Thursday, August 18, 2022

87. திவ்யதேச தரிசன அனுபவம் 65- திருத்துவாரகை (துவராபதி) - 105

தரிசனம் செய்த நாள் 28 (வியாழன்), 29 (வெள்ளி), 30 (சனி)
மற்றும் 31 (ஞாயிறு), ஜூலை, 2022


வடநாட்டுத் திருப்பதிகள் - 10

10. திருத்துவாரகை

திறந்திறமாத் தாந்துய்க்குந் தீஞ்சுவையை நாடி
அறந்திறம்பிப் பாதகரோ ரைவா - நறுந்துளவ
மாதுவரை யோனே! மனந்துணையாக் கொண்டென்னைக்
காதுவரை யோ!மெய் கலந்து. (105)
       -பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் நூற்றுட்டுத் திருப்பதி அந்தாதி

முக்தி தரும் 7 திருத்தலங்களான அயோத்தி, மதுரா, மாயா (ஹரித்வார்),  காசி, காஞ்சி, அவந்தி (உஜ்ஜைனி), துவாரகை இவற்றில் துவாரகை. 7-ஆவதாக உள்ளது.

துவாரம் என்றால் வாயில் அல்லது வழி. மோட்சம் அடைவதற்கான வழியை இந்தத் திருத்தலம் காட்டுவதால் இது துவாரகை என்று அழைக்கப்படுகிறது.

ஆதிசங்கரர் இந்தியாவின் நான்கு கோடிகளிலும் தன் மடங்களை நிறுவினார். வடக்கே பத்ரிநாத் அருகே ஜோதிஷ்மட், தெற்கே சிருங்கேரி, கிழக்கே பூரி, மேற்கே துவாரகை.

தல புராணம்:

கிருஷ்ணர் பிறந்தது மதுராவில், வளர்ந்தது அதற்கு அருகில் இருக்கும் கோகுலம் அல்லது ஆயர்ப்பாடியில். இந்த இரண்டு ஊர்களும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளன. 

கிரூஷ்ணனின் தாய்மாமனான கம்சன் மதுராவை ஆண்டு வந்தான். 
தன் சகோதரி தேவகியின் வயிற்றில் பிறக்கப் போகும் எட்டாவது குழந்தை தன்னை அழித்து விடும் என்று அசரீரி மூலம் அறிந்து கொண்டதால் அவன் தேவகியையும், அவளுடைய கணவர் வசுதேவரையும் சிறையில் வைத்து அவர்களுக்குப் பிறந்த  ஏழு குழந்தைகளையும் அவை பிறந்த உடனேயே  அவற்றைச் சிறையின் சுவரில் அடித்துக் கொன்று விட்டான்.

எட்டாவது குழந்தையாக கிருஷ்ணன் பிறந்தார். கிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரம் என்பதால் அப்போது கம்சனின் அரண்மனையில் ஒரு மாயையை நிலவ வைத்து குழந்தை பிறந்தது யாருக்கும் தெரியமல் செய்தார்.

குழந்தை கிருஷ்ணர் சங்கு, சக்கரம், நான்கு கைகள் இவற்றுடன் விஷ்ணுவாக வசுதேவருக்குக் காட்சி அளித்தார். 

கிருஷ்ணரின் கட்டளைப்படி வசுதேவர் கிருஷ்ணரை எடுத்துக் கொண்டு யமுனை ஆற்றின் அக்கரையில் உள்ள கோகுலத்தில் இருந்த நந்தகோபன் வீட்டில் விட்டு விட்டு, அங்கே நந்தகோபன் மனைவி யசோதைக்குப் பிறந்திருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து சிறையிலிருந்த தன் மனைவி தேவகியின் அருகில் வைத்தார்.

அதுவரை எங்கும் நிலவிய மாயையால் நடந்தது எதுவும் தேவகி உட்பட யாருக்கும் தெரியவில்லை. 

வசுதேவர் சிறையிலிருந்து வெளியே சென்றபோதும், திரும்பி வந்தபோதும் சிறைக்கதவுகள் தானே திறந்து மூடிக் கொண்டன. 

மயக்கத்தில் இருந்த காவலர்களுக்கு எதுவும் தெரியவில்லை. 

வசுதேவர் யமுனையைக் கடந்தபோது யமுனை ஆறு அவர் நடந்த இடத்தில் தண்ணிரை விலக்கிக் கொண்டு அவருக்கு வழி விட்டது.

தேவகியின் அருகில் பெண் குழந்தை வைக்கப்பட்டதும் குழந்தை அழுதது. அப்போதுதான் மாயை விலகியது. தேவகி கண் விழித்துக் குழந்தையைப் பார்த்தாள். 

காவலர்கள் மயக்கம் தெளிந்து கம்சனிடம் செய்தியைச் சொல்ல, 
கம்சன் விரைந்து வந்து அந்தக் குழந்தையைக் கொல்ல முயன்றான்.

கம்சனின் கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அந்தக் குழந்தை அந்தரத்தில் எழும்பி, துர்க்காதேவியாகத் தோற்றம் அளித்து, கம்சனிடம், "உன்னைக் கொல்லப் போகிறவன் வேறு இடத்தில் வளர்கிறான்" என்று சொல்லி மறைந்தது.

அதற்குப் பிறகு கம்சன்  தேவகியையும், வசுதேவரையும் விடுதலை செய்தான். சிறிது காலத்துக்குப் பிறகு வசுதேவர் தேவகியிடம் நடந்த உண்மைகளைக் கூறினார். தன் மகன் உயிரோடு இருப்பதை அறிந்து தேவகி ஆறுதல் அடைந்தார்.

தேவகிக்குப் பிறந்த குழந்தை  கோகுலத்தில் உள்ள ஆயர்ப்பாடியில் வளர்வதை அறிந்த கம்சன், கிருஷ்ணரைக் கொல்ல பூதகி என்ற அரக்கி, கன்று வடிவில் ஒரு அரக்கன், வண்டிச் சக்கர வடிவில் ஒரு அரக்கன் என்று பலரையும் அனுப்பினான். அனைவரும் கிருஷ்ணரால் கொல்லப்பட்டனர்.

கிருஷ்ணர் பாலகனான பின் தன் மூத்த சகோதரர் பலராமனுடன் மதுராவுக்கு வந்து கம்சனுடன் போரிட்டு அவனைக் கொன்று மதுராவுக்கு அரசரானார். பலராமரும் கிருஷ்ணருக்குத் துணையாக மதுராவிலேயே இருந்தார்.

கம்சனின் கொடுங்கோல் ஆட்சியில் அல்லல் பட்டுக் கொண்டிருந்த மக்கள் கிருஷ்ணர் அரசரானதும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

கம்சனின் மாமனாரான ஜராசந்தன் கிருஷ்ணரைப் பழி வாங்க நினைத்து 
மதுராவின் மீது படை எடுத்தான். 

17 முறை படையெடுத்துத் தோல்வி அடைந்து திரும்பினான்.  

தன் உடம்பு பிளக்கப்பட்டால் அதை மீண்டும் ஒட்டி வைத்தால் அது உயிர் பெற்று விடும் என்று ஜராசந்தன் ஒரு வரம் பெற்றிருந்ததால் கிருஷ்ணர், பலராமர் இருவராலும் ஜராசந்தனைக் கொல்ல முடியவில்லை. 

(பிற்காலத்தில் ஜராசந்தன் பீமனுடன் போரிட்டபோது, கிருஷ்ணரின் யோசனைப்படி, பீமன் ஜராசந்தன் உடலை இரண்டாகக் கிழித்து அதை மாற்றிப் போட்டு விட்டான். அதனால் ஜராசந்தன் உடல் மீண்டும் ஒட்ட முடியாமல் போய், அவன் உயிர் இழந்தான்.)

ஜராசந்தன் அடிக்கடி போர் தொடுப்பதால் மதுராவில் உள்ள மக்களுக்குத் தொல்லை ஏற்படும் என்பதால் மதுராவை விட்டு வேறு எங்காவது செல்ல கிருஷ்ணர் விரும்பினார். ஆனால் பலராமர் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் காலயவனன் என்ற அசரனைத் தனக்குத் துணையாகத் தேடிக் கொண்டான் ஜராசந்தன். 

காலயவனன் தன்னைப் போரில் யாரும் கொல்ல முடியாது என்று சிவபெருமானிடம் வரம் பெற்றவன். அவன் 3 கோடி யவனர்கள் கொண்ட சேனையுடன் மதுராவின் மீது படையெடுத்தான்.

காலயவனனைப் போரில் கொல்ல முடியாது என்பதால் கிருஷ்ணர் கழுத்தில் ஒரு தாமரை மலரை அணிந்தபடி போர்க்களத்திலிருந்து ஓடினார்.

காலயவனன் அவரைத் துரத்திக் கொண்டு வந்தான். 

டகோர் என்ற இடத்தில் இருந்த ஒரு குகைக்கு வந்து கிருஷணர்  நின்றார். அவர் வந்து நின்ற இடம் டாகோர் துவாரகா. அங்கே உள்ள கோயிலில் கிருஷ்ணர் ரணசோட்ராய் (போரை விட்டு ஓடி வந்த அரசர்) என்று அழைக்கப்படுகிறார். (மூல் (மூல) துவாரகா கோயிலில் உள்ள மூர்த்தியும் இதே பெயரில்தான் அழைக்கப்படுகிறார்.) 

