Sunday, September 4, 2016

35. திவ்ய தேச தரிசன அனுபவம் 14. பரமேஸ்வர விண்ணகரம்(87)

தரிசனம் செய்த நாள் - 27/08/2016 (சனிக்கிழமை)
 தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
14. திருபரமேச்சுரவிண்ணகரம் (87)

பதத்தமிழாற் றன்னையே பாடுவித்தென் னைத்தன்
பதத்தடியார்க் கேயாட் படுத்தான் - இதத்த
பரமேச் சுரவிண் ணகரான் பலவான்
வரவேச் சுரலணைந்த மால். (87)
 - பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி.'

'வைகுண்டப் பெருமாள் கோயில்' என்று அழைக்கப்படும் 'பரமேஸ்வர விண்ணகரம்,' பரமேஸ்வர பல்லவன் என்ற மன்னனால் கட்டப்பட்டது.

பரத்வாஜ முனிவரின் தவத்தைக் கலைக்க வந்த கந்தர்வக் கன்னியிடம் அவர் மோகம் கொண்டதால் பிறந்த குழந்தையை விஷ்ணுவும், லக்ஷ்மியும் வேட்டுவர் தம்பதி போல் தோற்றம் கொண்டு வளர்த்து வந்தனர். பிறகு பல்லவ மன்னனுக்கு வாரிசு இல்லாததால் குழந்தையை அவனுக்கு அளித்தனர். குழந்தை வளர்ந்து பரமேஸ்வர பல்லவன் என்ற பெயரில் முடி சூட்டிக்கொண்டது.

சிறுவனாக இருந்தபோது பரமேஸ்வர பல்லவன் விஷ்ணுவிடம் 18 கலைகளையும் கற்றான். மன்னன் ஆனதும் பெருமாள் அவனுக்குப் பரமபதநாதனாகக்  காட்சி கொடுத்தார்.

பெருமாளிடம் இருந்த பக்தி காரணமாக மன்னன் ஆனதும் அவருக்கு இந்தக் கோயிலை எழுப்பினான் பரமேஸ்வர பல்லவன். அதனால் இது பரமேஸ்வர விண்ணகரம் என்று அழைக்கப்படுகிறது. வைகுண்டப்பெருமாள் கோயில் என்றும், பரமபதநாதர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

கர்ப்பக்கிரகமும், உட்பிரகாரமும் குடவரைக்கோயில் என்ற அமைப்பில் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. மூன்று அடுக்குகளைக்கொண்ட இந்தக் கோயில் மும்மாடக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.

முதல் அடுக்கில் (தரைத்தளத்தில்), பெருமாள் இருந்த கோலத்தில் பரமபத நாதராக மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

இரண்டாம் அடுக்கில், கிடந்த கோலத்தில் ரங்கநாதனாக புஜங்க சயனத்தில் சேவை சாதிக்கிறார். இந்த சந்நிதிக்குச் செல்ல, கோயிலின் உட்பிரகாரத்தில் சந்நிதிக்குப் பின்புறத்தில் படிக்கட்டுக்கள் உள்ளன. ஆனால் இந்த சந்நிதி ஏகாதசி அன்று காலை மட்டும்தான் திறக்கப்படும். நான் சென்றது ஏகாதசிக்கு முதல்நாள் மாலை. "நாளைக்காலையில் வந்தால் ரங்கநாதரைச் சேவிக்கலாம்" என்றார் அர்ச்சகர். எனக்கு அது இயலக்கூடியதாக இல்லை. மீண்டும் ஒருமுறை ஏகாதசி தினத்தன்று காலையில் வர வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

அப்போது என் மனதில் தோன்றிய ஒரு எண்ணத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். பொதுவாக திவ்ய தேசங்களைத் தரிசிப்பவர்கள், 25 கோயில்களை தரிசித்து விட்டாம் , 63 கோயில்களுக்குச் சென்று வந்து விட்டோம் என்று கணக்குப் போடுகிறார்கள் (போடுகிறோம்!). ஆனால் பெருமாள் சில சமயம் வேறு மாதிரி நினைக்கிறார் போலும். "ஏன், ஒரு தடவைதான் என் கோயிலுக்கு வர வேண்டுமா? இன்னொரு முறை வந்தால் என்ன?" என்று கேட்கிற மாதிரி சில சூழ்நிலைகளை உருவாக்குகிறார். சில கோயில்களில் சம்ப்ரோக்ஷணம் செய்வதற்கான  வேலைகள் நடந்து கொண்டிருக்கும். அதனால் மூலவர் சந்நிதியை தரிசிக்க முடியாமல் போகும். இது போன்ற சூழ்நிலைகளை உருவாக்கி, நம்மை மீண்டும் தன் இருப்பிடத்துக்கு வரவழைக்கிறார் பகவான். இதுவும் நம் நன்மைக்குத்தான் என்று நினைத்தால் இது போன்ற சூழ்நிலைகளைச்  சந்திக்கும்போது நாம் ஏமாற்றம் அடைய மாட்டோம்!

