Sunday, January 26, 2014

8. சோழ நாட்டுத் திருப்பதிகள்

108 திருப்பதிகளை அவை அமைந்திருக்கும் இடத்தையொட்டி 7 பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள்.

அவை:



சோழநாட்டுத் திருப்பதிகள்  - 40
நடுநாட்டுத் திருப்பதிகள் - 2
தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22
வட நாட்டுத் திருப்பதிகள் - 11
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் - 18
நில உலகில் பார்க்க முடியாத திருப்பதிகள் - 2
மொத்தம் - 108


சோழ நாட்டுத் திருப்பதிகள்  40

எண்: 1
திவ்யதேசப்பெயர்:  திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)
ஊர்:  ஸ்ரீரங்கம்
பெருமாள்:  ரங்கநாதர், பெரிய பெருமாள், நம்பெருமாள், 
அழகிய மணவாளன்
கிடந்த திருக்கோலம்
தாயார்:  ரங்கநாயகி, ரங்க நாச்சி்யார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 35 183, 189, 212, 245, 
402-32
ஆண்டாள் 10 607-616
குலசேகராழ்வார் 31 647-76, 728
திருமழிசையாழ்வார் 14 772, 800-06, 844, 870,
2384, 2411, 2417, 2441
தொண்டரடிப்பொடியாழ்வார் 55 872-926
திருப்பாணாழ்வார் 10 927-36
திருமங்கையாழ்வார் 73 1019, 1213, 1378-1427, 1506,
1571, 1664, 1829, 1978, 2029,
2038, 2043, 2044, 2050, 2062, 
2063, 2065, 2069, 2070, 2073-76
2673, 2674
பொய்கையாழ்வார் 1 2087
பூதத்தாழ்வார் 4 2209, 2227, 2251, 2269
பேயாழ்வார் 2 2342, 2343
நம்மாழ்வார் 12 2505, 3348-58
மொத்தம் 247
எண்: 2
திவ்யதேசப்பெயர்:  திருக்கோழி (நிகளாபுரி, உறந்தை)
ஊர்:  உறையூர் (திருச்சி)
பெருமாள்:  அழகிய மணவாளன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  கமலவல்லி நாச்சியார், வாஸக்ஷ்மி, உறையூர்வல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 1 1762
குலசேகராழ்வார் 1 667
மொத்தம் 2
எண்: 3
திவ்யதேசப் பெயர்:  திருக்கரம்பனூர் (கதம்ப க்ஷேத்ரம்)
ஊர்:  உத்தமர் கோவில்
பெருமாள்:  புருஷோத்தமன்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  பூர்வாதேவி, பூர்ணவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 1 1399
எண்: 4
திவ்யதேசப்பெயர்:  திருவெள்ளறை (வேதகிரி க்ஷேத்ரம்)
ஊர்:  திருவெள்ளறை
பெருமாள்:  புண்டரிகாக்ஷன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  செண்பகவல்லி, பங்கயச்செல்வி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 11 71, 192-201
திருமங்கையாழ்வார் 13 1368-77, 1851, 2673, 2674
மொத்தம் 24
எண்: 5
திவ்யதேசப்பெயர்:  திரு அன்பில்
ஊர்:  அன்பில்
பெருமாள்:  வடிவழகிய நம்பி, சுந்தரராஜன்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  அழகியவல்லி நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமழிசையாழ்வார் 1 2417
எண்: 6
திவ்யதேசப்பெயர்:  திருப்பேர் நகர்  (அப்பக் குடத்தான்)
ஊர்:  கோவிலடி
பெருமாள்:  அப்பக்குடத்தான், அப்பால ரங்கநாதன்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  இந்திராதேவி, கமலவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 2 173, 205
திருமங்கையாழ்வார் 19 1428-37,1851,1857,
2048, 2050, 2059, 2060
2070, 2673, 2674
திருமழிசையாழ்வார் 1 2417
நம்மாழ்வார் 11 3744-54
மொத்தம் 33
எண்: 7
திவ்யதேசப்பெயர்:  திருக்கண்டியூர் (த்ரிமூர்த்தி க்ஷேத்ரம்)
ஊர்:  கண்டியூர்
பெருமாள்:  ஹரசாபவிமோசனப் பெருமாள், கமலநாதன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  கமலவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 1 2050
எண்: 8
திவ்யதேசப்பெயர்:  திருக்கூடலூர் (சங்கம க்ஷேத்ரம்)
ஊர்:  ஆடுதுறை
பெருமாள்:  வையம் காத்த பெருமாள (ஜகத்ரக்ஷகன்),
 உய்யவந்தார்
நின்ற திருக்கோலம்
தாயார்:  பத்மாசனி, புஷ்பவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1358-67
எண்: 9
திவ்யதேசப் பெயர்:  திருக்கவித்தலம் (கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரம்)
ஊர்:  கபிஸ்தலம்
பெருமாள்:  கஜேந்திர வரதன்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்)
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமழிசையாழ்வார் 1 2431
எண்: 10
திவ்யதேசப்பெயர்:  திருப்புள்ளபூதங்குடி
ஊர்:  புள்ளபூதங்குடி
பெருமாள்:  வல்வில் ராமன்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி)
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1348-57
எண்: 11
திவ்யதேசப்பெயர்:  திரு ஆதனூர்
ஊர்:  ஆதனூர்
பெருமாள்:  ஆண்டளக்கும் ஐயன்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  ரங்கநாயகி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 1 2674
எண்: 12
திவ்யதேசப்பெயர்:  திருக்குடந்தை (பாஸ்கர க்ஷேத்ரம்)
ஊர்:  கும்பகோணம்
பெருமாள்:  சாரங்கபாணி, ஆராவமுதன், அபர்யாப்தாம்ருதன்
உத்தியோக சயனம் (கிடந்தவாறு
 எழுந்திருக்க முயலும் நிலை)