டகோரில் இருந்த அந்த குகைக்குள் முசுகுண்ட் என்பவன் உறங்கிக் கொண்டிருந்தான். முசுகுண்ட் தேவ-அசுர யுத்தத்தில் தேவர்களுக்கு உதவியதால், அவன் உறக்கத்தை யாரும் கலைத்தால் அவர்கள் அவன் பார்வையிலேயே எரிந்து போவார்கள் என்ற வரத்தை அவன் இந்திரனிடமிருந்து பெற்றிருந்தான். 

கிருஷ்ணர் அந்த குகைக்குள் நுழைந்து மறைந்து நின்று கொண்டார். 
அரவம் கேட்டு முசுகுண்ட் உறக்கம் கலைந்து கண் விழித்தான். 

அப்போது கிருஷ்ணரைத் துரத்திக் கொண்டு வந்த காலயவனன் முசுகுண்ட்டின் கண்ணில் பட  காலயவனன் எரிந்து போனான். 

கிருஷ்ணர் இமயமலைக்குச் சென்று தவம் செய்யும்படி முசுகுண்டுக்கு அறிவுரை கூற, அவனும் அவ்வாறே அங்கு சென்று தவம் செய்து மோட்சத்தை அடைந்தான்.

பிறகு கிருஷ்ணரும் பலராமரும் துவாரகைக்கு வந்தனர். முதலில் மூல் துவாரகா (மூல துவாரகை) என்ற இடத்துக்கு வந்து தங்கி இருந்தனர். பிறகு அங்கிருந்து துவரகைக்கு வந்தனர்.

துவாரகை கோமதி ந்திக்கரையில் அமைந்துள்ளது.

கோமதி நதி ஐந்து மைல் தூரமே ஓடிக் கடலில் கலக்கும் நதி. 

வசிஷ்டரின் புதல்வியான கோமதிக்கு மாப்பிள்ளை பார்க்க வசிஷ்டர் பயணம் மேற்கொண்டார். தன் மகள் கோமதியுத் தன்னுடன் வர வேண்டும் என்று அவர் விரும்பினார். 

தான் வசிஷ்டருக்குப் பின்னாலேயே வருவதாகவும், தன் சலங்கை ஒலியைக் கேட்டுத் தான் பின்னால் வருவதை வசிஷ்டர் அறிந்து கொள்ளலாம் என்றும் கோமதி கூறினாள். 

ஆனால் ஒருபோதும் தன்னைத் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று அவள் நிபந்தனை விதித்தாள்.

துவாரகைக்கு வந்ததும் கண்ணினிடம் மனம் லயித்து அங்கேயே இருந்து விட விரும்பினாள் கோமதி 

மணற்பாங்கான அந்தப் பகுதியில் கோமதி மெதுவாக நடந்து வந்தாதால் சலங்கை ஒசை வசிஷ்டருக்குக் கேட்கவில்லை. வசிஷ்டர் திரும்பிப் பார்த்தார். 

தந்தை தன் நிபந்தனையை மீறி விட்டதாகச் சொல்லி கோமதி அங்கேயே தங்கி விட்டாள். ஒரு நதியாக மாறி அருகிலிருந்த கடலில் கலந்து விட்டாள்.

கிருஷ்ணரும் பலராமரும் துவாகையில் இருந்து அந்தப் பகுதியை ஆண்டனர்.

கிருஷ்ணர் கடல் அரசனிடம் இடம் வாங்கிப் பெற்று கடலுக்குள் ஒரு தீவில் ஒரு நகரத்தை உருவாக்கினார். 

இதுதான் பேட் துவாரகை என்று அழைக்கப்படுகிறது. பேட் என்றால் குஜராத்தி மொழியில் தீவு என்று பொருள்.

பேட் என்ற சொல்லுக்கு பரிசு அல்லது வெகுமதி (gift) என்றும் பொருள் உண்டு.

கிருஷ்ணருடன் குருகுலத்தில் படித்த சுதாமா (குசேலர்) மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தார். தன் மனைவியின் யோசனைப்படி அவர் கிருஷ்ணரைப் பார்த்து உதவி கேட்க துவாரகைக்கு வந்தார். 

கிருஷ்ணருக்குக் கொடுக்க தன் மனைவி ஒரு துணியில் முடிந்து கொடுத்த ஒரு பிடி அவலை எடுத்துக் கொண்டு வந்தார் சுதாமா.

கிருஷ்ணரைச் சந்தித்ததும் அவரிடம் உதவி கேட்க சுதாமாவுக்கு மனமில்லை. தான் கொண்டு வந்த அவலை கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டு வந்து விட்டார். கிருஷ்ணர் சுதாமா கொடுத்த அவலை மிகவும் விரும்பி உண்டார்.

சுதாமா தன் ஊருக்குத் திரும்பியதும் தன் வீடு மாளிகையாக மாறி இருப்பதையும் வீட்டில் தானியங்களும் பொற்காசுகளும் நிரம்பி இருப்பதையும் கண்டு கண்ணனின் அருளை உணர்ந்து மனம் நெகிழ்ந்தார்.

சுதாமா கிருஷ்ணரைச் சந்தித்து அவருக்குத் தான் கொண்டு வந்த பரிசான அவலை வழங்கியதால் இது பேட் துவாரகா என்று அழைக்கப்படுகிறது.

கோமதி துவாரகா கிருஷ்ணரின் தலைநகரமாகவும், பேட் துவாரகா அவர் வசித்த இடமாகவும் இருக்கும் என்று ஒரு கருத்து இருக்கிறது.

ஜராசந்தன் மீண்டும் படையெடுத்து வரக் கூடும் என்பதால்  அதிகப் பாதுகாப்பான இடமாக பேட் துவாரகா என்ற தீவை கிருஷ்ணர் உருவாக்கி இருக்கலாம்.

பஞ்ச துவாரகா (ஐந்து துவாரகைகள்):

1. கோமதி துவாரகா - கோமதி ந்திக்கரையில் உள்ள இந்தக் கோவிலில் உள்ள விக்கிரகம் கிருஷ்ணரின் தேவி ருக்மிணியால் பூஜிக்கப்பட்டது என்றும், இது கிருஷ்ணரின் புதல்வர் பிரத்யும்னனின் புதல்வர் அநிருத்தனின் புதல்வர் வஜ்ரநாபனால் (கிருஷ்ணரின் கொள்ளுப் பேரன்!) பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

2. டாகோர் (Dakor) துவாரகா-  கோமதி துவாரகாவில் இருந்த விக்கிரகத்தை போடாணா என்பவர் எடுத்துச் சென்று  டாகோர் துவாரகாவில் பிரதிஷ்டை செய்து விட்டார். இது அகமதாபாதிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனந்த் அருகே உள்ளது.

3. பேட் துவாரகா - இது கோமதி துவாரகாவிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஓக்கா என்ற துறைமுகத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு (இப்போது இந்தப் பகுதி ஒரு உப்பங்கழியாகத்தான் இருக்கிறது) நடுவே உள்ள 13 கிலோமீட்டர் நீளமும் 4 கிலோமீட்டர் அகலமும் உள்ள தீவு.

4.  மூல் (மூல) துவாரகா - இது சோம்நாத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையில் அமைந்துள்ள விசாவாடா என்ற ஒரு சிறிய ஊர். கிருஷ்ணரும், பலராமரும் முதலில் இந்த ஊருக்கு வந்துதான் இருந்தார்கள். அதனால் இது மூல துவாரகா என்று அழைக்கப்படுகிறது.

5. நாத துவாரகா - ராஜஸ்தானிலுள்ள உதய்ப்பூரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஶ்ரீநாத் கோவில் நாத துவாரகா என்று அழைக்கப்படுகிறது. இது மீரா வழிபட்ட தலம். 

(காங்க்ரோலி துவாரகா என்று ஆறாவது துவாரகா ஒன்றும் இருப்பதாகக் கூப்படுகிறது.)

இந்த ஐந்து துவாரகைகளில் இந்தப் பயணத்தின்போது நாங்கள் சென்றது கோமதி துவாரகா, பேட் துவாரகா, மூல துவாரகா ஆகிய மூன்று துவாரகைகளுக்குத்தான்.

துவாரகா ரயில் நிலையம் ராஜ்கோட்-ஓக்கா ரயில் தடத்தில் இருக்கிறது. சென்னையிலிருந்து மும்பை, அகமதாபாத் வழியே ஓக்கா செல்லும் சில ரயில்கள் இருக்கின்றன. இவற்றின் மூலம் துவாரகைக்கு வரலாம்.

நாங்கள் சென்றது விமானத்தில், மும்பை வழியே ராஜ்கோட் வரை விமானத்தில் சென்று ராஜ்கோட்டிலிருந்து 225 மைல் காரில் சென்று துவாரகையை அடைந்தோம். பல இடங்களுக்கும் செல்ல ஒப்பந்த முறையில் ஒரு காரை ஏற்பாடு செய்தோம்.

தனியாக, அல்லது சிறு குழுக்களாகச் செல்பவர்கள் ஒரு நல்ல டூரிஸ்ட் சர்வீஸ் மூலம் செல்வது சரியான முறையாக இருக்கும்.

கோமதி துவாரகை அல்லது கோமுகி துவாரகை - துவாரகாதீஷ் கோவில்:

வெளியிலிருந்து பார்க்கும்போதே கம்பீரமான தோற்றமுடைய கோவில்.  கோவிலுக்குள் செல்ஃபோன்கள் ஸ்மார்ட் வாட்ச்சுகள் போன்ற மின்னணு சாதனங்கள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. வெளியில் உள்ள கவுண்ட்டரில் அவற்றை ஒப்படைத்து ரசீது பெற்றுக் கொள்ளலாம். 

