Tuesday, October 8, 2019

76. திவ்யதேச தரிசன அனுபவம் - 55. திருவரிமேயவிண்ணகரம் (32)

தரிசனம் செய்த நாள்: 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை.   
 சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40


32. திருவரிமேயவிண்ணகரம் (குடமாடும் கூத்தன் கோவில்) 
வாழு மடியார் மடநெஞ்சே! நம்மளவோ?
தாழுஞ் சடையோன் சதுமுகத்தோன் - பாழிக்
கரிமேய விண்ணகரக் காவலோன் கண்டாய்
அரிமேய விண்ணகரத் தார்க்கு. (32)

சீர்காழிக்குத் தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார்  12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் என்னும் ஊரைச் சுற்றிலும், அதிக பட்சம் 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.

சில கோவில்கள் சில சமயம்  பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.

அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில்  எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

திரு எஸ். சுரேஷ் 9994621065  9750728645.

இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.

சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார். இந்த 11 பெருமாளும் 11 திவ்ய தேசங்களிலிருந்து வந்தவர்கள் என்பது ஐதீகம்.


அரிமேய விண்ணகரம் திருநாங்கூரில் திருமணிமாடக் கோவிலுக்கு அடுத்தபடியாக  இரண்டாவதாக உருவான கோவில். இந்த திவ்யதேசத்து எம்பெருமான் ஆயர்பாடியிலிருந்து எழுந்தருளியவர்.

இந்த திவ்யதேசத்தில் பெருமாள் தலையில் குடத்தை வைத்துக்கொண்டு கூத்தாடி உத்தங்கருக்கு ஆதி மூல நாராயண தத்துவத்தை உணர்த்தினார்.

ஒரு பந்தயத்தில் தோற்றதால் கருடனின் தாய் வினதா தன் கணவர் காஸ்யபரின் மூத்த மனைவியான கத்ருவிடம் அடிமையானாள். அதனால் கருடனும், காத்ருவின் பிள்ளைகளான ஆயிரம் பாம்புகளுக்கும் சேவை செய்து வந்தது. தன் பிள்ளைகள் விரும்பியபடி, இந்திர லோகத்திலிருந்து அமிர்தத்தை கருடன் கொண்டு வந்தால், வினதாவை  அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதாக கத்ரு கூற, அதன்படி கருடன் இந்திரலோகத்துக்குச் சென்று இந்திரனுடன் போரிட்டு அமிர்த கலசத்தைக் கொண்டு வந்து அதை தர்ப்பைப் புல்லின் மீது  வைத்து விட்டுத் தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொண்டு சென்று விட்டார். பாம்புகள் அமிர்தத்தைப் பருக வந்தபோது, அமிர்த கலசத்தைத் தன் காலுக்கு அடியில் வைத்துக்கொண்டு பகவான் கூத்தாடினார் என்பதால் அவர் குடமாடும் கூத்தன் என்று அழைக்கப்படுகிறார் என்று இந்த திவ்யதேசத்துக்கு இன்னொரு வரலாறு உண்டு. (இந்தச் சம்பவம் மகாபாரதத்தில் சற்றே மாறுபட்ட விதத்தில் கூறப்பட்டிருக்கிறது)

அரிமேய விண்ணகரம் என்றால் பாவங்களைப் போக்கும் கோவில் என்று பொருள். ஹரியாகிய திருமால் வாழும் கோவில் என்றும் பொருள்.