தாயார்:  கோமளவல்லி, படிதாண்டாப் பத்தினி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 3 173, 177, 178
ஆண்டாள் 1 628
திருமழிசையாழ்வார் 7 807-12, 2417
திருமங்கையாழ்வார் 25 949, 954, 991, 1078, 1202, 1205
1394, 1526, 1538, 1570, 1606,
1732, 1759, 1853, 1949, 1975
2010, 2037, 2045, 2068, 2070
2080, 2672, 2673, 2674
பூதத்தாழ்வார் 2 2251, 2278
பேயாழ்வார் 2 2311, 2343
நம்மாழ்வார் 11 3194-3204
மொத்தம் 51
எண்: 13
திவ்யதேசப்பெயர்:  திருவிண்ணகர் (மார்க்கண்டேய க்ஷேத்ரம்)
ஊர்:  ஒப்பிலியப்பன் கோவில்
பெருமாள்:  ஒப்பிலியப்பன், ஸ்ரீனிவாசன்
நின்ற திருக்கோலம் 
தாயார்:  பூமிதேவி, பூமி நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 34 1448-77, 1855, 2080,
2673, 2674
பேயாழ்வார் 2 2341, 2343
நம்மாழ்வார் 11 3249-59
மொத்தம் 47
எண்: 14
திவ்யதேசப்பெயர்:  திருநரையூர்
ஊர்:  நாச்சியார் கோவில்
பெருமாள்:  திருநரையூர் நம்பி, ஸ்ரீனிவாசன், வாசுதேவன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  வஞ்சுளவல்லி, நம்பிக்கை நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 110 1078, 1329, 1470, 
1478-1577, 1611, 1659,
1852, 2067, 2068, 2673
2674
எண்: 15
திவ்யதேசப் பெயர்:  திருச்சேறை (பஞ்சஸார க்ஷேத்ரம்)
ஊர்:  திருச்சேறை 
பெருமாள்:  சாரநாதன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  சாரநாயகி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 13 1578-87, 1853, 2673,
2674
எண்: 16
திவ்யதேசப்பெயர்:  திருக்கண்ணமங்கை (கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம்)
ஊர்:  திருக்கண்ணமங்கை 
பெருமாள்:  பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள்
நின்ற திருக்கோலம்
தாயார்:  அபிஷேகவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 14 1638-47, 1848, 2008
2673, 2674
எண்: 17
திவ்யதேசப்பெயர்:  திருக்கண்ணபுரம் (கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரம்,
பஞ்சகிருஷ்ண க்ஷேத்ரம், ஸப்த புண்ய க்ஷேத்ரம்)
ஊர்:  திருக்கண்ணபுரம் 
பெருமாள்:  நீலமேகப் பெருமாள், சௌரிராஜப் பெருமாள்
நின்ற திருக்கோலம்
தாயார்:  கண்ணபுர நாயகி (ஸ்ரீதேவி, பூதேவி,
 ஆண்டாள், பத்மினி)
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
பெரியாழ்வார் 1 71
ஆண்டாள் 1 535
குலசேகராழ்வார் 11 719-729
திருமங்கையாழ்வார் 104 1648-1747, 2067, 2078
2673, 2674
நம்மாழ்வார் 11 3656-66
மொத்தம் 128
எண்: 18
திவ்யதேசப்பெயர்:  திருக்கண்ணங்குடி (கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரம்)
ஊர்:  திருக்கண்ணங்குடி
பெருமாள்:  லோகநாதன், சியாமளமேனிப் பெருமாள்
தாமோதர நாராயணன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  லோகநாயகி, அரவிந்தவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1748-57
எண்: 19
திவ்யதேசப்பெயர்:  திருநாகை
ஊர்:  நாகப்பட்டினம்
பெருமாள்:  நீலமேகப் பெருமாள், சௌந்தர்யராஜன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  சௌந்தர்யவல்லி, கஜலக்ஷ்மி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1758-67
எண்: 20
திவ்யதேசப்பெயர்:  திருத்தஞ்சை மாமணிக்கோவில் (3 கோவில்கள்)
ஊர்:  தஞ்சாவூர்
தஞ்சை மாமணிக்கோவில் 
பெருமாள்:  நீலமேகப் பெருமாள்
இருந்த திருக்கோலம்
தாயார்:  செங்கமலவல்லி 
2. மணிக்குன்றம்
பெருமாள்:  மணிக்குன்றப்  பெருமாள்
இருந்த திருக்கோலம்
தாயார்:  அம்புஜவல்லி 
3. தஞ்சையாளி நகர்
பெருமாள்:  நரசிம்மன்
இருந்த திருக்கோலம்
தாயார்:  தஞ்சை நாயகி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 3 953, 1090, 1576 
பூதத்தாழ்வார் 1 2251
நம்மாழ்வார் 1 3139
மொத்தம் 5
எண்: 21
திவ்யதேசப் பெயர்:  திருநந்திபுர விண்ணகரம் (தக்ஷிண ஜகந்நாதம்)
ஊர்:  நாதன் கோவில்
பெருமாள்:  ஜகந்நாதன், நாதநாதன், விண்ணகரப் பெருமாள்
இருந்த திருக்கோலம்
தாயார்:  செண்பகவல்லித் தாயார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1438-47
எண்: 22
திவ்யதேசப்பெயர்:  திருவெள்ளியங்குடி
ஊர்:  திருவெள்ளியங்குடி
பெருமாள்:  கோலவல்வில்லி ராமன், ஸ்ருங்கார சுந்தரன்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  மரகதவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1338-47
எண்: 23
திவ்யதேசப்பெயர்:  திருவழுந்தூர்
ஊர்:  தேரழுந்தூர்
பெருமாள்:  தேவாதிராஜன், ஆமருவியப்பன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  செங்கமலவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 45 1588-1627, 1854, 2066
2077, 2673, 2674
எண்: 24
திவ்யதேசப்பெயர்:  திருச்சிறுபுலியூர்
ஊர்:  சிறுபுலியூர்
பெருமாள்:  அருள்மாகடல், சலசயனப் பெருமாள்
கிருபாசமுத்திரப் பெருமாள்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  திருமாமகள் நாச்சியார், தயாநாயகி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1628-37