கோவிலில் பல சந்நிதிகள் உள்ளன.  கோவிலைச் சுற்றிக் காட்டும் வழிகாட்டிகள் பலர்
இருக்கின்றனர். இவர்கள் அநேகமாக இந்தி மட்டுமே அறிந்தவர்கள். 

28.7.22 அன்று மாலை நாங்கள் தரிசனத்துக்குச் சென்றபோது ஆங்கிலம் தெரிந்த வழிகாட்டிகள் யாரும் கிடைக்கவில்லை. 

அன்று ஆடி அமாவாசை (இந்தப் பகுதி மக்களுக்கும் ஆஷாட அமாவாசை சிறப்பான நாள்தான்), அன்று கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.

31.7.22 அன்று காலை நாங்கள் மீண்டும் சென்றபோது, ஆங்கிலம் தெரிந்த ஒரு வழிகாட்டி கிடைத்தார். அவர் தல புராணத்தை விளக்கி, எல்லா சந்நிதிகளையும் காட்டினார்.

கோவில் கோபுரத்தில் உள்ள நான்கு நிலைகள் வடக்கே பத்ரிகாசிரமம், கிழக்கே பூரி, மேற்கே துவாரகா, தெற்கே ராமேஸ்வரம், அல்லது ஶ்ரீரங்கம் ஆகிய நான்கு தலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. 

இந்த நான்கு நிலைகளுக்கு மேல் உள்ள ஏழு நிலைகள் முக்தி தரும் ஏழு தலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

கோபுரத்தின் உச்சியில் 52 அங்குல அகலக் கொடி பறக்கிறது. 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள், 4 திசைகளின் கூட்டுத்தொகை இந்த 52 என்கிறார் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள்.

 இந்தக் கொடி ஒரு நாளைக்கு ஐந்து முறை மாற்றப்படுகிறது. ஒவ்வொரு கொடி மாற்றலுக்கான காணிகை பக்தர்களால் வழங்கப்படுகிறது. கொடி மாற்றும்போது, அதற்கான காணிக்கையை வழங்கிய பக்தர்கள் மற்றும் மேலே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். நாங்கள் சென்றபோது, இந்தக் காணிக்கை 2025-ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

கோவிலின் மையப்பகுதியில் கிருஷ்ணர் சந்நிதி உள்ளது. இங்கே அருள் பாலிக்கும் கிருஷ்ணர் துவாரகாதீஷ் என்று அழைக்கப்படுகிறார்.

திவ்யதேச மரபுப்படி இந்தப் பெருமாளின் பெயர் கல்யாண நாராயணர்.

மூலவர்:  துவாரகாதீசன், கல்யாண நாராயணன்

தாயார்: லக்ஷ்மி, ருக்மிணி

விமானம்: ஹேமகூட விமானம்

தீர்த்தம்: கோமதி ந்தி, சமுத்திரம்

கிருஷ்ணரின் புதல்வர் பிரத்யும்ன்ன், அவரது பேரன் அநிருத்தன் ஆகியோருக்கான சந்நிதி ஒரு தனி மண்டபத்தில் இருக்கிறது.

ஒரு உயர்ந்த மண்டபத்தில் கிருஷ்ணரின் தேவிகளான ஜாம்பவதி, சத்யபாமா ஆகியோரின் சந்நிதி இருக்கிறது. இதே மண்டபத்தில் ராதா, லக்ஷ்மிநாராயண்ன், கோபாலகிருஷ்ணன், லக்ஷ்மி, சரஸ்வதி, ஹனுமான், கருடன்  துர்வாசமுனி ஆகியோருக்கும் சந்நிதிகள் இருக்கின்றன.

இன்னொரு மண்டபத்தில் ஆதிசங்கரர், சாரதா, கிருஷ்ணர், சந்திரமோலீஸ்வரர், ஸ்படிகலிங்கம் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

இவை தவிர நுழைவிலிருந்து துவங்கி பிரகாரம் முழுவதும்  மாதவ், பலராம்,  கருடன், குரு தததாத்தரேயர், புருஷோத்தம ராய், அம்பிகா, காயத்ரி மாதா, காசி விஸ்வநாதர் என்று பல சந்நிதிகள்.

கிருஷ்ணர் ருக்மிணியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு, ஒருமுறை துர்வாசமுனியை  சற்றுத் தொலைவிலிருந்த ஒரு ஊரிலிருந்து துவாரகைக்கு கிருஷ்ணர் ருக்மிணி இருவரும் தேரில் அமர வைத்து இழுத்து வந்ததாகவும், அப்போது ருக்மணி களைத்து விட்டதால், கிருஷ்ணர் தரையிலிருந்து கங்கையை வரவழைத்து ருக்மிணிக்குத் தண்ணீரை அளித்ததாகவும், தன் அனுமதி பெறாமல் ருக்மிணி தண்ணீரைப் பருகியதால் கோபம் கொண்ட துர்வாசர், கிருஷ்ணரும், ருக்மிணியும் பிரிந்து வாழ வேண்டும் என்றும், துவாரகையைச் சுற்றி 15 மைல் சுற்றளவில் தண்ணீர் உப்பாக இருக்கும் என்றும் இரண்டு சாபங்களை அளித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

அதனால் ருக்மிணிக்கு இந்தக் கோவிலில் சந்நிதி இல்லை. இங்கிருந்து 3 மைல் தொலைவில் ருக்மிணி தேவி கோவில் என்று தனியாக ஒரு கோவில் இருக்கிறது. 

துவாரகையைச் சுற்றி சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பாகவே இருக்கிறது. மக்களுக்கு போர்பந்தரிலிருந்து நர்மதா நதித் தண்ணீர் கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறது.

கோவிலின் இன்னொரு நுழைவாயில் அருகே திரிவிக்கிரமச் சந்நிதி இருக்கிறது. இங்கே பக்தர்கள் திரிவிக்கிரமரின் காலைத் தொட்டு வணங்கலாம். இதற்கு அருகில் துலாபாரம் இருக்கிறது.

இந்த திவ்ய தேசத்தைப் பெரியாழ்வார் (5 பாசுரங்கள்), ஆண்டாள் (4 பாசுரங்கள்), திருமங்கை ஆழ்வார் (2 பாசுரங்கள்), திருமழிசை ஆழ்வார் (1 பாசுரம்), நம்மாழ்வார் (1 பாசுரம்) ஆகியோர் மங்களாசாஸனம் செய்திருக்கிறார்கள். மொத்தம் 13 பாசுரங்கள்

பாசுரங்கள் இந்தப் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

30.07.22 காலை கிளம்பி பேட் துவாரகைக்குச் சென்றோம்.  துவாரகையிலிருந்து ஓக்காவுக்கு சுமார் 35 கிலோமீட்டர் சாலைப்பயணம். 

ஓக்காவிலிருந்து உப்பங்கழி என்று தமிழில் அழைக்கப்படும் கடல் நீர் உள்வாங்கிய நீர்ப்பரப்பில் (backwaters) சுமார் 3 கிலோமீட்டர் படகில் பயணம் செய்து பேட் துவாரகையை அடைந்தோம். 

படகுப் பயணம் சுமார் 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. சுமர் 100 பேர் ஏறிச் செல்லக் கூடிய படகுகள் அடிக்கடி இருபுறத்திலிருந்தும் சென்று வருகின்றன.

பேட் துவாரகை கோவிலும் துவாராகாதீஷ் கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

துவாரகாதீஷ் சந்நிதியைச் சுற்றிலும் கணேஷ், புருஷோத்தம ராய், தேவகிமாதா, மாதவ் ராய், திரிவிக்கிரமன், கருடன், அம்பாஜி (அம்பாள்), கல்யாண் ராய், லக்ஷ்மி, சுதாமா, ஹனுமான், பலராமர், ஜாம்பவந்தி,
 சத்யபாமா ,சத்யநாராயணர், சாக்ஷி
 கோபால் ஆகியோருக்கான சந்நிதிகள் உள்ளன.

பேட் துவாரகா சங்கோதர் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சங்குகள் அதிகம் இருப்பதால் இந்தப் பெயர்.மகாபாரதத்தில் இது அந்தர்த்வீப் (பாதாளத்தீவு)  என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பேட் என்றால் குஜராத்தி மொழியில் தீவு என்று பெயர். 

அதைத் தவிர இந்தப் பதிவில் முன்பே குறிப்பிட்டுள்ளபடி, சுதாமா (குசேலர்) கிருஷ்ணரைச் சந்தித்து அவருக்கு அவல் அளித்ததால், பரிசு என்ற பொருள் கொண்ட பேட் என்ற பெயரும் இந்த ஊருக்குப் பொருந்தும்.


இந்தக் கோவிலுக்குப் பக்கத்தில் துவாரகாதீஷ் Gold Palace (தங்க மாளிகை) என்ற காட்சியகம் உள்ளது. இதில் கிருஷ்ணரின் வரலாறு, மற்றும் பல புராணக் காட்சிகள் கொண்ட படங்கள் வைக்கப்பட்டுள்ளன.


 




இரண்டு தளங்களில் ஒவ்வொன்றிலும் இரண்டு பிரகாரங்களாக  பல அருமையான காட்சிகள் படங்களாக வரையப்பட்டுள்ளன.

முழுவதையும் பார்த்து ரசிக்க சில மணி நேரங்கள் தேவை.






29.07.22 அன்று பிற்பகலில் நாகேஸ்வர் கோவில் என்ற சிவாலயத்துக்குச் சென்றோம். 

