Thursday, August 4, 2016

24. திவ்ய தேச தரிசன அனுபவம் 4. திருவிண்ணகர் - ஒப்பிலியப்பன் கோயில் (16)

தரிசனம் செய்த நாள்: 21.06 2016
சோழ நாட்டுத் திருப்பதிகள் - 40
16. திருவிண்ணகர் (16)

கையு முரையுங் கருத்துமுனக் கேயடிமை
செய்யும் படிநீ திருத்தினாய் - ஐயா!
திருவிண்ணகராளா! சிந்தையிலு மெண்ணேன்
பெரு விண்ணகராளும் பேறு (16)
  - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி.'

ஒப்பிலி அப்பன் கோயில் எங்கள் குல தெய்வம். அதனால் இந்தக் கோயில் மீது எனக்குச் சற்று அதிகமான பற்று உண்டு.

இந்த முறை நான் இந்தத் தலத்துக்குச் சென்றது உறவினர் ஒருவரின் குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவுக்காக (ஆயுஷ் ஹோமம்). அன்று (21/06/16) ஸ்ரவணம் (திருவோணம்) என்பதால் இந்தக் கோவிலுக்கு ஒரு விஷேஷ தினம். ஸ்ரவண தீபம் (விளக்குகள் ஏற்றி வைத்தல்), அவ்வாறு தொடர்ந்து ஸ்ரவண தீபம் ஏற்றி வரும் ஒரு பெரியவர் அருள் வாக்குச் சொல்லுதல் ஆகிய  நிகழ்ச்சிகள் நடக்கும் நாள்.

கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திலும், நாச்சியார் கோயிலிலிருந்து (திருநறையூர்) சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திலும், திருநாகேஸ்வரத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது இத்தலம். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ்ஸில் வந்தால் கோயில் வாசலில் இறங்கிக்  கொள்ளலாம். டாக்சி, ஆட்டோக்களும் நிறைய உள்ளன. கட்டணமும் நிறைய வசூலிப்பார்கள்!

தாங்கும் வசதி, உணவு வசதி ஓரளவுக்கு இருக்கிறது. விசேஷ நாட்களில் அறைகள் கிடப்பது கடினமாக இருக்கலாம். கோவில் தெற்குப் பிரகாரத்தில் தேவஸ்தானத்தின் தங்கும் விடுதி இருக்கிறது.

கோயில் முன் விமானத்தைப் பார்த்தால் சிறிய கோயில் என்று தோன்றும். ஆனால் உள்ளே சந்நிதியில் ஒப்பிலியப்பன் ஓங்கி உயர்ந்து பிரும்மாண்டமாகக் காட்சி அளிக்கிறார்.

இந்தக் கோயில் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இந்தக் கோவில் தொடர்பாக மூன்று வரலாறுகள் சொல்லப்படுகின்றன. துளசி தான் பெருமாளுக்கு அருகில் இருக்க வேண்டும் என்று தவம் செய்ததால் இந்தத் திருத்தலத்தில் பெருமாள் எப்போதும் துளசி மாலை அணிந்து இருக்கிறார். பெருமாளின் திருமார்பில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மி, துளசியின் விருப்பப்படி, துளசியின் மடியில் உட்கார்ந்திருக்கிறார்!இந்த இடமே துளசிவனமாக இருந்ததுதான்.

மார்க்கண்டேய மகரிஷி செய்த தவத்தால் பூமாதேவி அவருக்கு மகளாகப் பிறந்தார். பெருமாள் வயோதிகராக வந்து அவளை மனம் செய்து கொள்ள விரும்ப, மார்க்கண்டேயர் தயங்கினர். "அவளுக்குச் சரியாக உப்புப் போடக்கூடத் தெரியாதே' என்று மார்க்கண்டேயர் சொல்ல, "நான் உப்பில்லாமலேயே சாப்பிடுகிறேன்" என்று பெருமாள் சொன்னார். அதனால் இந்தக் கோவில் பிரசாதங்கள் உப்பு இல்லாமலே சமைக்கப்படுகின்றன, உப்பில்லாத புளியோதரை, தேன்குழல், வடை ஆகியவற்றின் சுவை தனிதான்.

பங்குனி மாதம் சரவண (திருவோணம்) நட்சத்திரத்தில், மார்க்கண்டேயர், பெருமாளுக்கு பூமாதேவியை மனம் செய்து வைத்தார். பிறகு பெருமாள் மார்க்கண்டேயருக்குக் காட்சி கொடுத்தார். மார்க்கண்டேயர், பெருமாள் இங்கேயே தங்க வேண்டும் என்றும், தன் மகளை விட்டு ஒரு கணமும் நீங்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

 பெருமாள் இங்கேயே தங்கியதால் இந்த இடம் விண்ணகரம் என்று பெயர் பெற்றது. விண்ணகரம் என்பதற்கு விண்ணுலகத்து நகரம் என்றும், விஷ்ணு வசிக்கும் நகரம் என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டுமே வைகுண்டத்தைத்தான் குறிக்கின்றன. அதனால் இந்தத் திருத்தலம் 'பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படுகிறது. மார்க்கண்டேயருக்குக் கொடுத்த வாக்குக்கு இணங்க, வீதி உலா வரும்போதும் பெருமாள் தாயாருடனேயே வருவார்.

மூன்றாவது வரலாறு இந்தக் கோயிலின் திருக்குளம் பற்றியது.
கோயிலுக்குள் நுழைந்ததும் வலது புறம் அழகாகத் தோற்றமளிக்கும்  திருக்குளம். 'பகல்இராப் பொய்கை' என்று குளத்தின் சுவற்றில் பெரிதாக எழுதி வைத்திருப்பதைப்  பார்த்ததும் கொஞ்சம் வியப்பு ஏற்படும். அதென்ன பகல் இராப் பொய்கை (சம்ஸ்கிருதத்தில் அஹோராத்ர புஷ்கரணி)?

ஒரு முனிவரின் சாபம் பெற்ற ஒரு அரசன்  பறவையாக மாறி இந்தக்குளத்துக்கு அருகிலிருந்த ஒரு மரத்தில் இருந்து வந்தான். ஒருமுறை புயல்காற்றில் பறவை உட்கார்ந்திருந்த மரக்கிளை முறிந்து குளத்துக்குள் விழ, தண்ணீரில் மூழ்கி எழுந்த பறவை சாபம் நீங்கி அரசனாக மாறியது. அதனால் இந்தக் குளத்தில் இரவு பகல் எப்போது வேண்டுமானாலும் நீராடலாம் என்ற நியதி ஏற்பட்டது. (பொதுவாகக் கோயில் குளங்களில் பகலில் மட்டும்தான் நீராடலாம்,) அதுதான் பகல்இராப் பொய்கை.

குளத்திலிருந்து வீசும் குளிர்ந்த காற்றை அனுபவித்தபடி நிற்கும் கோயில் யானை. இடது புறத்தில் திருமணம், ஆயுஷ் ஹோமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வசதியாகப் பெரிய மண்டபம். இந்த மண்டபத்தில் அடிக்கடி உற்சவ மூர்த்தி எழுந்தருளிக் காட்சி அளிப்பது உண்டு.

பிறகு கருடர் சந்நிதி, வெளிப் பிரகாரம், உள் பிரகாரம். இவற்றைத்தாண்டி கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்தால் நமக்கு வலதுபுறமாக அழகான வேதாந்த தேசிகர் சந்நிதி. பெருமாளை சேவிக்கு முன் ஆச்சார்ய புருஷரின் ஆசியைப்  பெறுவது சிறப்பு அல்லவா?.

மூலவர் ஒப்பிலியப்பன், விண்ணகரப்பன், வெங்கடாசலபதி என்ற பெயர்களில் அழைக்கப் படுகிறார். இவர் திருப்பதிப்  பெருமாளுக்கு அண்ணன் என்றும் திருப்பதியில் நிறைவேற்ற வேண்டிய பிரார்த்தனைகளை இங்கே நிறைவேற்றலாம் என்பதும் ஐதீகம்.

தனக்கு ஒப்பு யாரும் இல்லை என்று காட்டுவது போல் கிழக்கு நோக்கி பிரும்மாண்டமாக சேவை சாதிக்கிறார் பெருமாள். அருள் பொங்கும் முகம்.  கீழ் நோக்கி வரத ஹஸ்த முத்திரை (வழங்கும் நிலை)யில் இருக்கும் வலது கரத்தில் 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' (என்னைச் சரணடைந்தால் போதும், உன்னை நான் பார்த்துக் கொள்வேன்) என்ற கீதை வாக்கியம் பொறிக்கப்பட்ட கவசம்.

ஒப்பிலியப்பனின் வலப்புறம் பூமாதேவியும் இடப்புறம் மார்க்கண்டேய முனிவரும், முறையே வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும்  மண்டி போட்ட நிலையில் அமர்ந்திருக்கிறார்கள்.

மார்க்கண்டேயர் என்றும் பதினாறு வயது உள்ளவராக வாழும் சிரஞ்சீவி. இவர் கர்ப்பக்கிரகத்தில் இருப்பதால், இந்தத் தலத்தில் ஆயுஷ் ஹோமம், (முதல் வயது நிறைவு விழா) மற்றும் சஷ்டியப்த பூர்த்தி (60ஆம் ஆண்டு விழா) ஆகியவற்றை நடத்துவது  சிறப்பு.

உற்சவருக்குப் பெயர் பொன்னப்பன். தினசரி நீராட்டல் போன்றவை செய்யப்படும் சிறிய உற்சவ மூர்த்தி முத்தப்பன் என்று அழைக்கப் படுகிறார்.

அர்ச்சகர்கள் ஒவ்வொருமுறை கற்பூர ஆரத்தி காட்டும்போதும் இந்த திவ்ய தேசத்தின் ஸ்தல புராணத்தையும், சிறப்புகளையும் சலிக்காமல் சொல்வதைப் பாராட்ட வேண்டும். பெருமாளுக்கு துளசி மாலைகள் சாத்துவது இங்கே சிறப்பு. பெருமாளுக்கு அருகில் இருக்க வேண்டும் என்ற துளசியின் வேண்டுகோளை ஏற்று இத்தலத்தில் எப்போதும் துளசி மாலைகளை அணிந்து காட்சி தருகிறார் பெருமாள்.

துளஸிப் பிரசாதம் பெற்றுக்கொண்டு சந்நிதிக்கு வெளியே வந்ததும், உட்பிரகாரத்தில் பிரதட்சிணமாகத் திரும்பினால் முதலில் 'மண்ணுடையார்' சந்நிதி. இவர் இந்தக் கோயிலைக் கட்ட நிலம் வழங்கியவர் என்று ஒரு அர்ச்சகர் சொன்னார். இவரைத் தாண்டியதும் வடக்கு நோக்கியபடி ஆஞ்சநேயர் சந்நிதி, எதிர்ப் பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கும் ராமர் சந்நிதியை நோக்கியபடி. ஆஞ்சநேயர் சந்நிதியைப் பிரதட்சணம் செய்து வந்தால் கோடி தீபம் ஏற்றும் இடம். பக்தர்கள் இங்கே விளக்குகளை ஏற்றி வைத்துப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

அதையும் தாண்டி வந்தால் அகலமான பிரகாரம். கிராமத்து வீடுகளில் திறந்தவெளி முற்றமும், மேலே கூறையால் மூடப்பட்ட தாழ்வாரமும் இருப்பது போல், பிரகாரம் இரண்டு பகுதியாக இருக்கிறது. பிரகாரத்தின்  சுவரில் முப்பது திருப்பாவைகளும் எழுதப்பட்டு அவற்றுக்கு விளக்கப்படங்களும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. தெற்குப் பிரகாரச் சுவரில் 12 ஆழ்வார்களின் ஓவியங்கள். ஒவ்வொரு ஆழ்வார் திருவுருவுக்கும் கீழே அவர் எழுதிய ஒரு பாசுரம் எழுத்தில் வடிக்கப்பட்டுள்ளது.

தெற்குப் பிரகாரத்தின் முடிவில் லக்ஷ்மணர், சீதையுடனான ராமர் சந்நிதி. அதற்குப் பக்கத்தில் (மேற்கு நோக்கி) கண்ணாடி அறை. (இதற்கு எதிர்ப்புறமாக, தெற்குப் பிரகாரத்தின் துவக்கத்தில் மற்றோரு கண்ணாடி அறை)  ஏறாமற் சந்நிதியை அடுத்துப் பிரகாரத்தின் மேற்குப் புறத்தில் யாகசாலை, ராமானுஜர் சந்நிதி என்று உட்பிரகாரம் முடிகிறது.