எண்: 25
திவ்யதேசப்பெயர்:  திருத்தலைச்சங்க நாண்மதியம்
ஊர்:  தலைச்சங்காடு
பெருமாள்:  நாண்மதியப் பெருமாள், வெண்சுடர்ப் பெருமாள்
வியோமஜோதிப்பிரான், வெஞ்சுடர்ப்பிரான், 
லோகநாதன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  தலைச்சங்க நாச்சியார், செங்கமலவல்லித் தாயார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 2 1736, 2674
எண்: 26
திவ்யதேசப்பெயர்:  திருஇந்தளூர்
ஊர்:  இந்தளூர்
பெருமாள்:  பரிமள ரங்கநாதன், மருவினிய மைந்தன்,
சுகந்தவனநாதன்
கிடந்த திருக்கோலம் (வீரசயனம்)
தாயார்:  பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசனவல்லி, 
புண்டரீகவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 11 1328-37, 2674
எண்: 27
திவ்யதேசப் பெயர்:  திருக்காவளம்பாடி
ஊர்:  திருநாங்கூர்
பெருமாள்:  கோபாலகிருஷ்ணன், ராஜகோபாலன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1298-1307
எண்: 28
திவ்யதேசப்பெயர்:  திருக்காழிச்சீராம விண்ணகரம்
ஊர்:  சீர்காழி
பெருமாள்:  த்ரிவிக்ரமன், தாடாளன், த்ரிவிக்ரம நாராயணன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  லோகநாயகி, மட்டவிழ் குழலி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1178-87
எண்: 29
திவ்யதேசப்பெயர்:  திருஅரிமேய விண்ணகரம்
ஊர்:  திருநாங்கூர்
பெருமாள்:  குடமாடு கூத்தன், கோபாலன்
இருந்த திருக்கோலம்
தாயார்:  அமிர்தகடவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1238-1247
எண்: 30
திவ்யதேசப்பெயர்:  திருவண் புருடோத்தமம்
ஊர்:  திருநாங்கூர்
பெருமாள்:  புருஷோத்தமன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  புருஷோத்தம நாயகி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1258-67
எண்: 31
திவ்யதேசப்பெயர்:  திருசெம்பொன்செய் கோவில்
ஊர்:  திருநாங்கூர்
பெருமாள்:  பேரருளாளன், ஹேமரங்கர், செம்பொன்னரங்கர்
நின்ற திருக்கோலம்
தாயார்:  அல்லிமாமலர்  நாச்சியார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1268-77
எண்: 32
திவ்யதேசப்பெயர்:  திருமணிமாடக் கோவில்
ஊர்:  திருநாங்கூர்
பெருமாள்:  நாராயணன், அளத்தற்கரியான்
இருந்த திருக்கோலம்
தாயார்:  புணடரீகவல்லித் தாயார்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 12 1218-27, 1850, 2674
எண்: 33
திவ்யதேசப்பெயர்:  திருவைகுந்த விண்ணகரம்
ஊர்:  திருநாங்கூர்
பெருமாள்:  வைகுந்தநாதன், தாமரைக்கண்ணுடைய பிரான்
இருந்த திருக்கோலம்
தாயார்:  வைகுந்தவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1228-37
எண்: 34
திவ்யதேசப்பெயர்:  திருவாலி - திருநகரி
ஊர்:  திருவாலி, திருநகரி
திருவாலி
பெருமாள்:  லக்ஷ்மி நரசிம்மன், வயலாளி மணவாளன், 
திருவாலி நகராளன
இருந்த திருக்கோலம்
தாயார்:  அமிர்தகடவல்லி
 திருநகரி
பெருமாள்:  வேதராஜன், வயலாளி மணவாளன், 
கல்யாண ரங்கநாதன்
இருந்த திருக்கோலம்
தாயார்:  அமிர்தவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
குலசேகராழ்வார் 1 725
திருமங்கையாழ்வார் 41 1078, 1188-1217, 1329
1519, 1733, 1735, 1850
2014, 2027, 2063, 2673
2674
மொத்தம் 42
எண்: 35
திவ்யதேசப்பெயர்:  திருத்தேவனார் தொகை
ஊர்:  கீழச்சாலை
பெருமாள்:  தெய்வநாயகன், மாதவப் பெருமாள்
நின்ற திருக்கோலம்
தாயார்:  கடல்மகள் நாச்சியார், மாதவ நாயகி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1248-57
எண்: 36
திவ்யதேசப்பெயர்:  திருத்தெற்றியம்பலம்
ஊர்:  திருநாங்கூர்
பெருமாள்:  செங்கண்மால், ரங்கநாதன், ஸ்ரீலக்ஷ்மிரங்கர்
கிடந்த திருக்கோலம் (புஜங்கசயனம்)
தாயார்:  செங்கமலவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1278-87
எண்: 37
திவ்யதேசப்பெயர்:  திருமணிக்கூடம்
ஊர்:  திருநாங்கூர்
பெருமாள்:  வரதராஜப் பெருமாள், மணிக்கூட நாயகன்
நின்ற திருக்கோலம்
தாயார்:  திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1288-97
எண்: 38
திவ்யதேசப்பெயர்:  திருவெள்ளக்குளம்
ஊர்:  அண்ணன் கோவில்
பெருமாள்:  ஸ்ரீனிவாசன், கண்ணன், நாராயணன்,
 அண்ணன் பெருமாள்
நின்ற திருக்கோலம்
தாயார்:  அலர்மேல்மங்கை, பத்மாவதி, பூவார் திருமகள்
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1308-17
எண்: 39
திவ்யதேசப்பெயர்:  திரு பார்த்தன்பள்ளி
ஊர்:  திருநாங்கூர்
பெருமாள்:  தாமரையாள் கேள்வன், பார்த்தசாரதி
நின்ற திருக்கோலம்
தாயார்:  தாமரைநாயகி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
திருமங்கையாழ்வார் 10 1318-27
எண்: 40
திவ்யதேசப்பெயர்:  திருச்சித்ரகூடம்
ஊர்:  சிதம்பரம்
பெருமாள்:  கோவிந்தராஜன், தேவாதி தேவன், பார்த்தசாரதி
கிடந்த திருக்கோலம் (யோக சயனம்)
தாயார்:  புண்டரீகவல்லி
மங்களாசாஸனம்
ஆழ்வார் பாடல்கள் வரிசை எண்
குலசேகராழ்வார் 11 741-51
திருமங்கையாழ்வார் 21 1158-77, 2674
மொத்தம் 32