இது துவாரகாவிலிருந்து பேட் துவாரகா செல்லும் வழியில் சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 


இங்கே உள்ள லிங்கம் உலகிலுள்ள பன்னிரண்டு சுயம்பு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று என்று கருதப்படுகிறது. இந்த இடம்  பண்டைய காலத்தில் தாருகாவனம் என்று அழைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. தாருகாவனம் என்பது உத்தரகாண்டில் உள்ளது என்ற கருத்தும் உண்டு.

கோவிலுக்கு வெளியே 25 மீட்டர் உயரமுள்ள சிவபெருமானின் சிலை அமர்ந்த திருக்கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

நாகேஸ்வர் அருகை கோபி தலாப் என்ற இடம் உள்ளது. 

கிருஷ்ணரைக் காண கோகுலத்திலிருந்து இங்கு வந்த கோபியர் கிரூஷ்ணன் மறைந்து விடப் போவதை அறிந்து இந்தக் குளத்தில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், கோபி சந்தனம் என்று அழைக்கப்படும் சந்தனம் இந்தக் குளத்திலிருந்துதான் எடுக்கப்பட்டது என்றும் கார் ஓட்டுனர் கூறினார்.


30.07.22 அன்று துவாரகையிலிருந்து 237 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோம்நாத் சென்றோம். பன்னிரண்டு சுயம்பு ஜோதிர் லிங்கங்களில் சோம்நாத்தில் உள்ள லிங்கமும் ஒன்று.

சுமார் 2000 ஆண்டு பழமையான இந்தக் கோவில் முகம்மது கஜினியால் 1026-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இது மீண்டும் புதிதாகக் கட்டப்பட்டு 1951-ஆம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


சந்நிதியில் ஜோதிர்லிங்கமாக சிவபெருமானும் அவருக்குப் பின்னே பார்வதியும் காட்சி அளிக்கிறார்கள். அருகில் பிரம்மா இருக்கிறார். சந்நிதி இருக்கும் மண்டபத்தில் முன்புறத்தில் ஹனுமான், கணபதி விக்கிரகங்கள் இருக்கின்றன.

பிரகாரம் முழுவதும் சிவபெருமான் பற்றிய புராணக் காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்படுள்ளன,


கடற்கரை அருகே அழகாகவும், 
புதுப் பொலிவுடனும் அமைந்துள்ள 
இந்தக் கோவிலில்
மணிகள், தாளங்கள் முழங்க நடக்கும் ஆரத்தி பிரசித்தி பெற்றது. நாங்கள் சென்றபோது மதியம் 12 மணிக்கு நடந்த ஆரத்தியை தரிசிக்கும் பேறு கிட்டியது.


கோவிலை ஒட்டியுள்ள கடலை கோவிலுக்குள்ளிருந்து பார்க்கலாம், கடற்கரையில் இறங்கிச் செல்ல முடியாது. 

கடற்கரையில் உள்ள விளக்குகள் அமைந்த பாதையில் Lightway till Indian Ocean என்ற பெயர்ப்பலகை காணப்பட்டது. கடற்கரை ஓரமாக கன்யாகுமரி வரை இந்த விளக்குகள் அமைந்த பாதை செல்கிறது என்ற விவரம் வியப்பாக இருந்தது.




இந்தக் கோவிலுக்கு அருகில் லக்ஷ்மி நாராயணர் கோவில் ஒன்று இருக்கிறது.

ராமானுஜ கூடம் (Ramanuja Kota) என்ற பெயரும் காணப்பட்டது. இத்துடன் இணைந்து அருகில் யாத்தரீகர்களுக்கான தங்கும் விடுதியும் இருக்கிறது.

நாங்கள் சென்ற சமயம் இந்தக் கோவில் பூட்டப்பட்டிருந்தது. பிற்பகல் 3.30 மணிக்குத்தான் திறக்கப்படும் என்று விடுதி நிர்வாகி கூறினார்.



சோம்நாத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேராவல் என்ற இடத்தில் பால் கா தீர்த் (அம்பு பாய்ந்த புனிதத்தலம்) என்ற இடம் உள்ளது.

கிருஷ்ணர் தன் அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டத்துக்குத் திரும்ப முடிவு செய்து இந்த இடத்தில் ஒரு மரக்கிளையில் அமர்ந்திருந்தார். அப்போது ஜரா என்ற வேடன் அவரது பாதத்தை ஒரு மானின் முகம் என்று நினைத்து அம்பு விட்டான்.







தன் தவறை உணர்ந்து ஜரா கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டான். 

கிரூஷ்ணர் அவனுக்கு அருளி, இவ்வுலகை விட்டு நீங்கி வைகுண்டம் ஏகினார். இது பாகவதத்திலும் கூறப்பட்டிருக்கிறது.


இங்கே உள்ள கோவிலில் வேடன் கிருஷ்ணர் மீது அம்பு விடும் காட்சி
சித்தரிக்கப்பட்டு இது ஒரு கோவிலாகக் கருதப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. 



இங்கே ராம லக்ஷ்மண சீதை, சரஸ்வதி, சிவன், ஶ்ரீவாகேஸ்வரி, நாராயண், லக்ஷ்மி, காயத்ரி ஆகியோருக்கான சந்நிதிகள் உள்ளன.



பிறகு போர்பந்தர் சென்று அங்கிருந்த சுதாமாபுரி என்ற சுதாமாவின்
இல்லத்துக்குச் சென்றோம். 


இங்கே சுதாமா, அவர் மனைவி ஆகியோரின் திருவுருவப் படங்களும், ராதாகிருஷ்ணர் சந்நிதியும் உள்ளன.






போர்பந்தரில் காந்தியின் நினைவில்லமாக மாற்றப்பட்டிருக்கும் காந்தி பிறந்து வளர்ந்த இல்லத்துக்கும் சென்று தேசப்பிதாவுக்கு அஞ்சலி செலுத்தினோம்.



அங்கிருந்து விசாவாடா என்ற ஊரில் உள்ள மூல் துவாரகாவுக்குச் சென்றோம்.

முன்பே குறிப்பிட்டபடிபடி, இதுதான் கிருஷ்ணரும் பலராமரும் முதலில் வந்து தங்கிய இடம். இங்கு சிறிது காலம் இருந்து விட்டுப் பிறகுதான் அவர்கள் துவாரகைக்குச் சென்றனர்.

கிருஷ்ணர் போர்க்களத்தை விட்டு வந்து இங்கே இருந்ததால் இங்குள்ள மூர்த்தியும் ரண்சோட்ராய் (போர்க்களத்தை விட்டு நீங்கிய மன்னர்) என்று அழைக்கப்படுகிறார்.

 (மதுராவிலிருந்து அவர் முதலில் டாகோர் துவாரகா என்ற இடத்துக்குச் சென்றதையும், அங்கே காலவயனன் முசுகுண்டால் கொல்லப்பட்ட தையும் அங்கே உள்ள கோவிலில் அவர் ரண்சோட்ராய் என்று அழைக்கப்படுவதையும் இந்தப் பதிவில் முன்பே விவரித்திருக்கிறேன். டாகோர் துவாரகாவிலிருந்து கிருஷ்ணர் முதலில் மூல் துவாரகாவுக்கு வந்து, பிறகு இங்கிருந்து கோமதி துவாரகாவுக்குச் சென்று, அங்கிருந்தபடி பேட் துவாரகாவை அமைத்தார் என்பது முழு வரலாற்றின் சுருக்கம்.)

இங்கே உள்ள கோவிலில் ரண்சோட்ராய் சந்நிதியைத் தவிர, பஞ்சாயுதன், பரசுராமர், நீலகண்டர், பிரம்மா, சூரிய நாராயணன், கணபதி ஆகியோருக்கான சந்நிதிகள் உள்ளன.

விஜாந்த பகத் என்ற துறவிக்கான சந்நிதியும் உள்ளது. 

பல படிகள் கொண்ட step well  பண்டைய காலத்துக் கிணறு ஒன்றும் இங்கே உள்ளது.

எங்கள் பயணத்தின் இறுதி நாளான 31.07.2022 அன்று காலை மீண்டும் துவாரகாதீஷ் ஆலயத்துக்குச் சென்று அங்கிருந்த ஆங்கிலம் தெரிந்த ஒரு வழிகாட்டியின் உதவியுடன் கோவிலில் மீண்டும் தரிசனம் செய்து விட்டு, கோவிலுக்கு அருகிலுள்ள சுதாமா சேது (சுதாமா பாலம்) என்ற இடத்துக்குச் சென்றோம்.

இது கோமதி ஆற்றின் குறுக்கே 2005-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு தொங்கு பாலம்.  

இது பெரும்பாலும் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் நோக்கம் கொண்டது. 

பாலத்துக்கு அருகே படகு சவாரி, ஒட்டக சவாரி ஆகியவைகளும் உள்ளன. 

பாலத்துக்கு மறுபுறம் லக்ஷ்மி நாராயணர் கோவில் என்ற ஒரு சிறிய கோவில் இருக்கிறது. அழகான 
லக்ஷ்மி நாராயணர் சந்நிதி,

வாயில் அருகே ஒரு சிறு பிறையில் ஶ்ரீராம் சீலா என்ற ஒரு படம் வைக்கப்பட்டிருக்கிறது, 

ஹனுமான் ஒரு பாறையில் ஶ்ரீராம் என்று எழுதி ராம நாமத்தின் மகிமையால் அந்தக் கல் கடலில் மிதக்கும் காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 

தேர்த்தா பத்தர் என்று ஹிந்தியிலெ எழுதப்பட்டிருந்தவாசகத்துக்கு மிதக்கும் கல் என்று ஹிந்தி தெரிந்த ஒருவர் எனக்கு விளக்கம் அளித்தார். 