வெளிப்பிரகாரம் மிகப் பரந்தது. உட்சுவரை ஒட்டிய பகுதியில் 108 திருப்பதிகளின் பெயர்களும், படங்களும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. வடக்குப் பிரகாரத்தின் முடிவில் யானைக் கொட்டாரம். அதற்குப் பக்கத்தில் மணியப்பன் சந்நிதி..

வெளிப்பிரகாரத்தின் மேற்குப்பகுதியில் (கோயிலின் பின்புறம்)
கோசாலையில் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. வடக்குப் பகுதியில் நந்தவனம். சற்று உள்ளே தள்ளினாற்போல் என்னப்பன் சந்நிதி. அவசரமாக வந்து விட்டுப் போகிறவர்கள், டூரிஸ்ட் பஸ்களில் வருபவர்கள் ஆகியோர் வெளிப்பிரகாரத்தைப் பார்க்காமலே போய் விடக்கூடிய வாய்ப்பு உள்ளது.

வெளிப்பிரகாரத்தில் உள்ள மணியப்பன், என்னப்பன் ஆகியோரையும் நம்மாழ்வார் பாடியிருக்கிறார். எனவே இந்த சந்நிதிகளையும் சேவிப்பது அவசியம். டூரிஸ்ட் பஸ்களில் வருபவர்கள் சற்று நேரம் கேட்டு இந்த இரண்டு சந்நிதிகளையும் சேவித்து விட்டுப் போகலாம்.

வெளிப்பிரகாரத்தைச்  சுற்றிவிட்டு வந்தால் பகல்இராப்  பொய்கையின் கரைக்கு வரலாம். இந்தக் குளக்கரையில் இருக்கும் துளசி மட த்தை வணங்கி விட்டு வலம் வருதலை முடித்துக்கொள்ளலாம்.

சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் நாயக்க மன்னர்களாலும் போற்றிப் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.இன்று தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த திவ்ய தேசம்பே யாழ்வார் (2 பாசுரங்கள்),  நம்மாழ்வார் (11 பாசுரங்கள்) மற்றும் திருமங்கை ஆழ்வார் (34) பாசுரங்கள்) ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.  பாசுரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
பேயாழ்வார் 
மூன்றாம் திருவந்தாதி--
2341 பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகை
இளங் குமரன் தன் விண்ணகர் 61
 
2342 விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு 62
   
நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி
தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)
3356 நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமும் ஆய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமும் ஆய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே             (1)
   
3357 கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமும் ஆய்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலும் ஆய்
கண்டுகோடற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் ஊர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே             (2)
   
3358 நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமும் ஆய்
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே            (3)
   
3359 புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்
எண்ணம் ஆய் மறப்பு ஆய் உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
கண்ணன் இன் அருளே கண்டுகொள்மின்கள் கைதவமே?             (4)
   
3360 கைதவம் செம்மை கருமை வெளுமையும் ஆய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையும் ஆய்
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெரும் தேவு உடை மூவுலகே             (5)
   
3361 மூவுலகங்களும் ஆய் அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய்
பூவில் வாழ் மகள் ஆய் தவ்வை ஆய் புகழ் ஆய் பழி ஆய்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே             (6)
   
3362 பரம் சுடர் உடம்பு ஆய் அழுக்குப் பதித்த உடம்பு ஆய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே            (7)
   
3363 வன் சரண் சுரர்க்கு ஆய் அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்
தன் சரண் நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே            (8)
   
3364 என் அப்பன் எனக்கு ஆய் இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்
மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே             (9)
   
3365 நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையும் ஆய்
சுழல்வன நிற்பன மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்மின்களே            (10)
   
3366 காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாள் இணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே             (11)

    இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திருவிண்ணகர்:1
1447 வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு
பண்டை நம் வினை கெட என்று அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு
அண்டமொடு அகல்-இடம் அளந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (1)
 
1448 அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள்
கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே
விண்ணவர் அமுது உண அமுதில் வரும்
பெண் அமுது உண்ட எம் பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (2)
 
1449 குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட
தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு
அழல் நிற அம்பு-அதுஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (3)
 
1450 நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்
உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால்
கலை தரு குழவியின் உருவினை ஆய்
அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (4)
 
1451 பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்
சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு
ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (5)
 
1452 கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்
ஏர் கெழும் உலகமும் ஆகி முத
லார்களும் அறிவு-அரும் நிலையினை ஆய்
சீர் கெழு நான்மறை ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (6)
 
1453 உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்
இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்
இருக்கினில் இன் இசை ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (7)
 
1454 காதல் செய்து இளையவர் கலவி தரும்
வேதனை வினை அது வெருவுதல் ஆம்
ஆதலின் உனது அடி அணுகுவன் நான்
போது அலர் நெடுமுடிப் புண்ணியனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (8)
 
1455 சாதலும் பிறத்தலும் என்று இவற்றைக்
காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறை ஆகி உம்பர்
ஆதல் செய் மூவுரு ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே             (9)
 
1456 பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
காமரு சீர்க் கலிகன்றி சொன்ன
பா மரு தமிழ்-இவை பாட வல்லார்
வாமனன் அடி-இணை மருவுவரே             (10)
 
1457 பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன்கள் கடன் ஆயின வாயில் ஒட்டி
அறுத்தேன் ஆர்வச் செற்றம் அவை-தம்மை மனத்து அகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே             (1)
 
1458 மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி இல் மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பைக் குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா
சிறந்தேன் நின் அடிக்கே-திருவிண்ணகர் மேயவனே             (2
 
1459 மான் ஏய் நோக்கியர்-தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊன் ஏய் ஆக்கை-தன்னை உதவாமை உணர்ந்து உணர்ந்து-
வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே!-நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே             (3)
 
1460 பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவாது
அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து
செறிந்தேன் நின் அடிக்கே-திருவிண்ணகர் மேயவனே             (4)
 
1461 பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனைவாழ்க்கை-தன்னை
வேண்டேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே             (5)
 
1462 கல்லா ஐம்புலன்கள்-அவை கண்டவாறு செய்யகில்லேன்
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல் அடர்த்த
மல்லா மல்லல் அம் சீர் மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே             (6)
 
1463 வேறா யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய்
ஆறா வெம் நரகத்து அடியேனை இடக் கருதி
கூற ஐவர் வந்து குமைக்கக் குடிவிட்டவரைத்
தேறாது உன் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே             (7)
 
1464 தீ வாய் வல் வினையார் உடன் நின்று சிறந்தவர்போல்
மேவா வெம் நரகத்து இட உற்று விரைந்து வந்தார்
மூவா வானவர்-தம் முதல்வா மதி கோள் விடுத்த
தேவா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே             (8)
 
1465 போது ஆர் தாமரையாள் புலவி குல வானவர்-தம்
கோதா கோது இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர்போல் என் மனத்து இருந்த
வேதா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே             (9)
 
1466 தேன் ஆர் பூம் புறவில் திருவிண்ணகர் மேயவனை
வான் ஆரும் மதிள் சூழ் வயல் மங்கையர்-கோன் மருவார்
ஊன் ஆர் வேல் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார்
கோன் ஆய் வானவர்-தம் கொடி மா நகர் கூடுவரே             (10)
 1467 துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின் உருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யான் உலகில்
பிறப்பேன் ஆக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆதன்மையால்-திருவிண்ணகரானே             (1)
 
1468 துறந்தேன் ஆர்வச் செற்றச் சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே
அறம்-தான் ஆய்த் திரிவாய் உன்னை என் மனத்து அகத்தே
திறம்பாமல் கொண்டேன்-திருவிண்ணகரானே             (2)
 
1469 மான் ஏய் நோக்கு நல்லார் மதிபோல் முகத்து உலவும்
ஊன் ஏய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்-
கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திருவிண்ணகரானே             (3)
 
1470 சாந்து ஏந்து மென் முலையார் தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே உன்னை எய்தி என் தீவினைகள்
தீர்ந்தேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகரானே             (4)
 
1471 மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை-எம் பெருமான்
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனைச்
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே             (5)
 
1472 மை ஒண் கருங் கடலும் நிலனும் மணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவை ஆய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்று ஓர்
தெய்வம் பிறிது அறியேன்-திருவிண்ணகரானே             (6)
 
1473 வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கும்
ஆறே நீ பணியாது அடை நின் திருமனத்து
கூறேன் நெஞ்சு-தன்னால் குணம் கொண்டு மற்று ஓர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால்-திருவிண்ணகரானே             (7)
 
1474 முளிந்தீந்த வெம் கடத்து மூரிப் பெருங் களிற்றால்
விளிந்தீந்த மா மரம்போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்து ஓர்ந்த சிந்தை நின்பால் அடியேற்கு வான்-உலகம்
தெளிந்தே என்று எய்துவது? திருவிண்ணகரானே             (8)
 
1475 சொல்லாய் திரு மார்வா உனக்கு ஆகித் தொண்டு பட்ட
நல்லேனை வினைகள் நலியாமை நம்பு-நம்பீ
மல்லா குடம் ஆடீ மதுசூதனே உலகில்
செல்லா நல் இசையாய் திருவிண்ணகரானே             (9)
 
1476 தார் ஆர் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
சீர் ஆர் நெடு மறுகின் திருவிண்ணகரானைக்
கார் ஆர் புயல் தடக் கைக் கலியன் ஒலி மாலை
ஆர் ஆர் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே             (10)

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
பதினென் திருப்பதிகள்
 
1854 பத்தர் ஆவியை பால் மதியை அணித்
தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர்க் காண்டுமே            (8)

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திரு நெடுந்தாண்டகம்

2079 அன்று ஆயர் குலமகளுக்கு அரையன்-தன்னை
      அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான்-தன்னை
குன்றாத வலி அரக்கர் கோனை மாள
      கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து
வென்றானை குன்று எடுத்த தோளினானை
      விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை தண் குடந்தைக் கிடந்த மாலை
      நெடியானை-அடி நாயேன் நினைந்திட்டேனே             (29)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
சிறிய திருமடல்
2672 கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்    (1)
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று    (2)
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்    (3)
வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை    (4)
வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே    (5)
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து    (6)
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித்    (7)
தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும்    (8)
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு    (9)
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்   (10)
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்   (11)
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்   (12)
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த   (13)
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு   (14)
ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்   (15)
நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு (16)
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் (17)
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து (18)
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை (19)
சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் (20)
பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் (21)
தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு (22)
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23)
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக் (24)
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் (25)
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் (26)
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன் (27)
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் (28)
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு (29)
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் (30)
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் (31)
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் (32)
பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு (33)
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை (34)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் (35)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர் (36)
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (37)
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல் (38)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய மடல்
2673 மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை      (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை      (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்      (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத்      (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான்      (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்      (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்      (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்      (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள்
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்      (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க   (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்     (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்     (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த     (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்     (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில்     (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்     (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம்     (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்     (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு     (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே     (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்     (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம்             (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வௌ¢ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வௌ¢ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80)
ஓம் நமோ நாராயணாய! 
 








Friday, July 29, 2016

23. திவ்யதேச தரிசன அனுபவம் - 3. திருவல்லிக்கேணி (94)

தரிசனம் செய்த நாள்: ஜூன்  2016
தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
21. திருவல்லிக்கேணி (94)

திரிந்துழலும் சிந்தைதனைச் செவ்வே நிறுத்திப்
புரிந்து பகனமின் புகன்றால்  மருந்தாம்
கருவல்லி கேணியா மாக்கத்துக்குக்  கண்ணன்
திருவல்லிகேணியான் சீர்  (94)
        - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி'  

சென்னையில் பல வருடங்கள் வசிப்பதால் திருவல்லிக்கேணி திருத்தலத்துக்குப் பல முறைகள் சென்று வந்திருந்தாலும், திவ்ய தேச தரிசனம் என்ற முயற்சியின் கீழ் இம்முறை சென்றதால் பல விஷயங்களை சற்று நுணுக்கமாகவே கவனிக்க முடிந்தது.

சென்னை மெரினா கடற்கரை அருகே அமைந்திருக்கும் இக்கோயில் பஸ் மற்றும் MRTS ரயில் (கடற்கரை-வேளச்சேரி மார்க்கம்) மூலம் எளிதில்  செல்லக்கூடிய இடம். பஸ்  நிறுத்தத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டரும், ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டரும் நடக்க வேண்டும். நடக்க இயலாதவர்கள் ஆட்டோவைப் பயன்படுத்தலாம். அல்லது கிளம்பும் இடத்திலிருந்தே டாக்சியைப் பயன்படுத்தலாம்.

குறுகிய சந்துகள் நிறைந்த திருவல்லிக்கேணியின் மையப்பகுதியில் பரந்த இடத்தில் கம்பீரமாக அமைந்திருக்கிறது கோவில். கோவிலைச் சுற்றி நாலு பக்கமும்  உள்ள தெருக்களும் விஸ்தாரமாகவே அமைந்திருக்கின்றன. 

கிழக்கு வாசல் அருகே பார்த்தசாரதி சந்நிதிக்கு நேர் எதிரே ஒரு த்விஜ ஸ்தம்பமும், மேற்கு வாசல் அருகே அழகியசிங்கர் சந்நிதிக்கு எதிரே மற்றொரு   த்விஜஸ்தம்பமும் அமைந்திருக்கின்றன. 

மேற்கு வாசலுக்கு வெளியே உள்ள தெரு துளசிங்கப் பெருமாள் கோயில் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

கோவில் மிகப் பெரியது இல்லை. ஆனால் விஸ்தாரமாகப் பல சந்நிதிகளைக்கொண்டும், சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட பல தூண்களைக் கொண்டும் அமைந்திருக்கிறது. கோவில் கோபுரம் ஆனந்த, பிரணவ, புஷ்பக, சேஷ மற்றும் தைவாகி என்ற ஐந்து நிலைகளைக் கொண்டது. அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட கோபுரத்தில் ஏழு கலசங்கள் உள்ளன.

கோயிலில் நுழைந்ததும் பிராகாரத்தில் நமக்கு இடப்பக்கமாகப் போய் முதலில் தாயார் சந்நிதிக்குச் சென்று வேதவல்லித்தாயாரை தரிசிக்க வேண்டும். தாயார் சந்நிதிக்குச்  சற்றே பின்புறமாக கஜேந்திர வரதர் சந்நிதி. நான் சென்ற தினம் (28/07/16) கோவில் சம்போக்ஷணத்துக்காகப் புணரைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் கஜேந்திர வரதர் மற்றும் யோக நரசிம்மர் (அழகிய சிங்கர்) சந்நிதிகள் மூடப்பட்டிருந்தன. உற்சவர்கள் மட்டும் வேறு இடங்களில் கண்ணாடி அறைகளில் சேவை சாதித்துக் கொண்டிருந்தார்கள்.

கஜேந்திர வரதர் சந்நிதியைத்தாண்டி வந்தால் கிழக்கு நோக்கியபடி திருமழிசை ஆழ்வார் சந்நிதி. இந்தச் சந்நிதியும் கோவில் திருப்பணி வேலைகள் காரணமாக மூடப்பட்டிருந்தது. மேற்கு வாசலுக்கு நேரே அழகிய சிங்கர் சந்நிதி.  அதைத்தாண்டி வந்தால் வடக்குப் பிரகாரத்தில் ஆண்டாள் சந்நிதி. பிரகாரத்தின் மத்தியில் திறந்த வெளியில்  உயர்ந்த மேடையில் கிருஷ்ணரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

பிரகாரத்தின் உட்சுவரை ஓட்டி ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல் பெருமாளின் பாதுகைகள் சேவை சாதிக்கின்றன. பிரகாரத்தின் இறுதியில் ஆளவந்தார் சந்நிதி.

பார்த்தசாரதிப்  பெருமாள் சந்நிதிக்குள் நுழைந்தால் முதலில் நமக்கு வலப்புறமாக திருக்கச்சி நம்பிகள், ராமானுஜர், வேதந்தாச்சார்யார் (வேதாந்த தேசிகர்), மணவாள மாமுனிகள் சந்நிதிகள். ஆச்சார்யர்கள் வாழ்ந்த கால வரிசையில் இந்தச் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று கருதுகிறேன்.

இன்னும் உள்ளே வந்தால், சக்கரவர்த்தித்த திருமகன் (ராமர்), லக்ஷ்மணர், பரதர், சத்தருனர், சீதாப்பிராட்டியுடன் காட்சி அளிக்கிறார். எதிரே ஆஞ்சநேயர் சந்நிதி. ஆஞ்சநேயர்  சந்நிதியிலும் திருப்பணிகள் நடைபெறுவதால், உற்சவர் மட்டும் வெளியே சேவை  சாதிக்கிறார். 

ராமர் சந்நிதியைத் தொடர்ந்து ரங்கநாதர் சந்நிதி. இரு தேவியர் அருகில் அமர்ந்திருக்க, நாபிக்கமலத்தில் பிரும்மாவுடன் சனித்திருக்கிறார் மன்னாதர் என்கிற ரங்கநாதர். ரங்கநாதரின் இருபுறமும் வராஹரும், யோக நரசிம்மரும் காட்சி தருகிறார்கள்.

கர்ப்பக்கிருகத்தில் பார்த்தசாரதிப்  பெருமாள் ஆஜானுபாகுவாக, கம்பீரமாக நரைத்த மீசையுடன் காட்சி தருகிறார். வைகுண்ட ஏகாதசிக்கு இரு தினங்கள் முன்பிலிருந்து இவர் மீசை இல்லாமல் காட்சி அளிப்பார் என்று அறிகிறேன். 

பெருமாளுக்கு வலப்புறம் ருக்மிணித் தாயார், இடப்புறம் அவரது இளைய சகோதரர் சாத்யகி. 

ருக்மிணிக்கு வலப்புரத்தில் வடக்கு நோக்கியபடி பலராமர்,  சாத்யகிக்கு இடப்புறத்தில் கிருஷ்ணரின் புதல்வரான ப்ரத்யும்னரும், பேரனான அநிருத்தரும் காட்சி தருகின்றனர். 

கிருஷ்ணர், பலராமர், சாத்யகி, ப்ரத்யும்னன், அநிருத்தன் ஆகிய ஐந்து வீரர்கள் சந்நிதியில் இருப்பதால், இந்தத் தலம் பஞ்சவீரஸ்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

மூலவரின் பெயர் வேங்கடகிருஷ்ணன். உற்சவரின் பெயர் பார்த்தசாரதி. மூலவர் வலது கையில் பாஞ்சஜன்யம் என்ற சங்குடனும், இடது கையில் ஞான முத்திரையுடனும் இருக்கிறார். அவரது பாதங்களைச்  சுட்டிக்காட்டும் ஞான முத்திரை 'மாம் ஏகம்  சரணம் வ்ரஜ (என்னைச் சரணைந்தால்  போதும். உன்னை நான் காப்பாற்றுவேன்)' என்ற  கீதையின் வரியை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

உற்சவர் முகத்தில் மஹாபாரதப் போரில் பீஷ்மரின் அம்புகள் ஏற்படுத்திய காயங்களின் வடுக்கள் இருக்கின்றன.

பெருமாளை சேவித்து விட்டு வெளியே வரும்போது ஆச்சார்யர்கள்   சந்நிதிக்கு  எதிர்ப்புறத்தில் ஆழ்வார்கள் சந்நிதி. ஆழ்வார்களுடன் மாதவன், கோவிந்தன், அனந்தன் (ஆதிசேஷன்), விஷ்வக்சேனர், கருடன் ஆகியோரும் சேவை சாதிக்கின்றனர். எம்பார் (ராமானுஜரின் தம்பியும் சீடருமான கோவிந்தன்) விக்கிரகமும் இருக்கிறது.

1851ஆம் ஆண்டு புகைப்படம் 

இந்தக் கோவிலில் வேங்கடகிருஷ்ணன் என்கிற பார்த்தசாரதி, கஜேந்திர வரதர், அழகிய சிங்கர் என்கிற யோக நரசிம்மர், மன்னாதன்  என்கிற ரங்கநாதர், ராமர் ஆகிய ஐந்து பிரதான சந்நிதிகள் இருப்பது குறிப்பிதத்தக்கது. 

தனி சந்நிதியில் சேவை சாதிக்கும் வேதவல்லித்தாயார்  ரங்கநாதரின் பிராட்டியார். இவர் இங்கிருந்த குளத்தில் பூத்த அல்லி மலரில் பிறந்ததால், இந்தத் தலம் திருவல்லிக்கேணி என்று பெயர் பெற்றது. இந்த இடம் முழுவதும் துளசிவனமாக இருந்ததாகவும், அல்லிக்குளம் இந்தத் துளசிக் காட்டின் மத்தியில் இருந்ததாகவும் ஸ்தல புராணம் கூறுகிறது. 

சென்னையின் மிகப் பழைய கோவில் இதுவே என்பது இக்கோவிலின் இன்னொரு சிறப்பு.

இந்தத் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஐந்து தெய்வ வடிவங்களையும் பிருகு, அத்ரி, மரீசி, மார்க்கண்டேயர், சுமதி, சப்தரோமர், ஜாபாலி என்கிற சப்தரிஷிகள் வழிபட்டதாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. 

"பிருந்தாரண்யம்" என்பது இத்தலத்தின் புராணப் பெயர்.

சுமதி என்ற அரசன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசிக்கும் பார்த்தசாரதியாகத் தனக்கு காட்சி கொடுக்க வேண்டும் என்று திருவேங்கடமுடையானை வேண்ட, அவர் சுமதியை பிருந்தாரண்யத்துக்குச் சென்று தவம் செய்யும்படி பணித்தார். 

இதே சமயத்தில் அத்ரி மகரிஷி தான் தவம் செய்ய ஏற்ற இடம் எது என்று வியாசரைக் கேட்க, வியாசர் அவரை பிருந்தாரண்யத்துக்குச் சென்று தவம் செய்யும்படி கூறினார். ஒரு கையில் சங்கை ஏந்தியும்   மறு கையில் தன்   திருவடியைக்  காட்டியபடியும் காட்சியளிக்கும் கிருஷ்ண பரமாத்மாவின் திவ்ய மங்கள விக்கிரஹத்தையும் அளித்து அதை அங்கே தவம் செய்து கொண்டிருக்கும் சுமதியிடம் கொடுக்கும்படி கூறினார்.

விக்கிரஹத்துடன் திருவல்லிகேணி வந்த அத்ரி, சுமதியைச் சந்தித்து அவரிடம் விக்கிரகத்தை அளித்தார். திருவேங்கடமுடையான் தன்  விருப்பத்தை நிறைவேற்றி விட்டதில் மகிழ்ச்சி அடைந்த சுமதி, அந்த விக்கிரகத்தை அங்கே பிரதிஷ்டை செய்தார். 

பின்னால் இங்கே பல்லவர்களால் கோவில் கட்டப்பட்டு, அதற்குப் பின்பு சோழர்களால் விரிவுபடுத்தப்பட்டது. 

திருவேங்கடமுடையானின் அருளால் கிடைத்த விக்கிரகம் என்பதால் இந்த மூலவருக்கு வேங்கட கிருஷ்ணன் என்று பெயர். அர்ஜுனனுக்கு கீதையை உபயோகித்த கோலத்தில் இருப்பதால், இவர் பார்த்தசாரதி என்றும் பெயர் பெற்றார்.

இந்தக் கோவிலில் உள்ள மிகப் பழமையான சந்நிதி ரங்கநாதருடையது. இவர் மன்னாதர் என்று அழைக்கப்படுகிறார். 

மகாவிஷ்ணுவிடம் ஊடல் கொண்டு, மஹாலக்ஷ்மி இந்தத் தலத்தில் இருந்த அல்லிக்குளத்தில், அல்லி மலரில் குழந்தையாகப் பிறந்தார். இவரை பிருகு மகரிஷி எடுத்து, வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்தார். 

பங்குனி மாதம் சுக்ல மகா துவாதசி தினத்தன்று உத்திர நட்சத்திரத்தில்,  மன்னாதர் என்ற பெயரில் ஒரு இளவரசராக வந்த ரங்கநாதருக்கு வேதவல்லியை மணம் முடித்தார் பிருகு. 

பங்குனி உத்திரத்தன்று தன்னைச் சேவிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் எல்லா நலன்களையும் அளித்து, அவர்களுக்கு மோட்சமும் அளிக்க வேண்டும் என்று வேதவல்லித் தாயார் ரங்கநாதரிடம் கேட்டுக் கொண்டார்.

அத்ரி மஹரிஷியின் வேண்டுகோளை ஏற்று, நரசிம்மர் இங்கே கோயில் கொண்டுள்ளார். மூலவர் யோக நரசிம்மர் என்றும், உற்சவர் தெள்ளிய சிங்கர் மற்றும் அழகிய சிங்கர் என்றும் அழைக்கப்படுகிறார். 

அழகிய முகம் கொண்ட உற்சவர் ஒரு கையில் பக்தர்களை வா என்று அழைக்கும் முத்திரையும் (ஆஹ்வான ஹஸ்தம்), மறு  கையில் பக்தர்களைக் காக்கும் முத்திரையும் (அபய ஹஸ்தம்) கொண்டு விளங்குகிறார்.

இங்கு தவம் செய்த மகரிஷி மதுமானருக்கு சக்கரவர்த்தித்த திருமகனான ராமர் தனது மூன்று தம்பிகளுடனும், சீதாப்பிராட்டியுடனும் காட்சி கொடுத்திருக்கிறார்.

கஜேந்திர வரதர் சப்தரோம மகரிஷியால் வழிபடப்பட்டவர். மூலவர் கருட வாகனத்தில் காட்சி அளிப்பது சிறப்பு.

கோயிலின் முன்புற,ம் கைரவினி தீர்த்தம் என்ற பெரிய திருக்குளம் உள்ளது. 

இதன் வடக்குக் கரையில் படிக்கட்டுகளுக்கிடையே ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. 

இந்த புஷ்கரணிக்குள் அக்னி தீர்த்தம், சோம தீர்த்தம், மீன தீர்த்தம், இந்திர தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் (கிணறுகள்)  இருப்பதாக ஐதீகம்.

நீண்ட காலம் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்த ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த கேசவ சோமயாஜியும், அவர் மனைவி காந்திமதியும் திருவல்லிக்கேணிக்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்ட பிறகுதான் அவர்களுக்கு ராமானுஜர் பிறந்தார்.

திருமழிசை ஆழ்வார் முதலாழ்வார்களை சந்தித்தது இத்திருத்தலத்தில்தான்.

இப்படிப் பல சிறப்புகள் நிறைந்த இந்த திவ்ய தேசத்தை பேயாழ்வார் (ஒரு பாசுரம்), திருமழிசை  ஆழ்வார் (ஒரு பாசுரம்), திருமங்கை ஆழ்வார் (10 பாசுரங்கள்) ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர். அந்தப் பாசுரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோரும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். 

தியாகய்யர், முத்துசாமி தீக்ஷிதர் ஆகியோரும் இந்தக் கோவில் பற்றிக் கீர்த்தனைகள்  இயற்றியிருக்கிறார்கள். 

பாரதியாரின் கண்ணன் பாட்டுக்கள் வேங்கடகிருஷ்ணனை  மனதில் கொண்டு பாடப்பட்டவைதான்  என்று கொள்ளலாம்.


இந்த திவ்ய தேசம் பற்றிய ஆழ்வார்களின் பாடல்களைப் பகிர்ந்து கொண்டு, இந்த திவ்ய தேச தரிசன அனுபவத்தை நிறைவு செய்கிறேன்.

திவ்ய பிரபந்தம் 
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருவல்லிக்கேணி

1067 வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
      வேழமும் பாகனும் வீழச்
செற்றவன்-தன்னை புரம் எரி செய்த
      சிவன் உறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
      பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானை
      -திருவல்லிக்கேணிக் கண்டேனே             (1)
 
1068 வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
      விழுமிய முனிவரர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை
      குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆள் உடை
      அப்பனை-ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத்
      திருவல்லிக்கேணிக் கண்டேனே             (2)
 
1069 வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி
      வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட
      நாதனை தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்
      வியந்துதி செய்ய பெண் உரு ஆகி
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே            (3)
 
1070 இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
      எழில் விழவில் பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது
      மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எந்தம்மோடு இன ஆ-நிரை தளராமல்
      எம் பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே (4)
 
1071 இன் துணைப் பதுமத்து அலர்மகள்-தனக்கும்
      இன்பன் நல் புவி-தனக்கு இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை
      -தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி
      வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே             (5)
 
1072 அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு
      இளையவன் அணி இழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய் என தரியாது
      எம் பெருமான் அருள் என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்-தம்
      பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை-
      திருவல்லிக்கேணிக் கண்டேனே             (6)
 
1073 பரதனும் தம்பி சத்துருக்கனனும்
      இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற
      இராவணாந்தகனை எம்மானை-
குரவமே கமழும் குளிர் பொழிலூடு
      குயிலொடு மயில்கள் நின்று ஆல
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்
      திருவல்லிக்கேணிக் கண்டேனே (7)
 
1074 பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
      வாயில் ஓர் ஆயிரம் நாமம்
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு
      ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
      பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை
      -திருவல்லிக்கேணிக் கண்டேனே             (8)
 
1075 மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
      வேட்கையினோடு சென்று இழிந்த
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற
      கரா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து
      சென்று நின்று ஆழிதொட்டானை-
தேன் அமர் சோலை மாட மா மயிலைத்
      திருவல்லிக்கேணிக் கண்டேனே             (9)
 
1076 மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்
      மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர்-கோன் செய்த நல் மயிலைத்
      திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்
      காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல்-மாலை பத்து உடன் வல்லார்
      சுகம் இனிது ஆள்வர் வான்-உலகே             (10)
 

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
பேயாழ்வார் 
மூன்றாம் திருவந்தாதி

2296 வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம்
அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை
ஒரு அல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக்கேணியான் சென்று             (16)


மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமழிசை ஆழ்வார் 
நான்முகன் திருவந்தாதி

2415 தாளால் உலகம் அளந்த அசைவேகொல்?
வாளா கிடந்தருளும் வாய்திறவான் நீள் ஓதம்
வந்து அலைக்கும் மா மயிலை மா அல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்து அணை               (35)

ஓம் நமோ நாராயணாய!





Wednesday, June 22, 2016

22. திவ்ய தேச தரிசன அனுபவம் - 2. திருவெவ்வுள்ளூர் (90)

தரிசனம் செய்த நாள்: மே 2016
தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
17. திருவெவ்வுள்ளூர் (90)
நீர்மைகெட வைதாரு நின்னோ டெதிர்த்தாரும் 
சீர்மைபெற நின்னடிக்கீழ்ச் சேர்க்கையினால் - நேர்மையிலா
வெவ்வுளத்த னேன்செய் மிகையைப் பொருத்தருளி 
எவ்வுளத்தனே: நீ இரங்கு (90)
       -பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி '  



முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தபடி, திருநின்றவூர், திருவள்ளூர் ஆகிய இரண்டு திவ்ய தேசங்களையும் ஒரே நாளில் (அரை நாளில்!) தரிசிக்கும் எண்ணத்துடன் சென்னை வேளச்சேரியில் காலை 7 மணிக்குக்  கிளம்பி சுமார் 9.15க்குத் திருநின்றவூரில் வந்து இறங்கினேன். திருநின்றவூர் கோவிலை அடையும்போது சுமார் 9.30. தரிசனம் முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பும்போது சுமார் 10.45.

கண்ணில் வாகனங்கள் எதுவும் தட்டுப்படாததால் மீண்டும் நடந்தே வந்து, திருநின்றவூர் ரயில் நிலையத்தில் இன்னமும் அங்கேயே நின்று  கொண்டிருந்த  சரக்கு ரயிலின் கீழே புகுந்து பஸ் நிறுத்தத்தை அடைந்தபோது மணி 11.00. சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தபின் திருவள்ளூர் செல்லும் பஸ் கிடைத்தது. அமர இடமும் கிடைத்தது. 20 அல்லது 25 நிமிடப் பயணத்துக்குப்பின் திருவள்ளூர் வந்து சேர்ந்தபோது மணி 11.45.

கோவில் பஸ் நிலையத்துக்கு சமீபத்தில்தான் இருக்கிறது (சுமார் 200 மீட்டர்கள் இருக்கலாம்). ஞாயிற்றுக்கிழமை என்பதாலோ என்னவோ கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. தர்ம தரிசனம், 10 ரூபாய் கட்டண சேவை, 60 ரூபாய் கட்டண சேவை என்று மூன்று வரிசைகள் இருந்தன.

60 ரூபாய் டிக்கட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன். உள்ளே எங்கே சென்று இணைய வேண்டும் என்று தெரியவில்லை. இணைய வேண்டிய இடத்தில் வழி காட்ட ஆளும் இல்லை. விசாரித்து அறிந்து கொண்டு வரிசையில் நின்றேன். வரிசையில் நகர்ந்து சந்நிதிக்குச் செல்லும் கதவுக்கு அருகில் சென்றபோது பலர் எந்த வரிசையிலும் நிற்காமல் நேரே உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகே ஒரு ஆள் வந்து குறுக்கே நுழையும் கதவை மூடினார். சுமார் 50 பேர் வரிசையில் நிற்காமல் உள்ளே போயிருப்பார்கள்.

இதைத் தவிர சந்நிதிக்குள் பக்தர்களை ஒரே வரிசையில் விடாமல், கும்பலாக உள்ளே போகச் சொல்லி சந்நிதியை மறைத்தும் நெருக்கடி ஏற்படுத்தியும் குழப்பம் விளைவித்தார்கள்.

இந்தக் கோவில் சிறப்பான நிர்வாகத்துக்குப் பெயர் பெற்ற ஸ்ரீ அஹோபில மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது. கோவில் நிர்வாகத்துக்குப் பொறுப்பேற்றிருப்பவர்கள் இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து பக்தர்கள் வரிசையில் வந்து, திருப்தியாக தரிசனம் செய்ய வழி வகுப்பார்கள் என்று நம்புகிறேன்.

தூரத்திலிருந்தே கர்ப்பக்கிருகத்தின் இருட்டிலும் வீரராகவப் பெருமாளின் தலைப்பகுதி தெரிந்தது. கூட்ட நெரிசலாலும், குறுகிய காலத்துக்குள் தரிசனம் செய்ய வேண்டிய அவசியத்தாலும், தூரத்திலிருந்தே பெருமாளை கவனமாக சேவிக்க வேண்டி இருந்தது. அருகில் செல்லச் செல்ல ஆதிசேஷன் மீது சயனித்திருந்த பெருமாளின் திருக்கோலம் தெளிவாகத் தெரிந்தது. உயர்த்தப்பட்ட இடது கரம் பிரம்மாவுக்கு வேதத்தின் பொருளை விளக்கும் விதமாக ஞான முத்திரை காண்பித்துக்கொண்டிருக்க, பெருமாளின் வலது கரம் சாலிஹோத்திர முனிவரின் தலைக்கு மேல் ஆசிர்வதிப்பது போல் குவிந்திருக்க, காலை நீட்டியபடி விஸ்ராந்தியாக வீரராகவர் சயனித்திருக்கும் காட்சி ஒரு அற்புத தரிசனம். கிழக்கு நோக்கிய தோற்றம். நோய்களைத் தீர்க்கும் பெருமாள் என்பதால் அவர் வைத்ய வீரராகவாப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். பெருமாளுக்கு உப்பும் மிளகும் அர்ப்பணிப்பது ஐதீகம்.

தீராத வயிற்று வலியினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த வள்ளலார் (ராமலிங்க அடிகளார்) ஒருமுறை திருத்தணிக்குப் போகும் வழியில் ஏதோ ஒரு உந்துதால் இந்தக் கோவிலுக்கு வந்து வீரராகவாப் பெருமாளை வணங்கினர். அவர் வயிற்று வலி குணமாகியது. அதனால் மனமகிழ்ந்து 'வீரராகவாப் பெருமாள் பஞ்சகம்' என்ற ஐந்து செய்யுள்கள் கொண்ட ஒரு ஸ்தோத்திரத்தை அவர் இயற்றி இருக்கிறார். இந்த ஸ்தோத்திரம் கோயில் வாசலில் ஒரு கல்லில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது.

உட்பிரகாரத்தில், மூலவர் சந்நிதிக்கு வலப்புறத்தில் (தெற்கில்), லக்ஷ்மி நரசிம்மரும், இடப்புறத்தில் (வடக்கில்) சக்கரத்தாழ்வாரும் சேவை சாதிக்கின்றனர்.

ராவணனுடன் போரிட்ட களைப்பில் ராமபிரான்தான் வீரராகவராக இங்கே சயனித்திருக்கிறார் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ராகவன் என்ற பெயர் ராம பிரானைக் குறிக்கும் என்பதால் இந்த ஒரு கருத்து உருவாகி  இருக்கலாம்.  திருமங்கை ஆழ்வாரும் ஒரு பாசுரத்தில் ராவணனை வீழ்த்திய  ராமனே இங்கே எழுந்தருளி இருக்கிறான் என்று   குறிப்பிட்டிருக்கிறார்.

பல்லவ, சோழ, விஜயநகர மன்னர்களின் திருப்பணிகள் குறித்த கல்வெட்டுகள் கோவிலில் காணப்படுகின்றன. இந்தப் புண்ணியத் தலம் பற்றி மார்க்கண்டேய புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

புரு புண்யர்-சதி தம்பதியின் புதல்வரான சாலிஹோத்ரர் என்ற ஒரு முனிவர் பத்ரியில் வாழ்ந்து வந்தார். சாலி என்ற சம்ஸ்கிருதத் சொல்லுக்கு அரிசி என்று பொருள் (தானியம் என்ற பொதுவான பொருளும் இந்தச் சொல்லுக்கு உண்டு). ஹோத்ரர் என்றால் ஹோமத்தில் உதித்தவர். அரிசியினால்  (அல்லது நெல்லினால்) ஓராண்டு ஹோமம் செய்த பலனிலால் பிறந்தவர் என்பதால் இவருக்கு சாலிஹோத்ரர் என்ற பெயர் வந்தது.

தீர்த்த யாத்திரை செய்து வந்த இவர் ஓர் தை அமாவாசையன்று வீக்ஷாரண்ய க்ஷேத்ரம் என்று அழைக்கப்படும் இவ்வூருக்கு வந்தார். வீக்ஷா என்கிற சம்ஸ்கிருத வார்த்தைக்கு ஞானம், அறிவு, தேடல் போன்ற பொருள்கள் உண்டு. ஞானத்தை அளிக்கும் காடு (இடம்)  என்று இந்த ஊரின் பெயருக்குப் பொருள் கொள்ளலாம்.  புண்யாவர்த்த  க்ஷேத்ரம் என்றும் இந்த ஊருக்குப் பெயர் உண்டு.

இங்கே ஹ்ருத்தாபநாசினி (தாபங்களை - மன வருத்தங்களை/ஆசைகளை/ஏக்கங்களைப்  போக்கும் குளம்) என்ற குளத்தில் பல முனிவர்களும் யோகிகளும் புனித நீராடிக்கொண்டிருப்பதைக் கண்டு சாலிஹோத்ரர்  தானும் அதில் நீராடி அன்றிலிருந்து ஓராண்டு காலம் அந்தக் குளத்துக்கு அருகிலேயே தவம் இருந்தார்.

தினமும் சிறிது சிறிதாக அரிசி சேகரித்து, ஓராண்டு காலம் முடிந்ததும் தை அமாவாசை தினத்தன்று அந்த அரிசியைச் சமைத்து பகவானுக்கு அர்ப்பணித்த பிறகு அதிதி  யாருக்காவது உணவளித்து விட்டுத் தான் உண்ண நினைத்திருந்தார். அப்போது ஒரு முதியவர் வர, பாதி உணவை அவருக்கு அளித்தார். முதியவர் பசி அடங்காமல் மீதி உணவையும் கேட்டுப் பெற்றார். உணவு அருந்திய பின் ஓய்வெடுக்க விரும்பி முனிவரின் பர்ணசாலையைக் காட்டி இங்கே எந்த அறையில் உறங்கலாம் என்று பொருள் பட 'எவ்வுள்?' என்று வினவினார். முனிவர் தனது பர்ணசாலைக்குள் அவரை உறங்க வைத்து அவருக்குப் பாத சேவையும் செய்தார்.

அப்போது மணிகளின் வெண்கல நாதம் ஒலித்தது. வானிலிருந்து பலவித ஒலிகள் கேட்டன. முதியவராக வந்த பெருமாள் முனிவருக்குக்  காட்சி கொடுத்தார். முனிவரின் விருப்பப்படி  தான் உறங்கிய இடத்திலேயே  தென் திசையில் தலையை வைத்துக் கிழக்கு நோக்கிப் பள்ளி கொண்ட கோலத்தில் எழுந்தருளினார்.

பெருமாள் ''எவ்வுள்?' என்று கேட்டதால் இத்திருத்தலம் 'திரு எவ்வுள்ளூர்' என்று  பெயர் பெற்றுக் காலப் போக்கில் 'திருவள்ளூர்' என்று பெயர் மாறியது. சம்ஸ்கிருதத்தில் 'கிம் க்ருஹம்?' என்று முனிவர் வினவியதால் 'கிம்க் ருஹேசன்'  என்றும் பெருமாளுக்குப் பெயருண்டு.  இந்தப் பெருமாள் மீது 'கிம்க்ருஹேஸ  ஸ்துதி' என்ற ஸ்தோத்திரம் ஒரு உள்ளது. இது  வேதாந்த தேசிகரால் இயற்றப்பட்டது என்ற ஒரு கருத்து உண்டு. ஆனால் இது பற்றி ஒருமித்த கருத்து இல்லை.

மகாவிஷ்ணு மதுகைடபர்கள் என்ற அசுரர்களை அழித்ததற்கு அடையாளமாக இந்தக் கோவில் விமானம் விஜயகோடி விமானம் என்று அழைக்கப்படுகிறது. மதுகைடபாரர்கள் ஹ்ருத்தாபநாசினி என்ற இந்த புஷ்காரணிக்குள் ஒளிந்திருந்தார்களாம். அவர்கள் இந்தக் குளத்துக்குள் ஒளிந்திருந்தபோது மகாவிஷ்ணு அவர்களைக் கொள்ளவில்லை. இந்தப் புஷ்காரணி பாவத்தைப் போக்க வல்லது என்பதால் இந்தப் புஷ்காரணிக்குள் அவர்கள் இருந்தபோது பகவான் அவர்களைக் கொள்ள விரும்பவில்லை. இதிலிருந்து வெளியே வந்த பிறகுதான் அவர்களைக் கொன்றார்! புஷ்காரணியில் வெல்லம்  கரைப்பது மரபு.

வெளிப்பிரகாரத்தில் கனகவல்லித் தாயாரின் சந்நிதி. தாயாருக்கு வசுமதி  என்றும் பெயர் உண்டு. மகாலக்ஷ்மித் தாயார் தர்மசேனன் என்ற (இவர் பெயர் திலீபன் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது) அரசனின் மகளாகப் பிறந்தார். வசுமதி என்ற பெயர் கொண்ட இவரை  வீரநாராயணன் என்ற ஒரு இளைஞனாக வந்து பெருமாள் மணந்து கொண்டார். திருமணம் முடிந்ததும் இருவரும் கோவிலுக்குள் வந்து மூலவர் சந்நிதிக்குள் மறைந்து விட்டனர் என்பதாக வரலாறு.

தாயாரின் சந்நிதிக்குப் பின்புறமாக ராமர் சந்நிதி. லக்ஷ்மணர், சத்ருக்னர், ஆஞ்சநேயருடன் கம்பிரமாகக் காட்சி அளிக்கும் ராம பிரான். மூலவர் சந்நிதியில் அர்ச்சனை செய்பவர்களுக்கு  இங்குதான் தேங்காய் உடைக்கப்படுகிறது.

பக்கத்தில் வேணுகோபாலன் சந்நிதி. இந்த சந்நிதியின் பிரகாரத்தில் சாலிஹோத்ரருக்குப் பெருமாள் அருள் பாலிக்கும் ஸ்தல புராணக் காட்சிகள் வண்ணச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுக் கண்ணாடிக்குள் வைக்கப்பட்டு வண்ண ஒளியில் கண்ணைக் கவர்கின்றன.

விஷ்வக்சேனர், நம்மாழ்வார், ஆண்டாள், திருக்கச்சி நம்பி, ராமானுஜர், வேதாந்த தேசிகர் ஆகியோருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன. வேதாந்த தேசிகருக்கு இவ்வளவு பிரம்மாண்டமாக தனிச் சந்நிதி அமைந்திருப்பது இந்தக் கோவிலில்தான் என்று நினைக்கிறேன்.  நான் முன்பே குறிப்பிட்டபடி கிம்க்ருஹேச ஸ்துதி என்ற ஸ்தோத்ரம் தேசிகறால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. அது தவிர இவர் இயற்றிய ஸ்ரீஸ்துதியும் இக்கோவிலில் குடிகொண்டுள்ள கனகவல்லித் தாயார் மீது இயற்றப்பட்டதுதான் என்றும் ஒரு கருத்து உண்டு.

தொண்டை நாட்டுத் திருப்பதிகள் 22இல் ஒன்றான இந்த 59ஆவது திவ்யதேசம் திருமங்கை ஆழ்வாராலும்  (பெரிய திருமொழி 10, பெரிய திருமடல் 1 மொத்தம் 11 பாசுரங்கள்), திருமழிசை ஆழ்வாராலும்(நான்முகன் திருவந்தாதி 1 பாசுரம்) மங்களாசாசனம் செய்யப்பட்டிருக்கிறது. பாசுரங்கள் இதோ!

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திரு எவ்வுளூர்
1057 காசை ஆடை மூடி ஓடிக் காதல் செய் தானவன் ஊர்
நாசம் ஆக நம்ப வல்ல நம்பி நம் பெருமான்
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று
ஏச நின்ற எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே             (1)
 
1058 தையலாள்மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன்
பொய் இலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம் போர்-தன்னில் அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள
எய்த எந்தை எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே             (2)
 
1059 முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன் ஊர்-தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின் ஓர் தூது ஆதி-மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்
இன்னார் தூதன் என நின்றான்-எவ்வுள் கிடந்தானே             (3)
 
1060 பந்து அணைந்த மெல் விரலாள் பாவை-தன் காரணத்தால்
வெந் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தன் ஆக ஆகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே             (4)
 
1061 பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆல் இலைமேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி
ஏலம் நாறும் பைம் புறவின்-எவ்வுள் கிடந்தானே             (5)
 
1062 சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தன் நம்பி செங்கண் நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம்
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது
ஏத்தும் நம்பி எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே             (6)
 
1063 திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி திசைமுகனார்
தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண்
தொங்கல் அப்பு நீள் முடியான் சூழ் கழல் சூடநின்ற
எங்கள் அப்பன் எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே             (7)
 
1064 முனிவன் மூர்த்தி மூவர் ஆகி வேதம் விரித்து உரைத்த
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்-கோன்
தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும் தன் அடியார்க்கு
இனியன் எந்தை எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே             (8)
 
1065 பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர்-நாயகன் ஆய் அமைந்த
இந்திரற்கும் தம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே             (9)
 
1066 இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர்-கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈர் ஐந்தும் வல்லார்
அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர்-அமர் உலகே (10)


மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய மடல்
2673 மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை      (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை      (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்      (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத்      (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான்      (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்      (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்      (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்      (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள்
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்      (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க   (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்     (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்     (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த     (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்     (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில்     (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்     (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம்     (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்     (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு     (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே     (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்     (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம்             (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வெள்ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80)

பல திவ்ய தேசங்களை இந்தப் பாசுரத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஆழ்வார். திருவள்ளூர் திவ்யதேசத்தை  'எவ்வுள் பெருமலையை' என்று 62ஆம் வரியில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

திருமழிசை ஆழ்வார் 
நான்முகன் திருவந்தாதி (36ஆவது பாசுரம்)
2416 நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள்
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தன் ஆவான்

ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தரும் திருக்குடந்தை, திருவெஃகா, திருவள்ளுவர் ஆகிய மூன்று திருத்தலங்களை இந்தப் பாசுரத்தில் குறிப்பிட்டிருக்கிறார் திருமழிசை ஆழ்வார்.

கோவில் நுழைவாயில் அருகே நமக்கு இடப்புறமாக கஜானனர் சந்நிதி  உள்ளது. (விஷ்வக்சேனரின் மந்திரிப் பிரதானிகளில் கஜானனர் முக்கியமானவர். வைணவ ஆசார்ய பரம்பரையில் மிக முக்கிய இடம் வகிப்பவரான நாதமுனிகள் கஜானனரின்  அவதாரம் என்றே   கருதப்படுகிறார்). இதற்கு நேர் எதிரே வலப்புறமாக பிரகாரத்தின் மறுபக்கம் விஷ்வக்சேனர் சந்நிதி உள்ளது.

இந்தக் கோவில் புஷ்காரிணியான ஹரிதாபநாசினியில் நீராடித்தான் சிவபெருமான் தக்ஷனைக் கொன்றதன் மூலம் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொண்டார் என்றும் ஒரு வரலாறு உண்டு. புஷ்காரிணி அருகே தீர்த்தேஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமான் சந்நிதி உள்ளது. தை அமாவாசை அன்று எல்லாப் புண்ய நதிகளும் இந்தப் புஷ்காரணியில் வந்து கலப்பதாக ஒரு ஐதீகம் உண்டு.

புஷ்காரிணி சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு நீர் நிறைந்திருந்தது. பஸ்ஸில் புஷ்காரிணியைத்  தாண்டிப் போகும்போது  மதிய வெய்யிலிலும் சில்லென்று குளிர் காற்று வீசியது.

தரிசனம் முடித்து வெளியே வரும்போது மணி 12.45.  கோவில் தரிசன நேரம் முடியும் சமயம். கோவிலுக்கு வெளியில் இருந்த பிரசாதக் கடை மூடப்பட்டிருந்தது. கேட்டதற்குப் பிரசாதங்கள் விற்றுத் தீர்ந்திருக்கும் என்று சொன்னார்கள்.

இன்னொரு முறை காலையில் சீக்கிரமே வந்து நிதானமாக சேவிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சென்னைக்கு பஸ் ஏறினேன். கோயம்பேடு வந்து அங்கிருந்து வேளச்சேரிக்கு வந்து சேரும்போது மணி 3.30!





Monday, June 20, 2016

21. திவ்ய தேச தரிசன அனுபவம் - 1. திருநின்றவூர் (89)

தரிசனம் செய்த நாள்: மே 2016
தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
16. திருநின்றவூர் (89)
(தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல்)
சீரறிந்து தோழிமீர்: சென்று கொணர்ந்தெனக்குப் 
போர முலைமுகட்டிற் பூட்டுமினோ !- நேரவுணர்
பொன்றவூர் புட்கழுத்திற் பொன்னைமா ணிக்கத்தை 
நின்றவூர் நித்திலத்தை நீர் (89)
  - பிள்ளைப் பெருமாள்  ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி'


சிறு வயது முதலே சில திவ்ய தேசங்களை தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து வந்திருக்கிறது. ஆயினும் நீண்ட காலம் அவை திவ்ய தேசங்கள் என்பதே எனக்குத் தெரியாது! பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.

திவ்ய தேசங்கள் என்று தெரிந்த பிறகும் சில கோயில்களுக்குப் போயிருக்கிறேன். ஆயினும் ஒவ்வொரு திவ்ய தேசத்தைப்பற்றியும்  ஓரளவுக்காவது அறிந்து கொண்ட பின் அவற்றை  தரிசித்து என் அனுபவத்தின் பின்னணியில் ஒவ்வொரு கோவில் பற்றிய விவரங்களையும், சிறப்புகளையும், அந்தக் கோவில் பற்றி ஆழ்வார்கள் பாடிய பாடல்களோடு எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா. எனக்குத் தெரிந்த அளவுக்கு ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும் வழித்தடங்கள், பேருந்து, ரயில் மற்ற வாகன வசதிகள் பற்றியும் என் அனுபவத்தின் அடிப்படையில் குறிப்பிட முயல்கிறேன்.

இந்த வகையில் நான் முதலில் சென்றது திருநின்றவூருக்கும், திருவள்ளூருக்கும். சென்னையில் வசிப்பதால் சென்னைக்கு அருகில் உள்ள திருப்பதிகளை முதலில் தரிசிக்க எண்ணி இந்த இரண்டு ஊர்களும் ஒரே வழித்தடத்தில் இருப்பதால் 19.06.2016 அன்று இந்த இரண்டு  கோவில்களுக்கும் சென்று என் திவ்ய தேச தரிசன முயற்சியைத் துவக்கினேன். பூவுலகில் உள்ள  மற்ற  104 திவ்ய தேசங்களையும் விரைவில் தரிசிக்கும் வாய்ப்பை  நான் வணங்கும் லக்ஷ்மி  நரசிம்மர் அருள்வார் என்று நம்புகிறேன். அதற்குப் பிறகு உரிய நேரத்தில் 107, 108 ஆவது திவ்ய தேசங்களுக்கு என்னை அழைத்துக் கொள்வார் என்றும் நம்புகிறேன்!

பொதுவாக  சென்னை பஸ்கள் மீது எனக்கு அதிக நம்பிக்கை உண்டு. ஆனால் பெரும்பாலான சமயங்களில் அவை என் நம்பிக்கையை எள்ளி நகையாடி இருக்கின்றன. ஆயினும், என்னுடைய தனிப்பட்ட பயணங்களுக்குப்   பெரும்பாலும் puplic transportஐயே பயன்படுத்துவது என்ற பழக்கத்தைக் கடைப்படித்து வரும் எனக்கு இந்த நம்பிக்கையைக் கை விடுவது சுலபமாக இல்லையே!

வேளச்சேரி பேருந்து நிலையத்தில் கோயம்பேடு செல்லும் பஸ்ஸில் ஏறி எந்த வழித்தடத்திலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்ய (travel as you like) உரிமை அளிக்கும் ஐம்பது ரூபாய் டிக்கட்டை வாங்கிக்கொண்டேன்.

கோயம்பேட்டிலிருந்து  திருநின்றவூருக்கு நிறைய  பஸ்கள் இருக்கும் என்று நம்பிப் போனவனுக்கு ஏமாற்றம். பதினைந்து நிமிடம் காத்திருந்த பிறகு ஆவடி பஸ்ஸில் ஏறினேன்  அந்த பஸ்  கண்டக்டரிடம் திருநின்றவூர் பஸ் பற்றிக் கேட்டபோது, 'இங்கிருந்து நேரடி பஸ்கள்  குறைவு. ஆவடியிலிருந்து நிறைய பஸ்கள் உண்டு' என்றார்.

நான் ஆவடி சென்றடைந்ததும், அவர் சொன்னபடியே ஆவடியிலிருந்து திருவள்ளூர் செல்லும் ஓரிரு பஸ்கள் புறப்படத் தயாராக நின்றன. அவற்றில் ஒன்றில் ஏறித் திருநின்றவூர் வந்து சேர்ந்தேன். நான் அமர்ந்திருந்த சீட்டுக்குப்  பக்கத்தில் நின்றவர் நான் எங்கே போக வேண்டும் என்று கேட்டறிந்த பின், கோவிலுக்குப் போவதானால் பஸ் ஸ்டாண்டுக்கு அடுத்த நிறுத்தமான ரயில் நிலைய நிறுத்தத்தில் இறங்கும்படி சொன்னார். 'இறங்கி மினி பஸ்ஸில் போய் விடுங்கள்' என்றார். நான் உட்கர்ந்திருந்த இருக்கை அவருக்குக் கிடைத்தது எனக்கு உதவியதற்காக நான் செய்யாமலே அவருக்குக் கிடைத்த பிரதி பலன்!

திருநின்றவூரில் இறங்கிக் கோவிலுக்கு வழி கேட்டபோது, ரயில் நிலையத்துக்கு மறுபுறம் போய் அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் செல்லும்படி கூறினார்கள். பஸ் நிறுத்தத்தை ஒட்டியே ரயில் நிலையம் இருந்தது. மற்ற பாதசாரிகளைப் பின்பற்றி, மாடிப்படியைப் பயன்படுத்தாமல் ரயில் தடங்களைக் கடந்து மறுபுறம் போனேன். ஒரு தடத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு வண்டியின் அடியே புகுந்து  செல்ல வேண்டி இருந்தது (இந்த அறுபத்தைந்தாவது வயதில்!). குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்ததற்கான தண்டனை அல்லது விலை!

ரயில் நிலையத்துக்கு மறுபுறம் ஷேர் ஆட்டோக்கள்  இருந்தன. ஆனால் எவையும் உடனே கிளம்பும் நிலையில் இல்லை. ஆட்கள் ஏறி ஆட்டோ  நிரம்பி வழிந்த பிறகுதான் கிளம்புவார்கள் என்று தோன்றியது. அருகில் இருந்த ஒருவரை 'கோவில் எவ்வளவு தூரம்? ' என்று கேட்டேன். 'ஒரு கிலோ மீட்டர்தான். நடந்தே போய் விடலாம்!" என்றார் என் மன ஓட்டத்தை அறிந்தவராக.

அவ்வளவுதானே என்று நடக்கத் தொடங்கினேன். சாலை போய்க்கொண்டே இருந்தது. கோவிலுக்கு வந்து சேர்ந்தபோது ஒன்றரை கிலோ மீட்டராவது நடந்திருப்பேன் என்று தோன்றியது. அதனால் என்ன? நமக்கு தரிசனம் கொடுப்பதற்காகக் காலம் காலமாக நின்று சேவை சாதித்துக் கொண்டிருக்கும் பக்தவத்ஸலப் பெருமாளை தரிசிக்க சற்று துரம் நடந்தால் என்ன? நடப்பதற்கு உடலில் தென்பைக் கொடுத்திருப்பது அவருடைய கருணைதானே!

நடந்து சென்றபோது ஒரு ஷேர் ஆட்டோ என்னைத் தாண்டிப் போயிற்று. அதில் மூட்டைகள் போல் அடைபட்டிருந்தவர்களைப் பார்த்தபோது ஷேர் ஆட்டோவைத் தவிர்த்தது சரியான முடிவு என்று தோன்றியது.

பூந்தமல்லியிலிருந்து திருநின்றவூருக்கு வரும் 54ஏ  பஸ்கள் இரண்டு முன்று எதிர்ப்பட்டன. கோவில் பூந்தமல்லி-திருநின்றவூர் சாலையில் அமைந்திருப்பதையும், பூந்தமல்லியிலிருந்து வந்தால் கோவிலுக்கு அருகிலேயே இறங்கிக் கொள்ளலாம் என்றும் புரிந்து கொண்டேன்.

கோவிலுக்குள்  புகுமுன், சென்னையிலிருந்து இந்தத் தலத்துக்கு வர விரும்பும் பக்தர்களுக்கு ஒரு வார்த்தை. வசதி படைத்தவர்கள் காரில் வருவது சுலபம். சென்னையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர்தான் திருநின்றவூர்.

மற்றவர்கள் ரயிலில் அல்லது பஸ்ஸில் வரலாம். பஸ்ஸில் வருவதானால் பூந்தமல்லிக்கோ ஆவடிக்கோ வந்து அங்கிருந்து வருவது சுலபமாக இருக்கும். கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் அதிகம் இல்லை. ஐம்பது ரூபாய் டிக்கட் சென்னை நகர பஸ்களில் திருவள்ளூர் வரையில் செல்லும் என்பதால் இரண்டு மூன்று பஸ்கள் மாறி வருவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. திருநின்றவூர் வந்த பிறகு ஷேர் ஆட்டோவோ, தனி ஆட்டோவோ வைத்துக்கொண்டு கோவிலுக்கு வரலாம். மினி பஸ்ஸு க்காகக் காத்திருப்பதென்றால்  பெருமாளுக்குத் துணையாக நீங்களும் நின்று கொண்டே இருக்கலாம்!

இனி கோவிலுக்குள் நுழையலாம். வெளியிலிருந்து பார்க்கும்போதே முகப்பு கோபுரம் எளிமையாக ஆனால் கம்பிரமாகக் காட்சி அளிக்கிறது. (மேலே புகைப்படத்தைக் காணவும்.)

உள்ளே நுழைந்ததும் நுழைவாயிலுக்குப் பக்கத்தில் வலது புறமாக ஒரு சிறிய நரசிம்மர் சந்நிதி.  என்னைப் பொருத்தவரை எந்த இடத்திலுமே நரசிம்மரைப் பார்த்தால் தைரியமும், நம்பிக்கையும் வரும் - ஒரு குழந்தை தன் அப்பாவைப் பார்க்கும்போது அதற்கு ஏற்படும் உணர்வு போல.

பெருமாள் சந்நிதியின் முன்பு வரிசையில் நின்று சில நிமிடங்கள் கழித்து தரிசனம் கிடைத்தது. '108 திருப்பதிகளில் இது 58ஆவது' என்றார் அர்ச்சகர். ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய மூலவரும், உற்சவரும். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். அபய ஹஸ்தம். (நம்மை வாழ்த்துவது போல்  செங்குத்தாக விரிந்திருக்கும் திருக்கரம்). 'பயம் வேண்டாம். உன்னைக் காப்பாற்ற நான் இருக்கிறேன்' என்ற செய்தியைச் சொல்வது அபய ஹஸ்தம்.

விரிந்த கரத்தில் அணிவிக்கப்பட்டிருந்த கவசத்தில் 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்ற கீதை வாக்கியம் பொறிக்கப்பட்டிருந்தது. 'என்னைச் சரணடைந்தால் போதும். பிறகு நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம்' என்ற சரணாகதி தத்துவத்தைக் குறிக்கும் வாசகம். ஒப்பிலி அப்பன் கோவிலிலும், திருநின்றவூரிலும் மட்டுமே இந்த வாசகம் பொறிக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன்.

மூலவர் பக்தவத்சலப் பெருமாள். உத்சஸவருக்குப் பெயர் பத்தராவிப் பெருமாள். ஒருமுறை பெருமாளிடம் கோபித்துக்கொண்டு இங்கே வந்து தங்கி விட்டார் மகாலக்ஷ்மி. மகாலக்ஷ்மியின் தந்தை சமுத்திரராஜன் நேரில் வந்து அழைத்தும் மகாலக்ஷ்மி இந்த ஊரை விட்டு வர மறுத்து விட்டார். பிறகு சமுத்திரராஜன் மகாவிஷ்ணுவை வேண்ட, அவர் இந்த ஊருக்கு வந்து மகலக்ஷ்மியைச் சமாதானப் படுத்தியதுடன் இங்கேயே தங்கி விட்டார்.

மகாலட்சுமி வந்து தங்கியதால் இந்த ஊர்  திரு நின்ற ஊர்  என்று பெயர் பெற்றது. திருமகள் வாசம் செய்யும் ஊர் என்ற பொருளில் ஸ்ரீநிவாச  (ஸ்ரீ- திருமகள் நிவாச-வசிக்கும்) க்ஷேத்ரம் என்றும் இந்தத திருத்தலம் வழங்கப்படுகிறது.

மகாவிஷ்ணு இங்கு வந்து தங்கியதையும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதையும் கூடத் திருநின்றவூர் என்ற பெயர் குறிக்கும். சமுத்திரராஜனுக்கு அருள் பாலித்ததால் பெருமாள் பக்தவத்ஸலர் (அடியார்களிடம் அன்பு காட்டுபவர்) என்று பெயர் பெற்றார். தர்மத்வஜன் என்ற மன்னன், புரந்தரன் என்ற பக்தன் ஆகியோரும் இந்த க்ஷேத்திரத்தில் பெருமாளை சேவித்துத் தங்கள் பாவங்களிலிருந்து விடுபட்டார்கள் என்றும் வரலாறு உண்டு.

மூலவர் சந்நிதிக்கு வெளியே  மூலவருக்கு இடப்புறமாக யோக நரசிம்மர் தரிசனம் தருகிறார்.

பிரகாரத்தில் தாயார் சந்நிதி. சந்நிதி வாசலில் 'என்னைப் பெற்ற தாயார்' என்ற பெயரைப் படித்ததும் பரவசம் ஏற்பட்டது. எனக்கு எப்போதும் அருள் பாலித்து வரும் வைகுந்தவாசியான என் தாயாரே இங்கே கோயில் கொண்டிருப்பதாக நினைத்து மகிழ்ந்தேன்.

சமுத்திரராஜன் இங்கே வந்து மகாலக்ஷ்மியைக் கோபம் தணிந்து திரும்ப வருமாறு அழைத்தபோது, "நீ என் மகள் அல்ல. என்னைப் பெற்ற தாய்" என்றாராம். அதனால் தாயாருக்கு இந்தப் பெயர் வந்தது. சமஸ்கிருதத்தில் 'மத்ஸவித்ரீநாயிகா' என்று அழைக்கப்படுகிறார். தெலுங்கில் 'நன்ன கன்ன தல்லி' என்று இந்தப் பெயர் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தாயாருக்கு சுதாவல்லி என்ற பெயரும் உண்டு.

பிரகாரம் முழுவதும் 108 திருப்பதிகளின் படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. பிரகாரத்தில் ஐந்து தலைகளுடன் கூடிய ஆதிசேஷன், சக்கரத்தாழ்வார், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி (ஆண்டாள்), சேனைநாதன் (விஷ்வக்சேனர்) ஆகியோருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன.

இவை தவிர ஆண்டாள் தவிர்த்த மற்ற 11 ஆழ்வார்களுக்கும், ராமானுஜருக்குமாக ஒரு சந்நிதி இருக்கிறது. மணவாள மாமுனிகளுக்கும் ஒரு சந்நிதி இருக்கிறது. மணவாள மாமுனிகளுக்கு இடப்புறம் கூரத்தாழ்வாரும், வலது புறம் திருக்கச்சி நம்பியும் இருக்கிறார்கள். திருக்கச்சி நம்பிக்கு வலப்புறமாக ஒரு விக்கிரகம் இருக்கிறது. அது யாருடைய விக்கிரகம் என்று அர்ச்சகர் ஒருவரிடம் கேட்டதற்கு, அந்த விக்கிரகத்தின் பெயர் குறிப்பிடப்படாததால் அது யாருடைய விக்கிரகம் என்று தெரியவில்லை என்றார். அவருக்கு மட்டும்தான் தெரியவில்லையா அல்லது வேறு யாருக்குமே தெரியாதா என்பது எனக்குத் தெரியவில்லை.

முகப்பில் உள்ள கருடன் சந்நிதிக்கு மேல் மகாவிஷ்ணுவின் கிடந்த திருக்கோலச் சிற்பம் ஒன்று இடம் பெற்றிருக்கிறது.

கோவிலில் அன்னதானம் நடந்து வருகிறது ஒரு சிறப்பு என்றால், அன்றைய அன்னதானத்துக்கான மெனு எழுதிப் போடப்பட்டிருந்தது இன்னொரு சிறப்பு. கோயில் திருப்பதி பெரிய ஜீயரின் நிர்வாகத்தில் உள்ளது.

கோவிலுக்குப் பின்புறம் (வட மேற்குத் திசையில்) ஏரி காத்த ராமர் கோவில் இருக்கிறது.மூலவர் சந்நிதியில் பிரும்மாண்டமான ராமர், லக்ஷ்மணர், சீதை விக்கிரகங்கள். எதிரே கோவிலின் முகப்பில் ஆஞ்சநேயர் சந்நிதி.

ஏரி காத்த ராமர் கோவிலுக்குப் பின்னே பெரிய ஏரி. ஏரியின் மத்தியில் நீராழி மண்டபம். இந்த ஏரி 'வருண புஷ்கரணி' என்று அழைக்கப்படுகிறது.   (சமுத்திரராஜன்தான் வருணன்.) இந்த புஷ்கரிணியிலிருந்து. தான் பக்தவத்சஸலப் பெருமாளுக்குத் தீர்த்தம் எடுக்கப்படுகிறது.  வருண புஷ்கருணியின் பெருமை பற்றி  நாரதர் பேசுவதாக பிரம்மாண்ட புராணத்தில் (பதினென் புராணங்களில் ஒன்று) வருகிறது என்று அறிகிறேன்.

பக்தவத்சஸலப் பெருமாள் கோவிலுக்கு முன்புறம் (கிழக்குத் திசையில்) ஒரு ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.

ராமர் கோவிலும், ஆஞ்சநேயர் கோவிலும் மிக நேர்த்தியாக உள்ளன. இந்த திவ்ய தேசத்துக்கு வருபவர்கள் அவசரம் அவசரமாக பக்தவத்ஸலப்   பெருமாள் கோவிலை மட்டும் தரிசித்து விட்டுச் செல்லாமல் இன்னும் பதினைந்து நிமிடங்கள் ஒதுக்கி ராமர் கோவிலையும், ஆஞ்சநேயர் கோவிலையும் தரிசித்து விட்டுச் செல்ல வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

இந்தக் கோவிலின் சந்நிதிகளையும், மற்ற இடங்களையும் புகைப்படமாக இந்த youtube வீடியோவில் காணலாம்.
https://www.youtube.com/watch?v=1o00pg4Zoec

இந்த திவ்ய தேசத்தை திருமங்கை ஆழ்வார் சேவித்து மங்களாசாசனம் செய்திருக்கிறார். ராமானுஜர், ராகவேந்திரர், தியாகப் பிரம்மம் போன்ற மகான்களும் இந்த திவ்ய தேசத்தில் வந்து தரிசனம் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

திருமங்கை ஆழ்வார் இந்தத்தலத்தைப் பற்றி இரண்டு பாசுரங்கள் பாடி இருக்கிறார். இது பற்றி ஒரு வரலாறு கூறப்படுகிறது. திருமங்கை ஆழ்வார் இந்தத் திருத்தலத்துக்கு வந்து சேவித்து விட்டுப் பெருமாள் மீது ஒரு பாசுரம் கூடப் பாடாமல் போய் விட்டாராம். இது பற்றித்  தாயார் பெருமாளிடம் குறைப்பட்டுக் கொள்ள, இதற்குள் திருக்கடல் மல்லைக்குச்  (மாமல்லபுரம்) சென்று விட்ட ஆழ்வாருக்குப் பெருமாள் அங்கே காட்சி கொடுக்க, திருமங்கை ஆழ்வார் கடல்மல்லையில் சயனித்திருக்கும் தலசயனப் பெருமாளுடன் திருநின்றவூர் பெருமாளையும் சேர்த்து ஒரு பாசுரம் பாடினார். இதுதான் அந்தப் பாசுரம்.

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருக்கடல்மல்லை 
பாசுரம் 1088
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு
      பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின் எந்தை
      என் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தை கரு முகிலை எம்மான்-தன்னை
      நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலைக்
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்
      கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே  

திருநின்றவூர்ப் பெருமாளைக்  கடல் மல்லையில் கண்டேன்' என்று பாடுகிறார் ஆழ்வார். 

பெருமாள் பாசுரத்தைப் பெற்றுக்கொண்டு திருநின்றவூர் வர, தாயார் 'ஒரு பாடல்தான் பாடினாரா?' என்று குறைப்பட்டுக்கொண்டாராம்.  உடனே பெருமாள் மீண்டும் ஆழ்வாரைத் தேடிக்கொண்டு சென்றார். அதற்குள் ஆழ்வார் திருக்கண்ணமங்கைக்குப் போய் விட்டார்! பெருமாள் அவருக்குத் திருக்கண்ணமங்கையில் திருநின்றவூர்  மூலவராகக் காட்சி கொடுக்க அவரைப் பற்றி இன்னொரு பாசுரம் இயற்றினார் ஆழ்வார். இந்தப் பாசுரத்தில் திருக்கண்ணமங்கைப் பெருமாள், திருநின்றவூர் பெருமாள் இருவருமே இடம் பெறுகின்றனர். இதோ அந்தப் பாசுரம்.

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருக்கண்ணமங்கை 
பாசுரம் 1642
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை
      இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும்
      ஐயனை கையில் ஆழி ஒன்று ஏந்திய
கூற்றினை குரு மா மணிக் குன்றினை
      நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
காற்றினை புனலை-சென்று நாடி-
      கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே        

'திருநின்றவூர்ப் பெருமானைத் திருக்கண்ணமங்கையில் கண்டேன்' என்கிறார் ஆழ்வார்.

ஆழ்வாரின் இந்தச் செயலுக்கு வேறொரு காரணம் (விளக்கம்)  இருக்கலாம் என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது.

திருநின்றவூர்ப் பெருமாளைப் பார்த்ததும் ஆழ்வார் பேச்சிழந்து நின்று விட்டார்.  அந்த இடத்திலிருந்து கிளம்பி வேறு பல ஊர்களுக்குச் சென்ற பிறகும்  திருநின்றவூர்ப் பெருமாளின் திருவுருவம் அவர் மனதை விட்டு நீங்கவில்லை. திருக்கடல்மல்லையில் கிடந்த கோலத்தில் பெருமாளைப் பார்த்தபோதும், 'திருநின்றவூரில் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளித்தவனாயிற்றே நீ!' என்று எண்ணிப் பாடுகிறார்.

திருக்கண்ணமங்கை பெருமாள் பெயரும் பக்தவத்ஸலப் பெருமாள் மற்றும் பத்தராவிப் பெருமாள். அவரும் நின்ற திருக்கோலத்தில்தான் காட்சி தருகிறார். எனவே திருநின்றவூர்ப் பெருமாளுடன் அவரை இணைத்துப் பாடுகிறார்.

திருநின்றவூர் சென்று பக்தவத்ஸலப் பெருமாளையும் என்னைப் பெற்ற தாயாரையும் தரிசித்த காலம் தொட்டு அந்த திவ்ய தம்பதிகள் என் நினைவில் நின்று கொண்டே இருக்கிறார்கள் என்பது சத்தியம்.

ஓம் நமோ நாராயணாய! 

Thursday, June 9, 2016

18. வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை

வைஷ்ணவ ஆசார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது.

"லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாத யாமுனமத்யமாம்
 அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்."

'லக்ஷ்மிநாதரான மகாவிஷ்ணுவிடம் துவங்கி, நாதமுனிகள், யமுனாச்சார்யர் (ஆளவந்தார்) ,  வழியாக, அவரவர்களுடைய ஆச்சார்யர் வரை தொடரும் இந்த குரு பரம்பரையை வணங்குகிறேன்' என்பது இந்தச் செய்யுளின் பொருள்.

இது ராமனுஜரின் சீடரான கூரத்தாழ்வார் அருளிய செய்யுள். வைஷ்ணவ ஆசார்ய பரம்பரையை இது சுருக்கமாகக் குறிப்பிடுகிறது. லக்ஷ்மிநாதனான நாராயணனிடம் துவங்குகிறது இந்தப் பெருமை மிக்க பரம்பரை. நாராயணின் திருவடிகளை அடைவதே ஒரு வைஷ்ணவனின் நோக்கம். இந்த நோக்கத்தை அடைய அந்த வைஷ்ணவருக்கு வழி காட்டும் ஆச்சார்ய பரம்பரையின் முதல் இடத்திலும் நாராயணனே இருக்கிறார்!

வைணவத்தில் ஒரு கோட்பாடு உண்டு. ஒரு மனிதன் அடைய வேண்டிய இடமும் (உபேயம்) அடைய வேண்டிய வழியும் (உபாயம்) ஒன்றே! இறைவனை அடைவது நோக்கம் என்றால் அதற்கு வழி இறைவனை (ஆச்சார்யர்களின் வழிகாட்டலின்படி) வணங்குவதுதான் . எனவே தன்னை அடைய நினைப்பவர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கும் ஆச்சார்ய பரம்பரையின் முதல் ஆச்சார்யராக மகலக்ஷ்மியோடு இணைந்திருக்கும் மகாவிஷ்ணுவே விளங்குவது பொருத்தம்தானே!

மகாவிஷ்ணு எப்போதும் மகாலக்ஷ்மியோடு இணைந்தே இருப்பதாகக் கொள்வது வைணவத்தின் (ராமானுஜர் மரபில் தென் இந்தியாவில் பின்பற்றப்படும் வைணவம்) அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. . மகாவிஷ்ணுவின் மார்பில் மகாலக்ஷ்மி குடியிருக்கிறார் என்பதால் மகாவிஷ்ணு அல்லது நாராயணன் என்று சொன்னாலும் அது மகாலக்ஷ்மியோடு கூடியிருக்கும் பெருமாளைத்தான் குறிக்கும். 'லக்ஷ்மிநாத' என்று கூரத்தாழ்வார்  குறிப்பிட்டிருப்பதன் முக்கியத்துவமும் இதுதான்.

திருமகளுடன் கூடிய திருமாலில் தொடங்கி, நாதமுனிகள் ஊடாக நமது ஆச்சார்யர் வரை ஆச்சார்ய பரம்பரையில் உள்ள அனைவர்க்கும் நமது வணக்கத்தைத் தெரிவிக்கும் செய்யுள் இது.

ஸ்ரீமன் நாராயணனிடம் தொடங்கும் இந்த ஆச்சார்ய பரம்பரையில் இடம் பெற்றிருக்கும் மற்ற ஆச்சார்யர்கள் யார்? வரிசையாக எல்லாப் பெயர்களையும் பார்ப்போம்.

மகாலக்ஷ்மியுடன் இணைந்திருக்கும் மகா விஷ்ணு.
மகாலட்சுமி
விஷ்வக்சேனர்
நம்மாழ்வார்
நாதமுனிகள்
உய்யக்கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
பெரியநம்பி
ராமானுஜர்

இந்தப் பட்டியலில் ராமானுஜருக்குப் பிறகு யார்? இதற்கு இந்தப் பதிவின் இறுதியில் பதில் சொல்கிறேன்.

அதற்கு முன்பு இந்தப் பட்டியலைச் சற்று கூர்ந்து பார்க்கலாம்.

இந்தப் பட்டியலில் மகாலக்ஷ்மி இரண்டு முறை வருவதைப் பார்க்கலாம். முதலில் மகாவிஷ்ணுவுடன் இணைந்து, பிறகு தனியே! இது எப்படி என்றால்,எல்லா வைணவக்  கோவில்களிலும் கருவறையில் இருக்கும் மூலவரான பெருமாளின் மார்பில் மகாலட்சுமி இருப்பார். அது தவிர சில கோவில்களில் பக்கத்திலும் இருப்பார். தனிச் சன்னதியிலும் இருப்பார்.

மகாலக்ஷ்மியின் கருணைதான் நமக்குப் பெருமாளின் அருளைப் பெற உதவுகிறது.

ஒரு படித்த இளைஞன்  வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போகிறான். அவனுக்குப்  பல நிலைகளில் வெவ்வேறு உயர் அதிகாரிகளிடம் இண்டர்வியூ இருக்கும். இறுதியாகப் பொது மேலாளர் அவனை இண்டர்வியூ செய்கிறார். அவர் தேர்வு செய்து விட்டாலே அவனுக்கு வேலை நிச்சயம். ஆனால் அவன் தலைமை அதிகாரியையும் சந்திக்க வேண்டி இருக்கும். அப்போது தலைமை அதிகாரியுடன் பொது மேலாளரும் இருப்பார். தலைமை அதிகாரிக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கூடப் பொது மேலாளர் அவனுக்குப் பரிந்து பேசுவார். ("இல்லை சார், ப்ளஸ் டூவில் மார்க் குறைவாக இருந்தாலும் கல்லூரியில் நல்ல மார்க் வாங்கி இருக்கிறார்") கருணைக் கடலான மகாலக்ஷ்மித் தாயாரும் இது போல் பெருமாளிடம் 'இவருக்கு அருள் புரிய வேண்டும்' என்று பரிந்துரைப்பார்.

விஷ்வக்சேனர் என்பவர் சேனைநாதர். அதாவது படைகளுக்குத் தலைவர். இவர் யானை முகம் கொண்டவர். ஆனால் இவர் விநாயகர் அல்ல. இவரது மனைவியின் பெயர் ஸுத்ரவதி.

நம்மாழ்வார் விஷ்வக்சேனரின் அவதாரமாகக் கருதப்படுகிறார். தாமிரபரணிக் கருத்தியில் திருநகரி என்ற ஊரில் காரியார்-உடைய நம்பி தம்பதிக்குப் பிறந்தவர். (இவர் பிறந்ததால் அந்த ஊருக்கு ஆழ்வார் திருநகரி என்ற பெயர் வந்தது.) பிறவியிலே ஞானியான இவர் மதுரகவி ஆழ்வாரால் இனம் கண்டு கொள்ளப்பட்டவர்.

நம்மாழ்வார் சைவ வேளாளர் குலத்தில் தோன்றியவர். இவரை விட வயதில் மூத்தவரான, அந்தண குலத்தில் பிறந்த மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் பெருமையை உணர்ந்து அவர் காலில் வீழ்ந்து வணங்கியதுடன் நம்மாழ்வாரின் இறுதிக்காலம் வரை அவருக்குத் தொண்டு செய்து வந்ததார்.

நம்மாழ்வார் மீது இவர் இயற்றிய கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற பதிகம் (பத்துப்  பாடல்கள்) நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ளது. திருமாலைப் பற்றிப் பாடாவிட்டாலும் திருமாலின் பெருமையை உலகுக்கு உணர்த்த வந்த நம்மாழ்வாரின் பெருமையைப் பாடியதால் மதுரகவியும் ஆழ்வார் என்று அங்கீகரிக்கப்பட்டவர்.

ஒரு காலக்  கட்டத்தில் வழக்கில் இல்லாமல் மறைந்து விட்ட நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை நம்மாழ்வாரை தியானித்துப் பெற்று  இவ்வுலகுக்கு வழங்க நாதமுனிகளுக்கு உதவியாக இருந்தது மதுரகவி ஆழ்வாரின் கன்னி நுண் சிறுத்தாம்புதான். இது பற்றி விவரமாக அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நம்மாழ்வாருக்குப் பிறகு நாதமுனிகள், அவருடைய சீடர் உய்யக்கொண்டார், அவரது சீடர் மணக்கால் நம்பி, அவரது சீடர் ஆளவந்தார், ஆளவந்தாரின் சீடர் பெரிய நம்பி, பெரிய நம்பியின் சீடர் ராமானுஜர்.

இராமானுஜருக்குப் பின் அவரது பல சீடர்கள் வழியே இந்த ஆச்சார்ய பரம்பரை கிளை விட்டுப் படர்ந்திருக்கிறது.

இந்தப் பதிவின் துவக்கத்தில் நாம் பார்த்த கூரத்தாழ்வாரின் 'லக்ஷ்மிநாத' என்ற செய்யுள் வைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரையை மேலிருந்து துவங்கி சுருக்கமாகக் குறிப்பிடுகிறது.

முன்பு ஒரு பதிவில் நாம் பார்த்த வேதாந்த தேசிகரின் பாசுரம், இதே ஆச்சார்ய பரம்பரையை கீழே (நம்மிடம்) தொடங்கி மேல் வரிசையில் விவரிக்கிறது. இதோ அந்தப் பாசுரம்.

என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கி
யான் அடைவேன் அவர் குருக்கள் நிறை வணங்கி
பின்னருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரிய நம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுகத் திருமகள் என்று இவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.

இந்தப் பாசுரத்தில் நம்மிடமிருந்து தொடங்கி, நமக்கு மேலே நமது பெற்றோர், அவர்களுக்கு மேல் அவர்களின் ஆச்சார்யர் (நம் ஆச்சார்யரும் அவரே), அவருக்கு மேலே அவரது ஆச்சார்யர் என்று பட்டியலிட்டுக்கொண்டே போனால் ராமனுஜரில் வந்து நிற்போம். இப்போது மேலிருந்து துவங்கிக் கீழே வந்தாலும், ராமனுஜருக்குக் கீழே யார் என்ற வரிசை நமக்குக் கிடைத்திருக்கும்.

இந்த ஆச்சார்ய பரம்பரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாதமுனிகள் முதலிய ஆச்சார்யர்களின் வரலாறை அடுத்த அதிர்வில் பார்ப்போம்.