம் ஒன்று இடம் பெற்றிருக்கிறது.

கோவிலில் அன்னதானம் நடந்து வருகிறது ஒரு சிறப்பு என்றால், அன்றைய அன்னதானத்துக்கான மெனு எழுதிப் போடப்பட்டிருந்தது இன்னொரு சிறப்பு. கோயில் திருப்பதி பெரிய ஜீயரின் நிர்வாகத்தில் உள்ளது.

கோவிலுக்குப் பின்புறம் (வட மேற்குத் திசையில்) ஏரி காத்த ராமர் கோவில் இருக்கிறது.மூலவர் சந்நிதியில் பிரும்மாண்டமான ராமர், லக்ஷ்மணர், சீதை விக்கிரகங்கள். எதிரே கோவிலின் முகப்பில் ஆஞ்சநேயர் சந்நிதி.

ஏரி காத்த ராமர் கோவிலுக்குப் பின்னே பெரிய ஏரி. ஏரியின் மத்தியில் நீராழி மண்டபம். இந்த ஏரி 'வருண புஷ்கரணி' என்று அழைக்கப்படுகிறது.   (சமுத்திரராஜன்தான் வருணன்.) இந்த புஷ்கரிணியிலிருந்து. தான் பக்தவத்சஸலப் பெருமாளுக்குத் தீர்த்தம் எடுக்கப்படுகிறது.  வருண புஷ்கருணியின் பெருமை பற்றி  நாரதர் பேசுவதாக பிரம்மாண்ட புராணத்தில் (பதினென் புராணங்களில் ஒன்று) வருகிறது என்று அறிகிறேன்.

பக்தவத்சஸலப் பெருமாள் கோவிலுக்கு முன்புறம் (கிழக்குத் திசையில்) ஒரு ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.

ராமர் கோவிலும், ஆஞ்சநேயர் கோவிலும் மிக நேர்த்தியாக உள்ளன. இந்த திவ்ய தேசத்துக்கு வருபவர்கள் அவசரம் அவசரமாக பக்தவத்ஸலப்   பெருமாள் கோவிலை மட்டும் தரிசித்து விட்டுச் செல்லாமல் இன்னும் பதினைந்து நிமிடங்கள் ஒதுக்கி ராமர் கோவிலையும், ஆஞ்சநேயர் கோவிலையும் தரிசித்து விட்டுச் செல்ல வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

இந்தக் கோவிலின் சந்நிதிகளையும், மற்ற இடங்களையும் புகைப்படமாக இந்த youtube வீடியோவில் காணலாம்.
https://www.youtube.com/watch?v=1o00pg4Zoec

இந்த திவ்ய தேசத்தை திருமங்கை ஆழ்வார் சேவித்து மங்களாசாசனம் செய்திருக்கிறார். ராமானுஜர், ராகவேந்திரர், தியாகப் பிரம்மம் போன்ற மகான்களும் இந்த திவ்ய தேசத்தில் வந்து தரிசனம் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

திருமங்கை ஆழ்வார் இந்தத்தலத்தைப் பற்றி இரண்டு பாசுரங்கள் பாடி இருக்கிறார். இது பற்றி ஒரு வரலாறு கூறப்படுகிறது. திருமங்கை ஆழ்வார் இந்தத் திருத்தலத்துக்கு வந்து சேவித்து விட்டுப் பெருமாள் மீது ஒரு பாசுரம் கூடப் பாடாமல் போய் விட்டாராம். இது பற்றித்  தாயார் பெருமாளிடம் குறைப்பட்டுக் கொள்ள, இதற்குள் திருக்கடல் மல்லைக்குச்  (மாமல்லபுரம்) சென்று விட்ட ஆழ்வாருக்குப் பெருமாள் அங்கே காட்சி கொடுக்க, திருமங்கை ஆழ்வார் கடல்மல்லையில் சயனித்திருக்கும் தலசயனப் பெருமாளுடன் திருநின்றவூர் பெருமாளையும் சேர்த்து ஒரு பாசுரம் பாடினார். இதுதான் அந்தப் பாசுரம்.