Thursday, January 16, 2014

7. 108 திருப்பதிகள்


திருமால் நம் மீது கருணை கொண்டு அர்ச்சாவதாரமாக விக்கிரகங்களின் வடிவில் கோவில்களில் காட்சி அளிக்கிறார் என்பதை மஹாவிஷ்ணுவின் ஐந்து நிலைகள் என்ற பகுதியில் பார்த்தோம். ஆயிரம் நாமம் கொண்ட திருமாலுக்கு ஆயிரக்கணக்கான கோவில்கள் நம் நாட்டிலும் வேறு பல நாடுகளிலும் உள்ளன. இவற்றில் 108 கோவில்கள் மட்டும் சிறப்பான வைணவத் திருத்தலங்களாகக் கருதப்பட்டு அவை 108 திருப்பதிகள் என்றும் திவ்ய தேசங்கள் என்றும் அழைக்கப் படுகின்றன.

இந்த 108 தலங்களும் சிறப்பானவையாகக் கருதப் படுவதற்குக் காரணம் இவை ஆழ்வார்களால் பாடப்பட்டவை என்பதுதான். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டவை என்று வைணவ 'மொழியில்' குறிப்பிடுவது வழக்கம்.

மங்களாசாசனம் என்பது இறைவனை வாழ்த்திப் பாடுவது. பதினோரு ஆழ்வார்கள் பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று அங்கே குடிகொண்டிருக்கும் பெருமாளின் திருமேனி அழகிலும் அவருடைய பெருமைகளிலும் ஈடுபட்டு அவரை வாழ்த்தியும் அவரது பெருமைகளை விவரித்தும் பாசுரங்கள் எழுதியிருக்கிறார்கள். முன்பே குறிப்பிட்டதுபோல மதுரகவி ஆழ்வார் மட்டும் எந்தக் கோவிலையும் பாடவில்லை. அவர் பாடியது நம்மாழ்வாரை மட்டும்தான். மற்ற ஆழ்வார்கள் ஒவ்வொருவரும் எத்தனை பாடல்கள் பாடியிருக்கிறார்கள் என்பதையும் ஆழ்வார்களைப் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட கோவில்களைப் பட்டியலிட்டு அவை மொத்தம் நூற்றெட்டு என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தப் பணியைச் செய்தவர் பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்என்ற வைணவ ஆச்சார்யர். நாலாயிரம் பாசுரங்களுக்கு பெரியவாச்சான் பிள்ளை என்ற ஆச்சார்யர் வியாக்கியானம் எழுதியிருக்கிறார். இந்த வியாக்கியானங்களின் அடிப்படையில்தான் பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திருப்பதிகளைப் பட்டியலிட்டிருக்கிறார். திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் இந்தத் திருப்பதி ஒவ்வொன்றின் சிறப்பைப் பற்றியும் ஒரு செய்யுள் இயற்றி 108 திருப்பதி அந்தாதி என்ற ஒரு நூலையும் இயற்றியிருக்கிறார் பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்.

இந்த நூற்றி எட்டு  திருப்பதிகளில், வைகுண்டம், திருப்பாற்கடல் ஆகிய இரண்டும் இப்பூவுலகில் இல்லை. பூவுலகில் வாழும்போது திருமாலிடம் பக்தி செலுத்தி முக்தி அடைந்தவர்களால்தான் இந்த இரண்டு தலங்களையும் பார்க்க முடியும்!

108 திருப்பதிகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை என்றால் ஆயிரக்கணக்கான மற்ற கோவில்கள் சிறப்பு வாய்ந்தவை இல்லையா என்ற கேள்வி எழும்.

எல்லாக் கோவில்களும் சிறப்புள்ளவைதான். கடவுள் குடியிருக்கும் இடத்தில், ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று யாரும் கூற முடியாது. நம்மில் பலருக்கும் நாம் பிறந்த ஊரில் உள்ள கோவில் சிறப்பானதுதான். எனினும் ஆழ்வார்களால் பாடப்பட்டதால் பூவுலகில் உள்ள கோவில்களில் இந்த 106 கோவில்கள் சிறப்புப் பெறுகின்றன.

108 திருப்பதிகளின் பட்டியலை அடுத்த சில பதிவுகளில் காணலாம். இவை ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக வேறு பதிவுகளில் பின்னே பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆழ்வாரும் மங்களாசாஸனம் செய்த திவ்யதேசங்களின் பட்டியல்
108 திருப்பதிகளின் புகைப்படங்கள் அடங்கிய வீ டியோ
108 திருப்பதிகளின் பெருமை இனிமையானஇசையில் - 1 
108 திருப்பதிகளின் பெருமை இனிமையானஇசையில் - 2 


































































































































Sunday, December 15, 2013

6. முதலாழ்வார்கள்


இந்தப் பதிவுக்கு 'வழி காட்டும் வைணவம்' என்று பெயர் வைத்ததற்குக் காரணம் வைணவம் ஒரு மதம் என்ற அடிப்படையில் இறைவனை அடைய வழி காட்டுகிறது என்பது மட்டும் அல்ல. வைணவத்தை போதித்த, பின்பற்றிய ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் போன்றோர் தங்கள் சிந்தனைகள், எழுத்துக்கள் மற்றும் செயல்கள் மூலம் நடைமுறை வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கக்கூடிய சில சிறப்பான வழிகளைக் காட்டியிருக்கிறார்கள் என்பதும்தான். இதற்கு ஒரு உதாரணம்தான் இப்போது நாம் பார்க்கப் போகும் ஒரு நிகழ்வு.

திருக்கோவலூர் என்று ஒரு தலம் விழுப்புரத்துக்கு அருகில் உள்ளது. இது நூற்றியெட்டு திருப்பதிகளில் ஒன்று. இவ்வூரில் நடந்த ஒரு சுவையான சம்பவம் இது.

மழை பெய்து கொண்டிருக்கிறது. மழையில் தெருவில் நடந்து வந்த ஒருவர் மழைக்கு ஒதுங்க இடம் தேடி ஒரு வீட்டின் ரேழியில் ஒதுங்குகிறார். (பழைய வீடுகளின் முகப்பில் திண்ணை என்ற மேடை இருக்கும். திண்ணைக்குப் பின்னே ரேழி என்று ஒரு இருட்டுப் பகுதி இருக்கும். ரேழியைத் தாண்டியபின் தான் வீட்டின் கூடம் வரும். இப்போதும் கிராமங்களில் இந்த அமைப்பு கொண்ட வீடுகள் நிறையவே இருக்கின்றன. பல வீடுகளில் வாயிற்கதவு திறந்தே இருக்கும். வீட்டின் புழங்கும் பகுதி கூடத்தில் இருந்துதான் துவங்குவதால் ரேழி வரை எவரும் வரலாம்.  வீட்டில் இருப்பவர்களின் அந்தரங்கம் (privacy) ரேழியைத் தாண்டித்தான் துவங்கும். எனவே மழை பெய்தால் தெருவில் நடப்பவர்கள் ஏதாவது ஒரு வீட்டின் ரேழியில் வந்து நின்று விட்டு மழை நின்றவுடன் வெளியேறும்  பழக்கம் உண்டு.)

ரேழியில் நுழைந்தவர் அங்கிருந்த குறுகிய திண்ணையில் படுத்துக் கொள்கிறார்.

சற்று நேரம் கழித்து மழைக்கு ஒதுங்க மற்றொருவர் அங்கே வருகிறார். ஏற்கெனவே ஒருவர் படுத்திருப்பதைப் பார்த்து, 'இடம் இருக்கிறதா?' என்று வினவுகிறார்.

படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு, 'ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம்' என்று சொல்லி, புதிதாக வந்தவருக்குத் தம் பக்கத்தில் உட்கார இடம் அளிக்கிறார். சற்று நேரத்தில் மூன்றாவதாக ஒருவர் மழைக்கு ஒதுங்க அங்கே வருகிறார். ஏற்கெனவே இருவர் நெருக்கமாக அமர்ந்திருப்பதைப் பார்த்துத் தமக்கு அங்கே இடம் இருக்குமா என்று தயங்கி நிற்கிறார். அப்போது உட்கார்ந்திருந்த இருவரும் எழுந்து நிற்கின்றனர். முதலில் வந்தவர், 'ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். மூவர் நிற்கலாம்' என்கிறார். மூவரும் நின்று கொள்கின்றனர்.

மூவருக்கும் நெருங்கி நிற்கத்தான் அங்கே இடம் இருக்கிறது. அப்போது திடீரென்று அந்த மூவருக்கும் தங்களை யாரோ நெருக்குவதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. நான்காவதாக ஒருவர் அங்கே வந்திருப்பதை மூவரும் உணர்கிறார்கள். ஆனால் அவர் உருவம் அவர்களுக்குப் புலப்படவில்லை. வானம் கருத்திருப்பதால் அந்த இடம் இருட்டாக இருக்கிறது.

அப்போது ஒரு மின்னல் வீசுகிறது. மின்னல் வீசிய அந்த ஒரு கணத்தில் நான்காவதாக வந்தவரின் முகத்தை மூவரும் பார்க்கிறார்கள். நான்காவதாக அங்கே வந்திருப்பவர் பகவான் விஷ்ணுதான்!

மீண்டும் பகவானின் திருமுகத்தைப் பார்க்க வேண்டுமே! ஆனால் மின்னல் அடித்தால்தான் பார்க்க முடியும். மின்னல் எப்போது அடிக்குமோ?

ஒரு விளக்கு இருந்தால் திருமாலின் முகத்தை மீண்டும் காணலாமே என்று நினைக்கிறார் முதலில் வந்தவர். விளக்கு ஏற்ற அகல், எண்ணெய், திரி, நெருப்பு  எல்லாம் வேண்டுமே! அவற்றுக்கு எங்கே போவது? எனவே தனது ஞானத்தால், தானே ஒரு விளக்கை உருவாக்குகிறார் அவர்.

அவர்தான் முதலாழ்வார்களில் முதல்வரான பொய்கை ஆழ்வார். திருமாலின் மீது ஒரு பாசுரம் பாடி ஞான விளக்கை ஏற்றுகிறார்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடராழி நீங்குகவே என்று.

இதன் பொருள்:
இவ்வுலகத்தையே அகலாக்கி, அலை வீசும் கடலையே நெய்யாக்கி, சூரியனையே திரிச் சுடராக்கி, கையில் சுடர் விடும்  சக்கரத்தை ஏந்தியிருக்கும் (அந்தச் சுடரின் முன் சூரிய ஒளி எம்மாத்திரம்!)  உனது திருவடியில் என் பாசுரத்தை சொல்மாலையாகச் சூடுகிறேன். துன்பக்கடலான இவ்வுலகிலிருந்து நான் மீள வேண்டும் (உன் திருவடி சேர வேண்டும்) என்று வேண்டி

விளக்கு தொடர்ந்து ஒளிவிட்டுக் கொண்டிருந்தால்தானே திருமாலின் தரிசனம் தொடர்ந்து கிடைக்கும்? எனவே முதல் பாடலைத் தொடர்ந்து அவர் மேலும் 99 பாசுரங்கள் பாடுகிறார். இவர் பாடிய நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி என்ற தொகுப்பாக அழைக்கப் படுகின்றன.

இவரைத் தொடர்ந்து இரண்டாவதாக வந்தவர்,

அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
இன்பு உருகு சிந்தை இடு திரியா - நன்பு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.