மாலையில் துவாரகாவிலிருந்து சுமார் 
5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ருக்மிணி தேவி கோவிலுக்குச் சென்றோம். 













பிறகு அங்கிருந்து காயத்ரி மாதா ஆலயத்துக்குச் சென்றோம். 











பிறகு கடற்கரைக்குச் சென்று சூரிய அஸ்தமனத்தைக் காண முயன்றோம்.

தொடுவானத்தில் மேகங்கள் இருந்ததால் சூரியன் கடலில் மறைவது வரை எங்களால் பார்க்க முடியவில்லை. தொடுவானத்துக்குச் சற்று மேலேயே சூரியன் மேகத்துக்குள் மறைந்து விட்டது.





கிருஷ்ணரின் அருளால் எங்கள் துவாரகைப் பயணம் இனிதே நிறைவடைந்தது.


இந்தத் திருத்தலம் பற்றி வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன் அவர்களின் காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


கண்ணன் கழலிணை 
நண்ணும் மனமுடையோர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணனே - திருவாய்மொழி (நம்மாழ்வார்)

திருத்துவாரகை திவ்ய தேச மங்களாசாஸனப் பாசுரங்கள்:

முதலாயிரம்
பெரியாழ்வார்
பெரிய திருமொழி
332 பொல்லா வடிவு உடைப் பேய்ச்சி துஞ்சப் புணர்முலை வாய்மடுக்க
வல்லானை மா மணிவண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெருந் தேவிமாரொடு பௌவம் எறி துவரை
எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர்       

397 திரை பொரு கடல் சூழ் திண்மதிற் துவரை
      வேந்து தன் மைத்துனன்மார்க்காய்
அரசினை அவிய அரசினை அருளும்
      அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம்
      நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே             

398 வட திசை மதுரை சாளக்கிராமம்
      வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய
      எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
      தலைப்பற்றிக் கரை மரம் சாடிக்
கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக்
      கண்டம் என்னும் கடிநகரே             

414 பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணிசெய்யத்
      துவரை என்னும்
மதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்
      மன்னு கோயில்
புது நாள்மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றிற்
      பூவே போல்வான்
பொது-நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும்
      புனல் அரங்கமே             

471 தட வரைவாய் மிளிர்ந்து மின்னும்
      தவள நெடுங்கொடி போல்
சுடர்- ஒளியாய் நெஞ்சின் உள்ளே
      தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும்
      மதிற் துவராபதியும்
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால்
      இடவகை கொண்டனையே            

முதலாயிரம்
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி

506 சுவரில் புராண நின் பேர் எழுதிச்
      சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும்
      காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
      ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
      தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே            

540 ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே      

593 காலை எழுந்திருந்து
      கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி
      மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ?
சோலைமலைப் பெருமான்
      துவாராபதி எம்பெருமான்
ஆலின் இலைப் பெருமான்
      அவன் வார்த்தை உரைக்கின்றதே      

624 கூட்டில் இருந்து கிளி எப்போதும்
      கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டக் கொடாது செறுப்பனாகில்
      உலகு-அளந்தான் என்று உயரக் கூவு1ம்
நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள்
      நன்மை இழந்து தலையிடாதே
சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
      துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்.   

திருமங்கை ஆழ்வார்
இரண்டாம் ஆயிரம்
பெரிய திருமொழி
திருநரையூர் - 3

1503 முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி
      முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே
இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்
      இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய
      வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்
      திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே    

பெரிய திருமொழி
திருநரையூர் - 3
1523 கட்டு ஏறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை
மட்டு ஏறு கற்பகத்தை மாதர்க்கு ஆய் வண் துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே        

மூன்றாம் ஆயிரம்
இயற்பா
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி
2451 சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல்     

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

3251 அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே     

ஒம் நமோநாராயணாய



Sunday, May 10, 2020

86. பன்னிரு ஆழ்வார்கள் - 1. பெரியாழ்வார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த முகுந்த பட்டர் பத்மவல்லி தம்பதிக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர் பெரியாழ்வார்.

இவர் பிறந்தது ஆணி மாதம் சுவாதி நட்சத்திரத்தில். இவர் கருடனின் அம்சம் என்று கருதப்படுகிறார்.

இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் விஷ்ணுசித்தர். விஷ்ணுவையே  நினைத்துக் கொண்டிருப்பவர் என்பது இதன் பொருள்.

விஷ்ணுசித்தரின் குடும்பம் வேதங்கள், உபநிஷத்துக்கள், புராணங்களில் தேர்ச்சி பெற்றிருந்த குடும்பம். ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவிலில் தலைமை அர்ச்சகர் செல்வநம்பி போன்ற வேறு பல அறிஞர்களின் தொடர்பும் அவருக்கு இருந்தது.

ஆயினும் விஷ்ணுசித்தர் வேதங்கள் போன்றவற்றைக் கற்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இறைவனுக்கு கைங்கர்யம் (சேவை) செய்வதில்தான் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது.

தன வீட்டின் அருகிலேயே ஒரு மலர்த் தோட்டம் அமைத்து அதில் பல்வேறு மலர்ச்செடிகளைப் பயிரிட்டார் அவர்.

தினமும் காலையில் துளசி, மல்லிகை, சாமந்தி முதலிய பல மலர்களைப் பறித்து அவற்றை அழகிய மாலையாகத் தொடுத்து அவற்றை வடபத்ரசாயி கோவிலுக்கு எடுத்துச் செல்வார்.

தான் கட்டிய மாலைகளை அர்ச்சகரிடம் கொடுத்து அவர் அவற்றைப் பெருமாளுக்கு அணிவித்ததும் மாலைகள் அணிந்து காட்சியளிக்கும் பெருமாளைப் பார்த்து மகிழ்வார் விஷ்ணுசித்தர்.

ப்போது வல்லபதேவராயர் என்ற பாண்டிய மன்னர் மதுரையை ஆண்டு வந்தார்.

அவர் அவ்வப்போது மாறுவேடத்தில் நகர்வலம் போவார். அவ்வாறு சென்றபோது வடநாட்டுக்கு தீர்த்த யாத்திரை சென்று வந்த ஒரு வைணவ அறிஞரைச் சந்தித்தார்.

ஒரு நல்ல அறிவுரை சொல்லும்படி அவரிடம் மன்னர் கேட்டபோது அவர் சொன்னார்:

"மழைக்காலத்துக்கு சேமிக்க, எட்டு மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
இரவில் நிம்மதியாகத் தூங்கப் பகலில் கடினமாக உழைக்க வேண்டும்.
முதுமையில் மகிழ்ச்சியாக வாழ, இளமையில் கடுமையாக உழைக்க வேண்டும்.
மரணத்துக்குப் பின் நல்ல வாழ்க்கையைப் பெற, இவ்வுலகில் வாழும்போதே அதைச் சம்பாதிக்க வேண்டும்."

இது பற்றிச் சிந்தித்த மன்னர் மனதில் மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை, ஆத்மா, பரமாத்மா ஆகியவை பற்றிப் பல சந்தேகங்கள் எழுந்தன.

தன் குருவான ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோவில் தலைமை அர்ச்சகர் செல்வநம்பியிடம் இது பற்றி அவர் கேட்டார்.

இந்தக் கேள்விகள் பற்றிப் பல்வேறு தத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த அறிஞர்களை அழைத்து ஒருவிவாதம் நடத்தலாம் என்று செல்வநம்பி யோசனை கூற, மன்னர் அதை எற்றார்.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட மன்னர் விவாதத்தில் வெற்றி பெறுபவருக்கு ஒரு பொற்கிழி பரிசாக அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மன்னரின் கேள்விக்கான இறுதி விடையை விஷ்ணுசித்தரால் அளிக்க முடியும் என்று செல்வநம்பிக்குத் தோன்றியது.

ன்று இரவு விஷ்ணுசித்தரின் கனவில் வடபத்ரசாயி வந்து மன்னர் அறிவித்திருக்கும் விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு கூறினார்.

மாலை கட்டுவதை மட்டுமே அறிந்த தன்னால் எப்படி இப்படி ஒரு விவாதத்தில் கலந்து கொள்ள முடியும் என்று விஷ்ணுசித்தர் குழம்பினார்.

விஷ்ணுசித்தர் காலையில் கண் விழித்தபோது, தன்னைப் பார்க்க செல்வநம்பி வந்திருப்பதைக் கண்டு வியந்தார்.

மன்னர் அழைத்திருக்கும் விவாதத்தில் கலந்து கொள்ளும்படி விஷ்ணுசித்தரை அறிவுறுத்திய செல்வநம்பி, அவரை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல பல்லக்கு காத்திருப்பதாகவும் கூறினார்.

பெருமாளின் கட்டளை இது என்பதை உணர்ந்து விஷ்ணுசித்தர் பல்லக்கில் ஏறி அரண்மனைக்குச் சென்றார்.

ன்னரின் அவையில் பொற்கிழி ஒரு கம்பத்தின் மீது கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது.

அறிஞர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் கருத்துக்களைக் கூறினர். ஆனால் அரசருக்குத் திருப்தி ஏற்படவில்லை.