மூன்றாவது  அடுக்கில் நின்ற திருக்கோலம். இது கோயில் கோபுரத்தில் இருக்கிறது. இங்கே செல்ல வழி கிடையாது. கீழிருந்து பார்த்தாலும் தெரியாது.

அதனால் மூன்று சந்நிதிகளில், ஒன்றைத்தான் தரிசிக்க முடிகிறது. ஏகாதசியன்று போனால் இரண்டு சந்நிதிகளை தரிசிக்கலாம். மூன்று சந்நிதிகளில் தரிசனம் கிடைக்க சம்பந்தப்பட்டவர்கள் எதாவது ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். மூன்று திருக்கோலங்களில் பெருமாள் சேவை சாதிக்கும் கோயிலில், ஒரு சந்நிதியை எப்போதுமே தரிசிக்க முடியாது, மற்றொன்றை, மாதம் இரண்டு நாட்கள் காலை வேளையில்தான் தரிசிக்க முடியும் என்பது ஏமாற்றத்துக்குரிய விஷயம்தான்!

பெருமாள் சந்நிதிக்கு வெளியே, நமக்கு வலப்புறமாகத் தாயார் சந்நிதி. தாயாரின் பெயர் வைகுந்தவல்லி.கிழக்கு முகமாக, பெருமாள் இருக்கும் திசையை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார் தாயார்.

உட்பிரகாரம் முழுவதும் சுவர்களிலும், தூண்களிலும் அற்புதமான சிற்பங்கள். இவை பரமேஸ்வர பல்லவனின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் காட்சிகள் என்று சொல்லப்படுகிறது. விஷ்ணுவிடம், பல்லவன் பாடம் கற்கும் காட்சி போன்ற பல காட்சிகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன என்று சொல்கிறார்கள். ஆனால் சிற்பங்கள் தேய்ந்தும், சிதைந்தும் இருப்பதால், அவற்றை உற்று நோக்கி அவற்றில் விவரிக்கப்பட்டுள்ள காட்சிகளைப் புரிந்து கொள்வது கடினமான செயல்.

விஷ்வக்சேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோருக்கு தனிச் சந்நிதிகள் இருக்கின்றன.

விமானம் - முகுந்த விமானம்

தீர்த்தம் - ஐரம்மத தீர்த்தம்

பெருமாளின் திருவுருவை இங்கே காணலாம்.

இந்தக் கோயில் பற்றிய விவரங்களைக் கோயிலின் அர்ச்சகர் கூறுவதை இந்த வீடியோவில் காணலாம்.


இந்த திவ்ய தேசம் பற்றித் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். பாசுரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இது பல்லவ மன்னன் வழிபட்ட கோயில் என்று ஆழ்வார்  பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார்.
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருப்பரமேச்சுரவிண்ணகரம்
1127 சொல்லு வன் சொல் பொருள் தான் அவை ஆய்
      சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும் ஆய்
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு
      இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில்
      பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (1)
 
1128 கார் மன்னு நீள் விசும்பும் கடலும்
      சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்-
      தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில்
      செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (2)
 
1129 உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்
      ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்
வரம் தரு மா மணிவண்ணன் இடம்
      -மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்
      நெடு வாயில் உக செருவில் முன நாள்
பரந்தவன் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (3)
 
1130 அண்டமும் எண் திசையும் நிலனும்
      அலை நீரொடு வான் எரி கால் முதலா
உண்டவன் எந்தை பிரானது இடம்
      -ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
விண்டவர் இண்டைக் குழாமுடனே
      விரைந்தார் இரிய செருவில் முனிந்து
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (4)
 
1131 தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்
      துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
பூம் புனல் பொய்கை புக்கான்-அவனுக்கு
      இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்
      திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (5)
 
1132 திண் படைக் கோளரியின் உரு ஆய்
      திறலோன் அகலம் செருவில் முன நாள்
புண் படப் போழ்ந்த பிரானது இடம்-
      பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப
      விடை வெல் கொடி வேல்-படை முன் உயர்த்த
பண்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (6)
 
1133 இலகிய நீள் முடி மாவலி-தன்
      பெரு வேள்வியில் மாண் உரு ஆய் முன நாள்
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு
      இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
உலகு உடை மன்னவன் தென்னவனைக்
      கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ
பல படை சாய வென்றான் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (7)
 
1134 குடைத் திறல் மன்னவன் ஆய் ஒருகால்
      குரங்கைப் படையா மலையால் கடலை
அடைத்தவன் எந்தை பிரானது இடம்-
      அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்
      வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த
படைத் திறல் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (8)
 
1135 பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து
      முன்னே ஒருகால் செருவில் உருமின்
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு
      இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
கறை உடை வாள் மற மன்னர் கெட
      கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்
பறை உடைப் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (9)
 
1136 பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்-கோன்
      பணிந்த பரமேச்சுரவிண்ணகர்மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம்
      தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்
      திரு மா மகள்-தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்
      செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே            (10)
ஓம் நாராயணாய!



2 comments: