தரிசனம் செய்த நாள் - 27/08/2016 (சனிக்கிழமை)
தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
12. திருக்கள்வனூர் (85)
பண்டேயுன் றொண்டாம் பழவுயிரை யென்னதென்றுகொண்டேனைக் கள்வனென்று கூறாதே - மண்டலத்தோர்
புள்வாய் பிறந்த புயலே! உனைக்கச்சிக்
கள்வாவென் றொதுவதென் கண்டு? (85)
- பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் 'நூற்றியெட்டு திருப்பதி அந்தாதி '
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் உள்ள திவ்ய தேசம் இது. காமாட்சி அம்மன் சந்நிதிக்கு வெளியே உள்ள காயத்ரி மண்டபத்தில் உள்ளது இந்த சந்நிதி.
மூலவர் - ஆதிவராஹப் பெருமாள்
தாயார் - அஞ்சிலைவல்லி நாச்சியார்.
விமானம் - வாமன விமானம்
தீர்த்தம் - நித்ய புஷ்கரணி
சுவற்றில் உள்ள ஒரு மாடத்தில் சிறிய உருவில் காட்சி அளிக்கிறார் பெருமாள். அவருக்குப் பக்கத்தில் அஞ்சிலைவல்லித் தாயார், பெருமாளை வணங்கும் கோலத்தில் காட்சி தருகிறார். காமாட்சி அம்மன் சந்நிதிக்கு மறுபுறம் சுவற்றில் அரூப லட்சுமி என்ற மற்றோரு சந்நிதி இருக்கிறது.
இந்த விவரங்கள் எல்லாம் நான் பல வலைப்பதிவுகளில் படித்தவை! இப்போது கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதால், இந்த திவ்ய தேசத்தைக் கண்ணாடியில்தான் பார்க்க முடிந்தது (கண்ணாடி சேவை)! கண்ணாடியில் பெருமாளின் திருவுருவத்தை ஓரளவுக்குத்தான் பார்க்க முடிந்தது. தாயாரின் திருவுருவம் கண்ணாடியில் எனக்குப் புலப்படவில்லை
இந்த திவ்ய தேசத்துக்கான தலபுராணங்கள் தெளிவாக இல்லை. திருக்குளத்தில் பார்வதியும், லக்ஷ்மியும் பேசிக்கொண்டிருந்ததை பெருமாள் ஒட்டுக்கேட்டதால், காமாட்சி வடிவில் இருந்த பார்வதி, தங்கை என்ற உரிமையில் பெருமாளை 'கள்வா' என்று அழைத்ததால் இந்த திவ்ய தேசத்துக்குத் திருக்கள்வனூர் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் பெருமாளின் பெயர் ஆதிவராஹர் என்றல்லவா இருக்கிறது?.
இந்த திவ்ய தேசப் பெருமாளின் திருவுருவத்தை இங்கே காணலாம். புகைப்படங்களில் கூடத் தாயாரின் உருவம் இடம் பெற வில்லை!
பெருமாளின் பெயர் ஆதிவராஹர் என்று இருக்க, இந்தக் கோயிலில் உள்ள மூர்த்தி வராஹ மூர்த்தியின் வடிவில் இல்லை.
திருக்கார்வானம் பற்றிய எனது பதிவில் ஆழ்வார் 'கார்வானத்தில் உள்ளாய் கள்வா' என்று பாடியிருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இந்த வரியில் உள்ள 'கள்வா' என்ற சொல் இந்த திவ்ய தேசத்தைக்க குறிப்பதாகக் கருதப்பட்டு, இந்த சந்நிதியம் திவ்ய தேசம் என்று வகுக்கப்பட்டுள்ளது. இது பற்றிப் பல சந்தேகங்கள் இருந்தாலும், பெரியோர்கள் தீர்மானித்ததை ஏற்பதுதானே நமது கடமை?
இந்த திவ்ய தேசம் பற்றிய சுவாரஸ்யமான ஒரு தகவலை 'திருவெஃகா' பற்றி எழுதும்போது பகிர்ந்து கொள்கிறேன்.
திருமங்கை ஆழ்வாரின் பாடல் இதோ:
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திரு நெடுந்தாண்டகம்
2058 நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே (8)
ஓம் நமோ நாராயணாய!
No comments:
Post a Comment