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருக்கடல்மல்லை 
பாசுரம் 1088
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு
      பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின் எந்தை
      என் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தை கரு முகிலை எம்மான்-தன்னை
      நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலைக்
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்
      கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே  

திருநின்றவூர்ப் பெருமாளைக்  கடல் மல்லையில் கண்டேன்' என்று பாடுகிறார் ஆழ்வார். 

பெருமாள் பாசுரத்தைப் பெற்றுக்கொண்டு திருநின்றவூர் வர, தாயார் 'ஒரு பாடல்தான் பாடினாரா?' என்று குறைப்பட்டுக்கொண்டாராம்.  உடனே பெருமாள் மீண்டும் ஆழ்வாரைத் தேடிக்கொண்டு சென்றார். அதற்குள் ஆழ்வார் திருக்கண்ணமங்கைக்குப் போய் விட்டார்! பெருமாள் அவருக்குத் திருக்கண்ணமங்கையில் திருநின்றவூர்  மூலவராகக் காட்சி கொடுக்க அவரைப் பற்றி இன்னொரு பாசுரம் இயற்றினார் ஆழ்வார். இந்தப் பாசுரத்தில் திருக்கண்ணமங்கைப் பெருமாள், திருநின்றவூர் பெருமாள் இருவருமே இடம் பெறுகின்றனர். இதோ அந்தப் பாசுரம்.

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருக்கண்ணமங்கை 
பாசுரம் 1642
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை
      இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும்
      ஐயனை கையில் ஆழி ஒன்று ஏந்திய
கூற்றினை குரு மா மணிக் குன்றினை
      நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
காற்றினை புனலை-சென்று நாடி-
      கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே        

'திருநின்றவூர்ப் பெருமானைத் திருக்கண்ணமங்கையில் கண்டேன்' என்கிறார் ஆழ்வார்.

ஆழ்வாரின் இந்தச் செயலுக்கு வேறொரு காரணம் (விளக்கம்)  இருக்கலாம் என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது.

திருநின்றவூர்ப் பெருமாளைப் பார்த்ததும் ஆழ்வார் பேச்சிழந்து நின்று விட்டார்.  அந்த இடத்திலிருந்து கிளம்பி வேறு பல ஊர்களுக்குச் சென்ற பிறகும்  திருநின்றவூர்ப் பெருமாளின் திருவுருவம் அவர் மனதை விட்டு நீங்கவில்லை. திருக்கடல்மல்லையில் கிடந்த கோலத்தில் பெருமாளைப் பார்த்தபோதும், 'திருநின்றவூரில் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளித்தவனாயிற்றே நீ!' என்று எண்ணிப் பாடுகிறார்.

திருக்கண்ணமங்கை பெருமாள் பெயரும் பக்தவத்ஸலப் பெருமாள் மற்றும் பத்தராவிப் பெருமாள். அவரும் நின்ற திருக்கோலத்தில்தான் காட்சி தருகிறார். எனவே திருநின்றவூர்ப் பெருமாளுடன் அவரை இணைத்துப் பாடுகிறார்.

திருநின்றவூர் சென்று பக்தவத்ஸலப் பெருமாளையும் என்னைப் பெற்ற தாயாரையும் தரிசித்த காலம் தொட்டு அந்த திவ்ய தம்பதிகள் என் நினைவில் நின்று கொண்டே இருக்கிறார்கள் என்பது சத்தியம்.

ஓம் நமோ நாராயணாய! 

2 comments:

  1. Thanks. Wondeeful description. Had a virtual darshan of perumal and temple. Never been there though my grandma was born n brought up there. Your write-up sends a feel that perumal is reninding me to visit the place at the earliest. Thanks once again

    ReplyDelete
    Replies
    1. Thank you Ms Vasumathi Krishnan for your observations. I am sure Perumal will facilitate your visiting the temple soon.

      Delete