திருமால் நம் மீது கருணை கொண்டு அர்ச்சாவதாரமாக விக்கிரகங்களின் வடிவில் கோவில்களில் காட்சி அளிக்கிறார் என்பதை மஹாவிஷ்ணுவின் ஐந்து நிலைகள் என்ற பகுதியில் பார்த்தோம். ஆயிரம் நாமம் கொண்ட திருமாலுக்கு ஆயிரக்கணக்கான கோவில்கள் நம் நாட்டிலும் வேறு பல நாடுகளிலும் உள்ளன. இவற்றில் 108 கோவில்கள் மட்டும் சிறப்பான வைணவத் திருத்தலங்களாகக் கருதப்பட்டு அவை 108 திருப்பதிகள் என்றும் திவ்ய தேசங்கள் என்றும் அழைக்கப் படுகின்றன.
இந்த 108 தலங்களும் சிறப்பானவையாகக் கருதப் படுவதற்குக் காரணம் இவை ஆழ்வார்களால் பாடப்பட்டவை என்பதுதான். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டவை என்று வைணவ 'மொழியில்' குறிப்பிடுவது வழக்கம்.
மங்களாசாசனம் என்பது இறைவனை வாழ்த்திப் பாடுவது. பதினோரு ஆழ்வார்கள் பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று அங்கே குடிகொண்டிருக்கும் பெருமாளின் திருமேனி அழகிலும் அவருடைய பெருமைகளிலும் ஈடுபட்டு அவரை வாழ்த்தியும் அவரது பெருமைகளை விவரித்தும் பாசுரங்கள் எழுதியிருக்கிறார்கள். முன்பே குறிப்பிட்டதுபோல மதுரகவி ஆழ்வார் மட்டும் எந்தக் கோவிலையும் பாடவில்லை. அவர் பாடியது நம்மாழ்வாரை மட்டும்தான். மற்ற ஆழ்வார்கள் ஒவ்வொருவரும் எத்தனை பாடல்கள் பாடியிருக்கிறார்கள் என்பதையும் ஆழ்வார்களைப் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.
ஆழ்வார்களால் பாடப்பட்ட கோவில்களைப் பட்டியலிட்டு அவை மொத்தம் நூற்றெட்டு என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தப் பணியைச் செய்தவர் பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்என்ற வைணவ ஆச்சார்யர். நாலாயிரம் பாசுரங்களுக்கு பெரியவாச்சான் பிள்ளை என்ற ஆச்சார்யர் வியாக்கியானம் எழுதியிருக்கிறார். இந்த வியாக்கியானங்களின் அடிப்படையில்தான் பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திருப்பதிகளைப் பட்டியலிட்டிருக்கிறார். திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் இந்தத் திருப்பதி ஒவ்வொன்றின் சிறப்பைப் பற்றியும் ஒரு செய்யுள் இயற்றி 108 திருப்பதி அந்தாதி என்ற ஒரு நூலையும் இயற்றியிருக்கிறார் பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்.
இந்த நூற்றி எட்டு திருப்பதிகளில், வைகுண்டம், திருப்பாற்கடல் ஆகிய இரண்டும் இப்பூவுலகில் இல்லை. பூவுலகில் வாழும்போது திருமாலிடம் பக்தி செலுத்தி முக்தி அடைந்தவர்களால்தான் இந்த இரண்டு தலங்களையும் பார்க்க முடியும்!
108 திருப்பதிகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை என்றால் ஆயிரக்கணக்கான மற்ற கோவில்கள் சிறப்பு வாய்ந்தவை இல்லையா என்ற கேள்வி எழும்.
எல்லாக் கோவில்களும் சிறப்புள்ளவைதான். கடவுள் குடியிருக்கும் இடத்தில், ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று யாரும் கூற முடியாது. நம்மில் பலருக்கும் நாம் பிறந்த ஊரில் உள்ள கோவில் சிறப்பானதுதான். எனினும் ஆழ்வார்களால் பாடப்பட்டதால் பூவுலகில் உள்ள கோவில்களில் இந்த 106 கோவில்கள் சிறப்புப் பெறுகின்றன.
108 திருப்பதிகளின் பட்டியலை அடுத்த சில பதிவுகளில் காணலாம். இவை ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக வேறு பதிவுகளில் பின்னே பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆழ்வாரும் மங்களாசாஸனம் செய்த திவ்யதேசங்களின் பட்டியல்
108 திருப்பதிகளின் புகைப்படங்கள் அடங்கிய வீ டியோ
108 திருப்பதிகளின் பெருமை இனிமையானஇசையில் - 1
108 திருப்பதிகளின் பெருமை இனிமையானஇசையில் - 2
No comments:
Post a Comment