Thursday, October 10, 2019

77. திவ்யதேச தரிசன அனுபவம் - 56. திருவைகுந்த விண்ணகரம் (31)

தரிசனம் செய்த நாள்: 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை.   
 சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40
31. திருவைகுந்த விண்ணகரம்
வணங்கேன் பிறதெய்வ மாலடி யாரல்லாக்
குணங்கேடர் தங்களுடன் கூடேன் - இணங்கிநின்று
வைகுந்த விண்ணகரம் வாழ்த்துவே னீதன்றோ
வைகுந்த விண்ணகர வாழ்வு. (31)

சீர்காழிக்குத் தென் கிழக்கே நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார்  12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் என்னும் ஊரைச் சுற்றிலும், அதிக பட்சம் 5 கிலோமீட்டர் தூரத்துக்குள் 11 திவ்யதேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்று குறிப்பிடப் படுகின்றன. இவற்றில் பல அருகருகே அமைந்துள்ளன. சில கோவில்கள் ஒரே அர்ச்சகரால் பூஜை செய்யப்படுகின்றன.

சில கோவில்கள் சில சமயம்  பூட்டப்பட்டிருக்கலாம். எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் ஒரு உள்ளூர்வாசியை வழிகாட்டியாக வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும்.

அதிர்ஷ்டவசமாக, அண்ணன் கோவிலில்  எங்களுக்கு சுரேஷ் எனற ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தார். இவருடைய உதவியால் எங்களால் மற்ற கோவில்களை எளிதாகப் பார்க்க முடிந்தது. கோவில் பூட்டியிருந்தாலோ அர்ச்சகர் எங்காவது போயிருந்தாலோ அர்ச்சகரிடம் தொலைபேசியில் நேரம் கேட்டோ, அவரை வரவழைத்தோ நமக்குத் தரிசனம் கிடைக்க வழி செய்யும் இவர் சேவை பயனுள்ளது. இந்த வலைப்பதிவைப் படிக்கும் சிலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவர் தொலைபேசி எண்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

திரு எஸ். சுரேஷ் 9994621065  9750728645.

இவர் கோவிலின் ஸ்தல புராணங்கள், மற்ற விவரங்கள் நன்கு தெரிந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

உமாதேவி தன் தந்தை தக்ஷன் செய்த யாகத்துக்கு சிவபெருமானின் விருப்பத்தை மீறிச் சென்றதால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் முடி தலையில் பட்டபோது பதினோரு சிவபெருமான்கள் தோன்றினர்.

சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தால் அச்சமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு சிவபெருமான் முன் தோன்றினார். விஷ்ணுவைக் கண்டதும் மகிழ்ந்த சிவபெருமான் தன்னைப் போலவே விஷ்ணுவும் பதினோரு வடிவங்களில் தோன்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே விஷ்ணு இங்குள்ள 11 திருநாங்கூர் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருக்கிறார்.

உபரிசரவஸ் என்ற மன்னனுக்கும், உத்தங்கர் என்ற முனிவருக்கும் ஆகியோருக்குப் பெருமாள் இங்கே வைகுண்டத்தில் இருப்பது போல் காட்சி அளித்தார் என்பது ஸ்தல புராணம்.

இக்‌ஷ்வாகுகுல அரசனான ஸ்வேதகேது புண்ணியம் செய்ததால்   வைகுண்டம் சென்றும், அவனுக்கு பசி, தாகம் போன்ற உணர்வுகள் இருந்ததால், அவனுக்கு அகங்காரம் நீங்கவில்லை என்று கூறி அவனின் இங்கு வந்து தவம் செய்யச் சொல்லி நாரதர் வலியுறுத்த, அவனும் இந்த திவ்யதேசத்துக்கு வந்து வைகுண்டக் காட்சி பெற்றான் என்பது இன்னொரு வரலாறு.

மூலவர்: வைகுண்டநாதன், தாமரைக் கண்ணுடைய பிரான் அமர்ந்த திருக்கோலம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். ஸ்ரீதேவி,பூதேவி, நீளாதேவியுடன் வைகுண்டத்தில் இருப்பது போல் காட்சி அளிக்கிறார்.
பிரத்யக்ஷம்: உபரிஸ்ரவஸ், உத்தங்கர், ஏகாதச ருத்ரர் (ஐராவதேஸ்வரர்)

உற்சவர்: பரமபதநாதன்
உற்சவரும், மூலவரும் ஒரே தோற்றத்தில் இருப்பது இந்தக் கோவிலில் இன்னொரு விசேஷம்.

தாயார்: வைகுண்டவல்லி

தீர்த்தம்: விராஜா தீர்த்தம்  லக்ஷ்மி புஷ்கரணி, உத்தக புஷ்கரணி

விமானம்: அனந்த சத்யவர்த்தக விமானம்.

வைகுந்தத்தில் இருப்பது போல் பெருமாளுக்கு அருகில் மகாலக்ஷ்மி வீற்றிருப்பதால் தாயாருக்கு இங்கே தனி சந்நிதி இல்லை.

ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் உள்ளன.

இங்கு கருடன் சந்நிதியும் இல்லை. பலிபீடம் மட்டும்தான் இருக்கிறது.



இந்த திவ்யதேசத்தை திருமங்கை ஆழ்வார் 10 பாடல்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
பாசுரங்கள் இதோ:
நாலாயிர திவ்யப்பிரபந்தம்
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
மூன்றாம் பத்து
ஒன்பதாம் திருமொழி
திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம்

1. சலங்கொண்ட இரணியன தகல்மார்வம் கீண்டு
தடங்கடலைக் கடைந்தமுதங் கொண்டுகந்த காளை,
நலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி யம்மான்
நாடோறும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
சலங்கொண்டு மலர்சொரியும் மல்லிகையொண் செருந்தி
சண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே,
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1228)

2. திண்ணியதோ ரரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத்
தேவரொடு தானவர்கள் திசைப்ப,இரணியனை
நண்ணியவன் மார்வகலத் துகிர்மடுத்த நாதன்
நாடோறும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
எண்ணில்மிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையும்
ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர்,
மண்ணில்மிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1229)

3, அண்டமுமிவ் வலைகடலு மவனிகளு மெல்லாம்
அமுதுசெய்த திருவயிற்றன் அரன்கொண்டு திரியும்,
முண்டமது நிறைத்தவன்கண் சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
எண்டிசையும் பெருஞ்செந்ந லிளந்தெங்கு கதலி
இலைக்கொடியொண் குலைக்கமுகொ டிகலிவளம் சொரிய
வண்டுபல விசைபாடமயிலாலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1230)

4. கலையிலங்கு மகலல்குல் அரக்கர்க்குலக் கொடியைக்
காதொடுமூக் குடனரியக் கதறியவ ளோடி,
தலையிலங்கை வைத்துமலை யிலங்கைபுகச் செய்த
தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
சிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசைச் சூலம்
செழுங்கொண்ட லகடிரியச் சொரிந்தசெழு முத்தம்,
மலையிலங்கு மாளிகைமேல் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1231)

5. மின்னனைய _ண்மருங்குல் மெல்லியற்கா யிலங்கை
வேந்தன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர
தன்நிகரில் சிலைவளைத்தன் றிலங்கைபொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
செந்நெலொடு செங்கமலம் சேல்கயல்கள் வாளை
செங்கழுநீ ரொடுமிடைந்து கழனிதிகழ்ந் தெங்கும்,
மன்னுபுகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1232)

6. பெண்மைமிகு வடிவுகொடு வந்தவளைப் பெரிய
பேயினது உருவுகொடு மாளவுயி ருண்டு
திண்மைமிகு மருதொடுநற் சகடமிறுத் தருளும்
தேவனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
உண்மைமிகு மறையொடுநற் கலைகள்நிறை பொறைகள்
உதவுகொடை யென்றிவற்றி னொழிவில்லா, பெரிய
வண்மைமிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1233)

7. விளங்கனியை யிளங்கன்று கொண்டுதிர வெறிந்து
வேல்நெடுங்க ணாய்ச்சியர்கள் வைத்ததயிர் வெண்ணெய்
உளங்குளிர அமுதுசெய்திவ் வுலகுண்ட காளை
உகந்தினிது நாடோறும் மருவியுறை கோயில்,
இளம்படிநற் கமுகுகுலைத் தெங்குகொடிச் செந்நெல்
ஈன்கரும்பு கண்வளரக் கால்தடவும் புனலால்,
வளங்கொண்ட பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1234)

8. ஆறாத சினத்தின்மிகு நரகனுர மழித்த அடலாழித் தடக்கையன்
அலர்மகட்கும் அரற்கும்,
கூறாகக் கொடுத்தருளும் திருவுடம்பன் இமையோர்
குலமுதல்வன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
மாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி மதுவெள்ள
மொழுகவய லுழவர்மடை யடைப்ப,
மாறாத பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1235)

9. வங்கமலி தடங்கடலுள் வானவர்க ளோடு
மாமுனிவர் பலர்கூடி மாமலர்கள் தூவி,
எங்கள்தனி நாயகனே எமக்கருளாய் என்னும்
ஈசனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
செங்கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்பச்
சேலுகளும் செழும்பணைசூழ் வீதிதொறும் மிடைந்து,
மங்குல்மதி யகடுரிஞ்சு மணிமாட நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே. (1236)

10. சங்குமலி தண்டுமுதல் சக்கரமுனேந்தும் தாமரைக்கண்
நெடியபிரான் தானமரும் கோயில்,
வங்கமலி கடலுலகில் மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகர்மேல் வண்டறையும் பொழில்சூழ்,
மங்கையர்தம் தலைவன்மரு வலர்தமுடல்துணிய
வாள்வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன,
சங்கமலி தமிழ்மாலை பத்திவைவல்லார்கள்
தரணியொடு விசும்பாளும் தன்மைபெறு வாரே. (1237)







No comments:

Post a Comment