Monday, February 12, 2018

59. திவ்யதேச தரிசன அனுபவம் - 38 திருவனந்தபுரம் (59)

தரிசனம் செய்த நாள்: 25.01.18  வியாழக்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
1. திருவனந்தபுரம் (59) 


கோளார் பொறியைந்துங் குன்றியுட லம்பழுத்து 
மாளாமு னெஞ்சே! வணங்குதியால் - கேளார்
சினந்தபுரஞ் சுட்டான் றிசைமுகத்தான் போற்றும்
அனந்தபுரஞ் சேர்ந்தா னடி. (59)
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி  அந்தாதி 

கேரளாவில் உள்ள திவ்யதேசங்களிலேயே தமிழ்நாட்டுக் கோவில்கள் போல் கோபுரம் அமைந்த கோவில் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபர் கோவில்தான். அகலமாக, மேலே ஒரு படகு போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது. 


திவாகர  முனிவர் என்பவர் அனந்தன்காடு என்ற இடத்தில்   ஒரு இலுப்பை மர வடிவில் இந்தப் பெருமாளைக் கண்டார்.  திருவல்லாறு தொடங்கி, திருவனந்தபுரம் ஈடாக திருப்பாப்பூர் வரை சுமார் ஐந்து மைல்  நீளத்தில்   இலுப்பைமர வடிவில் இருந்த பெருமாள். முனிவரின் வேண்டுகோளின்படி தன் உருவத்தைப் பதினெட்டு அடிகளாகச் சுருக்கிக் கொண்டார். 

திவாகர முனிவருக்கு நிகழ்ந்தது போல் வில்வமங்கள நம்பூதிரி என்பவருக்கும் நிகழ்ந்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. திவாகர முனிவர், வில்வமங்கள நம்பூதிரி இருவருமே பெருமாளுக்கருகே கர்ப்பக்கிரகத்த்தில்  உள்ளனர். இவர்களைத்தவிர கௌண்டின்யர் என்ற முனிவரும் சந்நிதியில்  இருக்கிறார்.

பிற்காலத்தில், இந்தக் கோவிலில் ஒரு தீ விபத்து ஏற்பட்டதால்,, மார்த்தாண்ட வர்மன் என்ற மன்னன்  பெருமாள் இட்ட கட்டளைப்படி நேபாளத்திலிருந்து 2400 சாலிக்கிராமங்களை  யானை மீது எற்றிக்  கொண்டு வரச்செய்தான்.  அவற்றில் 1200 சாளக்கிராமங்களைக் கொண்டு இப்போது உள்ள 18 அடி நீள விக்கிரகம் உருவாக்கப்பட்டது. மீதமுள்ள 1200 சாளக்கிராமங்கள், பிற்காலத்தில்  தேவைப்பட்டால் பயன்படுத்தப்படுவதற்காகக் கீழே புதைத்து வைக்கப்பட்டுள்ளன.


1686இல் தொடங்கி  40 வருடங்கள்  கோவில்  நிர்மாணப்  பணிகள் நடந்து,  1726ஆம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது. 1750ஆம் ஆண்டு, மார்த்தாண்டவர்மன் தன்னை பத்மநாபதாசன் என்று அறிவித்துக் கொண்டான்.அவனது வம்சத்தினரும் அவ்வாறே அழைக்கப்படுகின்றனர். 

மூலவர் - அனந்த பத்மநாபன். ஆதிசேஷன் மீது சயனித்த திருக்கோலம், கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். நாபிக்கமலத்தில் பிரும்மா. பெருமாளின் திருமுடி, உடல், திருவடி ஆகியவற்றைத் தனித்தனியே தரிசிக்கும் வகையில் மூன்று வாசல்கள் உள்ளன,

தாயார் - ஸ்ரீஹரி லட்சுமி. தனிக்கோவில் இல்லை. உத்சவராகப் பெருமாளுடன்  இணைந்து கர்ப்பக்கிரகத்தில் இருக்கிறார். 

விமானம் - ஹேமகூட விமானம் 

தீர்த்தம் - மத்ஸ்ய தீர்த்தம், வராக தீர்த்தம் 

நரசிம்மர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், கணபதி  சந்நிதிகள் இருக்கின்றன. 

பெருமாளைத் தரிசிக்க மேடைக்கு ஐந்தாறு படிகள் ஏறிச் செல்ல வேண்டும். கைப்பிடி இல்லாததாலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒழுங்கு முறை சரியாகக் கடைப்பிடிக்கப்படாததாலும் , படிகளில் அனைவரும் கூட்டமாக ஏற, ஓரத்தில் ஏறுபவர்கள் நெருக்கத்தால் கீழே விழாமல் இருக்க, மிக கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. அத்துடன், சிலர் படிகளில்  ஏறாமல், பக்கவாட்டில் போய் மேடையில் தாவி ஏறுகிறார்கள். கோவில் நிர்வாகம் இவற்றை கவனித்து,  தரிசனம் செய்ப்பவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினால் சிறப்பாக இருக்கும்.

மிகப்பெரிய கோயில். பிரகாரம் முழுவதும் தூண்கள் என்று கோவிலின் அமைப்பு அற்புதமாக இருக்கிறது.

இந்த திவ்யதேசம் பற்றி எங்கள் யாத்திரை வழிகாட்டி தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் வீடியோவும், வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் வீடியோவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 
இந்த திவ்யதேசம் பற்றி நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியிருக்கிறார்.
நம்மாழ்வார் 
திருவாய்மொழி 
பத்தாம் பத்து
இரண்டாம்  திருமொழி
1. கெடுமிட ராயவெல்லாம் கேசவா வெள்ள நாளும்
கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்தபுரநகரிப் புகுதுமின்றே. (3902)

2. இன்றுபோய்ப் புகுதிராகி லெழு மையும் ஏதம்சார
குன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை
மன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம்
ஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே. (3903)

3. ஊரும்புட் கொடியுமஃதே யுலகொல்லாமுண்டுமிழ்ந்தான்
சேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச்சொன்னோம்
பேரும் ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே.(3904)

4. பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து
வாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம்
நேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே. (3905)

5. புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி
எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால்
திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில்
அனந்தபுரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார். (3906)

6. அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து
அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர்
நமர்களோ! சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும்
குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே. (3907)

7. துடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும்
படைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான்
மடைத்தலை வாளைபாயும் வயல ணியனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே. (3908)

8. கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை
இடவகை கொண்டதென்பர் எழிலணி யனந்தபுரம்
படமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண
நடமினோ நமர்களுள்ளீர்! நாமுமக் கறியச்சொன்னோம். (3909)

9. நாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான
சேமம் நங்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம்
தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு
வாமனன் அடிக்கென்றெத்த மாய்ந்தறும் வினைகள்தாமே. (3910)

10. மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும்
ஏய்ந்தபொன் மதிளனந்தபுர நகரெந்தைக்கென்று
சாந்தொடு விளக்கம்தூபம் தாமரை மலர்கள்நல்ல
ஆய்ந்துகொண் டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே. (3911)

11. அந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை
கொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில்
பைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே. (3912)
ஓம் நமோ நாராயணாய!

No comments:

Post a Comment