Thursday, October 10, 2019

78. திவ்யதேச தரிசன அனுபவம் - 57. திருத்தெற்றியம்பலம் (36)

தரிசனம் செய்த நாள்: 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை.   
 சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40

36. திருத்தெற்றியம்பலம் (பள்ளி கொண்ட ரங்கநாதர்)
சென்றது காலந் திரைநரைமூப் பானவினி
என்றுகொல்? சாவறியோ மென்னெஞ்சே! - கன்றால்
உருத்தெற்றி யம்பலத்தை யோர்விளவின் வீழ்த்தான்
திருத்தெற்றி யம்பலத்தைச் சேர்! (36)

சீர்காழிக்குத் தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார்  12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் என்னும் ஊரைச் சுற்றிலும், அதிக பட்சம் 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.

சில கோவில்கள் சில சமயம்  பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.

அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில்  எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

திரு எஸ். சுரேஷ் 9994621065  9750728645.

இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.

சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார் .

தெற்றி என்றால் மேடு. திருத்தெற்றி அம்பலம் என்ற சொல் சற்றே மேடான இடத்தில் அமைந்திருக்கும் கோவிலைக் குறிக்கிறது.

மூலவர்: செங்கண்மால், பள்ளி கொண்ட ரங்கநாதர், லட்சுமி ரங்கர். ஆதிசேஷன் மீது தெற்குப் பக்கம் தலை வைத்த சயனத் திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். திருமுடியையும், ஒரு கையையும் மரக்கால் மீது வைத்தபடி சயனித்திருக்க, இன்னொரு கையை கீழே தொங்கும் நிலையில் இடுப்பில் வைத்து சயனித்திருக்கிறார். தலைமாட்டில் ஸ்ரீதேவி, கால்மாட்டில் பூதேவி.
பிரத்யக்ஷம்: செங்கமலவல்லி, சூரியன், ஏகாதச ருத்ரர், அனந்தாழ்வார்

உற்சவர்: லக்ஷ்மி நாராயணன். செங்கமலவல்லி, ஸ்ரீதேவி, பூமாதேவி, சக்கரத்தாழ்வார், சந்தான கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் உற்சவ மூர்த்திகளாக சேவை சாதிக்கிறார்கள்.

தாயார்: செண்பகவல்லி

தீர்த்தம்: சூரிய புஷ்கரணி, சேஷ தீர்த்தம்

தல விருட்சம்: பலா

விமானம்: தேவ விமானம், ஸ்ருதிமய விமானம்

வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனிடமிருந்து பூமியை மீட்ட பிறகு
திருமால் இங்கு வந்து பள்ளி கொண்டுள்ளார். ஹிரண்யாக்ஷனுடன் போரிட்டதாக கண்கள் சிவந்து செங்கண்மாலாகக் காட்சி அளிக்கிறார்.

ஒரு சாபத்தினால் தன் சக்தி குறைந்த சூரியன் இங்கிருந்த சூரிய புஷ்காரணியில் நீராடித் தன்  சக்தியைத் திரும்பப்பெற்றான் என்ற வரலாறும் உண்டு. அதனால்தான் இந்தக் கோவில் புஷ்கரணி சூரிய புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது.

கர்ப்பக்கிருகத்துக்கு வெளியே பன்னிரு ஆழ்வார்கள், சக்கரத்தாழ்வார், ஹனுமான் ஆகியோர் தெற்கு நோக்கி நின்றபடி தரிசனம் தருகின்றனர்.

பிரகாரத்தில், தாயார் செங்கமலவல்லிக்குத்  சன்னிதி உள்ளது.

திருநாங்கூர் பெருமாள் 11 பேரும், 11 திவ்யதேசங்களிலிருந்து வந்தவர்கள் என்ற வகையில் இந்தப் பெருமாள் ஸ்ரீரங்கத்திலிருந்து இங்கு வந்து எழுந்தருளி இருக்கிறார்.

108 திவ்யதேசங்களில் இது மட்டுமே அம்பலம் என்று அழைக்கப் படுகிறது.

இந்த திவ்யதேசம் பற்றி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் விளக்கவுரையை இந்த வீடியோவில் காணலாம்.

இந்த திவ்யதேசத்தை திருமங்கை ஆழ்வார் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

பாசுரங்கள் இதோ:
நாலாயிர திவ்யப்பிரபந்தம்
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
நான்காம் பத்து
நான்காம் திருமொழி
திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்
1. மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்
      மற்று அவர்-தம் காதலிமார் குழையும் தந்தை 
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி
      கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்-
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து
      இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1277)
 
2. பொற்றொடித் தோள் மட மகள்- தன் வடிவு கொண்ட
      பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி
பெற்று எடுத்த தாய்போல மடுப்ப ஆரும்
      பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்-
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்
      இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங் கணார்-தம்
சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே  (1278)
 
3. படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு
      பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி
      அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்-
மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ
      மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1279)
 
4. வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி
      வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட
      கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்-
ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்
       எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே  (1280)
 
5. கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை
      கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப
      மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்-
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி
      ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே  (1281)
 
6. தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்
      அது கண்டு தரித்திருப்பான் அரக்கர்-தங்கள் 
கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன
      இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்-
மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்
      மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே  (1282)
 
7. பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்
      பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு
      மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்-
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த
      குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால்
செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே  (1283)
 
8. சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு
      திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம்
குலுங்க நில-மடந்தை-தனை இடந்து புல்கிக்
      கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்-
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்
      ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்
சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே  (1284)
 
9. ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி
      எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்
      முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்-
ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து
      ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர்
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1285)
 
10. சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்
      திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலை
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்
      கொடி மாட மங்கையர்-கோன் குறையல் ஆளி
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன
      பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி
      சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர்-தாமே  (1286)
|ஓம் நமோ நாராயணாய |

No comments:

Post a Comment