வைகுண்டத்தில் திவ்யசூரிகள், நித்யஸூரிகளுக்குப் பெருமாள் எப்படி சேவை சாதிப்பாரோ அதேபோல் பூலோகத்தில் சேவை சாதிக்கும் இடங்கள் விண்ணகரம் என்று அழைக்கப்படுகின்றன. ஐந்து திவ்ய தேசங்கள் திருமங்கை ஆழ்வாரால் விண்ணகரங்கள் என்று மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முதல் இரண்டு விண்ணகரங்களான அரிமேய விண்ணகரம், வைகுண்ட விண்ணகரம் ஆகியவை திருநாங்கூரில் உள்ளன. மூன்றாவது விண்ணகரம் பரமேஸ்வர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம்),  நான்காவதுவிண்ணகரம் சீர்காழியில் உள்ள காழிச் சீராம விண்ணகரம். ஐந்தாவது விண்ணகரம்  நந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்). திருவிண்ணகர் என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோவில் இந்தப் பட்டியலில் இல்லை என்று சொல்லப்படுகிறது.

மூலவர்: குடமாடும் கூத்தன். அமிர்தகடேஸ்வரர் வலது காலைக் கீழே அமிர்தக் குடத்தின் மீது வைத்து, இடது காலை மடக்கி வைத்தபடி அமர்ந்த திருக்கோலம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்த திருக்கோலத்தில் உள்ளனர்.

பிரத்யக்ஷம்: உத்தங்கர், ஏகாதச ருத்ரர் (அமிர்த புரீஸ்வரர்)

உற்சவர்:  சதுர்புஜ கோபாலன், கோபாலகிருஷ்ணன்

தாயார்: அமிர்தகடவல்லி

தீர்த்தம்:  அம்ருத புஷ்கரணி, கோடி தீர்த்தம்

தல விருட்சம்: பலாச மரம்

விமானம்: உச்சஸ்ருங்க விமானம

மூலவர் உக்கிரகம் சுட்ட களிமண்ணால் செய்யப்பட்டது என்பதால் மூலவருக்குத் தைலக்காப்பு மட்டும்தான் உண்டு. திருமஞ்சனம் இல்லை.

சந்நிதிக்கு வெளியே விஷ்வக்சேனர், சேனை முதலியார், சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள், ராமானுஜர் சந்நிதிகள் உள்ளன.

பிரகாரத்தில், தாயார் அமிர்தகடவல்லி, சூடிக் கொடுத்த நாச்சியார், சக்கரவர்த்தித் திருமகன், பெரிய திருவடி ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.

இந்த திவ்யதேசம் பற்றி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்க உரையை இந்த வீடியோவில் காணலாம்.


இந்த திவ்யதேசத்தை திருமங்கை ஆழ்வார் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

பாசுரங்கள் இதோ:
நாலாயிர திவ்யப்பிரபந்தம்
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
மூன்றாம் பத்து

பத்தாம் திருமொழி
திருநாங்கூர் அரிமேய விண்ணகரம்

1. திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத்
தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்
அருள்நடந்து,இவ் வேழுலகத் தவர்ப்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்தவிடம் பெரும்புகழ்வே தியர்வாழ்
தருமிடங்கள் மலர்கள்மிகு கைதைகள்செங்கழுநீர்
தாமரைகள் தடங்கடொறு மிடங்கடொறும் திகழ,
அருவிடங்கள் பொழில்தழுவி யெழில்திகழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1238)

2. வென்றிமிகு நரகனுர மதுவழிய விசிறும்
விறலாழித் தடக்கையன் விண்ணவர்கட்கு, அன்று
குன்றுகொடு குரைகடலைக் கடைந்தமுத மளிக்கும்
குருமணியென் னாரமுதம் குலவியுறை கோயில்,
என்றுமிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையோர்
ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர்,
அன்றுலகம் படைத்தவனே யனையவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1239)

3. உம்பருமிவ் வேழுலகு மேழ்கடலு மெல்லாம்
உண்டபிரான்ண்டர்கள்முன் கண்டுமகிழ வெய்த,
கும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன்
குஞ்சிபிடித் தடித்தபிரான் கோயில்,மருங் கெங்கும்
பைம்பொனொடு வெண்முத்தம் பலபுன்னை காட்டப்
பலங்கனிகள் தேன்காட்டப் படவரவே ரல்குல்,
அம்பனைய கண்மடவார் மகிழ்வெய்து நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1240)

