Sunday, September 4, 2016

35. திவ்ய தேச தரிசன அனுபவம் 14. பரமேஸ்வர விண்ணகரம்(87)

தரிசனம் செய்த நாள் - 27/08/2016 (சனிக்கிழமை)
 தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
14. திருபரமேச்சுரவிண்ணகரம் (87)

பதத்தமிழாற் றன்னையே பாடுவித்தென் னைத்தன்
பதத்தடியார்க் கேயாட் படுத்தான் - இதத்த
பரமேச் சுரவிண் ணகரான் பலவான்
வரவேச் சுரலணைந்த மால். (87)
 - பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி.'

'வைகுண்டப் பெருமாள் கோயில்' என்று அழைக்கப்படும் 'பரமேஸ்வர விண்ணகரம்,' பரமேஸ்வர பல்லவன் என்ற மன்னனால் கட்டப்பட்டது.

பரத்வாஜ முனிவரின் தவத்தைக் கலைக்க வந்த கந்தர்வக் கன்னியிடம் அவர் மோகம் கொண்டதால் பிறந்த குழந்தையை விஷ்ணுவும், லக்ஷ்மியும் வேட்டுவர் தம்பதி போல் தோற்றம் கொண்டு வளர்த்து வந்தனர். பிறகு பல்லவ மன்னனுக்கு வாரிசு இல்லாததால் குழந்தையை அவனுக்கு அளித்தனர். குழந்தை வளர்ந்து பரமேஸ்வர பல்லவன் என்ற பெயரில் முடி சூட்டிக்கொண்டது.

சிறுவனாக இருந்தபோது பரமேஸ்வர பல்லவன் விஷ்ணுவிடம் 18 கலைகளையும் கற்றான். மன்னன் ஆனதும் பெருமாள் அவனுக்குப் பரமபதநாதனாகக்  காட்சி கொடுத்தார்.

பெருமாளிடம் இருந்த பக்தி காரணமாக மன்னன் ஆனதும் அவருக்கு இந்தக் கோயிலை எழுப்பினான் பரமேஸ்வர பல்லவன். அதனால் இது பரமேஸ்வர விண்ணகரம் என்று அழைக்கப்படுகிறது. வைகுண்டப்பெருமாள் கோயில் என்றும், பரமபதநாதர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

கர்ப்பக்கிரகமும், உட்பிரகாரமும் குடவரைக்கோயில் என்ற அமைப்பில் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. மூன்று அடுக்குகளைக்கொண்ட இந்தக் கோயில் மும்மாடக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.

முதல் அடுக்கில் (தரைத்தளத்தில்), பெருமாள் இருந்த கோலத்தில் பரமபத நாதராக மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

இரண்டாம் அடுக்கில், கிடந்த கோலத்தில் ரங்கநாதனாக புஜங்க சயனத்தில் சேவை சாதிக்கிறார். இந்த சந்நிதிக்குச் செல்ல, கோயிலின் உட்பிரகாரத்தில் சந்நிதிக்குப் பின்புறத்தில் படிக்கட்டுக்கள் உள்ளன. ஆனால் இந்த சந்நிதி ஏகாதசி அன்று காலை மட்டும்தான் திறக்கப்படும். நான் சென்றது ஏகாதசிக்கு முதல்நாள் மாலை. "நாளைக்காலையில் வந்தால் ரங்கநாதரைச் சேவிக்கலாம்" என்றார் அர்ச்சகர். எனக்கு அது இயலக்கூடியதாக இல்லை. மீண்டும் ஒருமுறை ஏகாதசி தினத்தன்று காலையில் வர வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

அப்போது என் மனதில் தோன்றிய ஒரு எண்ணத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். பொதுவாக திவ்ய தேசங்களைத் தரிசிப்பவர்கள், 25 கோயில்களை தரிசித்து விட்டாம் , 63 கோயில்களுக்குச் சென்று வந்து விட்டோம் என்று கணக்குப் போடுகிறார்கள் (போடுகிறோம்!). ஆனால் பெருமாள் சில சமயம் வேறு மாதிரி நினைக்கிறார் போலும். "ஏன், ஒரு தடவைதான் என் கோயிலுக்கு வர வேண்டுமா? இன்னொரு முறை வந்தால் என்ன?" என்று கேட்கிற மாதிரி சில சூழ்நிலைகளை உருவாக்குகிறார். சில கோயில்களில் சம்ப்ரோக்ஷணம் செய்வதற்கான  வேலைகள் நடந்து கொண்டிருக்கும். அதனால் மூலவர் சந்நிதியை தரிசிக்க முடியாமல் போகும். இது போன்ற சூழ்நிலைகளை உருவாக்கி, நம்மை மீண்டும் தன் இருப்பிடத்துக்கு வரவழைக்கிறார் பகவான். இதுவும் நம் நன்மைக்குத்தான் என்று நினைத்தால் இது போன்ற சூழ்நிலைகளைச்  சந்திக்கும்போது நாம் ஏமாற்றம் அடைய மாட்டோம்!

மூன்றாவது  அடுக்கில் நின்ற திருக்கோலம். இது கோயில் கோபுரத்தில் இருக்கிறது. இங்கே செல்ல வழி கிடையாது. கீழிருந்து பார்த்தாலும் தெரியாது.

அதனால் மூன்று சந்நிதிகளில், ஒன்றைத்தான் தரிசிக்க முடிகிறது. ஏகாதசியன்று போனால் இரண்டு சந்நிதிகளை தரிசிக்கலாம். மூன்று சந்நிதிகளில் தரிசனம் கிடைக்க சம்பந்தப்பட்டவர்கள் எதாவது ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். மூன்று திருக்கோலங்களில் பெருமாள் சேவை சாதிக்கும் கோயிலில், ஒரு சந்நிதியை எப்போதுமே தரிசிக்க முடியாது, மற்றொன்றை, மாதம் இரண்டு நாட்கள் காலை வேளையில்தான் தரிசிக்க முடியும் என்பது ஏமாற்றத்துக்குரிய விஷயம்தான்!

பெருமாள் சந்நிதிக்கு வெளியே, நமக்கு வலப்புறமாகத் தாயார் சந்நிதி. தாயாரின் பெயர் வைகுந்தவல்லி.கிழக்கு முகமாக, பெருமாள் இருக்கும் திசையை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார் தாயார்.

உட்பிரகாரம் முழுவதும் சுவர்களிலும், தூண்களிலும் அற்புதமான சிற்பங்கள். இவை பரமேஸ்வர பல்லவனின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் காட்சிகள் என்று சொல்லப்படுகிறது. விஷ்ணுவிடம், பல்லவன் பாடம் கற்கும் காட்சி போன்ற பல காட்சிகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன என்று சொல்கிறார்கள். ஆனால் சிற்பங்கள் தேய்ந்தும், சிதைந்தும் இருப்பதால், அவற்றை உற்று நோக்கி அவற்றில் விவரிக்கப்பட்டுள்ள காட்சிகளைப் புரிந்து கொள்வது கடினமான செயல்.

விஷ்வக்சேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோருக்கு தனிச் சந்நிதிகள் இருக்கின்றன.

விமானம் - முகுந்த விமானம்

தீர்த்தம் - ஐரம்மத தீர்த்தம்

பெருமாளின் திருவுருவை இங்கே காணலாம்.

இந்தக் கோயில் பற்றிய விவரங்களைக் கோயிலின் அர்ச்சகர் கூறுவதை இந்த வீடியோவில் காணலாம்.


இந்த திவ்ய தேசம் பற்றித் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். பாசுரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இது பல்லவ மன்னன் வழிபட்ட கோயில் என்று ஆழ்வார்  பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார்.
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருப்பரமேச்சுரவிண்ணகரம்
1127 சொல்லு வன் சொல் பொருள் தான் அவை ஆய்
      சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும் ஆய்
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு
      இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில்
      பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (1)
 
1128 கார் மன்னு நீள் விசும்பும் கடலும்
      சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்-
      தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில்
      செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (2)
 
1129 உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்
      ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்
வரம் தரு மா மணிவண்ணன் இடம்
      -மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்
      நெடு வாயில் உக செருவில் முன நாள்
பரந்தவன் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (3)
 
1130 அண்டமும் எண் திசையும் நிலனும்
      அலை நீரொடு வான் எரி கால் முதலா
உண்டவன் எந்தை பிரானது இடம்
      -ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
விண்டவர் இண்டைக் குழாமுடனே
      விரைந்தார் இரிய செருவில் முனிந்து
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (4)
 
1131 தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்
      துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
பூம் புனல் பொய்கை புக்கான்-அவனுக்கு
      இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்
      திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (5)
 
1132 திண் படைக் கோளரியின் உரு ஆய்
      திறலோன் அகலம் செருவில் முன நாள்
புண் படப் போழ்ந்த பிரானது இடம்-
      பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப
      விடை வெல் கொடி வேல்-படை முன் உயர்த்த
பண்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (6)
 
1133 இலகிய நீள் முடி மாவலி-தன்
      பெரு வேள்வியில் மாண் உரு ஆய் முன நாள்
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு
      இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
உலகு உடை மன்னவன் தென்னவனைக்
      கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ
பல படை சாய வென்றான் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (7)
 
1134 குடைத் திறல் மன்னவன் ஆய் ஒருகால்
      குரங்கைப் படையா மலையால் கடலை
அடைத்தவன் எந்தை பிரானது இடம்-
      அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்
      வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த
படைத் திறல் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (8)
 
1135 பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து
      முன்னே ஒருகால் செருவில் உருமின்
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு
      இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
கறை உடை வாள் மற மன்னர் கெட
      கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்
பறை உடைப் பல்லவர்-கோன் பணிந்த
      பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே             (9)
 
1136 பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்-கோன்
      பணிந்த பரமேச்சுரவிண்ணகர்மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம்
      தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்
      திரு மா மகள்-தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்
      செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே            (10)
ஓம் நாராயணாய!



34. திவ்ய தேச தரிசன அனுபவம் 13. திருப்பவளவண்ணம் (86)

தரிசனம் செய்த நாள் - 27/08/2016 (சனிக்கிழமை)
 தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
13. திருப்பவளவண்ணம் (86)

கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால்
உண்டறிந்து மோந்தறிந்து முய்யேனே - பண்டைத்
தவளவண்ணா! கார்வண்ணா! காமவண்ணா! கச்சிப்
பவளவண்ணா! நின்பொற் பதம். (86)
 - பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி.'

பச்சை விண்ணப் பெருமாள் கோயில், பவளப்பெருமாள் கோயில் ஆகிய இரண்டும் அருகருகே, சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் நேர் எதிரே அமைந்துள்ளன. ஒரு கோயிலிலிருந்து நேரே பார்த்தால் இன்னொரு கோயில் தெரியும். இவற்றில் பவள வண்ணப் பெருமாள் கோயில் மட்டும்தான் திருமங்கை ஆழ்வாரால் பாடப்பட்டு திவ்ய தேசமாக விளங்குகிறது.  ஆயினும் இரண்டு கோயில்களையும் சேவிப்பதுதான் முறையாகக் கருதப்படுகிறது.

நான் முதலில் சென்றது பச்சை வண்ணரின் கோயிலுக்குத்தான். உலகளந்த பெருமாள் கோயிலிலிருந்து போகும்போது இந்தக் கோயில்தான் முதலில் வருகிறது. இது மிகவும் சிறிய கோயில். ஆனால் நேர்த்தியாக அழகாக இருக்கிறது. நான் கோயிலுக்கு அருகில் சென்றபோது உற்சவர் புறப்பட்டு கோயிலுக்கு வெளியே வந்து விட்டார். உற்சவரைச்  சேவிக்க வேண்டுமென்று வேகமாக நடந்தும் முடியவில்லை. வேகமாக நடந்து உற்சவரைத் தாண்டிப்போய் அவரைச் சேவிக்க முயலும்போது அவர் என்னைத் தாண்டிப் போய் விடுவார். இரண்டு மூன்று முறை முயன்று விட்டுக் கோயிலுக்குத் திரும்பி விட்டேன். உற்சவர் முகத்தைச் சரியாகப் பார்க்க்க முடியவில்லையே என்று ஒரு குறை இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பவள வண்ணர்  கோயிலில் அவர் எனக்கு நிறைவான தரிசனத்தைக் கொடுக்கப் போகிறார் என்பது எனக்கு அப்போது தெரியாது.

பச்சை வண்ணரின் மேனி மரகதப்  பச்சை நிறம் கொண்டது என்பதால் இந்தப் பெயர். அமர்ந்த திருக்கோலம்.  தாயாரின் பெயர் மரகதவல்லி.

முகப்பிலேயே ஆஞ்சநேயர் சந்நிதியும், பிரகாரத்தில் ஆண்டாள் சந்நிதியும் உள்ளன.

பச்சை வண்ணரைச் சேவித்து விட்டுப் பவள வண்ணர் கோயிலுக்குச் சென்றேன். இது பச்சை வண்ணர் கோயிலை விடச் சற்றே  பெரியது.

கோயிலின் முன்புறத்தில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் ஆண்டாள். ராமர், அனந்தாழ்வார் சந்நிதிகள் உள்ளன. பெருமாள் சந்நிதிக்கு வெளியே ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் சந்நிதிகள் உள்ளன.

பவளவண்ணர் ஆதிசேஷன் மீது அமர்ந்து இருந்த திருக்கோலத்தில் பரமபதநாதனாக சேவை சாதிக்கிறார்.

பிரும்மாவின் யாகத்தைத் தடுக்க சரஸ்வதி அசுரர்களை அனுப்பியபோது, அந்த அசுரர்களுடன் போரிட்டு மகாவிஷ்ணு அவர்களை அழித்தார். போரிட்டபோது அவர் உடலில் அசுரர்களின் ரத்தம் சிந்தியதால் அவர் மேனி பவள நிறமாகத்  தோன்றியது. அந்தக் கோலத்திலேயே இங்கே காட்சி அளிக்கிறார்.

தாயாரின் பெயர் பவளவல்லி. அவருக்கு பிரகாரத்தில் தனி சந்நிதி உள்ளது.

பெருமாளுக்கு பிரவாளவண்ணன் என்றும் பெயர் உண்டு. தாயாரின் பெயர் பவளவல்லி மற்றும் பிரவாளவல்லி.

தீர்த்தம் - சக்ர தீர்த்தம்

விமானம் - பவள விமானம்

பிருகு மகரிஷி இந்தப் பெருமாளை வழிபட்டார் என்றும் ஒரு வரலாறு உண்டு. பெருமாள் சந்நிதியில் பிருகு மஹரிஷியின் விக்கிரகம் இருக்கிறது.

பவள வண்ணர் பிருகு மகரிஷி, அஸ்வினி தேவதைகள், பார்வதி ஆகியோருக்குகே காட்சி கொடுத்திருக்கிறார்.

பவள வ ண்ணப் பெருமாள் கோயிலுக்கு நான் வந்தபோது, உற்சவர் புறப்பாட்டுக்குத் தயாராக இருந்தார். பச்சை வண்ணரின் உற்சவர் இந்தக் கோயில் வாசலில் வந்து இறங்கினார். பவள வண்ணரின் உற்சவரும் வெளியே எழுந்தருளி, பச்சை வண்ணருக்கு அருகிலேயே நிலைகொண்டார். அன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இரண்டு உற்சவர்கள் முன்னிலையிலும், உறியடி உற்சவம் நடைபெறத்  தயாராக இருந்தது.

இரண்டு உற்சவர்களையும் ஒருங்கே வழிபட்டு விட்டு அடுத்த கோயிலுக்குக்  கிளம்பினேன்.


இந்த திவ்ய தேசம் பற்றித் திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல் இதோ.   
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திரு நெடுந்தாண்டகம்
2059 வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
      மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய்
கொங்குத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன்
      குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
      பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா
எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி
      ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே             (9)

ஓம் நாராயணாய!



Saturday, September 3, 2016

33. திவ்ய தேச தரிசன அனுபவம் 12 - திருக்கள்வனூர் (85)

தரிசனம் செய்த நாள் - 27/08/2016 (சனிக்கிழமை)
 தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
12. திருக்கள்வனூர் (85)
பண்டேயுன் றொண்டாம் பழவுயிரை யென்னதென்று
கொண்டேனைக் கள்வனென்று கூறாதே - மண்டலத்தோர்
புள்வாய் பிறந்த புயலே! உனைக்கச்சிக்
கள்வாவென் றொதுவதென் கண்டு? (85)
 - பிள்ளைப் பெருமாள்  ஐயங்காரின் 'நூற்றியெட்டு  திருப்பதி அந்தாதி '

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் உள்ள திவ்ய தேசம் இது. காமாட்சி அம்மன் சந்நிதிக்கு வெளியே உள்ள  காயத்ரி மண்டபத்தில் உள்ளது இந்த சந்நிதி.

மூலவர்  - ஆதிவராஹப் பெருமாள்
தாயார்  - அஞ்சிலைவல்லி நாச்சியார்.
விமானம் -  வாமன விமானம்
தீர்த்தம் - நித்ய புஷ்கரணி

சுவற்றில் உள்ள ஒரு மாடத்தில் சிறிய உருவில் காட்சி அளிக்கிறார் பெருமாள். அவருக்குப் பக்கத்தில்  அஞ்சிலைவல்லித் தாயார், பெருமாளை வணங்கும் கோலத்தில் காட்சி தருகிறார். காமாட்சி அம்மன் சந்நிதிக்கு மறுபுறம் சுவற்றில் அரூப லட்சுமி என்ற மற்றோரு சந்நிதி இருக்கிறது.

இந்த விவரங்கள் எல்லாம் நான் பல வலைப்பதிவுகளில் படித்தவை! இப்போது கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதால், இந்த திவ்ய தேசத்தைக் கண்ணாடியில்தான் பார்க்க முடிந்தது (கண்ணாடி சேவை)! கண்ணாடியில் பெருமாளின் திருவுருவத்தை ஓரளவுக்குத்தான் பார்க்க முடிந்தது. தாயாரின் திருவுருவம் கண்ணாடியில் எனக்குப் புலப்படவில்லை

இந்த திவ்ய தேசத்துக்கான தலபுராணங்கள் தெளிவாக இல்லை. திருக்குளத்தில் பார்வதியும், லக்ஷ்மியும் பேசிக்கொண்டிருந்ததை பெருமாள் ஒட்டுக்கேட்டதால், காமாட்சி வடிவில் இருந்த பார்வதி, தங்கை என்ற உரிமையில் பெருமாளை 'கள்வா' என்று அழைத்ததால் இந்த திவ்ய தேசத்துக்குத் திருக்கள்வனூர் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் பெருமாளின் பெயர் ஆதிவராஹர் என்றல்லவா இருக்கிறது?.

இந்த திவ்ய தேசப்  பெருமாளின் திருவுருவத்தை இங்கே காணலாம். புகைப்படங்களில் கூடத்  தாயாரின் உருவம் இடம் பெற வில்லை!

பெருமாளின் பெயர் ஆதிவராஹர் என்று இருக்க, இந்தக் கோயிலில் உள்ள மூர்த்தி வராஹ மூர்த்தியின் வடிவில் இல்லை.

திருக்கார்வானம் பற்றிய எனது பதிவில் ஆழ்வார் 'கார்வானத்தில் உள்ளாய் கள்வா' என்று பாடியிருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இந்த வரியில் உள்ள 'கள்வா' என்ற சொல் இந்த திவ்ய தேசத்தைக்க  குறிப்பதாகக் கருதப்பட்டு,  இந்த சந்நிதியம் திவ்ய தேசம் என்று  வகுக்கப்பட்டுள்ளது.  இது பற்றிப் பல சந்தேகங்கள் இருந்தாலும், பெரியோர்கள் தீர்மானித்ததை ஏற்பதுதானே  நமது கடமை?

இந்த திவ்ய தேசம் பற்றிய சுவாரஸ்யமான ஒரு தகவலை 'திருவெஃகா' பற்றி எழுதும்போது பகிர்ந்து கொள்கிறேன்.

திருமங்கை ஆழ்வாரின் பாடல் இதோ:
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திரு நெடுந்தாண்டகம்
2058 நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
      நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
      உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
      காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
      பெருமான் உன் திருவடியே பேணினேனே             (8)

   ஓம் நமோ நாராயணாய!










Thursday, September 1, 2016

32. திவ்யதேச தரிசன அனுபவம் - 11. திருக்கார்வானம் (84)

தரிசனம் செய்த  நாள்: 27/08/2016 (சனிக்கிழமை)
                                            தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
11. திருக்கார்வானம் (84)

தாலேலோ வென்றாய்ச்சி தாலாட்டித் தன்முலைப்பா
லாலேயெவ் வாறுபசி யாற்றினள்?முன் - மாலே!பூங்
கார்வானத் துள்ளாய்! கடலோடும் வெற்போடும்
பார்வான முண்டாய்!நீ பண்டு (84)
        - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி'  

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் உள்ள மற்றொரு சந்நிதி திருக்கார்வானம். கார் வானம் என்றால் மேகம் சூழ்ந்த வானம் என்று பொருள் படும். இந்த திவ்ய தேசப்பெருமாளின் பெயர் கள்வர். மேகம் சூழ்ந்த ஆகாயம் என்பது வானுலகைக் குறிக்கும் என்றால், வானுலகில் இருந்து கொண்டு மாயம் செய்பவன் என்ற பொருளில் இவர் 'கள்வன்' என்று அழைக்கப்படுகிறார் என்று கொள்ளலாம்.

இந்தக் கோயிலில் உள்ள மற்ற திவ்ய தேசப்  பெருமாள்களை 'ஊரகத்தாய்,' 'நீரகத்தாய்,' 'காரகத்தாய்' என்று திவ்ய தேசத்தின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுப் பாடியிருக்கும் திருமங்கை ஆழ்வார், இந்த திவ்யதேசத்துப் பெருமாளை பற்றிப் பாடும்போது 'கார்வானத்தில் உள்ளாய் கள்வா' என்று பெருமாளின் பெயரையும் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.

திருக்கள்வனூர் என்ற திவ்ய தேசம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் உள்ளது. அந்தப் பெருமாளின் பெயர் ஆதிவராஹப் பெருமாள். ஆயினும் இரண்டு திவ்யதேசங்களுக்கும் 'கள்வன்' என்ற பெயரோடு தொடர்பு இருப்பதால்,  தான் எந்தப் பெருமாளைப்  பற்றிப் பாடியிருக்கிறோம் என்பது பற்றிப் பிற்காலத்தில் ஏதும் குழப்பம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே திவ்ய தேசத்தின் பெயர், பெருமாளின் பெயர் ஆகிய இரண்டையும் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

உலகளந்த கோயில் பெருமாள் கோயிலின் முன்புறத்தில் பிரகாரத்தின் இறுதியில் திருநீரகத்துக்கு எதிர்ப்புறமாக, நாம் கோயிலில் நுழைந்ததுமே நமக்கு வலப்புறமாக அமைந்துள்ளது இந்தச் சந்நிதி. கார்வானப் பெருமாள் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் இரு தாயார்களுடன் சேவை சாதிக்கிறார்.

பெருமாளின் திருவுருவை இங்கே காணலாம்..

மூலவரின் பெயர் - கார்வானப் பெருமாள், கள்வர் பெருமாள்

தாயார் - கமலவல்லி நாச்சியார்

விமானம் - புஷ்கல விமானம்

தீர்த்தம் - கௌரி தீர்த்தம்.

பார்வதி தேவிக்குக் காட்சி கொடுத்திருக்கிறார்.

இந்த திவ்ய தேசம் பற்றியும் வேறு விவரங்கள் இல்லை.

திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல் இதோ:

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திரு நெடுந்தாண்டகம்
2058 நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
      நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
      உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
      காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
      பெருமான் உன் திருவடியே பேணினேனே             (8)

ஓம் நமோ நாராயணாய!




31. திவ்யதேச தரிசன அனுபவம் - 10. திருக்காரகம் (83)

தரிசனம் செய்த நாள் - 27/08/2016 (சனிக்கிழமை)
 தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
10. திருக்காராகம் (83)
ஓராதார் கல்வி யுடையேங் குலமுடையேம்
ஆரா தனமுடையேம் யாமென்று - சீராயன்
பூங்கர ரகங்காணப் போதுவார் தாடலைமேல்
தாங்கா ரகங்காரத் தால் (83) 
        - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி' 


காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் உள்ள மற்றொரு சந்நிதி திருக்காரகம். காரகர் என்ற முனிவருக்கு காட்சி கொடுத்ததால் இந்தப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

திருமங்கை ஆழ்வார் மங்களசாஸனத்தைத் தவிர இந்தப் பெருமாள் பற்றி அதிகக் குறிப்புகள் இல்லை. 'உலகமேத்தும் காரகத்தாய்!' என்று ஆழ்வார் இந்தப் பெருமாளை விளிப்பதால், இது ஒரு பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்திருக்கக் கூடும் என்று அனுமானிக்கலாம்.