அப்போது விஷ்ணுசித்தர் அரசவைக்கு வந்து சேர்ந்தார். அவர் அரசருக்கு வணக்கம் செலுத்தினார்.

சில அறிஞர்கள் விஷ்ணுசித்தரை எள்ளி நகையாடினர். மாலை கட்டுபவருக்கு பரதத்துவம் பற்றி என்ன தெரியும் என்றனர். ஒரு அவையின் முன் பேசிய அனுபவம் இல்லாத ஒருவரால் அரசவையில் அறிஞர்கள்  முன் என்ன பேச முடியும் என்றனர் சிலர்.

ஆனால் இந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் மன்னர் விஷ்ணுசித்தரைப் பேசச் சொன்னார்.

விஷ்ணுசித்தர் பேசத் தொடங்கியதும் அவர் உடலிலிருந்து ஒரு ஒளி வெளிப்பட்டது. வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டி அவர் பேசத் தொடங்கினார்.

பர தத்துவம் அதாவது எல்லாவற்றுக்கும் மேலான, இறுதியான உண்மை என்ன என்பதை விளக்கிக் கூறிய விஷ்ணுசித்தர், ஸ்ரீமன் நாராயணனே பரதத்துவம் என்பதை அறுதியிட்டுக் கூறினார்.

இந்த அண்டம் முழுவதும் நாராயணனிடம் தோன்றி, அவரால் காக்கப்பட்டு அவரிடமே ஐக்கியமாகி விடுகிறது என்பதை அவர் விளக்கினார்.

நாராயணனிடம் பக்தி செலுத்துவதே பிறப்பு, இறப்பு என்ற இந்த முடிவற்ற சுழற்சியிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கும் என்று வாதிட்டார் அவர்.

விஷ்ணுசித்தர் பேசி முடித்ததும் மன்னர் பிரமித்து நின்றார். அவை முழுவதும் அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு மூச்சற்று நின்றது.

கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருந்த பொற்கிழி, தானே அறுந்து கீழே விழுந்தது.

அவையிலிருந்த அறிஞர்கள் அனைவரும் விஷ்ணுசித்தரைப் பார்த்துக் கை கூப்பி வணங்கித் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டனர்.

விவாதத்தில் விஷ்ணுசித்தரே வென்றதாக அறிவித்த அரசர் அவருக்குப் பொற்கிழியை வழங்கி அவருக்கு 'பட்டர் பிரான் (கடவுளைப்  பூசிக்கும் அறிஞர்களில் உயர்ந்தவர்)' என்ற பட்டத்தை வழங்கினார்.

விஷ்ணுசித்தர் ஒரு யானையின் மீது அமரச் செய்யப்பட்டுப் பல தெருக்களிலும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். 'பட்டர் பிரான் வாழ்க' என்ற மக்களின் வாழ்த்தொலி எங்கும் ஒலித்தது.

யானை மீது அமர்ந்திருந்த விஷ்ணுசித்தருக்கு வானத்தில் தொலைவில் ஏதோ ஒரு காட்சி தென்பட்டது. அந்தக் காட்சி அருகில் வந்ததும் விஷ்ணுசித்தரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

விஷ்ணுசித்தர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவதைப் பார்க்க, ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீதேவி, பூதேவியுடன் கருடன் மீது அமர்ந்து வானில் பறந்து வந்து கொண்டிருந்தார்!

விஷ்ணுசித்தருக்குக் கண்களில் கண்ணீர் பெருகியது. ஒருபுறம் நாராயணனின் கருணையை எண்ணி என்றால் மறுபுறம் அவர் மீது எல்லோர் கண்ணும் பட்டு விடுமே என்ற அச்சத்தால்!

பகவான் மீது கண்ணேறு பட்டு விடக் கூடாதே என்ற ஆதங்கத்தால் விஷ்ணுசித்தர் பகவானை வாழ்த்திப் பாட ஆரம்பித்தார்.

'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு'

என்று தொடங்கி அவர் பாடிய 12 பாசுரங்கள் 'திருப்பல்லாண்டு' என்று பெயர் பெற்றன.  நமோ நாராயணாவென்று சொல்லி நாம் பெருமாளை வணங்க வேண்டும் என்று சொல்லி முடிக்கிறார் இவர்.

கூடியிருந்த மக்கள் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, பெருமாளும், இரு தேவியரும் விஷ்ணுசித்தரை வாழ்த்தி விட்டு மறைந்து விட்டனர்.

பொதுவாக ஒருவரை அவரைவிடப் பெரியவர்கள்தான் வாழ்த்துவார்கள். விஷ்ணுசித்தர் பெருமாளையே வாழ்த்திப் பாடியதால் அவர் பெரியாழ்வார் என்று பெயர் பெற்றார்.

பெருமாள் மீது அவருக்கு இருந்த அளவு கடந்த அன்பினால்தான் பெருமாளுக்கு கண்ணேறு பட்டு விடுமோ என்று பதைபதைத்து அவர் பெருமாளை வாழ்த்திப் பாடினார்.

இவர் பெருமாளை வாழ்த்திப் பாடிய 'திருப்பல்லாண்டு' வைணவக்
கோவில்களில் தினமும் பாடப் படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் திரும்பிய பெரியாழ்வார் வடபத்ரசாயிக் கோவிலுக்குச் சென்று பெருமாளை வணங்கினார். தனக்குப் பரிசாகக் கிடைத்த பொற்கிழியை அவர் கோவிலுக்கே காணிக்கையாகக் கொடுத்து விட்டார்.

பெரியாழ்வார் தொடர்ந்து பெருமாள் மீது பாசுரங்கள் எழுதி வந்தார். அவர் எழுதிய 461 பாசுரங்களின் தொகுப்பு 'பெரியாழ்வார் திருமொழி' என்று அழைக்கப்படுகிறது

இந்தப் பாசுரங்கள் பெரும்பாலும் கண்ணனைப் பற்றியதாகவே உள்ளன. பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்துக்கொண்டு கண்ணனின் அவதாரத்தை விவரிக்கிறார்.

கண்ணனின் குழந்தைப் பருவத்தை பிறப்பு, தொட்டிலிடல், காது குத்தல், தவழ்தல், கை கொட்டுதல், குளிப்பாட்டுதல், குழந்தையாக கண்ணன் செய்த விஷமங்கள், சாகசங்கள்  என்று பல நிலைகளிலும் வர்ணிக்கிறார் பெரியாழ்வார்.

பெரியாழ்வார் திருமொழி ராமபிரானைப் பற்றியும் பேசுகிறது. ஹனுமான் சீதையை முதலில் சந்திக்கும்போது, தன்னை ராமர்தான் அனுப்பினார் என்று ஹனுமான் சீதைக்கு உணர்த்தும் உரையாடலையும் இந்தப் பாசுரங்கள் விவரிக்கின்றன.

ராமர், கிருஷ்ணர் இருவரையும் போற்றிப் பாடும் கை கொட்டல் நடனமும் பெரியாழ்வார் திருமொழியில் அடங்கியுள்ளது.

பெரிய திருமொழியில் பல திவ்யதேசங்கள் பற்றிப் பெரியாழ்வார் பாடியிருக்கிறார். இவர் பாடிய திவ்யதேசங்களின் பெயரும், ஒவ்வொன்றைப் பற்றியும் பாடிய பாடல்களின் எண்ணிக்கையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திருவரங்கம் - 35
திருவெள்ளறை - 11
திருப்பேர் நகர் - 2
திருக்குடந்தை - 3
திருக்கண்ணபுரம் -  1
திருக்குறுங்குடி - 1
திருவில்லிபுத்தூர் - 1
திருமாலிருஞ்சோலை - 34
திருக்கோட்டியூர் - 22
திருப்பதி - 7
திரு அயோத்தி - 6
திருசாலிக்கிராமம் - 2
திருவதரி - 1
திருக்கண்டம் - 11
திருவடமதுரை - 16
திருவாய்ப்பாடி - 10
திருதுவாரகை - 5
திருப்பாற்கடல் - 5
திருப்பரமபதம் - 4

பெரியாழ்வார் விராஜை என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

தங்கள் வீட்டுத் தோட்டத்தில் துளசிச் செடிக்கு அருகில் கண்டெடுத்த பெண்  குழந்தையை இந்த தம்பதி தங்கள் பெண்ணாக ஏற்று, கோதை என்று பெயரிட்டு வளர்த்தனர்.

கோதை பெருமாள் மீது காதல் கொண்டு, பெருமாள் பற்றி திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்று பெயர் பெற்ற பாசுரங்களைப் பாடி, ஆண்டாள் என்று பெயர் பெற்றார்.

பெருமாளின் கட்டளைப்படி கோதையை ரங்கநாதருக்கு மணமுடிக்க அவரைத் திருவரங்கத்துக்கு அழைத்துச் சென்றார் பெரியாழ்வார்.

ஆண்டாள் அரங்கநாதர் சந்நிதிக்கு ஓடிச் சென்று அரங்கனுடன் இரண்டறக் கலந்து விட்டார்.

பெரியாழ்வார் தன் இறுதி நாட்களைத் திருமாலிருஞ்சோலையில் கழித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள்-ரங்கமன்னார் கோவிலில் பெருமாளுக்கு அருகில் கருடாழ்வாராக நின்று பக்தர்களால் வணங்கப்படுகிறார் பெரியாழ்வார்.

உண்மையான பக்தி என்பது சுயநலமற்று, பரமாத்மாவின் மீது அன்பு செலுத்துவது என்பதை உலகுக்கு உணர்த்தியவர் பெரியாழ்வார்.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம். 










