Monday, February 5, 2018

51. திவ்யதேச தரிசன அனுபவம் - 30 திருக்காட்கரை (61)

தரிசனம் செய்த நாள்: 23.01.18  செவ்வாய்க்கிழமை 
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
3. திருக்காட்கரை (61)

மார்க்கமுந் தாந்தாம் வழிபடுந் தெய்வமும்
ஏற்க வுரைப்பார்சொ லெண்ணாதே - தோற்குரம்பை
நாட்கரையா முன்னமே நன்னெஞ்சே! நாரணனாம்
காட்கரையாற் காளாகாய்! காண். (61)
  - பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் 108 திருப்பதி அந்தாதி  

எர்ணாகுளத்துக்கு அருகில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம். திருக்காட்கரை என்றும் திருக்காக்கரை என்றும் அறியப்படுகிறது.

கோவில் உள்ளமைப்பைக் காட்டும்  சுருக்கமான வீடியோ.



விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் கபிலர் விஷ்ணுவை வாமனராகக் காண விரும்பி இந்த ஊரில் தவம் செய்தார். அவருக்கு வாமனராகக் காட்சி கொடுத்தார் பெருமாள். எனவே இங்கே எழுந்தருளியிருப்பவர் வாமனமூர்த்தி.

இவ்வூரில் வாழ்ந்து வந்த ஒரு பக்தர் தன் வாழைத்தோப்பு காய்க்கவில்லை என்று பெருமாளிடம் வேண்டிக்கொண்டார். அதன்பிறகு அவர் வாழைத்தோப்பு நன்கு காய்த்தது. பெருமாளின் கண்பார்வை பட்டதால் வாழை காய்த்ததால், அந்த வாழைப்பழம் நேத்திரப்பழம் என்று அழைக்கப்பட்டு, பிறகு மருவி நேந்திரம்பழம் என்றாகியது. (நேத்திரம் என்றால் கண் என்று பொருள்.)

அந்த பக்தர் தங்கத்தில் ஒரு வாழைப்பழக் குலை செய்து பெருமாளுக்குச் சமர்ப்பித்தார். அது காணாமல் போனதாகக் கருதிக் கோயிலில் இருந்த ஒரு யோகியின் மீது சந்தேகப்பட்டு அரசன் அவரைத் துன்புறுத்தினான். ஆனால் அந்தத் தங்க வாழைக்குலை கர்ப்பக்கிருகத்திலேயே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தங்க வாழைப்பழக் குலை இப்போதும் கோவிலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தான் துன்புறுத்தப்பட்டதால் கோபமடைந்த அந்த யோகி ஒரு பிரம்மரக்ஷஸாக மாறி அந்தக் கோவிலிலேயே சுற்றிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. பிரகாரத்தில் பிரம்மரக்ஷஸ் சந்நிதியும், அந்த பிரம்மரக்ஷஸைக் கட்டுப்படுத்த ஒரு யக்ஷி சந்நிதியும் உள்ளன.

மஹாபலிச் சக்ரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தின்போது (ஓணம் பண்டிகை) இங்கே வந்து வாமனரை தரிசித்து விட்டுச் செல்வதாக நம்பப்படுகிறது.

பெருமாள் கோவிலை ஒட்டி ஒரு சிவன் கோவிலும் உள்ளது.

மூலவர் - வாமன மூர்த்தி. காட்கரை அப்பன் என்றும் அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார் - பெருஞ்செல்வ நாயகி மற்றும் வாத்சல்ய வல்லி என்றும் அழைக்கப்படுகிறார்.  தாயாருக்குத் தனிக்கோவில் இல்லை. பெருமாளின் திருமார்பில் அமர்ந்திருக்கும் தாயாருக்கே இந்தப் பெயர்.

விமானம் - புஷ்கல விமானம்

தீர்த்தம் - கபில தீர்த்தம்

இந்த திவ்ய தேசம் பற்றித் தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் விளக்கவுரையை இந்த வீடியோவில் கேட்கலாம். ஒலியின் அளவு சற்றுக் குறைவாக இருப்பதால்,  இயர்ஃபோன் பயன்படுத்திக் கேட்பது சிறப்பாக இருக்கும்.



