Saturday, February 3, 2018

50. திவ்யதேச தரிசன அனுபவம் - 29 திருநாவாய் (65)

தரிசனம் செய்த நாள்: 22.01.18  திங்கட்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
7. திருநாவாய்  (65)


பறந்து திரிதரினும் பாவியே னுள்ளம்
மறந்தும் பிறிதறிய மாட்டா - சிறந்த
திருநாவாய் வாழ்கின்ற தேவனையல் லாலென்
ஒருநாவாய் வாழ்த்தா துகந்து. (65)
- பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி'

பாரதப்புழா நதியின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது திருநாவாய் திவ்ய தேசம். திருவித்துவக்கோலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ஷோரனூர்-குட்டிபுரம் பஸ் மார்க்கத்தில் உள்ளது. திருநாவாய்  ரயில் நிலையமும் உள்ளது

நவயோகிகள் இந்தத் தலத்தில் ஒவ்வொருவராக ஒரு விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தனர். முதல் எட்டு யோகிகள் பிரதிஷ்டை செய்த விக்கிரகங்கள் மாயமாக மறைந்து விட்டன.

ஒன்பதாவது யோகி விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து சந்நிதியை மூடி விட்டு மூன்றாம் நாள் திறந்து பார்த்தபோது விக்கிரகம் பூமிக்குள் அழுந்திக் கொண்டிருந்ததைக் கண்டார்.

அப்போதுதான் மற்ற எட்டு விக்கிரகங்களும் பூமிக்குள் அழுந்தியிருக்க வேண்டும் என்று உணர்ந்த அவர் பெருமாளிடம் அந்த நிலையிலேயே சேவை சாதிக்க வேண்டும் என்று வேண்ட, பெருமாள் அவர் கோரிக்கையை ஏற்று அப்படியே நிலை கொண்டார். இப்போதும் மூலவர் முழங்கால்கள் வரை பூமிக்குள் அழுந்திய நிலையில்தான் இருக்கிறாராம்.

நவயோகிஸ்தலம் என்பது மருவி நாவாய் என்று பெயர் வந்திருக்கலாம். இந்தப் பிறவிக்கடலை நாம் கடக்கப் பெருமாள் நாவாயாக இருந்து உதவுகிறார் என்ற  பொருளிலும் திருநாவாய் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

பாரதப்புழா நதியில் மலர்ந்திருக்கும் தாமரைப் பூக்களைப்  பறித்து கஜேந்திரன் பெருமாளுக்கு பூஜை செய்து வந்தான். ஒரு சமயம் கஜேந்திரன் பூக்களைப்  பறிப்பதற்கு முன்பே மகாலக்ஷ்மி அவற்றைப் பறித்துப் பெருமாளுக்கு பூஜை செய்யத் துவங்கினார்.

பூக்கள் கிடைக்காததால் கஜேந்திரன் பெருமாளிடம் முறையிட, பெருமாள் மகாலட்சுமியிடம் கஜேந்திரனைப் பூப்பறிக்க விட்டு அவன் அளிக்கும் பூக்களை மகாலக்ஷ்மியும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இங்கே பெருமாளும் தாயாரும் பெற்றோர்களாகவும், கஜேந்திரன் புதல்வனாகவும் இருப்பதாக ஒரு ஐதீகம் உண்டு,

கேரளக் கோவில்களில் மூலவரை அருகில் சென்று தரிசிக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஒரு உயரமான பீடத்தில் பெருமாள் எழுந்தருளியிருக்க, ஒருவர் மட்டுமே குனிந்து போகக்கூடிய அளவில்தான் கர்ப்பக்கிருகம் இருக்கிறது. கர்ப்பக்கிருகத்துக்கு வெளியே  படிக்கட்டுக்குக் கீழே நின்றுதான் நாம்  தரிசனம் செய்ய வேண்டும்.

இருட்டான கர்ப்பக்கிருகத்தில் எண்ணெய் தீபங்களின் ஒளியில் பெருமாளின் திருவுருவம் ஓரளவுக்குத்தான் கண்ணுக்குப் புலப்படும். ஆரத்தி காட்டும்போது கூட இதே நிலைதான். குருவாயூர் உட்படப் பல கோவில்களிலும் இப்படித்தான். பரம்பொருளை முழுவதும் நம்மால் அறிய முடியாது என்ற உண்மையை நிலைநாட்டும் வகையிலேயே கேரள ஆலயங்கள் அமைந்திருப்பதாகக் கொள்ளலாம்.