உலகளந்த பெருமாள் கோயில் பிரகாரத்தில் உள்ள திருநீரகம், திருக்காராகம், திருக்கார்வானம் ஆகிய மூன்று  சந்நிதிகளும் வேறு இடத்தில் இருந்திருக்கலாம் என்றும், பிற்காலத்தில் எதோ ஒரு காரணத்துக்காக இந்தச்  சந்நிதிகள் இந்தக் கோயிலுக்குள் நிறுவப் பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு. திருஊரகத்தைக்  'கச்சி ஊரகத்தாய்' என்று பாடிய ஆழ்வார், இந்த மூன்று திவ்ய தேசங்களுக்கும் ஊரின் பெயரைக் குறிப்பிடாதது  இவை காஞ்சிக்கு வெளியே இருந்திருக்கலாம் என்ற கருத்துக்கு வலு சேர்க்கிறது.

பிரகாரத்தின் வலப்புறத்தில், தாயார் சந்நிதிக்கு அருகே இருக்கிறது இந்த சந்நிதி. பெருமாள் ஆதிசேஷன் மீது அமர்ந்த திருக்கோலத்தில் வடக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தலைக்கு மேலே ஆதிசேஷன் குடையாக  நிற்கும் தோற்றம்.

மூலவர் கருணாகரப்  பெருமாள். உற்சவர் இல்லை.

தாயாரின் பெயர் பத்மாமணி நாச்சியார் மற்றும் ரமாமணி நாச்சியார். தாயாருக்குத் தனி விக்கிரகம் இல்லை.பெருமாளின் திருமார்பில் குடியிருக்கும்  தாயாரையே இந்தப் பெயர்கள் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.

விமானம் - வாமன விமானம், ரம்ய விமானம்

தீர்த்தம் - அக்ராய தீர்த்தம்.

இந்த திவ்ய தேசப்  பெருமாளின் திருவுருவை இங்கே காணலாம்.

திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசம் பற்றித் தனது ஒரு பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திரு நெடுந்தாண்டகம்
2058 நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
      நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
      உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும் 
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
      காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
      பெருமான் உன் திருவடியே பேணினேனே             (8)

ஓம் நமோ நாராயணாய!




Wednesday, August 31, 2016

30. திவ்ய தேச தரிசன அனுபவம் 9 - திருஊரகம் (81)

தரிசனம் செய்த நாள் - 27/08/2016 (சனிக்கிழமை)
 தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
8. திருஊரகம் - 81


நேசத்தா லன்றுலகை நீர்வார்க்க வைத்தளந்த
வாசத்தா ளென்றலைமேல் வைத்திலையேல் - நாசத்தால்
பாரகத்து ளன்றிநான் பாழ்நரகில் வீழ்ந்தென்கொல்?
ஊரகத்து ணின்றாய்! உரை. (81)
 - பிள்ளைப் பெருமாள்  ஐயங்காரின்  'நூற்றியெட்டு  திருப்பதி அந்தாதி' 

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் திருஊரகம், திருநீரகம், திருக்காராகம், திருக்கார்வானம்  ஆகிய நன்கு திவ்ய தேசங்களை உள்ளடக்கியது.

இவற்றில் திருஊரகம் என்பது உலகளந்த பெருமாலைக் குறிக்கும்.

மகாபலிச் சக்ரவர்த்தியின் முன், வாமனனாக, சிறு உருவத்துடன் நின்ற பகவான்,  திரிவிக்கிரமனாக உருவெடுத்து, .ஓங்கி உலகளந்த உத்தமனாகி, இரு அடிகளால்  மண்ணுலகையும், விண்ணுலகையும் அளந்து, மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து அழுத்தி, அவனுக்கு மோட்சத்தை அருளினார்.

திரிவிக்கிரமரின்  திருவடிக்குக்  கீழே, பாதாள உலகத்தில் இருந்தததால், பகவானின் இந்த விஸ்வரூபத்தை மகாபலியால் தரிசிக்க முடியவில்லை. மகாபலியின் வேண்டுகோளுக்கு இணங்க, பெருமாள் அவனுக்கு உலகளந்த பெருமாளாகக் காட்சி அளித்தார்.   இதுதான் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாளின் தலபுராணம்.

உலகளந்த பெருமாளின் விண்ணெட்டிய தோற்றத்தை மகாபலியால்
முழுவதுமாகக் காண முடியவில்லை. அதனால் அவன் காணும் விதமாக அவனுக்கு ஆதிசேஷன் வடிவில் காட்சி அளித்தார். ஆதிசேஷனாக பகவான் காட்சி அளித்த தோற்றம் 'திருஊரகம்' என்ற பெயரால் வழங்கப்படுகிறது. 'உரகம்' என்றால் பாம்பு. இதுவே மருவி 'ஊரகம்' என்றாகியது. ஊரகம்  என்ற இந்த வடிவம் நாம் வேறெங்கும் காண முடியாதது.