என்று தொடங்குகிறார். 

இதன் பொருள்:
அன்பையே அகலாக்கி, ஆர்வத்தையே நெய்யாக்கி, உன்னை நினைத்து இன்புற்று உருகும் என் மனத்தையே திரியாக்கி, ஞானச் சுடர் விளக்கு ஏற்றுகிறேன். என்னுடைய தமிழ் அறிவால் நாராயணனின் புகழ் பாடுகிறேன்.

இவரும் நூறு பாசுரங்கள் பாடுகிறார். இவர்தான் முதலாழ்வார்களில் இரண்டாமவரான பூதத்தழ்வார். இவர் பாடிய பாடல்கள் இரண்டாம் திருவந்தாதி என்ற பெயரில் வழங்கப்படுகின்றன.

மூன்றாவதாக வந்தவர் முதலாழ்வார்களில் மூன்றாமவரான பேயாழ்வார். இவர் பாடிய நூறு பாடல்கள் மூன்றாம் திருவந்தாதி என்று வழங்கப்படுகின்றன. இவர் பாடிய முதல் பாசுரம்.

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று

இதன் பொருளை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். பெருமாளின் திருக்கோலத்தை வர்ணித்துப் பாடப்பட்ட பாடல் இது.  முதலில் ஆழ்வாரின் கண்ணுக்குத் தெரிவது திருமாலின் திருமார்பில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மி. (திருமகளை முன்னிட்டே திருமாலை அணுக வேண்டும் என்று முன்பு நாம் பார்த்த வைணவக் கோட்பாட்டின் வெளிப்பாடுதான் இது.) திருமகளின் மேனி பொன் போன்று விளங்குகிறது. பிறகு திருமாலின் பொலிவுக்கு அழகு சேர்க்கும் அவரது கரிய நிறத்தைக் காண்கிறார். அதற்குப்பின் பெருமாளின் தோள்களை தரிசிக்கிறார். அங்கே அவர் பார்த்தது சங்கும் சக்கரமும். 'என் ஆழி வண்ணன்' என்று கடல் நிறம் கொண்டவர் எம்பெருமான் என்று சொல்லி முடிக்கிறார்.

முதல் ஆழ்வார்களைப் பற்றி விரிவாக பின்னொரு பகுதியில் எழுத எண்ணியுள்ளேன்.

இப்போது இந்தச் சம்பவத்தைச் சற்று நெருக்கமான கோணத்தில் பார்ப்போம். முதலாழ்வார் தனது வசதியைக் குறைத்துக்கொண்டு, படுத்துக்கொள்ள முடியாவிட்டால் என்ன, அதுதான் உட்கார இடம் இருக்கிறதே என்று எண்னி இரண்டாவதாக வந்தவருக்கு இடமளித்ததைப் பார்த்தோம். அதற்கும் மேலாக மூன்றாவதாக ஒருவர் வந்தபோது உட்கார்ந்திருந்த இருவரும் தங்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, இன்னொருவருக்கு இடமளிக்க வேண்டும் என்று எண்ணி எழுந்து நின்ற பரந்த மனப்பான்மையை என்னென்று சொல்வது!

இப்படிப்பட்ட உயர்ந்த எண்ணம் கொண்டவர்களிடையே இருக்க விரும்பி பகவானே நேரில் வந்து அவர்களது இட நெருக்கடியைத் தானும் பகிர்ந்து கொண்டதை பார்க்கும்போது, விட்டுக்கொடுத்தல், பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றின் தேவையையும், உயர்வையும், இன்றியமையாமையையும் நாம் உணர்ந்து கொள்ளலாம். நம்மிடம் இருப்பது எவ்வளவு குறைவாக இருந்தாலும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. மூன்று பேர்தான் நிற்க முடியும் என்று கருதப்பட்ட இடத்தில் நான்கு பேர் நின்றார்களே எப்படி? தேவை ஏற்பட்டால் எதுவும் சாத்தியம்!

'மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்'
என்ற கண்ணதாசனின் வரிகள் கூட இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

நம்மிடம் உள்ள எதையும், அது எவ்வளவு குறைவாக இருந்தாலும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அப்படிப் பகிர்ந்து கொள்பவர்களைத் தேடி இறைவன் வருவான். இந்தக் கருத்தை இந்தச் சம்பவத்தின் உட்பொருளாக எடுத்துக்கொண்டு, இதை வைணவத்தின் கோட்பாடுகளில் ஒன்று என்று கொள்ளலாமே!

Tuesday, December 3, 2013

5. ஆச்சாரியர்கள்


வைணவத்தில் ஆச்சாரியருக்குச் சிறப்பான இடம் உண்டு. ஆச்சாரியர் (ஆசான் அல்லது குரு) மூலமே ஆண்டவனை அடைய முடியும் என்பது வைணவக் கோட்பாடு. முதலில் ஆச்சாரியர் அப்புறம்தான் ஆண்டவன் என்று கூடச் சொல்லலாம்.

ஆச்சாரியரின் மகத்துவத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியவர் மதுரகவி ஆழ்வார். இதைப் பற்றி முந்தைய பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன். நம்மாழ்வாரை ஆச்சாரியராக ஏற்றுக் கொண்டவர் இவர். இவர் பாடிய கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற பதினோரு பாசுரங்களும் நம்மாழ்வாரைப் போற்றித்தான்.

இந்தப் பதிகத்தில் (பத்துப் பாடல்கள் கொண்ட தொகுப்பு பதிகம் என்று வழங்கப் படுகிறது) வரும் ஒரு பாசுரம் இது.

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்குஆள்
புக்ககாதல் அடிமைப் பயனன்றே.

இதன் பொருள்:

அறிஞர்களால் மற்றுமே உணரக் கூடிய வேதங்களை, அவற்றின் பொருள் அனைவருக்கும் விளங்கும்படி தமிழில் பாசுரங்களாகப் பாடி, என் மனதில் பதிய வைத்த சடகோபனுக்கு (நம்மாழ்வாருக்கு)ப் பணி செய்வதே என் வாழ்க்கைப் பயன்.

ஆழ்வார்களின் பாசுரங்களுக்குச் சிறப்பான உட்பொருள் உண்டு. 'பிறவிப் பயன்' என்று சொல்லாமல் 'அடிமைப் பயன்' என்று ஏன் சொல்கிறார்? விசிஷ்டாத்வைதத் தத்துவத்தின்படி பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவு எஜமானருக்கும் வேலைக்காரருக்கும் உள்ள உறவு. ஜீவாத்மா பரமாத்மாவுக்கு உரியது. பரமாத்மாவுக்குத் தொண்டு செய்வதே ஜீவாத்மாவின் கடமை. அதனால் அடிமைப் பயன் என்று குறிப்பிடுகிறார் ஆழ்வார். (இது எனது கருத்து. வேதங்களிலும் சாஸ்திரங்களிலும், ஆழ்வார்களின் பாசுரங்களிலும் தேர்ந்த ஞானம் பெற்ற அறிஞர்கள் இதற்கு வேறு சிறப்பான பொருளைக் கூறக்கூடும்.)

ஆச்சாரியர் என்பவர் யார்? வைணவர்கள் அனைவருக்கும் ஆச்சாரியர் விசிஷ்டாத்வைதத் தத்துவைத்தைப் போதித்த ராமானுஜர். அவருடைய ஆச்சாரியர்கள், அவருக்குப் பின் அவர் வழியில் செயல் பட்ட/பட்டு வரும் ஆச்சாரியர்கள் என்று வைணவ ஆச்சாரிய பரம்பரை, நிறுவனங்களின் நிர்வாக அமைப்பைப்போல் பல படிகள் கொண்ட அமைப்பு (hierarchy).

வைணவ ஆச்சாரிய பரம்பரையை விவரிக்கும் ஒரு பாசுரம் இது.

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கி
யான் அடைவேன் அவர் குருக்கள் நிறை வணங்கி
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுகத் திருமகள் என்று இவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.

முதலில் நமக்கு உயிர்கொடுத்த பெற்றோரைச் சரணடைய வேண்டும்
பிறகு நமது பெற்றோர்களின் ஆச்சாரியர்களை (குருக்களை) நம் குருவாக ஏற்று வணங்க வேண்டும். பிறகு இறைவனின் அருளால் நமக்குக் கிடைத்த ராமானுஜரையும், அவருடைய குருக்களான் பெரிய நம்பி, மணக்கால் நம்பி, உய்யக்கொண்டார், ஆளவந்தார் (நாதமுனி) ஆகியோரையும் வணங்க வேண்டும். பிறகு சடகோபன் என்கிற நம்மாழ்வார், சேனைநாதனான விஷ்வக்சேனர், எல்லா நலங்களையும்  அமுதமாக வழங்கும் திருமகள் இவர்களை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகளை வணங்க வேண்டும்.

இந்த ஆச்சாரியர்களின் பட்டியலில் இரண்டு முக்கியமான பெயர்கள் விட்டுப் போயிருப்பதை சிலர் கவனித்திருக்கக்கூடும். வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோரின் பெயர்கள் இதில் இல்லை. காரணம். இந்தப் பாசுரத்தை எழுதியவர் வேதாந்த தேசிகர்! மணவாள மாமுனிகள் இவருக்குப் பின்னால் தோன்றியவர்.



Tuesday, November 26, 2013

4. ஆழ்வார்கள்


வைணவத்தின் பெருமை பேசி, திருமாலின் பெருமை பாடிய முனிவர்கள்  வேத, உபநிஷத் காலத்திலிருந்தே உண்டு. வால்மீகி, பராசரர், வியாசர், சுகர் என்று பல முனிவர்கள் இதிகாசங்கள், புராணங்கள், காப்பியங்கள் மூலமாகத் திருமால் வழிபாட்டை வளர்த்திருக்கிறார்கள். ஆயினும், வைணவத்துக்குப் பெருமை சேர்த்ததில் ஆழ்வார்களின் பங்கு மிகச் சிறப்பானது.

திருமாலைப் போற்றி ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் திவ்யப் பிரபந்தம் என்று அழைக்கப் படுகின்றன. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரம் என்பதால் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்றும் இப்பாசுரங்கள் வழங்கப்படுகின்றன.

நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள் நான்கு வேதங்களின் சாரம் என்று ராமானுஜர் போன்ற ஆச்சாரியார்களால் ஆராய்ந்து சொல்லப்பட்டிருக்கிறது.

ஆழ்வார்கள் பன்னிருவர்.

 பெயர்
 வாழ்ந்த காலம்
 பாசுரங்கள்
 பொய்கையாழ்வார்
 கி.பி. 7ஆம் நூற்றாண்டு
 முதல் திருவந்தாதி (100 பாசுரங்கள்)
 பூதத்தாழ்வார்
  கி.பி. 7ஆம் நூற்றாண்டு
 இரண்டாம் திருவந்தாதி (100 பாசுரங்கள்)
 பேயாழ்வார்
  கி.பி. 7ஆம் நூற்றாண்டு
 மூன்றாம் திருவந்தாதி (100 பாசுரங்கள்)
 திருமழிசை ஆழ்வார்
  கி.பி. 7ஆம் நூற்றாண்டு
 நான்முகன் திருவந்தாதி (96 பாசுரங்கள்), திருச்சந்த விருத்தம்   (120 பாசுரங்கள்)
 திருமங்கை ஆழ்வார்
  கி.பி. 8ஆம் நூற்றாண்டு
 பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்), திருவெழுக்கூற்றிருக்கை (1 பாசுரம்), திருக்குறுந்தாண்டகம் (1084 பாசுரங்கள்), திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்)
சிறிய திருமடல்(40 பாசுரங்கள்), பெரிய திருமடல் (78 பாசுரங்கள்)
 தொண்டரடிப்பொடி ஆழ்வார்
  கி.பி. 8ஆம் நூற்றாண்டு
 திருமாலை (45 பாசுரங்கள்), திருப்பள்ளியெழுச்சி (10 பாசுரங்கள்)
திருப்பாண் ஆழ்வார்
  கி.பி. 8ஆம் நூற்றாண்டு
 அமலனாதி பிரான் (10 பாசுரங்கள்)
 குலசேகர ஆழ்வார்
  கி.பி. 8ஆம் நூற்றாண்டு
 பெருமாள் திருமொழி (105 பாசுரங்கள்)
  பெரியாழ்வார்
  கி.பி. 9ஆம் நூற்றாண்டு
பெரியாழ்வார் திருமொழி (473 பாசுரங்கள்)
 ஆண்டாள்
  கி.பி. 9ஆம் நூற்றாண்டு
 நாச்சியார் திருமொழி (143 பாசுரங்கள்), திருப்பாவை (30 பாசுரங்கள்)
 நம்மாழ்வார்
  கி.பி. 9ஆம் நூற்றாண்டு
 திருவாய் மொழி (1102 பாசுரங்கள்), திருவாசிரியம் (7 பாசுரங்கள்), திருவிருத்தம் (100 பாசுரங்கள்), 
பெரிய திருவந்தாதி (87 பாசுரங்கள்)
 மதுரகவி ஆழ்வார்
  கி.பி.9ஆம் நூற்றாண்டு
 கண்ணி நுண் சிறுத்தாம்பு (11 பாசுரங்கள்)


ஆழ்வார்களைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லலாம். சுருக்கமாகச் சில விவரங்களை மட்டும் இந்தப் பதிவில் குறிப்பிடுகிறேன்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரிசை ஆழ்வார்கள் வாழ்ந்த காலப்படியான வரிசை.  ஆழ்வார்களின் காலம் பற்றி வேறுபட்ட கருத்துக்கள் விளங்குகின்றன. குறிப்பாக நம்மாழ்வார் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது வைஷ்ணவ குரு பரம்பரை வரலாறு.

மொத்தமுள்ள நாலாயிரம் பாசுரங்களில் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய இருவர் மட்டுமே இரண்டாயிரம் பாசுரங்களுக்கு மேலாக எழுதியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கலாம்.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் முதலாழ்வார்கள் என்று அழைக்கபடுகின்றனர். இவர்கள் மூவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் சந்தித்தது பற்றிய ஒரு சுவாரசியமான கதையை இன்னொரு பதிவில் கூற விழைகிறேன்.

இந்த மூவரைத் தவிர, சம காலத்தில் வாழ்ந்த ஆழ்வார்கள்:
 பெரியாழ்வார்-ஆண்டாள்
 நம்மாழ்வார்- மதுரகவி ஆழ்வார். 

பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் ஆண்டாள். ஆண்டாள் திருமாலையே விரும்பி மணமுடித்த பெருமை பெற்றவர்.

பெரியாழ்வாரின் இயற்பெயர் விஷ்ணு சித்தர். இவர் பாண்டியன் அவையில் திருமாலே முழுமுதற் கடவுள் என்று வாதம் செய்து நிலை நாட்டி, பாண்டிய அரசனால் பொற்கிழி வழங்கப்பெற்று, யானை மீது ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது திருமால் கருடன் மீது வந்து பெரியாழ்வாருக்குக் காட்சி அளித்தார். பகவானின் அழகிய திருவுருவை அனைவரும் தரிசனம் செய்ததால் பகவானுக்குக் கண் திருஷ்டி ஏற்பட்டு விடப்போகிறதே என்று கவலைப்பட்டு பல்லாண்டு, பல்லாண்டு என்று பெருமாளையே வாழ்த்திப் பாடினார். (பொதுவாக நம்மை விடப் பெரியவர்கள்தான் நம்மை வாழ்த்த வேண்டும் என்பது மரபு.) பெருமாளையே வாழ்த்திப் பாடும் பேறு பெற்றதால் இவர் பெரியாழ்வர் என்று பெயர் பெற்றார்.

நம்மாழ்வார் காலத்தில் வாழ்ந்தவர் மதுரகவி ஆழ்வார். நம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர். இவர் வடநாட்டில் யாத்திரை செய்து கொண்டிருதபோது, தெற்குத் திசையில் ஒரு ஒளி தோன்றியதைக் கண்டு அந்த ஒளியின் திசையில் பயணித்து வந்து பாண்டிய நாட்டை அடைந்தார். அங்கே திருக்குருகூரில் (ஆழ்வார் திருநகரி) ஒரு புளிய மரத்தின் அடியில் யோகத்தில் அமர்ந்திருந்த 16 வயதுச் சிறுவனின் தலைக்குப் பின்புறம் அந்த ஒளி துவங்கியதைக் கண்டார். அந்தச் சிறுவன் தான் ஆழ்வார்களில் முதன்மையானவராகப் போற்றி வணங்கப்படும் நம்மாழ்வார்.

நம்மாழ்வாரின் பெருமையை உணர்ந்த மதுரகவி ஆழ்வார் அவருடைய சீடராக அவருடனேயே வாழ்ந்தார். இவர் எழுதிய கண்ணி நுண் சிறுத் தாம்பு என்ற பதினோரு பாடல்களும் நம்மாழ்வாரைப் பற்றித்தான்! திருமால் மீது பாசுரம் எழுதாத ஒரே ஆழ்வார் இவர்தான்!

நம்மாழ்வார்தான் தனக்குக் கடவுள் என்பதை, 'தேவு மற்றறியேன் குருகூர் நம்பி' என்ற இவரது வரிகள் விளக்குகின்றன.

ஆச்சாரியாரை (குரு) முன்னிட்டே ஆண்டவனை அணுக முடியும் என்ற வைணவக் கோட்பாட்டுக்கு ஒரு சிறப்பான உதாரணமாக விளங்கியவர் மதுரகவி ஆழ்வார்.

ஆழ்வார்களைப் பற்றி மேலும் பல சுவையான, பயனுள்ள விஷயங்களை பின்னால் வரும் பதிவுகளில் கூற விழைகிறேன்.