Sunday, October 20, 2019

84. திவ்யதேச தரிசன அனுபவம் - 63. திருவயிந்திரபுரம் (72)

தரிசனம் செய்த நாள்: 02.09.2019 திங்கட்கிழமை.   
 நடு நாட்டுத் திருப்பதிகள் - 2

1. திருவயிந்திரபுரம்
அன்பணிந்த சிந்தையரா யாய்ந்த மலர்தூவி
முன்பணிந்து நீரெமக்கு மூர்த்தியரே - என்பா
எமையிந் திரபுரத்தார்க் கின்றொண்ட ரானார்
தமையிந் திரபுரத்தார் தாம். (72)
  -   - பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி 

கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம்.

வஹீந்திரன் என்பது ஆதிசேஷனைக் குறிக்கும்  சொல். ஆதிசேஷனால் அமைக்கப்பட்ட கோவில் இது. அதனால் இது திருவஹீந்திரபுரம் என்றும், தமிழில் திருவந்திரபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது இந்த ஊர் திருவந்திபுரம் என்றே அறியப்படுகிறது.

கிழே தேவநாதப் பெருமாளும், மலைக்கு மேலே லக்ஷ்மி ஹயக்ரீவரும் அருள் பாலிக்கிறார்கள்.

தேவர்களுக்காக விஷ்ணு போரிட்டபோது, அசுரர்கள் பக்கம் நின்று போர் செய்த சிவபெருமான் தன் சூலத்தை விஷ்ணுவின் மீது வீசினார். விஷ்ணு அதைத் தன் சக்கரத்தால் தடுத்து மும்மூர்த்திகளாகத் தன்னை சிவபெருமானுக்கு காட்டினார். அதனால் இந்தக் கோவில் உற்சவருக்கு மூவராகிய ஒருவன் என்ற பெயர்.

தேவாசுர யுத்தத்தில் போரிட்டுக் களைத்த விஷ்ணு தண்ணீர் கேட்க, வைகுண்டத்தில் இருக்கும் விராஜ நதியிலிருந்து நீர் எடுத்து வர கருடன் வைகுண்டத்துக்குப் பறந்து சென்றார். ஆனால் அதற்குள் ஆதிசேஷன் தன் வாளால் பூமியை அடித்துப் பிளந்து நீர் வரவழைத்தார்.

ஆதிசேஷனால் உருவாக்கப்பட்டதால்  இந்தக் கோவில் புஷ்கரணி  சேஷ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

ஆதிசேஷன் நீர் கொணர்ந்த பின்பே கருடன் விராஜ நதி நீரைக் கொண்டு வந்தார் என்றாலும் விஷ்ணு அதையும் ஏற்றுக்கொண்டு அதை அங்கே ஒரு நதியாக ஓட விட்டார். கருட நதி என்று பெயர் பெற்ற அந்த நதி இப்போது பெயர் மருவி கடிலம் நதி என்று ஆகி விட்டது!

ஹனுமான் சஞ்சிவினி மலையைத் தூக்கிச் சென்றபோது அதில் சில பகுதிகள் இங்கு வீழ்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே இங்கிருக்கும் மலை ஒளஷத கிரி என்று அழைக்கப்படுகிறது.

கீழே உள்ள தேவநாதப்  பெருமாள் கோவிலிலிருந்து 74 படிகள் மேலே ஏறினால், ஒளஷதகிரி என்ற மலை மீது லக்ஷ்மி ஹயக்ரீவர் சந்நிதி இருக்கிறது.

மது, கைடபர்கள் என்ற இரண்டு அரக்கர்கள் பிரம்மாவிடமிருந்து வேதங்களைத் திருடிக்கொண்டு போய் விட்டதால், படைப்புத் தொழில் தடைபட்டபோது, மகாவிஷ்ணு குதிரை முகத்துடன் ஹயக்ரீவராக வடிவம் எடுத்து பிரம்மாவுக்கு வேதங்களை உபதேசித்தார்.

ஹயக்ரீவர் சன்னிதியில் கருடனும் இருக்கிறார்.

ராமானுஜருக்குப் பின் வந்த மிக முக்கியமான ஆச்சாரியர்களில் ஒருவரான வேதாந்த தேசிகர்  பிறந்தது காஞ்சிபுரத்தில் உள்ள தூப்புல் (இங்கு திருத்தண்கா என்ற திவ்யதேசம் உள்ளது) என்றாலும், அவர் 40 ஆண்டுகள் வாழ்ந்தது இந்த ஊரில்தான். அவர் வாழ்ந்த வீடு தேசிகர் திருமாளிகை என்ற பெயரில் இப்போதும் இருக்கிறது.

ஔஷதகிரியில் உள்ள அஸ்வத்த மரத்தின் அடியில் அமர்ந்து வேதாந்த தேசிகர் கருடனை தியானம் செய்தார். கருடன் இவருக்கு ஹயக்ரீவ மந்திரத்தை அருளிச் செய்தார். தேசிகர் ஹயக்ரீவ மந்திரத்தை ஜபித்து ஹயக்ரீவர் அருளைப் பெற்றார்.

"ஞானானந்த மயம் தேவம்  நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே"

என்ற புகழ் பெற்ற ஹயக்ரீவ சுலோகத்தை தேசிகர் எழுதியது இங்குதான்.

கருட பஞ்சஸதி, ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம், தேவநாத பஞ்சஸதி  உட்படப் பல ஸ்தோத்திரங்களையம், நூல்களையும் தேசிகர் இங்கிருந்துதான் எழுதினார்.

இங்கிருக்கும் தேசிகருடைய விக்கிரகம்  அவர் சொன்னபடி ஒரு சிற்பியால் செய்யப்பட்டது என்று நம்பப் படுகிறது.

மூலவர்: தெய்வநாயகன்  கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலம்
உற்சவர்: மூவராகிய ஒருவன், தேவநாதன், அச்சுதன் ,
தாயார்: வைகுண்டநாயகி, ஹேமாம்புஜவல்லி
தீர்த்தம்: சேஷ தீர்த்தம், கருட தீர்த்தம்
விமானம்: சுத்தஸ்தவ விமானம்
ஸ்தல விருட்சம்: வில்வம்

ஒளஷதகிரி சந்நிதியில்: கிருஷ்ணன், லக்ஷ்மி  ஹயக்ரீவர்,.கருடன்

பெருமாள், தாயார் சந்நிதி தவிர  அஹீந்திர புரநாதன், லக்ஷ்மி நரசிம்மர், ராமர், ஆஞ்சநேயர், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருக்கச்சி நம்பிகள், பாஷ்யக்காரர், வேதாந்த தேசிகர் ஆகியோர் சந்நிதிகள் இங்கு உள்ளன.

இந்த திவ்யதேசம் பற்றி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்க உரையை இங்கே பார்க்கலாம்.



 திருமங்கை ஆழ்வார் இந்த திவ்யதேசத்தை 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். பாசுரங்கள் இதோ.

நாலாயிர திவ்ய பிரபந்தம் 
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
மூன்றாம் பத்து
முதல் திருமொழி
1. இருந்தண் மாநில மேனமதாய் வளை மருப்பினி லகத்தொடுக்கி,
கருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம் கமலநன் மலர்த்தேறல்
அருந்தி, இன்னிசை முரன்றெழும் அளிகுலம் பொதுளியம் பொழிலூடே,
செருந்தி நாண்மலர் சென்றணைந் துழிதரு திருவயிந் திரபுரமே. (1148)

2. மின்னு மாழியங் கையவன் செய்யவள் உறைதரு திருமார்பன்,
பன்னு நான்மறைப் பலபொரு ளாகிய பரனிடம் வரைச்சாரல்,
பின்னு மாதவிப் பந்தலில் பெடைவரப் பிணியவிழ் கமலத்து,
தென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு திருவயிந் திரபுரமே. (1149)

3. வைய மேழுமுண் டாலிலை வைகிய மாயவன், அடியவர்க்கு
மெய்ய னாகிய தெய்வநா யகனிடம் மெய்தகு வரைச்சாரல்,
மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லையங் கொடியாட,
செய்ய தாமரைச் செழும்பணை திகழ்தரு திருவயிந் திரபுரமே. (1150)

4. மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன் மார்பக மிருபிளவா,
கூறு கொண்டவன் குலமகற் கின்னருள் கொடுத்தவ னிடம்,மிடைந்து
சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை விசும்புற மணிநீழல்,
சேறு கொண்டதண் பழனம தெழில்திகழ் திருவயிந் திரபுரமே. (1151)

5. ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட மளந்து ஆயர்,
பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம் பொன்மலர் திகழ் வேங்கை
கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு குரக்கினம் இரைத்தோடி
தேன்க லந்தண் பலங்கனி நுகர்த்தரு திருவயிந் திரபுரமே. (1152)

6. கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின் திறத்திளங் கொடியோடும்,
கானு லாவிய கருமுகில் திருநிறத் தவனிடம் கவினாரும்,
வானு லாவிய மதிதவழ் மால்வரை மாமதிள் புடைசூழ,
தேனு லாவிய செழும்பொழில் தழுவிய திருவயிந் திரபுரமே. (1153)

7. மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசையிலங்கை
மன்னன், நீண்முடி பொடிசெய்த மைந்தன திடம்மணி வரைநீழல்,
அன்ன மாமல ரரவிந்தத் தமளியில் பெடையொடு மினிதமர,
செந்நெ லார்க்கவ ரிக்குலை வீசுதண் திருவயிந் திரபுரமே. (1154)

8. விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம் வில்லிறுத்து அடல்மழைக்கு,
நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன் நிலவிய இடம்தடமார்,
வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு மலைவள ரகிலுந்தி,
திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே. (1155)

9. வேல்கொள் கைத்தலத் தரசர்வெம் போரினில் விசயனுக் காய்,மணித்தேர்க்
கோல்கொள் கைத்தலத் தெந்தைபெம் மானிடம் குலவுதண் வரைச்சாரல்,
கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம் பாளைகள் கமழ்சாரல்,
சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே (1156)

10. மூவ ராகிய வொருவனை மூவுல குண்டுமிழ்ந் தளந்தானை,
தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண் திருவயிந் திரபுரத்து,
மேவு சோதியை வேல்வல வன்கலி கன்றி விரித்துரைத்த,
பாவு தண்டமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே. (1157)

| ஓம் நமோ நாராயணாய |

No comments:

Post a Comment