மூலவர் - நாவாய் முகுந்தன். நான்கு கைகளுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். முகுந்தன் என்ற சொல்லுக்கு மோட்சத்தாய் அளிப்பவன் என்று பொருள் உண்டு.

தாயார் - மலர்மங்கை நாச்சியார். இங்கே தாயாருக்குத் தனிச் சந்நிதி உண்டு. தாயார் சந்நிதி பெருமாள் சந்நிதிக்கு இடப்புறம் உள்ளது. கேரளக் கோயில்களில் தாயாருக்குத் தனி சந்நிதி என்பது அபூர்வம். பெரும்பாலான கோவில்களில் பெருமாளின் திருமார்பில் உறையும் தாயார்தான் ஒவ்வொரு கோவிலிலும் தனிப்பட்ட பெயர் சொல்லிக் குறிப்பிடப்படுவார்.

விமானம் - வேத விமானம்

தீர்த்தம் - செங்கமல ஸரஸ். கோவிலை ஒட்டியே ஓடும் பாரதப்புழாதான் இந்தக் கோவில் தீர்த்தமாக விளங்குகிறது. 

நாங்கள் இந்தக் கோவிலுக்குச் சென்றபோது பகல் 11 மணிக்கு மேல் ஆகி விட்டது. நடை சாத்தப்படுவதற்கு முன்பு பெருமாளுக்குத் திருவாராதனம் செய்வதற்காக கர்ப்பக்கிருகக் கதவு சாத்தப்பட்டிருந்தது. சற்று நேரம் கழித்துக் கதவு திறக்கப்பட்டதும் தீபங்களின் ஒளியில் நாவாய் முகுந்தனின் தரிசனம் அற்புதமாக அமைந்தது.   

மூலவர் சந்ந்நிதி மூடப்பட்டிருந்தபோது பக்கத்திலிருந்த தாயார் சந்நிதியில் போய் நின்றேன். தாயார் அற்புதமான தோற்றத்துடன், பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுபவராக இருக்கிறார்.

பிரகாரத்தில் கணபதி, பகவதி சந்நிதிகளும், கோவிலுக்கு வெளிப்புறம் சாஸ்தா சந்நிதியும் உள்ளன. 

பாரதப்புழாவின் மறுகரையில் தவனூர் என்ற இடத்தில் பிரம்மா, சிவன் ஆகியோருக்கான ஆலயம் இருக்கிறது. இங்கிருந்து அந்தக் கோவிலுக்குச் செல்லக் காலை வேளையில் படகுகள் கிடைக்கும் என்று கூறினார்கள்.

திருவித்துவக்கோடு ஒரு அலாதியான அமைதியை அளித்தது என்றால், திருநாவாய் பெரும் உற்சாகத்தையும், மனமகிழ்வையும் அளித்தது. கோவில் வாசலிலேயே பரந்து விரிந்து காணப்படும் பாரதப்புழா ஆற்றின் தோற்றம் கண்ணுக்கு குளிர்ச்சி. இந்த இடத்தில் தர்ப்பணம் செய்வது காசியில் தர்ப்பணம் செய்த பலனை அளிக்கும் என்று வழங்கப்படுகிறது.
மதியம் நடை சாத்தப்படுவதற்கு முன்பு  யாரும் உள்ளே செல்ல முடியாமல் மரக்கட்டைகளை/பலகைகளை வைத்துத் தடுத்து விடுவார்கள். இதற்கு ஸ்ரீவேலி (புனித வேலி) என்று பெயர். அப்போது உத்சவமூர்த்தி வாத்தியங்கள் முழங்க பிரகாரத்தில் மூன்று முறை வலம் வருவார். மிகச் சிறிய வடிவான உத்சவரை அர்ச்சகர் கையில் ஏந்தியபடி செல்வார். இதன்பிறகு உத்சவர் மீண்டும் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டு, சந்நிதி திறக்கப்பட்டு ஆரத்தி காட்டுவார்கள். இந்த அருமையான தரிசனம் அன்று எங்களுக்கு கிடைத்தது. (வேறு சில கோவில்களிலும் இந்த தரிசனம் கிடைத்தது.)