நம்மாழ்வார் திருவாய்மொழியில் 11 பாசுரங்களால் திருக்காட்கரை திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.

நம்மாழ்வார் 
திருவாய் மொழி 
ஒன்பதாம்  பத்து 
ஆறாம்  திருமொழி
(3836)
1. உருகுமால்நெஞ்சம் உயிரின் பரமன்றி
பெருகுமால்வேட்கையும் என்செய்கேன்தொண்டனேன்
தெருவெல்லாங்காலிகழ் திருக்காட்கரை
மருவியமாயன்றன் மாயம்நினைதொறே. (3836)

2. நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும்
வினைகொள்சீர்பாடிலும் வேமெனதாருயிர்
கனைகொள்பூஞ்சோலைத் தென்காட்கரையென்னப்பா
நினைகிலேன் நானுனக்காட்செய்யும்நீர்மையே. (3837)

3. நீர்மையால்நெஞ்சம் வஞ்சித்துப்புகுந்து என்னை
ஈர்மைசெய்து என்னாயிராயென்னுயிருண்டான்
சீர்மல்குசோலைத் தென்காட்கரையென்னப்பன்
கார்முகில்வண்ணன்றன் கள்வமறிகிலேன். (3838)

4.அறிகிலேன்தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால்தானும் அவற்றுள் நிற்கும்பிரான்
வெறிகமழ்சோலைத் தென்காட்கரையென்னப்பன்
சிறியவென்னாயிருண்ட திருவருனே. (3839)

5. திருவருள்செய்பவன் போல என்னுள்புகுந்து
உருவமுமாருயிரும் உடனேயுண்டான்
திருவளர்சோலைத் தென்காட்கரையென்னப்பன்
கருவளர்மேனி என்கண்ணன்கள்வங்களே (3840)

6. என்கண்ணன்கள்வம் எனக்குச் செம்மாய்நிற்கும்
அங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிது
புன்கண்மையெதிப் புலம்பியிராப்பகல்
என்கண்ணனென்று அவன்காட்கரையேத்துமே. (3841)

7. காட்கரையேத்தும் அதனுள்கண்ணாவென்னும்
வேட்கைநோய்கூர நினைந்துகரைந்துகும்
ஆட்கொள்வானொத்து என்னுயிருண்டமாயனால்
கோட்குறைபட்டது என்னாருயிர்கோளுண்டே. (3842)

8. கோளுண்டானன்றிவந்து என்னுயிர்தானுண்டான்
நாளுநாள் வந்து என்னை முற்றவுந்தானுண்டான்
காளநீர்மேகத் தென்காட்கரையென்னப்பற்கு
ஆளன்றேபட்டது என்னாருயிர்பட்டதே. (3843)

9. ஆருயிர்பட்டது எனதுயிர்பட்டது
பேரிதழ்த்தாமரைக்கண் கனிவாயதோர்
காரெழில்மேகத் கேன்காட்கரைகோயில்கொள்
சீரெழில்நால்தடந்தோள் தெய்வவாரிக்கே. (3844)

10. வாரிக் கொண்டு உன்னைவிழுங்குவன் காணிலென்று
ஆர்வற்றவென்னையொழிய என்னில்முன்னம்
பாரித்து தானென்னை முற்றப்பருகினான்
காரொக்கும் காட்கரையப்பன்கடியனே. (3845)

11. கடியனாய்க் கஞ்சனைக் சொன்றபிரான்றன்னை
கொடிமதிள்தென்குருகூர்ச் சடகோபன்சொல்
வடிவமையாயிரத்து இப்பத்தினால்சன்மம்
முடிவெய்தி நாசங்கண்டீர்களெங்கானலே. (3846)
ஓம் நமோ நாராயணாய!






No comments:

Post a Comment