Saturday, February 15, 2020

85. நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஒரு அறிமுகம்


ஆழ்வார்கள் திருமாலின் பெருமை குறித்துப் பாடிய பாசுரங்கள் திவ்யப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகின்றன.

திவ்யப் பிரபந்தங்கள் மொத்தம் 24.  

  1. திருப்பல்லாண்டு
  2. பெரியாழ்வார் திருமொழி
  3. திருப்பாவை
  4. நாச்சியார் திருமொழி
  5. பெருமாள் திருமொழி
  6. திருச்சந்த விருத்தம்
  7. திருமாலை
  8. திருப்பள்ளி எழுச்சி
  9. அமலனாதிபிரான்
  10. கண்ணிநுண் சிறுத்தாம்பு
  11. பெரிய திருமொழி
  12. திருக்குறுந்தாண்டகம்
  13. திருநெடுந்தாண்டகம்
  14. முதல் திருவந்தாதி
  15. இரண்டாம் திருவந்தாதி
  16. மூன்றாம் திருவந்தாதி
  17. நான்முகன் திருவந்தாதி
  18. திருவிருத்தம்
  19. திருவாசிரியம்
  20. பெரிய திருவந்தாதி
  21. திருஎழுகூற்றிருக்கை
  22. சிறிய திருமடல்
  23. பெரிய திருமடல்
  24. இராமானுச நூற்றந்தாதி

நாலாயிர திவ்ய பிரபந்தம் நான்கு ஆயிரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

1. முதலாயிரம் - 947 பாடல்கள்
  1. திருப்பல்லாண்டு - பெரியாழ்வார் -12 பாடல்கள் 
  2. பெரியாழ்வார் திருமொழி - பெரியாழ்வார் - 461 பாடல்கள் 
  3. திருப்பாவை - ஆண்டாள் - 30 பாடல்கள் 
  4. நாச்சியார் திருமொழி - ஆண்டாள் - 143 பாடல்கள் 
  5. பெருமாள் திருமொழி - குலசேகர ஆழ்வார் - 105 பாடல்கள் 
  6. திருச்சந்த விருத்தம் - திருமழிசை ஆழ்வார் - 120 பாடல்கள் 
  7. திருமாலை - தொண்டரடிப்பொடி ஆழ்வார் - 45 பாடல்கள் 
  8. திருப்பள்ளி எழுச்சி - தொண்டரடிப்பொடி ஆழ்வார் - 10 பாடல்கள் 
  9. அமலனாதிபிரான் - திருப்பாணாழ்வார் - 10 பாடல்கள் 
  10. கண்ணிநுண் சிறுத்தாம்பு - மதுரகவி ஆழ்வார் - 11 பாடல்கள் 
2. பெரிய திருமொழி - 1134 பாடல்கள்
  1. பெரிய திருமொழி - திருமங்கை ஆழ்வார் - 1084 பாடல்கள் 
  2. திருக்குறுந்தாண்டகம் - திருமங்கை ஆழ்வார் - 20 பாடல்கள் 
  3. திருநெடுந்தாண்டகம் - திருமங்கை ஆழ்வார் - 30 பாடல்கள் 
3.  இயற்பா - 817 பாடல்கள்
  1. முதல் திருவந்தாதி - பொய்கை ஆழ்வார் - 100 பாடல்கள் 
  2. இரண்டாம் திருவந்தாதி - பூதத்தாழ்வார் - 100 பாடல்கள் 
  3. மூன்றாம் திருவந்தாதி - பேயாழ்வார் - 100 பாடல்கள் 
  4. நான்முகன் திருவந்தாதி - திருமழிசை ஆழ்வார் - 96 பாடல்கள் 
  5. திருவிருத்தம் - நம்மாழ்வார் - 100 பாடல்கள் 
  6. திருவாசிரியம் - நம்மாழ்வார் - 7 பாடல்கள்
  7. பெரிய திருவந்தாதி - நம்மாழ்வார் - 87 பாடல்கள்
  8. திருஎழுகூற்றிருக்கை - திருமங்கை ஆழ்வார் - 1 பாடல் 
  9. சிறிய திருமடல் - திருமங்கை ஆழ்வார் - 40 பாடல்கள்  
  10. பெரிய திருமடல் - திருமங்கை ஆழ்வார் - 78 பாடல்கள்  
  11. இராமானுச நூற்றந்தாதி -  திருவரங்கத்தமுதனார் - 108 பாடல்கள் 
4. திருவாய்மொழி - நம்மாழ்வார் - 1102 பாடல்கள்

மொத்தம் - 4027 பாடல்கள்

இவ்வாறு பிரபந்தங்கள் வகுக்கப்பட்டிருப்பதில் இரண்டு சிறப்புகளைக் குறிப்பிட வேண்டும்.

1) மதுரகவி ஆழ்வார் பாடிய கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற 11 பாடல்களும் நம்மாழ்வார் பற்றிப் பாடப்பட்டவை.

2) இராமானுச நூற்றந்தாதி ராமானுஜருடன் சம காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்தமுதனார் என்ற அவருடைய சீடரால் ராமாநுஜரின் பெருமை குறித்துப் பாடப்பட்டது.

இந்த இரண்டு பாடல் தொகுப்புகளும் திருமால் மீது பாடப்பட்டவை அல்ல. அதிலும் திருவரங்கத்தமுதனார் ஆழ்வார்கள் பட்டியலில் இடம் பெறுபவர் இல்லை.

என்ற போதிலும், இவை இரண்டும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இது வைணவத்தில் நம்மாழ்வாரும், ராமானுஜரும் எவ்வளவு உயர்ந்த இடத்தில், திருமாலுக்கு நிகராகவே நினைத்துப் போற்றப் படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

பாசுரங்களை விரிவாகப் பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

| ஒம் நமோ நாராயணாய |


Sunday, October 20, 2019

84. திவ்யதேச தரிசன அனுபவம் - 63. திருவயிந்திரபுரம் (72)

தரிசனம் செய்த நாள்: 02.09.2019 திங்கட்கிழமை.   
 நடு நாட்டுத் திருப்பதிகள் - 2

1. திருவயிந்திரபுரம்
அன்பணிந்த சிந்தையரா யாய்ந்த மலர்தூவி
முன்பணிந்து நீரெமக்கு மூர்த்தியரே - என்பா
எமையிந் திரபுரத்தார்க் கின்றொண்ட ரானார்
தமையிந் திரபுரத்தார் தாம். (72)
  -   - பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி 

கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம்.

வஹீந்திரன் என்பது ஆதிசேஷனைக் குறிக்கும்  சொல். ஆதிசேஷனால் அமைக்கப்பட்ட கோவில் இது. அதனால் இது திருவஹீந்திரபுரம் என்றும், தமிழில் திருவந்திரபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது இந்த ஊர் திருவந்திபுரம் என்றே அறியப்படுகிறது.

கிழே தேவநாதப் பெருமாளும், மலைக்கு மேலே லக்ஷ்மி ஹயக்ரீவரும் அருள் பாலிக்கிறார்கள்.

தேவர்களுக்காக விஷ்ணு போரிட்டபோது, அசுரர்கள் பக்கம் நின்று போர் செய்த சிவபெருமான் தன் சூலத்தை விஷ்ணுவின் மீது வீசினார். விஷ்ணு அதைத் தன் சக்கரத்தால் தடுத்து மும்மூர்த்திகளாகத் தன்னை சிவபெருமானுக்கு காட்டினார். அதனால் இந்தக் கோவில் உற்சவருக்கு மூவராகிய ஒருவன் என்ற பெயர்.

தேவாசுர யுத்தத்தில் போரிட்டுக் களைத்த விஷ்ணு தண்ணீர் கேட்க, வைகுண்டத்தில் இருக்கும் விராஜ நதியிலிருந்து நீர் எடுத்து வர கருடன் வைகுண்டத்துக்குப் பறந்து சென்றார். ஆனால் அதற்குள் ஆதிசேஷன் தன் வாளால் பூமியை அடித்துப் பிளந்து நீர் வரவழைத்தார்.

ஆதிசேஷனால் உருவாக்கப்பட்டதால்  இந்தக் கோவில் புஷ்கரணி  சேஷ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

ஆதிசேஷன் நீர் கொணர்ந்த பின்பே கருடன் விராஜ நதி நீரைக் கொண்டு வந்தார் என்றாலும் விஷ்ணு அதையும் ஏற்றுக்கொண்டு அதை அங்கே ஒரு நதியாக ஓட விட்டார். கருட நதி என்று பெயர் பெற்ற அந்த நதி இப்போது பெயர் மருவி கடிலம் நதி என்று ஆகி விட்டது!

ஹனுமான் சஞ்சிவினி மலையைத் தூக்கிச் சென்றபோது அதில் சில பகுதிகள் இங்கு வீழ்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே இங்கிருக்கும் மலை ஒளஷத கிரி என்று அழைக்கப்படுகிறது.

கீழே உள்ள தேவநாதப்  பெருமாள் கோவிலிலிருந்து 74 படிகள் மேலே ஏறினால், ஒளஷதகிரி என்ற மலை மீது லக்ஷ்மி ஹயக்ரீவர் சந்நிதி இருக்கிறது.

மது, கைடபர்கள் என்ற இரண்டு அரக்கர்கள் பிரம்மாவிடமிருந்து வேதங்களைத் திருடிக்கொண்டு போய் விட்டதால், படைப்புத் தொழில் தடைபட்டபோது, மகாவிஷ்ணு குதிரை முகத்துடன் ஹயக்ரீவராக வடிவம் எடுத்து பிரம்மாவுக்கு வேதங்களை உபதேசித்தார்.

