Thursday, October 17, 2019

81. திவ்யதேச தரிசன அனுபவம் - 60. திருக்காவளம்பாடி (38)

தரிசனம் செய்த நாள்: 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை.   
 சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40
38. திருக்காவளம்பாடி

செப்பேன் மனிதருக்கென் செஞ்சொற் றமிழ்மாலை 
கைப்பேன் பிறதெய்வங் காண்பாரை--எப்போதும்
காவளம்பா டித்திருமால் தாற்றா மரைதொழுது
நாவளம்பா டித்திரிவே னான். (38)
  -பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் 108 திருப்பதி அந்தாதி 

சீர்காழிக்குத் தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார்  12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் என்னும் ஊரைச் சுற்றிலும், அதிக பட்சம் 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.

சில கோவில்கள் சில சமயம்  பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.

அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில்  எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

திரு எஸ். சுரேஷ் 9994621065  9750728645.

இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.

சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார் .

மூலவர்: சத்யபாமா ருக்மிணி சமேத கோபாலகிருஷ்ணன், ராஜகோபாலன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். கையில் கயிறுடன் மாடு மேய்க்கும் தோற்றத்தில் காட்சி அளிக்கிறார் கண்ணன்.
பிரத்யக்ஷம்: விஷ்வக்சேனர், ஏகாதச ருத்ரர்


தாயார்: செங்கமல நாச்சியார், மடவரல் மங்கை

இங்கே தாயாருக்கு தனிச்சந்நிதி இல்லை.

தீர்த்தம்: தடமலர்ப் பொய்கை

விமானம்: ஸ்வயம்பு விமானம், வேதமோத விமானம்

காவளம் என்றால் மலர்த்தோட்டம். சத்யபாமா இந்திரன் தோட்டத்தில் இருக்கும் பாரிஜாதத்தை விரும்பியதாகவும், இந்திரன் பாரிஜாத மலரைக் கொடுக்க மறுத்து விட்டதால், சத்யபாமாவுக்காக இங்கே ஒரு பாரிஜாத மலர்த்தோட்டத்தை கிருஷ்ணர் அமைத்ததாகவும் வரலாறு.

இந்த திவ்யதேசப் பெருமாள் துவாரகையிலிருந்து இங்கு வந்து எழுந்தருளி இருக்கிறார் என்பது ஐதீகம்.

இந்த ஊரில் பாம்புக்கடியால் யாரும் இறப்பதில்லை என்றும், யாரையாவது பாம்பு கடித்தால், விஷத்தை கிருஷ்ணர் இறக்கி விடுவார் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.

திருமங்கை ஆழ்வார் அவதரித்த இடமான  திருக்குறையலூர் மற்றும் அவர் தன காதலி குமுதவல்லியின் விருப்பப்படி ஓராண்டுக்கு தினமும் 1000 பேருக்கு அன்னதானம் செய்த மங்கைமடம் ஆகிய ஓர் இந்த திவ்யதேசத்துக்கு மிக அருகில் உள்ளன.



இந்த திவ்யதேசத்தை திருமங்கை ஆழ்வார் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
பாசுரங்கள் இதோ:
நாலாயிர திவ்யப்பிரபந்தம்
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
நான்காம் பத்து
ஆறாம் திருமொழி
திருநாங்கூர்க் காவளம்பாடி
1. தாவளந் துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு,
நாவளம் நவின்றிங் கேத்த நாகத்தின் நடுக்கந் தீர்த்தாய்,
மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக்,
காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே. (1298)

2, மண்ணிடந் தேன மாகி மாவலி வலிதொ லைப்பான்,
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையி ரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய,
கண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே. (1299)

3. உருத்தெழு வாலி மார்வில் ஓருகணை யுருவ வோட்டி,
கருத்துடைத் தம்பிக் கின்பக் கதிமுடி யரச ளித்தாய்,
பருத்தெழு பலவும் மாவும் பழம்விழுந் தொழுகும் நாங்கைக்
கருத்தனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே. (1300)

4. முனைமகத் தரக்கன் மாள முடிகள்பத் தறுத்து வீழ்த்து,ஆங்
கனையவற் கிளைய வற்கே அரசளித் தருளி னானே,
சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்புதேன் நுகரும் நாங்கைக்,
கனைகழல் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே. (1301)

5. படவர வுச்சி தன்மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து,
மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தி னானே,
தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய,
கடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே. (1302)

6. மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று,
பல்லர சவிந்து வீழப் பாரதப் போர்மு டித்தாய்,
நல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய,
கல்லரண் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே. (1303)

7. மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூதெழுந் தருளி,
மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பொ சித்தாய்,
பூத்தமர் சோலை யோங்கிப் புனல்பரந் தொழுகும், நாங்கைக்
காத்தவனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே. (1304)

8. ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று,
காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்,
பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்,
காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே. (1305)

9. சந்தமாய் சமய மாகிச் சமயவைம் பூத மாகி,
அந்தமா யாதி யாகி அருமறை யவையு மானாய்,
மந்தமார் பொழில்க டோறும் மடமயி லாலும் நாங்கை,
கந்தமார் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே. (1306)

10. மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன,
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி,
கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே. (1307)

No comments:

Post a Comment