உலகளந்த பெருமாள் சுமார் 50 அடி உயரத்துடன் மிக பிரும்மாண்டமாகக் காட்சி அளிக்கிறார். மேற்கு நோக்கியபடி நின்ற திருக்கோலம். மஹாபலிக்கு அவர் காட்டிய வடிவம் விண்ணைத்தொட்ட வடிவம். அதைக்க கோயிலுக்குள் அடக்க முடியாது. இங்கே உள்ள வடிவம் நம்மைப்  போன்ற மனிதர்கள் காணும் விதமாக அமைந்துள்ளது. வலது காலைத்  தரையில் ஊன்றி, இடது காலை மேலே தூக்கி நிற்கிறார். 'இரண்டு அடிகளை அளந்து விட்டேன், மூன்றாவது அடியை எங்கே வைப்பது?' என்று கேட்கும் வண்ணமாக, இடது கரத்தில் இரண்டு விரல்களையும், வலது கரத்தில் ஒரு விரலையும் நீட்டியபடி நிற்கிறார். இந்த சந்நிதிக்குப் 'பேரகம்' என்றும் பெயர் உண்டு. உற்சவர் 'பேரகத்தான்' என்று அழைக்கப்படுகிறார்.

பெருமாள் சந்நிதிக்கு வெளியே, கர்ப்பக்கிரகத்துக்கு மிக அருகில், பெருமாளுக்கு வலப்புறமாக திருஊரகம் சந்நிதி இருக்கிறது.

விமானம் - ஸாரா  ஸ்ரீகர  விமானம்

தீர்த்தம் - நாக தீர்த்தம்

பிரகாரத்தில், பெருமாளுக்குப் பின்புறமாக ஆரணவல்லித் தாயாரின் சந்நிதி உள்ளது. இவர் அமுதவல்லி, அமிர்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறார். தயார் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்.

திருநீரகம், திருக்காராகம், திருக்கார்வானம் ஆகிய திவ்ய தேசங்கள் தனிச் சந்நிதிகளாகப் பிரகாரத்தில் உள்ளன.

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் இந்தக் கோயிலில் அர்ச்சகராக இருந்திருக்கிறார்.

இந்த திவ்ய தேசம் திருமழிசை ஆழ்வார் (2 பாசுரங்கள்), திருமங்கை ஆழ்வார் (4 பாசுரங்கள்) ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6 பாசுரங்கள். பாசுரங்களைக் கீழே காணலாம்.

முதல் ஆயிரம் 
திருமழிசை ஆழ்வார் 
திருச்சந்த விருத்தம்
813 நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெஃகணைக் கிடந்தது என்ன நீர்மையே?            (63)
 
814 நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே             (64)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திரு நெடுந்தாண்டகம்
2058 நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
      நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி 
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
      உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
      காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
      பெருமான் உன் திருவடியே பேணினேனே             (8)

2063 கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய் என்னும்
      காமரு பூங் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
      வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும்
      மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று
      துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே             (13)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
சிறிய திருமடல்
2672 கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும்    (1)
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று    (2)
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும்    (3)
வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை    (4)
வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே    (5)
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து    (6)
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித்    (7)
தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும்    (8)
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு    (9)
கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும்   (10)
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத்   (11)
தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர்   (12)
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த   (13)
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு   (14)
ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்   (15)
நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு (16)
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் (17)
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து (18)
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை (19)
சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் (20)
பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் (21)
தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு (22)
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23)
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக் (24)
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் (25)
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் (26)
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன் (27)
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் (28)
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு (29)
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் (30)
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் (31)
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் (32)
பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு (33)
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை (34)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் (35)
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர் (36)
பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (37)
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல் (38)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய மடல்
2673 மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை      (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை      (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்      (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத்      (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான்      (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்      (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்      (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்      (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள்
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்      (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க   (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்     (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்     (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த     (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்     (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில்     (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்     (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம்     (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்     (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு     (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே     (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்     (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம்             (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வௌ¢ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வௌ¢ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80) 

   ஓம் நமோ நாராயணாய!










Monday, August 29, 2016

29. திவ்ய தேச தரிசன அனுபவம் 8 - நிலாத் திங்கள் துண்டம்(80)

      தரிசனம் செய்த நாள் - 27/08/2016 (சனிக்கிழமை)                              
                                        தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
                                             7. திருநிலாத்திங்கட்டுண்டம்
மீண்டுந் தெளியார்கண் மேதினியோர் நின்னடிப்பூப்
பாண்டரங்க மாடி படர்சடைமேல் - தீண்டிக்
கலாத்திங்கட் டுண்டத்தின் மீதிருப்பக் கண்டு
நிலாத்திங்கட் டுண்டத் தானே! (80)
   - பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி' 

இந்த திவ்ய தேசம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குள் அமைந்திருக்கிறது. ஏகாம்பரநாதர்  சந்நிதிக்கு முன் உள்ள உட்பிரகாரத்தில் வலது புறம் ஒரு தனிச் சந்நிதியாக அமைந்துள்ளது இந்த திவ்ய தேசம்.

பார்வதி சிவபெருமானின் கோபத்துக்கு ஆளாகி காஞ்சிக்கு வந்து தவம் செய்தார். அவரைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் பார்வதி தேவி தவம் செய்து கொண்டிருந்த இடத்திலிருந்த மரத்தைத் தீப்பிடித்து எரியச்  செய்தார்.

பார்வதி தனது சகோதரரான விஷ்ணுவை வாமன ரூபத்தில் தியானித்தார், (வாமனார்தானே விஸ்வரூபம் எடுக்கக் கூடியவர்?) அப்போது விஷ்ணு அங்கே தோன்றி நிலவின் கிரணங்களை நெருப்பின் மீது பாய்ச்சி அந்த இடத்தைக் குளிரச் செய்தார். அதனால் இவருக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்று பெயர். (நிலவின் கதிர்களைக்கொண்டு தீயைத் துண்டித்ததால் இந்தப் பெயர்.

அதற்குப் பிறகு சிவபெருமான் பார்வதியை மேலும் சோதனை செய்ய எண்ணி அங்கே கங்கையைப் பாயச் செய்தார். அப்போது பார்வதி சிவலிங்கத்தை அணைத்துக்கொள்ள, இருவரும் ஒன்றிணைந்தனர். சிவன் பார்வதி இருவருக்கும் அங்கே காட்சி அளித்தார் நிலாத்திங்கள் துண்டப் பெருமாள்.
இவருக்கு சந்திர சூடன் என்றும் பெயர் உண்டு.

இந்தச் சந்நிதி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் அமைந்திருப்பதால் இந்தப் பெருமாள் சிவாச்சாரியார்களாலேயே  பூஜை செய்யப்படுகிறார்.

27/08/16 மாலை நான் இந்த சந்நிதியில் தரிசனம் செய்தபோது அங்கிருந்த ஒரு வயதான சிவாச்சாரியார், '108 திருப்பதி பெருமாள்' என்று கூறியபடியே அனைவருக்கும் சடாரி வைத்து, துளஸிப் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார். தனிச் சந்நிதியில் சற்றே பெரிய உருவத்துடன் காட்சி அளிக்கிறார் பெருமாள்.

அதே சந்நிதியில் நிலாத் திங்கள் துண்டருக்கு அருகில் (வலது புறத்தில்) இன்னொரு விக்கிரகம் இருக்கிறது. 'அவர் யார்?' என்று கேட்டதற்கு 'ஆதி நாராயணன்' என்றார் சிவாச்சாரியார். ஆனால் இந்த விக்கிரகம் நிலாத்திங்கள் துண்டம் திவ்ய தேசத்தின் எந்தப் புகைப்படத்திலும் இடம் பெறவில்லை. இதைப்பற்றிய எந்தக் குறிப்பையும்  வலைத்தளங்களில் என்னால் காண முடியவில்லை.

நிலாத்திங்கள் துண்டப்  பெருமாள், தலைக்கு மேலே  ஆதிசேஷனுடன், மேற்கு நோக்கியபடி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். தாயாரின் பெயர் நிலாத்திங்கள் துண்டத் தாயார் மற்றும் நேர் ஒருவர் இல்லா வல்லி நாச்சியார். தயார் விக்கிரகம் சந்நிதியில் இல்லை. மற்ற திவ்ய தேசங்களுக்கு இருப்பதுபோல், இந்த திவ்ய தேசத்துக்கும் விமானம், தீர்த்தம் ஆகிய தனித்துவங்கள்  உள்ளன. விமானம் - புருஷ சுக்த விமானம். தீர்த்தம் - சந்திர தீர்த்தம்.

இந்த திவ்ய தேசம் பற்றித்  பற்றித் திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரம் பாடியிருக்கிறார். இந்த திவ்ய தேசம் ஏகாம்பரேஸ்வர் கோயிலுக்குள் இருப்பதாக அவர் எங்கும் குறிப்பிடவில்லை. வேறு எங்கோ இருந்த இந்தச் சந்நிதி எதோ ஒரு காரணத்தால் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் இடம் பெற்று விட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் இருப்பதால், பெருமாளின் உயர்ந்த நிலையை (பரத்துவத்தை) யாரும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்பதற்காகத்தானோ என்னவோ, பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் தன்னுடைய  '108 திருப்பதி அந்தாதி'யில் (இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் இடம் பெற்றுள்ள பாசுரத்தில்), அர்ஜுனன், தான் கிருஷ்ணனின் காலடியில் சமர்ப்பித்த பூக்கள் சிவபெருமானின் தலையில் இருப்பதைக் கண்ட மகாபாரதக் கதையை நினைவு படுத்தி இருக்கிறார்!

இந்த திவ்ய தேசம் பற்றிய விவரமான கட்டுரையை இங்கே படிக்கலாம்.

பெருமாளின் திருவுருவை இங்கே காணலாம்.

ஆழ்வார் பாசுரம் இதோ:
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திரு நெடுந்தாண்டகம்
2058 நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
      நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
      உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
      காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
      பெருமான் உன் திருவடியே பேணினேனே             (8)

ஓம் நமோ நாராயணாய!