ஹயக்ரீவர் சன்னிதியில் கருடனும் இருக்கிறார்.

ராமானுஜருக்குப் பின் வந்த மிக முக்கியமான ஆச்சாரியர்களில் ஒருவரான வேதாந்த தேசிகர்  பிறந்தது காஞ்சிபுரத்தில் உள்ள தூப்புல் (இங்கு திருத்தண்கா என்ற திவ்யதேசம் உள்ளது) என்றாலும், அவர் 40 ஆண்டுகள் வாழ்ந்தது இந்த ஊரில்தான். அவர் வாழ்ந்த வீடு தேசிகர் திருமாளிகை என்ற பெயரில் இப்போதும் இருக்கிறது.

ஔஷதகிரியில் உள்ள அஸ்வத்த மரத்தின் அடியில் அமர்ந்து வேதாந்த தேசிகர் கருடனை தியானம் செய்தார். கருடன் இவருக்கு ஹயக்ரீவ மந்திரத்தை அருளிச் செய்தார். தேசிகர் ஹயக்ரீவ மந்திரத்தை ஜபித்து ஹயக்ரீவர் அருளைப் பெற்றார்.

"ஞானானந்த மயம் தேவம்  நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே"

என்ற புகழ் பெற்ற ஹயக்ரீவ சுலோகத்தை தேசிகர் எழுதியது இங்குதான்.

கருட பஞ்சஸதி, ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம், தேவநாத பஞ்சஸதி  உட்படப் பல ஸ்தோத்திரங்களையம், நூல்களையும் தேசிகர் இங்கிருந்துதான் எழுதினார்.

இங்கிருக்கும் தேசிகருடைய விக்கிரகம்  அவர் சொன்னபடி ஒரு சிற்பியால் செய்யப்பட்டது என்று நம்பப் படுகிறது.

மூலவர்: தெய்வநாயகன்  கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலம்
உற்சவர்: மூவராகிய ஒருவன், தேவநாதன், அச்சுதன் ,
தாயார்: வைகுண்டநாயகி, ஹேமாம்புஜவல்லி
தீர்த்தம்: சேஷ தீர்த்தம், கருட தீர்த்தம்
விமானம்: சுத்தஸ்தவ விமானம்
ஸ்தல விருட்சம்: வில்வம்

ஒளஷதகிரி சந்நிதியில்: கிருஷ்ணன், லக்ஷ்மி  ஹயக்ரீவர்,.கருடன்

பெருமாள், தாயார் சந்நிதி தவிர  அஹீந்திர புரநாதன், லக்ஷ்மி நரசிம்மர், ராமர், ஆஞ்சநேயர், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருக்கச்சி நம்பிகள், பாஷ்யக்காரர், வேதாந்த தேசிகர் ஆகியோர் சந்நிதிகள் இங்கு உள்ளன.

இந்த திவ்யதேசம் பற்றி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்க உரையை இங்கே பார்க்கலாம்.



 திருமங்கை ஆழ்வார் இந்த திவ்யதேசத்தை 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். பாசுரங்கள் இதோ.

நாலாயிர திவ்ய பிரபந்தம் 
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
மூன்றாம் பத்து
முதல் திருமொழி
1. இருந்தண் மாநில மேனமதாய் வளை மருப்பினி லகத்தொடுக்கி,
கருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம் கமலநன் மலர்த்தேறல்
அருந்தி, இன்னிசை முரன்றெழும் அளிகுலம் பொதுளியம் பொழிலூடே,
செருந்தி நாண்மலர் சென்றணைந் துழிதரு திருவயிந் திரபுரமே. (1148)

2. மின்னு மாழியங் கையவன் செய்யவள் உறைதரு திருமார்பன்,
பன்னு நான்மறைப் பலபொரு ளாகிய பரனிடம் வரைச்சாரல்,
பின்னு மாதவிப் பந்தலில் பெடைவரப் பிணியவிழ் கமலத்து,
தென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு திருவயிந் திரபுரமே. (1149)

3. வைய மேழுமுண் டாலிலை வைகிய மாயவன், அடியவர்க்கு
மெய்ய னாகிய தெய்வநா யகனிடம் மெய்தகு வரைச்சாரல்,
மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லையங் கொடியாட,
செய்ய தாமரைச் செழும்பணை திகழ்தரு திருவயிந் திரபுரமே. (1150)

4. மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன் மார்பக மிருபிளவா,
கூறு கொண்டவன் குலமகற் கின்னருள் கொடுத்தவ னிடம்,மிடைந்து
சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை விசும்புற மணிநீழல்,
சேறு கொண்டதண் பழனம தெழில்திகழ் திருவயிந் திரபுரமே. (1151)

5. ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட மளந்து ஆயர்,
பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம் பொன்மலர் திகழ் வேங்கை
கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு குரக்கினம் இரைத்தோடி
தேன்க லந்தண் பலங்கனி நுகர்த்தரு திருவயிந் திரபுரமே. (1152)

6. கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின் திறத்திளங் கொடியோடும்,
கானு லாவிய கருமுகில் திருநிறத் தவனிடம் கவினாரும்,
வானு லாவிய மதிதவழ் மால்வரை மாமதிள் புடைசூழ,
தேனு லாவிய செழும்பொழில் தழுவிய திருவயிந் திரபுரமே. (1153)

7. மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசையிலங்கை
மன்னன், நீண்முடி பொடிசெய்த மைந்தன திடம்மணி வரைநீழல்,
அன்ன மாமல ரரவிந்தத் தமளியில் பெடையொடு மினிதமர,
செந்நெ லார்க்கவ ரிக்குலை வீசுதண் திருவயிந் திரபுரமே. (1154)

8. விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம் வில்லிறுத்து அடல்மழைக்கு,
நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன் நிலவிய இடம்தடமார்,
வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு மலைவள ரகிலுந்தி,
திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே. (1155)

9. வேல்கொள் கைத்தலத் தரசர்வெம் போரினில் விசயனுக் காய்,மணித்தேர்க்
கோல்கொள் கைத்தலத் தெந்தைபெம் மானிடம் குலவுதண் வரைச்சாரல்,
கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம் பாளைகள் கமழ்சாரல்,
சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே (1156)

10. மூவ ராகிய வொருவனை மூவுல குண்டுமிழ்ந் தளந்தானை,
தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண் திருவயிந் திரபுரத்து,
மேவு சோதியை வேல்வல வன்கலி கன்றி விரித்துரைத்த,
பாவு தண்டமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே. (1157)

| ஓம் நமோ நாராயணாய |

83. திவ்யதேச தரிசன அனுபவம் - 62. திருத்தலைச்சங்க நாண்மதியம் (13)

தரிசனம் செய்த நாள்: 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை.   
 சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40
13. திருத்தலைச்சங்கநாண்மதியம்
செப்புங்கா லாதவனுந் திங்களும்வா னுந்தரையும்
அப்புங்கா லுங்கனலு மாய்நின்றான் - கைப்பால்
அலைச்சங்க மேந்து மணியரங்கத் தம்மான்
தலைச்சங்க நாண்மதியத் தான். (13)
   - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் 108 திருப்பதி அந்தாதி 

மாயூரத்திலிருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் உள்ள ஆக்கூரிலிருந்து, சீர்காழிக்குச் செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைத்துள்ள தலைச்சங்காடு என்ற ஊரில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம். பூம்புகாரிலிருந்து 7 கிலோமீட்டர்.

முன்னொரு காலத்தில், பூம்புகாரிலிருந்து வந்த சங்குகள் விற்கப்படும் முக்கிய
சந்தை என்பதால் இந்த ஊருக்கு தலைச்சங்காடு என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

கோவில் வயல்களுக்கிடையில் அமைந்துள்ளது .

சந்திரனின் சாபம்  தீர்த்த பெருமாள் என்பதால் இவர் தலைச்சங்க நாண்மதியப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

மூலவர்: நாண்மதியப் பெருமாள், வெண்சுடர்ப் பெருமாள்
பிரத்யட்சம்: சந்திரன், தேவ ப்ருதங்கர், நித்யஸூரிகள், தேவர்கள்

உற்சவர்: வியோமஜோதிப்பிரான், வெஞ்சுடர்ப்பிரான், லோகநாதன்

தாயார்: தலைச்சங்க நாச்சியார், செங்கமலவல்லி

புஷ்கரணி; சந்திர புஷ்கரணி

விமானம்:  சந்திர விமானம்


தாயாருக்கு தனிச்சந்நிதி உள்ளது.

















கோவில் பற்றி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்க உரையை இங்கே காணலாம்.



இந்த திவ்யதேசத்தை திருமங்கை ஆழ்வார் 2 பாடல்களில் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

நாலாயிர பிரபந்தம் 
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
எட்டாம் பத்து 
ஒன்பதாம் திருமொழி 
9. கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும்
தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள்
விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ. (1736)

பெரிய மடல்
மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை      (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை      (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்      (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத்      (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான்      (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்      (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்      (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்      (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள்
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்      (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க   (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்     (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்     (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த     (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்     (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில்     (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்     (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம்     (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்     (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு     (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே     (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்     (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம்             (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வௌ¢ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வௌ¢ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80)  (2673)
|ஓம் நமோ நாராயணாய|