இந்த திவ்யதேசம் பற்றி எங்கள் யாத்திரையின்போது வழிகாட்டியாக இருந்த தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் விளக்கம் இதோ 

இந்த திவ்ய தேசத்தை நம்மாழ்வார் பதினோரு பாசுரங்களாலும், திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். பாசுரங்கள் இதோ:

திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி
ஆறாம்  பத்து
எட்டாந் திருமொழி
3. தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயு ளானை நறையூரில் கண்டேனே. (1520)

பத்தாம்  பத்து
முதல் திருமொழி
9. கம்ப மாகளி றஞ்சிக் கலங்க,ஓர்
கொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை
கொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய்
நம்ப னைச்சென்று கண்டும்நா வாயுளே. (1856)

நம்மாழ்வார் 
திருவாய்மொழி
ஒன்பதாம்   பத்து 
எட்டாம் திருமொழி
1. அறுக்கும்வினையாயின ஆகந்தவனை
நிறுத்தும்மனத் தொன்றிய சிந்தையினார்க்கு
வெறித்தண்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்
குறுக்கும்வகையுண்டுகோலோ கொடியேற்கே. (3858)

2. கொடியேரிடைக் கோகனத்தவள்கேள்வன்
வடிவேல்தடங்கண் மடப்பின்னைமணாளன்
நெடியானுறைசோலைகள் சூழ் திருநாவாய்
அடியேனணுகப்பெறுநாள் எவைகொவோ. (3859)

3. எவைகோலணுகப்பெறுநா ளென்றப்போதும்
கலைபில்மனமின்றிக் கண்ணீர்கள்கலுழ்வன்
நவையில் திநாரணன்சேர் திருநாவாய்
அவையுள்புகலாவதோர் நாளறியேனே. (3860)

4. நாளேலறியேன் எனக்குள்ளநானும்
மீளாவடிமைப் பணிசெய்யப்புகுந்தேன்
நீளார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்
வாளேய்தடங்கண் மடப்பின்னைமணாளா. (3861)

5.மணாளன்மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும்
கண்ணாளனுலகத்துயில் தேவர்கட்கெல்லாம்
வண்ணாளன்விரும்பிறையும் திருநாவாய்
கண்ணாரக்களிக்கின்றது இங்கென்றுகொல்கண்டே. (3862)

6. கண்டேகளிக்கின்றது இங்கென்றுகொல்கண்கள்
தொண்டேபுனக்காயொழிந்தேன் துரிசின்றி
வண்டார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்
கொண்டே யுறைகின்ற எங்கோவலர்கோவே. (3863)

7. கோவாகிய மாவலியைநிலங்கொண்டாய்
தேவாசுரம்செற்றவனே திருமாலே
நாவாயுறைகின்ற என்னாரணநம்பி
ஆவாலவடியானி னென்றருளாயே. (3864)

8. அருளாதொழிவாயருள்செய்து அடியேனைப்
பொருளாக்கி உன்பொன்னடிக்கீழ்புகவைப்பாய்
மருளேயின்றி உன்னையென்னெஞ்சத்திருத்தும்
தேருளேதரு தென்திருநாவாயென்தேவே. (3865)

9. தேவர் முனிவர்க்கென்றும் காண்டற்கரியன்
மூவர்முதல்வன் ஒருமூவுலகாளி
தேவன்விரும்பி யுறையும் திருநாவாய்
யாவரணுகப்பெறுவார் இனியந்தோ. (3866)

10. அந்தோவணுகப்பெறுநாள் என்றெப்போதும்
சிந்தைகலங்கித் திருமாவென்றழைப்பன்
கொந்தார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்
வந்தேயுறைகின்ற எம்மாமணிவண்ணா. (3867)

11.வண்ணம்மணிமாட நன்னாவாயுள்ளானை
திண்ணம்மதிள் தென்குருகூர்ச்சடகோபன்
பண்ணார்தமிழ் ஆயிரத்திப்பத்தும்வல்லார்
மண்ணாண்டு மணங்கமழ்வர்மல்லிகையே. (3868)ஓம் நமோ நாராயணாய!

2 comments:

  1. நாவாய் முகுந்தனை அறிய கொடுத்தமைக்கு மிகவும் நன்றி....

    ReplyDelete
    Replies
    1. நன்றி திருமிகு அனுராதா!

      Delete