Friday, October 11, 2019

79. திவ்யதேச தரிசன அனுபவம் - 58. திருச்செம்பொன்செய்கோயில் (35)

தரிசனம் செய்த நாள்: 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை.   
 சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40


35. திருச்செம்பொன்செய்கோயில்
[தலைவி ஆற்றாமை மிகுதியால் மடலூரத் துணிதல்]
ஊர்வேண் மடலை யொழிவேன் மடநாணம்
சேர்வேன் கரிய திருமாலைப் - பாரறிய
அம்பொன்செய் கோயி லரங்கனணி நாங்கூர்ச்
செம்பொன்செய் கோயிலினிற் சென்று (35)

சீர்காழிக்குத் தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார்  12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் என்னும் ஊரைச் சுற்றிலும், அதிக பட்சம் 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.

சில கோவில்கள் சில சமயம்  பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.

அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில்  எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

திரு எஸ். சுரேஷ் 9994621065  9750728645.

இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.

சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார்.

ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள  ராம பிரான் இந்த ஊரில் வந்து த்ருடநேத்ரர் என்ற முனிவர் வீட்டில் தங்கினார். அவர் யோசனைப்படி, பொன்னால் ஒரு பசுவைச் செய்து, அதற்குள் நான்கு நாட்கள்  இருந்த பின், ஐந்தாவது நாள் அதற்குள்ளிருந்து வெளியே வந்து பல தானங்களைச் செய்தார். பொன்னால் செய்யப்பட பசுவையும் த்ருடநேத்திரருக்கு தானம் செய்தார். அந்தப் பொன்னைக்  கொண்டு த்ருடநேத்திரர் கட்டிய கோவில் இது. அதனால் இதற்கு செம்பொன் செய் கோவில் என்ற பெயர் வந்தது.

இந்தக் கோவில் பெருமாள் உறையூர் திவ்யதேசத்திலிருந்து வந்தவர் என்பது ஐதீகம்.

மூலவர்:  பேரருளாளன்
நின்ற திருக்கோலம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்  \
பிரத்யக்ஷம்: ஏகாதச ருத்ரர்

உற்சவர்: செம்பொன் அரங்கர், ஹேம ரங்கர்,

தாயார்: அல்லி மாமலர் நாச்சியார்

தீர்த்தம்: ஹேம புஷ்கரணி, நித்ய புஷ்கரணி, கனக தீர்த்தம்

விமானம்: கனக விமானம்

இந்த திவ்யதேசம் பற்றி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்கவுரையை இந்த வீடியோவில் காணலாம்.



இந்த திவ்யதேசத்தை திருமங்கை ஆழ்வார் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

பாசுரங்கள் இதோ:
நாலாயிர திவ்யப்பிரபந்தம்
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரியதிருமொழி
நான்காம் பத்து
மூன்றாம் திருமொழி
திருநாங்கூர்ச் செம்பொன்செய்கோயில்

1. பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும் பேரரு ளாளனெம் பிரானை,
வாரணி முலையாள் மலர்மக ளோடு மண்மக ளுமுடன் நிற்ப,
சீரணி மாட நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
காரணி மேகம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே. 912680

2. பிறப்பொடு மூப்பொன் றில்லவன் றன்னைப் பேதியா வின்பவெள் ளத்தை,
இறப்பெதிர் காலக் கழிவுமா னானை ஏழிசை யின்சுவை தன்னை,
சிறப்புடை மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டுநான் வாழ்ந்தொழிந் தேனே. (1269)

3. திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும் செழுநிலத் துயிர்களும் மற்றும்,
படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை, பங்கயத் தயனவ னனைய, திடமொழி
மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.(1270)

4. வசையறு குறளாய் மாவலி வேள்வி மண்ணள விட்டவன் றன்னை,
அசைவறு மமர ரடியிணை வணங்க அலைகடல் துயின்றவம் மானை,
திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
உயர்மணி மகுடம் சூடிநின் றானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே. (1271)

5. தீமனத் தரக்கர் திறலழித் தவனே என்றுசென் றடைந்தவர் தமக்கு,
தாய்மனத் திரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே,
தேமலர்ப் பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
காமனைப் பயந்தான் றன்னைநா னடியேன் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே (1272)

6. மல்லைமா முந்நீ ரதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை,
கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை கலங்கவோர் வாளிதொட் டானை,
செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
அல்லிமா மலராள் தன்னொடு மடியேன் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே. (1273)

7. வெஞ்சினக் களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டிறுத் தடர்த்தவன் றன்னை,
கஞ்சனைக் காய்ந்த காளையம் மானைக் கருமுகில் திருநிறத் தவனை,
செஞ்சொல்நான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
அஞ்சனக் குன்றம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே. (1274)

8. அன்றிய வாண னாயிரம் தோளும் துணியவன் றாழிதொட் டானை,
மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல் மேவிய வேதநல் விளக்கை,
தென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந்தேனே. (1275)

9. களங்கனி வண்ணா. கண்ணணே என்றன் கார்முகி லேஎன நினைந்திட்டு,
உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள் உள்ளத்து ளூறிய தேனை,
தெளிந்தநான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே. (1276)

10. தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாட்கலி கன்றி,
ஊனமில் பாட லொன்பதோ டொன்றும் ஒழிவின்றிக் கற்றுவல் லார்கள்,
மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு வானவ ராகுவர் மகிழ்ந்தே. (1277)

|ஓம் நமோ நாராயணாய|


No comments:

Post a Comment