தரிசனம் செய்த நாள் - 27/08/2016 (சனிக்கிழமை)
தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
10. திருக்காராகம் (83)
ஓராதார் கல்வி யுடையேங் குலமுடையேம்10. திருக்காராகம் (83)
ஆரா தனமுடையேம் யாமென்று - சீராயன்
பூங்கர ரகங்காணப் போதுவார் தாடலைமேல்
தாங்கா ரகங்காரத் தால் (83)
- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி'
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் உள்ள மற்றொரு சந்நிதி திருக்காரகம். காரகர் என்ற முனிவருக்கு காட்சி கொடுத்ததால் இந்தப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
திருமங்கை ஆழ்வார் மங்களசாஸனத்தைத் தவிர இந்தப் பெருமாள் பற்றி அதிகக் குறிப்புகள் இல்லை. 'உலகமேத்தும் காரகத்தாய்!' என்று ஆழ்வார் இந்தப் பெருமாளை விளிப்பதால், இது ஒரு பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்திருக்கக் கூடும் என்று அனுமானிக்கலாம்.
உலகளந்த பெருமாள் கோயில் பிரகாரத்தில் உள்ள திருநீரகம், திருக்காராகம், திருக்கார்வானம் ஆகிய மூன்று சந்நிதிகளும் வேறு இடத்தில் இருந்திருக்கலாம் என்றும், பிற்காலத்தில் எதோ ஒரு காரணத்துக்காக இந்தச் சந்நிதிகள் இந்தக் கோயிலுக்குள் நிறுவப் பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு. திருஊரகத்தைக் 'கச்சி ஊரகத்தாய்' என்று பாடிய ஆழ்வார், இந்த மூன்று திவ்ய தேசங்களுக்கும் ஊரின் பெயரைக் குறிப்பிடாதது இவை காஞ்சிக்கு வெளியே இருந்திருக்கலாம் என்ற கருத்துக்கு வலு சேர்க்கிறது.
பிரகாரத்தின் வலப்புறத்தில், தாயார் சந்நிதிக்கு அருகே இருக்கிறது இந்த சந்நிதி. பெருமாள் ஆதிசேஷன் மீது அமர்ந்த திருக்கோலத்தில் வடக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தலைக்கு மேலே ஆதிசேஷன் குடையாக நிற்கும் தோற்றம்.
மூலவர் கருணாகரப் பெருமாள். உற்சவர் இல்லை.
தாயாரின் பெயர் பத்மாமணி நாச்சியார் மற்றும் ரமாமணி நாச்சியார். தாயாருக்குத் தனி விக்கிரகம் இல்லை.பெருமாளின் திருமார்பில் குடியிருக்கும் தாயாரையே இந்தப் பெயர்கள் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.
விமானம் - வாமன விமானம், ரம்ய விமானம்
தீர்த்தம் - அக்ராய தீர்த்தம்.
இந்த திவ்ய தேசப் பெருமாளின் திருவுருவை இங்கே காணலாம்.
திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசம் பற்றித் தனது ஒரு பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திரு நெடுந்தாண்டகம்
2058 நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே (8)
ஓம் நமோ நாராயணாய!
No comments:
Post a Comment