4. ஓடாத வாளரியி னுருவமது கொண்டு அன்
றுலப்பில்மிகு பெருவரத்த விரணியனைப் பற்றி,
வாடாத வள்ளுகிரால் பிளந்தவன்றன் மகனுக்
கருள்செய்தான் வாழுமிடம் மல்லிகைசெங் கழுநீர்,
சேடேறு மலர்ச்செருந்தி செழுங்கமுகம் பாளை
செண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே,
ஆடேறு வயலாலைப் புகைகமழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1241)

5. கண்டவர்தம் மனம்மகிழ மாவலிதன் வேள்விக்
களவில்மிகு சிறுகுறளாய் மூவடியென் றிரந்திட்டு,
அண்டமுமிவ் வலைகடலு மவனிகளுமெல்லாம்
அளந்தபிரா னமருமிடம் வளங்கொள்பொழி லயலே,
அண்டமுறு முழவொலியும் வண்டினங்க ளொலியும்
அருமறையி னொலியும்மட வார்சிலம்பி னொலியும்,
அண்டமுறு மலைகடலி னொலிதிகழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1242)

6. வாணெடுங்கண் மலர்க்கூந்தல் மைதிலிக்கா இலங்கை
மன்னன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர,
தாணெடுந்தின் சிலைவளைத்த தயரதன்சேய் என்தன்
தனிச்சரண்வா னவர்க்கரசு கருதுமிடம், தடமார்
சேணிடங்கொள் மலர்க்கமலம் சேல்கயல்கள் வாளை
செந்நெலொடு மடுத்தரிய வுதிர்ந்தசெழு முத்தம்,
வாணெடுங்கண் கடைசியர்கள் வாருமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1243)

7. தீமனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
தேனுகனும் பூதனைத னாருயிரும் செகுத்தான்,
காமனைத்தான் பயந்தகரு மேனியுடை யம்மான்
கருதுமிடம் பொருதுபுனல் துறைதுறைமுத் துந்தி,
நாமனத்தால் மந்திரங்கள் நால்வேதம் ஐந்து
வேள்வியோ டாறங்கம் நவின்றுகலை பயின்று,அங்
காமனத்து மறையவர்கள் பயிலுமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1244)

8. கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை
காமருசீர் முகில்வண்ணன் காலிகள்முன் காப்பான்,
குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன்
குலவுமிடம் கொடிமதிள்கள் மாளிகைகோ புரங்கள்,
துன்றுமணி மண்டபங்கள் சாலைகள்தூ மறையோர்
தொக்கீண்டித் தொழுதியொடு மிகப்பயிலும் சோலை,
அன்றலர்வாய் மதுவுண்டங் களிமுரலு நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1245)

9. வஞ்சனையால் வந்தவள்த னுயிருண்டு வாய்த்த
தயிருண்டு வெண்ணெயமு துண்டு, வலிமிக்க
கஞ்சனுயி ரதுவுண்டிவ் வுலகுண்ட காளை
கருதுமிடம் காவிரிசந் தகில்கனக முந்தி,
மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து
வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி,
அஞ்சலித்தங் கரிசரணென் றிரைஞ்சுமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1246)

10. சென்றுசின விடையேழும் படவடர்த்துப் பின்னை
செவ்வித்தோள் புணர்ந்துகந்த திருமால்தன் கோயில்,
அன்றயனு மரன்சேயு மனையவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகர மமர்ந்தசெழுங் குன்றை,
கன்றிநெடு வேல்வலவன் மங்கையர்தம் கோமான்
கலிகன்றி யொலிமாலை யைந்தினொடு மூன்றும்,
ஒன்றினொடு மொன்றுமிவை கற்றுவல்லார் உலகத்
துத்தமர்கட் குத்தமரா யும்பருமா வர்களே. (1247)





No comments:

Post a Comment